சிறுவர் இலக்கியச் சாதனையாளர் த. துரைசிங்கம்..! நடமாடும் கலைக் களஞ்சியமாக விளங்கிய தமிழறிஞர்..!! இலக்கிய வித்தகர், கலாபூசணம், ஓய்வுநிலைக் கல்விப் பணிப்பாளர் த. துரைசிங்கம் (84) காலமாகி ஒரு வருடமாகிறது. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் (23 – 08 – 2021) அவர் கொழும்பில் சிந்திப்பதை நிறுத்திக்கொண்டார். ஈழத்து இலக்கியப் பரப்பிலும், கல்விப் புலத்திலும் நன்கு அறியப்பட்ட புலமையாளர் த. துரைசிங்கம் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ஆறு தசாப்தங்களுக்கு மேலாக, எழுத்துத் துறையில் ஈடுபாடு கொண்டு அமைதியாகச் செயற்பட்டு வந்தவர். சிறந்த எழுத்தாளர். கவிஞர். நூற்றுக்கு மேற்பட்ட நூல்களின் ஆசிரியர்.

இளம் வயதிலேயே பத்திரிகைச் செய்தியாளராகப் பணியாற்றத் தொடங்கியவர். 1954 -ம் ஆண்டு கொழும்பு விவேகானந்த சபை அகில இலங்கை ரீதியாக நடத்திய ஆறுமுகநாவலர் நினைவுக் கட்டுரைப் போட்டியில் முதற்பரிசு பெற்றமையைத் தொடர்ந்து எழுத்துத் துறையில் ஈடுபடத் தொடங்கினார். கல்வித்துறை, எழுத்துத்துறை மட்டுமன்றி புங்குடுதீவின் வளர்ச்சிக்கும் சேவையாற்றியுள்ளார். புங்குடுதீவு அபிவிருத்திச் சபையின் செயலாளராக நீண்ட காலம் பணியாற்றியுள்ளார்.

ஈழத்துப் பல்வேறு பத்திரிகைகளுக்கும், தமிழகத்தின் 'மணிமொழி' இதழுக்கும் நிருபராகச் செயற்பட்டவர். தமிழ்நாடு அருள்நெறி மன்றத்தின் மாத சஞ்சிகையான'மணிமொழி' 1956 மார்கழி இதழில் இவர் குறித்துக் கட்டுரை பிரசுரித்துப் பாராட்டியுள்ளது. அருள்நெறி இயக்கத்தில் தொண்டாற்றியவர். திருப்பெருந்திரு குன்றக்குடி அடிகளாரின் அபிமானத்தைப் பெற்றவர். நல்லூர் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியப் பயிற்சி பெற்ற காலத்தில் (1957 – 1958) கலாசாலை வெளியீடான 'கலா விருட்சம்' சஞ்சிகையின் ஆசிரியராகவும் பணியாற்றினார். பேராதனைப் பல்கலைக்கழகக் கலைமாணிச் சிறப்புப் பட்டத்தையும், யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி டிப்ளோமாச் சிறப்புச் சித்தியையும் பெற்றுக்கொண்டார். ஆசிரியராக, அதிபராக, கோட்டக்கல்விப் பணிப்பாளராக, மாவட்டக் கல்விப் பணிப்பாளராக 38 ஆண்டு காலம் கல்விப் புலத்தில் பணியாற்றியுள்ளார். யுத்தப் பிரதேசமாக விளங்கிய கிளிநொச்சி மாவட்டத்தின் கல்விப் பணிப்பாளராக (1995 – 1997) இவரது பணிகள் குறிப்பிடத்தக்கன.

கலைத்துறையிலும் ஆர்வங்கொண்ட இவர், 1953 -ம் ஆண்டில் புங்குடுதீவில் 'பாரதி கழகம்' என்ற அமைப்பினை நிறுவி பாரதி விழாக்களையும், கலை நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளார். இந்நிகழ்ச்சிகளில் அன்றைய காலகட்டத்தில் பிரபல பேச்சாளர்களாக விளங்கிய தோழர் வி. பொன்னம்பலம், அ. அமிர்தலிங்கம் நாவேந்தன், தேவன் - யாழ்ப்பாணம் ஆகியோருட்படப் பலர் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளனர்.

யாழ் மாவட்டத்தில் தேசிய விளையாட்டுகள் வளர்ச்சி காணவும், கிராமியக் கலைகள் மறுமலர்ச்சி பெறவும் இவர் பங்காற்றியுள்ளார். இசை, நடன, நாடகப் போட்டிகளையும், மாட்டு வண்டி, மரதன், நீச்சல் போட்டிகளையும் நடாத்துவதில் முன்னின்று செயற்பட்டுள்ளார். யாழ் மாவட்ட சனசமூக நிலையங்களின் சமாசம், வட இலங்கை கிராமியக் கலைக்கழகம் என்பவற்றின் செயலாளராகப் பணியாற்றிக் கலைகளின் வளர்ச்சிக்கு அயராதுழைத்துள்ளார். யாழ் மாவட்ட சனசமூக நிலையங்களின் சமாசத்தின் வெளியீடான 'சமூகத் தொண்டன்' மாத சஞ்சிகையின் உதவி ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். நேபாளம், பிரான்சு, யேர்மனி, நெதர்லாந்து, இந்தியா முதலான நாடுகளுக்கு இருமுறை பயணம் மேற்கொண்ட இவர், அந்நாடுகளில் சிறுவர் இலக்கியம் தொடர்பான கருத்தரங்குகளிலும், தமிழ் வானொலி - தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றி உரையாற்றியுள்ளார்.

சிறுவர் இலக்கியத் துறையில் பெரும் ஈடுபாடு கொண்ட இவர், 44 சிறுவர் இலக்கிய நூல்களையும், 15 ஆய்வு - கட்டுரை நூல்களையும், நூற்றுக்கு மேற்பட்ட பாடநூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார். கண்டி கலைக்கழக மண்டபத்தில் 31 – 03 – 1991 -ல் நடைபெற்ற, தேசிய சாகித்திய விழாவில் முன்னாள் பிரதமர் டி. பி. விஜயதுங்கா அவர்களால் இவருக்கு 'இலக்கிய வித்தகர்' என்னும் பட்டமும், சாகித்திய விருதும் வழங்கப்பட்டது.

1997, 1998, 2000 ஆண்டுகளுக்கான சிறுவர் இலக்கியத் துறைக்கான சாகித்திய விருதுகளையும் இவர் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 1984 -ல் யாழ் இலக்கிய வட்டம் நடத்திய சிறுவர் இலக்கிய நூல் பரிசுத் தேர்வில் இவரது 'பாலர் பாட்டு' நூல் முதற்பரிசினைப் பெற்றது. இலங்கை இலக்கியப் பேரவை நடத்திய மதுரகவி இ. நாகராஜன் நினைவுச் சிறுவர் கவிதைப் போட்டியிலும் இவர் பரிசினைப் பெற்றார். இவர் வெளியிட்ட 'இனிக்கும் பாடல்கள் படைத்த இருபது கவிஞர்கள்' என்னும் நூலும் இலங்கை இலக்கியப் பேரவையின் விருதினைப் பெற்றது. திருகோணமலையில் நடைபெற்ற வடக்கு கிழக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சின் சாகித்திய விழாவில் (17 – 10 – 1999) சிறுவர் இலக்கித்துறைக்கான சாகித்திய விருது இவரது 'பாட்டுப் பாடுவோம்' நூலுக்கு வழங்கப்பட்டது. இவர் எழுதிய 'வீரத்தின் வெற்றி' என்னும் நாடக நூல் தமிழகத்தில் பதிப்பகம் ஒன்றினால் வெளியிடப்பட்டது. தமிழக அரசு இந்நூலின் 800 பிரதிகளைக் கொள்வனவு செய்து தமிழ் நாட்டிலுள்ள நூலகங்களுக்கு விநியோகித்தமை குறிப்பிடத்தக்கது. இவரது சிறுவர் பாடல்கள் சில பிரான்சு நாட்டில் இறுவட்டுகளாகத் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளன. 1961 – 1965 காலப்பகுதியில் இலங்கை வானொலி கிராம சஞ்சிகை நிகழ்ச்சியில் இவரது நாடகங்கள், உரைச் சித்திரங்கள் பல மாதம் தோறும் ஒலிபரப்பாகியுள்ளன.

இவரது எழுத்துப் பணிக்குக் கிட்டிய அங்கீகாரமும் விருதுகளும் ஏராளம். சிறுவர் இலக்கியத் துறைக்கான தேசிய இலக்கிய (சாகித்திய) விருதினை நான்கு முறை பெற்ற பெருமைக்குரியவர். வடக்கு கிழக்கு மாகாணக் கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சு, இலங்கை இலக்கியப் பேரவை, யாழ் இலக்கிய வட்டம், கொழும்பு விவேகானந்த சபை, கலாசார அலுவல்கள் அமைச்சு, மட்டக்களப்பு எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் எனப் பலதரப்பட்ட அமைப்புகள் இவருக்கு விருதுகளை வழங்கிக் கௌரவித்துள்ளன. இலக்கிய வித்தகர், கலாபூசணம், தமிழியல் விருது முதலான பல்வேறு விருதுகளுக்குரித்தானவர். எழுத்துப் பணியில் இடைவிடாது உழைத்துக்கொண்டிருந்த தமிழறிஞர். இவரது சிறுவர் இலக்கிய நூல்கள், பல பதிப்புகள் வெளியாகி ஈழத்தில் விற்பனையில் சாதனை படைத்தவையாகும்.

இவரது, பைந்தமிழ் வளர்த்த ஈழத்துப் பாவலர்கள், தமிழ் இலக்கியக் களஞ்சியம், ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாறு, ஈழத்துத் தமிழ் அறிஞர்கள், ஈழத்தில் சிறுவர் இலக்கியம், பாடம் புகட்டும் பழமொழிகள், விந்தை புரிந்த விஞ்ஞானிகள் மற்றும் சிறுவர் இலக்கிய நூல்கள் குறிப்பிடத்தக்க, பாராட்டுப் பெற்ற நூல்களாகும். தமிழகத்திலும் இலக்கியவாதிகள், தமிழறிஞர்களின் பாராட்டுகளைப் பெற்றவர். ஆனந்தன், பூங்குன்றன், புங்கையூரன் ஆதியாம் புனைபெயர்களிலும் எழுதியுள்ளார். தமிழகத்திலிருந்து வெளிவந்த உமா, கரும்பு, கலைமன்றம், ரத்னபாலா, மணிமொழி ஆதியாம் சஞ்சிகைகளிலும் இவரது ஆக்கங்கள் வெளியாகியுள்ளன.

'இவரை ஒரு நடமாடும் கலைக்களஞ்சியம்' என்றே கருதிட வேண்டும் - மதிக்க வேண்டும்' என எழுத்தாளரும், இடதுசாரி அரசியல் செயற்பாட்டாளருமான அந்தனி ஜீவா 'ஞானம்' சஞ்சிகையில் இவர் குறித்து எழுதுகையில் குறிப்பிட்டுள்ளார். ஈழத்தில் தொடர்ந்து மாதந்தோறும் தவறாது வெளிவரும் இலக்கிய சஞ்சிகையான 'ஞானம்' 2014 ஜனவரி இதழில், 'இலக்கிய வித்தகர், கலா பூசணம், கவிஞர் த. துரைசிங்கம்' என இவர் படத்தை அட்டையில் பிரசுரித்துக் கட்டுரையும் வெளியிட்டுள்ளது.

காலஞ்சென்ற பிரபல எழுத்தாளர் நாவேந்தனின் இளைய சகோதரரான இவர், அவரது பெயரால் வருடந்தோறும் சிறந்த சிறுகதைத் தொகுதிக்கு, இலங்கை இலக்கியப் பேரவை மூலம் 'நாவேந்தன் விருது' வழங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது. சட்டத்துறைப் பேராசிரியர் வி. ரி. தமிழ்மாறன், எழுத்தாளர், மருத்துவர் வி. ரி. இளங்கோவன், மருத்துவர் வி. ரி. சிவானந்தன் ஆகியோர் இவரது இளைய சகோதரகளாவர்.

அனுப்பியவர்; இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.