தனது எழுத்துகளால் நம்மையெல்லாம் குலுங்கிச் சிரிக்க வைத்த எழுத்தாளர் போனாச்சானா (பொ.சண்முகநாதன்) மறைந்து விட்டார். இலங்கைத்தமிழ் இலக்கியத்தில் நகைச்சுவை எழுத்துக்கும் முக்கியத்துவமுண்டு. நகைச்சுவையென்றால் முதலில் நினைவுக்கு வருபவர்களிலிலொருவர் எழுத்தாளர் பொ.சண்முகநாதன். இவரது 'கொழும்புப்பெண்', 'பெண்ணே நீ பெரியவள்தான்' மற்றும் 'வெள்ளரி வண்டி' ஆகியவை முக்கியமான வெளியீடுகள்.

தமயந்தி பதிப்பகம் (அச்சுவேலி) வெளியிட்ட 'பெண்ணே நீ பெரியவள்தான்' இவரது நகைச்சுவைக் கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. வாசித்துப்பாருங்கள். சிரித்து மகிழுங்கள். நூலகம் தளத்தில் இந்நூலினை வாசிக்கலாம். அழகான அட்டைப்பட ஓவியத்தை வரைந்திருப்பவர் ஓவியர் வி.கனகலிங்கம் (வி.கே). நூலின் தலைப்புக்கேற்ற ஓவியம். பெரிய பெண்ணை அண்ணாந்து பார்க்கும் ஆணின் ஓவியம். அட்டைப்படமே நூலினை வாசிக்க வேண்டிய ஆர்வத்தை ஏற்படுத்துகின்றது.

தரமான நகைச்சுவை இலக்கியம் எவ்விதம் படைக்கப்பட வேண்டுமென்பதற்கு நல்லதோர் உதாரணப்பிரதியாக இத்தொகுதியை என்னால் கருத முடிகின்றது.

இவரை நான் ஒருபோதுமே நேரில் சந்தித்ததில்லை. இவரது எழுத்துகள் மூலமே இவர் எனக்கு அறிமுகமானவர். முகநூலில் முன்பொருமுறை இவரைப்பற்றிய குறிப்பொன்றினையிட்டபோது அதனைத் தனது முகநூற் பக்கத்தில் பகிர்ந்துகொண்டதுடன் எனக்கும் முகநூல் நட்புக்கான அழைப்பினை அனுப்பி நண்பராக ஏற்றுக்கொண்டிருந்தார்.

இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க நகைச்சுவை இலக்கிய முன்னோடிகளிலொருவரான இவரது மறைவால் வாடும் அனைவர்தம் துயரில் நானும் பங்குகொள்கின்றேன்.

'பெண்ணே நீ பெரியவள்தான் 'நூலுக்கான இணைய இணைப்பு: http://noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%87_%E0%AE%A8%E0%AF%80_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D