இலங்கையில் நிலவும் அரசியற் சூழல் திருப்தி தருவதாகவில்லை. ஏற்கனவே நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள் நினைவுக்கு வருகின்றன. சத்தியாக்கிரகங்கள், ஹர்த்தால்கள் என்று ஆரம்பித்து , ஆயுதப்போராட்டத்தில் தொடர்ந்து பேரழிவுடன் முள்ளி வாய்க்காலில் முடிவடைந்த யுத்தம்தான் நினைவுக்கு வருகின்றது.  இன்று யுத்தம் முடிந்து 11 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் அனைவரும் கடந்த காலத்தை மறந்துவிட்டார்களோ என்று நினைக்கத்தோன்றுகின்றது. மீண்டும் அரசியல்வாதிகள் தம் இருப்பைத் தக்க வைப்பதற்காக உணர்ச்சி அரசியலில் இறங்கி விட்டார்களோ என்று எண்ணத்தோன்றுகின்றது. மீண்டும் நிலை பழைய யுத்தச்சூழலுக்குச் செல்லாமலிருக்க வேண்டுமென்றால் பின்வரும் விடயங்கள் நடைபெற வேண்டும்:

இன்று தமிழ்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்தன. இந்நிலை ஏன் வந்தது? ஆனால் முரண்பாடுகளுடன் ஒன்றிணைந்து குரல்  கொடுப்பது ஆரோக்கியமான நிலை. வரவேற்கப்பட வேண்டியது.  திலீபனின் நினைவு தினம் கொண்டாட அனுமதிக்கவில்லையென்னும் காரணத்தை அடிப்படையாக வைத்து உருவான நிலைதான் தற்போது ஏற்பட்டுள்ள நிலை. நாட்டின் மக்கள் யாராகவிருந்தாலும், எவ்வினத்தவராகவிருந்தாலும், எம்மதத்தவராகவிருந்தாலும், எம்மொழிபேசுபவராகவிருந்தாலும் அமைதியான வழியில் தம் கருத்துகளை, உணர்வுகளை , ஜனநாயக உரிமைகளை வெளிப்படுத்தும் உரிமை அவர்களுக்குண்டு.

தெற்கில் அரசுக்கெதிராகப்போராடிய ஜேவிபியினரை நினைவு கூர்வதில் எவ்விதப் பிரச்சினையுமில்லை. ஆனால் தமிழ்ப்பகுதிகளில் விடுதலைப்புலி திலீபனை நினைவு கூர்வதில் பிரச்சினை. இங்கு இப்பிரச்சினை இன, மத, மொழி ரீதியில் அணுகப்படுகின்றது. தமிழ்ப்பகுதிகளில் சிங்களப் பொலிசாரும், இராணுவத்தினரும் நிலைமையைக் கையாள அழைக்கப்படுகின்றார்கள். திலீபன் என்னும் ஆளுமை மீதான விமர்சனம் என்பது வேறு. மக்கள் திலீபனை நினைவு கூர்தலென்பது வேறு. மக்கள் திலீபனை நினைவு கூர விரும்பினால் அது அவர்களது ஜனநாயக உரிமை. திலீபனின் ஆளுமையை விமர்சிப்பது மாற்றுக் கருத்தாளர்களின் உரிமை. இவ்விதமாக மக்கள் தம் ஜனநாயக உரிமைகளைப் பிரயோகிப்பதைப் படையினர் மூலம் தடுப்பது மனித உரிமை மீறலாகும், ஜனநாயக உரிமை மீறலாகும். அவ்விதம் அணுகப்படுகையில் அவ்விதமான அணுகுமுறை அப்பகுதி மக்கள் தம்மை இந்த அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அணுகுகின்றது என்று எண்ண வைக்கும். தங்கள் உரிமைகள் மறுக்கப்படுகின்றன என எண்ண வைக்கும். ஒன்றைக் கவனிக்க வேண்டும். இதே நிலைதான் அறுபதுகள் , எழுபதுகள், எண்பதுகளில் நிலவியது. தம் சொந்த மண்ணில் தாம் அடிமைகளாக அணுகப்படுகையில் அங்கு வாழும் மக்கள் குறிப்பாக இளைஞர்கள் மிகுந்த கொதிப்படைவார்கள். போராடும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள். இந்நிலை ஏற்படுவது தவிர்க்கப்பட வேண்டும். ஆனால் இன்றுள்ள அரசு அதனை உணர்ந்ததாகத் தெரியவில்லை.

உண்மையில் இன்றுள்ள அரசு கடந்த பாராளுமன்றத்  தேர்தலில் தென்னிலங்கைக் கட்சிகளுக்குத் தமிழ்ப்பகுதிகளில் கிடைத்த வாக்குகளையிட்டு மகிழ்ச்சியடைந்திருக்க வேண்டும். அதற்காகவாவது தமிழ்ப்பகுதிகளில் மோதல்கள் ஏற்படாத வகையில் அணுகுதல்களைச் செய்திருக்க வேண்டும். ஆனால் செய்ததாகத் தெரியவில்லை.

1. தற்போதுள்ள சூழலைத் தமிழ்க்கட்சிகள் முறையாகக் கையாள வேண்டும். இலங்கை, இந்திய அரசுகளுக்கிடையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வாக உருவாக்கப்பட்ட பதின்மூன்றாவது திருத்தச் சட்டமூலம் இன்றும் இந்தியாவை இப்பிரச்சினையின் முக்கிய பங்காளிகளிலொருவராக வைத்துள்ளது.அதனை முறையாகக் கையாள வேண்டும். அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து இவ்விடயத்தில் செயற்பட வேண்டும்.

2. தமிழ் மக்களுக்குத்  தம் அரசியல்ரீதியிலான உணர்வுகளை வெளிப்படுத்தும் உரிமை உண்டு என்று குரல் கொடுத்திருக்கின்றார்கள் தென்னிலங்கையின் அரசியல் தலைவர்களான ஜேவிபித் தலைவர் அனுரா திசாநாயக்க, ஐக்கிய மக்கள் கட்சித்தலைவரான சஜித் பிரேமதாசா ஆகியோர். தமிழர் உரிமைகளுக்காகக் குரல்கொடுக்கும் தென்னிலங்கைக் கட்சிகளையும் முறையாகத் தமிழ் அரசியல் தலைமைகள் கையாள வேண்டும்.

3. தென்னிலங்கையின் முற்போக்குச் சக்திகள் இவ்விடயத்தில் சிறுபான்மையினத்தவரின் ஜனநாயக உரிமைகளைச் சந்தேகத்துக்கிடமின்றி ஆதரிக்க வேண்டும். அச்சக்திகளையும் தமிழ் அரசியல் கட்சிகள் அரவணைத்துச் செல்ல வேண்டும்.

அதே சமயம் இலங்கையில் தமிழ் மக்கள் தம் ஜனநாயக உரிமைகளைக் கையாள்வதில் தற்போது ஏற்பட்டுள்ளதைப்போன்ற நிலைமை இருபதாம் திருத்தச் சட்டமூலம் நிறைவேறியதும் தென்னிலங்கையிலும் ஏற்படும். நாட்டை சர்வாதிகார ஆட்சியை நோக்கித் திருப்பும் இச்சட்டமூலம் இறுதியில் நாட்டை இராணுவ ஆட்சிக்குள் தள்ளிவிடுமென்பது என் கணிப்பு. சர்வாதிகாரியாக வலம்வரப்போகும் கோத்தபாயா இறுதியில் தோல்வி ஏற்படுமொரு சந்தர்ப்பத்தில் இராணுவ ஆட்சியின் மூலம் நாட்டை மேலும் பல ஆண்டுகளுக்குத் தன் கைகளுக்குள் வைத்திருப்பார். தென்னிலங்கையின் பாரம்பரிய அரசியல்வாதிகள் மகிந்த ராஜபக்ச போன்றவர்கள்) அப்போது நிலைமை தம் கைகளை விட்டு மீறிவிட்டதை உணர்வார்கள். அது காலம் கடந்த உணர்தலாகவிருக்கும்.

தற்போதுள்ள சூழலில் மீண்டுமொரு யுத்தம் ஏற்படாத சூழலில் நாட்டை வைத்திருப்பது மிகவும் முக்கியம். சிறுபான்மையின மக்கள் தம் ஜனநாயக உரிமைகளைக் கைக்கொள்வதற்கு இடைஞ்சலாகப் படையினரை ஒருபோதும் பாவிக்கக்கூடாது. அனைத்துப் பிரச்சினைகளும் சட்டரீதியாக அணுகப்பட வேண்டும். இராணுவத்தை மக்களின் அன்றாட வாழ்வியற் பிரச்சினைகளுக்காக அழைக்கக்கூடாது. காவற் துறையினர் மட்டுமே அவற்றைக் கையாள வேண்டும். ஆனால் நாட்டை இராணுவ ஆட்சியை நோக்கி, சர்வாதிகார ஆட்சியை நோக்கி, இனவாதிகளின் அரவணைப்புடன்  ஜனாதிபதி கோத்தபாயா ராஜபக்‌ஷ கொண்டு செல்ல முனைந்திருக்குமொரு காலகட்டத்தில் இவையெல்லாம் எவ்வளவுதூரம் வெற்றியடையும் என்னும் கேள்வியும் எழாமலில்லை.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.