அறிஞர் அ.ந.கந்தசாமிவி.ரி,இளங்கோவன்ஈழத்து முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடிகளில் முதன்மையானவர், பல்துறை ஆற்றலாளர் அ. ந. கந்தசாமி. பத்திரிகைத்துறை ஜாம்பவான். எழுத்தாளர், கவிஞர். வீரகேசரி, தேசாபிமானி, சுதந்திரன், மற்றும் ஆங்கிலப் பத்திரிகைகளான ஒப்சேவர், ரிபுயூன் ஆகிய பத்திரிகைகளின் ஆசிரிய பீடங்களில் பணியாற்றியவர். இலங்கை அரசாங்கத் தகவற்பிரிவின் வெளியீடான 'ஸ்ரீ லங்கா"   என்ற இதழின் ஆசிரியராகவும் மொழிபெயர்ப்பாளராகவும்   பணியாற்றியுள்ளார். சிறுகதை, நாவல், கவிதை, நாடகம், விமர்சனம், மொழிபெயர்ப்பு,  பத்திரிகைத்துறை என யாவற்றிலும் தனக்கெனத் தனிமுத்திரை பதித்தவர்.

சிறந்த கவிதைகள் பலவற்றைப் படைத்துள்ளார். துறவியும் குஷ்டரோகியும், சத்திய தரிசனம், எதிர்காலச் சித்தன் பாட்டு என்பன அவரது பாராட்டுப்பெற்ற கவிதைகளில் சிலவாகும். கவீந்திரன் என்ற பெயரிலும் மற்றும் சில புனைபெயர்களிலும் சர்ச்சைக்குரிய கவிதைகளையும் பல கட்டுரைகளையும் அவர் எழுதியுள்ளார். புகழ்பெற்ற 'மதமாற்றம்" என்ற நாடகத்தைப் படைத்தளித்தவர். 'மனக்கண்" என்ற நாவலையும் எழுதியுள்ளார்.

தனது பதினேழாவது வயதில் 'ஈழகேசரி"ப் பத்திரிகையில் சிறுகதை எழுதியதின்மூலம் எழுத்துத்துறையில் நுழைந்தவர். பத்திரிகை ஆசிரியபீடங்களில் பணியாற்றிய காலத்தில் நாற்பது சிறுகதைகள் வரையில் படைத்துள்ளதாகத் தெரியவருகிறது. நள்ளிரவு, இரத்த உறவு, ஐந்தாவது சந்திப்பு என்பன குறிப்பிடத்தக்க சிறந்த கதைகளாகும்.

அன்று யாழ்ப்பாணத்தில் இளம் எழுத்தாளர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய முதலாவது எழுத்தாளர் அமைப்பெனக் குறிப்பிடப்படும் 'மறுமலர்ச்சிச் சங்கத்தில்" (1943) ஆரம்ப உறுப்பினர்களில் ஒருவராக இணைந்து செயற்பட்டவர். ஈழத்துச் சிறுகதை இலக்கிய வரலாற்றில் முற்போக்குச் சிந்தனையுடன் சிறுகதைகளைக் கலையழகுடன் படைத்தவர். முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடியாக, அறிஞராகக் கருதப்பட்டவர்.

அ.ந.கந்தசாமியின் வெற்றியின் இரகசியங்கள்

அவரது படைப்புகளில் மதமாற்றம் (நாடகம்), வெற்றியின் இரகசியங்கள் (உளவியல் நூல் - சென்னை பாரி பதிப்பக வெளியீடு - 1966) ஆகியவை மட்டுமே நூலுருவாக்கம் பெற்றுள்ளன. மதமாற்றம் நாடகம், பிரபல கலைஞர் லடீஸ் வீரமணி இயக்கத்தில் கொழும்பில் பலமுறை மேடையேற்றப்பட்டுப் பாராட்டுப் பெற்றது. பேராசிரியர் கைலாசபதி இதனை மிகச் சிறந்த நாடகமெனப் பாராட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராகவும் பணியாற்றித் தொழிலாளர் போராட்டங்களை முன்னெடுத்தவர். தொழிற்சங்க வேலைகள், பத்திரிகைப் பணி, கலை இலக்கியமென அர்ப்பணிப்புடன் இயங்கியவர். உற்ற நண்பர்களான 'பல்கலை வேந்தர்" சில்லையூர் செல்வராசன், செ. கணேசலிங்கன், கவிஞர் ஏ. இக்பால், லடீஸ் வீரமணி ஆகியோருடன் இணைந்து தலைநகரில் கலை இலக்கியப் பணிகளில் முனைப்புடன் ஈடுபட்டுழைத்தார்.

'மனக்கண்" நாவல் சில்லையூர் செல்வராசனால் நாடகமாகத் தயாரிக்கப்பட்டு இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகியது. பிரான்ஸ் எழுத்தாளர் எமிலி ஸோலாவின் 'நானா" நாவலைத் தமிழில் மொழிபெயர்த்துச் சுதந்திரன் பத்திரிகையில் வெளியிட்டார். இந்த மொழிபெயர்ப்பு நாவல் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

ஆங்கிலத்தில் வெளிவந்த சிறந்த பல படைப்புகளை மொழிபெயர்த்துள்ளார். ஆங்கில நூல்கள், திரைப்படங்கள் பலவற்றுக்கான விமர்சனக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். பண்டிதர் திருமலைராயர் என்ற புனைபெயரில் 'சிலப்பதிகாரம்" குறித்த கட்டுரைகள் எழுதினார். இக்கட்டுரைகள் இலக்கிய உலகில் சர்ச்சைக்குள்ளாகின. இக்கட்டுரைகளை ஈ. வே. ரா. பெரியார் தனது 'குடியரசு" பத்திரிகையில் மறுபிரசுரஞ்செய்து பாராட்டுத் தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பல படைப்புகளை அ. ந. கந்தசாமி எழுதியுள்ளதாக அறியப்பட்டபோதிலும் நாட்டிலேற்பட்ட அசாதாரண நிலைமைகளினால் அவற்றின் பிரதிகள் யாரிடமும் கைவசம் இல்லாமற் போனமை கவலைக்குரியது.

தொடர் நவீனம்: மனக்கண் - அ.ந.கந்தசாமி - 30ம் அத்தியாயம் : தந்தையின் தியாகம்

யாழ்ப்பாணத்தில் பிறந்த அ. ந. கந்தசாமி கொழும்பில்தான் தனது பணிகளை மேற்கொண்டார். முற்போக்கு இலக்கிய அணியின் முன்னோடியாகத் திகழ்ந்த அவர் 1968 -ம் ஆண்டு 44 -வது வயதில் சிந்திப்பதை நிறுத்திக்கொண்டமை மக்கள் கலை இலக்கியத்தை நேசிக்;கும் யாவரையும் ஆறாத்துயரத்தில் ஆழ்த்தியது. அவரது நாமம் ஈழத்து இலக்கிய வரலாற்றில் நீடித்து நிலைக்கும்..!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


 

[ * அறிஞர் அ.ந.கந்தசாமியின் கவிதைகள் அடங்கிய தொகுப்பு, நாவல் 'மனக்கண்' ஆகியவை தற்போது மின்னூல்களாக வெளிவந்துள்ளன. பதிவுகள்.காம் வெளியிட்டுள்ள இம்மின்னூல்களைத் தற்போது இணையக் காப்பகத்தில் வாசிக்கலாம். - பதிவுகள் -

https://archive.org/search.php?query=%E0%AE%85.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF ]