தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவு: சந்தியாவின் புதல்வி சரித்திரமானார்!  தற்போது சொத்துக்குவிப்பு வழக்கில் உச்ச நீதி மன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் ஆனந்த விகடனின் தொலைக்காட்சியில் மறைந்த முன்னாள் முதல்வரை ஊழல் ராணி என்றும், கொள்ளைக்காரி என்றும் ஆவேசமாகத்திட்டித்தீர்க்கும் காணொளியினை யு டியூப்பில் கண்டேன்.

சட்டம் ஒரு கழுதை என்பார்கள். தனக்கெதிராகக்கூறப்பட்ட தீர்ப்புக்கு எதிராகச் சீராய்வு மனு செய்வதற்கும் சாத்தியமற்ற நிலையில் மரணித்த ஒருவர் மீது கூறப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் அவர் மீது அவதூறினை வாரி இறைப்பதில் அர்த்தமில்லை. ஜெயலலிதா மரணமடைந்துள்ள நிலையில் அவர் மீது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பினை இறுதியான தீர்ப்பாகக் கருத முடியாது. உச்ச நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்துக்கூட 'சீராய்வு' மனுச்செய்யும் உரிமை குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஒருவருக்கு உண்டு. ஆனால் ஜெயலலிதா மரணமடைந்து விட்டதால் அவருக்கு அந்த உரிமை மறுதலிக்கப்படுகின்றது. அவர் உயிருடனிருந்திருந்தால் அவர் தீர்ப்பு மீதான சீராய்வு மனுச்செய்திருக்க முடியும். அதில் வெற்றி பெற்றிருக்கக்கூடச் சாத்தியமாகியிருக்கும். ஆனால் அவர் அந்தச் சந்தர்ப்பத்தைப் பாவிக்க முடியாதபடி அவரது மரணம் அமைந்து விட்டது. எனவே அவரை உச்ச நீதி மன்ற நீதிபதிகள் வழக்கிலிருந்து விடுவித்திருக்கின்றார்கள். அவரைக் குற்றவாளியென்று அறிவித்திருந்தாலும் கூட, ஜெயலலிதா மரணமடைந்த நிலையில், அவரால் நீதிபதிகளின் குற்றவாளி என்னும் தீர்ப்பினை எதிர்த்துத் தன் நியாயத்தை எடுத்துரைக்கக்கூடிய சட்டபூர்வமாக இருந்த சந்தர்ப்பத்தினைப்பாவிக்க முடியாமல் போய் விட்டது.

இந்நிலையில் வழக்கிலிருந்து அவரை நீதிபதிகள் விடுவித்துள்ள நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைச் சொத்துக்குவிப்பு வழக்கில் நூற்றுக்கு நூறு வீதம் குற்றவாளி என்று கருத முடியாது. ஆனால் அவர் உயிருடன் இருந்திருந்தால் நிலைமை வேறு. அவர் தீர்ப்பின் மீது சீராய்வு மனுவினைக் கொண்டு வந்திருக்க முடியும். அதிலும் அவர் தோல்வியினைத் தழுவியிருந்தால் அதன் பின் வேண்டுமானால் அவரைப் பூரணமான குற்றவாளியாகக் கருத முடிந்திருக்கும். அதற்கான சாத்தியம் இல்லாத காரணத்தால் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட ஜெயலலிதாவைக் குற்றவாளியாகத்தீர்ப்பு வழங்கப்பட்ட ஒருவர் என்று கூற முடியுமா என்பதில் எனக்கு கேள்வி உண்டு. 

என்னைப்பொறுத்த வரையில் இந்திய உச்ச நீதி மன்றம் ஒன்றும் அரசியல் சார்பற்ற , தனித்துவமான அமைப்பு அல்ல. தீர்ப்பு வெளிவந்திருக்கும் கால கட்டம் ஒன்றே போதும் இந்திய உச்ச நீதி மன்றத்தின் அரசியல் சார்புத்தன்மையினை வெளிப்படுத்த.

தற்போதுள்ள மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சிக்கு அவர்களுக்குச் சார்பான ஒருவர் அதிமுகவில் முதல்வராகத் தெரிவு செய்யப்பட வேண்டும். அதற்காகவே சசிகலா முதல்வர் பதவிக்கு வருவதைத்தடுப்பதற்காக உச்ச நீதிமன்றம் தீர்ப்பினை வழங்கியது. இவ்வளவு காலமும் அதுபற்றிக் கவனிக்காத உச்ச நீதிமன்றம் ஏன் இப்பொழுது விழுந்தடித்து தீர்ப்பினை வழங்க வேண்டும்?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இருந்த மக்கள் ஆதரவு சசிகலாவுக்கு இல்லை என்பதை நன்கு அறிந்திருந்த மத்திய அரசு , அவர் முதலமைச்சராகக்கூடாது என்று உச்ச நீதி மன்றத்தைப்பாவித்திருக்கின்றது.

ஆயிரக்கணக்கான கோடிகளில் ஊழல் செய்தவர்களெல்லாரும் வெளியில் இருந்து கொண்டு 66 கோடி ஊழல் வழக்கைத்தூக்கிப்பிடித்து தங்களைத்தூயவர்களாகக் காட்ட முனைகின்றார்கள்.

ஆரம்பத்திலிருந்தே இந்த வழக்கு ஜெயலலிதா மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியினால் போடப்பட்ட வழக்கு என்பதில் மாற்றுக்கருத்துகள் கிடையாது. அதனால்தான் அவர்மேல் போடப்பட்ட சகல வழக்குகளிலிருந்தும் அவரால் விடுதலை பெற முடிந்தது. இந்த வழக்கிலிருந்து கூட அவரால் தன்னை விடுவித்துக்கொண்டிருக்கக்கூடிய சட்டரீதியான வாய்ப்பிருந்தபோதும் அவர் அதனைச்செய்யாமல் வழக்குக்கு முகம் கொடுத்தார் என்பது கவனிக்கத்தக்கது.

நீதிபதி குமாரசாமியின் கணக்கில் இழைத்த தவறு காரணமாக அவரது தீர்ப்பினைக் கர்நாடக அரசு அப்பீல் செய்யும் நிலை ஏற்பட்டது. ஆனால் நீதிபதி குமாரசாமி குறிப்பிட்ட பல சந்தேகங்களை அவ்வளவு இலேசில் மறந்து விட முடியாது. உதாரணமாகக் கீழுள்ள விடயங்களைக் குறிப்பிடலாம்:

(நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பு பற்றிய தினமலர் பத்திரிகையில் வெளியான விபரம் பற்றிய செய்தியிலிருந்து..]

" முறைகேடாக சம்பாதித்த பணத்தில் தான் சொத்துகள் வாங்கப்பட்டதாக யூகிப்பது கடினம். எனவே, அந்த சொத்துகளை பறிமுதல் செய்யுமாறு கீழ் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, சட்டப்படி ஏற்கத்தக்கது அல்ல. ஆதாரங்களை உரிய கண்ணோட்டத்தில் கீழ் நீதிமன்றம் ஆராயவில்லை. தேசிய வங்கிகளில் பெருமளவு கடன் வாங்கி தான், அசையா சொத்துகள் வாங்கப்பட்டுள்ளன. நான்கு பேரும் குற்றச்சதியில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை பொறுத்தவரை, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் ஜெ.,வுடன் ஒரே வீட்டில் வசித்தார்கள் என்பதை மட்டும் வைத்து, அவர்கள் குற்றச்சதியில் ஈடுபட்டதாக கூறிவிட முடியாது. ஒரு சட்டவிரோதமான காரியத்தை செய்ய இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டோர் இடையே ஒப்பந்தம் உருவானால் தான், அதை சதியாக கருத வேண்டும். சதி நடந்தது என்பதையும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அந்த சதியில் பங்கேற்றனர் என்பதையும் நம்புவதற்கு காரணம் இருக்க வேண்டும். ஆனால், இந்த வழக்கில் முன்வைக்கப்பட்ட ஆதாரங்கள், ஜெயலலிதாவை தவிர மற்ற மூன்று பேரும் பெருமளவு கடன் வாங்கி விவசாய நிலங்கள், நிறுவனங்கள் போன்ற அசையா சொத்துகளை வாங்கியதாக தெரிவிக்கின்றன.எனவே, வருமானம் வந்த வழி, சட்டப்பூர்வமானது; நோக்கம், சட்டப்பூர்வமானது. நான்கு பேரும் ஒரே வீட்டில் இருந்தனர் என்ற ஒரே காரணத்துக்காக, சதி செய்தனர், முறைகேடான வழிகளில் சொத்துகள் வாங்கினர் என்ற முடிவுக்கு வர முடியாது. ஒட்டுமொத்த சூழ்நிலைகள் மற்றும் ஆதாரங்களை பரிசீலித்து பார்க்கும் போது, கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பும், முடிவும் பலவீனமாக உள்ளது; சட்டப்படி ஏற்க முடியாததாக இருக்கிறது"

தற்போது உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் ஒரே வீட்டில் இருந்த காரணத்தால் அனைவரும் கூட்டாகச் சதி செய்துள்ளனர் என்று தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. அதற்கு நீதிபதிகள் என்ன ஆதாரத்தைப்பாவித்தார்கள் என்றால் நீதிபதிகளின் ஊகங்களின் அடிப்படையில் என்றுதான் வரும். ஜெயலலிதாவின் இல்லத்தில் இருந்த சசிகலா அவருக்கு எதிராகச் சதி செய்த விபரம் தெரிய வந்தபோது ஜெயலலிதா வீட்டை விட்டே துரத்தியது வரலாறு. ஒரே வீட்டில் இருந்தும் , ஜெயலலிதாவால் சசிகலா போன்றோர் செய்த சதி நடவடிக்கைகள் ஆரம்பத்தில் தெரிந்திருக்கவில்லை என்பதை நிரூபிக்கும் சம்பவம் இது. எனவே உச்ச நீதி மன்ற நீதிபதிகள் ஒரே வீட்டில் இருந்ததால் ஒன்றாகக் கூடிச்சதி செய்தார்கள் என்பதற்கு அதனை நிரூபிப்பதற்குரிய வலுவான ஆதாரத்தைக் காட்ட வேண்டும்.காட்டினார்களா?

இது போல் வங்கியில் கடன் வாங்கிச் சொத்துகள் வாங்கியுள்ளதை நீதிபதி குமாரசாமி சுட்டிக்காட்டியிருக்கின்றார். அவற்றை ஊழல் நடவடிக்கையாகக் கருத முடியாது. இது போல் அன்பளிப்பாகக் கிடைத்தவற்றையெல்லாம் சொத்துக்குவித்த வழக்கில் சேர்த்திருந்ததைத் தவறென்று நீதிபதி குமாரசாமி சுட்டிக்காட்டியிருந்தார்.  இது போல் பல விடயங்களைக் குறிப்பிடலாம்.

ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் அவர் வாங்கிக்குவித்த சொத்துக்களின் அளவு அறுபது ,எழுபது கோடிகள்தாம். கனடியன் டொலர்களில் பதினெட்டு மில்லியனுக்குள்தான் வரவேண்டும்.

ஜெயலலிதா அரசியலுக்கு வர முன்னர் அதிக ஊதியம் பெற்ற பிரபல நடிகையாக இருந்தவர். அவரிடம் இருந்த சொத்துக்களின் மதிப்பு நிச்சயம் அறுபது , எழுபது கோடிகளைத்தாண்டும். வேண்டுமானால் அவர் முறையாக அவற்றைக் கணக்கில் காட்டாமால் கறுப்புப்பணமாக ஏனைய நடிகர்கள்போல் வைத்திருக்கக் கூடும். அப்படி வைத்திருந்தால் அது சொத்துக்குவிப்பு வழக்கில் வர முடியாது. வருமான .வரி ஏய்ப்பு வழக்கொன்றை வருமான வரித்திணைக்களம் போட்டிருக்கும் பட்சத்தில் அந்த வழக்கு நடைபெற்றிருக்கலாம். ஆனால் கணக்குக் காட்டாத பணத்துக்குக் கணக்குக்காட்டி முறையாகக் கட்ட வேண்டிய வருமான வரியைக் கட்டியிருந்தாரானால் அதனை வருமானவரித்திணைக்களம் ஏற்று, அதற்குத்தண்டனையாக மேலதிகக் கட்டணத்தை அறவிட்டு அப்பிரச்சினையை முடித்திருக்குமா? தெரியவில்லை. இத்துறையில் சட்டதிட்டங்களை அறிந்தவர்கள்தாம் கருத்துகள் கூற வேண்டும்.

ஒரு பெண்ணாக அரசியலில் ஆதிக்கம் செலுத்துவதைப் பொறுக்காத அரசியல்வாதிகள் அவரை முடிந்தவரையில் அவமானப்படுத்தினார்கள். இறந்தபின்னரும் மந்தைகளைப்போல் 'ஆகா உச்ச நீதிமன்றம் தீர்ப்புக் கூறி விட்டதே' என்று அத்தீர்ப்பினை வேத வாக்காகக் கொண்டு , இன்று இறந்த அவரை மேலும் களங்கப்படுத்திக்கொண்டிருக்கின்றார்கள்.

உச்சநீதிமன்றம் மோடியின் அரசுக்கு, கர்நாடக அரசுக்கு ஆதரவாக இயங்குவதைக் கேள்வி கேட்க மாட்டார்கள். அவர்கள் வந்தடைந்திருக்கும் தீர்ப்பில் காணப்படும் ஊகங்கள் சரியா , பிழையா என்பதைக் கேள்வி கேட்க மாட்டார்கள்.

இன்று இவர்களெல்லாரும் ஜெயலலிதா மேல் சேற்றினை வாரியிறைக்கின்றார்களே. அதற்கு முக்கிய காரணம் என்ன? ஜெயலலிதா மரணப்படுக்கையில் இருந்தபொழுது கண்ணீர் விட்ட ஸ்டாலின் இன்று ஆக்ரோசமாக ஜெயலலிதா கொலையாளி என்று குற்றஞ்சாட்டுகின்றார். பாமக ராமதாஸ் குற்றவாளியின் பெயரைப்பாவித்து ஒன்றினையும் செய்யக்கூடாது என்று அறை கூவல் விடுக்கின்றார். இவற்றுக்கெல்லாம் காரணம்? தமிழகத்தில் அரசியலில் தலையெடுக்க வேண்டுமானால் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு மக்கள் மத்தியில் இன்னும் இருக்கும் செல்வாக்கினைக் குறைக்க வேண்டும். அதற்கு அவர்கள் மேல் அவதூறுச்சேற்றினை வாரியிறைக்க வேண்டும். அதன் மூலம் மக்கள் மத்தியில் அவர்கள் மீதுள்ள் அபிமானத்தைக் குறைக்க வேண்டும். அவ்விதம் குறைந்தால் மட்டுமே ஏனைய கட்சிகள் தலையெடுக்க முடியும். அதுதான் காரணம்... அதற்காகத்தான் இவ்வளவு தூற்றுதல்.

66 கோடிக்காக ஊழல் ராணியென்று வசைபாடும் ஆனந்த விகடனின் தொலைகாட்சி, ஆயிரம் கோடிகள் ஊழல் செய்தவர்கள் எல்லாரும் நீதிமன்ற தண்டனை இல்லாத காரணத்தால் வெளியில் கும்மாளமடிக்கின்றார்களே. அவர்களைப்பற்றிக்குற்றஞ்சாட்டுமா?  ஜெயலலிதா ஊழல் ராணியென்றால் அவர்களெல்லாரும் ஊழல் மகா சக்கரவர்த்திகள்' மகாராணிகள்.

மேலும் இந்த வழக்கு ஜெயலலிதாவை அரசியலிலிருந்தே துரத்த வேண்டுமென்பதை நோக்காக வைத்து நடத்தப்பட்டிருக்கின்றது என்பதற்கு அவருக்கு வழங்கப்பட்ட தண்டனையும், அபராதத்தொகையும் இன்னுமொரு சான்று. 66 கோடிச் சொத்துக்குவிப்புக்குத் தண்டனை 100 கோடி. தண்டனை நான்காண்டுகள். நான்காண்டுத்தண்டனை பெற்றால் ஆறு வருடங்களுக்கு சிறைவாசம் முடிந்தபின்னர் அரசியல் செய்ய முடியாது. ஆக 10 ஆண்டுகள் அரசியலிலிருந்து ஒதுங்கியிருக்க வேண்டும். கூறப்பட்டுள்ள குற்றத்துக்கு அதிகமான தண்டனை.

ஜெயலலிதா மீது அரசியல் காரணங்களுக்காகப் பதியப்பட்ட இந்தச் சொத்துக்குவிப்பு வழக்கு அரசியல் காரணங்களுக்காகப்புனையப்பட்டது. அதே சமயம் ஜெயலலிதாவுடன் கூட இருந்தவர்கள் அவர்களுக்கு ஜெயலலிதாவுடனிருந்த நெருக்கம் காரணமாக எவ்வளவோ விடயங்களைச்செய்திருக்கலாம். ஜெயலலிதாவுக்குத் தெரியாமலேயே. அவர்களை நம்பி ஜெயலலிதாவும் செயற்பட்டிருக்கலாம். ஆனால் உண்மை தெரியவந்தபோது அவரால் உண்மையினை வெளியில் கூற முடியாதவாறு சூழல் அமைந்திருக்கலாம். அவரது மரணப்படுக்கையில் எவ்விதம் அவர் பற்றிய விபரங்கள் வெளியில் தெரியாமல் அவரைச்சுற்றியிருந்தவர்கள் மறைத்தார்கள். மோடி அரசு தொடக்கம் தமிழகத்து அரசியல்வாதிகள் வரையில் எல்லோரும் உண்மை வெளியில் வராமல் மறைத்து நின்று விட்டு இன்று தமது அரசியல் ஆதாயங்களுக்காக நடந்தவற்றைப்பாவிக்கின்றார்கள். மரணப்படுக்கையிலிருந்தபோதும் உண்மையினை அவரால் வெளிப்படுத்த முடியாத சூழல் அமைந்திருந்ததைப்போல், அவர் ஆட்சியில் இருந்த காலகட்டத்திலும் இருந்த சூழல் இருந்திருக்கலாம்.

ஜெயலலிதாவைப்பொறுத்தவரையில் அவரால் உச்ச நீதி மன்றத்தீர்ப்பினை எதிர்த்து, சட்டரீதியாக இருக்கக் கூடிய வழிகளைக்கொண்டு தன்னைச் சுற்றவாளியென்று நிரூபிக்கக் கூடிய வாய்ப்புகளையெல்லாம் மரணத்தின் மூலம் இழந்து விட்டிருக்கின்றார். இந்நிலையில் அவரை வழக்கிலிருந்து விடுவித்திருக்கின்றார்கள் நீதிபதிகள். இவ்விதமானதொரு சூழலில் அவரை முழுமையான குற்றவாளியென்று ஏற்றுக்கொண்டு செயற்படுவது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றா?

இதே சமயம் சிறையிலிருக்கும் சசிகலா , இளவரசி, சுதாகரன் போன்றவர்கள் உச்ச நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்துச் சீராய்வு மனுக்களைச் சட்டரீதியாக முன்வைப்பார்களா? அவ்விதம் வைக்குமிடத்து, அதற்கான தீர்ப்பு வரும் வரையில் காத்திருக்க வேண்டும். ஆனால் சட்டரீதியாக சசிகலாவைத்தமிழகத்துக்கு மாற்ற முடியுமென்ற நிலையில் கர்நாடக வழக்கறிஞர் ஆச்சாரியா துள்ளிக்குதிப்பதைப்பார்க்கும்போது எவ்விதம் கர்நாடக அரசியல் இவ்விடயத்தில் புகுந்து விளையாடுகின்றது என்பதை அறிய முடியும்.

இன்று ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பை மையமாக வைத்து அரசியல் செய்யும் அரசியல்வாதிகள் அனைவரும் அவர்கள் அரசியலுக்கு வரும்பொது இருந்த அவர்களின் சொத்துகளின் அளவு எவ்வளவு? தற்போதுள்ள சொத்துகளின் அளவு எவ்வளவு என்பதைப் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். இரண்டிற்குமிடையில் மிகப்பெரிய வித்தியாசமிருந்தால், இதுவரை பெற்ற ஊதியத்தின் அடிப்படையில், முதலீடுகளின் அடிப்படையில் எவ்விதம் தற்போதுள்ள சொத்துகளை அவர்கள் அடைந்தார்கள் என்பதை விளக்க வேண்டும். விளக்குவார்களா? அவர்களால் முடியாது. ஏனெனில் அவர்கள் ஆயிரக்கணக்கான கோடிகளில் ஊழல்கள் நடைபெற உடந்தையாகவிருந்தவர்கள்; இருக்கின்றவர்கள். எவ்விதம் முடியும்?

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். அது: தமிழகத்தில் எம்ஜிஆர், அம்மா என்னும் மூன்றெழுத்துகளின் ஆதிக்கம் அவ்வளவு எளிதில் அழிந்து போய் விடாது என்பதுதான். மக்கள் உளப்பூர்வமாக ஆதரிக்கும் நிலையில், இன்னும் நீண்ட காலத்துக்கு இம்மூன்றெழுத்துகளின் ஆதிக்கம் நிலவத்தான் போகின்றது.