வரலாற்றுச் சுவடுகள்: முன்னாள் மேயர் செல்லன் கந்தையன் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டை நீக்கியது இன்றைய யாழ் மாநகரசபை! ஏன்?அண்மையில் முனைவர் செல்லத்துரை சுதர்சனுக்கு அளித்த நேர்காணலில் முன்னாள் யாழ் மாநகரசபையின் முதல்வராகவிருந்த செல்லன் கந்தையன் அவர்கள் குறிப்பிட்ட ஒருவிடயம் என் கவனத்தை ஈர்த்தது.

அன்று கூட்டணித்தலைவர்களிலொருவரான ஆனந்தசங்கரியின் தலைமையில் நடைபெறவிருந்த நூலகத் திறப்பு விழா தடைபட்டதும் முன்னாள் மேயர் அவர்கள் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனால் நூலகத்திறப்பு விழாவில் வைக்கப்படவேண்டிய அவர் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு வைக்கப்படவில்லை. ஆனால் அக்கல்வெட்டை அவருக்குப் பின் பதவியேற்ற யாழ் மாநகரசபை நிர்வாகம் மீண்டும் அங்கு வைத்துள்ளது. அவ்விதம் வைக்கப்பட்ட கல்வெட்டைத்தற்போதுள்ள மாநகரசபை நிர்வாகம் நீக்கி விட்டதாகவும் அவர் குற்றம் சாட்டுகின்றார். இதனை நான் இப்பொழுதுதான் நானறிந்தேன். அப்போது என்னிடமெழுந்த கேள்வி: எதற்காக இதுவரை அங்கிருந்த  அவர் பெயர் பொறிக்கப்பட்ட  கல்வெட்டை இன்றுள்ள மாநகரசபை நீக்க வேண்டும்? அதற்கான காரணம் என்ன? இன்று ஏன் இத்தனை வருடங்கள் கழிந்து இருந்து வந்த கல்வெட்டை இன்று பதவியிலிருக்கும் மாநகரசபை நீக்க வேண்டும்?

இன்றைய காலகட்டம் உலகம் முழுவதும் பல்வேறு அடக்குமுறைகளுக்கெதிராகவும் இதுவரை புரியப்பட்ட வரலாற்றுத்தவறுகளுக்கு எதிராகவும் மக்கள் அனைவரும் ஒன்றாகக் குரல் கொடுக்க வேண்டிய காலகட்டம். அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜோர்ஜ் ஃபுளோயிட் காவல்துறை அதிகாரியொருவரால்  கொலைசெய்யப்பட்ட பிறகு உருவான 'என்னால் மூச்சு விட முடியவில்லை' என்னும் இயக்கம் உலகம் முழுவதும் பரவிக்கொண்டு செல்லும் காலகட்டம். இந்நிலையில் இதுவரை காலமும் பாதிக்கப்பட்டு வரும் சமூகமொன்றை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலிருந்த முன்னாள் மேயரின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டை யாழ் மாநகரசபையின் இன்றைய நிர்வாகம் நீக்க வேண்டிய காரணமென்ன?

நண்பர் யோக வளவன் தியா (Yoga Valavan Thiya )  தனது முகநூற் பதிவில் மீண்டும் அக்கல்வெட்டு யாழ் நூலகத்தில் பதிக்கப்பட வேண்டுமென்று யாழ் அரசியல்வாதிகள் பலரிடம் கோரிக்கை விடுத்திருந்தார். அவர் யாழ் மாநகரசபை இவ்விதம் இதுவரை இருந்து வந்த கல்வெட்டை நீக்கியது பற்றியும் குறிப்பிட வேண்டும். உண்மையில் அவ்விதம் அக்கல்வெட்டு அங்கு இதுவரை இருந்ததை இந்நேர்காணல் மூலமே நான் அறிந்து கொண்டேன். நான் நினைத்திருந்தேன் அவர் பதவி விலகியபின்னர் அக்கல்வெட்டு அங்கு ஒருபோதுமே வைக்கப்படவில்லையென்று . ஆனால் இப்போதே அறிந்து கொண்டேன் அக்கல்வெட்டை இன்று பதவி வகிக்கும் யாழ் மாநகரசபையே நீக்கியுள்ளதாக. எனக்கு ஓராச்சரியம். ஏன் யாருமே இதனைத் தட்டிக்கேட்கவில்லை.

அன்று முன்னாள் மேயருக்கு மறுக்கப்பட்ட உரிமைக்குப் பரிகாரமாக மீண்டும் அங்கு அவரது கல்வெட்டை அங்கு வைத்தது அவருக்கு அடுத்து பதவிக்கு வந்த மாநகரசபை நிர்வாகம். அது  பாராட்டுக்குரிய விடயம். அது இப்போது நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முன்னாள் மேயருக்கு இரண்டாவது தடவையும் அபகீர்த்தி இழைக்கப்பட்டுள்ளது. மீண்டும் அக்கல்வெட்டு அங்கு வைக்கப்படுவதுதான் நீதியும் நியாயமுமாகும்.

இங்குள்ள புகைப்படத்தில் காணப்படுவதுதான் அக்கல்வெட்டு.

முனைவர்  செல்லத்துரை சுதர்சனத்துக்கு   முன்னாள் மேயர் அளித்த நேர்காணல்: https://www.youtube.com/watch?v=qdHyALlJA2w&feature=youtu.be&fbclid=IwAR3WNNQm81pUYK7dLilbmRMzEngw4zD2wnVcNH5yo66sNDaztWjFcyFX04E