கவிஞர் மஹாகவியின் நினைவு தினம் ஜூன் 20. அதனையொட்டிய நினைவுக்குறிப்புகளிவை!

யாழ்ப்பாணம் பற்றி எத்தனையோ கவிஞர்கள் கவிதைகள் பல  இயற்றியிருக்கின்றார்கள். ஆனால் கவிஞர் மஹாகவியின் 'யாழ்ப்பாணம்' பற்றிய வரிகளைப்போல் இதுவரை வேறெவரும் எழுதியதாக எனக்கு நினைவில்லை. அவ்வரிகளைக் கீழே தருகின்றேன். இவ்வரிகள் அவரது புகழ் பெற்ற காப்பியமான 'கண்மணியாள் காதை'யில் இடம் பெற்றுள்ளன.

"யாழைக் கொணர்ந்திங்கு மீட்டிய தால், ஒரு
யாசகன் மன்ன னிடம் இருந்தோர்
பாழைப் பரிசு பெற் றான்!" எனக் கூறிடும்
பண்டைப் பழங்கதை கேட்டதுண்டு -
பாழைப் பரிசு பெற் றாலும், அப் பாலையைப்
பச்சைப் படுத்திப், பயன் விளைத்து,
வாழத் தொடர்ந்து முயன்றத னால், இன்று
வையத் துயர்ந்தது யாழ்ப்பாணம்!

"ஆழக் கடலுள் அமிழ்ந்தன வே எங்கள்
அன்றைப் பெரும்புகழ்; ஆதலினால்,
வீழத் தொடங்கி முடிந்தன வாம் பல
விந்தை!" என்றோர் கதை வந்ததுண்டு -
வீழத் தொடங்கிய விந்தை முழுவதும்
மீட்டுக் கொடுத்த பெருமையிலே
'ஈழத் தமிழகம்' என்று நிலம் தனில்
இன்று நிமிர்ந்தது யாழ்ப்பாணம்!

"ஆறு நடந்து திரிந்த வயல்கள்
அடைந்து கதிர்கள் விளைந்திட, வான்
ஏறி உயர்ந்த மலை ஏதும் இல்லையே!"
என்ற ஒரு கதை சொல்வதுண்டு -
"ஏறி உயர்ந்த மலை இல்லை ஆயினும்
என்ன? இருந்தன தோள்கள்!" என்றே
கூறி, உழைத்த பின் ஆறிக், கலைகளில்
ஊறிச் சிறந்தது யாழ்ப்பாணம்!"

எனக்கு மிகவும் பிடித்த இலங்கைத் தமிழ்க் காப்பியம் 'கண்மணியாள் காதை'. அதில் வரும் கண்மணி மறக்க முடியாத தமிழ்க் காவியப்பெண்களிலொருத்தி. உண்மையில் 'கண்மணியாள் காதை' காப்பியம், 'தேரும் திங்களும்' கவிதை அவரது சமுதாயப்பிரக்ஞையை வெளிப்படுத்தும் சிறந்த படைப்புகள். சமூகத்தில் நிலவும் தீண்டாமைக் கொடுமையினைச் சாடும் படைப்புகள்.

'காவியத்துக்கு ஒரு மஹாகவி' என்று அழைக்கப்படக்காரணமாக இருந்த காவியம் மஹாகவியின் 'கண்மணியாள் காதை' காவியம். அவலச்சுவை மிக்க காவியம். தீண்டாமைக்கொடுமையினை விபரிக்கும் குறுங்காவியம். கவிஞர் 'சடங்கு' என்று 'விவேகி'யில் எழுதிய தனது குறுங்காவியத்தின்  நாயகனான செல்லையாவை வைத்து , லடீஸ் வீரமணிக்காக வில்லுப்பாட்டாக , இன்னுமொரு கோணத்தில் எழுதிய துயர காவியம்  'கண்மணியாள் காதை' . குறுங்காவியமானாலும் அதில்வரும் பாத்திரங்களான கண்மணியாளையும், செல்லையனையும் படித்தவர்களால் மறக்கவே முடியாது. அவ்வளவிற்குப் பாத்திரப்படைப்பு நன்கு அமைந்திருந்த காவியமது. இக்காவியம் முதலில் அன்னை வெளியீட்டகம் (யாழ்ப்பாணம்) என்னும் பதிப்பகத்தால் நவம்பர் 1968இல் நூலாக வெளிவந்தது. மேலும் 'கண்மணியாள் காதை' தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியில் லடீஸ் வீரமணி குழுவினரால் வில்லுப்பாட்டாக மேடையேறியபோது மிகுந்த வரவேற்பைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது. அது பற்றி 'ஈழநாடு' பத்திரிகையின் வாரமலரில் வெளிவந்த 'தேனி'யின் விமர்சனம்  'காவியத்துக்கு ஒரு மஹாகவி; வில்லுப்பாட்டுக்கு ஒரு வீரமணி' என்ற தலைப்புடன் அமைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

மேற்படி 'கண்மணியாள் காதை'யும் எனக்கு மிகவும் பிடித்த காவியங்களிலொன்று. அதில்வரும் 'கண்மணி', 'செல்லையன்' ஆகியோர் மறக்க முடியாதவர்கள். ஒரு விதத்தில் வாசிக்கும்போது அதன் பெயரும், பாடு பொருளும், காவியத்தில் வரும் சில கவிதை வரிகளும் சிலப்பதிகாரத்தை நினைவுக்குக் கொண்டுவரும் தன்மை மிக்கன. காவியத்தை இரு கூறுகளாகக் கவிஞர் பிரித்திருப்பார். முதலாம் கூறு: வெண்ணிலவு காவியத்தின் இன்பமான பக்கத்தை விபரித்தால், இரண்டாம் கூறான 'காரிருள்' காவியத்தின் துன்பகரமான பக்கத்தை விபரிக்கும்.  

கண்மணியாள் காதை காவியத்தை வாசிக்க: https://noolaham.net/project/01/44/44.pdf

'நூலகம்' எண்ணிம நூலகத்தில் மேலும் பல கவிஞர் மஹாகவியின் நூல்களை வாசிக்கலாம்: https://noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF

எனக்கு மிகவும் பிடித்த கவிஞர் மஹாகவியின் கவிதைகளாக 'புள்ளி அளவில் ஒரு பூச்சி', 'தேரும் திங்களும்' மற்றும் 'மீண்டும் தொடங்கும் மிடுக்கு' ஆகிய கவிதைகளைக் கூறுவேன்.  இவற்றில் 'புள்ளி அளவில் ஒரு பூச்சி' கவிதையினை நான் முதன் முதலில் வாசித்தது தமிழகத்திலிருந்து வெளியான 'அக்கரை இலக்கியம்' தொகுப்பிலிருந்துதான்.


1. புள்ளி அளவில் ஒரு பூச்சி! - மஹாகவி

புத்தகமும் நானும்,
புலவன் எவனோதான்
செத்த பின்னும் ஏதேதோ சேதிகள் சொல்ல
மனம்
ஒத்திருந்த வேளை!
ஓழுங்காக அச்சடித்த
வெள்ளைத் தாள் மீதில்,
வரியின் முடிவினிலே,
பிள்ளைத் தனமாய் பிசகாகப் போட்ட காற்
புள்ளியைக் கண்டு
புறங்கையால் தட்டினேன்.
நீ இறந்து விட்டாய்!
நெருக்கென்ற தென்நெஞ்சு
வாய் திறந்தாய், காணேன்,
வலியால் உலைவுற்றுத்’தாயே’
என அழுத சத்தமும் கேட்கவில்லை.
கூறிட்ட துண்டுக் கணத்துள் கொலையுண்டு
ஓர்
கீறாகத் தேய்ந்து கிடந்தாய்,
அக்கீறுமே
ஓரங்குலம் கூட ஓடியிருக்கவில்லை.
காட் டெருமை காலடியிற்
பட்ட தளிர்போல,
நீட்டு ரயிலில்
எறும்பு நெரிந்ததுபோல்,
பூட்டாநம் வீட்டிற் பொருள்போல
நீ மறைந்தாய்.
மீதியின்றி நின்னுடைய
மெய் பொய்யே ஆயிற்று
நீதியன்று நின்சா,
நினையாமல் நேர்ந்ததிது,
தீதை மறந்து விட மாட்டாயோ சிற்றுயிரே!
காதில் அப்பூச்சி கதை ஒன்றே வந்துவந்து
மோதிற்று;
மீண்டும் படிக்க முடியவில்லை
பாதியிலே பக்கத்தை மூடிப்
படுத்துவிட்டேன்.


2. தேரும் திங்களும்!-   மஹாகவி -

ஊரெல்லாம் கூடி ஒருதேர் இழுக்கிறதே;
வாருங்கள் நாமும் பிடிப்போம் வடத்தை”
என்று
வந்தான் ஒருவன்.
வயிற்றில் உலகத்தாய்
நொந்து சுமந்திங்கு நூறாண்டு வாழ்வதற்காய்ப்
பெற்ற மகனே அவனும்.
பெருந் தோளும்
கைகளும், கண்ணில் ஒளியும், கவலையிடை
உய்ய விழையும் உளமும் உடையவன்தான்.
வந்தான். அவன் ஒரு இளைஞன்;
மனிதன் தான்.
சிந்தனையாம் ஆற்றற் சிறகுதைத்து வானத்தே
முந்த நாள் ஏறி முழுநிலவைத் தொட்டுவிட்டு
மீண்டவனின் தம்பி
மிகுந்த உழைப்பாளி!
“ஈண்டு நாம் யாரும் இசைந்தொன்றி நின்றிடுதல்
வேண்டும்” எனும் ஒர் இனிய விருப்போடு
வந்தான் குனிந்து வணங்கி வடம் பிடிக்க.
“நில்!” என்றான் ஓரான்
“நிறுத்து!” என்றான் மற்றோரான்.
“புல்” என்றான் ஓராள்
“புலை” என்றான் இன்னோராள்
“சொல்” என்றான் ஓராள்
“கொளுத்து” என்றான் வேறோராள்.
கல்லொன்று வீழ்ந்து
கழுத்தொன்று வெட்டுண்டு
பல்லோடு உதடுபறந்து சிதறுண்டு
சில்லென்று செந்நீர் தெறிந்து
நிலம் சிவந்து
மல் லொன்று நேர்ந்து
மனிசர் கொலையுண்டார்.
ஊரெல்லாம் கூடி இழுக்க உகந்த தேர்
வேர் கொண்டதுபோல் வெடுக்கென்று நின்றுவிடப்
பாரெல்லாம் அன்று படைத்தளித்த அன்னையோ
உட்கார்ந் திருந்துவிட்டாள் ஊமையாத் தான்பெற்ற
மக்களுடைய மதத்தினைக் கண்டபடி.
முந்த நாள் வான முழுநிலவைத் தொட்டுவிட்டு
வந்தவனின் சுற்றம்
அதோ மண்ணிற் புரள்கிறது!


3. மீண்டும் தொடங்கும் மிடுக்கு

மப்பன்றிக் காலமழை காணா மண்ணிலே
சப்பாத்தி முள்ளும் சரியாய் விளையாது ஏர்
ஏறாது காளை இழுக்காது எனினும் அந்தப்
பாறை பிளந்து பயன்விளைவிப்பான் என்னூரான்
ஆழத்து நீருக்ககழ்வான் அவன் நாற்று
வாழத்தன் ஆவி வழங்குவான் ஆதலால்
பொங்கி வளர்ந்து பொலிந்தது பார் நன்னெல்லு
தங்கநகைகள் தலைக்கணிந்த பெண்களே
கூடிக் குனிந்து கும்மி கொட்டுவதும் காதினிக்கப்
பாடிக் கவலை பறக்கச் செய்கின்றதும் போல்
முற்றி, மனிதன் முயற்சிக்கு இறை கொடுக்கும்
பொற்காசாம் நெல்லுப் பொதி சுமந்து கூத்தாடும்
அந்தப் பயிரின் அழகை அளந்தெழுத
எந்தச் சொல்லுண்டாம் எமக்கு? அவ்வுழைப்பாளி
உள்ளம் நெகிழ்ந்தான் ஒரு கதிரைக் கொத்தாகக்
கிள்ளி முகர்ந்தான் கிறுகிறுத்துப் போகின்றான்.
வாடும் வயலுக்கு வார்க்கா முகில் கதிர்கள்
சூடும் சிறுபயிர்மேல் ‘சோ’ வென்று நள்ளிரவிற்
கொட்டும் உடன் கூடும் கொலைக்காற்றும் தானுமாய்
எட்டுத் திசையும் நடுங்கி முழங்கி எழும்
ஆட்டத்து மங்கையர்போல் அங்கு மொய்த்து நின்ற பயிர்
பாட்டத்தில் வீழ்ந்தழிந்து பாழாகிப் போய்விடவே
கொள்ளைபோல் வந்து கொடுமை விளைவித்து
வெள்ளம் வயலை விழுங்கிற்று……..பின்னர் அது
வற்றியதும் ஓயா வலக்கரத்தில் மண்வெட்டி
பற்றி, அதோ பார் பழையபடி கிண்டுகிறான்
சேர்த்தவற்றை முற்றும் சிதறவைக்கும் வானத்தைப்
பார்த்தயர்ந்து நிற்கும் பழக்கமற்றோன்
ஈண்டு முதலில் இருந்து முன்னேறுதற்கு
மீண்டும் தொடங்கும் மிடுக்கு.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.