மலையக தமிழ் மக்கள் தம்மை இந்தியர்கள் என்று அழைத்துக் கொண்டதால்......

(   அ )   1948ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி  அரசாங்கம் பிரஜா உரிமை பறிப்பு சட்டம் ஒன்றை கொண்டுவந்து பிரஜா உரிமையையும் வாக்கு உரிமையையும் பறித்து அவர்களை நாடற்றவர் ஆக்கி அவர்கள் அனைவரும் இந்தியாவுக்கே போய்விடவேண்டும் என்று கோஷமிட்டார்கள். இந்திய வம்சாவழி மக்கள் இடதுசாரிகளுடன் சேர்ந்து இந்த நாட்டின் அரசாட்சியை கைப்பற்றி விட கூடும் என்று அச்சம் அப்போது எழுந்தது.

   (  ஆ  )  1964ஆம் ஆண்டு சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தி இந்த மக்களின் பத்து பேரில் 7 பேர் இந்தியாவுக்கு  போய்விடவேண்டும் என்று ஒப்பந்தம் செய்து ஏழு இலட்சம் பேரை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்தார்கள்.

     (  இ  )    1945ஆம் ஆண்டு இரண்டாம் உலக மகா யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த தருணத்தில் கொழும்பு துறைமுகத்தின் மீது குண்டு வீசப்பட்ட போது கொழும்பு புறக்கோட்டை தமிழ் வர்த்தகர்கள் அனைவரும் தமது கடைகளை மூடிவிட்டு பாதுகாப்புக்காக இந்தியா சென்றுவிட்டனர் . இதனால் நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டது.  " இவர்கள் இவ்விதம் நெருக்கடியான நேரத்தில் நாட்டை விட்டு ஓடியவர்கள் , நாட்டுப் பற்று அற்றவர்கள் என்றும், அவர்களை இந்தியாவுக்கு அனுப்பி விடவேண்டும் என்றும் " அன்றைய காலகட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினரும் நிதி அமைச்சராக இருந்தவருமான ஜே. ஆர். ஜெயவர்த்தன பாராளுமன்றில் உரையாற்றியமை பாராளுமன்ற பதிவு புத்தகத்தில் பதிவாகியுள்ளது.

    (  ஈ )  1945ஆம் ஆண்டு அரசாங்க சபையில் கல்வி அமைச்சராக பதவி வகித்த சி. டபிள்யூ . டபிள்யூ . கன்னங்கரா இந்த நாட்டுக்கு இலவசக் கல்வியை அறிமுகப்படுத்திய போது தோட்டப் பாடசாலைகளில் படிக்கும் பிள்ளைகள் இந்தியர்கள் என்பதால் அவர்களுக்கு இலவச கல்வி கிடையாது என்று மறுத்தார்.

(  உ )  1971 ஏப்ரல் கிளர்ச்சிக்காக இளைஞர்களை தயார் செய்தபோது அப்போதைய ஜே.வி.பி. தலைவர் ரோகன விஜேவீர அயல் நாடான இந்தியா  " இந்திய விஸ்தரிப்பு வாதம் "  என்ற கொள்கையின் அடிப்படையில்  இலங்கையை ஆக்கிரமிக்க  தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறது என்றும் அது இந்த நாட்டில் வசிக்கின்ற 11 லட்சம் இந்தியர்களின் நலனில் அக்கறை காட்டுவதாக பாவனை செய்துகொண்டு இந்த நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுகிறது என்றும் ஆதலால் இந்த நாட்டை இந்தியாவின் ஆக்கிரமிப்பில் இருந்து தடுக்க வேண்டுமானால் இந்தியத் தமிழர்களை இந்தியாவுக்கு விரட்டி அடிக்க வேண்டும் என்றும் தனது விரிவுரையில் கூறியிருக்கிறார் என்பதற்கான பதிவுகள் காணப்படுகின்றன. அத்தகைய கொள்கையினால் ஒருகாலத்தில் ஜே. வி. பி. இந்திய மக்கள் மீது வெறுப்பை கக்கியது. அந்த வெறுப்பு இப்போதும் கூட சிங்கள மக்கள் மனதில் ஆழப் பதிந்து தான் காணப்படுகிறது.

    (  ஊ )   இம்மக்கள் இந்தியர்கள் என்பதால் நேற்றுவரை இம்மக்களுக்கு இந்தநாட்டில்  காணி வீட்டுரிமை மறுக்கப்பட்டு அடிமைகள் போல் லயக் காம்ராக்களில் அனாதைகளாக வசிக்க மட்டுமே இடமளிக்கப் பட்டிருந்தனர்.

   (  எ )  1990 ஆம் ஆண்டு வரை இந்த மக்களின் பிள்ளைகள் க.பொ.த  (சா /த ) பரீட்சையில் தேர்ச்சி அடைந்து உயர் கல்வி கற்று விடக்கூடாது என்ற எண்ணத்தி னால் இவர்கள் கல்வி கற்ற பாடசாலை களுக்கு கணித , விஞ்ஞான பாட ஆசிரியர்கள் நியமிக்கப்படாமல் கவனமாகப் பார்த்துக்கொண்டார்கள்.

    (  ஏ )   இப்போதும்கூட இந்த நாட்டின் ஏனைய தொழிலாளர்கள்  நாட் சம்பளமாக ரூபா 2500 பெறும்போது பெரும்பான்மை மக்கள் எல்லாருமாக சேர்ந்து குறைந்தபட்சம் ரூபா ஆயிரத்தை இவர்களுக்கு கூலியாகக் கொடு என்று ஏகோபித்த குரலில் குரல் கொடுக்கிறார் களா என்றால் , இல்லை.

 ( ஐ ) இலங்கை இந்திய காங்கிரஸ் என்ற பெயரில் இயங்கி வந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இனிமேலும் அந்த பெயரை பயன்படுத்துவது உகந்ததல்ல என்று நினைத்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்று மாற்றிக் கொண்டதற்கு காரணம் என்ன.

இப்படி இன்னும் பல காரணிகளையும் கூறலாம் . தற்போது இடம் பெற்று வரும் இந்திய இலங்கைக்கு இடையிலான வர்த்தக பொருளாதார நிகழ்வுகளை அவதானிக்கும் போது மீண்டும் ஒரு முறை இந்திய விஸ்தரிப்பு வாத கோட்பாடு  புதுப்பிக்கப்பட்டு இந்திய மக்களுக்கு எதிராக கலவரங்கள் தோன்றலாம்.

ஆதலினால் நாம் நமது எதிர்கால சந்ததியினரை மனதில் கொண்டு நம் அரசியல் நிலைப்பாடுகளை பொருத்தமானதாக மாற்றிக்கொள்ள வேண்டும்.

மலையக மக்கள் உரிமை கோரிக்கை......

"மலைகம் 200" நிகழ்ச்சி திட்டத்தினை ஒட்டி பேராதெனிய பல்கலைக்கழக கலைத்துறை , மலையக மக்களின் வரலாறு , கலை பாரம்பரியங்கள்,  இலக்கியம்,  உரிமை சார் பிரச்சனைகள், அவர்களுக்கான அரசியல் தீர்வு, காணியுரிமை என்பவற்றை மையமாகக் கொண்டு முழுநாள் ஆய்வரங்கம் ஒன்றை கடந்த சனிக்கிழமை ஏற்பாடு செய்திருந்தது.

 மலையகம் மற்றும் ஏனைய பிரதேசங்களைச் சேர்ந்த துறை சார் வல்லுனர்கள்,  புத்திஜீவிகள் , கல்வி புலத்தை சேர்ந்தவர்கள் , எழுத்தாளர்கள், கவிஞர்கள்,  நாடகத் துறையை சேர்ந்தவர்கள் என பலரும் ஒருங்கிணைந்து இருந்த இந்த ஆய்வு மகாநாடு மேற்படி  " மலையகம் 200 " நிகழ்ச்சி திட்டத்தின் ஒரு முக்கிய நிகழ்வாக கருதப்படுவதாக அமைந்தது.

அங்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் ஒரு நூலாக தொகுக்கப்பட்டு வெளியீடு செய்யப்பட்டமை மலையக மக்களின் பிரச்சினைகளை ஆவணப்படுத்துதல் தொடர்பில் ஒரு முக்கியமான செயல் நடவடிக்கை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் அங்கு வருகை தந்த ஆய்வாளர்களுக்கு தமது ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்க போதுமான நேரம் ஒதுக்கப்படாமை ஒரு குறைபாடாக தெரிந்தது. இத்தகைய ஆய்வு கருத்தரங்குகளின் போது இம் மக்களின் உரிமைப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான விதந்துறைகளும் தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டு அவற்றை ஆவணமாக்கி உரிய அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு அனுப்பப்பட வேண்டும் என்பது கட்டாயத் தேவையாகும் . இத்தகைய குறைபாடுகளை தவிர்த்து மீண்டும் இத்தகைய கருத்தரங்குகளை பல பகுதிகளிலும் ஏற்படுத்தி அரசியல் தீர்வு நகர்வு நோக்கி இட்டு செல்வது இன்றைய காலகட்டத்தில் அவசரமானதும் அவசியமானதும் ஆகும்.

இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த பேராதனை பல்கலைக்கழக தமிழ் துறை தலைவர் பேராசிரியர் ஸ்ரீ பிரசாந்தன் உள்ளிட்ட குழுவினருக்கு பாராட்டுக்களும் நன்றிகளும்