அவுஸ்திரேலியா - மெல்பேர்னிலிருந்து எமது மூத்த ஊடகவியலாளர், எழுத்தாளர், நீர்கொழும்பை பூர்வீகமாகக் கொண்ட, திரு முருகபூபதி  இங்கிலாந்து வருகையின் போது ,  ஏறத்தாழ நாற்பது வருடங்களின் பின் ஒரு குடும்ப உறவினராக என்னைச் சந்தித்துக் கொண்டது மனதை நெகிழ வைத்தது.  பேசுவதற்கும் பழகுவதற்கும் மிக இனிமையான மனிதர். பல இலக்கிய விருதுகளை வென்றதற்கான  கர்வம் எதுவும் இல்லாதவர். நான் உரிமையுடன் சிறு வயதில் பார்த்துப் பழகியவர்.

என் வாழ்வில் மிக இனிமையான வசந்த காலம் என்றால் அது நான் என் பெற்றோரோடு நீர்கொழும்பில் வாழ்ந்த காலப்பகுதி தான். இன, மத, மொழி வேறுபாடுகள் இன்றி அனைத்து மக்களும் ஒருவருக்கொருவர் அன்போடும் விட்டுக் கொடுத்தலோடும் அழகான ஒரு சமூகக் கட்டுமானத்தை அங்கு அமைத்திருந்தார்கள்.  

நீர்கொழும்பில் எம்மோடு வாழ்ந்த அநேகமான பல தமிழ்,  சிங்கள, முஸ்லிம் மற்றும் ஏனைய கலப்பு  இனக் குடும்பங்களை இன்று வரையும் நான்  நினைவில் வைத்திருந்தாலும், பல விடயங்கள் மறந்தும் போயிருந்தன.

வந்தாரை வாழ வைக்கும் சிங்கார நீர்கொழும்பில் தான் எனது தாயும் தந்தையும் தமது திருமண வாழ்வை 1966ம் ஆண்டில் ஆரம்பித்திருந்தனர். ஆனால் அதற்கு முன்பே என் தந்தை அங்கு தனது மூத்த சகோதரர் திரு செல்லத்துரையுடன் காலணிகள் விற்கும் தொழிலை ஸ்தாபித்திருந்தார்.

ஆசிரியையான அம்மாவுடன் சூரியா வீதியில் வாடகைக்கு வாழ்ந்த போது, அவர்களுக்கு வசதியாக காளி கோவிலோடு அமைந்திருந்த சிறு ஒழுங்கையில், அதனை ஏழு வீட்டுப்  பேலி என்பார்கள், இறுதியாக அமைந்திருந்த ஏழாவது வீடு விற்பனைக்கு வந்திருந்ததில், அதனை வாங்கி அங்கே குடி புகுந்தார்கள். நானும் எனது இரு சகோதரர்களும் சிறு வயதில் வாழ்ந்த வீடும் அதுவாகியது. அம்மாவும் அங்கு விஜயரட்ணம் மகா வித்தியாலயத்தில் ஒரு தமிழ் ஆசிரியையாக பணி புரிந்ததில்,  ஆசிரிய சமூகமும் எம்மோடு ஒன்றிணைந்திருந்தது.

இப்படியாக வாழ்ந்த காலப்பகுதியில்  எம்மோடு, இலக்கிய வாழ்வு கடந்து, ஒரு சமூக செயற்பாட்டாளராக, சமூக ஆர்வலராக சமூகத்தில் இணைந்து வாழ்ந்த ஒருவர் தான் திரு இலட்சுமணன் முருகபூபதி அவர்கள். அவரைப் பற்றிய இலக்கியம் சார்ந்த விடயங்கள், அவருடைய தொடர்ச்சியான சேவைகள் என்பன   பற்றி நான் எழுதித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை ஆகையால் இங்கு, ஏறத்தாழ நாற்பது வருடத்தின் பின்,  அவரோடான எனது சந்திப்பைப் பற்றி மட்டுமே எழுதுவது எனத் தீர்மானித்தேன். சிறுவயது வாழ்வை, சில சம்பவங்களை இரை மீட்பது உள ஆற்றுபடுத்துகைக்கு ஈடானதாகவும் அமைந்திருந்ததும் இதற்கு இன்னொரு காரணம்.

என் ஆழ் மனதில் புதைந்து கிடந்த அனுபவங்களை திரு முருகபூபதியோடு பகிர்ந்து கொண்டது, நீர்கொழும்பில் எம்மோடு இணைந்திருந்த  பல இடங்களும், பல சிறந்த மனிதர்களும் மீண்டும் நினைவில் வரக் காரணமானது.

1954 இல் நீர்கொழும்பு விஜயரட்ணம் மகா வித்தியாலயம் (விவேகானந்தா வித்தியாலயமாக நிறுவப்பட்டது) ஆரம்பிக்கப்பட்ட போது  முதன் முதல் கல்வி கற்கச் சென்ற 32 மாணவர்களில் திரு முருகபூபதியும் ஒருவர். இதே பாடசாலையில் எனது தாயாரும் 1970 களில் கற்பித்திருக்கிறார்.  ஒரு சிங்கள, கத்தோலிக்க ஆரம்ப பாடசாலைக் கல்வியை முடித்த பின் நானும் சில வருடங்கள் இங்கு என் கல்வியைத் தொடர்ந்திருந்தேன்.

தன்னுடைய பத்தாவது வயதில் புலமைப் பரீட்சையில் சித்தியடைந்து, யாழ்ப்பாணம் நோக்கி புகையிரதத்தில் பயணம் போகும் போது தான், முதன் முதலாக தனக்குப் பனைமரங்களை பார்க்கக் கிடைத்தது என்பதையும் ஒரு குழந்தையின் பூரிப்போடு சொல்லி மகிழ்ந்தார் இந்த இலக்கிய ஆளுமை.   

குட்டி ரோமாபுரி என்னும் அளவிற்கு நீர்கொழும்பில் பல தேவாலயங்கள் பரவிக் கிடந்தன. அவற்றில் எனக்கு நினைவில் நின்றவற்றை நாம் இருவரும் அடையாளம் கண்டு கொண்டோம். அவற்றில் செயின்ற் பீட்டர்ஸ், செயின்ற் மேரிஸ், செயின்ற் செபஸ்டியன் என்பவை ஏதோ ஒரு வகையில் என் நினைவில் பதிந்தவை. அம்மா செயின்ற் மேரிஸ் பாடசாலையிலும் கல்வி கற்பித்திருந்தார்.

மிக இரம்மியமான இடமான முன்னக்கரையில் தான் என் நினைவில் இருக்கும் 'குட்டித்தீவு' அமைந்திருந்தது என்பதை திரு முருகபூபதி நினைவில் கொண்டு வந்தார்.  இங்கு இந்து சமுத்திரமும், களப்பு- உப்பு நீர் வாவியும் கலக்கும் இடத்தில், இரு முனைகளிலும்  மிக அழகான இரு தீவுகள் அமைந்திருக்கின்றன. அப்பா எம்மை அங்கு கூட்டிச் சென்று தொட்டியில் வளர்ப்பதற்காக  விதம் விதமான மீன்கள்  வாங்கித் தந்திருக்கிறார்.

நீர்கொழும்பு இந்து மகளிர் அமைப்பின் அங்கத்தவர்கள், எனது தாயார் உட்பட,  விசேட நாட்களில், கைதிகளுக்காகத் தயாரித்த உணவுப்பண்டங்களை நீர்கொழும்பில் இருக்கும் சிறைச்சாலைக்கு திரு முருகபூபதி தான்  விநியோகிக்கச் செல்வதையும் நினைவு கூர்ந்தார்.

நாம் வசித்த கடற்கரைத் தெருவில் காளி கோவில், பிள்ளையார் கோவில், அம்மன் கோவில் என மூன்று இந்துக்  கோவில்களும் அமைந்திருந்தன. இங்கு தென் இந்தியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட பூசகர்கள் தாம் பணி புரிந்ததோடு,  தமிழ், சிங்கள மக்கள் இணைந்து வழிபாடும்  செய்தார்கள்.

நாம் யாழ்ப்பாணத்திற்கு இடம் பெயர்ந்த அடுத்தடுத்த வருடங்களில் அம்மாவும் அகாலமாக மரணித்ததில், நீர்கொழும்பு மட்டுமே என் நினைவுகளில் இனிமையாய் படர்ந்திருக்கிறது.

நீர்கொழும்பிற்கென ஒரு பண்பாடும்,  விழுமியங்களும் இருந்தன, இருக்கின்றன.  இருப்பினும் உள்நாட்டு யுத்தமும், அரசியல் குழப்பங்களும்  அவற்றை அவ்வப்போது சீர் குலைக்கத் தவறவில்லை.

நீர்கொழும்பு பல்வேறு மாகாணத்தில் இருந்தும் வந்த மக்களை பலவிதத்திலும் வாழ வைத்திருக்கிறது என்ற உண்மை மட்டும் இன்றும் நிலைத்து நிற்கின்றது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.