பதிவுகள்

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கருப்பு ஜூலை 1983

E-mail Print PDF

[ கருப்பு ஜூலை 1983 நினைவாக பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்த வ.ந.கிரிதரனின் நாவலான 'அமெரிக்கா: சுவர்களுக்கப்பால்.." இன் அத்தியாயம் மூன்று: சூறாவளி, அத்தியாயம் நான்கு: மதகுருவின் துணிவு, அத்தியாயம் ஐந்து: இளங்கோவின் நாட்குறிப்பிலிருந்து......  ஆகிய அத்தியாயங்கள் இங்கு மீள்பிரசுரமாகின்றன. இவ்வத்தியாயங்கள் 1983 ஜூலைக் கலவர நிகழ்வுகளை விபரிக்கின்றன. இவை உண்மை நிகழ்வுகள். - ஆசிரியர் -]

அத்தியாயம் மூன்று: சூறாவளி!...

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா II" ஆழ்ந்த தூக்கத்திலுருந்த இளங்கோ மீண்டும் கண் விழித்தபோது இன்னும் பொழுது புலர்ந்திருக்கவில்லை. எல்லோரும் இன்னும் தத்தமது படுக்கைகளில் தூக்கத்திலாழ்ந்து கிடந்தார்கள். அவனுக்குச் சிறிது வியப்பாகவிருந்தது: 'இதுவென்ன வழக்கத்திற்கு மாறாக.. நித்திரையே ஒழுங்காக வர மாட்டேனென்று முரண்டு பிடிக்கிறது...' அன்று நண்பகல் அவனுக்கு அத்தடுப்பு முகாம் சிறைவாசத்திலிருந்து விடுதலை. அந்த விடுதலை அவன் ஆழ்மனதிலேற்படுத்திய பாதிப்புகளின் விளைவா அவனது தூக்கமின்மைக்குக் காரணம்? இருக்கலாம். சுதந்திரத்தின் ஆனந்தமே அற்புதம்தான். கட்டுக்களை மீறுவதிலிருக்கும் இன்பமே தனி. மீண்டுமொருமுறை அவனது பார்வை அனைத்துப் பக்கங்களையும் ஒருகணம் நோக்கித் திரும்பியது. விடிவுக்கு முன் தோன்றுமொரு அமைதியில் அப் பொழுது ஆழ்ந்திருப்பதாகப் பட்டது. சிறைப் பாதுகாவலர்களும் தூங்கி வழிந்து கொண்டிருந்தார்கள். இன்னும் சிறிது நேரம்தான் பொழுது விடிந்து விடும். நகரின் பரபரப்பில் இன்னுமொரு நாள்மலர் முகிழ்த்து விடும். அதன்பின் அவனது வாழ்க்கையும் இன்னுமொரு தளத்துக்குத் தள்ளப்பட்டு விடும். அத்தளத்தில் அவனை எதிர்பார்த்து இன்னும் எத்தனையெத்தனை சம்பவங்கள், சூழல்கள் காத்துக் கிடக்கின்றனவோ? இருப்பை எப்பொழுதும் உற்சாகத்துடனும், உறுதியுடனும் ஏற்கும் உள உறுதியிருக்கும் வரையில் அவன் எதற்குமே அஞ்சத் தேவையில்லை. மிதிபட மிதிபட மீண்டும் மீண்டும் மிடுக்குடனெழும் புல்லினிதழாக அவன் எப்பொழுதும் எழுந்து கொண்டேயிருப்பான். விடிவை வரவேற்பதில் எப்பொழுதுமே தயங்காத புள்ளினம் போல விடிவுப் பண் பாடிக்கொண்டேயிருப்பான். ஒரு சில மாதங்களில்தான் அவனது இருப்பு எவ்விதம் தலைகீழாக மாறி விட்டது? அரசத் திணைக்களமொன்றில் உயர் பதவி வகித்துக் கொண்டிருந்தவனைச் சூழல் இன்று அந்நிய மண்ணின் சிறைக் கைதியாகத் தள்ளி விட்டிருந்தது. அவனது சிந்தனையில் 1983 கலவர நினைவுகள் சிறிது நேரம் நிழலாடின. அவனும், அவனது நண்பனும் அன்று தப்பியதை இன்று நினைக்கும் பொழுதும் ஆச்சரியமாகத்தானிருக்கிறது.

அவனும் நண்பனும் அன்று நீர்கொழும்பு நகருக்கு வேலைநிமித்தம் செல்ல வேண்டியிருந்தது. அவனிருந்தது கொழும்பு கொட்டாஞ்சேனைப் பகுதியில். அவனது நண்பனிருந்தது கல்கிசைப் பகுதியில். அதிகாலையெழுந்து ஆர்மர் வீதிக்குச் சென்று பஸ் எடுத்துச் சென்றபொழுதுகூட அவனுக்கு ஏற்கனவே கலவரம் ஆரம்பித்திருந்த விடயம் தெரிந்திருக்கவில்லை. ஆனால் செல்லும் வழியில் குறிப்பாக மருதானைப் பகுதியில் கடைகள் சில எரிக்கப்பட்டிருந்ததை அவதானித்தான். அப்பொழுதும் அவனுக்குச் சூழலின் யதார்த்தம் உறைக்கவில்லை. அருகிலிருந்த சிங்கள இனததுப் பெண்ணொருத்தி எரிந்திருந்த கடைகளைக் காட்டி ஏதோ சொல்லியபோதும் கூட , அவனுக்குத் தெரிந்திருந்த சிங்கள அறிவின் காரணமாக, அவனுக்கு அதனர்த்தம் புரிந்திருக்கவில்லை. அவனைப் பார்த்தாலும் பார்வைக்குச் சிங்கள இளைஞனொருவனைப் போல்தானிருந்தான். மீசையில்லாமல் தாடி மட்டும் வைத்திருப்பது சிங்கள இளைஞர்கள் மத்தியில் சாதாரண்தொரு விடயம். அத்தகையதொரு தோற்றத்திலிருந்த அவனை அப்பெண்ணும் சிங்கள் ஆடவனென்று நினைத்து ஏதோ கூறியிருக்க வேண்டும். அதன்பின் அவன் கல்கிசை சென்று நண்பனின் இருப்பிடம் நோக்கிச் சென்றபொழுது செல்லும் வழியில் நின்ற சில சிங்களவர்களின் கூட்டமொன்று அவனை நோக்கி ஒருவிதமாகப் பார்த்தபொழுதும் கூட அவனுக்கு எதுவுமே உறைக்கவில்லை. பின் நண்பனும், அவனுமாக மீண்டும் பஸ்ஸேறி புறக்கோட்டை பஸ் நிலையம் சென்று நீர்கொழும் பஸ்ஸினை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த பொழுதுதான் நண்பனின் கவனத்தை அருகிலிருந்த சிங்களவர்களுக்கிடையிலான உரையாடல் ஈர்த்தது. அவனுக்குச் சிங்களம் நன்கு தெரியும். அப்பொழுதுதான் சூழலின் இறுக்கமே முதன் முறையாக விளங்கியது. நண்பன் கூறினான்: "பிரச்சினை பெரிதுபோல் தெரிகிறது".

"என்ன? கொஞ்சம் விளக்கமாய்ச் சொல்லேன்" என்றான் இளங்கோ. அதற்கு நண்பன் இவ்விதம் பதிலிறுத்தான்:

"இவர்களின் கதையின்படி கலவரம் ஏற்கனவே தொடங்கி விட்டது. நிமிடத்துக்கு நிமிடம் பெரிதாகிக் கொண்டேயிருக்கிறது சூறாவளியைப் போல. நாங்கள் இன்றைக்கு நீர்கொழும்பு போக முடியாது. உடனடியாக 'ஆபிசுக்கு'ப் போவம். அதுதான் நல்லது. இப்பொழுதுதான் எல்லாமே விளங்குகிறது. நீ மருதானையில் பார்த்த எரிந்த கடைகள், எங்களது வீட்டுக்கண்மையிலிருந்த சிங்களவர்களின் பார்வை,.. இவை எல்லாவற்றுக்கும் காரணம் இப்பத்தான் விளங்குது... எவ்வளவு கெதியாக ''ஆபிசுக்கு' போக முடியுமோ அவ்வளவு நல்லது. இப்ப இங்கிருக்கிறவர்கள் கதைக்கிறதைப் பார்த்தால் இங்கை கலவரம் எந்த நேரத்திலும் வெடிக்கலாம் போலத்தானிருக்கு".

இளங்கோவுக்கும் நண்பன் கூறியது சரியாகவே பட்டது. உடனடியாகவே பஸ்ஸேறி அவர்கள் பணிபுரிந்த காரியாலயம் சென்றார்கள். அங்கு சென்றதும் எல்லோரும் அவர்களிருவரையும் புதினமாகப் பார்த்தார்கள். அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த முஸ்லீம் பணியாள் இவர்களிடம் வந்து நாட்டில் இனக்கலவரம் ஆங்காங்கே ஆரம்பமாகி விட்டதாகவும், அவர்களையும் எச்சரிக்கையாக இருக்கும்படியும் கூறினான. அவன் கொழும்பிலேயே கிராண்ட்பாஸ் பகுதியில் பிறந்து வளர்ந்த முஸ்லீம். சிங்களமும், தமிழும் நன்கு சரளமாகப் பேசும் ஆற்றல் வாய்த்தவன். அங்கு நடக்கும் நடப்புகளை அவ்வப்போது அவர்களுடன் பகிர்ந்து கொள்பவன். அவர்களிருவரும் அவ்வரசத் திணைக்களத்தில் பொறியியலாளர்களாக உயர்பதவியில் இருந்தபோதும் அவனுடன் மிகவும் இயல்பாகப் பழகுவார்கள். அவனும் அவர்களுடன் அன்புடன் பழகுவான். அதன் காரணமாகத்தான் அப்பொழுது வந்து எச்சரித்திருந்தான். அவர்களும் அவனுக்கு நன்றி கூறிவிட்டு என்ன செய்யலாமென்று சிறிதுநேரம் சிந்தனையிலாழ்ந்தார்கள்.

"இந்தச் சமயத்தில் மீண்டும் எங்களுடைய இருப்பிடத்திற்குச் செல்வது நல்லதாகப் படவில்லை. எங்கு போகலாம்..?" என்றான் நண்பன். இளங்கோ அதற்கு இவ்விதம் கூறினான்: "சென்றமுறைக் கலவரத்திலெல்லாம் இராமகிருஷ்ண மிசன் நன்கு உதவியதாகப் பத்திரிகைகளில் செய்தி வந்திருந்ததைப் பார்த்திருக்கிறேன். அங்கு செல்வதுதான் நல்லதுபோல் படுகிறது. நீ என்ன சொல்லுகிறாய்?"

"நீ சொல்வதும்சரி. ஆனால் அங்கை எப்படிப் போவது..?" என்றான்: நண்பன்.

இளங்கோ: " 'பார்க்கிங் லொட்டைப்' பார். எத்தனை 'கம்பனி' வாகனங்கள். வேண்டுமானால் இயக்குநரிடம் சென்று கேட்டுப் பார்க்கலாமா.."

நண்பன்: "இந்தச சமயத்தில் இயக்குநர் என்ன செய்வானோ.. ஏற்கனவே கடந்த மூன்று வருடங்களாக உத்தியோகத்தை நிரந்தரமாக்குவதற்காக அவனுடன் எவ்வளவு மோத வேண்டியிருந்தது. அதனாலேற்பட்ட பிரச்சினைகளையெல்லாம் இப்பொழுது தூக்கிப் பார்த்து உதவாமல் விட்டால்..."

இளங்கோ: "எதற்கும் முயற்சி செய்து பார்ப்பதில் தவறில்லையே... சரி வந்தால் சரி. இல்லாவிட்டால் பிறகு யோசிப்போம்..."

இவ்விதம் முடிவெடுத்தவர்களாக இருவரும் இயக்குநரின் அறைக்குச் சென்றார்கள். இயக்குநர் சைமன் முகத்தில் அப்பொழுது கூடப் புன்னகையினைக் காணவில்லை.

இயக்குநர் சைமன் (ஆங்கிலத்தில்): "காலை வந்தனங்கள். வாருங்கள். என்ன விடயம்.."

இளங்கோ: "காலை வந்தனங்கள். உங்களுக்குத் தற்போது எழுந்துள்ள சூழல் தெரிந்திருக்குமென்று நினைக்கின்றோம்..."

இயக்குநர் சைமன்: "ஆம். மிகவும் துரதிருஷ்ட்டமானது. உங்களுக்கு என்னால் ஏதாவது உதவிகள் செய்ய முடியுமாவென்று பார்க்கின்றேன்."

இளங்கோவும், நண்பனும்" "மிகவும் நன்றி".

இளங்கோ தொடர்ந்தான்: "உங்களது வார்த்தைகளுக்கு மிகவும் நன்றி. இந்தச் சமயத்தில் வெள்ளவதையிலுள்ள இராமகிருஷ்ண மடத்துக்குச் செல்வது நல்லதுபோல் எனக்குப் படுகிறது. நீங்கள் மட்டும் கொஞ்சம் இந்த விடயத்தில் உதவினால்.."

இயக்குநர் சைமன்: "சொல்லுங்கள். இந்த விடயத்தில் நானெப்படி உதவிட முடியுமென்று எதிர்பார்க்கின்றீர்கள்?"

இளங்கோ" "சேர். நீங்கள் மனது வைத்தால்.. அங்கிருக்கும் வாகனமொன்றினை எங்களுக்குக் கொடுத்துதவலாம்.."

இயக்குநர் சைமன் சிறிது நேரம் சிந்தித்தான்; பின் இவ்விதம் கூறினான்: " மன்னிக்க வேண்டும். இந்த விடயத்தில் என்னால் எதுவும் செய்வதற்கில்லை. நகரில் கலவரம் வெடித்திருக்கிற சூழலில் எந்த வாகனச் சாரதியும் இதற்குச் சம்மதிக்க மாட்டான். இந்தச் சமயத்தில் நீங்கள் இங்கிருப்பதுதான் நல்லது"

இருவரும் இயக்குநருக்கு நன்றி கூறிவிட்டுத் தம்மிருப்பிடம் திரும்பினார்கள். அதே சமயம் தமக்குள் பின்வருமாறும் உரையாடிக் கொண்டார்கள்.

இளங்கோ: "இயக்குநர் நினைத்திருந்தால் மிகவும் இலகுவாக உதவியிருக்க முடியும். சிங்கள வாகனச் சாரதியோட்டும் அரச திணைக்கள வாகனத்திற்கு ஆபத்தெதுவும் ஏற்படுமென்று நான் நினைக்கவில்லை.."

நண்பன்: "அவனும் பழைய கறளை நினைவில் வைத்துத்தான் இவ்விதம் நடக்கின்றான் போலும்."

இளங்கோ: "அவன் இவ்விதம்தான் செயற்படுவான் என்று எதிர்பார்த்தேன். அதன்படியே நடக்கின்றான். இந்தக் கணத்தில் நானொரு முடிவு எடுத்திருக்கிறேன்."

நண்பன்: "என்ன..."

இளங்கோ: "ஒருவேளை இந்தக் கலவரத்தில் தப்பிப் பிழைத்தால் இந்தக் காரியாலயத்தின் வாசற்படியைக் கூட மிதிக்க மாட்டேன். இங்கு நாம் பட்ட அவமானமாக, இறுதி அனுபவமாக இச்சம்பவமிருக்கட்டும்."

நண்பன்: "உன்னுடைய பலவீனமே இதுதான். எதற்கும் வளைந்து கொடுக்காமல் உடனடியாக முடிவுகளை எடுத்துச் செயற்படுத்துவது.. சில சமயங்களில் வளைந்தும் கொடுக்கத்தான் வேண்டும். காரியம் ஆக வேண்டுமென்றால் காலைப் பிடிக்கத்தான் வேண்டும்.."

இச்சமயத்தில் அந்த முஸ்லீம் பணியாள் வந்தான். அவனது முகத்தில் சிறிது பரபரப்பு தென்பட்டது.

இளங்கோ: "என்ன விசயம். என் பதட்டமாயிருக்கிறாய்?"

அதற்கந்த பணியாள் கூறினான்: "எவ்வளவு விரைவாக நீங்கள் இங்கிருந்து செல்ல முடியுமோ அவ்வளவுகு நல்லது.."

நண்பன் சிறிது பயந்து போனான்: "என்ன சொல்லுறாய்.. ஏன?"

அதற்கந்த பணியாள் இவ்விதம் கூறிச் சென்றான்: "இங்கு வேலை செய்கிற தமிழர்களை அடிப்பதற்குத் திட்டம் போடுகிறார்கள்.அதற்கு முதல் நீங்கள் போவது நல்லது."

நண்பன்: "இவனென்ன இவ்விதம் குண்டைத் தூக்கிப் போட்டு ஓடுகிறான்.."

இளங்கோ: "அவன் உண்மையைத்தானே கூறினான். நாங்கள் எவ்வளவு விரைவாக இங்கிருந்து செல்ல முடியுமோ அவ்வளவு நல்லது"

இச்சமயத்தில் காரியாலயத்திற்கு வெளியில் சிறிது களேபரச் சூழல் ஏற்படவே அனைவரும் வெளியில் சென்றார்கள். இளங்கோவும் அவர்களுடன் கும்பலுடன் கோவிந்தாவாக வெளியில் சென்றான். மருதானை வீதியிலிருந்த அரச, தனியார் திணைக்களங்களில் பணிபுரிந்தவர்களெல்லாரும் வீதிக்கு வந்து விடுப்புப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். எதனை அவ்விதம் விடுப்புப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்?

கப்பித்தாவத்தைப் பிள்ளையார் ஆலயத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த பாதையில் லொறியொன்று ஆயுதம் தரித்த கூண்டர்களுடன் சென்று கொண்டிருந்தது. 'லோங்சும்' 'சேர்ட்டும்' அணிந்திருந்த குண்டர்கள். கைகளில் பொல்லுகளைப் பலர் வைத்திருந்தார்கள். அவர்கள் அப்பாதையால் சென்ற சிறிது நேரத்தில் கப்பித்தாவைத்தைப் பிள்ளையார் ஆலயம் பக்கமிருந்து புகை சிறிதாகக் கிளம்பியது. பிரதமர் பிரேமதாசாவின் மதிப்புக்குரிய , பக்திக்குரிய கப்பித்தாவத்தப் பிள்ளையாருக்கே இந்தக் கதியா? இச்சமயம் கப்பித்தாவத்த ஆலயமிருந்த பகுதியிலிருந்து தடித்த தமிழனொருவன் காதில் சிறிது வெட்டுக் காயங்களுடன் விஜேவர்த்தனா மாவத்தை வீதியை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தான். அச்சமயம் சனத்திரளுடன் விரைந்து கொண்டிருந்த பஸ் வண்டிகளை மறிப்பதற்கு முயன்றான். ஒன்றுமே நிற்கவில்லை. அச்சமயத்தில் அவனைத் துரத்தியபடி சிறு கும்பலொன்று கைகளில் பொல்லுகளுடன் ஓடி வந்து கொண்டிருந்தது. அவ்விதம் துரத்தி வந்தவர்களிலொருவன் வீதியோரமாக விடுப்புப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் பக்கம் வந்தான். ஒவ்வொருவராக மேலும் கீழும் பார்த்தபடி வந்தான். இளங்கோவின் பக்கம் வந்தவுடன் ஒருகணம் நின்றான்: "தெமிளதா சிங்களதா' என்றான். அவ்விதம்தான் கேட்டதாக அவனுக்குப் பட்டது. 'சிங்கள; என்று மட்டும் பட்டும் படாமல் கூறிவிட்டுப் பேசாமல் நின்றான் இளங்கோ. இன்னுமொரு வார்த்தை அவன் வாயிலிருந்து வந்து விட்டால்போதும் அவன் அசல் தமிழனென்பதை அந்தக் காடையன் கண்டு பிடித்து விடுவான். நிலைமை எல்லை மீறுவதை அவன் உணர்ந்தான். இதற்கிடையில் காயத்துடன் ஓடி வந்து கொண்டிருந்த தமிழனைக் காணவில்லை. பஸ்ஸொன்றில் ஏறி விட்டிருக்க வேண்டுமென்று பட்டது. இளங்கோ மெதுவாக காரியாலயத்தினுள் நுழைந்தான்.

நண்பன்: "என்ன? எப்படி வெளியிலை இருக்கு?"

இளங்கோ: "நிலைமை எல்லை மீறும் போலைத்தான் தெரிகிறது. நான் தப்பியது அருந்தப்பு."

இச்சமயத்தில் அத்திணைக்களத்து நிதிநிர்வாக உயர் அதிகாரியான கந்தரட்ணமும், தமிழக்த்திலிருந்து ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் ஸ்தாபனச் சிவில் பொறியியல் ஆலோசகராக வந்து பணிபுரிந்து கொண்டிருந்த பாலகிருஷ்ணனும் அவசர அவசரமாக வாசலை நோக்ககி விரைந்து கொண்டிருந்தார்கள். அவர்களுடன் 'பேர்கர்' இனத்துப் பெண்ணான கந்தரட்ணத்தின் காரியதரிசிப் பெண் இமெல்டாவும் விரைந்து கொண்டிருந்தாள். அவர்கள் எங்கே அவ்விதம் விரைந்து கொண்டிருந்தார்கள்?

இளங்கோ நண்னுக்கு: "நாங்களும் இவர்களுடன் வெளியில் போவோம். இவர்களும் வெளியில் போய் விட்டால் நாங்கள் இங்கு தனியாக அகப்பட்டு விடுவோம்."

இருவரும் கந்தரட்ணத்தப் பின் தொடர்ந்தார்கள். வெளியில் சென்ற அவர்கள் தயாராக நின்று கொண்டிருந்த அரச வாகனத்தில் ஏறிக் கொண்டார்கள். அவர்களின் அனுமதி எதனையும் எதிர்பார்க்காமலே இளங்கோவும் நண்பனும் விரைவாக அந்த வாகனத்தில் ஏறிக் கொண்டார்கள். அவர்களை ஏற்றிக் கொண்ட அந்த வாகனத்தைச் சாரதி மருதானைப் பக்கமாகச் செலுத்தினான். இதற்கிடையில் யாரோ தமிழர்கள் வாகனத்தில் தப்பியோடுவதை வீதியில் அப்பொழுதும் நடமாடிக் கொண்டிருந்த குண்டர்கள் சிலருக்குக் கூறியிருக்க வேண்டும். அவர்களில் சிலர் வாகனத்தை நோக்கிக் கைகளில் பொல்லுகளுடன் விரைவாக ஓடி வந்தார்கள். அவர்கள் கைகளில் மட்டும் சிக்கியிருந்தால் அன்று அவர்களின் கதை முடிந்து விட்டிருக்கலாம். இதற்கிடையில் மருதானைச் சந்தி காமினி திரையர்ங்உ வரையில்தான் வாகனத்தைச் சாரதியால் ஓட்ட முடிந்தது. அதற்கப்பால் போக முடியாதபடி கலவரச் சூழல் நிலவியது. வாகனத்தை விரைவாகத் திருப்பிய சாரதி மீண்டும் விஜயவர்த்தனா மாவத்தை வழியாக லேக் ஹவுஸ் பக்கம் செலுத்தினான்.

கந்தரட்ணமும், பாலகிருஷ்ணனும் சிறிது கவலையுடன் காணப்பட்டார்கள். இமெல்டாவோ அழுது விடுவாள் போல் காணப்பட்டாள். தமிழர்களுடன் சேர்த்து அவளையும் சேர்த்து வாகனத்துடன் தாக்கி விட்டாலென்ற கவலையில் அவளுக்கு அழுகைமேல் அழுகையாக வரவே இலேசாக அழவும் தொடங்கினாள். அவ்விதமாகக் கொழும்பு வீதிகளினூடாகச் சென்று கொண்டிருக்கையில்தான் கலவரச் சூறாவளியினை அதன் வேகத்தினை இளங்கோ முதன்முறையாக உணர்ந்தான். எவ்வளவு வேகமாக வீசியடிக்கத் தொடங்கி விடுகிறது? வழியெங்கும் தமிழர்களுக்குச் சொந்தமான வாகனங்கள் வீதிகளில் எரிந்து கொண்டிருந்தன. யாராவது உள்ளே இருந்தார்களாவென்பது தெரியவில்லை? வீதிகள் பலவற்றில் கடைகள் பல எரிந்து கொண்டிருந்தன. இளங்கோ கந்தரட்ணத்திடம் ஆங்கிலத்தில் கேட்டான்: "நீங்கள் எங்கு செல்வதாக உத்தேசம்?"

அதற்கவர் கூறினார்: " நாங்களிருவரும் ஓட்டல் ஒபராய் செல்லுகிறோம். இமெல்டா தெகிவளையிலுள்ள தன் வீடு செல்கிறாள். நீங்கள் எங்கு செல்வதாகத் திட்டம்?"

இளங்கோ: "நல்லதாகப் போய் விட்டது. உங்களை ஓட்டல் ஒபராயில் இறக்கி விட்டு எங்களை இராமகிருஷ்ண மடத்தில் இறக்கி விடலாம். இமெல்டா செல்லும் வழிதானே.."

இமெல்டா இன்னும் அழுது கொண்டிருந்தாள்.

ஒரு வழியாக உயர் அதிகாரிகளிருவரையும் ஓட்டல் ஒபராயில் இறக்கி விட்டு வாகனச் சாரதி வாகனத்தைக் காலி வீதி வழியாகச் செலுத்தினான். சிறிது வயதான அந்தச் சிங்களச் சாரதி இவர்களிருவரையும் பார்த்துக் கேட்டான்: "நீங்கள் எங்கு செல்ல் வேண்டும்"

நண்பன்: "எங்களை இராமகிருஷ்ண மடத்தில் இறக்கி விட்டால் நல்லது.."

அதற்கந்தச் சாரதி கூறினான்: "என்னால் இராமகிருஷ்ண மடம் மட்டும் வர முடியாது. உங்களை இராமகிருஷ்ண வீதியும், காலி வீதியும் சந்திக்கும் சந்திப்பில் இறக்கி விடுகிறேன். இறங்கிச் செல்லுங்கள்"

இளங்கோ: "அது போதுமெங்களுக்கு. மிக்க நன்றி"

வழியெங்கும் காடையர் கூட்டம் ஆர்ப்பரித்தபடி, கடைகள் எரிந்தபடி, வாகனங்கள் தலை குப்புற வீழ்ந்து எரிந்தபடி, ஆண்களும், பெண்களுமாகத் தமிழர்கள் அவசர அவசரமாக விரைந்தபடி, ஓடியபடி,... சூழலின் அகோரம் நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்தபடியிருந்தது. இதுபற்றிய எந்தவிதக் கவலைகளுமற்று விண்ணில் சிறகடித்துக் கொண்டிருந்த பறவைகள் சிலவற்றை ஒருவிதப் பொறாமையுடன் பார்த்தான் இளங்கோ. இத்தகைய சமயங்களில் எவ்வளவு சுதந்திரமாக அவை விண்ணில் சிறகடிக்கின்றன.

வாகனச் சாரதி காலி வீதியும், இராமகிருஷ்ண வீதியும் சந்திக்குமிடத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கும்படி கூறினான். உயர் அதிகாரிகள் இருந்தபோது அவன் காட்டிய பணிவு, மரியாதையெல்லாம் இப்பொழுது அடியோடு அகன்று விட்டன. இளங்கோ நண்பனை நோக்கினான்.

"என்ன இறங்கி நடப்போமா?"

நண்பன் பதிலுக்குத் தலையசைக்கவே இருவரும் அவசரமாக இறங்கினார்கள். அப்பொழுதுதான் தெகிவளைக் காலவாயை அண்டியிருந்த சேரியிலிருந்து காடையர் கும்பலொன்று கைகளில் கத்திகள், பொல்லுகளென்று ஆரவாரித்தபடி, சிங்களத்தில் ஏதோ கத்தியபடி இவர்களளிருந்த திக்கை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். சிந்திப்பதற்கு நேரமில்லை. மீண்டும் இருவரும் சொல்லி வைத்த மாதிரி மீண்டும் வாகனத்திற்குள் பாய்ந்தேறினார்கள். ஓரளவு ஆசுவாசப்பட்ட இமெல்டா மீண்டும் அழத் தொடங்கி விட்டாள். இளங்கோ சாரதியிடம் தெகிவளையில் இறக்கி விடும்படி கூறினான். வேண்டா வெறுப்பாகச் சாரதி வாகனத்தை மீண்டும் செலுத்தத் தொடங்கினான். நல்லவேளை கும்பல் வாகனத்தை நிறுத்தித் தொல்லை தரவில்லை. தெகிவளை அண்மித்ததும், கொழும்பு மிருக காட்சிச் சாலைக்குச் செல்லும் வீதியுடனான சந்திப்பில் மீண்டும் வாகனத்தை நிறுத்தி விட்டான் சாரதி. சந்தியில் இரு சிங்களக் காவற்துறையினர் ஒரு சில குண்டர்களைப் போன்ற தோற்றத்தில் காணப்பட்ட சிங்களவர்களுடன் கதைத்துக் கொண்டிருந்ததை அப்பொழுது இளங்கோ அவதானித்தான். அத்துடன் சாரதியிடம் கேட்டான்:

"எதற்காக வாகனத்தை நிறுத்தி விட்டாய். இமெல்டாவை விட்டு விட்டு வரும் வழியில் எங்களிருவரையும் இராமகிருஷ்ண மண்டபத்தில் கொண்டு சென்று விட முடியுமா?"

அதற்கு அந்த வாகனச் சாரதி சிறிது உரத்த குரலில் பதிலிறுத்தான்: "என்னுடைய உயிருக்கு யார் உத்தரவாதன்?"

இளங்கோ (நண்பனை நோக்கி): "இஅவன் இப்படியே உரக்கக் கதைத்து அந்தக் குண்டர்களுக்கு எங்களைக் காட்டிக் கொடுத்தாலும் கொடுத்து விடுவான். அதற்குள் இறங்குவதே புத்திசாலித்தனம். சே. நாங்களும் கந்தரட்ணத்துடன் ஓட்டல் ஒபராயிலேயே இறங்கி விட்டிருக்கலாம்."

வாகனச் சாரதிக்கும், இமெல்டாவுக்கும் நன்றி கூறிவிட்டு எதிர்ப்புறம் கடற்புறமாகவிருந்த வீதியை நோக்கி நடக்கத் தொடங்கினான் இளங்கோ. அத்துடன் நண்பனுக்கு இவ்விதம் கூறினான்: "என்னுடன் ஒன்றுமே கதைக்காதே. அபப்டியே என்னைப் பின் தொடர்ந்து வா எந்தவிதப் பதட்டமுமில்லாத தோற்றத்துடன். நான் இப்படியே தெகிவ்லை நூலக வீதியால் கடற்கரைக்குச் சென்று கடற்கரை வழியாக அப்படியே இராமகிருஷ்ண மண்டபத்துக்குச் சென்று விடலாம். கடற்கரை வழியால் செல்லும் போது நான் கடலை, அலையையெல்லாம் இரசித்து வந்தால் ஆச்சரியப்பட்டு விடாதே. புகையிரதக் கடவை வழியாகக் கூண்டர்கள் யாரும் வந்தால் சந்தேகப் படமாட்டார்கள். ஆக உச்சக் கட்டமாகக் கடலில் குளித்தாலும் குளிப்பேன்." இவ்விதம் கூறிவிட்டுக் கடற்கரையை நோக்கிச் சென்ற இளங்கோவைச் சிறிது தொலைவில் பின் தொடர்ந்தான் நண்பன்.



அத்தியாயம் நான்கு: மதகுருவின் துணிவு!

அந்தக் காலை நேரத்திலும் கடலில் சில ஐரோப்பிய உல்லாசப் பயணிகள் சிலர் கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். 'விதேசிகள் ஆனந்தமாகக் குளித்துக் கொண்டிருக்கின்றார்கள். இங்கு நான் சுதேசியோ உயிரைத் தப்ப வைப்பதற்காக ஓடிக் கொண்டிருக்கின்றேன். அவர்களுக்கு இருக்கின்ற உரிமைகள் கூட எனக்கில்லையே' இவ்விதமாக அந்தக் கணத்திலும் இளங்கோவின் சிந்தையிலொரு எண்ணம் கோடு கிழித்தது. கொழும்பிலிருந்து காலிக்குச் செல்லும் புகையிரதக் கடவைகள் வழியாகக் குண்டர்களின் நடமாட்டம் சிறிது அதிகமாகவிருந்ததை அவதானித்தவன் கடற்கரை மணலினுள் இறங்கியவனாகக் கடலையும், அதன் வனப்பையும், அங்கு நீராடிக் கொண்டிருந்தவர்களையும் பார்த்தவனாக இராமகிருஷ்ண மடமிருந்த திக்கை நோக்கி நடந்தான். அடிக்கொருதரம் திரும்பி நண்பன் பின்தொடர்வதை உறுதி செய்து கொண்டான். நண்பனைப் பொறுத்தவரையில் பார்வைக்குக் கிராமத்துச் சிங்கள இளைஞனைப் போன்று சிறிது வெண்ணிறமான தோற்றத்தில் சுருண்ட தலைமயிருடனிருந்தான். சிங்களம் வேறு மிகவும் இயல்பாகக் கதைக்குமாற்றல் பெற்றவன். தப்பி விடுவான். இவனைப் பொறுத்தவரையில் நிலமை வேறு. 'ஒயாகே நம மொக்கத?', 'டிக்கக் டிக்கக் தன்னவா' போன்ற ஒரு சில ஆரம்பச் சிங்கள வார்த்தைகளைத் தவிர சுட்டுப் போட்டாலும் இவனுக்குச் சிங்களம் வராது. ஒரு முறை இவனது பல்கலைக் கழக வாழ்க்கையில் நிகழ்ந்ததொரு சம்பவம் இவனது சிங்கள மேதமையினை வெளிப்படுத்தவல்லது. ஒருமுறை இவனை பகிடிவதை செய்த மாணவர்கள் சிலர் இவனிடம் அரை இறாத்தல் சீனி வாங்கி வரும்படி கூறியிருந்தனர். அப்பொழுது பல்கலைக்கழகத்துக்கு அண்மையிலிருந்த சிங்கள்வரொருவரின் பலசரக்குக் கடைக்குச் சென்றவன் 'எக்கா மாறா'வென்று ஒன்றரை இறாத்தல் பாணுக்குக் கூறுவது நினைவுக்கு வரவே அரை இறாத்தல் சீனிக்கு 'சீனி மாறா'வென்று ('சீனி பாகயா' என்றுதான் கூறவேண்டும்) கேட்டு அங்கிருந்தவர்களின் சிரிப்புக்காளானான். மேலுமின்னுமொரு சம்பவம் அவனது இரயில் பயணத்தில் நடைபெற்றிருந்தது. ஒரு முறை யாழ்தேவியில் கொழும்புக் கோட்டையிலிருந்து யாழ்நகர் நோக்கிச் சென்று கொண்டிருந்தவனுக்கு அங்கிருந்த உணவகத்தில் 'மட்டன் ரோ'லொன்று வாங்கியுண்ணவேண்டுமென்று விருப்பம் வந்தது. அந்த உணவகமோ சிங்களவரொருவரால் நடாத்தப்பட்டதுணவகம்.
அவரிடம் 'ரோல் கீயத'வென்று தனக்குத் தெரிந்த சிங்களத்தில் வினாத்தொடுத்தான். அதற்கவர் 'எக்கா விசிப்பகா' என்றார். உடனேயே இவனுக்கோ ஆனந்தம் தலைவிரித்தாடியது. ஊரில் கூட ஒரு 'ரோல்' ஒரு ரூபா இருபத்தியைந்து சதத்திற்கு விற்பனயாகும்போது இங்கு எவ்வளவு குறைந்த விலையில் ஒன்று இருபத்தியைந்துக்கு விற்கிறானே என்று சந்தோசப்பட்டவனாக இரண்டு ரோல்களை வாங்கி ஆசை தீர உண்டு விட்டு அதற்குரிய பணமாக ஐம்பது சதத்தை எடுத்துக் கொடுத்தான். அதற்குப் பதிலாக வெளிப்பட்ட அந்தச் சிங்களவரின் முறைப்பிற்குப் பின்னர்தான் ரோலின் விலை 'ஒரு ரோல் இருபத்தியைந்து சதமல்ல ஒரு ரோல் ஒரு ரூபா இருபத்தியைந்து சதமென்பதே' அவனுக்கு விளங்கியது. இந்த நிலையில் நாட்டில் நிலவிய அரசியற் சூழல் காரணமாகச் சிங்களம் படிப்பதிலேயே அவனுக்கு ஆர்வமற்றுப் போயிற்று. சிங்கள மொழியில் இவ்விதமானதொரு பாண்டித்தியம் பெற்றவனின் மொழியறிவினை இந்தச் சமயம் பார்த்து யாராவது சிங்களக் காடையன் வந்து பரீட்சித்துப் பார்த்தால் அவனது கதி அதோ கதிதான். அவனது எண்ணமெல்லாம் எப்படியாவது இராமகிருஷ்ண மடத்தினுள் சென்று விட்டால் போதுமென்பதாகத்தான் அச்சமயத்திலிருந்தது. காடையர்கள் கடந்த கலவரத்தில் விட்டு வைத்ததைப் போல் இம்முறையும் இராமகிருஷ்ண மடத்தை விட்டு வைப்பார்களென்று அவனது மனம் ஏனோ அச்சமயத்தில் நம்பியது. ஒரு வழியாக அவனும் நண்பனும் இராமகிருஷ்ண மண்டபத்தை அடைந்து விட்டார்கள். ஆனால் கைக்கெட்டியது வாய்க்கெட்டாத நிலைதான். இராமகிருஷ்ண மண்டபத்தின் முன்புற வாசற் கதவு பூட்டப் பட்டிருந்தது. வாசலின் முன்புறமாக இராமகிருஷ்ண வீதியில் காடையர் கும்பலொன்று நின்று மண்டபத்தையே வேடிக்கை பார்த்தபடியிருந்தது. அவனும் நண்பனும் அவர்களோடு அவர்களாக நின்று வேடிக்கை பார்ப்பது போல் பாவனை செய்தார்கள். அடிக்கொருதரம் கொழும்புத் தமிழர்கள் சிலர் வாகனங்களில் வந்து மடத்தின் முன்னால் இறங்கிக் கொண்டிருந்தார்கள். அவ்விதம் வந்தவர்களை உள்ளிருந்து வந்த பாதுகாவல் அதிகாரி அடிக்கொருதரம் வாசற் கதவினைத் திறந்து உள்ளே விட்டு விட்டு மீண்டும் மூடிக் கொண்டிருந்தான். அத்தகையதொரு சமயததில் அவனும் நண்பனும் அபயம் தேடி வந்த பாதிக்கப்பட்ட தமிழர்களுடன் சேர்ந்து உள்ளே நுழைந்து விட்டார்கள்.
மண்டபத்தினுள் மேலும் பல தமிழர்கள் என்ன நடக்குமோ ஏது நடக்குமோவென்ற பயப்பிராந்தியிருந்தார்கள். வெளியில் இன்னும் காடையர்கள் கூட்டம் வேடிக்கை பார்த்தபடியேயிருந்தது. வரவர அவர்களது கூட்டமும் அதிகரித்தபடியேயிருந்தது. உள்ளிருந்த தமிழர்களில் தமது தேன்நிலவினைக் கொண்டாட வந்து அங்கு தங்கியிருந்த இளந்தம்பதியொன்றுமிருந்தது. பார்க்கப் பாவமாகவிருந்தது.

இத்தகையதொரு சூழலில் அங்கிருந்தவர்களில் சிறிது உயரமாகத் திடகாத்திரமாகவிருந்த தமிழ் இளைஞனொருவன் அங்கிருந்த இளைஞர்களைப் பார்த்துப் பின்வருமாறு கூறினான்:

"இன்னும் கொஞ்ச நேரத்திலை வெளியிலை வேடிக்கை பார்க்கிற குண்டர்கள் உள்ளுக்குள் வந்து விடுவான்கள். நாங்கள் பயப்படக் கூடாது. எதிர்த்து நிற்க வேண்டும்." நடைமுறைச் சாத்தியமற்ற துணிச்சலாக அது அவனுக்குப் பட்டது. இத்தகைய சமயங்களில் ஆத்திரப்படாமல், சமயயோசிதமாக, நிதானத்துடன் சிந்தித்துப் பிரச்சினையை அணுக வேண்டும். அவசரப்பட்டுக் காரியத்தைக் கெடுத்து விடக் கூடாதென்று இவனுக்குப் பட்டது. அவ்விதம் கூறிய அந்த இளைஞன் உள்ளே சென்று எங்கிருந்தோ 'அலவாங்கு' அளவிலிருந்த இரும்புத் துண்டங்களைக் கொண்டு வந்து அங்கிருந்த இளைஞர்கள் கைகளில் கொடுத்தான்.

வெளியில் காடையர்களின் அட்டகாசம் வினாடிக்கு வினாடி அதிகரித்தபடியேயிருந்தது. அதனை அடிக்கொருதரம் ஜீப்புகளில் வந்து 'ஜெயவீவா' கோசமிட்டுச் சென்ற சிறிலங்கா இராணுவத்தினரின் உற்சாகமும் அதிகரிக்க வைப்பதாகவிருந்தது. இராமகிருஷ்ண மண்டபத்தின் முன்னால் நின்று ஸ்ரீலங்காக் காவற்படையினர் சிலர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். இவற்றால் மேலும் உற்சாகமுற்ற காடையர் கூட்டம் மண்டபத்தினுள் நுழைய முற்பட்டது. பாதுகாவல் அதிகாரிகளும் நிலைமை கட்டு மீறவே ஓடிப்போய் விட்டார்கள். காடையர்கள் உள்ளே வரமுற்படுவதைக் கண்டதும் மண்டபத்தினுள்ளிருந்த தமிழர்கள் ஆளுக்கொன்றாய் பிரிபட்டு மண்டபத்தின் ஒவ்வொரு பக்கமாய் ஓடினார்கள். அதுவரையில் இளைஞர்களுக்கு எதிர்த்து நிற்கும்படி ஆலோசனை வழங்கிய இளைஞன்தான் முதலில் ஓடி மறைந்தவன். மற்றவர்களும் கைகளிலிருந்தவற்றை அப்படி அப்படியே போட்டு விட்டு ஆளுக்கொருபக்கம் ஓடி விட்டார்கள். இவ்விதமாக ஓடியதில் நண்பனும் இவனும் பிரிபட்டுப் போனார்கள். பெண்களெல்லாரும் படிகள் வழியாக மொட்டை மாடிக்கு ஏறிச் சென்றார்கள். அவ்விதம் சென்றவர்கள் ஒளிவதற்கு இடமில்லாத நிலையில் தண்ணீர்த் தாங்கிக்கும் மொட்டை மாடித்தரைக்குமிடையிலிருந்த சிறியதிடத்தில் நெருக்கியடித்து குடங்கிக் கொண்டார்கள்.

இளங்கோ மொட்டை மாடிக்கு வந்தபோது மொட்டை மாடியில் நீட்டிக் கொண்டடிருந்த தூண்களைத் தவிர ஒளிவதற்கென்று ஏதுமில்லை. தண்ணீர்த்தாங்கிக்கடியில் குடங்கிக் கிடந்த பெண்களின் நிலை பரிதாபமாகவிருந்தது. வயது முதிர்ந்த தமிழரொருவர் வருவது வரட்டுமென்ற நிலையில் மொட்டை மாடிக்குள் நீட்டிக் கொண்டிருந்த தூணொன்றின் பின்னால் சாய்ந்தவராக வானத்தையே பார்த்தபடியிருந்தார். அகதிகளாக விண்ணில் மேகங்கள் அலைந்து கொண்டிருப்பபதுபோல் பட்டது. அப்பொழுதுதான் அவன் ஆரம்பத்தில் ஆயுதம் தந்து விரைந்து மறைந்து போன இளைஞன் நீர்த்தாங்கியின் மேல் மல்லாந்து படுத்து ஆகாயத்தையே நோக்கியபடியிருந்ததை அவதானித்தான். அவ்விதம் அவன் படுத்திருப்பதைக் கீழிருப்பவர்கள் யாரும் இலேசில் பார்த்து விடமுடியாது.

இச்சமயம் நகரில் கலவரம் சுவாலை விட்டு எரியத் தொடங்கியிருப்பதை வெள்ளவத்தைப் பக்கமிருந்து வந்த புகைப் படலம் தெரியப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து புகையிரத்தப் பாதைகள் வழியாகத் தமிழர்கள் தெகிவளைப் பக்கம் நோக்கி ஓடிக் கொண்டிருந்ததையும் அவதானிக்க முடிந்தது. வயது முதிர்ந்த பெண்கள் சேலைகளை முழங்கால்கள் வரையில் தூக்கியபடி ஓட முடியாமல் ஓடிக் கொண்டிருந்தார்கள். எதிரிலிருந்த 'ஓட்டல் பிரைட்டனி'ல் தங்கியிருந்த உல்லாசப்பயணிகள் சிலர் அருகில் நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். சிலர் பல்வேறு விதமான புகைப்படக் கருவிகள் மூலம் படம் பிடித்துக் கொண்டிருந்தார்கள். இதே சமயம் இராமகிருஷ்ண மடத்தின் முன்பாக அதன் வளாகத்தில் தரித்து நின்ற யாழ்ப்பாணத்துப் பிள்ளையார் விலாசுக்குச் சொந்தமான பஸ் வண்டியொன்றைக் காடையர்கள் எரியூட்டினார்கள். இன்னுமொரு ஜீப் வண்டியை மண்டபத்தின் கீழ்த்தளக் கண்ணாடிச் சுவரொன்றுடன் மோதினார்கள். அத்துடன் மண்டபத்தினுள் காடையர்கள் நுழைந்து விட்டார்கள். அவர்களொருவன் மொட்டை மாடிக்கு வந்து எட்டிப் பார்த்தான். பார்த்தவன் "உத்தா இன்னவா" என்று கத்தி சென்றான். மீண்டும் வந்து மொட்டை மாடியிலிருந்து கீழ்ச் செல்லும் படிகளுக்கண்மையில் நின்றவனாக அனைவரையும் இறங்கும்படி சைகை காட்டினான். அவ்விதம் இறங்கியவர்களின் கைகளிலிருந்தவற்றை பிடுங்கி விட்டுத்தான் இறங்க அனுமதித்தான். பலர் அவசர அவசரமாகத் தப்பி வந்தபொழுது கொண்டுவந்திருந்த நகைகள், பணம் போன்ற பலதையும் இழந்தார்கள். உயிருக்கே உத்தரவாதமில்லா நிலையில் யாருக்கு வேண்டும் உடமை?

இவ்விதமாக இறங்கியவர்களை மீண்டும் மேலே கலைத்தது கீழிருந்து வந்த காடையர்களின் கூச்சல். மீண்டும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திக்காக ஓடினார்கள். பலர் ஒவ்வொரு தளங்களிலுமிருந்த கழிவறைகளில், குளியலறைகளிலெல்லாம் ஓடி ஒளிந்து நின்றார்கள். அவ்விதமாகக் கழிவறையொன்றினுள் அவனும் அந்தப் புதுமணத்தம்பதியினரும் சிறிதுநேரம் அகப்பட்டுக் கொண்டார்கள். பயத்தால் கதி கலங்கிப் போயிருந்தனர் அந்தப் புதுமணத் தம்பதியினர்.

காடையர்களில் சிலர் இராமகிருஷ்ண மண்டபத்தையும் எரியூட்ட முனைந்தார்கள். அதுவரையில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த காவற்துறையினரில் சிலர் அப்பொழுதுதான் உள்ளே நுழைந்தார்கள். அத்துடன் அம்முயற்சியினைக் கைவிட்ட காடையர்கள் வளாகத்துக்கு வெளியில் நின்று மீண்டும் வேடிக்கை பார்க்கத் தொடங்கினார்கள். அச்சமயத்தில் அருகிலிருந்த தமிழர்களுக்குச் சொந்தமான வீடுகளையெல்லாம் உடைத்து அங்கிருந்த பொருட்களையெல்லாம் எடுத்துக் கொண்டு ஆண்களும், பெண்களும் சிறுவர்களும் வீதி வழியாக ஓடிக் கொண்டிருந்தார்கள். அவ்விதம் ஓடிக் கொண்டிருந்தவர்களை உற்சாகப் படுத்தும் வகையில் அடிக்கொருதரம் இராணுவச் சிப்பாய்கள் 'ஜெயவீவா' கோசமிட்டபடி ஜீப்புகளில் விரைந்து கொண்டிருந்தார்கள்.

அதன் பின்னர் உள் நுழைந்த காவற்துறையினர் அனைவரையும் அங்கிருந்து செல்லும்படி பணித்தார்கள். வெளியில் காடையர்களின் அட்டகாசமிருக்கையில் எங்கு போவது? அனைவரும் அருகிலிருந்த இராமகிருஷ்ண மடத்துத் தலைவரான துறவியின் வீட்டினுள் நுழைந்து கொண்டார்கள். இதே சமயம் ஆரம்பத்தில் இராமகிருஷ்ண மடத்திலிருந்து தப்பியோடுகையில் பலர் அருகிலிருந்த தென்னைகளைப் பிடித்து வெளிப்புறமாகத் தப்பியோடினார்கள். அவ்விதம் ஓடியவர்களில் ஒருவனாகத்தான் அவனது நண்பனுமிருக்க வேண்டும். இராமகிருஷ்ண மடத் துறவியின் வீட்டினுள் அடைக்கலம் புகுந்தவர்களில் அவனைக் காணவில்லை.

பிரச்சினை அத்துடன் ஓயவில்லை. மீண்டும் தமிழர்கள் துறவியில் இல்லத்திலிருப்பதை அவதானித்து வைத்த காடையர்கள் சிலர் துறவியின் இல்லத்தைச் சுற்றிச் சுற்றியெ வந்து கொண்டிருந்தார்கள். உள்ளே அகப்பட்டுக் கொண்டிருந்தவர்களில் சிலர் கொழும்பில் செல்வாக்கான தமிழர்கள். அவர்கள் தங்கள் செல்வாக்கினைப் பாவித்து மேலிடங்கள் பலவற்றுடன் தொடர்பு கொள்ள முயன்று களைத்துப் போனார்கள். எந்தச் சமயத்திலும் காடையர்கள் உள் நுழைந்து விடலாமென்ற நிலை.... எதிர்காலம் நிச்சயமற்றிருந்த நிலையில் அனைவருமிருந்தார்கள். ஒரு சில காடையர்கள் ஆயுதங்களுடன் துறவியின் வீட்டினுள் நுழைய முற்பட்டார்கள். உள்ளிருந்து வெளியில் நடப்பதை அனைவரும் அவதானித்துக் கொண்டிருந்தார்கள்.

அந்தச் சமயத்தில்தான் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. அந்தத் துறவி உயர்ந்த ஆகிருதி படைத்தவர். கம்பீரமான தோற்றம் மிக்கவர். மிகுந்த துணிவும் நெஞ்சுரமும் மிக்கவரென்பதை அப்பொழுதுதான் அவன் அவதானித்தான். நீண்டதொரு சாய்வு நாற்காலியினை இல்லத்துக் கதவின் முன்னால் இழுத்துப் போட்டு விட்டுக் காடையர்கள் யாரும் உள் நுழைய முடியாத வகையில் மிகவும் சாவதானமாக அந்நாற்காலியில் சாய்ந்து கொண்டார். அந்தக் காடையர்களைப் பார்த்து என்னை வெட்டிப் போட்டு விட்டு வேண்டுமானால் உள்ளே செல்லுங்கள் என்னும் தோரணையில் அவ்விதமாக அவர் நடுவில் மறித்து நின்றது உள்ளே நுழைய முற்பட்ட காடையர்களை ஏதோ விததில் கட்டிப் போட்டு விட்டது. அந்த மதகுரு மட்டும் அன்று அவ்விதம் தடுத்திரா விட்டால் என்ன நிகழ்ந்திருக்குமோ? அன்று மாலை வரை இந்நிலை நீடித்தது. இதே சமயம் இராமகிருஷ்ண மண்டபத்தினுள் அகப்பட்டிருந்தவர்கள் ஓரளவு நிலைமை சீராகத் தொடங்கியதும் அங்கிருந்த வசதிகளைப் பாவித்துத் தேநீர் போட்டுக் கொண்டு துறவியின் இல்லத்தில் தங்கியிருந்தவர்களுக்குக் கொண்டு வந்து தந்தார்கள். அப்பொழுதுதான் அவனது பிரிந்து போன் நண்பனை அவன் மீண்டும் சந்தித்தான். 'என்ன நடந்தது?' என்றவனுக்கு அவன்
'அதுவொரு பெருங் கதை. தப்பிப் பிழைத்ததே அருந்தப்புத்தான். பிறகு விபரமாகச் சொல்லுகிறேன்' என்றான். அதன் பின்னர் அனைவரும் ஒன்று சேர்ந்து அனைவருக்கும் உணவு தயாரித்துப் பகிர்ந்துண்டார்கள். இரவாகி விட்டது. அன்றிரவே லொறிகளில் ஆடுமாடுகளைப் போல் அனைவரையும் திணித்து பம்பலப்பிட்டியிலுள்ள சரஸ்வதி மண்டபத்தினுள் கொண்டுவந்து இறக்கி விட்டார்கள்.


அத்தியாயம் ஐந்து: இளங்கோவின் நாட்குறிப்பிலிருந்து......

இளங்கோவின் நாட்குறிப்பிலிருந்து......
சரஸ்வதி முகாமிற்கு வந்தபோது அகதிகளுக்கு எந்தவித வ்சதிகளும் அங்கிருக்கவில்லை. நான் என் பல்கலைக் கழகத்துத் தோழர்கள் மற்றும் ஏனைய தமிழ இளைஞர்கள் பலர் ஒன்றிணைந்து தொண்டர்கள் குழுவொன்றை ஏற்படுத்திக் கொண்டோம். அதன் பின் அனைவரும் தமிழக அரசினால் அகதிகளை யாழ்ப்பாணம் கொண்டு செல்ல அனுப்பபட்ட சிதம்பரம் கப்பலில் யாழ்ப்பாணம் செல்லும்வரையில் அம்முகாமிலேயே தங்கியிருந்து தொண்டர்களாகப் பணிபுரிந்தோம். சிதம்பரம் கப்பலில் யாழ்ப்பாணம் செல்லும் வரையில் வீட்டாருக்கு நான் உயிருடனிருக்கும் விடயமே தெரிந்திருக்கவில்லை. அகதி முகாமிலிருந்து ஏற்கனவே இலங்கை அரசின் 'லங்காரத்னா' சரக்குக் கப்பலில் ஊர் திரும்பியிருந்த ஊரவனொருவனிடம் என் நிலைமையினை வீட்டாருக்குத் தெரியப்படுத்தும்படி கூறியிருந்ததேன். யாழ்ப்பாணம் திரும்பிய அவன் அவனது உறவினருடன் கைதடியிலேயே நின்று விட்டதால் உடனடியாக விடயத்தை வீட்டாருக்குத் தெரியப்படுத்த முடியவில்லை. நான் சிதம்பரம் கப்பலில் திரும்பிய பின்னரே அவன் ஊர் திரும்பி விடயத்தை என் வீட்டாருக்குத் தெரியப்படுத்துவதற்காக வந்திருந்தான்.

முதன் முதலாகச் சொந்த நாட்டிலேயே அகதியான அனுபவம் மனோரீதியீல் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே என் மக்கள் பல வருடங்களாக அனுபவித்து வந்ததொரு வாழ்வுதான். சொந்தமாக அனுபவித்தலென்பது பெரிதும் வித்தியாசமானது. உண்மையிலேயே இந்தக் கலவரத்தில் நானும், நண்பனும் தப்பியது மயிரிழையில்தானென்பது சரஸ்வதி முகாமில் பின்னர் சந்தித்த அகதிகள், சர்வதேச பத்திரிகை, வானொலிச் செய்திகள் போன்றவற்றிலிருந்து நன்கு புரிந்தது. வழக்கமாகக் கலவரங்கள் நாட்டின் ஏனைய பாகங்களில் பெருமளவுக்குப் பற்றியெரியும். தலைநகர் அநேகமாகத் தப்பிவிடும். ஆனால் இம்முறை.. தலைநகரான கொழும்பே பற்றியெரிந்தது. நாங்கள் அரச வாகனத்தில், இந்தியப் பொறியியலாளரின் புண்ணியத்தில் தப்பிச் சென்று கொண்டிருந்தபொழுது கொழும்பில் மினிவானொன்றினுள் தமிழர்களை ஒட்டுமொத்தமாகப் பெற்றோலூற்றித் துடிதுடிக்கக் கொழுத்தியிருக்கின்றார்கள். துவிச்சக்கர வண்டியொன்றில் வந்து கொண்டிருந்த தமிழனொருவனையிழுத்து அடித்துக் கொன்றிருக்கின்றார்கள். இன்னுமொருவனை நிர்வாணமாக்கி, அவமானப்படுத்தி எரியூட்டியிருக்கின்றார்கள். கிருலப்பனையில் இளம்பெண்ணொருத்தியின் கண் முன்னாலேயே அவளது பிஞ்சுச் சகோதரியைக் கொன்று, சித்தப்பிரமையாக்கிப் பலர் பாலியல் வல்லுறவு செய்து கொன்றிருக்கின்றார்கள். வழக்கம்போல் மலையகத்தில் இம்முறையும் இந்தியத் தோட்டத் தொழிலாளர்களான தமிழர்கள்மேல் பரந்த அளவில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தது. இவற்றிற்கெல்லாம் காரணமாக ஜூலை 23இல் யாழ் திண்ணைவேலியில் நடந்த பதின்மூன்று இராணுவத்தினரின் மீதான விடுதலைப் புலிகளின் தாக்குதலேயென்று ஜே.ஆர். தலைமையிலான அரசு பழி கூறியது. அதனையொரு சாட்டாக வைத்துக் கலவரத்தை ஏற்கனவே திட்டமிட்ட வகையில் ஊதிப் பெரிதாக்கியது சிறில் மைத்தியூ, காமினி திசாநாயக்க போன்ற அமைச்சர்களின் அரவணைப்பிலியங்கிய காடையர் கும்பலே. இத்தகைய சூழலிலும் எத்தனையோ சிங்கள மக்கள் தம் அயலில் வசித்த தமிழர்களைக் காடையர்களிலிருந்து காப்பாற்றியிருக்கத்தான் செய்திருக்கின்றார்கள்.

ஜே.ஆர்.ஜெயவர்த்தனே இலங்கைப் பிரதமராக 1977இல் பதவியேற்றதுமே மிகப்பெரிய இனக்கலவரமொன்று நடைபெற்றது. அதனைத் தமிழர்கள் தனிநாட்டுக் கோரிக்கைக்கு ஆதரவாகக் கூட்டணிக்கு வாக்களித்ததற்காக 'போரென்றால் போர். சமாதானமென்றால் சமாதானம்' என்று ஊதிப் பெரிதாக்கினார் இன்றைய ஜனாதிபதி. அரசியலில் பழுத்த தந்திரம் மிக்க குள்ளநரியென்று ஜே.ஆரைக் கூறுவது நன்கு பொருத்தமானதே. அன்றைய பிரதமர் பண்டாரநாயக்காவுக்கும் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்துக்குமிடையிலேற்பட்ட ஒப்பந்தத்தைக் கண்டிக்குப் பாதயாத்திரை சென்று கிழித்தெறிய வைத்தவரிவர்.அதிகாரத்தை வைத்து அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதில் சமர்த்தர். முன்னாள் பிரதமர் சிறிமா அம்மையாரின் அரசியலுரிமையையே பறித்தவரிவர். இம்முறை இவரது அரச அமைச்சர்கள் தலைமையிலேயே திட்டமிட்ட வகையில் தமிழர்களுக்கெதிரான இனக்கலவரங்கள் அவ்வப்போது கட்டவிழ்த்து விடப்பட்டன. 1981இல் யாழ் நாச்சிமார் கோவில் முன்றலில் நடந்த தேர்தல் கூட்டத்தில் பொலிசார் சுட்டுக் கொல்லப்பட்டதைச் சாக்காக வைத்து அமைச்சர்களான காமினி திசாநாயாக்கா போன்றவர்கள் யாழ் கோட்டையிலிருக்கையிலேயே யாழ்நகரில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. யாழ் நூலகம் எரிக்கப்பட்டது. ஈழநாடு பத்திரிகைக் காரியாலயம் தீக்கிரையானது. இம்முறையும் கலவரத்தைத் தணிப்பதற்குப் பதில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அதனை நியாயப் படுத்தியிருக்கின்றார்.  திண்ணைவேலியில் இராணுவத்தினர் கொல்லப்படுவதற்கு முன்னரே இன்னுமொரு இனக்கலவரம் பெரிய அளவில் நடைபெறுவதற்கான சூழல் நாட்டில் தோன்றி விட்டது. இக்கலவரத்தைச் சாக்காக வைத்துத் தமிழ் அரசியற் கைதிகளைக் கொல்லுவதற்கும், தமிழரின் பொருளாதாரத்தை உடைப்பதற்கும் அதே சமயம் ஜே.வி.பி. போன்ற தனது அரசியல் எதிரிகளைப் பழி வாங்குவதற்கும் ஜே.ஆர். அரசு திட்டமிட்டுச் செயற்பட்டது போல்தான் தெரிகின்றது. அத்துடன் இன்னுமொரு திட்டத்தையும் இக்கலவரத்தைச் சாக்காக வைத்து நிறைவேற்றியது. அது.. 1977இல் ஏற்பட்ட இனக்கலவரத்தைத் தொடர்ந்து வடகிழக்கின் எல்லைப் பிரதேசங்களில் குடியேறியிருந்த மலையகத்தமிழர்களின் குடியேற்றத் திட்டங்களைச் சீர்குலைப்பது. அதனால்தான் இக்கலவரம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்திலேயே இவ்வகையான குடியேற்றத் திட்டங்களில் வாழ்ந்து வந்த மலையகத் தமிழ்க் குடும்பங்கள் பலவற்றை சிறிலங்கா இராணுவம் பலவந்தமாக மீண்டும் மலையகத்துக் கொண்டுவந்து பற்றியெரிந்து கொண்டிருந்த கலவரத்தின் நடுவில் தத்தளிக்க விட்டது போலும். அதனால்தான் இத்தகைய குடியேற்றங்களை நடாத்திய 'காந்தியம்' போன்ற அமைப்புகளின் நிர்வாகத்தர்கள் பலரைக் கலவரம் தொடங்குவதற்கு முன்னரே அரசு கைது செய்து சிறைகளில் அடைத்ததுச் சித்திரவதை செய்தது போலும்.

இம்முறை கலவரத்தின் தன்மையும், தலைநகரிலேயே அது சுவாலை விட்டெரிந்ததும், செய்மதித் தொழில்நுட்பம் போன்றவற்றின் மூலம் தகவல்கள் உடனுக்குடன் உலகம் முழுவதும் பரவியதும் ஈழத்தமிழர்களின் பிரச்சினையை முக்கியமானதொரு சர்வதேசப் பிரச்சினையாக்கி விட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் சகல அரசியற் கட்சிகளும் ஒருமித்து ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தன. இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி இம்முறை ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் மிகவும் ஈடுபாடு காட்டினார். அதனால்தான் ஜூலை 15இல் 'டெய்லி டெலிகிறாப்' என்ற பிரித்தானியப் பத்திரிகையில் தனக்கு யாழ்ப்பாண மக்களைப் பற்றியோ அவர்களது உயிர்களைப் பற்றியோ கவலையில்லை. அது பற்றித் தான் சிந்திப்பதற்கில்லையென்று ஜே.ஆர். நேர்காணலொன்றில் கூறியதைத் தொடர்ந்து பாரதப் பிரமர் இந்திரா காந்தி சீர்கெட்டுவரும் ஈழத்து நிலைமைகளையிட்டு இந்தியாவின் கவலையினை வெளிப்படுத்தினார். அதனையும் 'டெய்லி டெலிகிறாப்' ஜூலைக் கலவரம் ஆரம்பமாவதற்குச் சில நாட்களின் முன்னர் வெளியிட்டிருந்தது.

நாம் அகதிகளாக சரஸ்வதி முகாமில் இருந்த காலகட்டத்தில் இந்திரா காந்தி தனது வெளியுறவுத்துறை அமைச்சரான நரசிம்மராவை உடனடியாகவே இலங்கைக்கு அனுப்பினார். தமிழகம் முழுவதும் இலங்கைத் தமிழர்களுக்காதரவாக ஆர்ப்பாட்டங்களும், உண்ணாவிரதப் போராட்டங்களும் நடைபெற்றன. சாஜகான் என்னுமொரு இஸ்லாமியத் தமிழரொருவர் தமிழகத்தில் ஈழத்தமிழர்களுக்காதரவாகத் தீக்குளித்தார். எம்.ஜி.ஆர் தலையிலான தமிழக அரசு தனது சிதம்பரம் கப்பலை அனுப்பி உதவியது. இக்கலவரத்தில் ஈழத்துக் சுற்றுலாப் பயணியாக வந்திருந்த தனபதி என்னுமொரு தமிழகத் தமிழரைக் கதிர்காமத்தில் சிங்கள சிகை அலங்கரிப்பாளரொருவர் கழுத்தை வெட்டிக் கொலை செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து எம்ஜீஆர் அரசு ஜெயவர்த்தனே அரசிடம் நஷ்ட்ட ஈடு கோரியது.

சரஸ்வதி அகதி முகாம் வாழ்க்கையில் பல்வேறு அனுபவங்களைப் பெற்றுக் கொண்டேன். ஆரம்பத்தில் சில நாட்கள் அகதிகள் அனைவரும் உண்பதற்கெதுவுமில்லாமல் பட்டினி கிடந்தார்கள். அந்தச் சமயத்தில் அருகிலிருந்த பம்பலபிட்டிக் கதிரேசன் ஆலயத்துக் குருக்கள் தன்னால் முடிந்த அளவுக்கு உணவு தயாரித்து வந்தவர்களுக்கு வழங்கினார். அதனைப் பெறுவதற்காகத் தள்ளாத வயதிலிருந்த தமிழ் மூதாட்டிகள் கூட சரஸ்வதி அகதி முகாமிலிருந்து மதிலேறிக் கதிரேசன் குருக்கள் வீட்டிற்குச் சென்றார்கள். ஏனையவர்கள் வளவிலிருந்த தென்னை போன்றவற்றிலிருந்து தேங்காய், இளநீர் ஆகிய கிடைத்தவற்றையெல்லாம் உண்டு வயிறாறினார்கள்.  நாங்கள் அகதி முகாமில் இருந்த சமயத்தில் ஜூலை 27இல் மீண்டும் வெலிக்கடைச் சிறையில் மேலும் பல தமிழக் கைதிகள் படுகொலை செய்யப்பட்டார்கள். ஏற்கனவே குட்டிமணி, தங்கத்துரையுட்படப் பலர் ஜூலை 25இல் வெலிக்கடைச் சிறையில் கொல்லப்பட்டிருந்தார்கள்.

கலவரம் சிறிது தணிந்திருந்த சமயம் நானும், நண்பனும் அகதி முகாமில் தங்கியிருப்பதை அறிந்த எம் அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த சில சிங்கள நண்பர்கள் பார்ப்பதற்கு வந்திருந்தனர். அவர்ளை வாசலியேயே வைத்துச் சந்தித்தோம். நடைபெற்ற சம்பவங்களுக்காக வருத்தம் தெரிவித்தார்கள். தங்களுடன் வந்து தங்கியிருக்க விரும்பினால் வரலாமென அழைப்பும் விடுத்தார்கள். நாங்கள் அவர்களது வருகைக்கும், அழைப்புக்கும் நன்றி தெரிவித்தோம். முகாமில் இருப்பதே எங்களுக்கும் அவர்களுக்கும் நல்லதெனக் கூறினோம். நாம் அவர்களுடன் தங்கியிருந்தால் காடையர்களினால் அவர்களுக்கும் ஆபத்து வரலாமென்றும் கூறினோம். நாங்கள் அவ்விதம் அவர்களது அழைப்பினையேற்றுச் செல்லாதது நல்லதென்பதைப் பின்னர் உணர்ந்தோம். அடுத்தநாளே, வெள்ளிக்கிழமையென்று நினைக்கின்றேன், கொழும்பில் 'கொட்டியா வந்திட்டுது' என்ற வதந்தி பரவியது. 'கொட்டியா' என்பது புலிக்குரிய சிங்களச் சொல். நகரில் சிங்கள மக்கள அவ் வதந்தியால் அன்று தப்பியோடினார்கள். வெள்ளவத்தையிலோ தெகிவளையிலோர் வசித்த தமிழரொருவரின் அயலில் வசித்த சிங்களக் குடும்பமொன்று அவரது வீட்டிற்கு அடைக்கலம் தேடி ஓடி வந்த அதிசயமும் நடந்தது. முதலிரு நாட்களில் நடைபெற்ற கலவரத்தில் அவரை சிங்களக் காடையரிலிருந்து அந்தச் சிங்களக் குடும்பம் காப்பாற்றியிருந்தது. இந்த வதந்தியைத் தொடர்ந்து மீண்டும் கலவரம் பலமாக வெடித்தது. ஓரளவுக்குச் சீரடைந்து கொண்டிருந்த நிலைமை மீண்டும் 'கொட்டியா' வதந்தியால் சீர்கெட்டது. சீரடைந்திருந்த நிலைமையை நம்பி நண்பன் கிருலப்பனையிலிருந்த வீடொன்றிற்குக் குளிப்பதற்குச் சென்றிருந்தவன் தலை தப்பினால் புண்ணியமென்று குடல் தெறிக்க ஓடி வந்தான். வந்தவன் தான் தப்பி வந்த பாட்டையெல்லாம் கதைகதையாக விபரித்தான். ஏற்கனவே தப்பியிருந்த தமிழர்கள் பலர் , சீரடைந்து கொண்டிருந்த நிலைமையினைச் சாக்காக வைத்து மீண்டும் தத்தமது இல்லங்களின் நிலையறிவதற்காகத் திரும்பியபோது மேற்படி வதந்தி ஏற்படுத்திய கலவரச் சூழலில் சிக்கி உயிரிழந்தார்கள். 'கொட்டியா' என்ற சொல் எவ்வளவு தூரத்திற்குச் சிங்கள மக்கள் மத்தியில் அச்சத்தினை ஏற்படுத்தியது என்பதையும் மேற்படிச் சம்பவம் எடுத்துக் காட்டியது.

இது இன்னுமொரு உளவியல் உண்மையினையும் எடுத்துக் காட்டியது. இலங்கைத் தீவில் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக இருந்தபோதும் அவர்களுக்கொரு சிறுபான்மை உணர்வு இருக்கத்தான் செய்கிறது. அதற்குக் காரணம் அருகிலிருக்கும் நாலரைக் கோடித் தமிழகத் தமிழர்கள். எங்கே ஈழத்துத் தமிழர்கள் தமிழகத் தமிழர்களுடன் சேர்ந்து தங்களைச் சொந்த நாட்டிலேயே சிறுபான்மையாக்கி விடுவார்களோவென்றதொரு தேவையற்ற அச்ச உணர்வு. கடந்த காலத்து ஈழத்து வரலாறும், அடிக்கடி ஈழத்தின் மேலேற்பட்ட தமிழக மன்னர்களின் படையெடுப்புகளும் அவர்களது இந்த அச்சத்தினை அதிகரிக்க வைத்தன போலும். 'புலி' உருவம் அவர்களது உள்ளத்தில் அச்சத்தினை ஏற்படுத்துவதற்குக் காரணகார்த்தாக்கள் அன்றைய சோழர்கள். சோழர்களின் புலிக்கொடி ஒரு காலத்தில் ஈழம் முழுவதும் பறந்தது. முதலாம் இராஜஇராஜ சோழன் காலத்தில் இலங்கை சோழர்களிடம் சோழ மன்னனான எல்லாலனுக்குப் பின்னர் அடிமைப்பட்டது. அதன் பின் அவனது மைந்தன் முதலாம் இராஜேந்திர சோழன் காலத்தில் ஒளிந்தோடிய சிங்கள மன்னன் மகிந்தனிடமிருந்து மணிமுடி கைப்பற்றப்பட்டு நாடு முற்றாக அடிமைப்படுத்தப் பட்டது. சோழர்கள் காலத்திலேற்பட்ட நிகழ்வுகளை மகாவம்சம் போன்ற சிங்கள நூல்கள் விபரிக்கும். தமிழ் மன்னர்களில் சோழர்கள் காலத்தில்தான் இலங்கை முழுவதும் முற்றாக, நூறாண்டுகளுக்கும் மேலாகத் தமிழர்கள் கைகளிலிருந்தது. சோழர்களின் இலங்கை மீதான ஆட்சிக் காலகட்டத்தைத்தான் பெளத்த மதமும், சிங்கள மொழியும் முற்றாக முடங்கிக் கிடந்ததொரு காலகட்டமாகச் சிங்களவர்கள் கருதுகின்றார்கள் போலும். சிறுவயதில் படுத்திருக்கும்போது சிறுவனான துட்டகைமுனு குடங்கிப் படுத்திருப்பானாம். அதற்கு அவன் கூறும் காரணம் வடக்கில் தமிழரசும், தெற்கில் கடலுமிருக்கையில் எவ்விதம் குடங்காமல் படுப்பது என்பானாம். அதனால்தான் சோழ மன்னனான எல்லாளனை அவன் வெற்ற வரலாறு மிகப்பெரிய சிங்கள வெற்றியாகக் கருதப்படுகிறது. அதனால்தான் போலும் புலிக்கொடியுடன் கூடிய சோழர்களைக் கண்டு அஞ்சிய , வெறுத்த சிங்களவர்கள் மீன் கொடியுடன் கூடிய பாண்டியர்களைக் கண்டு அஞ்சவில்லை போலும். உண்மையில் பாண்டிய மன்னர்கள் சிலர் ஈழத்தின்மேல் படைபெடுத்திருந்தபோதிலும் கூட அவர்களுடன் நட்பு பாராட்டுவதற்கும், அவர்களிடத்தில் பெண்ணெடுப்பதற்கும் சிங்களவர்கள் மத்தியில் எதிர்ப்போ , அச்சமோ எற்பட்டதில்லை. இன்றைய நிலையில் இவையெல்லாம் தேவையற்ற அச்சங்கள். இவ்வகையான அச்சங்கள் சுவாலை விட்டு எரிவதற்கு அடிப்படைக் காரணிகள் சமூக, அரசியல், பொருளாதாரக் காரணங்களே. ஆயினும் சாதாரண மக்கள் இதனைப் புரிந்து கொள்வதில்லை. மக்களின் உணர்வுகளை வைத்துப் பிழைப்பினை நடாத்தும் அரசியல்வாதிகள் மட்டும் நன்கு புரிந்து கொண்டு, அவ்வுணர்வுகளை ஊதிப் பூதாகாரப்படுத்தி, அதிலவர்கள் குளிர் காய்ந்து கொண்டிருக்கின்றார்கள். இவற்றால் தூண்டப்படுவதும், பாதிக்கப்படுவதும் சாதாரண மக்களே. இந்த அழகான தீவில் மீண்டும் அமைதியெப்போது வரும்? மக்கள் ஒருவருகொருவர் மீண்டும், சகஜமாக, அன்பாகப் பழகும் நாளென்று வரும்? சேர்ந்தோ, பிரிந்தோ ஒருவருக்கொருவர் நட்புடன், சகல உரிமைகளுடனும், ஒற்றுமையுடனும் வாழுமொரு சூழல் மீண்டுமெப்போது வரும்? வருமா?


"என்ன கொட்டக் கொட்ட முழித்திருக்கிறாய்? நித்திரை வரவில்லையா?" அருகிலிருந்த இருதட்டுப் படுக்கையின் மேற்தட்டில் படுத்திருந்த நண்பன் அருள்ராசாதான் இவ்விதம் கேட்டவன்.

"இன்று விடிய வெளியிலைப் போக இருக்கிறமல்லவா? அதுதான் மனசு கிடந்து அலைபாயிது போலை. இரவு முழுக்க நித்திரையே ஒழுங்காக வரவேயில்லை. நீ குடுத்து வைத்தவன். உன்னாலையெப்படி நித்திரை கொள்ள முடிந்தது.?"

"எல்லாத்துக்கும் காரணம் மனசுதான். இது உனக்குப் பெரியதொரு விசயமாகப் படுகுது. அதுதான் மனசும் கிடந்து இப்படி அலை பாயுது. அது சரி வெளியிலை போனதும் என்ன பிளான்? உனக்கு யாரைவாது சந்திக்க வேண்டிய தேவையிருக்கா?"

"நேற்றே இது பற்றிக் கதைத்திருக்கிறம். முதலிலை அந்த இந்திய வீட்டு அறையெப்படியென்று போய்ப் பார்ப்பம். பிடிச்சிருந்தால் அங்கேயே இருந்து கொண்டு ஒரு வேலையொன்று தேடுவம். அதுதான் முதல் வேலை. அதுக்குப் பிறகுதான் மற்றதெல்லாம்.?

"அது சரி. எங்களுக்கோ வேலை செய்வதற்குரிய சட்டரீதியான ஆவணங்கள் ஒன்றுமில்லை. முதலிலை வெளியிலை போனதும், 'சமூகக் காப்புறுதி நம்பர்' எடுக்க முடியுமாவென்று பார்க்க வேண்டும். அதிருந்தால்தான் வேலை பார்க்கலாம். இல்லாவிட்டால் நல்ல வேலையெதுவும் எடுக்க முடியாது. உணவகங்களில் கள்ளமாக வேலை செய்ய வேண்டியதுதான். எனக்கென்றால் எந்த வேலையும் சமாளிக்கலாம். உன்னாலை முடியுமாவென்றுதான் யோசிக்கிறன்."

"என்ன பகிடியா விடுறாய். எந்த வேலையென்றாலும் என்னாலை செய்ய முடியும். இதுக்கெல்லாம் வெட்கம் பார்க்கிற ஆளில்லை நான். செய்யும் தொழிலே தெய்வம். இதுதான் அடியேனின்ற தாரக மந்திரம். இவ்விதமாக நண்பர்களிருவரும் பல்வேறு விடயங்களைக் குறிப்பாக வெளியில் சென்றதும் , புதிய சூழலை எவ்விதம் வெற்றிகரமாக எதிர்கொள்வது, இருப்பினை எவ்விதம் உறுதியாகத் தப்ப வைத்துக் கொள்வது, வாழ்வின் எதிர்காலத் திட்டங்களை எவ்விதம் வெற்றிகரமாகச் செயற்படுத்துவது?, அவ்வப்போது சோர்ந்து, தளர்ந்து போய் விடும் மனதினையெவ்விதம் மீண்டும் மீண்டும் துள்ளியெழ வைப்பது,.. இவ்விதம் பல்வேறு விடயங்களை நண்பர்களிருவரும் பரிமாறி, ஆராய்ந்து கொண்டிருந்த வேளையில் நகரத்துப் பொழுதும் தனக்கேயுரிய ஆரவாரங்களுடன் விடிந்தது. ஊரிலென்றால் இந்நேரம் சேவல்களின் சங்கீதக் கச்சேரியால் ஊரே கலங்கி விட்டிருக்கும். புள்ளினத்தின் காலைப் பண்ணிசையில் நெஞ்சமெல்லாம் களி பொங்கி வழிந்திருக்கும். இருந்தாலும் விடிவு எப்பொழுதுமே மகிழ்ச்சியினைத் தந்து விடுவதாகத்தானிருந்து விடுகிறது.

Last Updated on Tuesday, 01 January 2013 21:17  

counter for tumblr

கூகுளில் தேடுங்கள்

Custom Search

பதிவுகளில் விளம்பரங்கள்

பதிவுகளில் விளம்பரங்கள், திருமண அறிவித்தல்கள், மரண அறிவித்தல்கள் போன்றவற்றைப்  பிரசுரிக்க விரும்புகிறீர்களா? நியாயமான கட்டணங்களில் பிரசுரிப்போம். உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வாசிக்கப்படும் பதிவுகளில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரியுங்கள். மேலதிக விபரங்களுக்கு ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு எழுதுங்கள்.

Satyamev Jayate

Join Aamir Khan and STAR India on Satyamev Jayate – an emotional, challenging quest for hope – Sundays, at 11 AM

பைசா.காம்: இணையத்தில் உழையுங்கள்!

Speak English

Sell your books to Powell's Online

Sell your books to Powell's

Build Your Own Business Website!

Get online instantly with Geohostcorner.com web page software.  Have you ever wanted to build a website, but just weren't quite sure how? With the Geohostcorner.com webstore builder creating your own website is easier than ever! You'll amaze your friends with a professional design, beautiful stock images, and great, customizable features. You have over 1700 professionally designed website templates that come free with the website design software - just a click and it will look like you spent thousands on a designer!  Start Your Own Web Business! Easy Business Websites! Get online instantly with Geohostcorner.com web page software! Build your own website for only $29.99. For More information Click On Here

WIX: Create Your Free Website

பதிவுகள் இதுவரையில் (2000 - 2011)

பதிவுகளின் அமைப்பு மாறுகிறது..
வாசகர்களே! இம்மாத இதழுடன் (மார்ச் 2011)  பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா.  காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும்.  இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:

இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை

 

 

தமிழ் வர்த்தகக் கையேடு
'பதிவுகள்' வழங்கும் இன்னுமொரு சேவை: தமிழ் வர்த்தகக் கையேடு. .உங்களது வர்த்தக விபரங்களைப் பதிவு செய்து உங்களது வர்த்தகத்தை உலகளாவியரீதியில் பெருக்குங்கள். இதுவோர் இலவச சேவை. இங்கு பதிவு செய்யப் படும் தகவல்களுக்கு அவற்றைப் பதிவு செய்பவர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பல்ல

இலவச வரி விளம்பரம்
இது ஒரு இலவச சேவை. இங்கு பதிவு செய்யப் படும் தகவல்களுக்கு அவற்றைப் பதிவு செய்பவர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பல்ல.

அ.ந.கந்தசாமி படைப்புகள்

புதிய பனுவல்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.

வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...

வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்

அம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)

அம்புலிமாமா

IT Training!

We provide one to one or small group  training for the following subjects (In Toronto only):

1. IBM (AIX) System Admin (Basic)
2. IBM (AIX) System Admini (Advanced)
3. ASP (Classic)
4. C Programming (Basics)
5. Soldering & Basics Electronics
6. Joomla 

More Infomation: Contact at ngiri2704@rogers.com 
 

Welcome to The Literature Network!

We offer searchable online literature for the student, educator, or enthusiast. To find the work you're looking for start by looking through the author index. We currently have over 3000 full books and over 4000 short stories and poems by over 250 authors. Our quotations database has over 8500 quotes. Read More

Fyodor Dostoevsky

Fyodor Dostoevsky (1821-1881) was a Russian novelist, journalist, short-story writer whose psychological penetration into the human soul had a profound influence on the 20th century novel. Read More

Karl Marx, 1818-1883

The philosopher, social scientist, historian and revolutionary, Karl Marx, is without a doubt the most influential socialist thinker to emerge in the 19th century. Although he was largely ignored by scholars in his own lifetime, his social, economic and political ideas gained rapid acceptance in the socialist movement after his death in 1883. Until quite recently almost half the population of the world lived under regimes that claim to be Marxist

The philosopher, social scientist, historian and revolutionary, Karl Marx, is without a doubt the most influential socialist thinker to emerge in the 19th century. Although he was largely ignored by scholars in his own lifetime, his social, economic and political ideas gained rapid acceptance in the socialist movement after his death in 1883. Until quite recently almost half the population of the world lived under regimes that claim to be Marxist....Read More

Einstein Archives Online

The Einstein Archives Online Website provides the first online access to Albert Einstein’s scientific and non-scientific manuscripts held by the Albert Einstein Archives at the Hebrew University of Jerusalem and to an extensive Archival Database, constituting the material record of one of the most influential intellects in the modern era...Read More

Brian Greene

Brian Greene (born February 9, 1963) is an American theoretical physicist
Brian Greene (born February 9, 1963) is an American theoretical physicist and string theorist. He has been a professor at Columbia University since 1996. Greene has worked on mirror symmetry, relating two different Calabi-Yau manifolds (concretely, relating the conifold to one of its orbifolds). He also described the flop transition, a mild form of topology change, showing that topology in string theory can change at the conifold point... Read More

The Fabric Of The Cosmos By Brian Greene

The Hidden Reality: Parallel Universes and the Deep Laws of the Cosmos By Brian Greene

Hyperspace: A Scientific Odyssey Through Parallel Universes, Time Warps, and the 10th Dimension By Michio Kaku

Das Kapital By Karl Marx

The Brothers Karamazov [Hardcover] By Fyodor Dostoevsky

Penguin Classics Nana By Emile Zola

A Brief History of Time By Stephen Hawking


பதிவுகள் (Pathivukal- Online Tamil Magazine)

ISSN  1481 - 2991 
ஆசிரியர்: வ.ந.கிரிதரன்   Editor-in - Chief: V.N.Giritharan

"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"

"Sharing Knowledge With Every One" 

*அறிவித்தல்:  ஏப்ரல் 2011 ( இதழ் 136 ) வரை   மாத இணைய இதழாக வெளிவந்து கொண்டிருந்த 'பதிவுகள்' இணைய இதழ் ஏப்ரல் 2011  இதழிலிருந்து  மாத, வார இதழென்றில்லாமல் ஆக்கங்கள் கிடைக்கும் தோறும் வெளியிடப்படும் இதழாக வெளிவரும்.  'பதிவுகள்' இதழுக்குக் கிடைக்கப் பெறும் ஆக்கங்களை (அறிவித்தல்களுட்பட) கிடைத்ததும் உடனுக்குடன் பிரசுரிப்பதே அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும் என்பதால்தான் இந்த முடிவு.

உங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்

Canada

The Government of Canada's primary internet site for the international audience. Whether you are travelling or immigrating to Canada, preparing to do business in Canada. more..

Canadian Aboriginals

வ.ந.கிரிதரன் எழுதிய தமிழ் நூல்கள் மின்னூல்களாக விற்பனைக்கு

தமிழியல் (Journal Of Tamil Studies)

தமிழியல் இதழ்

சென்னையில் நடைபெற்ற இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டுக்குப் பின்னர், ' அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றம் ' ( International Association of Tamil Research ) என்னும் அமைப்பு தனிநாயகம் அடிகளாரின் இசைவினைப் பெற்று ' Tamil Culture ' இதழை ' Journal of Tamil Studies ' என்னும் மாற்றுப் பெயரில் அரையாண்டு இருமொழி இதழாக 1969 ஆண்டு முதல் நடத்தி வந்தது. பேராசிரியர் எஸ்.தனிநாயகம் அடிகளார் ' Journal of Tamil Studies ' இதழின் தலைமைப் பதிப்பாசிரியராகவும், பேராசிரியர் வ.அய்.சுப்பிரமணியம் துணைத் தலைமைப் பதிப்பாசிரியராகவும் 1969 ஏப்பிரல் முதல் 1970 அக்டோபர் வரை இதழைத் திறம்பட நடத்தி நான்கு இதழ்களை வெளியிட்டனர். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் 1970 அக்டோபர் 21 இல் தொடங்கப் பெற்ற நிலையில், IATR அமைப்பு இந்த ஆய்விதழை அதே பெயரில் ( Journal of Tamil Studies ) நடத்த உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கு உரிமையளித்தது. அதனை விளைவாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் 1972 முதல் இன்றுவரை தொடர்ந்து இந்த இதழை வெளியிட்டு வருகிறது. இன்று வெளிவந்து கொண்டிருக்கும் ' Journal of Tamil Studies ' இதழ் தனிநாயகம் அடிகள் தொடங்கிய ' Tamil Culture ' என்னும் இதழின் மறு அவதாரமே தவிரப் புதியதன்று என்பதையும், ' Tamil Culture ' நின்றுவிடவில்லை என்பதையும் இவ்வரலாறு தெரிவிக்கிறது. இதழினன வாசிக்க ... உள்ளே

Center For Asia Studies

கூகுளில் தேடுங்கள்!

SHAADI.COM: Matrimonial Service

'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள்  ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

Bibliography of Comparative Studies in Canadian, Québec and Foreign Literatures!

 Welcome to the home page of the Bibliography of Comparative Studies in Canadian, Québec and Foreign Literatures project..Read More

நிற்பதுவே! நடப்பதுவே!

நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்
சொற்பனந் தானோ?- பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்
அற்பமாயைகளோ?-... மேலும் கேட்க

Yes We Can

மின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..

 

மங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.

ஜெயபாரதனின் அறிவியற் தளம்

எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே

Wikileaks

Raga Surabhi

Raga Surabhi is a small effort to create more awareness on Carnatic music.  We would like to dedicate this site to those music lovers, who listen to Carnatic music with great interest and enthusiasm, but have not had enough opportunity to learn about identifying and appreciating ragas. Read More

இணையத்தில் வர்த்தகம் செய்ய..

இணையத்தில் நீங்களும் வர்த்தகம் செய்யலாம். பொருட்களை, உங்கள் சேவைகளை விற்பதன் மூலம் நீங்களும் பணம் சம்பாதிக்கலாம். இணையத்தில் நீங்கள் வர்த்தகம் செய்வதை PayPal மிகவும் இலகுவாக்குகின்றது. இப்பொழுதே PayPalஇல் இணைவதன் மூலம் இணையத்தில் நீங்களும் பணம் சம்பாதிக்கலாமே. இணைவதற்கு கீழுள்ள 'பட்டனை' அழுத்துங்கள்

Steve Jobs

The Wealthy Barber Returns

The Ediot By Fyodor Dostoyevsky

Internet Riches: The Simple Money-Making Secrets of Online Millionaires By Scott Fox

Get Rich Click!: The Ultimate Guide to Making Money on the Internet

How I Made My First Million on the Internet and How You Can Too! By Ewen Chia

Canadian Immigration Made Easy - 2nd Edition By Tariq Nadeem

Awaken the Giant Within: How to Take Immediate Control of Your Mental, Emotional, Physical and Financial

The Phantom The Complete Series: The Gold Key Years Volume One [Hardcover]

Sell your books to Powell's

Sell your books to Powell's


வெற்றியின் இரகசியங்கள்

"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும்! இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி! இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள்! இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்!" - அறிஞர் அ.ந.கந்தசாமி -