உலகத்தில் தோன்றிய உயிர்கள் அனைத்தும் ஒருநாள் மறைந்து போகும். இது ஒவ்வொரு உயிரினத்தின் படிநிலை வளர்ச்சியில் , தவிர்க்க முடியாததாக இயற்கை வடிவமைத்திருக்கும் கட்டமைப்பாகும். மாற்றம் ஒன்று மட்டுமே நிலையானது மற்றவையெல்லாம் மாறக் கூடியவை என்பதை சித்தர்கள் நன்கு உணர்ந்தார்கள். இதனால்தான் உடல் அழியும் , இளமை நீங்கும் , அழகு சிதையும். இன்பம், செல்வம் நிலைக்காது என்ற நிலையாமைக் கொள்கையை சித்தர்கள் தங்கள் பாடல்களில் வலியுறுத்துகின்றனர். ஆகவே சித்தர்களின் இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமைக் குறித்த செய்திகளை எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
நிலையாமை
” பாங்கருஞ் சிறப்பி பல்லாற்றானு
நில்லா வுலகம் புல்லிய நெறித்தே ” (தொல். பொருள். நூற். 78)
என்ற தொல்காப்பிய அடிகள் நிலையாமைக் குறித்து குறிப்பிடுகின்றது. இதற்கு நச்சினார்க்கினியர் “ உயிரும் உடம்பும் செல்வமும் இளமையும் முதலியவற்றாலும் நிலைபேறில்லாத உலகம்” என்று குறிப்பிடுகின்றார்.
நிலையில்லாத வாழ்க்கையின் தன்மையை அறிந்து அதன்வழி நடப்பதே சிறந்த வாழ்க்கையாகும். நிலையில்லாதவற்றை நிலையானவை என்று மயங்கி வாழ்பவர்கள் இழிநிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்பதை வள்ளுவர்,
“ நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை” (குறள் -331)
என்ற அடிகளில் உணர்த்துகின்றார். மேலும்,
“இளமையும் நில்லா யாக்கையும் நில்லா
வளவிய வான்பெருஞ் செல்வமும் நில்லா ”(சிறைசெய்காதை .135.36)
என்று மணிமேகலை பாடல்அடிகள் இளமை நிலையில்லாதது, யாக்கை நிலையில்லாதது, செல்வம் நிலையில்லாதது என்று குறிப்பிடுகின்றது.
சித்தர்களின் பாடல்களில் நிலையாமை
சித்தர்களில் பலர் வாழ்வில் நிலையாமை குறித்த கருத்துக்களைப் பதிவுசெய்துள்ளனர். ஆதி அந்தமில்லாத இறைவனைத் தேடுவதே சிறந்தது என்றும் இதற்கு எதிர்நிலையில் வாழ்வியல் சார்ந்த பொன், பொருள், இளமை போன்ற விசயங்களால் எந்த பயனும் இல்லை என்றும் அவற்றை விட்டுவிலக வேண்டும் என்றும் வற்புறுத்துகின்றனர்.
உடல் நிலையாமை
மனிதனின் உடலானது ஆசைகளின் உறைவிடமாகவும் அவன் அடைய வேண்டிய இலக்கை அடைவிக்கும் வெறும் கருவியாக மட்டுமே அமைகிறது எனலாம். மனித உடல் நிலையற்றது என்பதை சித்தர் பாடல்கள் பதிவு செய்கின்றன. சித்தர்கள் வினைக்கு ஈடாக எடுத்த உடலை மாயையின் கூறு என்கின்றனர். நிலையில்லாத உடம்பின் தன்மை குறித்து,
“ நீர்மேற் குமிழியிக் காயம் இது
நில்லாது போய்விடும் நீயறிமாயம்” (கடு.சித்.பா. 4)
என்ற கடுவெளியாரின் பாடல் உடலின் தன்மை நீர்மேல் தோன்றும் குமிழி போன்று நில்லாமல் போய்விடும் என்கிறார். மேலும் எதற்கும் பயன்படாத உடலைப் பேணிப் பயனில்லை என்பதை,
“ மண்கலம் கவிழ்ந்தபோது வைத்துவைத்து அடுக்குவார்
வெண்கலம் கவிழ்ந்தபோது வேணமென்று பேணவார்
நண்கலம் கவிழ்ந்தபோது நாறுமென்று போடுவார் ” (சிவ.பா.80)
என்ற சிவவாக்கியர் பாடல் அழியும் உடல் பற்றி குறிப்பிடுகிறது.
“வாழ்க்கையில் உலகம் இத்தன்மையானது, உலகம், உடல், செல்வம் இத்தன்மையானது என்று முன்னமே அவற்றின் நிலையாமை அறிந்து கொண்டால் பிரிவோ ,மாறுதலோ நேர்ந்தபோது மனம் கலங்கி வருந்தி சோர்வடையத் தேவையில்லை. ஆகையால் நிலையாமை உணர்தல் வாழ்க்கையைக் கண்டு அஞ்சி ஓடுவதற்காக அன்று. வாழ்க்கையின் தன்மையை உள்ளவாறு அறிந்து அஞ்சாமல் நின்று சோர்வற்று வாழ்க்கையை நடத்தி செல்வதற்கே” என்ற மு.வவின் நிலையாமை கருத்து இங்கே ஒப்ப நோக்கதக்கதாகும்.
பிறந்த ஒவ்வொருவருக்கும் இறப்பு உறுதி. இதனை அறியாமல் சாவைத் தள்ளிப் போடுவதற்கு பல போரட்டங்களும் சாவை அடைந்தவரை கண்டு சாகின்ற, சாகப்போகின்றவரின் அழுகுரலையும் சித்தர்கள் தேவையில்லாதது என்கின்றனர்.
இளமை நிலையாமை
மனித வாழ்வில் மனிதன் மனதை தூய்மையாக வைத்திருப்பதைவிட உடலையே தூய்மையாக வைக்க எண்ணகின்றனர். இந்த உடல்கள் உயிரைச்சுமக்கும் வெறும் கருவி எனக் கொள்ளாமல் அதனைப் போற்றி பாதுகாத்து வருகின்றனர். மேலும் பல்வேறு வாசனைத்திரவியங்கள் கொண்டு மனம் வீசவைக்கின்றனர்..ஆனால் சித்தர்கள் உடல்நாற்றம் வீசக்குடியது எப்போதும் இளமையடன் இருக்காது முதுமையடைந்து சாதலை அடையம் என்கின்றனர். திருமுலர்,
“ கிழக்கெழுந் தோடிய ஞாயிறு மேற்கே
விழக்கெண்டுந் தேறார் விழியிலா மாந்தர்
குழக்கன்று முத்தெரு தாய்ச்சில நாளில்
விழக்கண்டுந் தேறார் வியனுலகோரே ” (திருமந்.பா.221)
என்ற பாடல்வரிகளில் கிழக்கில் தோன்றும் சூரியன் மேற்கில் மறைவதுபோல் இளமையும் நிலையில்லாமல் முதிர்ச்சிபெறும். இதனை அறியாமல் மக்கள் அறியாமையில் மிதக்கின்றனர். மனிதர்கள் தன் இளமைக்காலத்தை பெரிதாக நினைத்து வாழ்கின்றனர். இப்பருவம் அழியக்கூடியதுதான் என்பதை குதம்பைச்சித்தர்
“பிறக்கும்போது உள்ள பெருமையைப் போலவே
இறக்கும் போது எய்துவிடும் குதம்பாய்” (குதம்.சித்.பா. 82)
என்று பாடியுள்ளார். எல்லோருக்கும் இளமை வரும், போய்விடும். முதுமையில் இளமை காலங்களின் நினைவுகள் மட்டுமே வரும். ஆனால் இளமை மீண்டும் வாரது என்பதே உண்மையாகும். இன்று நவீன கலாச்சாரமயமான உலகில் இந்த நிலையில்லாத இளமையைக் காப்பதற்கு அழகுசாதனப் பொருட்களின் வரிசை பெருகி கொண்டே உள்ளன. விளம்பரங்கள் மாத, வார நாளிதழ்கள் , வெள்ளித்திரை, சின்னத்திரை உள்ளிட்ட எல்லா ஊடகங்களிலும் அழகு சாதனப்பொருட்களே முக்கிய இடம்பிடிக்கின்றன. அழகிப்போட்டி உள்ளிட்டு அழகுசாதனப் பொருட்களின் வர்த்தகப் பண்டமாக்குகிற செயல்பாடுகள் அரங்கேறுகின்றன என்பதனை உணரலாம். இளமைக்கால உடலைப் பேணிவதற்கான சாதனங்கள் என அவற்றை வாங்கிக்குவித்து, உடல்மீது பூசிக்கொள்கின்றனர்.
இயற்கை அழகே உண்மையானது, அதுவும் நிலையில்லாதது என்ற உண்மையை உணர்ந்தால் மட்டுமே மேலைநாடுகளின், பெருமுதலாளிகளின் பெருவியாபார ஆசை முடிவுக்கு வரும்.
செல்வம் நிலையாமை
செல்வம் நிலையற்றது. அதன்மேல் பற்றுவைத்தால் முக்தி கிடைக்காது என்பது சித்தர்களின் கருத்தாகும். செல்வத்தை நிலையென்று கொண்டவர்களை நோக்கி,
“ தேடிய செம்பொன்னும் செத்தபோது உன்னோடு
நாடி வருவதுண்டோ
போம்போது தேடும் பொருளில் அணுவேணும்
சாம்போது தான் வருமோ (குதம்.சித்.பா.102-03)
என்ற பாடலில் நாளும்நாளும் தேடிய செல்வங்கள் யாவும் சாவும் போது துணைக்கு வாரது. ஒரு மனிதன் எவ்வளவுதான் பொருள் சேர்த்தாலும் கடைசியில் அவனுக்கு மண் மட்டுமே சொந்தமாகும். இதனை பல உலகத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறும் பறைசாற்றி நிற்கக் காணலாம். (சான்றாக ஹிட்லர், அலெக்சாண்டர், நெப்போலியன், முசோலினி )
செல்வம் நிலையாமை குறித்து பாம்பாட்டிச்சித்தர் ,கூறுகையில்,
“மலைபோன்ற செம்பொற்குவை வைத்திருப்பவர்
மறலிதான் வருகையில் வாரிச் செல்வரோ ” (பாம்.சித்,பா. 44)
என்ற பாடலில் மலைபோன்ற செல்வங்களை வைத்திருந்தாலும் எமன் வந்து அழைத்தபின் பயனாகுமா ? ,என்று கேள்வி எழுப்புகிறார்.
பொருள்சார் ஆசையினால் மனிதன் பல அடுக்குடன் மாடமாளிகைகளும் செல்வச்செழிப்பகளுடனும் வாழ்வதுதான் மகிழ்ச்சி என்று பொய்யான வாழ்க்கை வாழ்கின்றனர். ஆனால் அவையாவும் கடைசியில் கூடவருவதில்லை என்பதை,
“நீளவீடு கட்டுறீர் நெடுங்கதவு சாத்துறீர்
வாழவேணும் என்றலோ மகிழ்ந்திருந்த மாந்தரே
காலன் ஓலை வந்தபோது கையகன்று நிற்பீரே ” (சிவ.பா. 25)
என்ற பாடலில் சிவவாக்கியர் நாம் வாழ்வதற்காக கட்டுகின்ற ஆடம்பரவீடும் ,சேர்க்கும் செல்வங்கள் அனைத்தையும் மரணத்தின்போது எடுத்துச்செல்ல முடியாது என்பதே உண்மை. என்கிறார்
இன்றைய நவீன கலாச்சார வாழ்வில் நிலையானது எதுவென்று அறியாத மக்களுக்கு தேவைக்கு அதிகமாக நாளுக்கு நாள் ஆசைமட்டும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. பொருள்சார் ஆசையும் தேடலும் மக்களிடம் அதிகரிப்பதால் எது நிலையான பயன் தரக்கூடியது என்பதை உணராமல் , எதனையும் அபகரித்து தனதாக்கிக் கொள்ளக்கூடிய மனநிலை வளர்ந்துள்ளது. இந்தநிலையில் சித்தர்கள் கூறும் நிலையாமை குறித்த தேவை அவசியமானதாகும்.
முடிவுரை
சித்தர்கள் நிலையாமைத் தத்துவத்தில் நம்பிக்கை உள்ளவர்களாக இருந்துள்ளனர். உடல் நிலையில்லாதது ஆகையால் உடலைப்பேணி பயனில்லை என்றும். இளமை கானல் நீர் போன்றது , இளமை காலம் முதிர்ச்சிபெற்று முதுமை அடையும் என்றும் செல்வமாகிய பொன் ,பொருள் எதுவும் கடைசியில் துணைக்கு வராது என்றும் சித்தர்கள் நிலையாமைக் கருத்தினை பதிவு செய்துள்ளனர். சித்தர்கள் நிலையில்லாத உடல், பொருள் , இளமை மீது பற்று வைப்பதைவிட்டு நிலையான பரம்பொருளை அடைய வழிகாட்டுகின்றனர். சித்தர்களின் நிலையாமை குறித்த பாடல்கள் நவீனக்கலாச்சார பொருள்சார் ஆசையில் மயங்கி கிடக்கும் மக்களுக்கு அறிவுறுத்துவதாக அமைகின்றன.
துணைநின்ற நூல்கள்
1.சி.எஸ்.முருகேசன், சித்தர் பாடல்கள், (பெரியஞானக்கோவை) சங்கர் பதிப்பகம், சென்னை-49, 2012.
2.அரு.இராமநாதன், பெரியஞானக்கோவை என வழங்கும் சித்தர் பாடல்கள்,பிரேமாபிரசுரம். சென்னை,2004.
3. பரிமேலழகர்(உ.ஆ), திருக்குறள், சாரதா பதிப்பகம், சென்னை-14, 2004.
4.தொல்காப்பியம், பொருளதிகாரம், சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை-18, 2001.
5.ஞா.மாணிக்கவாசகன்(உ.ஆ),மணிமேகலை,உமா பதிப்பகம், சென்னை-1,2007.
6.மு.வரதராசனார், திருவள்ளுவர்(அ) வாழ்க்கைவிளக்கம் , பாரிநிலையம், சென்னை-108, 2006.
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
< Prev | Next > |
---|