என்னுடைய 'குரு' மயிலங்கூடலூர் பி நடராசன் நேற்று யாழ்ப்பாணம், நாயன்மார்கட்டிலுள்ள அவரது இல்லத்தில் காலமானார். நீண்ட காலமாக நோயுற்றிருந்த அவர் காலமாகும் போது எண்பத்திரண்டு வயது. இளவாலைக்கும் கீரிமலைக்குமிடையில் இருக்கும் மிகச் சிறிய கிராமமான மயிலங்கூடலை ஈழத்து இலக்கிய உலகில் நிரந்தரமாய் பதிந்துவிட்ட நடராசன் ஆசிரியரை எனது மிகச் சிறிய வயதிலிருந்தே அறிவேன். அவரது'கூடலகம்' வீட்டைச் சூழ எனது தந்தை வழி உறவினர்கள் இருந்ததும், அருகிலிருக்கும் வைரவர் ஆலயம் தாய்வழி உறவினர்கள் சிலருக்கு குல தெய்வமாக இருப்பதும் மயிலங்கூடலுக்கு அடிக்கடி செல்ல காரணங்கள். மயிலங்கூடல் வைரவர் ஆலயத்தின் பொங்கல், மடையின் போது ஆசிரியரை கண்டுள்ளேன்.

கிழக்கிலங்கையிலிருந்து மாற்றலாகி 1971ஆண்டின் பிற்பகுதியில் அவர் மகாஜனக் கல்லூரிக்கு விஞ்ஞான ஆசிரியராக வந்தபோது, நான் மூன்றாம் வகுப்பில் கற்றுக் கொண்டிருந்தேன். அவரது வயதையொத்த ஆசிரியர்கள் லோங்ஸோடும் சேர்ட்டோடும் பாடசாலைக்கு வருகிறபோது, விஞ்ஞான ஆசிரியரான அவரது நஷனலும் வேட்டியும்- அதை அவர் அணிந்திருக்கும் நேர்த்தியும் தனித்துவமாக காட்டின.

ஆசிரியராக வந்தவுடனேயே பாடசாலையின் சகல நடவடிக்கைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். பழைய மாணவர் சங்கத்தின் இணைச் செயலாளராக ஆ சிவநேசச்செல்வனோடு இணைந்து, பாவலர் துரையப்பாபிள்ளை நூற்றாண்டு விழாவை மூன்று நாட்கள் கொண்டாடியதிலும், ஈழத்தின் பெறுமதிமிக்க இலக்கிய மலர்களிலொன்றாக கருதப்படும் 'பாவலர் துரையப்பா பிள்ளை நூற்றாண்டு மலரை' வெளிக் கொணர்ந்ததிலும் ஆசிரியரின் பெரும் உழைப்பும் இருந்தது. இதே காலத்தில் கவிஞர் நுஃமானோடு இணைந்து மஹாகவி நூல் வெளியீட்டு குழுவிலும் பணியாற்றினார். மகாஜனாவின் சின்னப்பா இல்லப் பொறுப்பாசிரியராகவும் இருந்தார்.

எனது முதலாவது விஞ்ஞான ஆசிரியர். ஆறாம் வகுப்பில் கேள்வியொன்றுக்கு பதிலளித்து, வினா விடைகள் புத்தகமொன்றைப் பரிசாகப் பெற்றது நினைவிலிருக்கிறது. இவர் மாணவர்களுக்கு தண்டனை வழங்குவது விசித்திரமானது. மாணவர்களை அடிப்பதில்லை;வயிற்றில் கிள்ளி தண்டிப்பார். ஆனால் விஞ்ஞானத்தை மிகவும் இலகுவாக மாணவர்களுக்கு கற்பிப்பார். ஆங்கில மொழி மூலம் கல்வி கற்ற ஆசிரியர், தமிழின் மீதான பற்றால் பால பண்டிதராக கற்றுத் தேர்ந்தவர். பண்டிதர் பரீட்சைக்கு படித்தபோதும், குடும்பச் சூழலினால் ஆசிரியர் பதவியில் சேர்ந்து விஞ்ஞான ஆசிரியரானவர். அதனால் பெற்ற மொழியாளுமை விஞ்ஞானத்தை சாதாரண மாணவர்களுக்கு இலகுவாக கற்பிப்பதற்கு உதவிற்றெனலாம்.

1977ம் ஆண்டில் நான் ஒன்பதாம் வகுப்பில் கற்றுக்கொண்டிருந்தபோது, அமரர் ச விநாயகரத்தினம் ஆசிரியரின் ஆலோசனையில் 'தமிழின்பம்' எனும் கையெழுத்து சஞ்சிகை உருவானது. நான் ஆசிரியராக தெரியப்பட்டேன். என்னோடு நண்பர்கள் Sitt ShivaLingam சிவலிங்கம், Wijayartnam Suresh சுரேஷ், நந்தகுமார், சசீகரன் Sasekaran Shanmuganathan , சிவானந்தன் முதலானோர் பங்களித்தார்கள். சிறிது காலத்திலேயே அதன் பொறுப்பாசிரியராக மயிலங்கூடல் நடராசன் அவர்கள் பொறுப்பேற்றார். மாணவர்களின் ஆக்கபூர்வமான சிறு முயற்சியையும் இவரளவு பெரிதாக ஊக்கப்படுத்தும் வேறொரு ஆசிரியரை நான் சந்தித்ததில்லை. எங்களை உற்சாகப்படுத்தி, வளப்படுத்திய குரு அவர்.

என்னை மட்டுமல்ல, சேரன்,ஆதவன், Dr செந்தில் மோகன் Dr மருதயினார் Rasiah Maruthainar பா.விக்கினேஸ்வரன், பீற்றர் தன்ராஜ் சிங்கம்,பாலசூரியன், ரவி, புனிதா, கேசினி, Dr கௌரி Ganapathy Gpg அருந்ததி, ரதியென பெரும் தொகையான மாணவர்களை வளர்த்துவிட்டவர்.

HNC மாணவர்களுக்கு வெளிக்கள பாடமென்று ஒன்றிருந்தது. அதற்கு பொறுப்பாசிரியராக இவரும் இருந்தார். வெளிக்கள பாடத்தில் இரண்டு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. பனங்கொட்டைகளை சேகரித்தல் அவற்றிலொன்று. அதிகளவு பனங்கொட்டைகளை சேகரித்ததால் மில்க்வைற் கனகராஜா அவர்கள் விடுதிச்சாலைக்கு புதிய கட்டிடமொன்றை கட்டித் தந்திருந்தார்.(இதனாலேயே HNC மாணவர்கள் தங்கள் குழுவுக்கு பனங்கொட்டைகள் எனப் பெயரிட்டுள்ளார்கள்) இன்னொரு பணி தெல்லிப்பழையை அண்டியுள்ள கிராமங்களில் வாழ்த்து மடிந்த தமிழறிஞர்கள் பற்றிய தகவல்களை சேகரித்து ஒவ்வொரு மாதமும் ஒருவரைப் பற்றி சிறுநூல் வெளியிட்டு அவர்களை நினைவுகூர்ந்தமை. சுமார் பத்து அறிஞர்கள் இவ்வாறு கௌரவிக்கப் பட்டதாக நினைவு. இவற்றில் பெரும்பாலானவை யுத்தத்தில் அழிந்து போய்விட்டது.
1977ம் ஆண்டின் இறுதியில் தொண்டமனாற்றில் அமைந்திருந்த வெளிக்கள நிலையத்தின் பொறுப்பாளராக பொறுப்பேற்றுச் சென்றபோதும், பின்னர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு மாற்றலாகி சென்றபோதும் எங்களுடனான தொடர்புகளை கிரமமாகப் பேணி வந்தார்.

1980ம் ஆண்டு மார்ச் மாதத்தில் அளவெட்டி ஜெயா அச்சகத்தில் புதுசு வின் முதலாவது இதழை கையிலெடுத்துக் பார்த்துக் கொண்டிருந்தபோது, முன் வீதியால் ஆசிரியர் போய்க் கொண்டிருந்தார். ஓடிச்சென்று அவரை அழைத்தோம். எங்கள் நால்வரையும் கண்டதும் மகிழ்வோடு திரும்பி வந்தார். அவரிடம் புதுசு வின் முதலிதழைக் கொடுத்தோம். பூரிப்போடு வாங்கிப் பார்த்தவர் 'இதனை வெளியிட்டு விட்டீர்களா?' எனக் கேட்டார். 'இல்லை சேர், உங்களிடம் தான் முதற் பிரதியைத் தந்திருக்கிறோம்' என்றோம். தனது பொக்கற்றில் கைவிட்டு, பஸ்ஸுக்கு தேவையான பணத்தை வைத்துக் கொண்டு மிகுதிப் பணம் அனைத்தையும் தந்து முதற் பிரதியை பெற்றுக் கொண்டார். எங்களை ஆசீர்வதிக்க சகல தகுதிகளையும் கொண்டிருந்த ஆசிரியரிடம் திட்டமிடாமலே முதற் பிரதியைக் கையளித்தது ஒரு பேறு.

இலக்கியத்தில் சிறுவர் பாடல்கள் அவரது சிறப்புத் துறையெனலாம். அவரது சிறுவர் பாடல்கள் இரண்டு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. ஆனால், அவரது முயற்சிகளை சிறுவர் பாடல்களுக்குள் மட்டும் குறுக்கிவிட முடியாது. ஈழத்தில் வெளிவந்த முக்கியமான நூல்கள் பலவற்றின் பின்னணியில் அவர் இருந்திருக்கிறார்.ஈழ விடுதலைப் போராட்டத்தின் முக்கியமான கவிதைத் தொகுப்பான 'மரணத்துள் வாழ்வோம்' தொகுதியின் தொகுப்பாளர்களில் ஒருவர் என்பதும், பத்மநாப ஐயரின் 'தமிழியல்' வெளியீட்டை உருவாக்கியவர்களில் ஆசிரியரும் ஒருவராகும் என்பது இங்கு பதியப்பட வேண்டியது.

மகாஜனக் கல்லூரியின் நூற்றாண்டையொட்டி நாங்கள் உருவாக்கிய வெளியீட்டு முயற்சிக்குப் பொறுப்பேற்று, பாவலர் துரையப்பா பிள்ளையின் 'சிந்தனைச் சோலை' (மறுபிரசுரம்), "நினைவுப் பேருரைகள்',
' மகாஜனன் கவிதைகள்' என்று மூன்று வெளியீடுகள் வெளிவர காரணமானவர்.

பொறுப்பை தட்டிக் கழிக்காமல் நிறை வேற்றுவது, நேர்மை, நேரந் தவறாமை என்பன அவரது அருங்குணங்கள். ஆரம்பத்தில் அவரது ஓய்வூதியத்தைப் பெறுவதில் நிறைய தடங்கல்கள் இருந்தது. யுத்த காலமென்பதால் அவர் பணத்துக்கு பிரச்சனைகள் படுவார் என எண்ணி நண்பரொருவர் சிறிதளவு பணத்தை அவருக்கு அனுப்பியிருந்தார். பணநெருக்கடியிருந்தபோதும் ஆசிரியர் அந்தப் பணத்தை பழைய மாணவர் சங்கத்தில் செலுத்தி பற்றுச்சீட்டை நண்பனுக்கு அனுப்பியிருந்தார். இது ஆசிரியர்.

ஆசிரியரைக் பற்றி எழுதுவதற்கு ஆயிரம் உண்டு. என்னை உருவாக்கிய குருவுக்கு அவரது நண்பர் நுஃமானின் கவிதை வரிகளை இரவல் பெற்று வழியனுப்பி வைக்கிறேன்.
"என்னுடைய வித்து
விழுந்து முளைத்த இடம்
என்னுடைய வித்து
விழுந்து வளர்ந்த இடம்
என்னுடைய வித்து
வளர்ந்து மலர்ந்த இடம்
அந்த இடத்தை
அடியோடு நான் இழந்தேன்...

நன்றி: https://www.facebook.com/nagalingam.srisabesan/posts/10224429292972573