-  எழுத்தாளர் அ.ந.கந்தசாமி  நினைவு தினம் பெப்ருவரி 14.  இலங்கைத் தமிழ் இலக்கியத்தின் முக்கிய ஆளுமைகளிலொருவர். கவிஞர், நாவலாசிரியர், சிறுகதையாசிரியர், நாடகாசிரியர், கலை, இலக்கியத்  திறனாய்வாளர், மொழிபெயர்ப்பாளர், சமூக, அரசியற் செயற்பாட்டாளர்  என அவரது கலையுலக, சமூக, அரசியற் பங்களிப்பு  பரந்தது. விதந்தோடத்தக்கது. நினைவு கூர்வோம். - பதிவுகள்.காம் -


1.  நான் ஏன் எழுதுகிறேன்?     - அறிஞர் அ.ந.கந்தசாமி -    
 
அப்பொழுது எனக்குப் பதினேழு வயது நடந்து கொண்டிருந்தது. உள்ளத்திலும் உடம்பிலும் சுறுசுறுப்பும், துடிதுடிப்பும் நிறைந்த காலம். உலகையே என் சிந்தனையால் அளந்துவிட வேண்டுமென்று பேராசைகொண்ட காலம். காண்பதெல்லாம் புதுமையாகவும், அழகாகவும், வாழ்க்கை ஒரு வானவில் போலவும் தோன்றிய காலம்.  மின்னலோடு உரையாடவும், தென்றலோடு விளையாடவும் தெரிந்திருந்த காலம். மின்னல் என் உள்ளத்தே பேசியது. இதயத்தின் அடியில் நனவிலி உள்ளத்தில் புகுந்து கவிதை அசைவுகளை ஏற்படுத்தியது. பலநாள் உருவற்று அசைந்த இக்கவிதா உணர்ச்சி ஒருநாள் பூரணத்துவம் பெற்று உருக்கொண்டது. எழுத்தில் வடித்தேன். "சிந்தனையும் மின்னொளியும்" என்ற தலைப்பில் இலங்கையின் ஓப்புயர்வற்ற இலக்கிய ஏடாக அன்று விளங்கிய 'ஈழகேசரி'யில் வெளிவந்தது. இக்கவிதை ஒரு காரியாலயத்தில் மேசை முன்னுட்கார்ந்து என்னால் எழுதப்பட்டதல்ல. இயற்கையோடொன்றிய என் மனதில் தானே பிறந்த கவிக்குழதை இது. எனினும் பல ஆண்டுகளுக்குப் பின்னர் இலக்கிய சித்தாந்தங்கள் பலவற்றை ஆராய்ந்து நான் என்ம்னதில் ஏற்றுக் கொண்ட அதே கருத்துகளின் சாயலை இக்கவிதையில் என்னால் இன்று காண முடிகிறது.

மனோதத்துவ அறிஞர் மனதை நனவிலி மனம், நனவு மனம் என்று இரு கூறுகளாகப் பிரிக்கின்றனர். ஆங்கிலத்தில் இவற்றை முறையே Sub Conscious Mind, Conscious Mind என்று குறிப்பார்கள். "நான் ஏன் எழுதுகிறேன்?" என்ற கேள்விக்கு நனவு மனத்திடம் பதில்பெற முடியாது. ஏனெனில் நனவு மனத்தைவிட சக்திவாய்ந்தது நனவிலி மனம் என்பதே மன இயல் அறிந்தவர் முடிவு. கவிதை பெரும்பாலும் நனவிலி மனதில் உருவாகி நனவு மனத்தின் வழியாகப் பிரவாகிக்கும் ஒன்றாகும். பின்னால் நான் ஏற்றுக்கொண்ட கருத்துகள் இக்கவிதையை எழுதிய நாளில் என் நனவிலி மனதில் துளிர்த்திருந்தவை தாம் என்பதையே இக்கவிதையில் நான் வலியுறுத்தும் தத்துவங்கள் இன்று எனக்குணர்த்துகின்றன.

இக்கவிதை எனது முதலாவது கவிதையல்ல. இதற்கு முன்னரே கல்லூரிச் சஞ்சிகையில் ஒன்றிரண்டு கவிதைகளை நான் எழுதியிருந்தேன். இருந்தாலும் இது என் ஆரம்ப இலக்கிய முயற்சிகளில் ஒன்று.  எனவே "நான் ஏன் எழுதுகிறேன்?, எழுதினேன்?" என்பதற்கு இக்கவிதையில் பதில் காண முயற்சிப்பது பொருத்தமானதேயாகும்.

இக்கவிதையின் சில வரிகள் நினைவில் மிதந்து வருகின்றன.

"..கொட்டும் இடித்தாளம் இசைய நடம் செய்யும்
மட்டற்ற பேரழகு வான் வனிதை போல் மின்னல்
தோன்றி மறைந்ததுவே.
சிந்தனையின் தரங்கங்கள் ஊன்றி எழுந்தன.
இவ் ஒளி ம்ின்னல் செயல் என்னே!
வாழ்வோ கணநேரம்!
கணநேரந்தானும் உண்டோ?
சாவும் பிறப்பு அந்தக் கணநேரத்தடங்குமன்றோ?
....."
மின்னலின் வாழ்வு கணநேரம். ஆனால் அக்கண நேரத்தில்:

"..சூழம் இருள் நீங்கும்.
சுடர் விளக்குப் போலிங்கு
சோதி கொழுத்திச்
சோபிதததைச் செய்து விட்டு
ஓடி மறைகிறது...."

இம்மின்னல் எனக்குணர்த்தும் செய்தி என்ன? "சில நாட்களே நீ இவ்வுலகில் வாழ்ந்தாலும் மக்களுக்கும், உலகுக்கும் பயனுள்ளவனாக வாழ். இன்று நீ இருக்கிறாய். நாளை இறந்து விடலாம். ஆகவே நன்றே செய்க. அதையும் இன்றே செய்க" இது தான் மின்னல் சொல்லித் தரும் பாடம்.

இருளை விரட்டி ஒளியைப் பரப்பும் மின்னல் சமுதாயத்தில் சூழ்ந்துள்ள மடமை,வறுமை முதலான இருள்களை நீக்கி, அறிவையும் ஆனந்தத்தையும் பரப்பும்படி எனக்குப் பணித்தது. வாழ்க்கையையே இதற்காக அர்ப்பணிக்கவேண்டும் என்ற ஆசை மேலிட்ட நான் என் எழுத்தையும் அத்துறைக்கே பயன்படுத்த வேண்டும் என்று நினைத்ததில் வியப்பில்லை அல்லவா?

மனிதன் சமுதாயத்தின் ஒரு அங்கம். அவனுக்கு சமுதாயப் பொறுப்பொன்று உண்டு. வெறுமனே உண்ணுவதும், உறங்குவதும், புலனுகர்ச்சிகளில் ஈடுபடுவதும் வாழ்க்கையாகாது. அறிவு வளர்ச்சி பெற்ற மனிதன் இவற்றோடு வேறு சில காரியங்களையும் செய்ய விரும்புவான். மற்றவர் முகத்தின் புன்னகை தோட்டத்தில் பூத்துக் குலுங்கும் முல்லைமலர் போல் அவனுக்கு இன்பத்தையூட்டும். "இன்று நாம் வாழும் சமுதாயத்தில் நாம் புன்னகையைக் காணவில்லை. துன்பமும், துயரமும், அழுகையும், ஏக்கமும், கண்ணீரும், கம்பலையுமாக நாம் வாழுமுலகம் இருக்கிறது. ஏழ்மைக்கும், செல்வத்துக்கும் நடக்கும் போரும், அடிமைக்கும், ஆண்டானுக்கும் நடக்கும் போரும், உயர்சாதியானுக்கும் தாழ்ந்த சாதியானுக்கும் நடக்கும் போரும், அசுரசக்திகளுக்கும், மனித சக்திகளுக்கும் நடக்கும் போரும் இன்று உலகையே கலங்க வைத்துக் கொண்டிருக்கின்றன. இப்போர்களினால் வாழ்வே ஒரு சோககீதமாகிவிட்டது. இப்போர்களை எவ்வளவு விரைவில் ஒழிக்க முடியுமோ அவ்வளவு விரைவில் ஒழித்துவிட வேண்டும். அதன்ப பின்தான் போரொழிந்த சமத்துவ சமுதாயம் பூக்கும். அதைப் பூக்க வைக்கும் பணியில் எழுத்தாளன் முன்னோடியாகத் திகழ வேண்டும் என்ற கருத்தை உலகின் புகழ்பெற்ற பேனா மன்னர்கள் என் மனதில் தோற்றுவித்தனர்.

பிரெஞ்சுப் புரட்சி கண்ட ரூசோ, வால்டயர் தொடக்கம் மார்சிம் கோர்க்கி, எஹ்ரென்பேர்க் வரைக்கும் எல்லா நல்ல எழுத்தாளர்களும் இந்தச் செய்தியையே எனக்குக் கூறினர். பேர்னாட் ஷாவின் எழுத்துகளும் இன்றைய பேட்ரண்ட் ரசல் எழுத்துகளும் கூட சமுதாய முன்னேற்றத்துக்குரிய பிரச்சினைகளுக்குத் தீர்ப்பு காணும் பணியை அலட்சியம் செய்துவிடவில்லை. வங்கக் கவிஞர் தாகூரும், தமிழ்க் கவிஞன் பாரதியும் தாம் வாழ்ந்த சமுதாயத்தின் உடனடிப் பிரச்சினைகளைத் தீர்க்கும் பணிக்குத் தமது பேனாக்களை அர்ப்பணம் செய்ய மறக்கவில்லை....உலகப் பண்பாட்டுப் பாடிய பாரதிதாசனும் சமுதாய ஊழல்களைச் சுட்டெரிக்கும் பணிக்குத் தன்னாளான சேவையைச் செய்திருக்கின்றான்.

"மக்கள் இலக்கியம்" என்ற கருத்தும் "சோஷலிஸ்ட் யதார்த்தம்" என்பனவுமே என் மனதைக் கவர்ந்த இலக்கிய சித்தாந்தங்களாக விளங்குகின்றன. எழுத்தாளன் வாழ்க்கையை விமர்சிப்பதுடன் நின்று விடக்கூடாது. அந்த விமர்சனத்தின் அடிப்படையில் வாசகர்களுக்கு எதிர்காலத்தில் நம்பிக்கை ஊட்டவேண்டும். அவ்வித நம்பிக்கையில்லாவிட்டால் முன்னேற்றமில்லை. வாழ்வே இல்லை. இவ்வித பிரக்ஞையில் பிறக்காமல் வெறுமனே யதார்த்தத்தை ஒரு சுத்த இலட்சியமாகக் கொண்டு எழுதும்போது நம்பிக்கைக்குப் பதில் அவநம்பிக்கையின் தொனிகளே கேட்க ஆரம்பிக்கலாம். நைந்த உள்ளத்தின் சோகக்குரலாகக் கேட்கும் எழுத்தால் பயனில்லை. நொந்த உள்ளத்தின் செயல் துணிவுகொண்ட வேகக் குரலாக அது ஒலிக்க வேண்டும். வாழ்வதற்கு நேரடியாகவோ, குறிப்பாகவோ, மெளனமாகவோ வழிகாட்டும் எழுத்தே எழுத்து. இந்தக் கருத்துகள் என்னை உந்துகின்றன. அவற்றுக்காகவே நான் எழுதுகின்றேன்.

எழுத்தில் பலவகை உண்டு. நேரடிப் பிரச்சார எழுத்து ஒருவகை. கதை, கவிதை, நாடகம் என்ற உருவங்களில் வாழ்க்கையின் படமாகவும் வழிகாட்டியாகவும் எழுதப்படுபவை வேறொருவகை. இந்த இரண்டாவது வகை எழுத்தே இலக்கியம். அதுவே நிலைத்து நிற்கும் தன்மை வாய்ந்தது. ஆகவே அதைப்பற்றியே நான் இங்கு அதிகமாகக் கூறியிருக்கிறேன்.

ஆனால் சோஷலிஸ யதார்த்தப் பாதையில் இலக்கியப் பணிபுரிவோர் வெறும் அழகையே நோக்காகக்கொண்ட கருத்துகள் இயற்கையாக மனதில் தோன்றும்பொழுது அவற்றை எழுதாது விட்டுவிட வேண்டுமா? நல்ல கருத்துகளைக் கருக்கிச் சாகவிட்டு விடவேண்டுமா என்று கேட்கப்படுகிறது.

பாரதி முற்போக்குக் கவிஞன். ஆனால் மக்கள் பிரச்சினைகளைப் பாடிய  அதே வாயால் 'கண்ணன் என் காதலனை'யும் பாடினான். ஆம், தோட்டக்காரன் கத்தரிக்காயையும், கீரையையும், தக்காளியையும் பயிரிடுகிறான். ஆனால் வீட்டு வாசலிலே மல்லிகைக் கொடியைப் படர விடுவதில்லையா? கத்தரித் தோட்டத்து வேலையின் களைப்புப் போக, மல்லிகைப் பந்தலின் நறுமணத்தை மகிழ்ச்சியோடு உறிஞ்சி மகிழ அதன் கீழ்ச் சென்று உட்காருவதில்லையா?

எமக்கு நெல்லும் வேண்டும். கோதுமையும் வேண்டும். காய்கறிகளும் கிழங்குகளும் வேண்டும். ஆனால் ரோசா மலர்களும் வேண்டும். ரோசாமலர்களை மனநிறைவுக்காக நடும் தோட்டக்காரன் ரோசா மலர் நடுபவன் என்று சொல்லப்படமாட்டான். தோட்டக்காரன் என்றுதான் அழைக்கப்படுவான்.

பிள்ளையைத் தூங்க வைக்கத் தாலாட்டுப் பாடுவோம். ஏற்றமிறைக்கையில் ஏற்றப்பாட்டுப் பாடுவோம். அணிவகுப்பில் புரட்சிக் கீதம் பாடுவோம். ஆனால் குளிக்கும் அறையில் வெறும் ஸ்வரங்களை நாம் வாய்விட்டு இசைப்பதில்லையா?

சோஷலிச யதார்த்தப் பாதையில் முற்போக்கு இலக்கியம் சமைப்பவனைக் கடும் விலங்குகளால் கட்டிவிடக்கூடாது. பொதுவாக ஒரு எழுத்தாளன் எத்துறைக்குத் தன்னை அர்ப்பணிக்கிறான் என்பதைப் பார்க்க வேண்டும். அதில் அவன் சரியாக இருந்தால், மற்ற விஷயங்கள் சம்பந்தமாக நுணுக்கமாகச் சட்டதிட்டங்களை உண்டாக்குதல் அவன் கலைச் சுதந்திரத்தில் தலையிடுவதாகும்.

'சிந்தனையும் மின்னொளியும்' தொடக்கம் 'எதிர்காலச் சித்தன் பாட்டு 'வரை என் கருத்தோட்டம் ஒன்றாகவே இருந்திருக்கிறது. ஆனால் இடையிடையே ரோசாக்களையும் நான் நட்டதுண்டு. 'புரட்சிக் கீதம்' பாடாத வேளையில் 'காதல் கீதம்' பாடியதுமுண்டு. வெறும் சுவரங்களை இசைத்ததுமுண்டு. என்றாலும் என் பொதுவான இலட்சியம் ஒன்று. என் எழுத்துக்கள் மக்களை உயர்த்த வேண்டும். அவர்களின் போராட்டங்களில் எந்த அம்சத்தோடாவது அவை சம்பந்தப்பட்டிருக்க வேண்டும். இந்த இலட்சியத்துக்காகவே நான் எழுத ஆசைப் படுகிறேன்.

ஆனால் போர்க்களத்தில்கூட பூக்கள் பூப்பதுண்டு. இதை நாம் மறக்கக்கூடாது. வாளேந்திப் போர்க்களம் புகும் வீரன் கூட தும்பை மாலையை கழுத்திலணிந்து செல்வது பண்டைத் தமிழ் நாட்டு வழக்கமாகும். இந்த விவகாரம் இக்கட்டுரைக்குப் புறப்பிரச்சினையானாலும் முற்போக்கு இலக்கியத்தோடு சம்பந்தப்பட்ட பிரச்சினையென்பதால் சில வார்த்தைகள் கூறும்படி நேரிட்டது. முடிவாக "எதற்காக எழுதுகிறேன்?" என்பதற்கு நான் இரத்தினச்சுருக்கமாகச் சில காரணங்களைக் கூறி இக்கட்டுரையை முடிக்க விரும்புகிறேன்.

முதலாவதாக என் வாழ்வு சமுதாயத்துக்குப் பயனுள்ளதாக வேண்டும் என்ற காரணம். சுரண்டலும் அநீதியும் நிறைந்த சமுதாயத்தை ஒழிக்கவும் புதிய ஒளிமிக்க சமுதாயத்தை தோற்றுவிக்கவும் என்னாலான பணியை எழுத்து மூலம் செய்ய வேண்டுமென்ற காரணம். இதனை நான் முன்னரே விரித்துக் கூறிவிட்டேன்.

இரண்டாவதாக எழுதும் கலை, பாடும் கலையைப் போல் எழுதுபவனுக்கு இன்பமூட்டும் கலை. எந்தவிதமான சிருஷ்டி வேலையிலுமே இயற்கை இன்பத்தைப் பொதித்து வைத்திருக்கிறது. அழகிய பதுமையைச் சிருஷ்டிப்பது தொடக்கம், தாயின் கருவில் ஒரு குழந்தையைச் சிருஷ்டிப்பது வரை எந்த சிருஷ்டி வேலையிலும் இன்பம் கிடைக்க வேண்டுமென்பது இயற்கையின் நியதிபோலும். எழுத்திலே உலகை மறக்கலாம். உள்ளக் கவலைகளை மறக்கலாம். அதனால்தான் உலகில் கவலைகளுக்கும், துன்பத்துக்கும் பெரிதும் ஆளாகிய எழுத்தாளர் பலர் புகழ்வாய்ந்த எழுத்தாளர்களாகி விடுகின்றனர்.

மூன்றாவதாக மனிதனுக்கு எதையாவது சாதிக்க வேண்டும். அதன் மூலம் மற்றவர்களின் மதிப்பையும் அன்பையும் பெறவேண்டும். தான் ஒருவன் உலகில் இருப்பது சுற்றியுள்ள மற்றவர்களுக்குத் தெரிய வேண்டும் என்ற ஆசை நனவிலி மனதில் என்றும் இருந்து கொண்டிருக்கும் ஒன்றாகும். குழந்தை கூட தன்னை மற்றவர்கள் கவனிக்க வேண்டுமென்பதற்காகக் கையைத் தட்டுகிறது. ஆரவாரங்கள் செய்கிறது. இந்த ஆசையை நாம் வெளியரங்கமாகப் புரிந்து கொள்ள முடியாதிருக்கலாம். ஆனால் இவ்வித உள்மன ஊக்கங்களில் இருந்து நமக்கு விடுதலையில்லை. ஏனென்றால் நாம் மனிதர்கள். மனித மனத்தின் இயல்பு அப்படி.

நன்றி: தேசாபிமானி, நுட்பம், பதிவுகள்


2.   கவிதை;  எதிர்காலச் சித்தன் பாடல்!

- தேன்மொழி கவிதை இதழ் (!955) -

எதிர்காலச் சித்தன் பாடல்!
எதிர்காலத் திரைநீக்கி அதற்கப் பால்யான்
ஏகிட்டேன் ஏகிட்ட போதில் என்முன்
கதிர்போலும் ஒளிமுகத்தான் கருணையூறும்
கமலம்போற் கண்ணினையான் ஒருவன் வந்தான்
"எதிர்கால உலகமிஃது மனிதா நீயிங்
கேன்வந்தாய் இவண்காணும் பலவுமுன்னை
அதிர்வெடி போல் அலைக்கழிக்கும் ஆதலாலே
அப்பனே நிகழ்காலம் செல்க" என்றான்.

அறிவினிலே அடங்காத தாகம் கொண்டேன்
அவ்வுரையால் அடங்கவில்லை அவனை நோக்கிச்
'செறிவுற்ற பேரறிவின் சேர்க்கை வேண்டும்
செந்தமிழன் யானொருவன் ஆதலாலே
மறுவற்ற பேராண்மைக்கோட்டை என்னை
மலைவுறுத்தா தெதிர்காலம்" என்று கூறிக்
குறுகுறுத்த விழியுடையான் குழுத வியான்
குணமென்ன பெயரென்ன என்று கேட்டேன்.

"எனக்குமுன்னே சித்தர்பலர் ­ருந்தா ரப்பா
எதிர்காலச் சித்தன்யான் நிகழ்காலத்தர்
உனக்குமுன்னர் வாழ்ந்திட்ட சித்த ரல்லால்
உன்காலச் சித்தரையும் ஏற்கா ரப்பா
மனக்குறைவால் கூறவில்லை மகிதலத்தில்
மடமையொரு மயக்கத்தின் ஆட்சி என்றும்
கனத்துளதிங் கென்பதையே கருதிச் சொன்னேன்
காசினியின் பண்பிதனைக் காணப்பா நீ.

வருங்காலச் சித்தனுரை செய்த வார்த்தை
வையகத்தார் அறிதற்காய் இங்கு சொல்வேன்
"பெரும்போர்கள் விளைகின்ற நிகழ்காலத்தில்
பிளவுறுத்தும் பலவகையாம் பேதமுண்டு
ஒருமைபெறும் மனிதர்களை ஒன்றா வண்ணம்
ஊடமைத்த சுவரனைய பேதம் யாவும்
நொருங்கிவிழும் உலகெல்லாம் ஒன்றேயாகும்
நோக்கிடுவாய் தூரஎதிர் காலமீதே"

அண்டுபவர் அண்டாது செய்வதேது
அநியாய பேதங்கள் பெயரைச் சொல்வேன்
துண்டுபட்டுத் தேசங்கள் என்றிருத்தல்
தூய்மையாம் இனம்மொழிகள் மதங்க ளென்று
அன்றுதொட்டிங் கின்றுவரை இருக்குமந்த
அர்த்தமிலாப் பிரிவினைகள் எல்லாம் சாகும்.
ஒன்றுபட்டிவ் வுலகெல்லாம் ஒற்றையாகும்
ஒருமொழியில் ஓரரசு பிறக்குமப்பா.

அரசெல்லாம் ஒழிந்துலகில் ஓரரசே யுண்டாம்
அறங்கூறும் ஒருமதமே உலகெல்லாம் ஆகும்
விரசமொடு விகற்பங்கள் வளர்க்குமொழி எல்லாம்
வீழ்ந்துவிடும் ஒருமொழியே இவ்வுலகில் உண்டாம்
சரசமொடு உலகத்து மககளெல்லாம் தம்மைச்
சமானர்கள் மனித்குலம் என்ற இன மென்பார்
அரசர்கள் ஏழைபணக்காரனென்ற பேதம்
அத்தனையும் ஒழிந்து  விடும் எதிர்கால உலகில்.

செந்தமிழும் சாமீழச் சிங்களமும் சாகும்
செகமெல்லாம் ஒருமொழியே தலை  தூக்கி நிற்கும்.
நந்தமிழர் இனஞ்சாகும் பிற இனமும் சாகும்
நாடெல்லாம் மனித இனம் ஒன்றுதலை தூக்கும்.
எந்தமொழி இவ்வுலகில் நிலவுமெனக் கேட்பில்
எண்ணிக்கை கொண்டமொழி எம்மொழியோ இங்கு
அந்த மொழி தானப்பா அரசாளும் உண்மை
அதுநன்று தானப்பா பிரிவினைகள் ஒழிதல்.

நிகழ்காலச் செந்தமிழர் இது கேட்டுச்  சீறி
நீசனுரை நிகழ்த்தாதே செந்தமிழே உலகின்
புகழ்மொழியாய் உலகத்தின் பொது மொழியும் ஆகும்
புதுமைதனை காண்பீர்கள் என்றுபுகன் றிடுவார்.
இகழ்ந்திடுவார் எதிர்காலச் சித்தனுரை தன்னை
இம்மியள வேணும்  மானமில்லா மூர்க்கன்
நிகழ்காலத் திருந்திருந்தால் செய்வதறிந்திடுவோம்.
நெஞ்சுபிளந் தெறிந்திருப்போம் என்றிகழ்த்திடுவார்.
 
பிறப்பாலே யானுயர்வு தாழ்வுரைக்க மாட்டேன்
பிறப்பாலே என்மொழியே சிறந்ததெனச் சொல்லேன்.
பிறப்பென்றன் வசமாமோ? பிரமத்தின் வசமாம்.
பீருவில் பிறந்திருந்தால் பீருமொழி பீடே
வெறிமிகுந்த நிகழ்காலத்   தீதுணரமாட்டார்
விழழுக்கே பெருங்கலகம் விளக்கின்றார் அன்னார்
அறிவற்றே துன்பங்கள் அனவர்க்கும்  விளைப்பவர்
ஐய்யய்யோ இவர்மடமை என்னென்று சொல்வேன்.

புதுயுகத்தின் குரல்போல் எதிர்காலச் சித்தன்
புகன்றமொழி கேட்டபின்னர் யானவனைப் பார்த்து
"எதிர்காலச் சித்தா உன் இனியமொழி கேட்டேன்.
எண்ணங்கள் விரிவடையும் என்னுடன் நீவந்து
மதி கெட்டார் வாழ்கின்ற வையகத்தில் புதிய
வாழ்வேற்றிச்செல்வாயோ என்றிறைஞ்சி நிற்க
மெதுவாகச் செவ்விதழ்கள் திறந்ததையுமங்கே
மென்னிலவுக் குஞ்சிரிப்புப் பிறந்ததையும் கண்டேன்.

காலத்தின் கடல் தாவி நீ­யிங்கு வந்த
காரணத்தால் ஏதறிவு என்பதை நீ கண்டாய்
ஞாலத்தில் நிகழ்கால மயக்கத்தி லுள்ளோர்.
ஞானத்தைக் காண்பாரோ? காணார்களப்பா
காலத்தை யான்தாண்டிக் காசினிக்கு வந்தால்
கட்டாயம் எனையவர்கள் ஏற்றிமிதித்திடுவார்
ஆலத்தைத் தந்தன்று சோக்கிரதரைக்  கொன்ற
அன்பர்களுன் மனிதச் சோதரர்களன்றோ?

ஆதலினால் நிகழ்கால மனிதா அங்கு
யான்வரேன் நீபோவாய் என்றான் ஐயன்
காதலினால் கால்களென்னும் கமலம் தொட்டுக்
கண்ணொற்றி விடைபெற்றேன் திரை நீங்கிற்று.
பாதகர்கள் முழுமடைமைப் போர்கள் சூழும்
பாருக்கு நிகழ்காலம் வந்தேன் எங்கும்
தீதுகளே நடம்புரியும் நிலைமை கண்டு
திடுக்கிட்டேன் என்றிவர்கள் உண்மைகாண்டல்?


3. எமிலி ஸோலா: வழுக்கி விழுந்த வடிவழகி 'நானா' மூலம் வையத்தைக் கலக்கிய நாவலாசிரியர்! பிரெஞ்சுப் பேனா மன்னர்களின் ஒப்பற்ற ஜோதி எமிலி ஸோலா!

14.10.1951  சுதந்திரன் வாரப்பதிப்பில் வெளியான அறிஞர் அ.ந.கந்தசாமியின் எமிலி ஸோலா பற்றிய கட்டுரையிது. சுதந்திரனில் ஸோலாவின் நாவலான 'நானா'வை மொழிபெயர்த்து வெளியிடுவதற்கு முதல்வாரம் 'நானா'வின் ஆசிரியரான எமிலி ஸோலாவைப் பற்றி அ.ந.க எழுதிய அறிமுகக் கட்டுரையாக இதனைக் கருதலாம் - பதிவுகள்].   உலக எழுத்தாளர் வரிசையிலே முதலிடம் பெற்றவர்களில் ஒருவர் எமிலி ஸோலா. ஸோலாவின் வாழ்க்கை துன்பமும், துயரமும் நிறைந்தது. வாழ்க்கைப் பாதையிலே சென்று கொண்டிருக்கும்போது சற்றும் எதிர்பாராதவிதமாக இருளில் மறைந்திருந்து கள்வர்கள் தாக்குவதுண்டல்லவா? உலகத்திலுள்ள மாந்தரிலெ அனேகருக்கு ஏற்படும் துன்பங்கள் இந்த ரகத்தைச் சேர்ந்தவைதான். ஆனால் ஸோலாவோ துன்பத்தை எதிர்கொண்டழைத்த வினோதப் பிரகிருதி. 'பாதையிலே கள்வன் இருப்பான்; அதுவும் கத்தியும், ஈட்டியும், துப்பாக்கியும் தாங்கிக் காத்திருப்பான். நானோ நிராயுதபாணியாக உள்ளத்தின் துணிவொன்றே கவசமாக, சத்தியத்தின் கேடயமே காவலாகச் செல்கிறேன். கள்வன் ஆயுதபாணியாகக் காத்திருப்பது மட்டுமல்ல, என்னைத் தாக்குவதும் நிச்சயம். இருந்துமென்ன? துன்பம் நிறைந்த அந்தப் பாதையிலே செல்ல வேண்டியது உண்மை அறிந்த எனது பொறுப்பு. உலகினரென்னைப் பார்த்து எள்ளி நகையாடுவர். கருங்கற்பாறையில் கவிஞன் தன் தலையை மோதினால் கவிஞனுக்காபத்தா கல்லுக்காபத்தா? என்று பேசுவர். இருந்துமென்ன? வானந்தூளாகினாலும், மண் கம்பமெய்தினாலும், என் மண்டை சுக்குநூறாகினாலும் இந்தப் பாதையால்தான் சென்று தீருவேன். ஒரு உத்தம கொள்கைக்காக என்னையே நான் பணையம் வைக்கிறேன்!' என்ற ஒரே மனப்பான்மையோடு துன்பத்தை வரவேற்கச் சென்ற தியாக புருஷர் ஸோலா.

 ஆம், ஸோலா எவனோ ஒருவன் காட்டிய வழியில் சென்று துன்பத்தின் கையில் மாட்டிக்கொண்ட ஏமாளிப் பேர்வழியல்ல. தெரிந்தே துயரத்தை வரித்தவர். இது நம்மைக் கொல்லும் நாகபாம்பென்று தெரிந்துகொண்டே நல்ல பாம்பின் நஞ்சுப் பைக்கு அருகாக தமது கைகளைக் கொண்டுபோய் வைத்தவர் அவர்.

கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்றுகையில் எங்கோ பார்த்த குறி எவனோ ஒரு அப்பாவியைத் தாக்கி விடுகிறது. அவ்விதம் அகஸ்மாத்தாக ஏறப்டும் மரணத்தையோ , காயத்தையோ வைத்துக்கொண்டு தியாகி, தீரர் என்று வர்ணிப்பது இந்த விளம்பர யுகத்தின் வியாதி. ஸோலா அந்த ரீதியில் தியாகியாகவும், தீரராகவும் மாறியவரல்ல. நெருப்புச் சுடும் என்பது தெரிந்து கொண்டே அக்கினிப்
பிரவேசம் செய்யத் துணிவு கொண்ட உண்மையான வீரர் அவர்; சுருங்கக் கூறின் குழந்தைபோலத் தெரியாத்தனமாக விளக்கின் சுடரோடு விளையாடி விபத்துக்காளாகும் மட்டி 'வீரர்' பட்டியலில் அவரைச் சேர்த்து விட முடியாது.

எமிலி ஸோலாவின் முழுப் பெயர் எமிலி எட்வார்ட் சார்ள்ஸ் அண்டோயின் ஸோலா என்பதாகும். 1840-ம் ஆண்டு ஒரு இத்தாலியருக்கு மகனாகப் பிறந்த அவர் பிரெஞ்சு இலக்கியத்தின் சிரோரத்தினமாகப் பின்னால் மலர்ந்தவர். இன்று உலக மேதைகளில் தலை சிறந்த ஒருவராகவும் கணிக்கப்பெறுகிறார். ஆம் ஸோலாவின் மேன்மை அவர் எழுத்திலே இமயம்போல் நிமிர்ந்து நிற்கிறது. ஆயினும் அவரது மேன்மை அவரது தியாக வாழ்விலே தான் சூரிய கோளம்போல் சுடர்விட்டு நிற்கிறது என்று கூறலாம்.

1803 ம் ஆண்டு.

ஸோலா அப்போது பிரபலமான எழுத்தாளராகி விட்டார். அவரது நூல்களை பிரெஞ்சு மக்கள் எதிர்பார்த்து வாசிக்கும் காலம். இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில்தான் அவரது உத்தம வாழ்க்கையின் உச்சமான அச்சம்பவம் நடைபெற்றது.

கப்டின் டிரைபஸ் என்பவன் பிரெஞ்சுப் பட்டாளத்தில் ஒரு அதிகாரி. தாய் நாட்டிலே தளராத அன்புகொண்ட தேச பக்தன்.

அவன்மீது பொய்யும் புனைசுருட்டுமான வழக்கொன்றை பிரெஞ்சு அரசாங்கத்தின் பெரிய அதிகாரிகள் ஜோடித்து விட்டார்கள். ஜீவாதாரமான ராணுவ ரகசியங்களை நாட்டின் எதிரிகளுக்கு விலைபேசி விறக முன்வந்த கொலைபாதகம் புரிந்தான் என்பதே குற்றச்சாட்டு.

தேசத்துரோகி என்று விசாரணைக் கூண்டிலேறி, சிறைக்கூண்டிலும் தள்ளப்பட்டுப் பின்னர் தீவாந்தர சிட்சையும் விதிக்கப்பட்டது.

முழு உலகமும் அவனைக் குற்றவாளி என்று நம்பியது. 'துரோகி உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்தவன், நாட்டைக் காட்டிக் கொடுத்த நாசகாலன்' என்று பொது மக்கள் அவனை ஏசினர்.

ஆனால் 'தான் குற்றமற்றவன், நிரபராதி!' என்று அபலை டிரைபஸ் ஓலமிட்டான்.

இந்த ஓலம் எமிலி ஸோலாவின் காதில் வீழ்ந்தது. டிரைபஸ்ஸின் வாழ்க்கையை ஆராய்ந்தார். நடந்த சம்பவங்களின் உணமை விபரங்கள் யாவை என்று துருவிப் பார்த்தார். கடைசியில் அவர் ஒரு முடிவு கண்டார். டிரைபஸ் நிரபராதி! இதனை உலகறிய முழங்க
வேண்டுமென்று விரும்பினார் அவர்.

ஆனால் நீதிமன்றமே தீர்ப்பளித்துவிட்டபின் இதைபற்றி யாருமே பேசிவிட முடியாது. கோர்ட்டை அவமதித்ததற்குக் கொடுஞ்சிறையில் துஞ்சவேண்டிவரும்.

மெளனமாய் இருக்க வேண்டியதுதான். மனதோடு புதைந்த மர்மமாக டிரைபஸ் நிரபராதி என்ற செய்தியை மறைத்துவிட  வேண்டியதுதான். ஆனால் ஸோலா அவ்விதம் சத்தியத்திற்குச் சமாதிகட்டிவிட்டு வாழ்ந்திருக்கச் சம்மதிக்கவில்லை.

சாகாத சத்தியத்துக்கு பிரெஞ்சு நீதிமன்றம் சமாதி கட்டிவிட்டது. அந்தச் சமாதியைப் பொடியாக்கி சத்தியத்தை புதை குழியிலிருந்து மீட்கவேண்டும். இது ஸோலாவின் உள்ளத்தின் உயிரின் வெறித் தாகமாக ஓங்க ஆரம்பித்தது.

நீதிமன்றத்துக்கு மட்டுமல்ல அஞ்ச வேண்டியிருந்தது. பிரெஞ்சுப் பொதுமக்களைப் பார்த்தும் நடுங்க வேண்டிய நிலைமையே ஸோலாவின் நிலைமை. துரோகிக்குப் பரிந்து பேசுகிறான் என்று மக்கள் தூற்றுவர். கொபாவேசம் கொள்வர். இன்னும் என்னென்ன செய்வர் என்று கூறிவிட முடியாது.

ஸோலா இந்தப் பயங்கரப் பாதையில் வெஞ்சிறையும் மக்கள் வெஞ்சினமுமே எதிர்கொள்ளும் ஒற்றையடிப் பாதையில் கால் வைத்தார். துணிந்து நடந்தார்.

'நான் குற்றஞ் சாட்டுகிறேன்' - என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரையில் சட்டத்துக்கும் சர்க்காருக்கும் சவால் விடுத்தார். நீதிமன்றத்தை ஏளனம் செய்தார். வருவது வரட்டும் என்று துணிந்து நின்றார். வழக்கை உருவாக்கியவர்கள்மீதும் கூடக் குற்றஞ்சாட்டினார் அவர்.

துரோகிக்குப் பரிந்து பேசும் துரோகி என மக்கள் ஸோலாவைத் தூஷித்தனர். சத்தியத்தை நிலைநாட்டிப் புகழைடைய எண்ணும் மனிதர்கள் உலகில் ஆயிரக்கணக்கில் தோன்றாவிட்டாலும் ஓரிருவராவது அவ்வப்போது தோன்றக் கூடும். கீர்த்தியின் கவர்ச்சியின் முன்னால் கஷ்ட்டங்களைச் சகித்துக் கொள்ளும் துணிவும் தைரியமும் அவர்கள் உள்ளத்திலே தோன்றி ,மலர்வதும் சாதாரணம். ஆனால் சத்தியத்தை நிலைநாட்ட முன்வந்தால் நாட்டின் இகழ்ச்சியையே அடைய நேரிடும் என்று தெரிந்தும் அந்தப் பாதையிலே செல்ல முன்வந்தவர் ஸோலா!

ஸோலாவின் வாதம் மக்களிடையே செல்லுபடியாகவில்லை. அவர்கள் டிரைபஸ் ஸோலா உருவங்களைப் போல் வைக்கல் உருவம் சமைத்துத் தீயிலிட்டுக் கொளுத்தினர். ஸோலா மீது கல்லாலெறிந்தார்கள்.

அறிஞரின் இரத்தம் வீதியில் சிந்தியது. ' அவர் என்றும் எதிர்த்துவந்த கோடீஸ்வரக் கும்ப'லும் சதித்திட்டம் தீட்டி அவர்மீது வஞ்சம் தீர்க்க முன்வந்தது. போதாதற்குப் போலிசார் அவர்மீது வழக்குத் தொடர்ந்தார்கள். நீதிமன்றத்திலே' டிரைபஸ் குற்றமற்றவன. என் சிதையிலே நீதி சிறக்குமானால் போதும்! எனக்குத் திருப்தி' என்று முழங்கினார் மகாத்மா ஸோலா.

அவர் சிதைவுண்டார். எனினும் நீதி சிறந்து விடவில்லை. அவர் விடுத்த சவாலை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் அவருக்குச் சிறைத்தண்டனை விதித்தது. இதனால் புரட்சிக்காரர் பலரும் செய்த வேலையையே அவரும் மேற்கொள்ளும்படி ஏற்பட்டது. பிரான்ஸை விட்டு இங்கிலாந்துக்கு கம்பி நீட்டினார் பெரியார்.

ஆனால் காலம் செல்ல நிலைமை மாறியது. பிரான்சிய அரசியலிலே மாற்றம். புதிய மந்திரி சபை ஒன்றும் உருவாகியது. உண்மையான தேசத்துரோகி எஸ்டர் ஹேஸி என்பவன் கோர்ட்டில் நிறுத்தப்பட்டான். அப்போது வெளிவந்த தகவல் மீண்டும் டிரைபஸ் பிரச்சினையை நாட்டிலே கிளப்பிவிட்டது. புனர் விசாரணை ஆரம்பித்தது.

ஸோலாவுக்கு வெற்றி! 1899ம் ஆண்டு ஸோலா உற்சாகம் நிறைந்த மனதோடு திரும்பினார். டிரைபஸ் விசாரணை நீண்டு கொண்டே போயிற்று. ஆனால் அதற்கிடையில் 1902ம் ஆண்டு ஸோலா ஒரு அடுப்பினால் ஏற்பட்ட விபத்திலே சிக்கி காலமாகி விட்டார். எனினும் அந்த மகானின் முயற்சி வீண் போகவில்லை. 1906ம் ஆண்டு டிரைபஸ் வழக்கிலே முடிவான் தீர்ப்பு வெளியிடப்பட்டது.

ஆம்! டிரைபஸ் நிரபராதி. ஸோலா பாவிக்குப் பரிந்து பேசியவரல்ல! நீதிக்குப் பரிந்து பேசியவர்! - என்று உலகம் அறிந்து கொண்டது.

அவரது கல்லறையிலே பிரபல பிரெஞ்சுக் கதாசிரியர் அண்டோஸ் பிரான்ஸ் உருக்கமான பிரசங்கம் செய்தார். ஸோலாவின் வாழ்க்கையின் பெருமையை நாடறியப் பேசினார் அவர்.

ஸோலாவின் துயர்ச் சரிதை இது. கண்ணிராலும், வீரத்தாலும், தியாகத்தாலும், அன்பாலும், நெஞ்சுரத்தாலும் சமைக்கப்பட்ட அற்புதமான சரிதம். இந்தச் சரிதத்தை உலகமறியச் செய்த எப்ருமை அமெரிக்க சினிமாத் தயாரிப்பாளர் டாரிஸ் ஸெனக்குக்கு உரியதாகும். இதுவரை வெளிவந்த வாழ்க்கைச் சரிதச் சினிமாப் படங்களிலே ஒப்பற்ற சித்திரம் என அகிலம் கொண்டாடுவது 'எமிலி ஸோலா வாழ்க்கையே'யாகும்.

எமிலி ஸோலா: ஸோலாவின் இலக்கிய வாழ்விலே இனிப் புகுவோம்.

ஸோலா இலக்கியத்திலே மோகனமான கனவுகளைத் தோற்றுவிக்கும் போக்கில் நம்பிக்கை கொண்டவரல்ல. சாக்கடை உலகைச் சாக்கடை நாற்றத்தை நாம் உணரத்தக்கவகையில் இயற்கைத்தன்மையுடனே சமைப்பதில்தான் அவரது சிறந்த கலை வெற்றி பெறுகிறதென்று கூறலாம். 'இயற்கை வாதம்' (Naturalism) என்று அவரும் அவரது கோஷ்ட்டியினரும் தமது இலக்கியப் பாணிக்கு நாமகரணம் செய்து கொண்டனர்.

ஸோலாவின் வாழ்க்கை பாரிஸ் குமாஸ்தாவாக ஆரம்பித்தது. சமூகத்தைத் திடுக்கிட வைத்து எழுதுவதில் அவர் சமர்த்தர். 1877ல் அவர் வெளியிட்ட 'லா அசமோயர்' நாவல் குடிகார வாழ்க்கையைச் சித்திரிப்பது. இதுவே அவரது புகழ் என்னும் கோட்டையின் கோபுரவாசலாக அமைந்தது எனக்குறிப்பிடலாம்.

சமுதாயம் அவர் பச்சை பச்சையாக எழுதிய விஷயங்களைக் கண்டு கொதிப்படைந்தது. சீறி உறுமியது. அவர் 'லா அசமோயர்' ஆவலை 'லா போய்ன் பப்ளிக்' என்னும் பத்திரிகையில் தொடர்கதையாக வெளியிட ஆரம்பித்தவுடனே நாடெல்லாம் அதிர்ச்சி. பத்திரிகையின் சந்தாதார்கள் சந்தாக்களை வாபஸ் பெற ஆரம்பித்து விட்டனர். 'பெரிய புள்ளிகள் கண்டனக் கடிதம் எழுதினார்கள். முடிவில் கதையை வெளியிட முடியாது எனப் பத்திரிகாசிரியர்கள் ஸோலாவுக்குத் தெரிவித்து விட்டனர்.

ஆனால் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது ஸோலாவினதிர்ஷ்டம் என்றுதான் கூற வேண்டும். ஏனெனில் இன்னொரு சஞ்சிகை 'இதோ நான்பிரசுரிக்கிறேன்' என்று முன்வந்தது. அந்தப் பத்திரிகையின் பெயர் 'லா ரிப்பப்ளிக் டி லெட்டர்ஸ்' என்பதாகும். இதில் கதையின் பிற்பகுதி வெளியாயிற்று.

இந்த எதிர்பாராத விளம்பரத்தால் முடிவில் புஸ்தக ரூபத்தில் இந்நாவல் வெளியானபோது வெகுவிரைவாகவே ஒரு லட்சம் பிரதிகள் விற்றுப் போய்விட்டதாம்.

ஸோலா விமர்சகர்களின் எதிர்ப்பைக் கண்டு அஞ்சி விடவில்லை. துணிவே உருவான அவர் என்ன கூறினார் தெரியுமா?

'முதலில் அவர்கள் எங்களைப் பார்த்து நகைப்பதில் ஆரம்பிப்பார்கள். ஆனால் பின்னர் எங்களைப் பார்த்து 'காப்பி' அடிப்பதில்தான் அவர்கள் முடிவடைவார்கள். ஆம். இலக்கியத்திலே ஒரு புது நூற்றாண்டை நாம் சமைக்கத் தொடங்கி விட்டோம்'.

'நானா' வெளியாயிற்று!

'நானா' தான் ஸோலா வாழ்வின் பெருவெற்றி. டிரைபஸ் சம்பந்தமாக அவர் அடைந்த வெற்றியோடு சமதையாக இந்த அபூர்வமான நூலைக் குறிப்பிடலாம். நாடக் அரங்கில் நட்சத்திரமாய் ஒளிவீசிய 'நானா' விபச்சாரத்தைத் தொழிலாய் நடத்திய ஒரு வேசி. அவளது வாழ்க்கையின் தோற்றம், மலர்ச்சி, சீரழிவு என்பனதாம் கதையின் பொருட்கள். நானா பாத்திரம் இலக்கிய உலகில் தனியிடம் தேடிக் கொண்டது.

இப்புஸ்தகம் வெளிவந்ததும் முழுப் பாரிஸ் நகரமும் புஸ்தகக் கடைகளுக்கருகே குழுமியது. முதற்பதிப்பான மொத்தம் 50,000 பிரதிகளும் வெளியான முதலாவது தினமே விற்றுத் தீர்ந்துவிட இரண்டாம் பதிப்பு 10,000 பிரதிகளை அடுத்த நாளே வெளியிடும் நிர்ப்பந்தம் பிரசுரகர்த்தாக்களுக்கு ஏற்பட்டது.

இன்று 'நானா' மொழிபெயர்க்கப்படாத வளம் பெற்ற பாஷை கிடையாது. ஆங்கிலத்தில் மட்டும் 15 லட்சம் கையடக்கப் பிரதிகள் இதுவரை விற்பனையாகியுள்ளன.

'நானா' புஸ்தகம் வேசியின் கதை அல்லவா? இது ஆசிரியரின் சொந்த அனுபவம் என்ற கயிறு திரிப்புகள் பலவும் வெளியாகின. 'நானா' என்ற வேசியோடு அவருக்கு நேரில் அறிமுகம் என்றும் அவளையே கதாநாயகி ஆக்கிவிட்டாரென்றும் வசைமாரி பொழிந்தனர்.

ஸோலாவும் 'மாடம் பவாரி' எழுதிய குஸ்தாவ் பிளாபரியும் நண்பர்கள். சிறுகதை மன்னர் மாப்பசான் ஸோலாவின் அந்தரங்க சிஷ்யர். எப்பொழுதும் ஸோலாவின் முன்னும் பின்னும் திரிவார் அவர். ரஷ்ய எழுத்தாளர் ரீடர்கினீவும் அவரை நேரிலும் வந்து தரிசித்தார்.

பிளாபரியின் இலக்கியப் போக்குக்கும் ஸோலாவின் இலக்கியப் போக்குக்கும் வித்தியாசம். இருந்தபோதிலும் பிளாபரி பிளாபரி ஸோலாவின் அகண்டாகாரமான இலக்கிய வளத்துக்கு அஞ்சலி செலுத்தினார். அவருக்குப் பிடிக்காத அம்சம் ஸோலாவின் எல்லை மீறிய - சில சமயங்களில் அருவருப்பூட்டும் யதார்த்தவாதமேயாகும். பிளாபரி ஸோலாவைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

'கலை உலகில் கால்கள் அழுக்கடைந்த விஸ்வரூபம் அவர். அதனால் என்ன? அவர் விஸ்வரூபம் படைத்தவர் என்பதை யார்தான் மறுத்துவிட முடியும்?'

ஸோலா சிறந்த ஆசிரியர். சிறந்த மனிதர். சிறந்த ஆசிரியனுக்கும் சிறந்த மனிதனுக்கும் உலகில் மதிப்பு நிலை பெற்றிருக்கும்வரை ஸோலாவின் புகழ் குன்றிலிட்ட தீபம் போல் அமர ஒளி வீசிக்கொண்டேயிருக்கும்.

மூலம்: - 14.10.1951ல் சுதந்திரன் வாரப்பதிப்பு
 பதிவுகள்  ஜூலை 2008 இதழ் 103


அ.ந.கந்தசாமியின் வெளிவந்த நூல்கள்

1. வெற்றியின் இரகசியங்கள் (உளவியல் கட்டுரைகள்)  - பாரி நிலையம் , தமிழ்நாடு, 1968
2. மதமாற்றம் (நாடகம்) - தேசிய கலை, இலக்கியப் பேரவை
    
பதிவுகள்.காம்  அமேசன் - கிண்டில் பதிப்புகளாக வெளியிட்ட  மின்னூல்கள்

1. மனக்கண் (நாவல்) - அமேசன் & கிண்டில் மின்னூல் பதிப்பு. பதிவுகள்.காம் வெளியீடு.
2. எதிர்காலச்சித்தன் பாடல் - அமேசன் & கிண்டில் மின்னூல் பதிப்பு. பதிவுகள்.காம் வெளியீடு.
3. நான் ஏன் எழுதுகிறேன்?:  அ.ந.கந்தசாமியின் கட்டுரைத் தொகுப்பு!  - - அமேசன் & கிண்டில் மின்னூல் பதிப்பு. பதிவுகள்.காம் வெளியீடு.

நூலுருப்பெறாத நாவல்கள்

1. மனக்கண் (தினகரனில் வெளிவந்த நாவல் - நூலாக இன்னும் வெளியாகவில்லை. ஆனால் மின்னூலாக வெளிவந்துள்ளது. பதிவுகள் இணைய இதழிலும் தொடராக மீள்பிரசுரமாகியுள்ளது.
2. நாநா (மொழிபெயர்ப்பு, பிரெஞ்சு எழுத்தாளரான எமிலி சோலாவின் புதினம், சுதந்திரனில் அக்டோபர் 21, 1951 முதல் ஆகத்து 28, 1952 வரையில் மொத்தம் 19 அத்தியாயங்கள் வெளிவந்துள்ளன).
3. சங்கீதப் பிசாசு (சிரித்திரனில் வெளிவந்த சிறுவர் தொடர் புதினம்). இதன் அத்தியாயங்கள் முழுமையாகக் கிடைக்கவில்லை.
4. களனி வெள்ளம் (நாவல் ) - மலையகத் தமிழரை மையமாகக் கொண்ட நாவல். இந்நாவலின் மூலப்பிரதியை எழுத்தாளர் செ.கணேசலிங்கன் வைத்திருந்தார். 83 ஜூலைக் கலவரத்தில் அதனை அவர் இழந்து விட்டது மிகப்பெரிய இழப்பு

* அ.ந.க.வின் புகைப்பட உதவி 'மல்லிகை' சஞ்சிகை.