தி டைம்ஸ் ஆஃப் இந்தியா' பத்திரிகை நிறுவனமொன்றினை நடத்தும் குடும்பம் கொடுக்கும் விருது ஞானபீட விருது. இது இந்திய அரசின் சாகித்திய அமைப்பு கொடுக்கும் விருதினைப் போன்றது அல்ல. ஆனால் மதிப்புக்குரிய விருதாகக் கருதப்படும் விருது. இதற்கு இம்முறை எழுத்தாளர்  வைரமுத்துவுக்குக் கிடைத்துள்ளது. அவரது திரைப்பாடல்கள் மூலம் கவிஞர் வைரமுத்துவாக மக்கள் மத்தியில் அறியப்பட்டவர் அவர். அவரது இதுவரை கால கலை, இலக்கியப் பங்களிப்புக்காகக் கொடுத்திருக்கின்றார்கள்.  தனிப்பட்ட அவரது படைப்பு ஒன்றுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட வில்லை. 

எழுத்தாளர் ஜெயமோகன் உட்படப் பலரும் பல்வேறு அமைப்புகளூடு விருதுகள் கொடுத்து வருகின்றார்கள். அவர்கள் தம் பார்வையில் விருதுகுரியவர்களைத் தேர்ந்தெடுக்கின்றார்கள். மாநில அரசுகள் இதுபோல் விருதுகளைக் கொடுத்து வருகின்றன. ஆனால் ஞானப்பீட விருது குடும்பமொன்றினால் வழங்கப்படும் விருது.

நான் கவிஞர் வைரமுத்துவின் திரைப்படப்பாடல்களை அவ்வப்போது கேட்டிருக்கின்றேன். பல பாடல்கள் அவரது மொழிக்காக என்னைக்கவர்ந்தவை. அவரது புனைகதைகளை முழுமையாக நான் வாசித்தவனல்லன். ஆனால் 'கள்ளிக்காட்டு இதிகாசம்'  வாசித்திருக்கின்றேன். நிச்சயம் விருதுக்குரிய நாவல். மண் வாசனை மிக்க நாவல் மட்டுமல்ல அரசு ,அதிகாரம், புதிய அணைக்கட்டுமானம் மூலம் கள்ளிப்பட்டுக் கிராமத்து மக்களையே சொந்த மண்ணில் அகதிகளாக்கும் அவலம், அதனால் ஏற்படும் வேதனை  என்பவற்றைச் சிறப்பாக வெளிப்படுத்தும் நாவல்.  நாவலாசிரியர் மண்ணை, மக்களை, இயற்கையை எவ்வளவு  உன்னிப்பாகக் அவதானித்திருக்கின்றார் என்பதை வெளிப்படுத்தும் நாவல். உரையாடல்களை உயிர்த்துடிப்புடன் எழுதியிருக்கின்றார்.  

இன்று அவரை ,அவரது எள்ளி நகையாடுபவர்களில் பலர் அவரது எழுத்துகளை வாசித்திருக்க  மாட்டார்கள். அவரது கட்சி அரசியல், அவர் மீதான் பெண்களின் குற்றச்சாட்டுகள், அவரது  சில ஆளுமைக் குறைபாடுகள் காரணமாக அவற்றினூடு அவர் பற்றிய கருத்துகளை முன் வைக்கின்றார்கள் போல்தான் தெரிகின்றது.  கம்யூனிஸ்ட்டான மிகையில் ஷொலகாவுக்கு நோபல் பரிசு கிடைத்திருக்கின்றது. மதவாதிகளான டால்ஸ்டாய், ஃபியதோர் த்யயேவ்ஸ்கி போன்றோர் உலகின் உன்னத இலக்கியப் படைப்புகளைத் தந்திருக்கின்றார்கள். கவிஞர் வைரமுத்துவின் படைப்புகளைப் படைப்புகளூடு அணுகினால் அவை இலக்கியமா இல்லையா என்பது தெரியும். 

அவர் திரைப்படக் கவிஞரும் கூட. அதனால் திரைப்படப் பாடல்கள் எல்லாவற்றையுமே உன்னத இலக்கியப் படைப்புகளாகக் கருத முடியாதுதான். சில தொழிலுக்காக எழுதப்பட்டவையாக இருக்கும்.  உண்மையில் 'கள்ளிக்காட்டு இதிகாசம்' 'போன்றதொரு நாவலை , அது போன்ற மண் வாசனைமிக்கதாக, உயிர்த்துடிப்பு மிக்க உரையாடல்களுடன் , இயற்கையை உள் வாங்கி எழுதுவது இலேசானது அல்ல. 

கூட்டங்களில் அவரின் தனித்துவமான உரைகளைச் சுவைத்திருக்கின்றேன். செவிநுகர் கனிகள் அவை.அவரது எழுத்துகளை இரசிக்கும் இலட்சக்கணக்கான வாசகர்கள் இருக்கின்றார்கள். அவர் கவிதை, கட்டுரை, நாவல் எனப் பல நூல்களை எழுதியிருக்கின்றார். ஆயிரக்கணக்கான தமிழ்த்திரைப்படப் பாடல்களை எழுதியிருக்கின்றார். அவற்றின் அடிப்படையில் இவ்விருதை அவருக்கு அக்குடும்பத்தினரின் இலக்கிய அமைப்பு வழங்கியிருக்கின்றது.

ஒரு குடும்பத்தின் இலக்கிய விருது ஒருவருக்குக் கிடைத்திருக்கின்றது. அதற்காக விருது வழங்கிய குடும்பத்தைப் பாராட்டலாம். விருது வாங்கியவரையும் பாராட்டலாம். வாழ்த்துகள் கவிஞர் வைரமுத்துவுக்கு.

கவிஞர் வைரமுத்துவுக்குக் கிடைத்த விருது மூலம் தமிழ் எழுத்தாளர்களுக்கு நன்மையொன்று கிடைத்துள்ளது. அதுதான் ஜெயமோகன் அறிவித்துள்ள ஒரு கோடி ரூபா விருது.  உண்மையில் , அது நடைமுறைக்கு வந்தால், அதற்காக ஜெயமோகனைப் பாராட்டலாம்.  தமிழ் எழுத்தாளர்களில் பெரும்பாலானவர்கள் எழுத்தால் வாழ முடியாத நிலையில் இருப்பவர்கள். சிலருக்காவது இவ்விதமான செல்வச்செழிப்புள்ள விருது கிடைப்பது நிச்சயம் விருது பெறுபவரின் வாழ்க்கைக்கு உதவும். இதற்காக எழுத்தாளர் ஜெயமோகனுக்கும் வாழ்த்துகள்.