இன்று எழுத்தாளர் அகிலனின் நூற்றாண்டுப் பிறந்த தினம்.அதனையொட்டி ஓவியர் புகழேந்தி தனது முகநூற் பக்கத்தில் தான் வரைந்த அகிலனின் ஓவியத்தைப் பகிர்ந்திருந்தார். அதனை நன்றியுடன் இங்கு மீள்பகிர்தல் செய்கின்றேன்.

- கல்கி அட்டைப்படமாக 'வேங்கையின் மைந்தன்' நாவற் காட்சி. -

என் வாசிப்பின் படிநிலையில் அகிலனை மறக்கவே முடியாது. இவரது வேங்கையின் மைந்தன் (பைண்டு செய்யப்பட்ட வடிவில்) , கயல்விழி (பைண்டு செய்யப்பட்ட வடிவில்) , பாவை விளக்கு (பைண்டு செய்யப்பட்ட வடிவில்) , புதுவெள்ளம், வாழ்வு எங்கே, சிநேகிதி, சிறுகதைகள் பல, சித்திரப்பாவை இவற்றை என் பால்ய, பதின்மப் பருவங்களில் விரும்பி வாசித்திருக்கின்றேன்.

பாவை விளக்கு, குலமகள் ராதை (வாழ்வு எங்கே நாவலின் திரைவடிவம்), மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் (கயல்விழியின் திரை வடிவம்) ஆகியவற்றை இவரது நாவல்களுக்காகவே பார்த்திருக்கின்றேன். இவற்றில் என்னை அதிகம் கவர்ந்தது 'பாவை விளக்கு'. ராணிமுத்து பிரசுரமாக வெளியான 'சிநேகிதி' நாவலையும் விரும்பி வாசித்துள்ளேன். என் வாசிப்பின் பரிணாமப்படிக்கட்டுகளில் மறக்க முடியாதவை அகிலனின் படைப்புகள்.