- இலங்கையிலிருந்து வெளிவந்த 'நந்தலாலா' , 'தீர்த்தக்கரை' ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியர்களில் ஒருவரும் சட்டத்தரணியுமான திரு. ஜோதிகுமார் தனது பயணங்களில் சந்தித்த மனிதர்கள் பற்றிய கட்டுரைத்தொடர் 'என் கொடைகானல் மனிதர்கள்!  - பதிவுகள்.காம் -


சவுக்கு மரங்கள்

கொடைக்கானல் நகரின் பள்ளத்தாக்குகளில் இருந்து, மேலெழும் குன்றுகள் வழியாக, மேலேறி, இப்போது பார்வைக்கு மிக சிறியதாய் தோற்றம் தரும், கையளவிலான ஏரியும் பார்வையை விட்டகல, பூம்பாறை பாதை சடுதியாக கீழிறங்க தொடங்கும். பாதையின் இரு மருங்கிலும் அடர்ந்திருக்கும் சவுக்கு மரங்கள் பஸ் ஏதோ ஒரு சோலைக்குள் செல்வது போன்ற பரவச நிலையை உண்டு பண்ணும்.

சவுக்கு மரங்களோ, சூரிய ஒளியை மண்ணில் விழாதவாறு காப்பதற்கு திடசங்கற்பம் பூண்டவை போன்று, தமது கிளைகளாலும் வாதுகளாலும் ஒன்றையொன்று நெருக்கமாக பிண்ணி பிணைந்து விழும் சூரிய கதிர்களை தடுத்து, அம் முயற்சியின் வெற்றி களிப்பில், தலையை மெல்ல மெல்ல ஆட்டி, வீசும் காற்றில் புன்னகைப்பன – தத்தமது வெளிர் நிற மஞ்சள் மலர்களோடு.

சூரிய ஒளி படாததாலோ என்னவோ, அடர்ந்திருக்கும் அந்த குட்டை குட்டை மரங்களின் கீழ் காணப்படும் தரையும், அந்நிழலுக்கே ஏற்ற ஓர் கரிய நிறத்தில், கீழே கிடக்கும் சவுக்குகளின் உதிர்ந்த ஒடுங்கிய சவுக்கு இலைகளுடன், கரிய மெத்தை கிடப்பது போன்ற உணர்வினை பார்ப்பவர்க்கு தோற்றுவிக்கும்.

காலை நீட்டி “அப்பாடா” என்று இந்த கரிய கரிய மொரமொரப்பான மெத்தைகளில் படுத்து, வீசும், இந்த அருமையான சில்லிட்ட காற்றை உள்ளிழுத்து கிடந்தால் எவ்வளவு சுகமாயிருக்கும் என்பது போன்ற யோசனைகள் எல்லாம் மேலெழ, பஸ்ஸோ விரைந்து விரைந்து அந்த ஒடுங்கிய பாதையில், சவுக்கு மரங்களின் கிளைகள் சில சமயங்களில் பஸ் ஜன்னல்களை பலமாக தேய்த்து உரசி பெரும் சப்தம் எழுப்ப – படி படியாய் கீழ் இறங்கி சென்றுக்கொண்டிருக்கும், வளைந்து வளைந்து.
ஒரு வளைவில், ஒடித்து திரும்பும் போது, மலையடிவாரம் சார்ந்த ஓர் குன்றின் சரிவில் கிட்டத்தட்ட ஓர் வெட்டவெளி பொட்டலில் என்று கூட சொல்லலாம், அமைந்து கிடந்தது பூம்பாறை என்னும் அந்த மிக சிறிய நகரம். பெட்டி விடுகள். சிறிய சிறிய பெட்டி கடைகள். ஒரு கோயில், அதில் அலறும் ஒரு ஒலிப்பெருக்கி – போக, பஸ் நிறுத்தம் அப்படி இப்படி என்று ஏதும் இங்கு இருப்பதாக இல்லை. தேனீரோ சாப்பாடோ இந்த சிறிய பெட்டி கடைகளே தஞ்சம்.

“விடுதலை நகரா… அதுக்கெல்லாம் பஸ் கிடையாது… மண் வண்டியில போயிறலாம்…”

ஒருவாறு, வந்த ஓர் மண் லாரியை நிறுத்தி ஏறிக்கொண்டேன். குழிகளில் ஏறி இறங்கி அல்லது இறங்கி ஏறி யானை இருபக்கமும் ஆடி ஆடி செல்லுமே அது போல லாறி மேலே ஏறத்தொடங்கியது.

“மண்ணனூர் வழியா – பஸ்ஸா – இருக்கு… ஆனா எந்த நேரமும் இல்ல… ஒரு நாளைக்கு ரெண்டு…”

பெரியவர் கூறி இருந்தார். “முடிஞ்சா குண்டுப்பட்டி போங்க… சவுக்கு மர போராட்டம்ன்னு சொன்னேன் இல்ல… அந்த சனங்க அங்கதான் இருக்காங்க… அண்ணாமல, சரவணன்…போங்க… சந்தோஷ படுவாங்க…”

லாரியின் கதவை திறந்து கீழே குதித்து, கதவை மூடி நன்றி தெரிவித்து கையை அசைத்தேன்…

ரோட்டோரமாய் ஓர் பெட்டிக்கடை. ஐந்தடி நீளமும் – நாலடி அகலமும் – ஓர் மிகச்சிறிய லாரியின் பின்பக்கத்தை அப்படியே கழற்றி எடுத்து அவ் ஒடுங்கிய பாதையோரமாய் தூக்கிபோட்டது போன்ற ஓர் சிறிய பெட்டிக்கடை. உள்ளே நீளத்திற்கு இரண்டு ஒடுங்கிய பெஞ்சுகள். ஜன்னல் கிடையாது… வெளிச்சம் வர. அதற்காக அந்த லாரியின் பின்பக்கத்தை திறந்து வைத்திருந்தார்கள் அரைவாசிக்கு.

"அண்ணாமலையா… எங்க இருந்து வர்றீங்க… அடடே இலங்கையா… கண்டியா… நாங்க எல்லாம் அந்த பகுதிதான்…”

உள்ளே பெஞ்சுகளில் அமர்ந்து பிளேன்டீயை சுவைத்தவாறு அமர்ந்திருந்த நான்கைந்து தாடி வளர்த்த மனிதர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்… “தேத்தணி சாப்பிடுவோங்க…சரி சரி… போயிட்டு பாத்துட்டே வந்திருங்களே… இப்படியே நேரா போங்க… இந்தா இங்கன… கோயில தாண்டுனோடன… வீடுங்க… அதுல…”
அந்த வீடுகள், இலங்கையின் லயங்களை தோற்றத்தில் ஒத்திருந்தன எனலாம்.

ஆனால், தொடராய் இன்றி இவ்விரண்டு வீடுகளாய், அருகருகே, இந்த மலைச்சரிவில் நின்றன. சில வீடுகள் தனித்தும் காணப்பட்டன.

அண்ணாமலை – சரவணன் – இருவருமே சிறிமா–சாஸ்த்திரி ஒப்பந்தத்தின் கீழ் நாடு கடத்தப்பட்டு வந்தவர்கள்.

இதில் அண்ணாமலையின் நாடு கடத்தல், போதுமான பலவந்தத்தையும் உள்ளடக்கியே இருந்தது என்பதை அவரே எனக்கு விவரித்தார்.

அந்த சிறிய அறையில் முக்கால் பங்குக்கு ஒரு கட்டில். அதில் ஒரு தொங்கலில் நான். மறு தொங்கலில் அண்ணாமலை – பக்கத்தில் நாற்காலியை போட்டு சரவணன் தேனீரை சுவைத்தவாறு இருந்தார். அண்ணாமலை தன் கதையை துவங்கினார்.

“சாப்பாடு சரியில்ல… வெளிய போய் சாப்பிடெல்லாம் ஏலாது… சுத்தி தகரம் - வெளில இருந்து பாக்க முடியாது – முள்ளுகம்பி – ராவுல அதுல கரண்ட் – ஒரு எழுபதடி நீட்டம். இருபது முப்பது அடி அகலம். இருநூறு பேர் – வெளிய வந்து திரியலாம் – தகரத்த சுத்தி. சாப்பாட்ட மேசையில வச்சோம் – அடிச்சானுங்க – அடிச்சாப்புல… சாப்பிட ஏலாதுனுட்டோம் – பெறகுத்தான் கொஞ்சம் ஒரு மாதிரியா எங்களயும் மதிக்க ஆரம்பிச்சானுங்க மனுசனுங்கன்னு…”

எல்லாம் அப்பாவால வந்ததுங்க… அவரு எங்களுக்கு தெரியாம எழுதியிருக்காரு – யாரோ கிளாக்கர் பேச்ச கேட்டுக்கிட்டு. அவென், அப்பாகிட்ட காசு வாங்க, இதெ சொல்லி, அத சொல்லி எழுதியிருக்கிறான்… அப்பாவ பிடிக்க போலிஸ் வந்தப்பதான் தெரியும் விஷயம்… நான் முன்னுக்கு போயி நின்னேன்… நாந்தான்னு… மொத நாள் பசறை பொலீஸ்ல… மறுநா அந்திக்கு ட்ரெயின்ல கொழும்பு…”

“டீ கேம்ப்னு சொன்னானுங்க… ஒரு ஆறு மாசம்… அப்பெல்லாம் நா நல்ல செவப்பு… வாட்ட சாட்டமா இருப்பேன்…”

சுவரில் தொங்கிய ஒரு படத்தை கழற்றி எடுத்து என்னிடம் நீட்டினார். “நா யார்னு சொல்லுங்க பாப்போம்…”

அது ஒரு கரப்பந்தாட்ட குழுவினரின் படம். வெற்றி பெற்ற கிண்ணம் தரையில் இருக்க – அதனை சுற்றி இருபுறமும் இரு இளைஞர்கள் ஒருகளித்து படுத்து கேமராவை பார்த்துக் கொண்டிருக்க அவ்விருவரை சுற்றி ஓர் அரை வட்டத்தில் ஒரு ஏழெட்டு வாட்டசாட்டமான இளைஞர்கள்.

“எப்படி கண்டுப்பிடிச்சிங்க… பக்கத்துல இருக்கிறவரு பண்டைய்யா… நல்லா வெளையாடுவாரு… டாஷ் அடிக்க நெட்ல பாஞ்சாருன்னா- அடித்தான்… கீனாக்கொலை, தெம்மோதர, பதுள – எல்லா எடமுமே நாங்கதான் செம்பியன்… நாங்க வரறோம்ன்னா அதிர்ந்திருவானுங்க…”

“அப்ப என்னா… எனக்கு இருபத்திநாலு வயசு… அந்த டீ கேம்ப்ள சின்ன சின்ன புள்ளைங்கவுட்டு அப்பாமாரெல்லாம் கூட இருந்தாங்க… அழுதுருவாங்க…”

“நா ஆதரவு தந்தேன்…அழாதிங்க… என்னா…ரெண்டு மாசம்… அப்பறம் குடும்பத்தோட ஒன்னு சேந்துரலாம்ன்னு…”

“பெறகு ஆயிரத்தி தொள்ளாயிரத்தி எழுபத்தியாறு – ஆடி மாசம் – தலைமன்னார் ட்ரெய்ன் – பெறகு கப்பல்… அப்பத்தான் குடும்பத்தோட சேந்தேன்..”
ட்றெய்ன்ல ஏறுறப்ப எங்க தோட்டத்த நெனச்சிக்கிட்டேன்… என் மக்கள நெனச்சிக்கிட்டேன்… நாங்க வெளாடுன மைதானத்த நெனச்சிக்கிட்டேன்… இனி பாக்கவே ஏலாதோ… சுத்தி இருந்தவுங்க அழுத அழுக… எனக்கும் கண்ல தண்ணி – என்ன அறியாமலேயே…

“ஆலங்குடி – புதுக்கோட்ட பக்கம்… செய்யாத வேல இல்ல… மாடு ஓட்டவும் போனேன்… கீநாட்ல சம்பளம் – கூடுனா – ஏழெட்டு ரூபா… அந்த நேரம்தான் குருசாமி அங்க வந்தான்… ஆள் வேணும்ன்னு… வந்து பாருங்கன்னான்…”

“போய் பாத்தா… கத்தரி ஓடை… என்னாமா காடு… ஒடனே முடிவு செஞ்சுட்டோம்… இந்த சூட்டு பிரதேசத்த விட்டு – போதும்டா சாமீ… போயிருவோம்ன்னு…”
“அது என்னான்னா, சவுக்கு மரத்த உரிக்கிறது – பட்டைய. குடும்பம் குடும்பமா உரிக்கனும் – ஒவ்வொரு குடும்பமும் ஒரு நாளைக்கு ஒரு பதினைஞ்சு மரத்த உரிக்கனும்… அந்த பட்டைய பெறகு அளவா வெட்டி எடுத்து பெங்கள10ருக்கு அனுப்பிருவானுங்க – பொடி செய்ய…”

“இதுக்கு பேரு கூப்பு… ஒரு நாப்பத்திநாலு குடும்பம் எங்க கூப்புல… காட்டுக்குள்ள இருக்கும்… சின்ன கைப்புள்ளைக எல்லாம் சின்ன குழிய வெட்டி முக்கோணம் மாதிரி குச்சிகள ஊனி தொங்கவுட்டுருப்பாங்க…”

“அங்க கூப்புக்குள்ளேயே ஒரு கம்பனி கடை இருக்கும்… மாசா மாசம் அரிசி கொடுத்துருவாங்க… அந்த மளிகை கடையில சாமான்கள் எல்லாம். வேற எங்கத்தான் வாங்குறது – மாசம் மீதி இருந்தா சம்பளம் கெடைக்கும்… சம்பளம் சில வேள மூனுமாசத்துக்கு ஒரு தடவ… அதுவும் மிச்சம் மீதி இருந்தா…”

“ஒரு கிலோ உரிச்சா எட்டு காசு… ஒரு ஆள் ஆகக் கூடினா பன்னெண்டு ரூபாவுக்கு உரிக்கலாம்…”

“கிட்டத்தட்ட ரெண்டு – மூனு வருஷம் ஓடிருச்சி… காத்தோ மழையோ – பட்ட உரிச்சாகனும் - சம்பளமும் மிச்சப்படாது… காட்டுக்குள்ள, உள்ரோட்டுல, கூப்புக்கு வந்துட்டிங்களோ வெளி தொடர்பே கெடைக்காது…”

“ஆக மொத்தமா மூனு கூப்பு… கிட்டத்தட்ட நூத்தி அம்பத்தியேழு குடும்பங்க… ஆயிரத்தி தொள்ளாயிரத்தி என்பத்தி ஒன்பதா இருக்கனும்…”

இப்படி காட்டுக்குள்ள காத்து மழையில – வெளிய வர முடியாதப்படி – சம்பளமும் இல்லாம – எவ்வளவு காலம் இருப்பீங்க… இந்த சமயத்துலதான் பதிமூனு குடும்பம் கூப்ப விட்டு – வெளிய கிளம்பிருச்சி… நாங்க போறோம் கணக்க முடியுங்கன்னு…”

அதுல ஒரு ஆளு நம்ம தலைவர் – சரவணன் – கணக்க முடிச்சா ஒரு சதம் பாக்கி இல்ல… இருந்தாலும் சரவணன் போறேன்னுட்டாரு…”

“கூபு;புல இருந்து ஒரு ஆள் மாசத்துக்கு ஒரு தடவத்தான் வெளிய போகலாம்… அது என்னவா இருந்தாலும் சரி… அதுவும் குடும்பத்துல ஒரு ஆளு… வெசயம் வெளங்குதா ஒங்களுக்கு…அப்ப, குடும்பத்த உட்டுட்டு, கூப்ப உட்டுட்டு, நீங்க ஓட மாட்டீங்க…”

“மத்தது – ஒங்க சம்பள பாக்கி எல்லாமே கூப்புலதான் இருக்கும்…”

போறீங்களா? வேல செய்ய மாட்டீங்களா?? போனஸ் மாதிரி அப்போதைக்கு அப்போத அடி வேற. இப்படி, கூப்பு ஆட்கள அடிக்கிறது – கொடும படுத்துறது – எல்லாமே வரும்… அண்ணெ தம்பி செத்துருப்பாங்க… எங்களுக்கே கூட சொகமில்லாம போயிருக்கும் – ஆனா வெளிய போக ஏலாது…”

“சரவணன் என்னா செஞ்சுருக்காருன்னா தனி ஆளா போயி – ஏதோ – தொடர்புகள ஏற்படுத்தி இருக்காரு…”

“செம்பனூர்ல ஒரு ஃபாதர் இருந்தாரு… மத்தது கோபாலகிருஸ்ணன் – அவர் பாம்பார்புரத்துல – பின்ன சிவ சாந்தகுமார்…” – இவுக எல்லாருமே ஏதோ ஒரு வகையில இலங்கையில இருந்து வந்தவுங்க…”

“இவெங்கெல்லாம் சேந்து தாயகம் திரும்பியோர் இயக்கம் அப்படின்னு ஒன்ன உருவாக்கிட்டாங்க…”

“அந்த சமயத்துல நாங்க முப்பது காசு கேட்டோம்… ஏன்னா மளிகை சாமான் வாங்கவே பத்தல – இந்த எட்டு காசு…”

“அப்பத்தான் இந்த ஸ்ட்ரைக் வந்திச்சி… ஏலாதுன்னுட்டோம் – பட்ட உரிக்க ஏலாது – போலீஸ்ஸ கொண்டு வர்றானுங்க – அடியாள கொண்டு வர்றானுங்க”
“இந்த சமயத்துல ஃபாதர் எல்லாம் சேந்து சுப்ரீம் கோட்டுக்கு ஒரு மனு கொடுத்துட்டாங்க…”

“சுப்ரீம் கோட்டும் – ஒரு கமிஷன போட்டு – பேரிஜம் குளம் இருக்குல – அங்க ஒரு விசாரணைய தொடங்கிரிச்சி…”

“அந்த விசாரணைக்கு கூப்பு ஆளுங்க யாரும் போகவிடாம தடுத்தாங்க… சாட்சி சொல்ல… அந்த சமயத்துல மத்த கூப்புல இருந்து இளசுக வந்து – விசாரணைக்கு வர்றவுங்கள அடிக்கிறதுக்குன்னு நிப்பாட்டி இருந்தவங்களுக்கு செம்மையா கொடுத்திருக்காங்க…”

“அந்த நேரத்துல – ஒரு பஞ்சாபிகாரரு கலெக்டரா இருந்தாரு – சிங்குன்னு… அவரு எங்களுக்கு மிச்சம் மிச்சம் ஆதரவு…”

“இந்த சமயத்துல விசாரணை கமிஷன் – எல்லாத்தையும் ஆராஞ்சு பாத்திச்சி – பாத்து இவுங்கெல்லாம் கொத்தடிமையா – பொண்டட் லேபராத்தான் – இருக்கிறாங்கன்னு முடிவு செஞ்சிருச்சி …”

“சம்பளமும் இல்ல… வெளியவும் போக முடியாது… நம்பமாட்டீங்க – ஒரு மனுசிக்கு பிரசவம் –ரெண்டு கெழவிங்கத்தான் பாத்தாங்க – அந்த இருட்டு குடிசைக்குள்ள – குடிசைன்னா – அப்படி ஒரு குடிச… குனிஞ்சு உள்ளபோயி படுத்துக்கனும் – அதுலயே சமைக்கனும் – ஒரு காம்பராத்தான் – அதுக்கு பேரு குடிச…”

கோர்ட் ஓடர் போட்டுருச்சி… இவுங்கள ஒடன விடுதல செய்யனும்… அரசாங்கம் இவங்களுக்கு ரெண்டு ஏக்கர் காணிய கொடுக்குனும்ன்;னு…”

ஆனா கோர்ட் ஆர்டர் போட்டு என்ன செய்ய. அதுக்கு பெறகும் போராட்டம். அந்த ஆர்டர் எங்க கைக்கு வர்றத தடுக்க என்னென்னவோ செஞ்சாங்க…”

“கோர்ட்டு இப்படி ஒரு ஆர்டர் போட்றதுக்கு, கலெக்கடர், சிங், பாதர் – கோபாலகிருஸ்ணன் –இவங்க எல்லாருமே எடுத்த நடவடிக்க – விசாரண கமிஷன் – இதுவெல்லாமே காரணந்தான்…”

“குருசாமிவுட்டு ஆளுங்க சிங்கையும் கொல்ல பாக்குறாங்க… எங்களையும் கொல்லப்பாக்குறாங்க… கோபாலகிருஸ்ணன் – ஃபாதர் – இவுங்களையும் கொல்ல குறி வைக்கிறாங்க… இவ்வளவும் எப்பங்கறீங்க? கோர்ட் ஆர்டருக்கு பெறகு… நம்புவிங்களா…?”

“சிங், துப்பாக்கி இல்லாம எங்கயும் போகமாட்டாரு… வாகனத்துல ஏறுனா துப்பாக்கியோடத்தான் ஏறுவாரு… ஏன்னா பொலிஸ{ம் குருசாமி பக்கம்… பொலீச நம்பி அவரு வாகனத்தல ஏற மாட்டாரு…”

“நாங்க ஸ்ட்ரைக் இருக்கிறோம்… என்னா ஆனாலும் சரின்னு – சாப்பிட இல்ல – பல்ல கடிச்சிக்கிட்டு இருக்கோம்… பாதர் – கோபாலகிருஸ்ணன் – இவுங்கெல்லாம் – எங்கிருந்தோ அரிசியெல்லாம் சேகரிச்சி கவனமா கொண்டு வந்து கொடுக்கிறாங்க… வெளிய தெரியாதபடி…”

“கடைசியில சேதி வந்திருச்சி… கோர்ட் ஓடர் தாசில்தார் ஆபிஸ்க்கு வருதுன்னு…”

“குடும்பத்துல ஒரு ஆள்… சில்லற சில்லறையா போயி – கலெக்கடர் ஆபிஸ்ல ஒன்னா, ஒரே நேரத்துல குழுமிட்டோம் – ஆப்பிஸ் உள்ளுக்கே போயி போராட்டம் – நாக்காலி மேச எல்லாத்தையும் புடிச்சி தள்ளி அத்தன பேரும் உள்ளுக்கே ஒக்காந்துட்டோம் – அவ்வளவு ஆத்திரம் – வெளிய தள்ளுனானுங்க – ஒக்காந்துட்டோம் – வீதி மறியல் செஞ்சோம்…”

“அப்ப தகவல் வந்துச்சி – காணி உறுதி சிங் ஆபிஸ்ஸ{க்கு வந்துருச்சின்னு”

“ஒரு குரூப் – நான் – கோபாலகிருஸ்ணன் – சரவணன் – இப்படி ஒரு குரூப் – ஒரு பஸ் ராத்திரி ஒன்னறைக்கு வத்தல குண்டுல கௌம்பும் – விடியக்கால மூனு முப்பதுக்கு – கொடைக்கானலுக்கு வந்துரும் – அதுல ஏறி கலெக்டர் பங்களா வீட்டுக்கிட்ட எறங்கிட்டோம்…”

“எறங்கி நடக்குறோம்… கருக்கல்ல… எங்கள கடந்து ஒரு கார் போனிச்சி… தாண்டி போகயில – நாங்க யாருன்னு ஜன்னல் வழியா ஒரு தல வெளிய எட்டி பாக்குது – லைட் வெளிச்சத்துல அது பழனிவேல் அப்படிங்கிறது தெரிஞ்சிரிச்சி… அதாவது, அவென், குருசாமியோட காவல்காரன்… ஒடனே எங்களுக்கு புரிஞ்சிருச்சி – எங்களத்தான் தேடி வந்துருக்காங்கன்னு… ஒடனே ஆறு பேரும் – வேலி கம்பிய தாண்டி குதிச்சி விடியிற வரைக்கும் பத்தைக்குள்ள மறைஞ்சி இருக்கோம் – ஒரு மரத்துக்கு பின்னால – அந்த கார் ஒரு அஞ்சு முற மேலயும் கீழேயும், கீழேயும் மேலேயும் தேடி அலையுது – கண்டா சுட்டுருப்பானுங்க – ஏன்னா அவ்வளவு ஆத்திரம் அவனுங்களுக்கு…”

“இந்த நேரத்துல சிங்க மாத்த சொல்லி உத்தரவு வந்துருச்சி – பாருங்க, எவ்வளவு அதிகாரம்ன்னு… அதுக்கெதிராவும் போராட்டத்த தொடங்கினோம்… கொடைக்கானல் டவுன்ல ஊர்வலம் – ரோட்டு மறியல் – அது இதுன்னு…”

“பிரச்சனை முடியும் வரை சிங்க மாத்த கூடாதுன்னு”

“கடைசியா, இவ்வளவு போராட்டத்துக்கு பின்ன, ஆளுக்கு ரெண்டு ரெண்டு ஏக்கர் நெலம் – வீடு – இதெல்லாம் கொடுத்து – இந்த ஊர எங்ககிட்ட தந்தாங்க…”

“ஊர்பேர வச்சுக்கிட்டோம்… – விடுதலை நகர்ன்னு…”

[தொடரும்]

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.