மிகப்பெரும் வியப்பையையும் விந்தையையும் ஏற்படுத்தும் விதமாகவும் மலையகத்தில் வேர் விட்டு வளரும் சிவியியலுக்கு (சி.வி. வேலுப்பிள்ளை) ஆழ்ந்த கனதியை ஏற்படுத்தம் விதமாகவும் 'மலையக அரசியல்: தலைவர்களும் தளபதிகளும்' எனும் சி.வி. வேலுப்பிள்ளையின் கட்டுரைகளை தாங்கிய நூல் சென்னை தாய் வெளியீடாக திரு மு. நித்தியானந்தன் மற்றும் திரு எச். எச். விக்கிரமசிங்க அவர்களின் பெரும் முயற்சியினால் வாசகர் கைகளுக்குக் கிட்டியுள்ளது.

பேராசிரியர் சோ. சந்திரசேகரனுக்குக் காணிக்கையாகச் செலுத்தப்பட்ட இந்த நூலுக்குள் நுழையும் மலையகம் குறித்ததேடல் முயற்சியில்  மலையக வரலாற்றின் விட்டுப்போன பக்கங்களை தேடுபவர்களும் அல்லது இதுவரைக் கிடைத்த ஆதாரங்களை வைத்து சிந்திப்பவர்களும் தமக்குள் தாமே சிலிர்த்துப் போகும் வண்ணம் மலையகம் சார்ந்த ஆளுமைகளைத் தனது சொல்லோவியங்களால்  தகவல்களாலும் முன் அனுமானங்களாலும் நாம் காணாத ஒரு மலையக வரலாற்றை சி.வி படைத்துள்ளார் எனலாம்.

1959யில் தினகரனில் பேராசிரியர் கைலாசபதியின் உந்ததலிலால் தமிழில் எழுதும் முயற்சியை ஆரம்பித்த சி.வி. வேலுப்பிள்ளையின் இந்த ஆளுமைகளின் சிறு சரிதங்கள் அவரின் உச்சம் தொட்ட முயற்சிகளில் ஒன்றாக கருதப்பட வேண்டியிருக்கின்றது. மலைநாட்டு மக்களின் தலைவர்களாக 12 பேரும் உரிமைப் போர் தளபதிகளாக 14 பேரும் இதில் அச்சொட்டாக 1959 ஆம் ஆண்டில் படம் பிடிக்கப்பட்டுள்ளார்கள்.
சி.வி அவர்கள் அவர் காலத்தே மறைந்த நடேசய்யர், சாராநாதன், சிவனடியான் போன்றோர்களையும் அவரின் சம காலத்தவர்களையும் குறித்த பதிவு மற்றும் அவர்களின் நிகழ்காலம் குறித்த விமர்சனம் எதிர்காலம் குறித்த ஆருடம் என்பவைகள் ரசனையூட்டும் வண்ணமும் அவர்கள் பால் அபிமானம் கொள்வதோ அல்லது அலட்டிக் கொள்ளாமல் விடுவதா என்பதை பூடகமாக வாசகர்களுக்குச் சொல்வதில் எழுத்தாளர் எவ்வளவு சாமார்த்தியமாகச் செயற்பட்டிருக்கின்றார் என்பதை வாசிப்பவர்கள் புரிந்து கொள்வார்கள்.

யாராலும் அலட்சியம் செய்யப்பட முடியாத நடேசய்யர் ஏன் தேர்தலில் தோல்விஅடைந்தார் என்பதற்குக் காரணமாக அவரோடு ஆமாம் போடுபவர்கள் இருந்தார்களே அல்லாமல் ஆலோசனைச் சொல்ல யாருமில்லை என்பதை பதிவுச் செய்கின்றார். 1927 ஆண்டு நடேசய்யர் சுல்தானின் இடத்துக்குச் சட்டசபைக்குத் தெரிவு செய்யபட்டார் என சி.வி குறிப்பிடுகின்றார். யார் இந்த சுல்தான். ஏன் அவரிடத்துக்கு ஐயர் தெரிவாக வேண்டும் என்ற வினாவுக்கு விடை தேட வேண்டும். ஐயரவர்கள் இலங்கையில் இல்மனைட் கனிம சுரங்கவேலை ஆரம்பிக்க குரல் கொடுத்ததும் நீர்கொழும்பில் இந்து மதத்தினருக்கு தேரிழுத்துச் செல்ல இருந்த தடையை நீக்கியதும் சொல்லப்பட்டுள்ளது. சாரல்நாடன் எமக்குக் காட்டிய நடேசய்யர் ஒரு நாயக வழிபாட்டுத் தலைவராக இருந்தார். ஆனால் சி.வி காட்டிய ஐயரின் எழுச்சி, வளர்ச்சி, வீழ்ச்சி மற்றும் மரணம் என்பன ஒரு நடுநிலை நோக்காக அமைவதைக் காணலாம்.

கோகானை தலைவராகக் கொண்ட கோஜா முஸ்லிமான அசீஸ் ஒரு வர்த்தகராக இருந்து மலையகத் தலைவராக இருப்பதை எப்படி வர்ணிக்கின்றார் தெரியுமா? அரசியல்வாதிகள் அவரை வர்த்தகர் என்றுச் சொல்லலாம்- வர்த்தகர்கள் அவரை அரசியல்வாதி என்றுசொல்லலாம் என அவரின் இரு தனித்திறமைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவதோடு உல்லாச பிரியரான அவருக்கு மக்கள் மீது ஏற்பட்ட மோகத்தையும் தொண்டமானோடு ஏற்பட்ட இணக்கத்தையும்  பின்னர் பிணக்கையும நிதானமாகக் கையாண்டு எழுதி காங்கிரஸ் என்ற ஒரு மக்கள் இயக்கம் 1955 ஆண்டின் பின் ஒரு மகுடத்தைத் தரிக்க இரு தலைகளுக்கிடையிலான போட்டி தொண்டமான் காங்கிரஸ் மற்றும் அஸீஸ் காங்கிரஸ் எனும் இரு பிரத்தியேக சொத்துகள் தோன்ற காரணமானது என சிவி சொல்லி இருப்பது எவ்வளவு பொருத்தமாக இருக்கின்றது.

தொண்டமானின் அரசியல் நுழைவுக்குஅவரின் தந்தை எப்படி அடிப்படை அமைத்துக் கொடுத்தார் அதன் பின் அவரின் நுழைவும் ஸ்தாபன த்தை தனது மூலதனமாதக்கிக் கொள்ளக் கையாண்ட யுத்திகளை பட்டும் படாமல்லாமல் சொல்லாமல் வெளிப்படையாகச் சொல்பவராக சிவியின் தனித்துவம் சரியாக வெளிப்பட்டுள்ளது. தொண்டமான் தொடர்ந்து தலைவராக இருக்கும் வல்லமையை எப்படி ஏற்படுத்திக் கொண்டார்? 14 வருடங்கள் பெரி. சுந்தரம் பெற்றுக்கொண்ட பட்டறிவின் பின்னணியில் எப்படித் தொண்டமான் ஒரே பாய்ச்சலில் அவருக்கு சமதையானார்?  தொண்டமான் வாசிப்பதால் தனது அறிவை பெருக்கிக் கொள்ளாவிட்டாலும் அறிவுள்ளவர்களை ஊதுகுழலாக்கி  இலங்கையின் பொருளாதாரத்தை தாங்கும் 7 லட்சம் இந்தியவம்சாவளி மக்களின் தலைவர் என்பதை எங்கு யாராருக்கு எப்படி எடுத்துச் சொல்லவேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் தொண்டாவின் சாணக்கியத்தை வஞ்சப் புகழ்ச்சி செய்கின்றார்.   

மலையக தொழிற்சங்க அரசியல் துறையில் கனவான்களாக கொள்ளத்தக்க பலரை நேர்த்தியாக நிறுவிக்காட்டும் போது சி.வி அவர்களால் கண்ணியமிக்கவர்களாக போற்றப்படும் அவர்களை கண்களில் ஒற்றிக் கொள்ள வேண்டும் போல் தோன்றுகின்று. ஆர்.மோத்தா, பெரி.சுந்தரம், கே.இராஜலிங்கம், ஐ.எக்ஸ்.பெரோரா எள்.பி.வைத்திலிங்கம், குஞ்சிபொறி சண்முகம், ஏ.எஸ்.ஜோன், எஸ் சேமசுந்தரம் போன்றோர்கள் பெயரளவிலேனும் சாதாரண மக்களிடம் வாழாவிட்டாலும் அவர்கள் மலைநாட்டு மக்களுக்காக செய்த பணிகள் இன்று அம்மக்களின் மேம்பாட்டுக்கு வழிவகுத்திருப்பதை எடுத்துக் காட்டுகின்றார்.

1890 யில் நெல்லுமலைதோட்டத்தில் பிறந்து இங்கிலாந்து சென்று சட்டத்தரணியாகி மகாத்மாகாந்தியை சந்தித்து மக்கள் சேவைக்காக உந்தப்பட்டு இலங்கை சுதந்திரபோராட்ட வீரர்களில் ஒருவராகவும் ஹட்டன் தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு வென்று பின் கைத்தொழில் வர்த்தக அமைச்சராகி இலங்கைவங்கி உருவாக்கத்துக்கும் காரணமாகிய பெயர் புகழ் விரும்பாத பெரி.சுந்தரம் மலையக மக்களின் சரித்திரம் எழுதப்படும் போது ஒரு புதிய இனத்தின் ஒரு புதிய சமுதாயத்தின் பிதா என புகழப்படுவது திண்ணமென சி.வி அவர்கள் உறுதி உரைக்கின்றார். ஆனால் பெரி.சுந்தரத்தின் மேதாவிலாசம் ஏனோ இன்றைய தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லப்படவில்லையோ என்ற கவலையைஅவரின் கூற்று ஏற்படுத்திவிடுகின்றது.

புசெல்லாவ சங்குவாரியில் பிறந்த கே. இராஜலிங்கம் 1927 காந்தியின் இலங்கை வருகையின் பின்னர் மக்கள் சேவைக்கு தயாராகி காங்கிரஸ் ஸ்தாபனத்துக்குள் கரடுமுரடான பயணத்தை அனுபவித்து மக்கள் அபிமானம் வென்றவராக கல்விக் கண் திறப்பவராக செயற்பட்டவிதத்தை அப்பழுக்கின்றி சி.வி வெளிப்படுத்துகின்றார்.

தோட்ட அரசியலில் முன்னோடியானஏ.எஸ். ஜோன் பின் அரசியலிலிருந்துவிடுபட்டுஓய்வுபெற்றுகாலம் கழிப்பதைஅவரைபேட்டிகாணுவதைப் போன்றஉணர்வை ஏற்படுத்தும்ஆளுமைக்கானஉரைச்சித்திரத்திலிருந்துகற்றுக் கொள்ளஎவ்வளவோ இருக்கின்றது என்பதைத் தெளிவுப் படுத்துகின்றார்.

டி. சாரநாதன் மற்றும் டி. இராமனுஜம் எப்படி நடேசய்யரின் மருமகன் என்ற உறவு என்பது பற்றி புரிந்துகொள்ளவும் பின்னர் ஐயரை விட்டுபிரிந்து அவர்கள் தனிப்பயணம் சென்று நயத்தக்க ஆளுமைகளாக உருவெடுத்தார்கள் என்பதை திருத்தமாக புரிந்துகொள்ள இந்த நூலில் போதிய தகவல்கள் உள்ளன. சாரநாதன் அவர்ளோடு ஒப்பிடும் போதுமற்ற இருவரும் மைல் கணக்கில் பின்னால் இருந்தார்கள் எனச்சொல்கின்றார். எழுத்துத்துறையிலும் போராட்டத்தீ வளர்ப்பதிலும் தீவிரம் காட்டியசராநாதன் 1940 முற்பகுதியில் ஏக்கமும் ஏமாற்றமும் கொண்டு சென்னை திரும்பினார் என்று குறிப்பிடுவதோடு ஆசை தீரபியர் அருந்தி அகால மரணத்தை தழுவிக் கொண்டார் என்கிறார். நடேசய்யரை விட்டுவிலகிய இராமனுஜம் தன்னை நிலைநிறுத்தி தனி ஆளுமையாக ஜொலிக்ககண்டிக்குவந்ததும் அங்கு எல்லோரின் அபிமானத்தை பெற்று நகரசபையில் உறுப்புரிமை பெற்றுபின் அளுத்நுவரதொகுதியில் சுயேட்சையாக வெற்றி பெற்று முதலாவது பாராளுமன்றத்தில் நுழைந்த வரலாற்றின் உண்மைகள் சி.வியின் பதிவில் இருக்கின்றன.

தொண்டமான் குடும்பத்தில் பிறந்தகே. குமாரவேல் எப்படி காங்கிரஸ் இயக்கத்தின் தனாதிகாரியாகவும்  தான் ஒருபக்திமானாக இருந்து எப்படி காலம் தள்ளினார் என்பதை வர்ணித்து கொட்டகலை தொகுதியில் வெற்றி பெற்று மக்கள் பிரதிநிதியானதையும் பின்னர் அவர் காங்கிரஸில் இருந்து விலகி தனது எண்ணப்படி சுயமாக தன்னைக் கட்டமைத்தக் கொண்டதை மற்றவர்கள் பரிதாபமாக பார்த்தபோது சி.வி அவர்கள் அதனை “பெரிய முதலாளிகளாயுள்ள அரசியல்வாதிகள் தங்களை அடக்கு முறையிலிருந்தும் சுரண்டலிலிருந்தம் விடுவித்துவிடுவார்கள் என்ற பிரமையிலிருந்த மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளார்கள்” என முத்தாய்ப்பு வைக்கும் போது சி.வி உள்குத்தை யார் தான் புரிந்துகொள்ளமுடியாது.

தனது சகாவான வி.கே. வெள்ளையனையும் சி.வி விட்டுவைக்கவில்லை. காங்கிரஸிலிருந்து வெளியேறிய வெள்ளையன் அட்டன் கோட்டையில் தன்னை கட்டியெழுப்பிக் கொண்டதையும் வாலிபத்தலைவரென்ற முறையில் வெள்ளையன் தமது நடவடிக்கைகளை உருவாக்குவதற்குரிய சிந்தனை செய்வதற்கு போதிய அவகாசமிருந்துள்ளது என்பதையும் காத்திருந்து, தவிர்க்க முடியாத உண்மையைக் கண்டுகொள்ளவும் அவருக்கு அவகாசமிருந்துள்ளது என்பதையும் கூறி மனிதர்கள் உண்மையைக் காணும் போது, ஏகாந்த மலைகளுகளுக்குச் சென்று விடுகின்றனர் என்கிறார். ஆனால் கடவுள் தமக்குத் தாமே கூறியுள்ளதைக் கவி சிரேஷ்டர்இ ரவீந்திரநாத் தாகூர் உலகத்துக்குசொல்கின்றார்: “எனது விமோசனம் துறவறத்தில் தங்கியிருக்கவில்லை. படைப்பின் பந்தங்களை நான் மேற்கொண்டுள்ளேன்.” என வெள்ளையன் பற்றிய விவரணத்தை முடிக்கின்றார். வெள்ளையன் பிரம்மசரியத்தை கடைப்பிடித்தமையை பிடிக்காமல் இப்படிச் சொன்னரோ தெரியவில்லை.

போஸ் சங்கம் அமைத்த செல்லையா, நாவலப்பிட்டியில் மறக்க முடியாத பணியாற்றிய கே.சுப்பையா, ஊவாவில் தன்னை மக்கள் தலைவனாக நிறுவிக்கொண்ட எஸ்.எம். சுப்பையா இயட்டியாந் தொட்டையை தளமாகக் கொண்டு களனி பள்ளத்தாக்கில் கோட்டை அமைத்த கே.ஜி.எஸ். நாயர், மடக்கும்புறவில் பிறந்த 2ஆம் உலகயுத்தில் போர் வீரராக இருந்து பின் காங்கிரஸில் சேர்ந்த எஸ்.மாரியப்பா எப்படி ஊவாவில் சுப்பையாவும் தலவாக் கொல்லையில் சி.வி. வேலுப்பிள்ளையும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் தெரிவு செய்யப்பட அவரின் வகிபாகம், மலைநாட்டு சரித்திரத்தை நல்ல முறையில் உருவாக்க நடேசன் போன்ற சிலர் இருந்தால் போதும் எனப்பாராட்டப்படும் எஸ். நடேசனின் கல்விமற்றும் அரசியல் பிரவேசம், இன்றும் எமக்கு வழிகாட்டியாக திகழும் பி. பிவேராஜ் பற்றியெல்லாம் நற்பதிவுகள் இந்நூலில் உண்டு. தூரத்துப் பச்சை நாவலாசிரியாக நமக்கு அறிமுகமான காங்கிரஸ் மாதர் சங்கம் ஊடாக சேவை ஆற்றிய கோகிலம் சுப்பையா அம்மையார், அதுபோன்ற சிவபாக்கியம் குமாரவேல் எனும் பெண் ஆளுமைகள் இருவரும் சி.வியின் கவனத்தை ஈர்த்துள்ளது கவனிக்கத்தக்கது.

ஆளுமைகளின் புகை பிடிக்கும் பழக்கம், ரோஜா சூடும் விருப்பம், ஆடையணிகளில் ஒவ்வொருவருக்கும் தனித்துவ ஈடுபாடு, தலைவர்கள் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள், ஒவ்வொருவரின் தனிப்பட்ட ஆன்மீக ஈடுபாடுகள், இந்தியாவோடு கொண்டுள்ள உறவுகள் என பலரைப் பற்றி பல்வேறு கொசுறு தகவல்கள் நூலுக்கு சுவாரஸ்யம் சேர்ப்பதாக இருக்கின்றது.

முலையக மக்களின் தலைவர்களை இளைய தலைமுறை மறுபரிசீலனை செய்ய ஒரு கைந்நூலாக கொள்ளத்தக்க இந்த நூலை வெளிக்கொணர முழுப் பங்களித்த மு.நித்தியானந்தனுக்கும் எச்,எச். விக்கிரமசிங்கவும் செய்த இந்த வரலாற்றுப் பங்களிப்பு அபரிமிதமானது என்றால் அது மிகையல்ல,

அனுப்பியவர் எச்.எச்.விக்கிரமசிஙக  - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.