சோனியா காந்திபொது நலவாய நாடுகளின் கூட்டத்தில் உரையாற்றிய திருமதி காந்தி அவர்களை சந்தித்த உலகத் தமிழர் பேரவையின் மூத்த உறுப்பினர்கள், இலங்கையில் வாழும் தமிழ்ப் பெண்களின் இன்னல்களையும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளையும் பற்றி காந்தி அவர்களின் கவனத்திற்குக் கொண்டுவந்திருந்தனர். திருமதி காந்தி அவர்கள் இலங்கையின் தற்போதைய நிலைமை தனக்கும், இந்திய அரசாங்கத்திற்கும் மிகவும் கவலையளிப்பதாகக் கூறினார். மேலும் இந்தியாவில் காங்கிரஸ் தலைமையில் உள்ள கூட்டணி அரசாங்கம் தமது கவலையை இலங்கை அரசிற்கு வலியுறுத்திக் கூறியுள்ளதாகவும், கடந்த காலங்களில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் அனைவரும் தாமதமின்றி உடனடியாக மீள்குடியேற்றப்பட வேண்டும் எனவும் கூறினார்.

இலங்கை அரசு தமிழர்கள் மீது மனிதாபிமானத்திற்கு எதிரான போர்க்குற்றங்களை புரிந்ததற்கான சாட்சியங்களைப் பற்றி கூறுகையில் "அந்த ஒளி நாடாக்களை நான் பார்த்தேன். அதிலுள்ள விடயங்கள் எமக்கு மிகவும் கவலையளிக்கின்றது" என்றார். இலங்கை அரசினால் கட்டவிழ்க்கப்பட்ட போர்க்குற்றங்களைப் பற்றி பக்கச்சார்பற்ற அனைத்துலக விசாரணைக்கு அவரது ஆதரவு இருக்குமா என்று எமது உறுப்பினர்கள் வினவிய போது, அதைப்பற்றி தன்னால் எதுவும் கூறமுடியாது எனவும், பொதுநலவாய கூட்டத்தின் செயலாளர் நாயகம் திரு. கமலேஷ் சர்மா அவர்களே அதற்கு பதிலளிக்க முடியும் எனவும் தாழ்மையாகக் கேட்டுக் கொண்டார்.

இலங்கையின் வடக்குக் கிழக்கில் நடைபெறும் இராணுவ ஆட்சியைப் பற்றியும் தமிழ்ப் பெண்கள் திட்டமிட்டு கற்பளிக்கப்படுவதைப்பற்றியும் அவர் என்ன நினைக்கின்றார் என கேட்ட போது, "இலங்கையிலுள்ள தமிழர்களின் நிலமை எனக்கு மிக மிக கவலையளிக்கின்றது. அவர்களது உரிமைகள் மீள வழங்கப்பட வேண்டும். அது அவர்களது உரிமை. நாங்கள் தமிழர்களுடைய பக்கம் தான். உங்களுக்கு அது கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். நாம் தமிழர்களுடைய பக்கம் தான்" என்றார்.

திருமதி காந்தி தங்களைச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கியமைக்கு நன்றி கூறிய எமது உறுப்பினர்கள், நீண்ட காலமாக உள்ள தமிழர்களின் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு, இந்தியாவுடன் சேர்ந்து உழைப்பதற்கு உலகத் தமிழர் பேரவை விரும்புவதாகவும் அறிவித்திருந்தனர்.

கடந்த வியாழக் கிழமை பங்குனி மாதம் 17ஆம் நாள் இலண்டனில் நடைபெற்ற 14ஆவது பொது நலவாயக் கூட்டதில் கலந்து கொண்ட திருமதி காந்தி அவர்கள், 2011ஆம் ஆண்டின் பொது நலவாய கருப்பொருள் "மாற்றங்களின் செயலாளர்களாக பெண்கள்" என்பதைப் பற்றி உரையாடினார்.

பெணகளின் முன்னேற்றத்தில் முதலிடுவதே பாரிய பிரதி பலன் களைத் தரும் என்பதை திருமதி காந்தி அவர்கள் நினைவூட்டினார். உள்ளூரில் இடம் பெறும் வேலைத்திட்டங்களிற்கு உள்ளூரிலேயே பண உதவிகள் திரட்டும் குழு, பிரதேச அரசில் பெண்களிற்காக ஒதுக்கப்பட்ட பகுதி, பெண்களின் உரிமைகளைற்காக உழைக்கும் குழு, உள்ளூர் வாணிப முயற்சியில் ஈடுபடும் பெண்கள் குழு, உள்ளூரில் அமைக்கப்பட்ட தகவல் தொடர்பு மையம் என்பன மாற்றங்களிற்கான பெண்களின் பங்களிப்பிற்கு ஒரு சில உதாரண்ங்கள் என எடுத்துரைத்தார்.

வன்முறைகளினாலும், போராட்டங்களினாலும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் பெண்களில் சுயதொழில் மற்றும் வாணிப முயற்சியே அந்தப் பிரதேசத்தின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது என்றார். உதாரணமாக, போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானில், பெண்களை சுயதொழில் முயற்சியில் பயிற்சியழிக்கும் திட்டத்தை சுட்டிக்காட்டினார். இந்தியாவில் இது ஒரு முன்மாதிரியாக இருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.