இலங்கை மக்கள் நன்கறிந்த இந்திய எழுத்தாளர் கு. சின்னப்பபாரதி கடந்த 13 -ம் திகதி திங்கட்கிழமை மாலை (13 - 06 - 2022) சிந்திப்பதை நிறுத்திக்கொண்டார. இலங்கைப் படைப்பாளிகளையும் வாசகர்களையும் மிகவும் கவர்ந்தவர் சின்னப்பபாரதி. தமிழ் வாசகர்களை மாத்திரமன்றி சிங்கள வாசகர்களையும் கவர்ந்தவர். எழுத்தாளர் - மொழிபெயர்ப்பாளர் காலஞ்சென்ற உபாலி லீலாரத்தினாவின் மொழிபெயர்ப்பில் சிங்கள மொழியில் சின்னப்பபாரதியின் நாவல்கள் சில சிங்கள வாசகர்களுக்கு அறிமுகமாகின. அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுச் சாதனை படைத்தவை சின்னப்பாரதியின் நாவல்களாகும்.

1935 -ம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் வாழவந்தி பொன்னேரிப்பட்டிக் கிராமத்தி;ல் குப்பண்ணக் கவுண்டர் - பெருமாயி அம்மாள் விவசாயத் தம்பதிகளின் மகனாகப் பிறந்தவர் சின்னப்பபாரதி. ஆரம்பக் கல்வியை முடித்தபின் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் உயர்கல்வியைத் தொடர்ந்தார்;. கல்லூரியி;ல் டாக்டர் மு. வரதராசனின் மாணவராகப் பயின்றதனால் தமிழ்ப்பற்று மிகப்பெற்று எழுதத் தொடங்கினார். ஆரம்பத்தில் கவிதை எழுதத் தொடங்கியவர் பின்னர் சிறுகதை - நாவல் எழுதும் ஆவல்கொண்டார். ரஷ்ய எழுத்தாளர்கள் - பாரதி ஆகியோரின் படைப்புகளால் ஈர்க்கப்பட்டவர். பாரதிமீது கொண்ட பற்றினால் சின்னப்பன் என்ற பெயரைச் சின்னப்பபாரதி என மாற்றிக்கொண்டார். கல்லூரிக் காலத்தில் மாணவர் போராட்டங்களில் கலந்துகொண்டவர் மார்க்சிஸப் பாதையை வரித்துக்கொண்டார். கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயற்படத் தொடங்கினார். கட்சியில் பல பொறுப்புகளை ஏற்றுச் செயற்பட்டார். நில உச்சவரம்புப் போராட்டத்தில் பங்கெடுத்து 650 கி. மீற்றர் நடைப்பயணம் போனார். இந்திரா பிரதமராக இருந்தவேளை கொண்டுவரப்பட்ட அவசரநிலைப் பிரகடனத்தின்போது கைதுசெய்யப்பட்ட எழுத்தாளர் இவரெனக் கூறுவர். கட்சியின் வேண்டுகோளை ஏற்று மலைவாழ் மக்கள் மத்தியில் வேலைசெய்தார். விவசாயிகளை ஒருங்கிணைத்து அவர்கள் உரிமைகளுக்கான போராட்டங்களை முன்னெடுத்தார். பல சந்தர்ப்பங்களில் உயிராபத்தையும் சந்திக்க நேர்ந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

உயிர்; - உணர்வு சார்ந்த படைப்பே நாவலாக உருவெடுப்பதாகக் குறிப்பிட்டவர். திருவாரூர் மாவட்டத்தில் நிலச்சுவாந்தர்கள் - பண்ணையாளர்களிடம் சிக்கித் தவிக்கும் மக்களின் நிலையை அங்கு சென்று தங்கியிருந்து கவனத்திலெடுத்துகொண்டார். அந்த மக்களின் அவல நிலையை உணர்வுபூர்வமாகச் சித்தரித்து 'தாகம்" என்ற தனது முதல் நாவலை வெளிக்கொணர்ந்தார். இந்நாவல் விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்துப் பாராட்டுப் பெற்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தின் முதல் தலைவராகப் பேராசிரியர் கைலாசபதி கடமையாற்றியபோது 1976 -ம் ஆண்டு தமிழ் நாவல் நூற்றாண்டு விழாவை நடாத்தினார். இந்நிகழ்வில் தமிழில் சிறந்த பத்து நாவல்கள் குறித்துக் கருத்தரங்கு நடந்தது. கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு உரைகள் இடம்பெற்றன. அதிலொன்றாகச் சிறந்த நாவலான 'தாகம்" குறித்தும் உரை இடம்பெற்றது ஞாபகத்திலுண்டு.

கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் செயற்பட்டார். முழுநேரச் செயற்பாட்டாளராக விவசாயிகள் - தொழிலாளர்கள் ஐக்கியத்தை கட்டி வளர்த்தார். உரிமைப் போராட்டங்களை முன்னெடுத்தார். கொல்லிமலை வாழ் விவசாயிகள் அனுபவிக்கும் துன்ப துயரங்களை கண்டறிந்தார். அந்த மக்களுக்கான போராட்டங்களை முன்னெடுத்தார். கந்துவட்டிக்காரர் - வியாபாரிகளது எதிர்ப்புகளைச் சமாளித்துத் துணிச்சலுடன்; களத்தில் பணியாற்றினார். இந்த அனுபவங்களுடன் 'சங்கம்" நாவலைப் படைத்தார்.

கரும்பு ஆலைத் தொழிலாளர்கள் - விவசாயிகளின் வாழ்வியலைக் குறிக்கும் 'சர்க்கரை" நாவலைப் படைத்தார். விதவைப் பெண்ணின் வாழ்க்கைப் போராட்டத்தைச் சொல்வது 'பவளாயி" நாவல்.

மேற்கு வங்க மாநிலத்திலுள்ள அசன்சால் - பத்துவான் சுரங்கங்களுக்குச் சென்றார். சுரங்கத் தொழிலாளர்களுடன் சில மாதங்கள் தங்கியிருந்து சுரங்கத்துள் இறங்கியும் அவர்களது கடின உழைப்பைக் கவனித்துக்கொண்டார். சுரங்கத்துள் 55 வயதுக்கு மேற்பட்டவர்களை அனுமதிக்கமாட்டார்கள். ஆனால் 77 வயதில் சுரங்கத்துள் இறங்க விசேட அனுமதி பெற்று பூமிக்குள் பல அடி ஆழத்திற்குள் சென்று பார்த்ததாகச் சொல்லியுள்ளார். அதற்குள் 'மாஸ்க்" அணிந்துதான் சென்றதாகச் சொன்னார். அந்தச் சுரங்கத் தொழிலாளர்களின் வாழ்நிலையைக் கவனத்திலெடுத்து 'சுரங்கம்" நாவலைப் படைத்தார். சுரங்கத் தொழிலாளர் வாழ்வு குறித்து இந்தியாவில் வெளிவந்த முதல் நாவல் இதுதானென விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தாகம் - சங்கம் - சர்க்கரை - சுரங்கம் - பவளாயி - தலைமுறை மாற்றம் - பாலைநில ரோஜா என ஏழு நாவல்களை எழுதியவர். இறுதிக் காலத்தில் எழுதிய நாவல் வெளிவந்ததாகத் தெரியவி;ல்லை. 'தெய்வமாய் நின்றாள்" என்ற காவியத்தையும் 'கிணற்றோரம்" என்ற குறுங்காவியத்தையும் படைத்துள்ளார். 'கௌரவம்" என்ற சிறுகதைத் தொகுதியையும் கவிதைத் தொகுதி ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இவரது தாகம் - சங்கம் - சர்க்கரை - பவளாயி ஆகிய நான்கு நாவல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. சங்கம் நாவல் பிரெஞ்சு - ஆங்கிலம் - இந்தி - வங்காளம் - குஜராத்தி - மராட்டி - மலையாளம் - தெலுங்கு - கன்னடம் என ஒன்பது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளன. தாகம் நாவல் ஏழு மொழிகளிலும் பவளாயி - சுரங்கம் நாவல்கள் ஆறு மொழிகளிலும் ஆறு நாவல்கள் இந்தி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. ஸ்பானிஷ் - உஸ்பெக் - சிங்களம் உட்பட 13 மொழிகளில் இவரது நாவல்கள் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சிறந்த இலக்கியப் பணிக்காகப் பல விருதுகளைப் பெற்று அவ்விருதுகளைச் சிறப்பித்தவர். பிரான்ஸ் - மலேசியா - சிங்கப்பூர் - இலங்கை - சீனா உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளிலுள்ள இலக்கிய அமைப்புகளின் கௌரவத்தைப் பெற்றவர்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தை ஆரம்பித்த முன்னோடிகளில் ஒருவர். 'செம்மலர்" இலக்கிய சஞ்சிகையின் ஆரம்ப ஆசிரியர். 2009 முதல் தனது பெயரில் இலக்கிய அறக்கட்டளையை நிறுவிப் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் பொருட்டு விருதும் பணமுடிப்பும் வழங்கி;க் கௌரவித்து வந்தவர். தன் வாழ்க்கை வரலாற்றை 'என் பணியும் போராட்டமும்" என்ற நூலாக எழுதியுள்ளார். 'இந்திய இலக்கியத்திற்கு கு. சின்னப்பபாரதியின் பங்களிப்பு" என்ற நூலில் இந்தியாவிலுள்ள சிறந்த எழுத்தாளர்கள் - பேராசிரியர்கள் - அரசியல் தலைவர்கள் - இதழாசிரியர்கள் - விமர்சகர்கள் பலர் கட்டுரைகள் எழுதியுள்ளனர். 2011 -ம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் பங்குபற்றிச் சிறப்பித்தவர். இம்மாநாடு குறித்து தமிழகத்தில் சிலர் மேற்கொண்ட பொய்ப் பிரசாரங்களைப் புறந்தள்ளி வாக்களித்தபடி இலங்கை வந்து மாநாட்டினைச் சிறப்பித்த பெருமைக்குரியவர். பின்னரும் இலங்கை வந்து பல இலக்கியச் சந்திப்புகளில் கலந்துகொண்டவர். இலக்கிய அமைப்புகளால் கௌரவிக்கப்பட்டவர். 2012 -ம் ஆண்டு பிரான்சில் வாழும் பாண்டிச்சேரியைப் பூர்வீகமாகக்கொண்ட மக்களால் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாடொன்று நடாத்தப்பட்டது. இம்மாட்டில் மலேசியா - சிங்கப்பூர் - கனடா - அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்களுடன் இந்திய எழுத்தாளர்களும் கலந்துகொண்டனர். புதுடில்லியிலிருந்து பேராசிரியர் பாலசுப்பிரமணியன் -தமிழகத்திலிருந்து கவிஞர் இந்திரன் - சின்னப்பபாரதி -கார்த்திக் ஆகியோர் வந்து கலந்துகொண்டு கட்டுரை சமர்ப்பித்து உரையாற்றினர். சின்னப்பபாரதியின் சங்கம் நாவலின் பிரெஞ்சு மொழிபெயர்ப்பு நூல் இம்மாநாட்டில் வெளியிடப்பட்டது.

சின்னப்பபாரதியின் பிரான்;ஸ் வருகை குறித்து பிரான்ஸ் கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தெரிவித்து கலந்துரையாடலுக்கு ஒழுங்குசெய்யுமாறு இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சீத்தாராம் யெச்சூரி எனது ஈமெயில் முகவரிக்குக் கடிதம் அனுப்பியிருந்தார். சின்னப்பபாரதி கேட்டுக்கொண்டபடிதான் அவர் எனது ஈமெயில் முகவரிக்குக் கடிதம் அனுப்பியிருந்தார். அதன்படி பிரான்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் வெளியுறவுச் செயலாளர் தோழர் ஜக்பத் அவர்களுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இக்கலந்துரையாடல் விபரங்கள் பின்னர் தோழர் சீத்தாராம் ஜெச்சூரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

எமது பாரிஸ் 'முன்னோடிகள்" இலக்கிய வட்டத்தின் 'இலக்கியமாலை" நிகழ்வில் சின்னப்பபாரதியின் சங்கம் நாவலின் பிரெஞ்சு மொழிபெயர்ப்பு நூல் வெளியிடப்பட்டது. இந்நூல் குறித்து பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சியின் இலக்கியத்துறைச் செயலாளர் பியர் மார்சி சிறப்பான உரையை வழங்கினார். கவிஞர் இந்திரனும் உரையாற்றினார். இந்நிகழ்வு குறித்த செய்தி இலங்கைப் பத்திரிகைளிலும் தமிழகத்தில் 'செம்மலர்" இலக்கியச் சஞ்சிகையிலும் வெளியிடப்பட்டது.

பத்து நாட்கள்வரை எமது வீட்டில் தங்கியிருந்து பாரிஸ் மாநகரின் பல இடங்களுக்கும் சென்று படைப்பாளிகள் பலரைச் சந்தித்து உரையாடினார். 2012 -ம் ஆண்டு சின்னப்பபாரதி இலக்கிய அறக்கட்டளையின் சிறுவர் இலக்கிய விருது பத்மா இளங்கோவனுக்குக் கிடைத்தது. 2014 -ம் ஆண்டு அறக்கட்டளையின் சிறுகதைக்கான விருது எனக்கு வழங்கப்பட்டது. ஈழத்தவர் பலருக்கு அறக்கட்டளை விருதுகளை வழங்கிக் கௌரவித்தவர்.

இலக்கியவாதிகள் சிலருக்குப் பிற படைப்பாளிகளைப் பாராட்டவே மனமிருக்காது. அடுத்தவர்களின் திறமைகளை அங்கீகரிக்கமாட்டார்கள். எதிலும் குறை கண்டுபிடிப்பார்கள். ஆனால் படைப்பாளிகளைக் கௌரவிப்பதிலும் பாராட்டி ஊக்கப்படுத்துவதிலும் அக்கறைகொண்ட சிலர் இருந்தார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்க பண்பாளர் கு. சின்னப்பபாரதி..! அன்று தோழர் ஜெயகாந்தனின் ஆரம்ப காலச் சிறுகதையொன்றை வாசித்த சின்னப்பபாரதி 50 ரூபா பரிசிளித்துத் தொடர்ந்து எழுதுமாறு ஊக்கப்படுத்தினாராம். 'எத்தனையோ விருதுகள் - பரிசுகள் பின்னர் எனக்குக் கிடைத்தாலும் அன்று சின்னப்பபாரதி தந்த பணப்பரிசு எனக்கு மகத்தானதாக இருந்தது" என்று ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார் எனக் கூறுவர்.

இந்தி மொழியில் எனது சிறுகதைத் தொகுதி - இலண்டன் உதயணனின் நாவல் - டென்மார்க் ஜீவகுமாரனின் நாவல் - திருமதி கலாநிதி ஜீவகுமாரன் கவிதை ஆகியன வெளிவர ஒழுங்குசெய்த பெருந்தகை அவர்..!  'நெஞ்சில் நிலைத்தவர்கள்" என்ற தனது நூலில் 'தோழமை நட்பில் சிறந்த பாரிஸ் இளங்கோவன்" என அவர் எழுதியுள்ளமை அவர் பண்பினை உணர்த்தி நின்றது. தமிழகம் செல்லும் போதெல்லாம் நாமக்கல் சென்று அவரைச் சந்தித்து உரையாடி வருவது வழமை.

கொரோனாக் கொடுமையினால் கடந்த இரண்டு வருடங்களாகத் தமிழகம் செல்லமுடியவில்லை. அவ்வப்போது தொலைபேசியில் பேசிக்கொள்வோம். எங்கள் இருவரையும் எழுதுங்கள்... எழுதுங்கள.;.. என்றே கேட்டுக்கொள்வார். சோம்பல் கொள்ளாமல் எழுதுங்கள் என்றே உற்சாகம் தருவார். கடைசியாக இரண்டு மாதங்களுக்கு முன்னர் பேசியபோது வழமைபோல உற்சாகமாகத்தான் பேசினார். உடல்நலக் குறைவினால் மருத்துவமனை போய்வந்ததாகவும் சொன்னார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது உடல்நிலை அறிந்து வீட்டாருடன் தொடர்புகொண்டு இருமுறை பேச முடிந்தது. அந்தச் சிந்தனையாளன் - மகத்தான படைப்பாளி - பண்பாளர் சிந்திப்பதை நிறுத்திக்கொண்டமை அவரை அறிந்த - நேசித்த மக்களுக்கும் தோழர்களுக்கும் மிகுந்த கவலையை அளிக்கும்..! அவரது இலக்கிய படைப்புகளாலும் பணிகளாலும் அவர் நாமம் மக்கள் மனங்களில் என்றும் நிலைத்திருக்கும்..!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.