இலங்கைத்  தமிழ் அரசியல் தலைவர்களில் முக்கியமான ஒருவரும், முன்னாள் அமைச்சரும், முன்னாள் மட்டக்களப்புப் பாராளுமன்ற உறுப்பினரும் , மட்டக்களப்பு மாநகரசபையின் முதலாவது நகர பிதாவும் , எழுத்தாளருமான திரு. செல்லையா இராசதுரை அவர்கள் தனது 98ஆவது வயதில் , தமிழகத்தில் மறைந்த செய்தியினை முகநூல் வாயிலாக அறிந்தேன். ஆழ்ந்த இரங்கல்.

தமிழரசுக் கட்சியின் சிறந்த பேச்சாளர்களில் ஒருவராக விளங்கியவர் இராசதுரை அவர்கள். அதன் காரணமாகவே சொல்லின் செல்வர் என்றும் அழைக்கப்பட்டவர். வசீகரம் மிக்க தோற்றமுள்ள அரசியற் தலைவர்களிலொருவர். இலங்கைத் தமிழரசுக்கட்சியின் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட கிழக்கு மாகாண தமிழ் அரசியற் தலைவர்களில் முக்கியமானவர். தமிழர் போராட்ட அரசியற் செயற்பாடுகளுக்காகச் சிறை சென்றவர். தந்தை செல்வாவுக்குப் பின்னர் இவருக்குத்தான் தலைமைப்பொறுப்பு கிடைத்திருக்க வேண்டும். ஆனால் கிடைக்கவில்லை. 

ஒருபோதுமே  பாராளுமன்றத் தேர்தலில் தோற்காத தமிழ் அரசியல்வாதி இவர். 1977 தேர்தலின் பின்னர் 1979இல் , தமிழரசுக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின்னர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் அரசுடன் இணைந்து இயங்கினார்.  1977 தேர்தலிலின்போது தமிழர் விடுதலைக்கூட்டணி சார்பில் மட்டக்களப்பு பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டார்.   அதே தொகுதியில் கவிஞர் காசி ஆனந்தனும் தமிழரசுக்கட்சி சார்பில் போட்டியிட வைக்கப்பட்டார். ஆனால் தேர்தலில் செ.இராசதுரை வெற்றிபெற , கவிஞர் காசி ஆனந்தன் தோல்வியைச் சந்தித்தார்.

எழுத்தாளர். சுதந்திரன்' பத்திரிகையின் ஆசிரியர்களிலொருவராகவும் இருந்துள்ளார்.  இவரது வெளிவந்த நூல்களாகப் பின்வருவனவற்றைப் பட்டியலிடுகின்றது விக்கிபீடியா:

1. ராசாத்தி – குறும் புதினம் - 1982
2. பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் - சொற்பொழிவுகளின் தொகுப்பு
3. அன்பும் அகிம்சையும் - தேசிய ஒற்றுமைக்கு வழி – 1984
4. மிஸ் கனகம் - சிறுகதைத் தொகுப்பு
5. இலங்கையில் மகா அஸ்வமேதயாகம்

இவரது 'பழிக்குப்பழி' என்னும் சரித்திரச் சிறுகதை கல்கி இதழில் வெளியானது. பின்னர் இலங்கையிலிருந்து வெளியான தேனருவி சஞ்சிகையில் மீள்பிரசுரமானது. அதற்கான இணைய இணைப்பை இப்பதிவின் இறுதியில் தந்துள்ளேன்.

திமுக அரசியல் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணியவர். எம்ஜிஆரின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர். எம்ஜிஆர் இலங்கை வந்திருந்தபோது மட்டக்களப்பில் எம்ஜிஆரை வரவேற்றவர். 

நிறைவான வாழ்க்கை வாழ்ந்து சென்றிருக்கின்றார் சொல்லின் செல்வர் அவர்கள். இலங்கைத் தமிழர் வரலாற்றில் இவரது பங்களிப்புகள் முக்கியுமானவை. எப்பொழுதும் நினைவு கூரப்பட வேண்டியவை. 

*ழிக்குப்பழி' வெளியான 'தேனருவி' சஞ்சிகைக்கான இணைய இணைப்பு: http://noolaham.net/project/362/36155/36155.pdf

[டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banada) உதவி : VNG]