அறுபதுகளின் முற்பகுதி..

யாழ்ப்பாணத்தில், இன்றைய நவீன சந்தைக் கட்டிடம் அன்று இருக்கவில்லை. அந்த இடத்தில் பஸ் நிலையம் பரந்த பரப்பளவில் விசாலமாக அமைந்திருந்தது. அதன் மேற்குத் திசையில் கஸ்தூரியார் வீதித் தொடக்கத்தில் 'பூபாலசிங்கம் புத்தகசாலை.'
இங்குதான் அதிகமான இலக்கியவாதிகள், ஆசிரியர்கள், அரசியல் பிரமுகர்கள் சந்தித்துக்கொள்வார்கள். தமிழகத்திலிருந்து வரும் மார்க்ஸிச நூல்கள், சஞ்சிகைகள், இலங்கையில் வெளியாகும் இலக்கிய நூல்கள், மார்க்ஸிச ஏடுகள் என்பன இங்கு கிடைக்கும். ஆஸ்பத்திரி வீதியில் 'தம்பித்துரை புத்தகசாலை.' இவர்கள் தான் குமுதம், ஆனந்த விகடன் சஞ்சிகைகளின் விநியோகஸ்தர்கள். கே. கே. எஸ். வீதியில் 'தமிழ்ப்பண்ணை' புத்தகசாலை இருந்தது. இங்கு தமிழகத்தில் வெளியாகும் திராவிடக் கழக, திராவிட முன்னேற்றக் கழகப் பிரமுகர்களின் நூல்கள், பத்திரிகைகள் கிடைக்கும். இந்தப் புத்தகசாலைகள் யாவற்றுக்கும் என் பாடசாலைக் காலத்திலேயே எனது மூத்த சகோதரர் நாவேந்தனுடன் சென்றுள்ளேன். அந்தக் காலத்தில், உயர்ந்த உருவத்தில், தூய வெள்ளை 'நாசனல்' உடையில், அங்கெல்லாம் வந்துபோன மனிதன் தான் இ. நாகராஜன் என அண்ணரிடம் கேட்டு அறிந்துள்ளேன்.

அண்ணரின் நண்பரான அவரைப், பின்னர் காணும்போதெல்லாம் ஒருசில நிமிடங்கள் அவருடன் பேசிக்கொள்வேன். இனிமையாகப் பேசும் நல்ல மனிதனாகக் காணப்பட்டார். அவர் மரபுக் கவிஞர். சிறுகதை, நாவல், குறுநாவல், காவியங்கள் பல படைத்தவர். மலையகத்தில் பார்த்துவந்த ஆசிரியர் வேலையைத் துறந்து சுதந்திரமான மனிதனாக யாழ்ப்பாணத்துக்கு வந்தார். 1948 - ம் ஆண்டளவில் எழுத்துத்துறையில் ஈடுபட்டார். அன்று வெளிவந்த 'ஈழகேசரி'ப் பத்திரிகையில் பணியாற்றத் தொடங்கினார். ஈழகேசரியில் சிறுவர் பகுதி, மாணவர் பகுதிக்கென பல்வேறு புனைபெயர்களில் சிறுவர் பாடல்கள், கட்டுரைகள் இதழ்கள் தோறும் எழுதி வந்தார். சிறுகதைகள், கவிதைகள் பலவும் தொடர்ந்து எழுதி வந்தார். அன்று ஈழகேசரி ஆசிரியராக விளங்கிய இராஜ அரியரத்தினம் இவரை ஊக்கப்படுத்தித் தொடர்ந்து எழுத வைத்தார். ஈழகேசரி வளர்த்துத் தந்த எழுத்தாளர், கவிஞர்களுள் இவர் குறிப்பிடத்தக்கவர்.

சிலம்பன், ரவிவரன், வி. ஆர். என், ஆறென், இ. நா. ஆகிய புனைபெயர்களில் சிறுகதைகளையும், கவியரசன், ஈனா, கூட்டுக்கவிராயன், இடிமேகன், ரமேஸ்வரன், ரவி, ரவீந்திரன் ஆகிய புனைபெயர்களில் கவிதைகளையும், அரிமா, தனஞ்செயன் ஆகிய புனைபெயர்களில் கட்டுரைகளையும் எழுதி வந்தார். அறுபதுகளின் முற்பகுதியில் வெளிவந்த 'தமிழன்' பத்திரிகையின் ஆசிரிய பீடத்திலும் சிறிது காலம் பணிபுரிந்தார். ஈழநாடு பத்திரிகைக்கும் படைப்புகளை வழங்கிவந்தார். ஈழகேசரி, வீரகேசரி, ஈழநாடு, தமிழன் முதலான பத்திரிகைகளில் தான் இவரது படைப்புகள் பெருமளவில் வெளியாகியுள்ளன.

'நாகராஜனின் கதைகளில் உவமானச் சிறப்புகளும், தட்டுத் தடங்கலற்ற ஓட்டமும், அறிவுரைகளும் இடம்பெற்றிருப்பதுடன், வாழ்க்கைத் தத்துவக் கருத்துகளும் இடையிடையே தலைநீட்டுவதுண்டு' என இவரது கதைகள் குறித்து 'ஈழகேசரி' குறிப்பிட்டுள்ளது. சிறுவர்களின் சிந்தைக்கினிய பாடல்களைப் படைப்பதில் வல்லவரெனப் பாராட்டுப் பெற்றார். இவரது முதலாவது சிறுகதைத் தொகுதி 'நிறைநிலா' 1965 -ல் வெளியாகியது. சென்னையில் நடைபெற்ற இரண்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டையொட்டி (1968) நடத்தப்பட்ட அகில உலகக் கவிதைப் போட்டியில் 'புகாரில் ஒருநாள்' என்னும் தலைப்பில் கவிதை பாடித் தங்கப்பதக்கப் பரிசில் பெற்றார். 'மதுரகவி' எனப் பட்டமளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

ஈழத்து எழுத்தாளர் ஐவர் புதுமையாகப் படைத்த 'மத்தாப்பு' என்ற குறுநாவலின் முதலாம் அத்தியாயத்தை எழுதியவர். அது நூல் வடிவில் வெளியாகிப் பாராட்டுப் பெற்றது. நவரசங்களைக்கொண்ட 'மணிமகுடம்' என்ற நாவலில் (மூவர் எழுதியது), முதல் மூன்று அத்தியாயங்களை, மூன்று ரசம் வெளிப்படக் கவிதை போன்ற நடையில் எழுதிச் சிறப்பித்தார். பிற்காலத்தில் சுன்னாகம் வட இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகத்தில் பணிபுரிந்து வந்தார். நீதிக் கரங்கள், புத்தொளி, கூத்தாடி ஆகிய சிறு காவியங்களையும், இரண்டு குறுநாவல்களையும் படைத்துள்ளார். இவரது 'நிறைநிலா (சிறுகதைத் தொகுதி), சிறுவர் பாடல், சிலம்பு சிரித்தது (கவிதை நாடகம்), வாழ்க்கை ஒரு வசந்தம் (நாவல்), குயில் வாழ்ந்த கூடு (காவியம்) ஆகியன நூலுருவில் வெளிவந்துள்ளன.

வறுமை வாட்டிய போதிலும், சத்தியத்தினதும், பிறர் மனம் நோகாது வாழும் பண்பிலும் சிறந்தவராக, எழுத்தையும் அதன் சுயாதீனத்தையும் வாழ்க்கையாகக்கொண்டு வாழ்ந்த 'மதுரகவி' 1972 -ல் இயற்கை எய்தினார். 'மதுரகவி' நாகராஜன் நினைவாக யாழ் இலக்கிய வட்டம் குழந்தைக் கவிதை நூல் ஆக்கப் போட்டி ஒன்றினை நடத்தி அப்போட்டியில் வெற்றியீட்டிய ஐவரது நூல்களைத் தொகுத்து 'மதுரகவிதைகள்' என்னும் பெயரில் 1989 -ல் வெளியிட்டது. இக்கவிதை நூல் தொகுப்பில் 78 கவிதைகள் இடம்பெற்றிருந்தன. குழந்தைக் கவிஞர் ஒருவரை நினைவு கூர்ந்து நடத்தப்பட்ட இப்போட்டி ஈழத்துக் குழந்தை இலக்கிய வரலாற்றில் குறிப்பிடத்தக்கதோர் நிகழ்வாகும். இந்நிகழ்வு 'மதுரகவி' மீது ஈழத்துக் குழந்தைக் கவிஞர்கள் கொண்டுள்ள அபிமானத்தையும், பெருமதிப்பினையும் பிரதிபலிப்பதாக அமைந்தது என்றால் மிகையல்ல..! 2001 -ம் ஆண்டு, மதுரகவி இ. நாகராஜனின் 'நிறைநிலா' சிறுகதைத் தொகுதியின் மறுபதிப்பு சென்னை 'மித்ர' வெளியீடாக வெளிவந்தது. இதற்கு அவரது நண்பர் எஸ். பொ. முன்னீடு எழுதியிருந்தார்.

ஈழத்து நவீன இலக்கிய வரலாற்றில் 'மதுரகவி' இ. நாகராஜனின் நாமம் நீடித்து நிலைக்கும்..!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.