- பதிவுகளுக்குப் படைப்புகள் அனுப்புவோருக்கான அறிவிப்பில் 'ஆனால் ஒரு விடயத்தை ஆக்க பூர்வமாகவும் குறிப்பிடலாம். எதிர்மறையாகவும் குறிப்பிடலாம். விடயமொன்றினை ஆக்க பூர்வமாகக் கூறுவதுதான் பதிவுகளின் நிலைப்பாடு. படைப்பாளிகளே! உங்கள் எழுத்தின் நியாயத்தை தீவிரத்தை உங்கள் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சிகள் மேலெழுந்து மூடி மறைத்து விட விட்டு விடாதீர்கள். உணர்ச்சிகளை நீக்கி உங்கள் கருத்துகளைத் தர்க்க ரீதியாகப் பதிவு செய்யுங்கள். அதுவே வரவேற்கப் படக் கூடியது.'என்று கூறியிருக்கின்றோம். அத்துடன் 'பதிவுகளிற்கு வரும் ஆக்கங்களை மூலக் கருத்துச் சிதையாத வண்ணம் திருத்துவதற்கு ஆசிரியருக்குப் பூரண அதிகாரமுண்டு. அது ஆசிரியரின் உரிமை. ஆனால் அதனை விரும்பாவிட்டால் படைப்புகளை அனுப்பும் பொழுது 'வெளியிடுவதானால் திருத்தாமல் மட்டுமே வெளியிடவும்' எனக் குறிப்பிட்டு அனுப்பி வைக்கவும். இதன் மூலம் பல தவறுகளை நீக்கி விட முடியும்' என்றும் கூறியிருக்கின்றோம். பதிவுகளுக்குப் படைப்புகள், எதிர்வினைகள் அனுப்புவோர் அவற்றில் தனிப்பட்ட தாக்குதல்களைச் செய்வது தவிர்க்கப்பட வேண்டும். அதற்கொப்ப ஜோதிகுமாரின் கவிஞர் மஹாகவி பற்றிய கட்டுரைக்கான உடையப்பன் அன்பரசு லெனினின் எதிர்வினையில் சில சொற்பதங்களைக்கொண்ட  சொற்றொடர்களைத்  தவிர்த்திருக்கின்றோம். ஆனால் அவர் கூறியிருக்கும் கருத்துகளுக்கு ஊறு விளைவிக்காத வகையில் அவை தவிர்க்கப்பட்டுள்ளன. - பதிவுகள் -


பகுதி - 1
ஜோதிகுமார் எழுதிய கட்டுரையை 'ஆய்வு' என்று தலைப்பிட்டு, 'பதிவுகள்' வெளியிட்டதும் அதற்கு பதில் எழுதுவதும் நம் காலச் சூழலின் அவலங்கள். பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் 1984இல் எழுதிய அறிமுகக் குறிப்பிற்கு, மாக்சிம் கார்க்கியின் முழுத் தொகுப்பின்  8ஆம் ,9ஆம் பகுதிகளையும் , லெனின் கலை இலக்கியம் பற்றி எழுதிய நூலையும், Van Gogh, A.J.Abdul Kalam  ஆகியோர் எழுதிய நூல்களையும் இன்ன பிறவற்றையும் வாசித்து பதில் எழுத இவருக்கு 37 ஆண்டுகள் பிடித்திருக்கிறது. அல்லது, பேராசிரியர் ஸ்ரீ. பிரசாந்தன் தொகுத்த 'மஹாகவியியல்' தொகுப்பை வாசித்து, அருட்டுணர்வு கொண்டு, அங்கே கண்டடைந்த மு.பொ.வின் விமர்சனங்களை விளங்காமல் உருவி (மு.பொ. பல ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய விமர்சனங்களைப் பிரசாந்தனின் தொகுப்பில் காணுமளவிற்கான வாசிப்புப் பலவீனத்துடன்), அதை முதலாய் வைத்து மஹாகவி பற்றித் தானும் பேசலாம் என்று இவர் காட்டியிருக்கும்  அறிவீனத்திலிருந்து இவரே மீள வேண்டும்.   தனது வாசிப்புப் பலவீனத்தையும் மு.பொ. கருத்தைத் தனது கருத்தாக்கி இன்னொரு முலாம் தடவிக் காட்டும் வித்தையையும் ஆங்கில நூல்களைப் பிழையாக அர்த்தம் கொள்ளும் தவறினையும் வெளிச்சமாக்கியுள்ளார்.

"புறநடைகளைக் கொண்டன்றி, பொதுப்பண்புகளைக் கொண்டு ஒரு கவிஞனை நாம் மதிப்பிட வேண்டும். எனினும் புறநடைகளையும் ஒதுக்கிவிடவும் முடியாது. இந்த அறிமுகத்திலே அத்தகைய ஓர் ஆய்வு தேவையற்றது எனக் கருதி தவிர்த்துக் கொண்டேன்" என்று நுஃமான் அவர்கள் மிகத் தெளிவாக எழுதியிருக்கிறார்.  "இக்கூற்றில் ஓர் தள்ளாட்டம் தெரிகிறது என்பது வெளிப்படை" என்கிறார் ஜோதிகுமார். பேராசிரியர் நுஃமான் அவர்கள் ஒரே வீச்சில் அதனைச் சொல்லவில்லை. முதலில் அந்த நிலைப்பாட்டைக்கூறி, பின்னர் நிதானித்து , இப்போதைக்கு அது அவசியமில்லை என்கிறார். அந்தப் புறநடைகள் எவை என்பதனையும் அவர் கூறவில்லை. "ஆனால், புறநடைகளை நாம் ஒதுக்கி விடவும் முடியாது  என்று கூறும் அதே வீச்சில், அது தேவையற்றது என்பதே இங்கு உறுத்தலான விடயமாக அமைந்து போகின்றது" என்கிறார். அடுத்த வரியில் இது அனைவரையுமே ஈர்க்கக்கூடிய ஒன்றுதான் என்கிறார். முதலில் உறுத்தலாகத் தெரியும் ஒரு அம்சம் அதே கணத்தில் மறுவரியில் அனைவரையுமே ஈர்க்கக் கூடிய ஒன்றாகத்  தெரிவது ஒரு தள்ளாட்ட நிலைமைதான். உறுத்தல், ஈர்க்கும் பிரச்சினை என்பன,ஜோதிகுமாருக்கு அடுத்த பந்தியில் சிக்கலாக மாறிவிடுகிறது.

"மஹாகவியின் ஆக்கங்களை முழுமையாகக் கதைப்பதானாலும் சரி அல்லது அதனை விடுத்து நுஃமான் அவர்களின் புறநடையை ஒதுக்கிவிடும் அணுகுமுறையைக் கைக்கொண்டாலும் சரி - மேற்படி தள்ளாட்டம் ஏதோ ஒரு வகையில் வந்து சேர்ந்துவிடும் என்பது பிறிதொரு விடயம்" என்கிறார் ஜோதிகுமார். இந்தத் தள்ளாட்டம் பற்றித்தான் ஜோதிகுமார்  இதுவரை பேசிக்கொண்டிருக்கிறார். இப்போது அதே பிரச்சினையைப் பிறிதொரு விடயம்  என்கிறார் ஜோதிகுமார். 

மஹாகவியின் கவிதைகளில் ஓரிரு புறநடைகளை நுஃமான் அவர்கள் அவதானித்து, ஒரு நேர்மையான விமர்சகனின் பார்வையில் அதனை  வாசகர்களிடம் முன்வைத்திருக்கிறார். ஜோதிகுமாருக்கு  இந்த நிமிஷம் வரை அந்தப் புறநடைக் கவிதைகள்  எவை என்றே தெரியாது. அவை எவை என்று  பேராசிரியர் நுஃமான் சொன்னால்தான் உண்டு. அந்தப்புற நடை எவை  என்று கண்டுபிடித்துச் சொல்லும் திராணி ஜோதிகுமாருக்குக் கிடையாது.   உடனேயே 'புறநடையை ஒதுக்கிவிடும்' அணுகுமுறை என்று ஜோதிகுமார் அதற்கு பெயர் வைத்து விடுகிறார்.

பகுதி -2

ஜோதிகுமாருக்கு முருகையனோ மஹாகவியோ கருப்பா, சிவப்பா என்றே தெரியாது. பேராசிரியர் நுஃமான் இந்த இருவரையுமே ஆதியோடந்தமாக அருகிலிருந்து பார்த்து அறிந்தவர். கவிதை பற்றிய கருத்து நிலைப்பாட்டிலும் இவர்கள் ஒத்த கருத்தினர்.

"மஹாகவி எனும் கவிஞனின் இயல்பான வளர்ச்சியின் இன்றியமையாத ஓர் அங்கமாக அவரின் சிறு நாடகங்களும் அமைந்துவிடுகின்றன என்பதில் ஐயமில்லை" என்று முருகையன் கூறியதைக் கண்டுபிடித்து, நுஃமான் அவர்கள் கூறும் 'புறநடை' க்கு எதிரான கருத்தை முருகையன் கூறுவதாகச் சிண்டு முடிக்கும் அவலம் இங்கு நடந்தேறுகிறது.  மஹாகவியின் சிறு நாடகங்கள் பற்றித்தான் முருகையன் கருத்துத் தெரிவித்திருக்கிறார். அந்த நாடகங்களில் நுஃமான் கூறும் 'புறநடைகள்' எதுவும் இருந்ததா என்று முருகையனுக்குத் தெரியாது. முருகையன் கூறும் அந்தச் சிறு  நாடகங்களில் உள்ள புறநடைகளை 'ஒதுக்கிவிடவேண்டும்' என்று நுஃமான் எங்கும்  சொன்னதாகவும் தெரியவில்லை. ஏதோ, நுஃமான் 'புறநடை', 'ஒதுக்கிவிடவேண்டும்' என்று சொன்ன விஷயங்களைத்தான், முருகையன் 'இன்றியமையாத அங்கம்' என்று வாதாடுவதுபோல, புரளி கிளப்பும் வேலைக்குப்பெயர் விமர்சனம் ஆகாது.

'ஐயா, நான் சிறு நாடகங்களைப் பொறுத்தே குறிப்பிட்டிருந்தேன்'- முருகையன் 

'ஏய், ஒதுக்குவது' என்ற ஒரு கேள்வியின் பின்னணியில், சிறு நாடகம், பா நாடகம், காவியங்கள், தனிப்பாடல்கள் - அவற்றின் உள்ளடக்கங்கள் -உருவங்கள் - இத்தியாதி - இவை அனைத்தும் ஏதோ ஒரு வகையில் கைகோர்த்துவிடச் செய்யும் என்று உனக்குத் தெரியாதா?'

'சாமி, நீங்க சொல்ற எதையுமே நான் படிக்கலீங்க. ஒரு பாநாடகம் எழுதி , படித்துப்பார்க்கச் சொல்லித்தந்தார். அதை என் தம்பி சிவானந்தன் வாங்கிக்கொண்டுபோய் துலைச்சுப் போட்டான், பாருங்கோ. நான் அவர் எழுதின வேறு எதையும் வாசிச்சதில்லை.'

'என்னா மேன் பேசுறே! அதாவது 'ஒதுக்குவது' கவிஞனின்  ஆளுமையில் இருந்து பிரித்தெடுக்கமுடியாத சங்கதி என்பது மறுதலிக்க முடியாதபடி உனக்கு புலனாகவில்லையா?' (இவருக்கு இது Verbal Diarrhea) 'என்ன சாமி, என்னென்னவோ சொல்றீங்க?'

'நான் சொல்றதைக் கவனமாய் கேள், மனுஷன்! உன் எதிர்க் கட்சிக்காரன் அது 'புறநடை', 'தேவையற்றது' என்கிறான். நீ அது 'இன்றியமையாத அம்சம்' என்று சொல், நான் சொன்னது உனக்கு விளங்குதா? 'சாமி, அவர் எதை 'புறநடை', 'தேவையற்றது' என்று சொல்றார்  என்று தெரிஞ்சாத்தானே சாமி, நான் படித்த புஸ்தகத்திலே அது இருக்கா, இல்லையா என்று சொல்ல முடியும்?'

'இல்லை,மேன்! உன் கூற்றில் தள்ளாட்டம் தெரிகிறது'

பகுதி - 3
பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகக் கவிமழை  பொழிந்திருக்கும் பாரதி,  'வேல்ஸ் இளவரசருக்கு நல்வரவு' என்று தலைப்பிட்டு, ஆங்கிலேய இளவரசரை வா, வா என்று நாவார அழைத்து, நாமிருவரும் இணக்கமாயிருப்போம் என்று பாடல் எழுதியது எப்படி?   'சாதிகள் இல்லையடி பாப்பா' என்று பாடிய பாரதி தனது  மகளுக்குப் பார்ப்பனக் குடும்பத்தில் மாப்பிள்ளை பார்த்து, கன்னிகாதானம் செய்தது எப்படி என்று குரல் எழுப்பும் தி.க. காரர்களை இவர் அறிந்திருக்கவில்லை போலும்!  'ஈனப் பறையர்களேனும்' என்று பாரதி எழுதிய வரிகளுக்கு 'பாட்டுப் பிரசங்கியார்' என்று அயோத்திதாச பண்டிதர் பாரதியை எதிர்த்து எழுதியதை இவர் அறியவில்லை போலும். எல்லாவற்றிருக்கும் புறநடை உண்டு. நுஃமான் formula தான் இப்போது உங்களுக்குக்கைகொடுக்கக் கூடியது. பேராசிரியர் நுஃமானும் சண்முகம் சிவலிங்கமும் மஹாகவியை யதார்த்த நெறியைப் பின்பற்றிய கவிஞன் எனக் கணிப்பிட்டுவிட்டார்கள் என்று சொல்லி யதார்த்தவாதம் பற்றி நுஃமானுக்கும் எங்களுக்கும் விளக்கம்தர பதில் எழுதவேண்டிவந்தது காலக்கொடுவினை. யதார்த்த நெறி என்பது ஏதோ மொக்கன் கடைக் கொத்துரொட்டிப் பார்சல் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார் போலிருக்கிறது. யதார்த்த நெறியின் முக்கியத்துவத்தை கூறியவர்களில் ஏங்கெல்ஸ், கைலாசபதி, கார்க்கி, லெனின் என்று வரிசையை அடுக்குகிறார். ஏங்கெல்ஸிற்கு அடுத்து  கார்க்கியோ லெனினோ கூட இல்லை; கைலாசபதி. கைலாசபதியை இதைப்போல யாரும் அவமானப்படுத்தியது கிடையாது. கைலாசபதி மார்க்சிய அடிப்படையில் இலக்கியங்களை அணுக முயன்றவரே தவிர, அவர் யதார்த்த நெறிக் கோட்பாட்டாளர் அல்லர்.

லெனின் டால்ஸ்டாய் பற்றி ஆறு கட்டுரைகள் எழுதியுள்ளார். டால்ஸ்டாய் ரஷ்ய விவசாயிகளின் வாழ்வையும் கிராமியம் சார்ந்த கம்யூன் அமைப்பினையும் இலட்சியமாக உயர்த்திப் பிடித்தார் என்றும் கிராமிய கம்யூனின் அமைப்பு நிலமானிய சுரண்டலை அடிப்படையாக்கொண்டது என்றும் லெனின் கண்டனம் தெரிவித்திருக்கிறார். டால்ஸ்டாயின் இலட்சியம் பிற்போக்குவாதக் கற்பனை உலகு (regressive Utopia) என்று லெனின் எழுதியிருக்கிறார். டால்ஸ்டாய் சேக்ஸ்பியரை நிராகரித்திருக்கிறார். மார்க்சும், லெனினும் கார்க்கியும்  சேக்ஸ்பியரை உன்னத கவிஞராக ஏற்றிப் புகழ்ந்துள்ளனர். டால்ஸ்டாய் இலட்சிய மயப்படுத்தப்பட்ட தனிநபர்வாதத்தின் தீவிரப் பிரதிநிதி என்றும் சமயங்களில் ஒடுக்குமுறையாளர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டையும் எடுத்திருக்கிறார் என்று பிளக்கனோவ் (Pleckanov) கடுமையாக எழுதியிருக்கிறார். டால்ஸ்டாய் முன்வைத்த சமயரீதியிலான தீர்வை லெனின் விமர்சனத்திற்கு உள்ளாக்கியிருக்கிறார். அநியாயங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்காமை (non-resistance to evil) என்ற அடிப்படையில் இயங்கிய டால்ஸ்டாயை லெனின் கண்டனம் செய்திருக்கிறார். ரஷ்ய இலக்கியத்தின் அதி உன்னத எழுத்தாளராக டால்ஸ்டாயை லெனின் கொண்டாடினாலும் அவரின் எழுத்துகளின் பிற்போக்கு அம்சங்களை லெனின் சுட்டிக்காட்டியிருக்கிறார். டால்ஸ்டாயின்  யதார்த்தவாத எழுத்தின் அடிப்படையில் பிற்போக்குவாத, பழைய நிலமானிய - சுரண்டல் அமைப்பை ஆதரிக்கும்போக்கு காணப்படுவதை  லெனின் வேறு யாரையும்விட அழுத்தமாக எடுத்துக்கூறியிருக்கிறார்.

ஜோதிகுமார் சொல்கிற மாதிரி, 'பழைய உலகத்தின் சிராய்ப்புத் துண்டங்களையும் புதிய முளையின் கூறுகளையும்' கண்டறியும் யதார்த்தவாதத்தின் அடிப்படைப் பண்புகள் டால்ஸ்டாய்க்குத் தெரியாமல் போனதென்ன?


பகுதி -4
லெனின் கூறிய யதார்த்தக் கோட்பாட்டினைப் பிரடெரிக் ஜேம்சன் போன்ற மார்க்ஸிய அறிஞர்கள் புதிய கோணத்தில் இன்று ஆராய்ந்து வருகிறார்கள்.

மார்க்ஸ் - ஏங்கெல்ஸிற்கும் லசெல்ஸிற்கும் (Lasalle) இடையிலான 'சிக் கிங்கென் விவாதம்' என்பதிலிருந்து லுக்காக்ஸ், வால்டர் பெஞ்சமின், பெர்டோல்ட் ப்ரெச்ட் என்று கலைநோக்கு, மார்க்சிய அழகியல், யதார்த்தம் என்பன பற்றித் தொடர்ச்சியான முடிவில்லாத வாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஒற்றை மேற்கோளைக்காட்டி பம்மாத்துப் பண்ணிக்கொண்டிருப்பது இனிச் சாத்தியமில்லை. யதார்த்தம் என்பது தனித்த ஒரு பாணியோ மாடலோஅல்ல. Realism is not just one style or model.'மேற்கோள்கள் இல்லாமல்  அல்லது மேற்கோள்களை விட்டுவிட்டால் ஒரு அர்த்தமும் இல்லாத சில வார்த்தைகளில் யதார்த்தம்  என்பதும் ஒன்று' என்கிறார் விளாடிமோர் நொபொகோவ் என்ற மார்க்ஸிய அறிஞர். நாடகாசிரியன் தனது பாத்திரங்களுக்கூடாக அவர்களின் உணர்ச்சிகளை பார்வையாளனுக்குத் தொற்றவைத்துவிட்டால் அதுதான் நல்ல கலைப்படைப்பு என்று infectiousness கோட்பாட்டை முன்வைத்தார் டால்ஸ்டாய்.  அரங்க இருளில் பார்வையாளனை உணர்ச்சிக்குள் ஆழ்த்தி விடுவதல்ல, அவனை யோசிக்கவும் judge பண்ணவும்  தூண்டுவதற்கு, உணர்ச்சியைத் தொற்றவைக்கும் வேலையை விட்டுவிட்டு, பார்வையாளனைத் தூரப்படுத்தவேண்டும் (Alienation) என்றார் மார்க்சிய நாடகாசிரியர் பெர்டோல்ட் பிரெச்ட். யதார்த்தம், கலைக்கோட்பாடு, மார்க்சிய அழகியல் என்பன ஜோதிகுமார் உதிர்க்கும் மேற்கோள்களுக்குள் முடிந்துபோய்விடுகிற சங்கதி கிடையாது.

'கார்க்கியும் லெனினும் டால்ஸ்டாயும் கைக்கொண்ட யதார்த்த வாதத்திற்கும் மஹாகவி பின்பற்றிய யதார்த்த நெறிக்கும் எவ்வித ஒட்டுறவும் இல்லை என்பது தெளிவாகின்றது' என்கிறது ஜோதிகுமாரின் கூற்று.  கார்க்கியும் லெனினும் டால்ஸ்டாயும் கைக்கொண்ட யதார்த்த வாதம் ஏதோ முனியாண்டி விலாஸ் பொறித்த மீன் மாதிரி வகைப்படுத்துகிறார் ஜோதிகுமார். இந்த மூவருக்கும் இடையில் வெவ்வேறு பார்வைக் கோணங்கள் இருந்திருக்கின்றன. இந்த மூவரும் கொண்டிருந்ததாகக் கூறும் யதார்த்தத்திற்கு வெளியில் விக்டோரியன் கால ஆங்கிலக் கவிஞர்களில் வெளிப்படும் யதார்த்தத்தை வேறு கோணத்தில் ஆராய்கிறார்கள் விமர்சகர்கள். 

மஹாகவி தன்னளவில் தான் தரிசித்த வாழ்வியலை, தான் யதார்த்தம் என்று உணர்ந்ததை தனது கவிதையில் வெளிப்படுத்தியதை, லெனின் சொன்ன மாதிரி ஏன் எழுதவில்லை என்று கேள்வி எழுப்புகிறார். அளவெட்டி இசைக்கலைஞர்களை, நாதஸ்வரக் கலைஞர்களின் வாழ்க்கையை லெனினும் கார்க்கியும் டால்ஸ்டாயும் தெரிந்து வைத்ருப்பதைவிட மஹாகவிக்கு அதிகமாகத் தெரியும். தவில் மேதை தட்சணாமூர்த்தியை மஹாகவிக்கு விளங்கப்படுத்த முனையும் ஞானசூன்யத்தை ஜோதிகுமாரின் கட்டுரையில் காண முடிகிறது. கும்பிழாவளைப்பிளையார் கோயிலில், அழகொல்லை விநாயகர் கோயிலில், வயல்வெளி முத்துமாரி அம்மன் கோயிலில் தட்சணாமூர்த்தியின் தவில் வாசிப்பை, எங்கள் கிராமத்தையே இசைக் கிறக்கத்தில் ஆழ்த்திய பெருங் கலைஞனின் சங்கீதத்தை மெய்விதிர்த்துக் கேட்டு, அனுபவித்த ரசிகன் மஹாகவி. அவரே ஒரு இசைவழிப் பாரம்பரியத்தில் வந்தவர். தவில் தட்சணாமூர்த்தியின் இசை ரசனைக்கு ஆதவன் முகநூலில் எழுதிய குறிப்பு உசாத்துணைக்கு உதவியிருக்கிறது. 'பியானோ தட்டுதல்' என்றுஞோதிகுமார் ஓரிடத்தில் எழுதியிருக்கிறார்.  பியானோவைத் தட்டுவதில்லை. அது வாசிக்கப்படுவது. தவிலைத் தட்டுவதில்லை. அது வாசிக்கப்படுவது. வயலினைத் தட்டுவதில்லை. அது வாசிக்கப்படுவது.

பகுதி - 5
மஹாகவியின் 'ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கை சரித்திரம்' மீது இவர் எழுப்பும் கேள்வி இருக்கிறதே! அபாரம்! 'ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கைச் சரித்திரம்'  என்ற கவிதையின் கதாநாயகன் முத்தையன் வாழ்க்கையில் அர்த்தமற்ற தன்மையையும்  தனிமையையும் நிச்சயமின்மையையும் காணக்கிடப்பதாக சண்முகம் சிவலிங்கம் கூறுவதற்கு,  ஜோதிகுமார் வாதம் வைக்கிறார். அதாகப்பட்டது, கார்க்கி சொன்ன - யதார்த்த நெறி கோரக்கூடிய வாழ்வின் எழுச்சிகளையோ, புதிய உலகின் முளைகளையோ ஏன் மஹாகவியின் முத்தையன் காணவில்லை என்று கேட்கிறது. முத்தையன் அப்படி ஒன்றையும் காணவில்லை என்றால் இப்ப என்ன செய்வதாக உத்தேசம்? உங்களைச் சுற்றி வாழும் தோட்டத் தொழிலாளர்கள் வெறும் ஆயிரம் ரூபாய் நாட்கூலிக்கே பல ஆண்டுகளாக அல்லாடும் நிலையில், அங்கே  வாழும் முத்தையனும் வேலுவும் 'வாழ்வின் எழுச்சிகளையும் புதிய உலகின் முளைகளையும்' காணாமல், அர்த்தமற்ற வாழ்விலும் நிச்சயமின்மையிலும் உள்ளார்கள் என்று கார்க்கியின் விதியைப் பிரயோகித்தால் எப்படி சரிவரும்?  மஹாகவியின் இந்தக் கவிதையில் 'யாருடைய வாழ்வு பேசப்படுகிறது?' எனும் கேள்வி பிரதானமாய் இருக்கிறது ஜோதிகுமாருக்கு. இது என்ன பிரதானமான கேள்வி? அது முத்தையனின் வாழ்வு. ஏன் சுப்பையாபிள்ளையின் வாழ்வை மஹாகவி எழுதவில்லை என்று கேட்காதீர்கள்? அவருக்குத் தெரிந்த முத்தையனின் வாழ்க்கைக்கூடாக அவர் ஒரு தரிசனத்தை முன்வைக்கிறார். சிம்பிள்! சுப்பையாபிள்ளை கதை உங்களுக்குத் தெரிந்தால் நீங்கள ஒரு காவியம் பாடுவதில் என்ன தடை? அல்லது, கார்க்கிதான் முத்தையனின் கதையை யதார்த்த நெறி கோரும் விதிகளின் பிரகாரம் எழுதித்தர வேண்டும்! நம்மளாலே முடிஞ்சது அவ்வளவுதான் சாமி! நீங்களேகூட யதார்த்த நெறியை அப்படியே பின்பற்றி, உங்களுக்குத்தான் 'வாழ்வின் எழுச்சிகளும் புதிய உலகின் முளைகளும்' ஹட்டனில் தத்ரூபமாகத் தெரிகிறதே, அப்படியே ஒரு காவியத்தை வடித்துத் தந்துவிட்டால் போகிறது. போகிற வழிக்குப் புண்ணியமாயிருக்கும்!  

'மரணம் பற்றிய ஒரு கோட்பாட்டை மஹாகவி உருவாக்கினார். மனிதன் மரணிப்பதில்லை என்பது அவர் முன்வைத்துள்ள கருத்து' என்று பேராசிரியர் நுஃமான் கூறுகிறார்.  ''இதன்வழி நோக்குமிடத்து, மனிதன் தன் வம்சத்திற்காக பாடுபடுவதும், சொத்துக்களைத் தன் வம்சத்திற்காகச் சேகரித்து வைப்பதும் சகஜமானது மாத்திரமல்ல, மாறாகத் தேவைப்படும் அத்தியாவசிய நியமங்களில் ஒன்றாகவும் ஆகின்றது' என்று இவர் கூறுகின்றார். மனிதன் மரணிப்பதில்லை என்று சொன்னதும், அதன் அர்த்தம் அவன் சொத்துச் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று பொருள் கொள்ளும் புத்திசாலியைச் சரித்திரம் இன்றுதான் சந்திக்கிறது!

மஹாகவியின் கவிதை உள்ளமானது 'கட்டற்ற ஓர் தேடலை'க் கொண்டிருந்தது என்று சண்முகம் சிவலிங்கம் எழுதியதில், கட்டற்ற தேடல் என்ற சொற்பிரயோகம் ஜோதிகுமாருக்குச் 'சற்றே ஆபத்தானதாக'த் தெரிகிறது. பிறகு, "கட்டற்ற தேடல் என்பது மஹாகவி தன்மீது தானே விதித்துக் கொண்ட அநேக எல்லைப்பாடுகளையும் கட்டுப்பாடுகளையும் உள்ளடக்கும் ஒருவகையான கட்டற்ற தேடல்தான்" என்பது தெளிவு என்று ஜோதிகுமார் கண்டுபிடிக்கிறார். அநேக எல்லைப்பாடுகளையும் கட்டுப்பாடுகளையும் உள்ளடக்கியபின் 'கட்டற்ற தேடல்' என்பது இல்லையாகிவிடுகிறதே! limitations, controls எல்லாம் அநேகமாக வந்தபின்பு 'கட்டற்ற தேடல்' பற்றிக் ஜோதிகுமார் அவ்வளவு அங்கலாய்க்க வேண்டியதில்லை. 'சில்லென்று செந்நீர் தெறித்து' என்ற பதப்பிரயோகம் குறித்து ஜோதிகுமார் விசனிக்கிறார். புதிதாய்த் தெறிக்கும் செந்நீர் ஒருநாளும் சில்லென்று இருக்கப்போவதில்லை, ஒருவேளை அது வெதுவெதுப்பாகவும் பிசுபிசுப்பாகவும் வேண்டுமானால் இருக்கலாம் என்பது குமாருவின் கண்டுபிடிப்பு. அதிர்ச்சியால் அல்லது பயத்தால் உறைந்து போனதைப் போன்ற உணர்வு ஏற்படுதலை 'சில்லிடு' (give someone the creeps) என்ற பதம் குறிக்கும் என்று அகராதி ஒரு பொருள் தருகிறது.    ரத்தம் பீறிடுவது வேறு. அந்த ரத்தம் உடலில் பட்டதும்,  அதிர்ச்சியால் அல்லது பயத்தால் உறைந்து போனதைப் போன்ற உணர்வு உடலில்  ஏற்படுவதையே  சில்லென்ற சொல் உணர்த்துகிறது. அதிர்ச்சியில் அல்லது பயத்தில் அல்லது ஒரு களேபரத்தில் உடலில் ரத்தம் பட்டதும் அதனை உடல் எப்படி எடுத்துக்கொள்கிறது என்பதுதான் இங்கு பேசப்படுகிறது. கொடுங்குளிரைத் தபசிகள் எதிர்கொள் வதைப்போன்றதுதான்.

பகுதி - 6
மஹாகவி பற்றிய மு.பொன்னம்பலத்தின் விமர்சனங்களை அப்படியே நீங்கள் உல்டா பண்ணியிருப்பது மறுதலிக்க முடியாத உண்மை என்பதை வெளிப்படையாக அனைவரும் ஏற்பர். உங்கள் குருநாதர் கைலாசபதியை மு.பொ. தோலுரித்துக் காயப்போட்டிருக்கிறார் என்பதை அறிவீரோ? கார்க்கி, கோக்கி என்று சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் அடுக்கிக் கொண்டிருக்கிறீர்களே, அந்த சோசலிச யதார்த்தவாதத்தை வாழ்நாள் தவமாக அந்த மனிதர் எதிர்த்துக் கொண்டிருக்கிறார் என்பது அறிவீரோ?    'ஆன்மிகம், தியாகம், துறவு என்றெல்லாம் சொல்கிறோம். எனக்கு தெரிந்த எத்தனையோ எளிய விதவைகள் தங்கள் முழு வாழ்க்கையும் யாருக்காகவோ செலவிட்டு அதில் நிறைவைக் கண்டிருக்கின்றார்கள்... எனக்கென்னவோ அதில்தான் ஆன்மீகமான அம்சம் இருப்பதாகத் தோன்றுகிறது' என்று அசோகமித்திரன் சொன்னதும் இவருக்கு கேள்விக்கு மேல் கேள்வியாய் கேள்விகள் கிளம்பிவிடும்.

தாங்கள் தாங்கள் ஏதோ செய்து கொண்டு, தாம் செய்யும் தொழிலில், தாம் செய்யும் வழிபாட்டில், பிறருக்குதவும் தொண்டில், தம் பிள்ளைகளின் வாழ்வில் என்று மனிதர்கள்  தம் வாழ்வில் நிறைவு கண்டு வாழ்வதை அசோகமித்திரன் அனுபவ ரீதியாகப் பார்த்ததைப் பதிவு செய்கிறார். ஆனால், இவருக்கு உடனே கேள்வி பிறந்து விடுகிறது. 'ஆனால், கேள்வி என்னவோ, இந்த முடிவு அல்லது இந்தப் பார்வை எப்படி சாத்தியமாகிறது என்பதே. கட்டற்ற தேடலா அல்லது அசோகமித்திரன் கொண்டுள்ளதாய்க் கூறப்படும் வாழ்க்கைத் தரிசனமா மேற்படி கூற்றை உதிர்க்க வைக்கின்றது என்பதே கேள்வியாகின்றது' என்று இதற்குள்ளேயே இரண்டு கேள்விகளை எழுப்பிவிட்டார்.

தான் பார்த்த எளிய விதவைகள் ஏதோ தங்கள் வாழ்க்கையில் ஒரு நிறைவைக் கண்டிருக்கிறார்கள் என்று அசோகமித்திரன் சொன்னதற்கு, சம்பந்தமே இல்லாமல், சண்முகம் சிவலிங்கம் 'கட்டற்ற தேடல்' என்று சொன்னதற்கு முடிச்சுப் போட்டு, 'கட்டற்ற தேடலா அல்லது அசோகமித்திரன் கொண்டுள்ளதாய்க் கூறப்படும் வாழ்க்கைத் தரிசனமா மேற்படி கூற்றை உதிர்க்க வைக்கின்றது என்பதே கேள்வியாகிறது' என்று கேள்வி. Verbal Diarrhea! கட்டற்ற தேடல் என்ற கேள்வி இங்கு ஏன் வருகிறது?

'எளிய விதவைகள் தங்கள் முழு வாழ்க்கையும் யாருக்கோ செலவிட்டு அதில் நிறைவைக் கண்டிருக்கின்றார்கள்' என்று அசோகமித்திரன் சொன்னதற்கு ஜோதிகுமார் தரும் மார்க்ஸிய தத்துவ விளக்கத்தைக் கேளுங்கள்:

'இந்தச் சிந்தனை வேர்களின் பின்னாலேயே, அதாவது மேற்படி ‘சுவைஞர்களின்’ வேர்களில் இருந்தே, மாற்றங்களுக்கு எதிரான அரசியலும், இருக்கும் கட்டுமானங்களை அப்படி அப்படியே தக்கவைத்து கொள்ளும் அவாவின் நகர்வுகளும் ஆழ இறங்கி வேர் கொள்வதாய் இருக்கின்றது.அனேக சந்தர்ப்பங்களில் இவை திட்டமிட்டு நடந்தேறும் சங்கதிதான் எனக் கூற முடியாது போனாலும் இவை, இச்சையின்றி நடந்தேறும் சாகசங்கள்தான், என்று கூறிக் கொண்ட போதிலும், இவை மேற்படி வேர்களில் இருந்தே உருக்கொள்கின்றன என்பதில் ஐயமில்லை.. அதாவது, ஒரு குறித்த புத்திஜீவியோ அல்லது விமர்சகனோ அல்லது கலைஞனோ தனக்குரிய பாடலைத் தானே தேர்ந்து, பாடவிருப்பம் கொள்கின்றான் என்பதாகின்றது' என்கிறார்.

அசோகமித்திரன் தியாகராய நகரை அண்டி அல்லது தான் பார்க்க நேர்ந்த எளிய பிராமண விதவைகளைப் பற்றிக் கூறிய உண்மைக் கூற்றுக்கு, சிந்தனை வேர்கள், மாற்றங்களுக்கு எதிரான அரசியல், கட்டுமானங்கள், அவற்றைத்தக்க வைக்கும் அவா, நகர்வு, ஆழ இறங்கி வேர் கொள்தல், இச்சையின்றி நடந்தேறும் சாகசங்கள், புத்திஜீவி, விமர்சகன், கலைஞன், தனக்குரிய பாடலைத்தானே தேர்ந்து பாட விருப்பங் கொள்தல் (அப்பாடா, இந்த மட்டோடு நின்று போய்விட்டது) என்றெல்லாம் அளந்து விடுவதற்கு ஏதாவது பொருள் உள்ளதா? ஒன்றுமில்லை. அசோகமித்திரன் இருந்திருந்தால் இந்த அலம்பல்களைப் பார்த்து வாய்விட்டுச் சிரித்திருப்பார்.

பகுதி – 7

இது யாருடைய கேள்வி?
எவருடைய கேள்வி?
இங்கே 'கேள்விக்குள்ளாகும்' கூற்றே... 
எவ்வட்டத்தினரின் கேள்விகள்?
சிக்கல் மிகுதியான கேள்விகளும்.. -இப்படி ஜோதி குமார் இந்தக்கட்டுரையில் எழுப்பும் கேள்வியோ அனந்த  கோடி! தனக்குத் தெரிந்ததை எல்லாம் கொட்ட வேண்டும் என்ற ஆசை இவரைப் பாடாய்ப் படுத்துகிறது. பாடாய்ப்படுத்தும் ஆசையில் தெரியாததை எல்லாம் வெளிப்படுத்திவிடுகிறார்.

'இது போலவே, குறித்த கவிதைகளுடனும், சிலர் ஒன்ற முடியவில்லையே என்று குறிப்பிட்டுக்கொள்வதுகூட, அதியசமான ஒன்றல்ல என்பதனையும் சேர்த்தே கூறிவிடலாம். இதுபோலவே, தனது 37வது வயதில் சுட்டுக்கொண்டு இறந்துபோனதாகக் கூறப்படும், உலகப் புகழ் பெற்ற ஓவியன் வான்கோ தனது ஓவியம் ஒன்றைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பான்: ' என்று சொல்லி மாட்டைக்கொண்டுபோய் மரத்தில் கட்ட ஆரம்பித்து விடுகிறார் இந்த மனிதர். 

'இது போலவே' என்று சொல்லி, வான்கோ கதையைத் தீட்ட  ஆரம்பித்து விடுகிறார். பிரான்சின் Arles ஆர்ல் என்ற நகரில்தான் வான்கோ தன் வாழ்நாளில் தீட்டிய 300 ஓவியங்களைப் படைத்திருக்கிறார். இங்கே வான்கோ சந்தித்த பெல்ஜிய நாட்டு இளம் ஓவியரான Eugene Bochஐ ஓவியத்தில் தீட்ட முயல்கிறார். அந்த ஓவியத்தை, தான் எவ்வாறு தீட்டப் போகிறேன் என்று தனது நண்பருக்கு எழுதிய கடிதத்தில் விபரிக்கிறார். அந்தக் கடித வரிகளை மொழிபெயர்க்கையில் nightingale songs என்பதை 'இரவு பட்சியின் இதமான பாடல்' என்று மொழிபெயர்த்திருக்கிறார். nightingale என்பதில் night இருப்பதால் அது இரவு பட்சி என்று மொழிபெயர்த்திருக்கிறார் இவர். அதனை தமிழில் அல்லிசைப் புள் என்பர். அதற்கும் இரவுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. உண்மையில் அது morning bird. ["nightingale என்பது இரவுப்பட்சி என்பதில் தவறில்லை. மேலும் nightingale இலுள்ள night இரவையே குறிக்கும்.  இச்சொற்பதத்தின் மூலம் பற்றி ஆராய்ந்தால் புரிந்துகொள்வீர்கள். இப்பட்சி இனத்தின் ஆண் , இனப்பெருக்கக் காலத்தில், இரவில்  இனிமையாகக் குரலெழுப்புவதையே அதன் பாடல் என்கின்றோம். அதனால் இரவுப்பட்சி என்பதிலும் தவறில்லை". - பதிவுகள் -)

எல்லாம் சரி, வான்கோ கதைக்கும் மஹாகவியின் கட்டற்ற தேடலுக்கும் என்ன சம்பந்தம்? வான்கோ பெரிதும் தனிமையிலே, நண்பர்கள் யாருமின்றி உழன்றவர். அவரை லேசில் அறிந்து கொள்ள முடியாது என்கிறார்கள். நட்பு என்பது அவருக்கு ஒரு roller coaster போல - ஆட்களை ஏற்றுவதும் இறக்குவதும் மாதிரி! தன்னை மையப்படுத்திய போக்கினால் அவர் தனது நண்பர்களுடன் பெரும் பிரச்னையை  ஏற்படுத்திக் கொள்பவர். மஹாகவி அப்படிப்பட்டவர் அல்ல. அவர் மிக நெருக்கமான நண்பர்களைக் கொண்டிருந்தார். தனிமையில் தவித்தவர் அல்ல. வான்கோ தனது நண்பரை எப்படி ஓவியமாய்த் தீட்ட விரும்புகிறேன் என்று எழுதியதை ஏன் ஜோதிகுமார் இங்கே கொண்டு வந்து திணித்தார் என்று தெரியவில்லை. 

இது போலவே என்று, தவில் வித்வான் தட்சணாமூர்த்தி மகன், பி.எஸ்.சுந்தரம், க்ளிவ்லேன்ட் சுந்தரம், பீதோவன் இசை, இன்குலாப்பின் மகள், திருப்பியும் கார்க்கி-டால்ஸ்டாய், மயோக்வாஸ்கி, ஜெயகாந்தன், புல்லாங்குழல்  இசைக்கலைஞன் மாலி, மீண்டும் லெனின் கார்க்கியிடம் சிரித்தபடி கேட்பது, பின்னர் சிரிக்காதபடி கேட்பது, லெனின் தேனீக்கள் பண்ணைக்கு போனது, சைபீரிய சிறைவாழ்வு, லெனின் மார்க்ஸின் கல்லறைக்குப் போவது, கைலாசபதி தாசீசியசின் தோள்மீது கைவைத்துக் கூறியது, தோள் மீது கைவைக்காமல் கூறியது, மக்கள் திரள், மருதமரம், டில்லியில் நடுங்கும் குளிரில் அப்துல் கலாம் புத்தகம் வாசித்த கதை, பெர்னாட்ஷா, ஹிட்லர், நீட்ஷே, முள்ளிவாய்க்கால், ஜாலியன் வாலா பாக் படுகொலை, கார்க்கியின் Klim Samgin என்ற முடிவுறாத நாவலின் பெயர் உதிர்ப்பு, விளக்கத்திற்குப் பின்குறிப்பு, விதவைகளின் ஆன்மீக வாழ்வு, தாசீசியசின் தோள்மீது கரம்வைத்து கைலாசபதி பெருமூச்செறிந்த கதை, மஹாகவி செல்லக்கூடிய பாதை, அத்துடன் அவர் இயங்கக்கூடிய பாதை என்பதைக் கைலாசபதி  புரிந்து வைத்திருப்பதற்கான நிகழ்தகவு list எல்லாம் சொல்லி இந்தளவு தொடர் கட்டுரையை ஒருமாதிரி முடிவுக்குக்கொண்டு வந்ததே பெரிய காரியம்! .


பகுதி - 8
மஹாகவி நிர்வாக சேவைக்குப் பரீட்சை எழுதியது அவரது கவிதை வாழ்விற்கு இவ்வளவு குந்தகத்தை ஏற்படுத்தும் என்று கைலாசபதியின் நிகழ்தகவு லிஸ்டிலும் எதுவும் காணப்படவில்லை.  பாரதி பிரிட்டிஷ் உளவுத்துறையால் ஒவ்வொரு ரயிலிலும் வேவு பார்க்கப்பட்ட மாதிரி, மஹாகவியை ஏன் ஸ்ரீலங்கா பொலிஸ் பிரிவு அவரது அலுவலகத்தில் சோதனையிடவில்லை என்பதுதான் ஜோதிகுமாரின் சட்டத்தரணி மூளைக்குப் பிடிபடாத சங்கதியாக இருக்கிறது. அல்லது வான்கோ மாதிரி தனது கடைசிக் காவியத்தை இயற்றியதும் மஹாகவி ஏன் தலையில் சுட்டுக்கொண்டு சாகவில்லை என்பதும் ஜோதி குமாருக்குப் பெரும் சங்கடமான விடயமாக இருக்கிறது. கோடை நாடகத்தில் நாயனக்காரர் வீட்டில் ஐயர் இட்லி சாப்பிடும் காட்சியை மஹாகவி நீக்கி விட்டது பற்றிப் பூரணமான மௌனம் நிலவுவது குறித்து ஜோதிகுமார் மிகவும் கவலைப்படுகிறார். அந்நாடகத்தின் புரட்சிகர உள்ளடக்கம் அதனால் துடைத்தெடுக்கப்பட்டுவிட்டது பற்றி புரட்சிப்படையின் முன்னணியிலேயே எப்போதும் களத்தில் நிற்கும் ஜோதிகுமாருக்கு பெரும் மனக் கிலேசத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதனை அறிந்தோர் அறிவர். அறியார் அறியார். 

தாசீசியஸ் தனது 'பொறுத்தது போதும்' நாடகத்தை மன்னாரில் ஒரு சம்மாட்டியாரின் அனுசரணையில் மேடை ஏற்றும்போது, அந்நாடகத்தின் இறுதிக் காட்சி சம்மாட்டிக்கு எதிரான போர்க் கோஷத்துடன் முடிவதால் அதனை நீக்கி, ஒருமாதிரி adjust பண்ணப்பட்டு மேடையேற்றி முடிக்கப்பட்டது. நடைமுறையில் ஒரு நாடகம் மேடை ஏறும்போது பல பிரச்சினைகள் வரும் பாருங்கள். அது சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு மார்க்சிய உபதேசத்தை அள்ளி விடுவது மாதிரி இருக்காது. கோடை நாடகத்தில் நாயனக்காரர் வீட்டில் ஐயர் இட்லி சாப்பிடும் காட்சியை நீங்குவதால் தொழிலாளர் வர்க்கப் போராட்டத்திற்கு ஒரு தீங்கும் ஏற்படாது என்று மஹாகவி நினைத்திருக்கக்கூடும். தாழ்வுபாடு கிராமத்தில் மீனவர்களோடு தாசீசியஸும் மஹாகவியும் களித்த அந்த ஓரிரவு நமக்குச் சந்தோஷமாக இருந்திருக்கும். குமாருக்கு அப்படித் தெரியாது. அவர் மார்க்ஸிய இயங்கியலைக் கற்றுத் தேர்ந்து, வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில் அந்த ஓரிரவினை நோக்கும்போது சாதாரணமாக நமக்குத் தெரியவராத சங்கதிகள் அவருக்கு உடனேயே புலப்பட்டுவிடுகிறது என்ற நிதர்சனமான உண்மை மறுதலிக்க முடியாதபடி மேலெழுந்து விடுகிறது. அச்சந்திப்பினை அவர் மார்க்சின் கண்களுக்கூடாக நோக்குவதைப் பார்த்து நீங்களும் களிபேருவகை அடையுங்கள்.

ஜோதிகுமார் எழுதுகிறார்:  “அச்சந்திப்பு, 'கார்ல் மார்க்சின் வார்த்தைகளில் கூறுவதானால் மூலதனமும் உழைப்பும் ஒன்றையொன்று சந்தித்துக்கொள்ளும் ஒரு புள்ளியாக – அங்கே உழைக்கும் மனிதன் தன்னை இதுகாறும் பிணித்திருந்த அவனது தளைகள் எல்லாம் அல்லது அத்தளைகளின் பெரும்பகுதியைச் சிதறடித்துக்கொண்ட கணங்களாய் அது வாழ்வில் எழுவதாயும் தோன்றுகிறது”. அதாகப்பட்டது, மஹாகவியும் தாசீசியஸு ம் மீனவர்களுடன் சேர்ந்தது, மூலதனமும் உழைப்பும் ஒன்றையொன்று சந்தித்துக்கொள்ளும் ஒரு புள்ளியாக அமைந்து போய்விட்டது. மூலபாடம் இல்லாத முதலாம் பாலபாட மார்க்சியமோ! இப்படி ஒரு வியாக்கியானம் தரும் ஒரு மார்க்சிய அறிஞனை நாம் எம்மண்ணில், நாம் வாழும் காலத்திலேயே கண்டுவிட்டோம் என்று நாம் ஆனந்தக் கூத்தாடி அழுது தீர்ப்போம்.

பகுதி - 9
மஹாகவி அரச உத்தியோகத்தில், நிர்வாக  சேவையில் இருந்தமையும், சாதாரண எழுதுவினைஞராக இருந்து, பரீட்சை எழுதி உயர் பதவியை அடைந்தமைக்கு, அத்தகைய மேல்நோக்கிய உந்துவிசையை ஒருவர் தன்னுள் ஆழமாகக் கொண்டிராமல் மேற்படி நகர்வுகள் சாத்தியப்படுவதில்லை என்று ஆகுலம் அடைகிறார் ஜோதிகுமார். அந்தப் பரீட்சையை ஒருவர் வாழ்வில் எழுதக்கூடாது என்பதுமில்லை அன்று அவர் சாட்டுக்கு, சொல்லிக்கொண்டாலும் உயர் பதவிக்கான மேல்நோக்கிய நகர்வு ஜோதிகுமாருக்கு பிரச்னையாகிப்போய்விடுகிறது. இத்தகைய பதவி வகித்திருக்கக்கூடிய ஒருவரது வாழ்வின் அம்சங்கள் தவிர்க்க முடியாதபடி அவரது கவிதை வரிகளில் எதிரொலிக்கவே செய்யும் என்று அறுதி முடிவுக்கு வந்துவிடுகிறார்.


பகுதி – 10

மஹாகவி காலத்தில் உக்கிரமான போராட்டங்கள் நடந்திருந்தும் அவர் சித்தாந்த நிலை எடுத்துப் போராட முன்வரவில்லை, கொஞ்சமாவது புரட்சிக் கவிதை எழுதவில்லை என்று புகார் வைத்திருக்கிறீர்கள். சங்கானையில் சாதிப்போராட்டம் கிளர்ந்தபோது, சுபத்திரன் மட்டக்களப்பிலிருந்து வடக்கே போய், அந்தப்போராட்டத்தில் கலந்து கொண்டார். அவர் மார்க்சியம் பற்றிப் பேச உரிமை உள்ளவர். வட்டுக்கோட்டையில் அராலியில் கொடிய சாதிய வன்முறை நடந்திருக்கிறது. நீங்கள் எங்கே? அங்கே மலையகத்தில் ஒவ்வொரு தோட்டத்திலும் நடக்கும் அடக்குமுறை பற்றி, தொழிலாளர்கள், அதிலும் பெண்கள் முன்னணியில் நின்று போராடும் செய்திகளைப் பார்க்கிறோம். நீங்கள் உங்கள் வாழ்க்கையில் ஏதாவது ஒரு போராட்டத்தில் / ஊர்வலத்தில் / மறியலில் பங்கு கொண்டதுண்டா? மார்க்ஸ், டால்ஸ்டாய், கார்க்கி, ஏங்கெல்ஸ், நுஃமான்,  சண்முகம் சிவலிங்கம், மு.பொ, Klim Samgin எல்லாம் வாசிப்பதை விட்டு, முதலில் மஹாகவியின் கவிதைகளை உட்கார்ந்து வாசியுங்கள். நீங்களாக வாசியுங்கள். நுஃமான், சண்முகம் சிவலிங்கம் போன்றவர்களில் தொங்கிக்கொண்டு விமர்சன உலகத்திற்கு வராதீர்கள். கார்க்கி சொன்னார், கோக்கி சொன்னார் என்றில்லாமல் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று சொல்லுங்கள்.   
             
'இன்றைய நிலையில், சோஷலிச யதார்த்தவாதத்துடன் கார்க்கி கொண்டிருந்த தொடர்பு உண்மையானதுதானா என்ற கேள்வியை எழுப்புவது பயனுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் வெளியான ஆவணங்கள், ரஷ்ய இலக்கியத்தில் ஏற்பட்டுள்ள புதிய வளர்ச்சிகளை வரையறுக்கும் இலக்கியக் கூட்டங்களுக்கு கார்க்கி போனதே கிடையாது என்பதைத்தான் காட்டுகின்றன. எழுத்தாளர்களின் கூட்டமைப்பு (Union of Writers) உருவாக்கப்பட்டபோது, அது உருவாக்கப்பட்ட விதத்தை கார்க்கி அங்கீகரிக்கவில்லை. அது மட்டுமன்றி, 1922-1924 இற்கு இடைப்பட்ட காலத்தில் கார்க்கி எழுதிய சிறுகதைகளிலும்,  Klim Samgin வாழ்க்கை பற்றிய கடைசிப் படைப்புவரை, இந்தப் படைப்புகளுக்கும் சோஷலிச யதார்த்தவாதத்திற்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது என்று   Mark Slonim  என்ற ஆய்வாளர் 1953 இலேயே வாதிட்டிருக்கிறார். உண்மையில், கார்க்கியின் Life of Klim Samgin உள்ளடங்களாக அவரது  இறுதிக்காலப் படைப்புகளை வாசிக்கும்போது, சோஷலிச யதார்த்தவாதத்தின் அடிப்படையில் ஒற்றை வரியைக்கூட கார்க்கி எழுதவில்லை என்பது தெளிவாகத்தெரிகிறது'  - Paola Cioni ( A.M.Gorky Institute of World Literature of the Russian Academy of Science ரஷ்யாவிலிருந்து வெளியிடும் Studia Litterarum - June 2020 என்ற சஞ்சிகையிலிருந்து)         

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.