ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?

- 'உண்மை! உழைப்பு! வெற்றி!' என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டியங்கும் 'தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி'யின் தமிழாய்வுத்துறையும் , 'அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்' என்பதைத் தாரகமந்திரமாகக் கொண்டியங்கும் 'பதிவுகள்' பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில்  25.09.2019 அன்று நடத்திய  தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகள்' இணைய இதழில் தொடராகப்பிரசுரமாகும். கட்டுரைகளை அனுப்பியவர் முனைவர் வே.மணிகண்டன். - பதிவுகள்


முன்னுரை

மானிடரின் காதல் ஓவியங்களுக்கு மிகச் சிறந்த பண்பாட்டுப் பின்னணியாக அமைவது இயற்கைக் காட்சி. இவ்வகையில் ஐந்து நிலத்துக் காட்சிகளையும் அழகுபடத் தீட்டியுள்ளர் சங்ககாலப் புலவர்கள். ஆயின், அவற்றைக் காதல் நாடகத்துக்கு ஏற்ற அரங்கு என்ற அளவோடு அவர்கள் நிறுத்திவிடவில்லை. துலைவன் தலைவியர் தம் உள்ளத்தே தோன்றும் திளைப்பையும் களைப்பையும் இயற்கைக் காட்சிகளிலே கண்டார்கள். சூழ்ந்துள்ள இயற்கையெல்லாம் அவர்களோடு ஒன்றிவிட்டதாக உணர்ந்தார்கள். தலைவன் தலைவியரின் உள்ளத்து உணர்வுகளை இயற்கை உணர்ந்து, இயைந்து ஒன்றித்துவிட்டதுபோல் அவர்கள் உணர்ந்தனர். அவர்கள் மகிழ்ந்தபோது இயற்கையும் துயரால் துவண்டது என்றனர். காதலரின் களிப்பைப் பெருகவிட்டது. அவர்களோடு ஒன்றிவிட்ட இயற்கை, காதலர்கள் வாடி வருந்தியபோதும் அந்த இயற்கையும் சேர்ந்து வாடியது. தனி இதயங்களின் துடிப்பைப் பரந்து விரிந்திருக்கும் புறவுலகம் புரிந்து கொண்டது போன்ற ஒருவகை அனுபவம் இந்த நிலையில் ஏற்படுகின்றது. இந்த அனுபவம் கைவரும் போது இயற்கையும் மனிதனும் இரண்டறக் கலந்திடும் ஒன்றிய நிலை ஏற்படுவதைக் காணலாம். சில வேளைகளில் தலைவி முதலானவர்களின் உணர்ச்சிகளை இயற்கையோடு இயைந்து விடுவதற்காக இயற்கைப் பொருள்களுக்கு உயிரும் உணர்வும் கொடுத்துப் பாடுவது உண்டு. இதுபோன்ற பாடல்களில் உள்ளத்து உணர்வின் ஆழமும், அதனோடு பிணைந்த நம்பிக்கையின் உறுதிப்பாடும் புலப்படும். மேலும் மனித உணர்வின் மறு பதிப்பாகவே இயற்கை வருணிக்கப்படுவது தமிழ் இலக்கியங்கியங்களில் உண்டு. அது போலவே குறிஞ்சிப்பாட்டில் இயற்கையோடு மனிதன் கொண்ட பண்பாட்டுப் பிணைப்புகளையும்இ இயற்கை நெறிகளொடு சோந்த தமிழர்ப் பண்பாட்டு வாழ்வியல் முறைகளும் இக்கட்டுரையில் தரப்படுகின்றன.

அறத்தொடு நிற்றல்

இயற்கைநெறி பண்பாட்டோடு சேர்த்து அறத்தொடு நிற்றல் இயைந்து குறிஞ்சிப்பாட்டில் கூறப்பட்டுள்ளது. இதனை,

'வேறுபல் வருவின் கடவுட் பேணி
நரையும் விரையும் ஓச்சியும் அலவுற்று
எய்யா மையலை நீயும் வருந்துதி-
நல்கவின் தொலைவும்இ நறுந்தோள் நெகிழவும்
புள்பிறர் அறியவும்இ புலம்புவந்து அலைப்பவும்
உள்கரந்து உறையும் உய்யா அரும்படர்
செப்பல் வன்மையின் செறித்துஇ யான் கடவலின்
'! (பத்துபாட்டு பகுதி-2 பா.வரி 6-10)

இப்பாடல் வரிகள், ஒளி பொருந்திய நெஞ்சினையும்இ தழைத்த மெல்லிய கூந்தலையும் பிறர் நிறத்தினை வெல்லும் வெற்றியுடைய என் நிறத்தினையும் உடைய என் தோழி, தன் மனதிற்க்குள் வைத்துள்ள செய்திகளை இயற்கையோடு இயைபுபடுத்தித் தன் தாய் செவிலியிடம் அறத்தொடு நிற்கிறாள். இச்செயல்பாடு வழி குறிஞ்சிப்பாட்டில் இயற்கையோடு வாழ்ந்த பண்பாட்டுமுறை காணப்படுறது.

மண நிகழ்வு

குறிஞ்சிப்பாட்டில் மண நிகழ்வு நடந்த முறையைத் தோழி செவிலியிடம் கூறுவாள். அந்த மண நிகழ்வானது இயற்கையோடும், இயற்கைப் பொருள்களின் சாட்சியோடும் நிகழ்த்தப்பட்டது என தோழி கூறுவாள். அதனை,

'வண்ணமும் துணையும், பொரீ, எண்ணாது,
எமியேம் துணிந்த ஏமம் சால் அருவினை
நிகழ்ந்த வண்ணம் நீ நனி உணரச்
செப்பல் ஆன்றிசின்......' (பத்துபாட்டு பகுதி-2 பா.வரி 36-40)

என்ற இப்பாடல் வரிகள் மண நிகழ்வு முறையைத் தோழி கூறுவதாகப் புலப்படுத்தி நிற்கின்றன. திருமணம் என்றப் பண்பாட்டோடு தொடர்புடைய முறை இயற்கையோடு நடைபெற்றது. இயற்கையை முன்னிருத்தி வாழ்வியல் பண்பாடு அமைந்தது என்பதனைக் குறிஞ்சிபாட்டு வரிகள் புலப்படுத்துகின்றன.

திணைப்புனம் காத்தல்

நெல்லைத் தன்னிடம் கொண்ட நெடிய மூங்கிலைத் தின்பதற்காகத் தன் தலையை மேல்நோக்கி உயர்த்தி நின்று வருந்திய யானை, அவ்வருத்தம் தீர்வதற்காகத் தன்னுடைய முத்துக்கள் நிறைந்த கொம்பின் மேல் துதிக்கையை இட்டுக்கொள்ளும். அதன் கொம்புகளுக்கிடையே தொங்குகின்ற துதிக்கையின் காட்சியைப் போல பஞ்சுப் போன்ற, தலை வளைந்த ஈன்றணிமை நீங்கியப் பெரிய திணைக்கதிர்கள் திணைத்தாள்களுக்கிடையே காணப்படும். அந்தத் திணைக் கதிர்களை, அக்கதிர்களில் உள்ள சிறிய திணைகளை உண்பத்றகாகக் கிளிகள் விரும்பி வந்தடையும். அவற்றை விரட்டி திணைக் கதிர்களை காத்து வருவர். இதனை,

'நெற்கொள் நெடுவதிற்கு அணந்த யானை
முத்துஆர் மருப்பின் இறங்கு கை கடுல்,
துய்த்தலை வாங்கிய புனிறுதீர் பெருங்குரல்
நல்கோட் சிறுதிணைப் படுபுள் ஓப்பி,
ஏல்பட வருதியர், என நீ விடுத்தலின்,

கலிகெழு மாமிசைச் சேணோன் இழைத்த' (பத்துபாட்டு பகுதி-2 பா.வரி 46-50)

என்ற இப்பாடல் வரிகள் இயற்கைப் பொருள்களைப் பாதுகாத்து அதனைத் தன் தேவைக்காகப் பய்னபடுத்தினர். இயற்கைப் பொருளுக்குப் பெரிதும் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். இரவில் ஆண்கள் திணைப்புனம் காத்தனர். பகலில் பெண்கள் காத்தனர். இவ்வாறு இயற்கைப் பொருள்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பண்பாட்டு இயற்கை நெறியோடு வாழ்ந்தனர் என்றச் செய்தி இப்பாடல் வரிகள் மூலம் பண்பாட்டில் ஒன்றான உணவுமுறை என்பது இயற்கையைச் சார்ந்திருந்தது என உறுதியாகிறது.

சுனையில் நீராடல்

மனிதன் இயற்கையோடு இணைந்து வாழ்ந்தான் என்பதற்கு 'சுனையில் நீராடல'; என்னும் செய்தி உண்மையாக்குகிறது.

'விசும்பு ஆடு பறவை வீழ்பதிப் படர,
நிறை இரும் பௌவம் குறைபட முகந்து கொண்டு,
அகல்இரு வானத்து வீசுவளி கலாவின்,
முரசு அதிர்ந்தன்ன இன்குரல் ஏற்றொரு,
நிரை செலல் நிவப்பின் கொண்மூ மயங்கி,
இன்இசை முரசின்...
' (பத்துபாட்டு பகுதி-2 பா.வரி 61-65)

என்னும் இப்பாடல்வரிகள் ஆகாயத்தில் பறக்கும் பறவைகள், தாம் விரும்பும் கூடுகளில் தங்குவதற்குச் சென்றன. நீர் நிறைந்த கடலின் நீர் குறைபடும்படி மேகங்கள் முகந்து கொண்டன. முரசு, சிறிது முழங்கினாற் போன்ற இனிய குரலையுடைய இடியேற்றத்துடன், அவை வரிசையாக மேல் எழுந்து சென்றன. இனிய ஓசையையுடைய முரசினையும், ஒளி பொருந்திய அணிகலன்களையும் உடைய முருகன், அசுரர்களைக் கொல்வதற்கு உயர்த்திய, விளங்கும் இலைத் தொழிலையுடைய வேல்போல் அவை மின்னின. ஏனைய நான்கு பூதங்களும் தம்மில் சிரித்தற்குக் காரணமாகிய, கரிய ஆகாயத்தில் வீசுகின்ற காற்று அம்மேகங்களுடன் கூடுதலால், தொகுதியாகிய அவற்றின் கூட்டையும் களைத்து மழையைப் பொழிந்தன.

தலைவனுடைய இத்தகைய நெடிய மலைச் சிகரத்தினின்றும் குறித்து ஓடி வரும் தெளிந்த நீரினையுடைய வெண்ணிறத் துகில் போன்ற அழகிய வெள்ளிய அருவியில் நீங்குதல் இல்லாத விருப்பம் கொண்டு வேட்கை தணியாமல் நாங்கள் நீராடினோம் என்ற இச்செய்தி இயற்கையோடு அவர்களின் வாழ்வியல் பண்பாட்டு முறையை அமைத்துக் கொண்டனர் என இப்பாடல் வரிகள் வெளிப்படுத்துகிறது.

பண்பாட்டோடு இயைந்த இயற்கை நெறி வாழ்வியல்

தொன்மைத் தமிழிலக்கியப் பாடல்களில் இயற்கைப் பல கோணங்களிற் படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளது. புலவர்கள் சிலர் இன்பமூட்டும் இயற்கைக் காட்சிகளை முழுமையுறக்கண்டு அந்த ஒருமித்தக் காட்சியினைச் சித்தரிப்பதோடு நிறைவுப் பெற்றார்கள். சிலர் நுணக்கமாகச் சென்று மிகச்சிறிய இயற்கைப் பொருள்களையும் எழிலுற விளக்கினார்கள். சிலர் இயற்கையின் மென்மையான கூறுகளையும் மற்றும் சிலர் வன்மையான கூறுகளையும் விரும்பிப் போற்றினர். புலவர்களின் கவிதைக்கண், காடு, மலை, பாலை, சோலை எல்லா இடங்களிலும் குறைவிலாத அழகினைக் கண்டது. இயற்கையின் மிக அற்பமான பொருள்களின் அழகையும் கண்டு களித்தனர்.

பருவங்கள், பறவைகள், மலர்கள்யாவும் தத்தமக்கு ஏற்ற சூழ்நிலைகளில் வைத்துப் புலவர்களால் வருணிக்கப்பட்டுக் கவிதைகட்குப் புத்துணர்வும் கருத்தழகும் நல்குகின்றன. இப்பொருள்களின் வடிவம், நிறம், ஒலி, இயக்கம் ஆகியவற்றை நுகர்வதில் புலவர்கள் நிறைவான இன்பம் கண்டார்கள். சில சமயம் அவர்கள் இயற்கையின் கட்டுக்கடங்காத தன்மையில் பெரிதும் ஈடுபட்டுஇ மாமுகில் சூழ்ந்து படிந்து கிடக்கும் மைவரையையும் அடர்ந்த காடுகளையும் விளக்கமாகப் பாடுகின்றார்கள். அத்தiகைய இயற்கை மனிதனுக்கும் பகையாகவே இருந்து வருகிறதெனினும் தலைசிறந்த வீரன் ஒருவன் தகைமைச் சான்ற தன் பகைவனையும் மதித்துப் பாராட்டுவது போலவே புலவர்கள் அதனைப் போற்றினர். எனவே அச்மூட்டும் பெருமிதமான இயற்கைக் காட்சிகளும் தமிழ் இலக்கியத்தில் உண்டு. அமைதி தவழும் மென்மையான இயற்கைக் காட்சிகளும் அங்கு உண்டு.

இவை யாவும் தமிழ்ப் புலர்கள் தம் சொந்த அனுபவத்தால் பாடியவை. தமக்கு வாய்த்திருந்த நல்ல இயற்கைச் சூழ்நிலையை இயல்பான சுவையுணர்வோடு நுகர்ந்ததன் விளைவாக எழுந்தவை. புறத்தில் நிகழ்வனவற்றைக் கலையுணர்வோடு நோக்கும் திறமை அவர்களுக்குக் கைவந்தது. அண்மையிலும் தொலைவிலும் இருந்த உயிருள்ளனவும், இல்லனவும், வலியனவும், மெலியனவும் ஆகிய இயற்கைப் பொருள்கள் அவர்களின் கருத்தை ஈர்த்தன. தம்மைச் சூழ்ந்திருந்த நீர் நிலைகளையும் வானத்தையும் வயல்வெளிகளையும் மலைச்சாரல்களையும் தாமே நன்கு நுகர்ந்து அந்நுகர்ச்சியினைக் கவிதையாக வடித்தார்கள்.

புலன் நுகர்ச்சிகளில் முழுமனத்தோடு ஈடுபடும் தமது தனித்திறமையால் இயற்கையை முழுமையாகவும் நுட்பமாகவும் கண்டார்கள். எந்தச் சிறு பகுதியையும் புறக்கணிக்காமல் கடிந்து நோக்கி உணர்ந்தார்கள். தம் உணர்வைத் தக்க சொற்களால் கவிதைகளில் தொடுத்தார்கள். எனவே, அவர்களின் கவிதையில் எல்லாம் தம் வாழ்வியல் பண்பாட்டோடுத் துணை நின்ற இயற்கையின் பல்வேறு வடிவங்களை நுண்ணுணர்வோடு கண்டுணர்ந்த அனுபவத்தின் வெளிப்பாடுகள் என்று கூறுவதில் தவறில்லை. இப்படிப்பட்ட இயற்கை சூழல்கள் குறிஞ்சிப்பாடடில் மனிதனின் வாழ்க்கையோடுச் சேர்ந்து இயற்கைநெறி பண்பாடபாக மாற்றம் பெற்றது என்பதனை அறியமுடிகிறது.

முடிவுரை

இக்கட்டுரையின்கண் குறிஞ்சிப்பாட்டில் உள்ள எதார்த்தமான, இயல்பான இயற்கை நெறிகள் மனித வாழ்க்கையோடும், பண்பாட்டோடும் இரண்டறக் கலந்துள்ளது என்பது எடுத்துரைக்கப்பட்டுள்ளன. தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டு சார்ந்த இயற்கை நெறிமுறைகள் அவர்களின் வாழ்வியல் சார்ந்து சங்க இலக்கியத்தில் காட்டப்பட்டுள்ளது. இந்த இயற்கை நெறிமுறைகளானது இன்றளவும் மக்களிடையே இருந்து வருகிறது என்பது அனைவராலும் உணர்ந்து அறியப்படக் கூடிய ஒன்றே. வாழ்வியல் மற்றும் இயற்கை சார்ந்த நெறிமுறைகளிலும் பண்பாட்டிலும் தமிழர்களின் வாழ்க்கை முறை என்பது உலகில் வாழும் அனைவருக்கும் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றது என்பதே ஆய்வின் நிறைவுரையாக அமைகிறது.

பார்வை நூல்கள்

1. சங்கத்தமிழர் வாழ்வியல் - உலகத் தமிழராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை.

2. பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை, பாரி நிலையம், சென்னை.

3. சங்க இலக்கியம் - பத்துப்பாட்டு பகுதி -2

*கட்டுரையாளர்: செ. மாணிக்கராஜ், முனைவர் பட்ட ஆய்வாளர், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம், அபிஷேகப்பட்டி- 6 27 011.