- தற்போது முகநூலில், பதிவுகளில் இடம் பெறும் எழுத்தாளர் மு.தளையசிங்கம் பற்றிய விவாதங்களில் இடம் பெறும் கருத்துகளையிட்டு , எழுத்தாளர் நந்தினி சேவியர் தனது கருத்துகளை அனுப்பி வைத்துள்ளார். அவற்றையும் இங்கு பகிர்கின்றோம். - பதிவுகள் -


1966 அக். 21 ல் சாதி அமைப்பு தகரட்டும் சமத்துவ நீதி ஓங்கட்டும் எனும் கோசத்துடன் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஆர்த்தெழுந்த மக்கள் பேரணி தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கமாக சகல விளிம்பு நிலை மக்களுடைய இயக்கமாக பரிணமித்தது. அதன் பின்னணியில் சீன சார்பு கம்யூனிஸ்ட் கட்சி. சாதி ஆணவத்திற்கு எதிரராக நின்றமையால் ஆதிக்க சாதிவெறியர்களாலும், அவர்களது காவல் நாய்களாலும் தாக்கப்பட்ட, அடைக்கப் பட்ட எண்ணிறைந்தவர்களை என்னால் அடையாளப்படுத்தப்பட முடியும். நான் மு.தளையசிங்கத்தை கொச்சைப்படுத்த இதனை எழுதவில்லை அவரது பணியை வரவேற்கிறேன். ஆனால்  அவரை அவரது செயலை விதந்து பேசுவோர்களது அரசியல் உள் நோக்கம் என்ன.? நான் கூறப்போகும் இரண்டு விசயங்கள் உங்களுக்கு தெரியாதது என சாட்டுச் சொன்னாலும். மு.தளையசிங்கம் இதனை கண்டு கொள்ளவில்லை என்பது எனது குற்றச்சாட்டு.

1.  நிச்சாமப் போராட்டம் பற்றி  உலகமே அறியும். மாவிட்டபுரம், பன்றித்தலைச்சி   ஆலயப்பிரவேசப் போராட்டம் பற்றி    மட்டுவில், மந்துவில், கன்பொல்லை சாதி  எதிர்ப்பு நடவடிக்கைககள்பற்றி  தளையசிங்கம் அறியாததல்ல.  அதுபற்றி அவர் ஏன் எழுதவில்லை..?

2.  மான் முத்தையா எனும் சங்கானையைச் சேர்ந்தவர். ஒருகாலம் சங்கானை நகரசபைச் சேர்மனாக இருந்தவர். பஞ்சமர்  சமுகத்தைச் சேராதவர்.  நிச்சாம.  ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாக நின்றமையால் தனது சமுகத்தவர்களால் பொலிசில்  காட்டிக்கொடுக்கப்பட்டு  சித்திரவதை செய்யப்பட்டு, சிறுநீர் பருக்கப்பட்டு கொடூரத்தை அனுபவித்த வரலாறு உண்டு. இதனை இந்தப் பிரபஞ்சயதார்த்தவாதியை சிலாகிக்கும்  பிரமுகர்கள் அறியவில்லையா, மு.த கூட அறியவில்லையா.?

3. வடபிரதேசம் எங்கும் அறியப்பட்ட.   இப்படியான பல விடையங்களுண்டு. அவற்றில் பல செய்திப் பத்திரிகைகளில் வெளி வந்ததும் உண்டு. டானியல்  தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்க அமைப்பாளர்களில் ஒருவர். மு.த போல எழுத்தாளர். அவர்  71 ம் ஆண்டு ஏப்ரில் கலவரத்தின் பின் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கக்காரர் என்ற காரணத்திற்காக 11 மாதங்கள்  தடுப்புக் காவலில் வைக்கப் பட்டிருந்தாரே.  இதுபற்றி மு.த எங்காவது எழுதியிருக்கிறாரா என்றால்.. இல்லை.  'ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி' எழுதி முற்போக்காளர்களை  கண்டித்த இவரது நேர்மை கேள்விக்கு உட்படுத்தப்படவேண்டியது. இவர் தண்ணீர்  பிரச்சனைக்காக பாதிப்புற்ற சம்பவத்தை  தனது பஞ்சமர் நாவல் பிற்குறிப்பில்  டானியல்  தெரிவித்திருந்தார் என்பது பகிரங்கம்.

மேற்படி தகவல்கள் நானறிந்தவை. ஆனால்தான் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டதை எவ்விடத்திலும் டானியல்  தெரிவிக்கவில்லை  ( 'என் கதை' உட்பட.  அதை பெருமைக்குரியதாக அவர்  கருதவில்லை. நான் கூட இங்கு அதைப் பெருமைப்பட கூறவில்லை. தோழர் மான் முத்தையா இன்று மரணித்துவிட்டார். நிச்சயமாக தாக்குதலுக்கு உட்பட்ட காரணத்தால்  அவர் மரணிக்கவில்லை, டானியலும்  கூட. அவர்கள் கம்யூனிச சித்தாந்தை ஏற்றுக்கொண்டவர்கள்.

நவமார்க்சியமும்!, பிரபஞ்ச யதார்த்தவாதமும்!!
மார்க்சியத்தை கேள்விக்கு உட்படுத்த பலர் சென்ற நூற்றாண்டில் முயன்றனர். பிராங்போட் மார்க்சியர்கள் எனப்படுவோர் அதில் முக்கியமானவர்கள், அல்தூசர்,  அன்ரனியோ கிராம்சி, சத்தார் என. சில பெயர்களை வரிசைப்படுத்தலாம். லெனின்,.லெனிசத்தின்  ஸ்தாபகர், அவர் மார்சிசத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தினார். அவரின் தொடர்ச்சியே ஸ்டாலின். அடுத்த கட்டமே மா.ஓ விசம். லெனின்,  ஸ்டாலின்,  மா.ஓ. போன்றவர்கள் மார்சிசத்தை கேள்விக்குட்படுத்தவில்லை. தமிழில் மார்க்சிசத்தை மேலை மார்க்சியம், கீழை மார்க்சியம் என பிரித்தவர்களில் எஸ்.என். நாகராஜன், கோவை ஞானி என்பவர்கள் முக்கியமானவர்கள். இவர்களின் பிரிப்பு இவர்களின் மரணத்துடன் காலாவதியாகிவிட்டது. நவ மார்க்சியமும் இப்போது பேசாப்பொருளாகிவிட்டது.

மூலதனமும், கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கையும், கார்ல்மாக்ஸ் ஏங்கல்ஸ் படைப்புகளும், லெனின் ஸ்டாலின் மா.ஓ படைப்புகளும் தமிழில் வருடாவருடம் தமிழில் அச்சிடப்படுகின்றன வாசிக்கப்படுகின்றன. ஆனால் மு.த வை யார் தூக்குகிறார்கள். மார்க்சிய விரோதிகளும் சாதி அணவம் நிறைந்த. மேட்டுக்குடிசிந்தனையாளர்களும் அவர்களது வழித்தோன்றல்களுமே. மு.தவை நாம் வாசிக்கிறோம். இவர்கள் வாசிப்பதில்லை. நுனிப்புல் மேய்கிறார்கள் வேறுயாரோ சொன்னதைஒப்புவிக்கிறார்கள். நாம் மு.தவை முழுமையாக வாசித்துள்ளோம். வாசித்து அவரது கருத்துக்களை மறுதலிக்கிறோம். எளிதாகக் கடந்து போகிறோம். பயந்தல்ல பயனற்றதென உணர்கிறோம். அதற்கானவியாக்கியானம். மறுமொழி அவரை கடந்து போதலே அங்கீகரிக்காமையே.

மு.த. வின் பிரபஞ்ச யாதார்த்தவாதமும் மார்க்சியத்தைக் கடந்த சிந்தனையென கூறப்பட்டது. அதுவும்  அர்த்தமற்றதென இலங்கையில் நிராகரிக்கப்பட்டது. மார்க்சிய விரோதிகளால் தமிழகத்திற்கு வலிந்து எடுத்துச்செல்லப்பட்ட மு.த. சு.ரா. ஜெயமோகனால் பெரிதாகப்பேசப்படுவது மார்க்சிய விரோதம் தவிர வேறு எதுவித காரணமுமில்லை. மு.தவையும் தெரியாத, மார்க்சியத்தையும் தெரியாத சிலர் மு.த வை தூக்கி அவரைச் சிலாகிப்பது மார்க்சிய விரோதமும்,  சாதிய அகம்பாவமும் தவிர வேறு ஒன்றுமல்ல. முந்தநாள் பெய்த மழைக்கு நேற்று முளைத்த காளான்களுக்கு நாம் போர்ப்பறை வந்த காலத்திலேயே மு.த வை கேள்விக்கு உட்படுத்திய வரலாறு தெரிந்திருக்க நியாயம் இல்லை. விரல் விட்டு எண்ணக்கூடிய மு.த. உபாசகர்களே அவரை முன்னிறுத்த எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

பாவம் மு.த மார்க்சியத்தைக்கடந்து நந்த கோபால கிரியிடம் தீட்சை பெற்று ஆன்மீகவாதியாகியமை மார்க்சியத்தின் எந்தக் கண்ணியைக்கடந்தவை என்பதை யாரிடம் கேட்பது. மதத்தை போதிப்பவை ஆன்மீகம். மதம் மக்களிற்கு அபினி என்றவர் மார்க்ஸ். அப்படியாயின் மார்க்சியவாதியாக எப்படி மு.தவை ஏற்பது. மார்க்சியத்தை, மார்க்சியவாதிகளை எதிர்ப்பது மார்க்சியத்தை கடந்து போதலா.? அவரினை தூக்குபவர்களிடம் இந்தக்கேள்விக்கான பதில் இல்லை. காரணம், அவர்களுக்கு பிரபஞ்ச யதார்த்தமும் தெரியாது மார்க்சியமும் தெரியாது. இவரது இந்த தத்துவக் கோட்பாட்டுடன் இணைந்து இருந்தவர்கள். மு.பொ. சு.வி. ஜீவகாருண்யன், என்.கே.மகாலிங்கம். இன்னும்சிலர். ஆனால் ஒடுக்ப்பட்ட சமூகத்தவர் எவரையும் நான் அடையாளம் காணவில்லை. எஸ்.பொ.வுக்கும் இவருக்கும்கூட உடன்பாடு இருந்ததில்லை. அவர் நற்போக்குக்காரர். தமிழருக்கு தீர்வு என 'ஒரு தனி வீடு' எழுதிய மு.த. முஸ்லீம்கள், மலையக தமிழர்கள் பற்றி என்ன நிலைப்பாடு கொண்டிருந்தார்?  உங்களுக்குத் தெரியுமா.