ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?

'உண்மை! உழைப்பு! வெற்றி!' என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டியங்கும் 'தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி'யின் தமிழாய்வுத்துறையும் , 'அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்' என்பதைத் தாரகமந்திரமாகக் கொண்டியங்கும் 'பதிவுகள்' பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில்  25.09.2019 அன்று நடத்திய  தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகள்' இணைய இதழில் தொடராகப்பிரசுரமாகும். கட்டுரைகளை அனுப்பியவர் முனைவர் வே.மணிகண்டன். - பதிவுகள்


முன்னுரை:

மனிதர்களின் அகவாழ்வை எடுத்துரைக்கும் அற்புத இலக்கியமான குறுந்தொகையில் நிறைந்திருக்கும் பண்பாட்டுப் பதிவுகளைப் பார்வையிடும் நோக்கில் இக்கட்டுரை பயனிக்கின்றது.

பண்பாடு:

'பண்பாடு' என்பதைப் பொதுவாக நோக்கினால் பண்பினை வெளிப்படுத்துதல் என்று பொருள்படும். ஆனால் 'பண்பு' என்பது வேறு. 'பண்பாடு' என்பது வேறு. தனிமனிதனின் குணங்களைக் குறிப்பது பண்பு. ஒரு கூட்டத்தின் நிலைப்பாட்டைக் குறிப்பது பண்பாடு. 'பண்படு' என்பதே 'பண்பாடு' என்று மாறியிருக்கக்கூடும்.

பண்பாட்டுப் பதிவுகள்:

பண்டைக்காலத்தில் மணமாகாத பெண்கள் தம் காலில் ஒருவகைச் சிலம்பினை அணிந்திருந்தனர். மணமான பின்பு அதைக் கழற்றி விடுவார்கள். இதற்கெனச் 'சிலம்புகழி நோன்பு' எனும் சடங்கு உண்டு. பெண்ணின் காலை நோக்கிய அளவிலேயே அவள் திருமணமானவளா? இல்லையா? என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

'வில்லோன் காலன கழலே; தொடியோன்
மெல்அடி மேலன சிலம்பே' (குறுந்.7)

மலர்களையும் தழைகளையும் தொகுத்து ஆடையாகத் தரித்துக்கொள்வது பெண்களின் வழக்கம் என்பதைக் காவிரிப்பூம்பட்டிணத்துக் கந்தரத்தனார் எழுதியுள்ளார்.

'குவளைத் தண்தழை இவள்ஈண்டு வருந்த
நயந்தோர் புன்கண் தீர்க்கும்' (குறுந்.342)


நாட்கணக்குப் பார்க்கச் சுவரில் கோடுகள் இட்டு வைப்பது பெண்களின் வழக்கம். தன்னைப் பிரிந்த தலைவன் கார்காலத்தில் திரும்பிவருவான் என்பது தெரிந்து தன் அணிகலன்கள் நெகிழும்படி அழுது, நீர்த்துளிகளை வெளியிடும் கண்களோடு நாட்களை எண்ணிச் சுவரில் கோடுகளை இட்டதாகக் கொற்றன் என்ற புலவர் குறிப்பிட்டுள்ளார்.

'எறிகண் பேதுறல் ஆய்கோடு இட்டுச்
சுவர்வாய் பற்றும் நின்படர் சேண்நீங்க' (குறுந்.358)


விழாக் காலங்களில் பெண்கள் கைகோர்த்துத் துணங்கைக் கூத்து ஆடுவார்கள் என்பதை ஆதிமந்தியார் குறிப்பிட்டுள்ளார்.

'மள்ளர் குழீஇய விழவினானும்
மகளிர் தழீஇய துணங்கை யானும்'(குறுந்.31)


கூந்தலில் உள்ள எண்ணெய், சிக்கல் ஆகியவற்றைப் போக்குவதற்காக மகளிர் களிமண்ணைத் தேய்த்துக் குளிப்பது வழக்கம் என்பதை மாதிரத்தன் என்பவர் குறிப்பிட்டுள்ளார்.

'கூழைக்கு எருமண் கொணர்ச் சேறும்
ஆண்டும் வருகுவன் பெரும்பேதையே'(குறுந்.113)


பெண்கள் தினைப்புனம் காக்கச் செல்வர். குறமகளிர் தினைப்புனங்களில் உள்ள கிளிகளை ஓட்டுவதற்காகக் 'குளிர்' என்னும் கருவியை இசைத்ததாகக் கபிலர் குறிப்பிட்டுள்ளார். மூங்கிலை வளைத்து அதிலே நரம்பைக் கட்டி விரலால் தெரித்து ஓசை எழுப்பும் கருவிக்குக் 'குளிர்' என்று பெயர்.

'படுகிளி கடியும் கொடிச்சிகைக் குளிரே
இசையின் இசையா இன்பா ணித்தே (குறுந்.291)

குறி கூறும் பெண்கள் வெண்மையானாதும், கூர்மையானதுமான சிறுகோலைக் கையிலே கொண்டிருப்பர் என்கிறார் பரணர்.

'வெண்கடைச் சிறுகோல் அகவன் மகளிர்
மடப்பிடிப் பரிசின் மானம்' (குறுந்.298)

வண்ணாத்தி துணிகளுக்குக் கஞ்சிப் பசையூட்டித் துவைத்து அழுக்கை போக்கும் விதம் குறிப்பிடப்பட்டுள்ளது.

'நலத்தகைப் புலத்தி பசைதோய்த்து எழுத்துத்
தலைப்புடைப் பொக்கித் தண் கயத்து இட்ட' (குறுந்.300)


வீடுகளில் வெளியில் யாரும் விருந்தினர் தங்கியிருப்பரோ என ஆராய்ந்து வினவிய பின்னரே கதவடைப்பது பண்டைப் பெண்டிர் வழக்கம்.

'பவர்புகு வாயில் அடைப்பக் கடவுநர்
வருவீர் உளீரோ? எனவும்' (குறுந்.118)

நாழிகைக் கணக்கர் இரவில் உறங்காது நாழிகையை அறிந்து அதனை மணியோசையின் மூலம் ஊரார்க்குத் தெரிவிப்பர் என்கிறார் கழாக்கீரன் எயிற்றி. இது நகர நாகரிக வளர்ச்சியைத் தெரிவிப்பதாகவே உள்ளது.

'துஞ்சா வாழி – தோழி! காவலர்
கணக்கு ஆய் வகையின் வருந்தி, என்' (குறுந்.261)


தமிழர்களின் முக்கியமான பொழுதுபோக்குகளில் ஒன்றான கோழிச்சண்டையும் குறுந்தொகையில் இடம்பெற்றுள்ளது. இரண்டு கோழிகள் சண்டையிடத் தொடங்கினால் ஆத்திரத்துடன் ஏதாவதொன்று மடியும்வரை தாக்கிக்கொள்ளுமே தவிர இடையில் அவை சண்டையை நிறுத்த யாராவது விலக்கினால் மட்டுமே இயலும்.

'குப்பைக் கோழித் தனிப்போர் போல
களைவார் இலை – பான் உற்ற நோயே' (குறுந்.305)

பண்டைத்தமிழகத்தில் துறவிகள் இருந்தனர். அவர்களை அனைவரும் மதித்தனர். குற்றமற்ற தெருவில் நாயில்லாத வீட்டிற்குச் சென்று ஒரே வீட்டில் கிடைக்கும் பிச்சைச் சோற்றை உண்பர் என்பதை ஓரிற் பிச்சையார் குறிப்பிட்டுள்ளார்.புலால் உண்ணாதவர் வீட்டில் நாயும் கோழியும் வளர்ப்பதில்லை என்பதும் பிச்சை ஏற்போருக்கு ஓர் இல்லத்திலேயே வயிறு நிரம்பக் கிடைத்துவிடும் என்பதும் உணரத்தக்கது.

'ஓர் இல் பிச்சை ஆர மாந்தி
அற்சிர வெய்ய வெப்பத்த தண்ணீர்'(குறுந்.277)

இரவலர் தம் வீட்டிற்கு வராமல் இருப்பது தனக்கு இழிவானது என்று பண்டைத்தமிழர் கருதியதாய் குறுந்தொகையில் காணமுடிகிறது.

'இரவலர் வாரா வைகல்
பலவா குக-யான் செலவுறு தகவே' (குறுந்.137)


தன் முயற்சியால் தேடிய பொருளையே ஒருவன் செலவு செய்ய வேண்டும். முன்னோர் தேடிவைத்த பொருட்களைச் செலவு செய்வபரைப் பொருள் உள்ளவராக மதிக்கமாட்டார்கள்.

'உள்ளது சிதைப்போ ருளரெனப் படாஅர்
இல்லோர் வாழக்கை இரவினும் இளிவுஎடை' (குறுந்.283)

ஆடவர் வினை செய்து பொருள் ஈட்டுவதையே தம் உயிரெனக் கருதினர். மகளிர் ஆடவரையே தம் உயிரெனக் கருதினர் என்கிறார் பெருங்கடுங்கோ.

'வினையே யாடவர்க் குயிரே வாணுதல்
மனையுறை மகளிர்க் காடவர் உயிர்'(குறுந்.135)


சங்ககால மக்களிடம் சேர்த்து வைக்கும் பழக்கம் இல்லை. தாகத்திற்கு நீராகாரம் கொடுக்கும் பழக்கம் இருந்தது என்கிறார் பேயனார்.

'கார் எதிர் புறவினதுவே உயர்ந்தோர்க்கு
நீரோடு சொரிந்த மிச்சில் யாவர்க்கும்
வரைகோள் அறியாச் சொன்றி
நிரைகோற் குறுந்தொடி தந்தை ஊரே' (குறுந்.233)

தோழி தலைவன் உடன்போக்கிற்கு உடன்பட்ட செய்தியைத் தலைவிக்குத் தெரிவிக்கின்றாள். அப்போது தலைவி நாணமும், அச்சமும் கொண்டு தயங்குகிறாள். தலைவனுடன் சென்று அவனூரில் அவனை மணந்து வாழ்தலே நீ செய்யத்தக்கது என்று தலைவிக்கு தோழி கூறும் அறிவுரை களவொழுக்கத்தைக் கற்பொழுக்கமாக்கும் அற்புத செயலாகும்.

'கோடை ஒன்றிய கருங்கால் வேங்கை
வாடுபூஞ்சினையிற் கிடக்கும் உயர்வரை
நாடனொடு பெயருமாறே' (குறுந்.343)


மறுபிறப்பு உண்டென்பது பழந்தமிழர் நம்பிக்கை. தலைவி தலைவனிடம் 'இப்பிறப்பு ஒழிந்து மறுபிறப்பு நேர்ந்தாலும் நீதான் என் காதலனாய் பிறப்பாய். நான்தான் உன் உள்ளத்தில் குடிகொண்டிருக்கும் காதலியாய் பிறப்பேன்' என்கிறாள்.

'இம்மை மாறி மறுமை யாயினும்
நீயா கியரென் கணவனை
யானா கியர்நின் னெஞ்சுநேர் பவளே' (குறுந்.49)


மறுபிறப்பு போல ஊழிலும் வினையிலும் பண்டைத் தமிழர்க்கு நம்பிக்கை உண்டு. காதலர்கள் சந்திப்பதற்கு ஊழ்வினையே காரணம் என்கிறது மோதாசனார் பாடல் ஒன்று.

'நல்லை மன்றம்ம பாலே – மெல் இயல்' (குறுந்.229)

சொர்க்கம், நரகம் பற்றிய எண்ணங்களும் தமிழரிடத்தில் இருந்தது. நன்மை புரிவோர் சொர்க்கம் சென்று நலம் பெறுவர் என்றும் தீமை செய்வோர் நரகத்தில் கிடந்து உழல்வர் என்றும் நம்பியதாக பரணர் குறிப்பிட்டுள்ளார்.

'வரையா நிரையத்துச் செலீஇயரோ, அன்ன' (குறுந்.292)
'இனிது எனப்படூஉம் புத்தேள் நாடே' (குறுந்.288)


செங்கடம்பு மரத்திலே அச்சம் தரும் தெய்வம் குடிகொண்டிருக்கும் என்றும் அது கொடியவர்களைத் தண்டிக்கும் என்றும் நம்பப்பட்டது.

'மன்றமராஅத்த பேஎமுதிர் கடவுள்
கொடியோர்த் தெறூஉ மென்ப' (குறுந்.87)

சகுனம் பார்;க்கும் பழக்கமும் பண்டைக்காலத்தில் இருந்துள்ளது. பச்சோந்தியைக் கண்டால் அது நல்ல சகுணம் என்று கருதினர்.

'வலமாயின் வழிப்பயணம் நல்லதென்ற நிமித்து' (குறுந்.140)

வீட்டுக் கூறையின் மேல் காக்கை உட்கார்ந்து கரைந்தால் விருந்தினர் வருவர் என்ற நம்பிக்கை இருந்தது.

'விருந்து வரக் கரைந்த காக்கையது பவியே' (குறுந்.210)

தினை, நெல் முதலியவற்றை விளைவிப்போர் ஓர் ஆண்டின் விளைவினை முதலில் தெய்வத்திற்குப் படைப்பது வழக்கம். தெய்வத்திற்கு படைப்பதற்கென வைக்கப்பட்ட பண்டத்தினை படைக்கும் முன் யாரும் உண்ணக்கூடாது. உண்டால் அதுவே எச்சில் பட்டதாக கருதப்பட்டு தெய்வக் குற்றம் நேரும் என்று நம்பினர்.

'புவைன் துடவைப் பொன்போற் சிறுதினைக்
கடியுண் கடவுட்டு இட்ட செழுங்குரல்' (குறுந்.105)

முடிவுரை:

ஒரு தனிப்பட்ட குணத்தைப் பின்பற்றும் மனிதப் பண்புகளை ஒரு கூட்டுச் சமூகம் ஏற்று பின்பற்றும்போது அது பண்பாடாக மாறுகின்றது. அவ்வகையில் பண்டையோர் வாழ்ந்த வாழ்வும், அவர்களின் பழக்கவழக்கங்களும், நம்பிக்கைகளும் வாழ்வின் நெறிமுறைகளும் தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றப்பட்டுத் தற்போதும் நடைமுறையில் கடைபிடிக்கப்பட்டு வருபவற்றை பண்பாடாகவே கொள்ளலாம். இக்கூற்றுக்கு உதாரணம் சுட்டும் வகையில் குறுந்தொகையில் அமைந்த பண்பாட்டுப் பதிவுகளை பட்டியலிட்டுக் காட்டியுள்ளேன். இப்பட்டியல் நீண்டிட்டால் குறுந்தொகையின் சிறப்பும் உயர்ந்திடும்.

*கட்டுரையாளர்: முனைவர் சீனு.தண்டபாணி, உதவிப்பேராசிரியர் - தமிழ்த்துறை, சாரதா கங்காதரன் கல்லூரி, வேல்ராம்பட்டு, புதுச்சேரி - 4