நான் கல்வி கற்றது இளவாலைக் கொன்வன்ற். ஆசிரியராகப் பணியாற்றியது தலவாக்கெல்ல சென்ற் பற்றிக்ஸ் கல்லூரி. பண்டாரவளை பிந்துனுவௌ ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் எனது ஒரு வருட பயிற்சியை முடித்த பின்னர் மிகுதிக் காலப் பயிற்சியை நான் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் மேற்கொண்டிருந்தேன். நாட்டு நிலை கொந்தளிப்பான நிலை. 1980களின் முற்பட்ட காலப்பகுதி அது. அவ்வேளை திரு.முல்லைமணி அவர்கள் எனது விரிவுரையாளராக இருந்தார்; என்பது பெருமை தருகின்ற விடயம். அவ்வேளையில் கவிஞர் இ.முருகையன், வேல் ஆனந்தன்,  வீரமணி ஐயர். புவனேஸ்வரி ராமகிருஷ்ணா, துரைராஜா,  அடைக்கலமுத்து, சுவர்ணா நவரட்னம் போன்ற பலர் விரிவுரையாளர்களாகக் கடமையாற்றியவர்கள். அவர்களின் மாணவியாக இருந்தேன் என்பதும் பசுமையான நினைவுகளாகி வருகின்றன. அவ்வேளை திருமதி ஆனந்த குமாரசுவாமி அவர்கள்தான் அதிபராக இருந்தார்.

   முல்லை மணி சேரிடம் நான் தமிழ் பயிலும் வாய்ப்பு ஏற்பட்டதை பெருமையாகக் கருதுகின்றேன். அவ்வேளை ரசிகமணி கனக செந்திநாதனின் ‘விதியின் கை’ நாவல் மற்றும், இலங்கையர்கோனின் ‘வெள்ளிப்பாதசரம்’ என்ற சிறுகதைத் தொகுப்பு இரண்டு நூல்களும் (எமது 'சிலபஸ்') ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டி இருந்தது. நான் எழுதிய ஆய்வுகளைப் பார்த்ததின் பின்னர் கூடுதலாக சம்பாஷனைகளும் ஏற்பட்டன. நான் மேற்கொண்டிருந்த இரு நூல்களின் ஆய்வுகளும் தினகரன் வார இதழ் பத்திகையில் வெளியாகியிருந்தன. அதற்கு ஊக்கமளித்தவர்கள் முல்லை மணி சேர்,  நிட்சயமாக எனது இனிய தந்தை அகஸ்தியர் என்பதையும் இவ்விடத்தில் நினைவுகொள்ள விரும்புகிறேன்.

முல்லை மணி சேர் ஒரு ஆர்ப்பாட்டம் இல்லாதவர். புன்சிரிப்போடு அன்போடு பழகக்கூடியவர். மற்றவர்களின் கருத்துக்களையும் ஆவலோடு கேட்டு அவற்றிகு மதிப்புக் கொடுக்கும் உயரிய பண்பை நான் அவரிடம் பார்த்திருக்கிறேன். நாடகங்களில் அவரது ஆர்வத்தை நான் அவரிடம் பயிலும் காலங்களிலே அவதானித்திருக்கிறேன். பண்டாரவன்னியனை காவியமாக்கிய பெருமை குறித்து பின்னர் தான் அறிந்தேன். வன்னிக்கு அடையாளம் தந்தவர் முல்லைமணி – முல்லைமணிக்கு அடையாளம் தந்தது பண்டாரவன்னியன் என்றெல்லாம் பெருமையுடன் கூறிக்கொள்வதை அறிந்திருக்கின்றோம்.

     லண்டனில் சட்டத்தரணி சிறீகாந்தலிங்கம் அவர்கள் இவரது பண்டாரவன்னியன் நாடகத்தை நடித்து அதனை இறுவெட்டாக வெளியிட்டதையும் இங்கே குறிப்பிட்டுக் கூற வேண்டும்;. முல்லைமணிசேர் அவர்களின் நினைவு அஞ்சலிக்கூட்டம் லண்டனில் 2017 ஆம் ஆண்டு இடம்பெற்றபோது அவ்வேளை அதில் கலந்துகொண்டு அவரின் மாணவி என்ற வகையில் நான் உரையாற்றியதையும் இங்கே பெருமையுடன நினைவுகூர விரும்புகிறேன்.

   ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் தமிழ் விழாக்கள்.  நாடகப் போட்டிகள்,  நாட்டிய நாடகப் போட்டிகள் இல்லங்களுக்கிடையே இடம்பெறுவதுண்டு. இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து ஆசிரியர்கள் அங்கு பயிற்சி பெறுவதுண்டு. மன்னார்,  திருகோணமலை,  மட்டக்களப்பு,   மாத்தளை,  கண்டி மாணவ ஆசியர்களிடம் பல்வேறு திறமைகளை நான் அவதானித்ததுண்டு. இவற்றிலெல்லாம் நானும் பங்குபற்றி பாராட்டுகள்; பெற்றதுண்டு. ஜீவமணி, அகிலனின் ‘வேங்கையின் மைந்தன்’ போன்ற நாடகங்களில் அரசியாகவும், அரச குமாரத்தியாகவும் நடித்திருக்கிறேன்.  வேங்கையின் மைந்தன் நாடகத்தின்போது முல்லைமணிசேர் அவர்கள் எனக்கு மேற்பார்வை செய்ததும்; மகிழ்வோடு நினைவில் வருகிறது. எனது தந்தைக்கு எனக்குத் தெரியாமலே விசேட அழைப்பு விட்டிருந்தாr. அவரும் வந்து எங்கள் நாடகத்தைப் பார்த்தது இனிமையான நினைவு. அப்படி முல்லை மணி சேர் எல்லோரையும் மகிழ்விக்கும் பண்பு கொண்டவர்.

   புதிய பாடத்திட்டங்கள் கொத்தணிப்பாடசாலை என அன்றைய அரசாங்கம் பல்வேறுதிட்டங்கள் இருந்தன. கற்பித்தலிலும் நாங்கள் பாடசாலைகளில் செய்முறைகளைச் செய்து காட்டவேண்டும். குறிக்கப்பட்ட விரிவுரையாளர்கள் எங்களை மேற்பார்வை செய்வார்கள் அதற்கும் முல்லைமணி சேருடன் வேறு ஒரு விரிவுரையாளரும் எனக்கு மேற்பார்வையாளர்களாக வந்திருந்தார்கள். கோப்பாய் பாடசாலை ஒன்றில்  இப்பயிற்சி இடம்பெற்றதும் நான் நல்ல புள்ளி பெற்றதும் பெருமிதமாகி; நினைவில் வந்து போகிறது.

  அவரது ஆக்கங்கள் பலவற்றை பத்திரிகைகளிலும், ‘ஞானம்’ சஞ்சிகையில் படித்து மகிழ்ந்திருக்கிறேன்.

  2005 ஆம் ஆண்டில் ஞானம் சஞ்சிகை நடாத்திய கலாபூஷணம் புலோலியூர் சதாசிவம் ஞாபகா்த்த சிறுகதைப்போட்டியில் ‘கொக்கிளாய் மாமி’ என்ற முல்லைமணி அவர்களின் சிறுகதை முதற்பரிசைத் தட்டிக்கொண்டதும்,  ‘தளிருக்குள் துளிர்’ என்ற நவஜோதியின் சிறுகதை பரிசுச் சான்றிதழ் பெற்றதையும் இங்கே மகிழ்வுடன் நினைவுபடுத்த விரும்புகிறேன். ஞானம் ஆசிரியர் டாக்டர் ஞானசேகரன் அவர்கள் ‘கொக்கிளாய் மாமி’ என்ற தலைப்பிலேயே தொகுப்பாக்கி வெளியிட்டமை சிறப்பான விடயம்.

    2015 இல் இலங்கை அரசால் சாகித்திய ரத்னா பட்டம் அளித்து கௌரவித்தததையும் பத்திரிகை மூலம் அறிந்து மகிழ்ந்திருக்கிறேன்.

    முல்லை மணி சேர் அவர்களின் பண்டாரவன்னியன் நூல் 1970 இல் வித்தியானந்தா திறந்தவெளி அரங்கில் தமிழ் விரிவுரையாளர் கலாநிதி பொ. பூலோகசிங்கம் தலைமையில் இடம்பெற்றதாகவும் அறியமுடிகிறது. வன்னி என்னும்போது கலாநிதி பூலோகசிங்கம் அவர்களும் வன்னி வரலாற்றில்; முக்கியமாகக் குறிப்பிடப்படவேண்டியவர். சுமார் 2000 பொதுமக்கள் கலந்தகொண்ட இந்த பண்டாரவன்னியன் நாடக நூலுக்கு, ‘இலங்கைக் கலைக்கழகப் பரிசினை’யும்  பெற்றுக் கொண்டமை பாராட்டுக்குரியதாகும். இவ்வளவு சிறப்புக்களை திரு. முல்லை மணி அவர்கள் கொண்டிருந்தாலும் அவரது ‘அரசிகள் அழுவதில்லை’ என்ற சிறகதைத் தொகுப்புக்; குறித்த எனது கருத்துக்களை இவ்வேளை முன்வைக்கலாம் என நம்புகின்றேன்.

    1977 ஆம் ஆண்டில் மட்டக்களப்பிலிருந்து ‘மலர்’ இலக்கிய இதழ் வெளியிட்டிருந்த ‘அரசிகள்; அழுவதில்லை’ என்ற சிறுகதைத் தொகுப்பில்  12 சிறுகதைகள் அடங்கியுள்ளன. இந்நூலுக்கு பேராசிரியர் க. கைலாசபதி அவர்கள் அணிந்துரை வழங்கிருப்பது மேலும் சிறப்புச் சேர்த்திருக்கின்றது .

    இவரது எல்லாக் கதைகளுமே அவர் வாழ்ந்த கிராமப் புறஞ்சார்ந்து வறுமைக் கோட்டில் கண்ட கதாபாத்திரங்களைக் கொண்டுள்ளன. எல்லோராலும் அடிக்கடி இலக்கிய உலகில் பேசப்படுகின்ற மண்வாசைன குறிப்பிடத் தக்க விதத்தில் இவரது கதைகளில் வியாபித்து நிற்கின்றன. இவரது காலப்பகுதியில் எழுதிய சிந்தனையாளர்களின் கதைகளில் அதிகமாக வர்க்க முரண்பாடுகளை, மக்களின் வாழ்க்கை, ஏற்றத் தாழ்வுகளை பாத்திரங்களினூடாகச் செலுத்துவதை நான் வாசித்து அறிந்திருக்கிறேன். அன்றைய காலகட்டத்தின் பிரதிபலிப்பாக அவை இருந்திருக்கிறது. முல்லைமணிசேர் அவர்களும் நலிந்தவர்கள் பற்றிப் பேசியிருந்தாலும் அத்தகைய கொள்கையோ,  அரசியலோ அவரது கதைகளில் என்னால் இனங்காண முடியவில்லை. யாழ்ப்பாணத்தில் பல்வேறு எழுத்தாளர்கள் யாழ்ப்பாணத்தைப்பற்றியும், அந்தமக்களின் பின்புலங்கள் பற்றியெல்லாம் எழுதியதை அறிந்திருக்கிறோம் ஆனால் வன்னி மக்களின் அந்த வாழ்க்கையைப் பதிவில் கொண்டு வந்தவர் முல்லைமணி அவர்கள்தான் என்பதை அவரின் சிறுகதைகளைப் படிக்கும்போது புரிந்து கொள்ள முடிகின்றது. மண்வாசனை கொஞ்ச அன்றைய காலத்துக் கதையை அழகாக நகர்த்திச் செல்வதை என்னால் பார்க்க முடிகின்றது.  

    ‘ஈழத்து தமிழ் சிறுகதையுலகில் குறிப்பிடத்தக்க ஒரு பிரிவினர்,  கல்விக்கூடங்களில் ஆசிரியராய் இருப்பவர்கள். கனக செந்திநாதன், எஸ்.பொன்னுத்துரை,  வ.அ.இராசரத்தினம்,  தேவன்,  சொக்கன்,  சிற்பி,  மருதூர்க்கனி,  செம்பியன் செல்வன் என்று உதாரணம் காட்டிக் கொண்டே போகலாம். இவர்களுள்ளும் தமிழாசிரியராய் இருப்போர் சிற்சில பொதுப்பண்புகளை பிரதிபலிக்கும் கதைகள் எழுதியிருப்பதைக் கவனிக்கலாம்’ எனப் பேராசிரியர் கைலாசபதி அவர்கள் குறிப்பிடுவது போன்று இவரும் ஒரு தமிழ் ஆசிரியராகத் திகழ்ந்ததாலேயோ என்னவோ சாதாரண வாசகன் எளிதில் விளங்கக்கூடிய சொற்களில்,  அலங்காரங்கள் செய்வதில் கவனம் செலுத்தாது யதார்த்தமான முறையில் நகர்த்திச் செல்வது சிறப்பானவை. இவரது ‘அரசிகள் அழுவதில்லை’ என்ற கதையில் ஒரு மீனவப் பெண் ஒருத்தியின் வாழ்வை அடிமட்ட பகைப்புலத்தை அவலச்சுவையுடன் யதார்த்தபூர்வமாகச் சித்தரிக்கின்றார். வறுமைக்குள்ளும் அடிப்படையான சுயமரியாதையை அந்தக்கதையில் வலியுறுத்துகின்றார். தாய்மையின் விழுமியங்களைச் சிதைக்காமல் நகர்த்துகிறார். குடும்பத்தினை ஒரு வசதிபடைத்த ஆனால் பிள்ளைப் பாக்கியம் இல்லாத ஒரு பெண்ணோடு ஒப்பிட்டு இயற்கைக்கும் மனித வாழ்க்கைக்கும் உள்ள  உறவுகளை  இயல்பாகச் சித்தரிப்பது சிறப்பான விடயம். ஆனால் ‘மலடு’ என்ற சொற்பதம்  பாவிக்கப்பட்டமை சற்று எனக்கு நெருடலாக இருந்தது. இன்றைய காலத்திற்கு அது பொருத்தமற்றது.

    அடுத்து இவரது ‘கிராமங்கள் கற்பழிக்கப்படுகின்றன’ என்ற கதையை ரசித்து வாசித்தேன். கிராமங்கள் தமது கன்னித் தன்மையை இழந்து நகரமயமாக்கப்படுவதை ‘கிராமங்;கள் கற்பழிக்கப்படுகின்றன’ என்ற கதையில் பார்க்க முடிந்தது. பழைய கால வன்னி மக்களின் வித்தியாசமான உணவுப்பழக்க வழக்கங்கள்,  பண்பாடு கதையோட்டக் கருவுடன் பின்னிப்பிணைந்து காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது. பச்சையரிசிச்சோறு,  குரக்கன் பிட்டு, கானாந்தி, முசுட்டை வறை, தேன்,  எருமைப்பால்,  தயிர்,  இறைச்சி,  மீன்  அத்துடன் ஓலையால் வேயப்பட்ட வட்ட வீடுகள்,  முருங்கச்சாறு கொண்டு மெழுகிய திண்ணைகைள், முரலி, பாலை,  உலுவிந்தை, இலந்தை என காட்டுப்பழங்கள் என்று அவரது கதையில் இத்தகைய  உணவுகள் குறித்தும், முல்லை, மருதம்,  மயங்கிய சூழ்நிலையெனவும்,  எருமை நெய், உடும்பு முட்டையில் சிறு துவாரம் போட்டுக் குடிக்கிறது,  பனையோலைப்பாயில் படுத்தால் நாரிப்பிடிப்பு வராது இப்படி முல்;லைமணி அவர்களின் கதைகள் வன்னியை அந்த மக்களைப்பற்றியெல்லாம் இயற்கையோடு மெருகூட்டிக் கிடக்கின்றன.

    ‘ஐராங்கனி’ என்ற கதையில் பல்கலைக்கழக மாணவர்களிடையே உண்டாகும் உணர்வுகளை பல்வேறு சமூகங்களினுடாக நகர்த்திச் செல்கின்றார். தமிழ், முஸ்லீம்,  சிங்கள மாணவர்களை இன வேறுபாடுகளற்று, சிங்கள சமூகத்து மாணவியை மனிதாபிமானத்துடன் நகர்த்துவது, அத்தோடு ஒரு சகோதர உணர்வோடு முடிக்கும் விதம் அற்புதமானது. ‘நீங்கள் என் சகோதரர்கள், என்னை உங்கள் தங்கையாகவே கருதினீர்கள். அரியமும்,  அஹமத்தும் வாடைத்து நின்றனர்’ என்று அக்கதையை அழகாக முடிகின்றார்.

   ‘பிணைப்பு’ என்ற சிறுகதையில் உடையாரின் நிலமானிய அமைப்பையும் மனித உறவுகளையும் அற்புதமாக எடுத்துக்காட்டுகின்றார். விவசாயம் செய்யும் மக்களுக்கும் அந்த மண்ணுக்குமுள்ள பிரிக்க முடியாத பிணைப்பு,  பிள்ளைகள் அந்த நிலத்தை விற்க முற்படும்போது நிலம் எனது உயிர்போன்றது விற்கவேண்டாம் என்று எழுகின்ற ஆவேசத்துடன் வயதாகிவிட்ட விவசாயின் உயிர் பிரிகிறது. ஆனால் இப்போது எமது நாட்டில் என்ன நடக்கிறது. இத்தகைய காணிகள் விற்கப்பட்டுக்கொண்டிருப்பதைத்தான் நாம் பார்க்கின்றோம். நெஞ்சுள் எழும் ஒரு சோகம் சுரக்கிறது.

  ‘அவளும் தோற்றுவிட்டாள்’ என்ற கதையில் வன்னி மண்ணை அன்றைய தொன்மையோடு இணைத்து கதையை அழகாகக் கையாண்டுள்ளார். ஒல்லாந்தர் காலத்துக் கதையை அந்த மண்ணுக்கே உரிய பாணியில் நகர்த்தி ஒரு துன்பியல் கதையாக அந்தக் கதையை முடித்திருக்கிறார். பெரிய காப்பியங்களை நாங்கள் பார்க்கும்போது ‘கண்ணகி கோவலன்’ கதையைப்பார்த்தாலும் இத்தயை ஒரு துன்பியலைத்தான் பார்த்திருந்தோம். அந்த வகையில் ‘அரியாத்தை’ என்ற பெண் வன்னிக் காட்டிற்குள் யானையைப் பிடிச்சுக்கொண்டு வந்து பிரிவது வலியாகி நின்றது. வன்னிக் காட்டுக்குள் குருத்தூர் பொல்லாத காடு. கரடி,  சிறுத்தைப்புலி,  நாகபாம்பு எல்லாம் இருக்காம். மனிசர் கொஞ்சம் பிராக்குப் பாத்தால் மிருகத்துக்குத்தான் வெற்றி என்று எழுதுகிறார். யானை பிடிப்பவனை ‘பணிக்கன்’ என்று அழைப்பார்களாம். ஏறாவூரில் பிறந்த ஸர்மிளா ஸெய்யிததின் ‘பனிக்கர் பேத்தி’ என்ற நாவலை நான் படித்தபோது இது பற்றி அறிந்திருந்தேன். ஆனால் வன்னியில் இப்படி யானை பிடிப்பது பற்றி முல்லைமணி அவர்கள் தான் இவ்விதம் பதிவு செய்துள்ளார். நீலப்பணிக்கற்றையின் ஒரே ஒரு மகள்தான் இந்த அரியாத்தை. அவள் நல்ல வடிவு. இலத்தைப் பழத்துப் புழுவைப்போலை நல்ல வெள்ளை. முல்லைமணி அவர்களின வித்தியாசமான வர்ணிப்பு என்னை ஆகர்ஷித்தது. மனித மனதை ஆராய்ந்து தமது படைப்புகளாக்கி மறைந்த கலாநிதி முல்லைமணி அவர்கள் என்றும் நினைவில் இருப்பார்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
4.7.2021