மு. தளையசிங்கத்தின் 'ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி' கட்டுரைத்தொடர் கண்டியிலிருந்து வெளியான 'செய்தி' பத்திரிகையில், 1964/65 காலப்பகுதியில் வெளியான தொடராகும். மு.த. அவர்கள் இத்தொடருக்கு, 'ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி: அவசரக் குறிப்புகள்' என்றுதான் தலைப்பிட்டிருந்தார். இத்தொடர் வெளிவந்துகொண்டிருந்தபோதே, 'என்ன அவசரம்?' என்ற தலைப்பில், ப.வயிரவன் 2, 3 இதழ்களில் இக்கட்டுரைத்தொடரை விமர்சித்து எழுதியிருந்தார். கே.எஸ்.சிவகுமாரன், 'ஒரு விமர்சகரின் இலக்கியப் பார்வை' என்ற தனது நூலில், மெய்யியலாளர் காசிநாதன் அவர்களே வயிரவன் என்ற பெயரில் விமர்சனங்கள் எழுதிவந்தார் என்று குறிப்பிடுகிறார்.

இந்நூல் ‘க்ரியா’ வெளியீடாக வெளிவருவதற்கான இறுதி வேலைகள் முற்றுப்பெற்றுவிட்ட நிலையில், 'ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி என்று போட்டிருக்கிறீர்கள். எந்த ஏழாண்டுகள்?' என்று ராமகிருஷ்ணனிடம் கேட்டபோதுதான், அவர் அந்நூலின் உட்பக்கத்  தலைப்பில், 1956-1963 என்ற ஆண்டு விபரத்தைச் சேர்த்து, முக்கிய அம்சமொன்றினைச் சுட்டிக்காட்டியதற்கு எனக்கு நன்றியும் தெரிவித்தார்.

மு.த.வின் 'போர்ப்பறை', ‘புதுயுகம் பிறக்கிறது', ‘கலைஞனின் தாகம்', 'மெய்யுள்', 'ஒரு தனி வீடு' ஆகிய நூல்களையும் கோவை சமுதாயம் பிரசுராலயம் மூலமாகத் தமிழகத்தில் வெளியிட்டுவைத்த பெருமை பத்மநாப ஐயரையே  சாரும்.  பத்மநாப ஐயரின் தன்னலமற்ற முயற்சிகள் பெரும் பாராட்டிற்குரியன.

'ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி’ நூலில் தன்னைப் பற்றித் தவறாக மு.த. எழுதியிருப்பதாகவும், இந்நூலைப் பிரசுரித்தால், ‘க்ரியா’மீது தான் வழக்குப்போடுவேன் என்று தர்மு சிவராமு அவர்கள் க்ரியா ராமகிருஷ்ணனுக்கு எழுதிய கடிதத்தை, ராமகிருஷ்ணன் பொருட்படுத்தவில்லை.     .  

மு.த.வின் இந்த இலக்கியத்தொடரின் பெருமளவு கட்டுரைச் சேகரங்களை உதவிய மு.புஷ்பராஜனைப் பற்றி இந்நூலில் ஒரு குறிப்பும் இல்லை. சில இதழ்களைத்  தேடி உதவிய விக்னேஸ்வரனுக்கும், நான்கு நாட்கள் மூலப் பிரதியைப் பார்வையிட்டு உதவிய ஜீவகாருண்யத்திற்கும் நன்றி தெரிவித்த பெருந்தன்மை, புஷ்பராஜன் விஷயத்தில் ஏன் காட்டப்படவில்லை என்று தெரியவில்லை.  மூலப் பிரதியிலிருந்து இந்நூல் தொகுக்கப்பட்டபோது, மூலப் பிரதியின் சில குறிப்புகள் நீக்கப்பட்டிருக்கின்றன.

கே.எஸ். சிவகுமாரன், தனது 'ஒரு விமர்சகரின் இலக்கியப் பார்வை' என்ற நூலின் 22ஆம்  பக்கத்தில் பின்வருமாறு எழுதுகிறார்:

"...'மு.தளையசிங்கம் 'ஏழாண்டுகால இலக்கிய வளர்ச்சி – அவசரக் குறிப்புகளை' எழுதினார். இக்கட்டுரை தொகுப்பாகப் பின்னர் வெளிவந்தபோது, தளையசிங்கம் என்னைப் பற்றிச் சாதகமாக எழுதியிருந்த சில பகுதிகளைத் தொகுப்பில் வேண்டுமென்றே சேர்த்துக் கொள்ளவில்லை. அதேபோல் மு.த. தனது வீரகேசரிக் கட்டுரை (வெட்டுமுகம்) ஒன்றிலே என்னைப் பற்றி எழுதிய 'நல்வார்த்தைகளை' வீரகேசரியின்  உதவி ஆசிரியராகவிருந்த ஒருவர் வெட்டிவிட்டு, மிஞ்சியதைப் பிரசுரித்திருந்தார். அங்கும் 'இருட்டடிப்பு' நிகழ்ந்தது. இந்த விதமான அயோக்கியத்தனங்கள் 'விமர்சனம்' ஆகக் கருதப்பட்டன.'

கே.எஸ்.சிவகுமாரன் முன்வைக்கும்  இக்குற்றச்சாட்டிற்கு இந்நூலின் தொகுப்பாளர்கள் பதிலளிக்க வேண்டிய தார்மீகக் கடப்பாடு உள்ளது என்றே நான் கருதுகிறேன்.                          

2

தாழ்த்தப்பட்ட மக்களுக்காக, மு.த. கிணறு வெட்டிய சம்பவத்தில், அவர் சார்ந்த ஆதிக்க சாதியினர் போலிசுக்குக் காசு கொடுத்து மு.த.வைத் தாக்கிய விவகாரத்தை டொமினிக் ஜீவா அவர்கள் ‘மல்லிகை’யில் குறிப்பிடவில்லை என்ற குற்றச்சாட்டு ஒருபுறம்; அதற்கு கைலாசபதி மேல் ஜீவாவிற்கு இருந்த அச்சம் என்ற 'விமர்சனம்' ஒரு புறம்.

கவிஞர் இ.முருகையன் அவர்கள்  ஒரு சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டிருப்பதுபோல, ' மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா அடிக்கடி வற்புறுத்தி வந்ததுபோல, இலக்கிய எழுச்சியினால் உந்தப்படும் வயிரம்பாய்ந்த ஒரு பண்பாட்டியக்கமே மல்லிகையின் பிரதான பணியாக இருந்துள்ளது.' சாதியப் போராட்டம் என்பதை அவர் அரசியல் களத்திலே எதிர்கொண்டார்: மல்லிகையை அவர் முற்றாக இலக்கியப் பத்திரிகையாகவே கொணர்ந்திருக்கிறார். ஆக, வில்லூன்றி மயானம் பற்றி அ.ந.கந்தசாமி அவர்கள்  எழுதிய கட்டுரை ஒன்றே சாதிய ஒடுக்குமுறைசார்ந்த கட்டுரையாகக் காணக்கிடக்கிறது. வடபுலத்து சாதிய எதிர்ப்புப் போராட்டங்கள் சீனச் சார்பு கம்யூனிச இயக்கத்தாலேயே முன்னெடுக்கப்பட்டதால், சீன - சோவியத் கட்சி முரண்பாடுகளும் இதில் சார்புநிலை எடுக்கக் காரணமாகவிருக்கலாம்.

யாழ்ப்பாணத்தில் போர்க்கோலம் கொண்ட 1966 அக்டோபர் 21 போராட்டம் பற்றியோ, 1967 தேநீர்க்கடைப் பிரவேசம் பற்றியோ, கன்பொல்லைக் கிராமம் ஆதிக்க சாதியினரால் மாதக்கணக்கில் சுற்றி வளைக்கப்பட்டது பற்றியோ, 1974இல் சங்கானையில் நல்லப்பு என்ற போராளி பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்படது பற்றியோ, 1978இல் கொடிகாமத்தில் கள் இறக்கத் தென்னைமரத்தில் ஏறிய நிலையில், தென்னைமரத்தைத் தறித்து, மரத்திலிருந்து விழுந்தவரைக்  கோடரியால் வெட்டிக்கொன்றதைப்  பற்றியோ, 1982இல் புன்னாலைக் கட்டுவன் ஈவினைக் கிராமத்தில்  C.T.B. பஸ் சாரதி வெள்ளையன் அண்ணாசாமி ஆதிக்க சாதியினரால் வெட்டிக்கொலை செய்யப்பட்டது பற்றியோ மல்லிகை எந்தக் குறிப்பையும் பதிவு செய்யவில்லை. ஜீவா இதற்காக அந்த ஒடுக்குமுறை குறித்து மௌனம் சாதித்தார் என்பதல்ல; அவர் அதனை அரசியல் இயக்கச் செயற்பாட்டில் இனம் கண்டார் என்பதே பொருந்தும்.

பொலீஸ் நிலையங்களின் ஆதிக்க சாதிக் காவலர்களால்  தாழ்த்தப்பட்ட சாதியினர் காவல் நிலையங்களில் மிருகத்தனமாக, யாரும் காசு கொடுக்காமலே தாக்கப்பட்டிருக்கிறார்கள். தாறுமாறாக, கை வேறு, கால் வேறாகத் துண்டுதுண்டாக அந்தப் போராளிகள் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளனர். ஆதிக்க சாதியினர் இப்போராளிகள் இருளில் வீடு திரும்பும் நேரத்தில் மறைந்திருந்து, சூழ்ந்து வெட்டிக்கொன்றிருக்கிறார்கள். பொலீசார் இவர்களைச் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். இவ்வளவு நடந்தேறியிருக்கிறது.

1966இல் யாழ்ப்பாணத்தில் ஒரு கிராமத்தில் குடிநீர் வசதி ஆதிக்கசாதியினர் குடிமனைகளோடு நிறுத்தப்பட்டபோது, அது தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருப்பிற்கும் விஸ்தரிக்கப்பட வேண்டும் என்று கம்யூனிஸ்ட் இயக்கம் மக்களோடு இணைந்து, தொடர்ந்து நடத்திய போராட்டம் வெற்றி கண்டது.

யாழ்ப்பாணத்தில் சமபந்தி போசனம், பாடசாலை அனுமதி, ஆலயங்களைத் திறந்துவிடுதல், சாதிபேதம் பாராமை போன்ற விவகாரங்களில் முற்போக்காக நடந்த ஆதிக்க சாதியினர் எண்ணற்றோர். அது காலம் பூராவும் நடந்து வந்திருக்கிறது. அதில் அவர்கள் தத்தம் சமூகத்தில் பெரும் எதிர்ப்பினைச் சந்தித்திருக்கவும்கூடும். அவர்களின் இந்நடவடிக்கைகள் என்றும் மக்கள் மனதில் கௌரவமாகப் போற்றப்படும்.

தளையசிங்கம் அவர்கள் நன்னோக்கத்துடன், தனது ஊரில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகச் சாத்வீகரீதியில் கிணறு வெட்ட முயன்றபோது, அவரது சாதியினரே பொலீசுக்கு காசு கொடுத்து, அவரை ஸ்டேஷனில் தாக்கி, அவருக்குப் பாடம்படிப்பிக்க முயன்றுள்ளனர். தளையசிங்கம் அவர்கள் தாக்கப்பட்ட செய்தி கேட்டு, அந்த மெல்லிய, ஒல்லி மனிதருக்காக மனம் கசியாத இலக்கிய உள்ளங்கள் இல்லை என்பேன். கொடூரமான பொலீஸ் வன்முறைக்கு அவர்  உள்ளாகியிருக்கும் பட்சத்தில், உரிய மருத்துவச் சான்றிதழ் பெற்று, அமைதிமுறையில் அவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர என்ன தடை இருந்தது என்று தெரியவில்லை. அதுவும் ஒரு அடக்குமுறைக்கு எதிரான சட்டவழிப் போராட்டமே. பொலீஸ் தாக்குதலுக்குப் பின் அவர் எத்தகைய மருத்துவ சிகிச்சை மேற்கொண்டார்? அவருக்கு வேறு உடல் உபாதைகள் இருந்தனவா?  தாக்குதல் நடந்து இரண்டு ஆண்டுகளின் பின்னர் தளையசிங்கம் அவர்கள் மரணமடைந்துள்ளார். இடையில் அவரைச் சென்று பார்த்தவர்கள், அவர் நிலையை உணர்ந்திருந்தனரா? அவர் இறப்பதற்கு முன், கொழும்பில் பூரணி வெளியீட்டு நிகழ்வில் மு.த. வைப் பார்த்தபோது, அவர் இயல்பான நிலையில் இருந்ததாகவே எனக்கு அப்போது தோன்றியது என்று நினைக்கிறேன். ஏனெனில், மு.த. மறைவுச் செய்தி கேட்டபோது, நான் அதிர்ந்துபோனேன். அப்பெருமகனுக்கு எங்கள் அஞ்சலிகள் என்றும் உரியன.

யாழ்ப்பாணத்தில் ஆதிக்க சாதியினரின் கொடிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள் குருதியில் நனைந்தவை. அமரர் தங்கவடிவேல் அவர்கள் தாங்கள் மேற்கொண்ட போராட்டங்களை எனக்கு நிறைய விவரித்திருக்கிறார். நெல்லியடியில் தேநீர்க்கடைப் பிரவேசத்தில் அவர் கலந்துகொண்டது குறித்து நான் அவரிடம் நிறையக் கேட்டிருக்கிறேன். எத்தனை மணிக்கு அந்த தேநீர்க்கடைக்குள் நுழைந்தார்கள்? எத்தனை பேர்? போனதும் எப்படி தேநீருக்கு ஓடர் கொடுக்கிறார்கள்? தேநீர்க் கடைக்காரர் என்னென்ன பதில்கள் தந்தார்? அதனை  இவர்கள் எவ்வாறு எதிர்கொண்டனர்? என்பன  பற்றி அவர் கூறிய செய்திகள் சரித்திரத்திற்குரியவை. தங்கவடிவேல் மாஸ்டர் எப்போதும் சொல்வார்: நீங்கள் அடித்தால் நாங்கள் திருப்பி அடிப்போம்!

இந்த நீண்ட ரத்தம் சிந்தும் போராட்டத்தை எல்லாம் விட்டுவிட்டு,   மு.த. நடத்திய போராட்டத்தை ஜீவா ஏன் தனது பத்திரிகையில் எழுதவில்லை என்று குறைப்படுவதில் என்ன நியாயம்?  யாழ்ப்பாணத்தில் கம்யூனிஸ்டுகள் நடத்திய சாதியத்திற்கெதிரான போராட்டத்தை மு.த. தொடர்ந்து பதிவிட்டு வந்தாரா? என்று யாரும் கேள்வி எழுப்பலாம்.

நிலை இவ்வாறிருக்க, கைலாசபதி அவர்கள் இங்கே எப்படி வந்து சேர்கிறார்? மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடுவது என்பது இதுதான். ஜீவாவையும் இழிவுபடுத்தி, கைலாசபதிக்கும் அவதூறு சேர்க்கும் குயுக்தி இது. இம்மாதிரிப் பேர்வழிகள் தம்மை விமர்சகர், எழுத்தாளர் என்று பெயர் சொல்லிக்கொள்ள வெட்கப் படுவதில்லை.    'ஜீவாவிற்கு கைலாசபதி மேல் இருந்தது அச்சம் என்ற 'விமர்சனத்தை' முன்வைக்கிறார்களாம். அதற்கு வெட்டித் திண்ணைப் பேச்சு மேற்கோள்கள்! இந்தத் திண்ணைப் பேச்சாளர்கள் மு.த. என்ற ஆளுமைக்கும் கேடு விளைவிக்கிறார்கள்.

3

அடுத்தது, மு.த. எழுதியுள்ள 'முற்போக்கு இலக்கியம்' என்ற நூல். இலங்கையில் முற்போக்கு இலக்கியம் என்பது முற்போக்கு எழுத்தாளர் இயக்கத்தால் வளர்த்தெடுக்கப்பட்ட இலக்கியச் செல்நெறி. இலங்கையின் இந்த முற்போக்கு இலக்கியப் போக்கிற்கு ஆதர்சமாக அமைந்தது இந்திய முற்போக்கு எழுத்தாளர் இயக்கமாகும். இந்திய பிரிவினைக்கு முன், லண்டனில் 1935இல்  இந்திய முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் ஏகாதிபத்திய எதிர்ப்பியக்கமாய், இடதுசாரி அணியாய், சோசலிசம் சுரண்டல் அமைப்பை முடிவுக்குக் கொண்டுவரும் தத்துவம் என்று உறுதிபூண்ட எழுத்தாளர்களின் பேரமைப்பாக உருவானது. உருதுவிலும் ஹிந்தியிலும் எழுந்த பெரும் நவீன இலக்கியங்கள் இந்த முகாமிலிருந்தே எழுந்தன. முல்க் ராஜ் ஆனந்த், பிரேம் சந்த், சஜாத் சாஹிர், இஸ்மத் சுக்காய், சதாத் ஹசன் மண்டோ போன்ற எண்ணற்ற மகத்தான எழுத்தாளர்கள் இந்த இயக்கத்திற்கு வலிமை சேர்த்தனர். தாகூர், நேரு போன்றோர் இதற்கு ஆதரவு நல்கினர். சுதந்திரத்திற்குப் பின்னர், அதிலும் 1964இல் சர்வதேச கம்யூனிச இயக்கத்தில் ஏற்பட்ட பிளவு இந்திய முற்போக்கு எழுத்தாளர் இயக்கத்தை வெகுவாகப் பலவீனப்படுத்தியது.

1947இல் முல்க் ராஜ் ஆனந்த் இலங்கைக்கு வந்திருந்தபோது, கே.கணேஷின் பெருமுயற்சியில், விபுலானந்த அடிகளைத் தலைவராகவும், மார்ட்டின் விக்ரமசிங்கவை உப தலைவராகவும், கே.கணேஷ், சரத் சந்த்ர ஆகியோரைச் செயலாளர்களாகவும் கொண்டு இலங்கை எழுத்தாளர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், இந்த சங்கம் நன்கு செயற்படவில்லை. இதன் தொடர்ச்சி போன்று, 7 ஆண்டுகளின் பின், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டு, 1957இல் இச்சங்கத்தின்  முதல் மாநாடு கொழும்பில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் கேரளாவிலிருந்து பொற்றேகாட், புதுச்சேரியிலிருந்து டாக்டர் ரங்கநாதன், சோவியத்திலிருந்து அலெக்சி சுர்கேவ், தென் அமெரிக்காவிலிருந்து பாப்லா நெரூடா, ருமேனியாவிலிருந்து பொக்ஸா, சீனாவிலிருந்து யஸ்ஸூ போன்ற எழுத்தாளர்கள் கலந்துகொண்டிருந்தனர். சமூகநீதி கோரிய இந்த இயக்கம், ஈழத்து எழுத்தாளர்களை மிகப் பரந்த அளவில் அணி திரட்டியது. காலாவதியாகிப்போன கருத்தாடல்களுக்கு விடைகொடுத்து, புதிய இலக்குகளை நோக்கி நகர்ந்த இயக்கம் இது.

இந்த இயக்கத்தில் முகிழ்த்த எழுத்தாளர்கள் ஈழத்து இலக்கிய வானில் தனி நட்சத்திரங்களாக மிளிர்ந்துள்ளனர். கே.டானியல் இன்று தலித் இலக்கியத்தின் பிதாமகனாகத் தமிழகத்தில் மதிக்கப்படுகிறார். குறைந்த பட்சம் முற்போக்கு இலக்கியச் செல்நெறியில் வளர்ந்த  ஐம்பது பிரபல எழுத்தாளர்களை நாம் இனங்காண முடியும்.

இந்த முற்போக்கு இலக்கியப்  போக்கிற்கு எதிராகப் பேராசிரியர் ஆ.சதாசிவம், பண்டிதர் இளமுருகனார், எவ். எக்ஸ். சி. நடராசா, சோ. நடராசா போன்றோர் செயற்பட்டனர். சாகித்திய மண்டல பரிசில் பெற்ற டொமினிக் ஜீவாவின் 'தண்ணீரும் கண்ணீரும்' நூலை வழுக்கள்  நிறைந்தது என்று வரிக்கு வரி சிவப்புக் கோடிட்டு சாகித்ய மண்டல சபைக்குப் புகார் அனுப்பிய புண்ணியவான்   பண்டிதர் இளமுருகனார். இம்மாதிரி அணி, புதிய இலக்கிய எழுச்சியை இழிவாக நோக்கியது எனின், இதே பணியினை வேறொரு தளத்தில் நின்று செயற்படுத்தியவர்களில் மு.தளையசிங்கம் முக்கியம் பெறுகிறார். 'சமய, தத்துவச் சிந்தனைகளில் வயப்பட்டு, இலட்சியக் கனவுத் தீர்க்க தரிசன வாக்குகளை அருளும் நவீன சித்தராகத் திகழ்ந்தவர் தளையசிங்கம்' என்று மு.த.வை மதிப்பிடுகிறார் முருகையன்.

'பரிசுகள் வெல்வது வேறு விஷயம், அவற்றால் இலக்கிய வளர்ச்சியில் புதிய உச்சங்களைத் தொட்டுவிட்டோம் என்ற அர்த்தமில்லை' என்று ஜீவா பெற்ற சாகித்ய மண்டலப் பரிசுக்கு விளக்கம் கொடுக்கிறார் மு.த. ஜீவா உச்சத்தைத் தொட்டுவிட்டார் என்றெல்லாம் யாரும் கூறவில்லை. இது இளமுருகனாரின் இன்னொரு குரல்.

'முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்ற கூட்டும், முற்போக்கு என்ற விளம்பரமும் நான் முன்பு சொன்ன தனிப்பட்ட எழுத்தாளரின் பலவீனத்தையும், எழுதப்படும் சரக்கின் போலித் தன்மையையும், குறுகிய நோக்கையும் மறைக்கும் சாதனங்களே' என்று ஏகதேசமாக, கிட்டத்தட்ட மு.த. எழுதிய அதே காலகட்டத்தில் ஈழத்து இலக்கியத்தில் இயங்கிய மிகப்பெரும் எழுத்தாள அணியை அவர் ஈஸியாகப் புறந்தள்ளுகிறார். சனாதனப்  பண்டித மரபினர் சாதிக்க முடியாததை மு.த. சாதிக்கப் பார்த்திருக்கிறார். மு.த. வெறுத்தொதுக்க முனையும் எழுத்தியக்கத்தை நீங்கள் வரலாற்றிலிருந்து நீக்கிவிட்டால் அங்கு மிஞ்சுவது எதுவுமில்லை.

1972ஆம் ஆண்டு இலங்கையின் ஐக்கிய முன்னணி அரசாங்கம் கொண்டுவந்த புதிய கல்வித் திட்டத்தை ஆதரித்து, 'உலகப் பரிமாணப் பிரச்சனைகளும் நமது புதிய கல்வித் திட்டமும்' என்று மு.த. பூரணி இதழில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். மு.த.வின் இக்கட்டுரை குறித்து நான் பூரணி வெளியீட்டு நிகழ்வில் முன்வைத்த விமர்சனத்தை மு.த. கருத்தூன்றிக் கேட்டார். Regis  Debrayயின் Revolution in the Revolution நூலை அவர் ஆதார நூலாகக் குறித்ததை முன்னிட்டு, அந்நூல் குறித்தும் நான் பேசியதை இன்றும் என்னால் நினைவுகூர முடிகிறது.

அரவிந்தரை ஆராதிக்கும் மு.த. அக்கட்டுரையில் பின்வருமாறு எழுதுகிறார்:

"விண்வெளி யாத்திரைக்குப் பயிற்சி பெரும் வீரர்களைவிட, புதுச்சேரியிலுள்ள 'அரோவில்' கிராமத்தில், புதுயுகப் பரிணாமத்துக்காகப் பயிற்சிபெறும் பேர்மனித சாதகர்கள் முக்கியமானவர்கள் என்பது எனது கருத்தாகும். அவர்களது சாதனையின் எல்லைகளை ஒரு முழு நாடளவிலும், புதிய பரம்பரையின் முழு வாழ்க்கை அளவிலும் அறிமுகப்படுத்த வாய்ப்பளிக்கும் புதிய கல்வித் திட்டத்தின் முக்கியத்துவத்தை ஆராய்வதே இக்கட்டுரையின் ஒரு நோக்கம்" என்றெழுதுகிறார். அக்கல்வித் திட்டம் புதுயுகப் பரிமாணத்தின் சின்னத் துகளைக்கூடத் தொடவில்லை என்பதை அறிய, மு.த. உயிருடன் இல்லாமல்போனது துரதிர்ஷ்டம். ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் புதிய கல்வித் திட்டத்தில் எல்லையற்ற நம்பிக்கை கொண்டிருந்த மு.த., அந்த நம்பிக்கையின் ஒரு சின்னப் பின்னத்தையாவது முற்போக்கு இலக்கியத்திலும் வைத்திருக்கலாம்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.