வாலை ஆட்டிக் கொண்டே  
    என்னை ஏறெடுத்துப் பார்த்தது அந்தத் தெருநாய்  
    திரும்பவும் கண்ணை மூடுவது போல் படுத்துக்கொண்டது  
    மீண்டும் வேடிக்கையாக வீரியத்துடன் விழித்தது  
    பசிதான் காரணம் என்று நினைத்தேன்  
    மனிதர்களைப்போலவே  
    கொரோணாக் காலத்தின்  
    உணவுப் பிரச்சினை அதுக்கும்  
    முன்பெல்லாம்  
    மனிதர்களின் மிச்ச உணவாலேயே  
    பசியை போக்கிக் கொண்டதாம்  
    மனிதனால் கைவிடப்பட்ட  
    அவமானப்பட்ட  
    வேதனைப்பட்ட குரலாக   
    அன்றும் இன்றும் அந்தத் தெருநாய்  

    மனிதனை வழிநடத்துவது பசிதானே!  
    எல்லாவற்றிகும் உணவுப் பசி  
    காற்றைச் மட்டும் சுவாசித்து வாழ முடியுமா?  
    பசியை வெல்ல முடியாமல்  
    மனித போராட்டமே வேட்டையில் ஆரம்பித்தது  
    உனக்கும் தெரியும்தானே?  

    வளர்ப்பு நாய்கள் மிக மேலானது மனிதர்களைவிட  
    மனிதனை பேராபத்துக்களிலிருந்து காப்பாற்றியிருக்கிறது  
    நாயின் இறப்புக்காக கண்ணீர்விட்ட  
    படைப்பாளியை என் வீட்டில்; பார்த்திருக்கிறேன்  
  ‘டிக்மன்’ எங்கள் வளர்ப்பு நாய் நினைவில் இருக்கிறது  
    குண்டு குட்டிப் பெட்டைக்கு  
    விளையாட்டுத் தனத்தில்  
    அந்த ‘டிக்மன்’ இறந்தது ஏன்?  
    இன்றும் தெரியாது?  
    அந்த டிக்மனின்; அடக்கம்  
    கிணற்றடி தென்னைக் கடியில்  
    வெள்ளைச் சீலை விரித்து      
    வீட்டார் சூழ்ந்திருக்க  
    வேடிக்கையாகத் தெரிந்தது  
    மேகத் திரை வேதனையில்  
    விம்மலாகி முகமே மாறி  
    வீரிய மனிதனின் குரல் ஒலித்து  
    குமுழ்களும் வெடித்ததை  
    இன்றும் வியக்கிறேன்  
    நாயை நேசித்த  
    மேன்மையான மனிதன் அவன்  
    டிக்மன் மாதிரி அவனும் இன்றில்லை  
    தினமும் வலிக்கும் என்னுள் ஒரு சோகம்  

    கார்மேக வெளிச்சத்தில் ஒரு நாள்  
    ஹணி என்ற கறுப்பனும் பின்னர்  
    கண்காணிக்க வந்தான் எம்மை  
    தொன்மை நினைவுகளை அடுக்குவது போல்  
    ஊழையிடுவதும் அவன் பழக்கம்  
    மனதில் பேர்; அச்சம்  
    காட்டு விலங்கின் ஆதிக் குரலை  
    பெருங்குரலாக்கி மாற்றுவான்  
    பறிபோகப்போகும் வாழ்க்கைக்கு  
    உசாராகு என்பது போல்  
    நெருங்கடியை உணர்த்துவான்  
    வேதனைக் குரல்களை  
    துர்க் கனவுகளாக்குவான்  
    மனிதனையும்  
    ஆள்உயரக் கோழிபோல் மாற்றுவான்  

    என்ன ஆச்சரியம்!  
    பொட பொடத்து  
    சரித்திரமே சரிவதுபோல்  
    கண் முன்னே தீப்பிடித்தெரிந்தது  
    எங்கள் வசந்த மாளிகை!  
    அடக்கு முறையில்  
    கருத்துள்ள கடதாசிகளும்  
    எரிந்து கொண்டிருந்தது  
    சிந்தனையும் நெருப்பில் எரிவதுபோல்  
    அடையாளம் இழந்தபோதும்  
    அடுத்தவர் வீட்டுக்கும் போக  
    அனுமதித்தால் மட்டும்தானே  
    ஒவ்வொரு முகமும் தனியுலகம்  
    ஹணி மட்டும் கண்களை மாறிமாறிப் பார்த்தான்  
    கால்களை நக்கிப் புரண்டான்   
    ஈனக்குரலாகி காலைத் தழுவினான்  
    உயிர் மட்டும் இருந்ததால்  
    புரண்டு எழுவாய் என்றான்;  
    மனித குலத்தின் மகத்தான கண்டுபிடிப்பு  
    மௌனத் துணையாகி  
    கேட்க முடியாத ஆழமாகி  
    எழுத்து ஒரு குரலாகி மீ;ண்டும் ஆரம்பித்தன  
    ஹணியின் குமுறலும் வாழ்க்கையைப் புரட்டியது  
    ஹணிதான் எமக்கு ஆறுதலாய் ஆரவாரித்தான்  
    அன்பு செய்தான்  
    அன்பை வெளிப்படுத்தினான்  
    நாங்களோ பனி நாடுகளுக்கு பறந்து வந்;தோம்  
    நினைவில் மட்டும்தான் கனக்குது - எங்கள்  
    ஹணி; எங்கோ நானறியேன்?  

    பனியில் வண்டியை ஓட்டுகிறது அந்த நாய்  
    பின்னால் இருந்து வேடிக்கை பார்க்குது சில நாய்  
    என்ன துணிச்சல்?  
    கொஞ்சம் கொஞ்சமாக தன்னை மாற்றி  
    முன்னேறிவிட்டது  
    வண்டியை ஓட்டும் தலைமை!  
    மோதலும் மாற்றமும் வளைந்த சூழலில்  
    வழிகாட்டிய மனவலிமை!  
    சராசரியாக இருப்பதில் என்ன இருக்கு?  
    சாகச வாழ்க்கையைத் தன்னைத் தேர்ந்து  
    பற்றிப்பிடித்தது!  
    கெட்ட பழக்கங்கங்களை  
    உதறி எழுந்து இப்போ  
    ஒநாய் கூட்டத்தையும் சேர்த்து அடக்குது  
    புதிதாக வரும் பிரச்சனையை!  
    நான் போராடி வெல்வேன் என்றது  
    கானகக்; குரலாகியும் உறுதியாயும் ஒலித்தது!  
    பனிக்குள் எங்கே படுப்பாய் என்றேன்?  
    மனதில் வலிமை இருப்பதால்  
    பனியால் வீடு; அமைப்பேன் என்றது  
    பனிக்கு மெல்ல பழக்கப்படுத்தி  
    அதற்குள் இதமாக தூங்கச் சென்றது  
    கண்ணைக் குவிக்கின்ற நாய்க்கோ  
    காதல் சுகம் பெருக்கெடுக்க  
    காதல் கடிதம் எழுதத் தொடங்கியது  

    என்ன உனக்கு இப்போ காதலா?     
    கிறிஸ்த்தலும் பிராங்கிளினும்  
    என் முன்னைய காதலிகள் தாம்  
    அதன் பின்னர் 'ரு கெத'ராக  
    ஹெலனோடும் லென்சியோடும்  
    இருந்தேன் தான்... என்றது  

    தர்மத்தின் குறியீடு நீ  
    ஞானம் உடைய அடையாளமும் நீ என்றேன்!  

    எனக்கு இப்போ உன்னைப் பிடித்திருக்கு  
    என்றது அந்த நாய்  
    நாணித் தலைகுனிந்து நான்  
    ஐயோ எனக்குத் திருமணமாகி விட்டதே!  
    ரண்டு மின்மினிப் பொடியன்கள்;; என்றேன்!  
    கண்விழித்தக்கொண்டேன்!  
    கனவு என்று புரிந்துகொண்டேன்!  
    கணவன் என்னை அணைத்துக்கொண்டான்!  

   இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.