காலி வீதியில் அவளைக்கண்டேன்
ஐந்து மணிக்குக்
கந்தோர் விட்டதும்
கார்களும்
பஸ்களும்
இரைந்து கலந்த நெரிசலில்
மனிதர் நெளிந்து செல்லும்
காலி வீதியில் அவளைக் கண்டேன்.

சிலும்பிய கூந்தலைத் தடவியவாறு
பஸ்நிறுத்தத்தில்
அவ்வஞ்சி நின்றதைக் கண்டேன்.
அவளைக் கடந்து செல்கையில்
மீண்டும் பார்த்தேன்
`very nice girl' என
மனம் முணுமுணுத்தது.
வழியில் நடந்தேன்.

அவசரகாரிய மாகச் செல்கையில்
நினைவும் அதிலே நினைத்து நிற்கையில்
காலி வீதியில் கண்டேன் அவளை

கார்களும்
பஸ்களும்
இரைந்து கலந்த
நெரிசலில்
நானும் நெரிந்துநடந்தேன்
(07.02.1969)


எண்பதுகளின் நடுக்கூற்றில் திக்குவல்லை ஸப்வான் வெளிக்கொணர்ந்த ‘இனிமை’ என்ற பத்திரிகையில் இக்கவிதை பற்றி எழுதியிருந்தேன். எம்.ஏ.நுஃமானின் அகத்துறை விடயங்களைப் பேசுகின்ற ‘அழியா நிழல்கள்’ (1982) தொகுப்பை வாசிக்கையில் இந்த கவிதையை திரும்பத் திரும்ப வாசிக்கத்தோற்றிற்று. யாதார்த்தம் மேவிய காட்சி மனசுக்குள் திரை ஓவியமாய் பதிந்துப்போயிற்று. ஒரு நிகழ்வைக் காட்சிபடுத்துவதன் வழியாக அதை கவிதையாக்கியிருக்கிறார். இத்தகைய அனுபவங்கள் எமக்குள் நிறையவே நிகழ்ந்துள்ளன. கவிதை ஒரு கவித்துவ நிகழ்வு. அந்த கவித்துவ நிகழ்வை வாசகன் வாசிக்கும்போது உணரவில்லையெனில் கவிஞன் தோற்றுவிடுகிறான். ‘காலிவீதியில்’ கவிதையை எழுதிய கவிஞன் தோற்றுவிடவில்லை. அறுபதுகளின் ஈற்றில் ஈழத்து முற்போக்கு இலக்கியத்தில் வரட்டுவாதம் மேலோங்கி இருந்தபோது இத்தகைய அனுபவங்களும் கவிதையாகலாம் என்பதை உணர்த்துவதற்காகவே இக்கவிதையை எம்.ஏ.நுஃமான் எழுதியிருக்கிறார். கவிதை என்பது தீவிரமான குரல்வளையை நெரிக்கும் பிரச்சினைகளையும் அடர்த்தியான விடயங்களையும் மட்டுமே பேச வேண்டும் என்ற எல்லைகளை உடைத்து மிக எளிமையான விடயங்களைக்கூட கவிதையில் பேச முடியும் என்று நிறுவிக்காட்டியவர் எம்.ஏ.நுஃமான். இயல்பான ஒரு சிறு அனுபவத்தைக்கூட, அதற்கான எளிய மொழியில் கவிதையில் எழுதிக்காட்டியவர்களில் நுஃமான் முன்னோடி. இந்த கவிதைப்பற்றி அக்காலப்பகுதியிலேயே மு.பொன்னம்பலம் தமக்கே உரித்தான பாணியில் விமர்சித்திருக்கிறார். 1972 மார்ச் மல்லிகை (பக்.26) இல் நா.காமராசனின் கவிதைகள் (கறுப்பு மலர்கள் – நூலுக்கான நயம்) பற்றி எழுதுகையில் பின்வருமாறும் பிதற்றிள்ளார்: “ஆன்மீக சமுதாயப் பார்வைக்கு ஏற்ப எழுதுவதாகக் கூறிக்கொள்ளும் ஜெயகாந்தன், ஆன்மீகத்துக்கே விரோதமான பிற்போக்குச் சிண்டிகேட்டுகளுக்கும் தனிமனிதப் பித்தலாட்டங்களுக்கும் முண்டு கொடுப்பதும் இந்தப் பழைய அடிமன வாசனைகளினதும் தன்முனைப்புகளினதும் அத்துமீறல்களினாலேயே! இலங்கையில் எஸ்.பொன்னுத்துரையின் போக்கு இதற்கு இன்னோர் உதாரணம். இன்னும் மார்க்ஸியவாதிகளாகத் தம்மைப் பாவனை பண்ணிக்கொள்ளும் சில இலங்கைக் கவிஞர்கள்’ ‘காலி வீதியில்’ செல்லும் பெண்ணைப்பார்த்து 'வெரி நைஸ் கேர்ல்' என்று சென்டிமென்டலாக உருகித்தள்ளுவதும் இப்படி பழைய வாசனைகள் திடீர்த் தாக்குதல் நடத்தும்போது, அவற்றைத் தமது தத்துவத்துக்கேற்ப வழிப்படுத்த முடியாத பேதமையினாலேயே!”

இந்த விமர்சனத்தைப் பற்றியும் ‘காலி வீதியில்’ கவிதைப் பற்றியும் தன்னுடைய ‘அழியா நிழல்கள்’ கவிதை நூலின் முன்னுரையில் எம்.ஏ.நுஃமான் தன்னுடைய கருத்தியலை தெளிவாக தெரியப் படுத்தியுள்ளார். “'தன்னை மார்க்சியவாதி என்று பாவனை பண்ணிக் கொள்பவர் 'காலி வீதியில்' செல்லும் பெண்ணைப் பார்த்து 'வெரி நைஸ் கேர்ல்' என்று சென்டிமென்டலாக உருகித்தள்ளலாமா? இது பேதமை அல்லவா?' என்ற பொருள்பட இத்தொகுப்பில் உள்ள 'காலிவீதியில்' கவிதைபற்றி பத்து வருடங்களுக்கு முன்பே எனது நண்பர் மு.பொன்னம்பலம் எழுதியிருந்தார். (மல்லிகை, மார்ச் 1972). இத்தனைக்கும் அவரும் ஒரு கவிஞர். முதலில் அந்தக் கவிதை சென்டிமென்ட்லாக உருகித்தள்ளுவதல்ல என்பதைக் கூட அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவ்வளவு கவித்துவ உணர்வு அவருக்கு! அறுபதுகளின் பிற்பகுதியிலே ஈழத்து முற்போக்கு இலக்கியத்தில் வரட்டுவாதம் மேலோங்கி இருந்தபோது (அது இன்னும் முற்றாக மறைந்துவிடவில்லை). இத்தகைய சிறு அனுபவங்களும் கவிதையாக எழுதப்படலாம் என்பதைக் காட்டுவதற்காகவே நான் அதை எழுதினேன். சன நெரிசலின் மத்தியில், அவசர காரியமாகச் சென்று கொண்டிருக்கையில் ஒரு பெண்ணின் அழகின் ஈர்ப்பு ஏற்படுத்திய ஒரு கணச் சலனம், அதே அவசரத்தில், கார்களும் பஸ்களும் இரைந்து கலந்த நெருசலில் அவசரமாகவே கலைந்து போவதைத்தான் அக்கவிதை கூறுகின்றது. புதுமைப்பித்தனின் 'இது மிஷின் யுகம்' கதையில் வரும் மனிதயந்திரம் மாதிரி அதிலே 'சென்டிமென்டலான உருகல்' எதுவும் இல்லை. ஒரு மார்க்சீயவாதியாக இருப்பதற்கு இத்தகைய அனுபவங்களை எழுதுவதற்கும் என்ன முரண்பாடு? இக்கவிதை மார்க்சீயக்கோட்பாட்டோடு எப்படி மோதிக் கொள்கின்றது? என்பது எனக்கு புரியவில்லை. பிற்காலத்தில் பொன்னம்பலம் என்று ஒரு 'பிரபஞ்ச யதார்த்தவாதி' இப்படியெல்லாம் சொல்லுவார் என்று தெரிந்திருந்தால் ஜென்னியைப் பற்றித் தான் எழுதிய அற்புதமான காதல் கவிதைகளையெல்லாம் கார்ல்மார்க்ஸ் தீயிட்டுக் கொளுத்தியிருப்பானோ தெரியாது. அப்படி நடந்திருந்தால் எவ்வளவு நஷ்டமாக இருந்திருக்கும். மார்க்ஸ் என்ற மனிதனின் பிறிதொரு பகுதியை நம்மால் அறிய முடியாமலே போயிருக்கும். நல்ல காலம் அத்தகைய துரதிர்ஷ்டங்கள் நிகழவில்லை.” அபாரமான காட்சி அனுபவத்தை அளிக்கும் இக்கவிதையில் எளிமையே அழகியலாக ஒளிர்கிறது. நுஃமான் கவிதைகளில் சிக்கலான மொழிநடை இருந்ததே இல்லை. எந்தச்சொல்லிலும் அவர் சுமையை ஏற்றி வைத்ததில்லை. அதனால் அவரது கவிதை மிகவும் அழகானது... நுட்பமானது.... உயிரோட்ட முள்ளது... உள்எழில் காட்டுவது... இதனால் நமக்குள் எழும் உணர்வலைகள் ஓய்வதில்லை. ‘காலி வீதியில்’ கவிதை இதற்கு நல்லதோர் எடுத்துக்காட்டாகும்.


1

நேற்றைய மாலையும்
இன்றைய காலையும்
நேற்று மாலை
நாங்கள் இங்கிருந்தோம்.

சனங்கள் நிறைந்த யாழ்நகர்த் தெருவில்
வாகன நெரிசலில்
சைக்கிளை நாங்கள் தள்ளிச் சென்றோம்.

பூபால சிங்கம் புத்தகநிலைய
முன்றலில் நின்றோம்.
பத்திரிகைகளைப் புரட்டிப் பார்த்தோம்.

பஸ்நிலையத்தில் மக்கள் நெரிசலைப்
பார்த்தவா றிருந்தோம்.
பலவித முகங்கள்
பலவித நிறங்கள்
வந்தும் சென்றும்
ஏறியும் இறங்கியும்
அகல்வதைக் கண்டோம்.

சந்தைவரையும் நடந்து சென்றோம்.
திருவள்ளுவர் சிலையைக் கடந்து
தபாற்கந்தோர்ச் சந்தியில் ஏறி
பண்ணை வெளியில் காற்று வாங்கினோம்.

‘றீகலின்’ அருகே
பெட்டிக் கடையில்
தேனீர் அருந்தி – சிகரட் புகைத்தோம்.
ஜாக் லண்டனின்
‘வனத்தின் அழைப்பு’
திரைப்படம் பார்த்தோம்.

தலைமுடி கலைந்து பறக்கும் காற்றில்
சைக்கிளில் ஏறி
வீடு திரும்பினோம்.

இன்று காலை
இப்படி விடிந்தது.

நாங்கள் நடந்த நகரத் தெருக்களில்
காக்கி உடையில் துவக்குகள் திரிந்தன
குண்டுகள் பொழிந்தன.
உடலைத் துளைத்து
உயிரைக் குடித்தன.

பஸ்நிலையம் மரணித் திருந்தது.
மனித வாடையை நகரம் இழந்தது.
கடைகள் எரிந்து புகைந்துகிடந்தன
குண்டு விழுந்த கட்டடம் போல
பழைய சந்தை இடிந்து கிடந்தது
வீதிகள் தோறும்
டயர்கள் எரிந்து கரிந்து கிடந்தன.

இவ்வாறாக
இன்றைய வாழ்வை
நாங்கள் இழந்தோம்.

இன்றைய மாலையை
நாங்கள் இழந்தோம்.


2

துப்பாக்கி அரக்கரும்
மனிதனின் விதியும்

நாளையக் கனவுகள் இன்று கலைந்தன
நேற்றைய உணர்வுகள் இன்று சிதைந்தன.
காக்கி உடையில்
துப்பாக்கி அரக்கர்
தாண்டவம் ஆடினர்
ஒருபெரும் நகரம் மரணம் அடைந்தது.

வாழ்க்கையின் முடிவே மரணம் என்போம்
ஆயின் எமக்கோ
மரணமே எமது வாழ்வாய் உள்ளது.

திருவிழாக் காணச் சென்றுகொண்டிருக்கையில்
படம்பார்க்கச் செல்லும் பாதிவழியில்
பஸ்நிலையத்தின் வரிசையில் நிற்கையில்
சந்தையில் இருந்து திரும்பி வருகையில்
எங்களில் யாரும்
சுடப்பட்டு இறக்கலாம்
எங்களில் யாரும்
அடிபட்டு விழலாம்.

உத்தரவாதம் அற்ற வாழ்க்கையே
மனிதனின் விதியா?

அடக்கு முறைக்கு அடிபணிவதே
அரசியல் அறமா?

அதை நாம் எதிர்ப்போம்!
அதை நாம் எதிர்ப்போம்!

தனிநாடு அல்ல எங்களின் தேவை;
மனிதனுக்குரிய வாழ்க்கை உரிமைகள்
மனிதனுக் குரிய கௌரவம்
வாழ்க்கைக் கான உத்தரவாதம்.

யார்இதை எமக்கு மறுத்தல் கூடும்?
மறுப்பவர் யாரும் எம்எதிர் வருக!
காக்கி உடையில்
துப்பாக்கி அரக்கர்
தாண்டவம் ஆடுக!

போராடுவதே மனிதனின் விதிஎனின்
போராட்டத்தில்
மரணம் அடைவதும் மகத்துவம் உடையதே.

ஈழத்து தமிழ் இலக்கியத்தில் அரசியல் எதிர்ப்புக் கவிதைகளின் தொடக்க கவிதைகளாக இவ்விரு கவிதைகளே கவனக்குவிப்புக்குள்ளாகின. அரசியல் எதிர்ப்புக் கவிதைகள் நுஃமானிடமிருந்து வேர்கொண்ட தாக தோன்றுகிறது. இக்கவிதைகள் அவருடைய முன்னோடித் தன்மையை நிலைநிறுத்துவதாக இருக்கின்றன. வெளிப்பாட்டில் தெளிவு, மொழியைக் கையாள்வதில் கச்சிதத்தன்மை அல்லது சிக்கனம், விவரணையில் ஸ்தூலத்தன்மை போன்ற நல்ல கவிதைக்கான லட்சணங்கள் இவ்விருகவிதைகளிலும் பிரகாசித்திருக்கின்றன. ‘அலை’ (1977 மார்கழி; பக். 239 - 241) 10ஆம் இதழில் களம் கண்ட இவ்விரு கவிதைகளின் அருட்டுணர்விலேயே ஈழத்தின் பெரும்பாலான போர்க்கால கவிதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. “1977ல் யாழ்ப்பாணத்தில் அரச காவலர்களால் இழைக்கப்பட்ட அட்டூழியங்களுக்கு உடனடி எதிர்வினையாக” எழுதப்பட்டதே இவ்விரு கவிதைகளும் என்கிறார் எம்.ஏ.நுஃமான். இவைதான் இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் அரசியல் எதிர்ப்புக் கவிதைகளின் முதல் வருகையாகும். முதலாவது கவிதையின் ஆரம்ப காட்சி யதார்த்த இருப்பை விவரணப்படுத்த, அடுத்த பகுதி வன்முறையின் அவலத்தை படம்பிடித்திருக்கின்றது. இரண்டாவது கவிதை அடக்கு முறைக்கு எதிரான குரலை வெளிப்படுத்துகின்றது. இந்த குரல்தான் பன்முக பரிமாணங்களில் போர்கால கவிதைகளில் ஓங்கி ஒலித்தது. நுஃமான் அவர்கள் மொழிபெயர்த்த ‘பலஸ்தீன கவிதைகள்’ எவ்வாறு போர்க்கால கவிதைகளுக்கு அச்சாணியானதோ, அதுபோல் இது போன்ற நுஃமானின் கவிதைகளும் போராட்டக்கால கவிதைகளுக்கு பெரும் உந்துதலை உண்டாக்கின. இவ்விடத்தில் பேராசிரியர் கா.சிவத்தம்பியின் கருத்தொன்று அவதானத்திற் கொள்ளத்தக்கது. “இலக்கியம் என்பது வரலாற்றின் சிசு என்பது எத்துணை உண்மையோ அத்துணை உண்மை ‘இலக்கியமும் வரலாற்றை உருவாக்குவது’ என்பதாகும். அதாவது இப்புதிய புலப்பதிவுகளுக்குக் காலாகவிருந்த இலக்கியங்கள் யாவை? இளைஞரியக்கம் மீதிருந்த இலக்கியச் செல்வாக்குகள் யாவை? இந்த இளைஞர்கள் யார் யாரை வாசித்தார்கள், யார் யார் எழுதிய எவ்வெவ்விலக்கியங்கள் அவர்களுக்கான தூண்டுதல்கள், உந்துதல்களாக அமைந்தன என்பதும் முக்கியமான ஒரு வினாவாகும். இது சம்பந்தமாக, எனக்குத் தெரிந்த அளவில், போராளிகள் மீது கவிதை ஏற்படுத்திய தாக்கம் மிகப் பெரியது என்றே கருதுகின்றேன். நுஃமான் மொழி பெயர்த்த ‘பாலஸ்தீனக் கவிதைகள்’ தொகுதி முக்கிய செல்வாக்கு ஊற்றுக்களில் ஒன்றாகும்” (‘ஈழத்தில் தமிழ் இலக்கியம்’; 2010:42). ‘உருவம், உள்ளடக்கம் என்பவற்றைப் பொறுத்தவரை கடந்த முப்பது ஆண்டுகளில் இலங்கையில் எழுதப்பட்ட மிகப்பெரும்பாலான போர்க்காலக் கவிதைகள், இவ்விரு கவிதைகளின் வெவ்வேறு வகைகள் என்றே சொல்லவேண்டும்’ என்கிறார் நுஃமான். இக்கவிதைகளைத் தொடர்ந்து கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாய் ஆயிரக்கணக்கான கவிதைகள் எழுதப்பட்டுள்ளன. நூற்றுக்கும் மேலான தொகுதிகள் வெளியாகியுள்ளன. இத்தகைய கவிதைகளின் முதல் தொகுதியே ‘மரணத்துள் வாழ்வோம்’ (1985) என்ற கவிநூலாகும்.

எம்.ஏ.நுஃமான் அவர்கள் எழுதிய பெரும்பாலான கவிதைகள் தாக்கவலு நிரம்பியதாக, புதிய தொடக்கமொன்றின் ஆரம்பமாக அமையப்பெற்றிருந்தன. பேராசிரியர் கா.சிவத்தம்பின் சொற்களில் சொன்னால், ‘முக்கிய செல்வாக்கு ஊற்றாக’ அமைந்தன. தன்னுடைய 16 அகவையில் (1960) கவிதை எழுதும் ஆற்றலைப்பெற்ற நுஃமான், பெருந்தொகையாக கவிதை எழுதிக்குவித்தவரல்ல. கவிதையை சொற்சிற்பமாக கருதியவர். கற்களில் நுட்பமாகச் சிற்பங்களைச் செதுக்குவது போன்று உணர்வுகளையும், அனுபவங்களையும், சிந்தனைகளையும் சொற்களில் நுட்பமாகச் செதுக்கி, ஆற்றல் உள்ள அழகிய கவிதைகளைப் படைத்திருக்கிறார். ‘ஒரு நல்ல கவிதை தன்னை மீண்டும் மீண்டும் செதுக்கிச் செப்பனிடுவதைக் கவிஞனிடம் வேண்டி நிற்கின்றது’ என்ற அடிப்படையிலேயே கவிஞர் எம்.ஏ.நுஃமான் கவிதைகள் எழுதியிருக்கிறார் (பார்க்க, அணிந்துரை; ‘நான் எனும் நீ’; 1999: 11,12). பேராசிரியர் கா.சிவத்தம்பியின் கணிப்பும் இங்கு கவனிக்கத் தக்கது: “60, 70களில் நவீன கவிதை வளர்ச்சிக்கு வளம் சேர்க்கும் கவிஞர் சிலர் முன்னிலை எய்துகின்றனர். இவர்களுள் நுஃமான், சண்முகம் சிவலிங்கம், மு.பொன்னம்பலம் ஆகியோர் முக்கியமானவர்கள் (‘ஈழத்தில் தமிழ் இலக்கியம்’; 2010:275) இதுவரையில் அவரது ஐந்து கவிதை தொகுப்புகள் வெளிவந்துள்ளன. அவை, ‘உதயப் பொழுதும் அந்தி மாலையும் (தேர்ந்த கவிதைகளின் முழுத் தொகுப்பு; 2024), ‘துப்பாக்கிக்கு மூளை இல்லை’ (காலச்சுவடு, 2022), ‘மழைநாட்கள் வரும்’ (அன்னம்; சிவகங்கை, 1983), ‘அழியா நிழல்கள்’ (நர்மதா பதிப்பகம்; சென்னை, 1982) ‘தாத்தாமாரும் பேரர்களும்’ (நெடுங்கவிதைத் தொகுப்பு; வாசகர் சங்கம்; கல்முனை, 1977) என்பனவாகும். இவரின் கவிதைகள், ஆங்கிலம், சிங்களம், கன்னடம் ஆகிய மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன.

‘தாத்தாமாரும் பேரர்களும்’ என்ற நெடுங்கவிதை தொகுப்பு, “பற்றிய மதிப்பீடு பலவிதங்களில் முக்கியமானதொன்றாக அமைந்துள்ளது. அது எம்.ஏ.நுஃமான் என்ற கவிஞனொருவனது தனித்துவ ஆற்றல்களை வெளிப்படுத்துகின்றது என்பதனால் மட்டுமன்று; நவீன கவிதையின் புதிய போக்குகள், கவியரங்கக் கவிதைகளின் இயல்புகள், தமிழில் புதுக்கவிதையின் தோற்றப்பாடு ஆகியன தொடர்பான ஆரோக்கியமான சில கருத்துக்கள் எழுவதற்கான களமாக அமைகின்றமை யினாலுமாகும்’ (அலை 6; 1976: 228) என்று அண்மையில் அமரரான (08.12.2023) பேராசிரியர் செ.யோகராசா எழுதியுள்ளார். இத்தொகுப்பில் ‘எம்.ஏ.நுஃமான் கவிதைகளின் தனிச்சிறப்பினை’ இ.முருகையன் தத்துரூபமாக கணித்திருக்கிறார். “அவருடைய கவிதைகளில் மிகவும் தரங்குறைந்தன என எண்ணக்கூடியவைகூட, நமது சராசரி கவிதைகளைவிட உயர்ந்தனைவாகவே உள்ளன. அவர் எட்டியுள்ள உச்சங்களோ சில வேளைகளில் யாரும் இதுவரை சென்றடையாத உச்சங்களாக உள்ளன. நுஃமானின் கவிதைகளை சற்று மேலதிக உன்னிப்போடு படித்தல் வேண்டும். மீண்டும் மீண்டும் வாசித்தலும் அவசியமாகலாம். ‘நவில் தொறும் நூல் நயம்’ என்று வள்ளுவர் சொன்னது இதைத்தானே! இந்த வகையில் பாரதியையும் பாரதிதாசனையும் ஒரு துருவத்தில் வைத்தால் நுஃமானை மறு துருவத்துக்கு அண்மையிலே கொண்டு போக வேண்டிவரும். “மஹாகவியும்” நுஃமானுக்கு கிட்டத்தான் நிற்பார்”. நுஃமான் கவிதைகளின் பொருளுருவத்தில் முதன்மை பெற்று நிற்கும் அம்சங்கங்களை இ.முருகையன் பின்வருமாறு எடுத்துவிளக்குகின்றார்.

(அ) காட்சி வைப்புகளின் வழியிலே கருத்துக்களை முன்நிறுத்துவது: மன ஓவியங்களை அல்லது எண்ணப் படங்களை – அதாவது அகக்காட்சிகளை – கவிதையின் மூலமாகக் கொள்வது.

(ஆ) நிகழ்ச்சிக் கோவைகளின் வழியிலே கருத்துக்களை முன்னிறுத்துவது: ‘நிலமென்னும் நல்லாள்’ இந்தக் கலையாக்க வெற்றிக்கு உதாரணமாகும்.

(இ) கவிதையில் எடுத்தாளப்படும் கருத்து, கவிதையின் வளர்ச்சியோடியைந்து வளர்ந்து செல்வது. சுட்டியாகி இறுக்கமான கல்லுப்போல அசைவின்றி நிற்பதில்லை நுஃமானின் கவிதைக் கருத்துக்கள். அவை உயிர்ப்பும் அசைவும் கொண்டு வளர்ந்து செல்கின்றன.

(ஈ) கருத்துக்கள் முனைப்புற்று வெளிக்காட்டி நிற்காமல், உள்ளமைந்து கிடத்தல். சான்றோர் (சங்க) இலக்கியத்தில் உள்ளுறை உவமமும் இறைச்சிப் பொருளும் எவ்வாறு நுணுக்கமாகக் கையாளப் பட்டனவோ அதே அளவு நுட்பமாகவும் கலை நயத்துடனும் நுஃமானின் எண்ண வெளிப்பாட்டு முறை உள்ளது.

துப்பாக்கிக்கு மூளை இல்லை’ என்ற தொகுப்பு இன வெறுப்புக்கும் வன்முறை அரசியலுக்கும் போருக்கும் எதிரான கவிதைகளைக் கொண்டிருக்கிறது. இக்கவிதைகள் தற்கால அரசியல் கவிதைகளில் தனித்துவமான இடத்தைப்பெற்றுள்ளன. ஏனெனில் மதம், மொழி, இனம், தேசியம் என எந்தத் தரப்பையும் சாராத குரலை இக்கவிதைகள் சாசுவதமாக்கிக்கொண்டுள்ளன. துப்பாக்கிக்கு எதிரான இக்கவிதைகள், எல்லா விதமான அடக்குமுறைகளுக்கும் எதிரான அமைந்து, அமைதியையும் சமாதானத்தையும் சமத்துவத்தையும் வேண்டி நிற்கின்றன.  போரில் வெற்றிபெறுபவர் யாரும் இல்லை – என்பது வரலாறு கற்றுத்தந்த பாடமாகும். எல்லாப் போர்களுக்கும் எதிரான குரல்களே இக்கவிதைகளில் உரத்துக் கேட்கின்றன ‘நுஃமானின் கவிதைகளில் சிறப்பாக இருப்பவையாக நான் கருதுபவை சோடனையற்ற, செயற்கையாக சேர்க்கப்படாத எதுகை மோனைகள், சாதாரண மக்களால் புரிந்து கொள்ளக்கூடிய உண்மையை உள்ளடக்கிய எளிமையான எழுத்து நடையே’ எனக்குறிப்பிடும் ‘தங்கம்’ இத்தொகுப்பு பற்றி பதிவுகள் இணையத்தில் (13 பிப்ரவரி 2023) பின்வருமாறு பதிவுசெய்கிறார். ‘பெரும் திரளான மக்களின் உணர்வுகளை வலிமைமிக்க சொற்களால் இணைத்து நாம் கடந்து வந்த வலிமிகுந்த நாட்களுக்கு கவிதைகள் மூலம் உருவம் கொடுத்துள்ளார். அவர் தமிழ்பேராசிரியராக இருந்த போதும் மொழி அகராதியில் சொற்களுக்கு கருத்துக்களைத் தேடும் நிலைமையை வாசகர்களுக்கு ஏற்படுத்தவில்லை என்பதும் நாளாந்த புழக்கத்தில் இருக்கும் சொற்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட கவிதைகளை நாம் இங்கு வாசிக்கலாம் என்பதும் மேலும் இக்கவிதைகளைச் சிறப்பானதாக்குகின்றது. துப்பாக்கிக்கு மூளை இல்லை எனும் இந்த தொகுப்பு எதிர்கால சந்ததியினருக்கு ஒரு வரலாற்று ஆவணமாக அமையலாம். 2009 இல் இறுதியுத்தம் நிகழ்ந்தது பற்றி அறிந்திராத 10 ஆம் வகுப்பில் கல்வி பயிலும் மாணவர்களைக் கொண்ட சமூகமாக இலங்கை மாறிவருகின்ற சூழலில் இவ்வாறான வரலாற்று பதிவுகள் இலங்கையில் வாழும் தமிழ் பேசும் இளம் சந்ததியினர் தமது அடையாளத்தை, இலங்கையில் தமது உரிமத்துவத்தை தேடும் போது அவர்களுக்கு பயனுள்ளதாக வலுவூட்டுவதாக அமையலாம். இந்த தொகுப்பில் சேர்க்கப்பட்டிருக்கும் கவிதைகள் நாம் கடந்து வந்த வலிசுமந்த வாழ்வை, அக்காலத்தின் நிகழ்வுகளை பதிவு செய்கிறது. இலக்கியம் காலத்தின் சாட்சியாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சாட்சியங்களை மிகவும் கச்சிதமாக கவிதைகளுக்குள் அடக்கியுள்ளார் நுஃமான்’.

அண்மையில் (2024) வெளியிடப்பட்ட எம்.ஏ,நுஃமான் அவர்களின் “உதயப் பொழுதும் அந்தி மாலையும்” என்ற தேர்ந்த கவிதைகளின் முழுத்தொகுப்பில் தன்னுடைய கவிதா வாழ்வு பற்றி பின்வருமாறு பதிவு செய்துள்ளார், “இடை நடுவழியில் தங்கள் வாழ்வை முடித்துக்கொண்ட பாரதி போன்றோ, அல்லது மஹாகவி, நீலாவணன் போன்றோ அன்றி, அதிர்ஷ்டவசமாக எனக்கு. நீண்டகாலம் வாழக்கிடைத்திருக்கிறது. ஆயினும், அவர்கள் போல் ஆர்வத்தோடு ஏராளமாகவும் தரமாகவும் எழுதியவன் அல்ல நான். எனது கவிதைகளின் உள்ளடக்கம் பன்முகப்பட்டது. கவிதையின் வடிவம் போலவே கால மாற்றத்தினால் தீர்மானிக்கப்பட்டது. எனது கவிதைகள் பன்முகப்பட்டவை எனினும் இதுவரை வெளிவந்த எனது கவிதைத் தொகுதிகளில் நான் அந்தப் பன்முகத் தன்மையைப் பேணவில்லை. கவிதைகளைப் பொருள் அடிப்படையில் வகைப்படுத்தியே எனது முன்னைய தொகுதிகளை வெளியிட்டேன். நான் எழுதத் தொடங்கிப் பதினைந்து ஆண்டுகளின் பின்னர் 1977ல் வெளிவந்த ”தாத்தாமாரும் பேரர்களும்” என்ற எனது முதலாவது தொகுப்பில் ஐந்து நெடுங்கவிதைகளை மட்டும் சேர்த்திருந்தேன். அதை அடுத்து 1982ல் வெளிவந்த ”அழியா நிழல்கள்” தொகுப்பில் எனது தனி உணர்வு சார்ந்த கவிதைகளும், 1983ல் வெளிவந்த ”மழைநாட்கள் வரும் ” தொகுப்பில் சமூக அரசியல் பிரச்சினை சார்ந்த எனது சில கவிதைகளும் இடம்பெற்றன. அதன்பின் நாற்பது ஆண்டு நீண்ட இடைவெளியில் 2022ல் வெளிவந்த ”துப்பாக்கிக்கு மூளை இல்லை ”தொகுப்பில் எனது யுத்தகால அரசியல் கவிதைகள் மட்டும் இடம்பெற்றன. இத்தகைய பொருள் அடிப்படையிலான வகைப்பாட்டுத் தொகுப்புகளின் மூலம் எனது கவிதைகளின் பன்முகத்தன்மையை ஒருமித்து நுகரும் வாய்ப்பு வாசகர்களுக்குக் கிடைக்கவில்லை எனலாம். அந்த வாய்ப்பை வழங்கும் வகையில் கடந்த அறுபது ஆண்டுகளில் நான் எழுதிய கவிதைகளில் பெரும்பாலானவற்றை உள்ளடக்கி, இப்போது வெளிவரும் இத்தொகுப்பு எனது கவிதைகளின் பன்முகப்பாட்டை புரிந்துகொள்வதற்கு உதவும் என்று நம்புகின்றேன்.

இத்தொகுப்பு எனது நீண்ட கவிதைப் பயணத்தின் ஒரு வரலாற்றுப் பதிவு. பலரகமான கவிதைகளைக் கொண்டது. அவற்றுள் நல்லவையும் உண்டு, நலிந்தவையும் உண்டு. ஆனால், பிற்போக்குத்தனமானவை, சமுக முன்னேற்றத்துக்கு எதிரானவை என்று எதுவும் இல்லை என்று நம்புகின்றேன். இன்று இருப்பதைவிட மனிதர்கள் நிம்மதியாக மகிழ்வுடன் வாழக்கூடிய ஒரு உலகத்தை, மோதலும் முரண்பாடுகளும் வன்மமும் போரும் அற்ற ஒரு உலகத்தை, நேர்மையும் அன்பும் கருணையும்மிக்க ஒரு உலகத்தைத்தான் நான் கனவுகாண்கிறேன். அந்தக் கனவும் எதிர்பார்ப்பும் எனது பெரும்பாலான கவிதைகளில் வெளிப்படுகின்றன என்று நினைக்கின்றேன். அந்தக் கனவையும் எதிர்பார்ப்பையும் இக்கவிதைகள் வாசகரிடத்தும் கொண்டு செல்லுமாயின் நான் திருப்தி அடைவேன். இவற்றை நான் எழுதியமைக்கான பயன் அதுதான்.”

ஈழத்து கவிதை வரலாற்றில் அதிக அளவில் பேசப்பட்டு, விவாதங்களையும் விசாரணைகளையும் விமர்சனங்களையும் எதிர்க்கொண்டு, அதிக ஏற்பினையும் பலமான எதிர்ப்பினையும் தேடிக்கொண்ட கவிதையே ‘புத்தரின் படுகொலை’ என்ற கவிதையாகும். இக்கவிதையை ‘ஓர் காத்திரமான கவிதை’ என பேராசிரியர் சி.மௌனகுரு குறிப்பிடுகிறார். ‘ஈழத்துக் கவிதைப்பரப்பில் பெரும் அதிர்வை ஏற்படுத்திய இக்கவிதை, தமிழ்க்கவிதையின் இன்னுமொரு மீட்சி’ என்பது முல்லை முஸ்ரிபாவின் அவதானிப்பாகும். ‘1981இன் நூல் நிலைய எரிப்பு எமது இலக்கிய வெளிப்பாட்டிலே ஒரு பிரிகோடாக அமைந்தது. அதுபற்றி இன்று அமரத்துவம் பெற்றுள்ள இரண்டு படைப்புக்கள் உள்ளன. ஒன்று நுஃமானின் ‘புத்தரின் படுகொலை’ (1981) மற்றது சேரனின் – இரண்டாவது உதயத்தில் வரும் ஒரு சரிதை’ என்பது பேராசிரியர் கா.சிவத்தம்பியின் (ஈழத்து தமிழிலக்கியத் தடம்; 2000: 72) கணிப்பாகும். ‘நுஃமான் மல்லிகை 1970 ஜூன் இதழில் விடிவை நோக்கி என்ற தலைப்பில் எட்டுப்பக்கங்களில் நீண்ட கவிதை எழுதியிருந்தார். ஆலயக்குருக்களுக்கும் ஆலய அறங் காவலர்களான மேல்சாதியினருக்கும் எதிராக ஆலயத்திற்கு வெளியே நின்று தாழ்த்தப்பட்ட மக்கள் நடத்தும் ஆர்ப்பாட்டம்தான் அந்தக் கவிதையில் கவித்துவத்துடன் சித்தரிக்கப்பட்டிருந்தது. அந்தக் கவிதை – கடவுள் இருந்த இடத்திலும் இருள் மூடியது என முடிந்திருந்தது. பின்னாட்களில் 1980 இற்குப்பிறகு அவர் எழுதிய புத்தரின் படுகொலை கவிதை விடிவை நோக்கி நெடுங்கவிதையிலிருந்து வேறுபட்டிருந்தாலும் சில வரிகளைக் கொண்டிருந்தாரும் இரண்டிலும் நுஃமான் வெளிப்படுத்திய படிமங்கள் குறிப்பிடத்தகுந்தவை – அழுத்த மானவை’ என்று ‘இலக்கியத்திலும் மொழியியலிலும் பன்முக ஆளுமை கொண்டிருக்கும் பேராசிரியர் நுஃமான்’ என்ற கட்டுரையில் முருகபூபதி எழுதியிருக்கிறார் ( மணற்கேணி; நவ - .டிச. 2014: 8). பௌத்தஅரச வன்முறையின் கோரமுகத்தை அம்பலப்படுத்துவதோடு மனித உணர்வை உசுப்புவதாக ‘புத்தரின் படுகொலை’ கவிதை அமைந்துள்ளது.

இலங்கை பௌத்த நாடாகவே பதியமாகி இருக்கின்றது. பௌத்தம் அரச மதமாக ஆகியிருக்கின்றது அல்லது ஆக்கப்பட்டிருக்கின்றது. அஹிம்சையே பௌதத்தின் ஆப்த உயிர்ப்பாகும். ஏனெனில் கௌதம புத்தரின் மெய்யியல் அஹிம்சையையே பௌர்ணமியாய் பொலிந்திருக்கிறது.. அவரின் நடைமுறை செயற்பாடுகளிலும் இதனையே அவதானிக்கலாம். பௌத்தம் வன்முறைக்கு எதிரானது. “ஆயினும், அர்த்தமுள்ள வகையில் இந்த வன்முறைக்கு எதிரான பௌத்த குரல் எதுவும் இங்கு எழவில்லை என்பது நம் கவனத்துக்குரியது. உண்மையில் பௌத்தம் அரசியல் நோக்கத்துக்காக பயன்படுத்தப்பட்டது. சிறுபான்மையினர் பார்வையில் இலங்கையில் பௌத்தம் காட்டிக்கொடுக்கப்பட்டது அல்லது பலியாளாக்கப்பட்டுவிட்டது” என்கிறார் பேராசிரியர் எம்.ஏ.நுஃமான். இதற்கு எஸ்.ஜே.தம்பையா வின் ‘பெளத்தம் காட்டிக்கொடுக்கப்பட்டதா?’ என்ற நூலை உதாரணம் காட்டுகின்றார். இந்நூல் இலங்கையில் தடைசெய்யப்பட்டிருந்தமையையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

“இதோ
எனது வெளிநடப்புக்கான பிரகடனம்.
நெடுஞ் சாலைகள்தோறும் நிறுவிய எனது
சிலைகளின் முன்னே
மனிதனின் நிணமும் குருதியும் எலும்பும்
படையல் செய்தோரே
இதோ ஏற்றுக்கொள்ளுங்கள்
எனது வெளிநடப்புக்கான பிரகடனம்.”

எனத்தொடங்கும் நீண்ட கவிதையை சு.வில்வரத்தினம் ‘அலை’ ஒன்பதாவது ஆண்டு நிறைவிதழில் (பங்குனி – 1995; பக். 733-737) எழுதியிருக்கிறார். இக்கவிதை புத்தரின் படிமத்தை பயன்படுத்தி பௌத்தம் இலங்கையில் பலியாளாக்கப்பட்டமையை அச்சொட்டாக படம்பிடித்துள்ளது. இப்படியான கவிதைகளை சிவசேகரம், ஹம்சத்வனி போன்ற ஈழத்து கவிஞர்கள் எழுதியிருந்தபோதிலும், கவிஞர் எம்,ஏ.நுஃமான் எழுதிய ‘புத்தரின் படுகொலை’ என்ற கவிதையே அதிக அவதானிப்புக்கு ஆட்பட்டது. ஈழத்து அரசியல் தளங்களில் அதிகம் எதிரொலித்த கவிதையாகவும், இனத்துவ நோக்கில் விமர்சனத்துக்கும் விகசிப்புக்கும் உள்ளான கவிதையாகவும் ஆகியிருக்கிறது. ஈழத்து கவிதை வரலாற்றில் அதிகமாய் வாசிக்கப்பட்டு, மிக அதிகமாய் களம் கண்ட கவிதை இதுவாகும். “‘புத்தரின் படுகொலை’ என்ற தலைப்பிலான கவிதை எண்பதுகளிலும் அதையடுத்து வந்த காலப்பகுதியிலும் அடிக்கடி நிகழும் கவிதா நிகழ்வுகளுக்குத் தெரிவு செய்யப்பட்ட கவிதைகளில் ஒன்றாக அமைந்திருந்தது” என்று ‘தங்கம்’ என்பவர் ‘பதிவுகள்’ இணையத்தில் எழுதியுள்ளார். 2023 மே -இல் ஏறாவூரில் (இலங்கை) நடைபெற்ற புத்தகக் கண்காட்சியின் போது, பேராசிரியர் நுஃமான் அவர்களின் படைப்புகள் குறித்த மதிப்பீட்டு உரையில் பேராசிரியர் அ.மார்க்ஸ் பேசிய சிலவரிகள் இங்கு எடுத்துரைக்கத்தக்கது. ஏனெனில், அ.மார்க்ஸ் நுஃமான் அவர்களின் சில கருத்தியலோடு முரண்கொண்டு விமர்சனங்களை முன்வைப்பவர். “நான் எழுதத்தொடங்கிய காலகட்டத்தில் பேராசிரியர் கைலாசபதியும், சிவத்தம்பி அவர்களும் எங்களுக்கு பெரிய அளவில் ஆதர்சமாக விளங்கினர். ஜார்ஜ் தாம்சனின் மாணவர்களான இந்த இருவரின் வெளிப்படையான இடதுசாரி மார்க்சிய அணுகல்முறை இதில் கூடுதல் பங்கு வகித்தது. இப்படியான பின்னணியில்தான் பலஸ்தீனக் கவிஞர்களின் அரசியல் கவிதைகளின் மொழிபெயர்ப்பின் ஊடாக இந்தியச் சூழலில் பலரையும் ஈர்த்தவராக இன்னொரு ஈழப் பேராசிரியரான நுஃமான் எங்களுக்கு அறிமுகம் ஆனார். ஈழப்போர் உச்சக்கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த காலம் அது. அப்போது எங்கள் கண்ணில் பட்ட “புத்தரின் படுகொலை” எனும் அவரது கவிதை எங்களைப் பெரிய அளவில் ஈர்த்த படைப்பாக இருந்தது. யாழ் நூலகம் எரிக்கப்பட்ட அந்தக் கவிதையின் ஊடாக நுஃமான் அவர்கள் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பெரிய அளவில் கவனத்திற்கு உரியவரானார். அதை ஒட்டி ‘அரசியல் எதிர்ப்புக் கவிதைகள்’ என்றொரு கவிதை வடிவமே அவரது பெயரில் தமிழில் அறிமுகமானது. கைலாசபதி, சிவத்தம்பி ஆகியோருடன் நுஃமானும் எங்களின் கவனத்தை ஈர்த்த ஓர் ஈழப்படைபாளி ஆனார்”.

இலங்கையில் சங்கிலித்தொடராக எரிந்துக்கொண்டிருந்த இனவெறித் தீ 1981 ஆண்டு தனது உச்சத்தை கொட்டித்தீர்த்தது. இது யாழ்பாணத்தில் முதலாவது மாவட்டசபை தேர்தல் பிரசராக் காலத்தில் நடந்தேறியது. தேர்தலுக்கு எதிரான தீவிரவாதிகளால் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் தியாகராஜா 1981 மே 24 அன்று கொல்லப்படுகிறார். தேர்தலுக்கு நான்கு நாட்கள் இருக்கையில் மூன்று பொலிசார் இளைஞர் சிலரின் துப்பாக்கி சூட்டில் பலியானார்கள். சொற்ப நேரத்தில் அடாவடித்தனங்கள் அரங்கேற்றப்பட்டன. கடைகள் நாசம் செய்யப்பட்டன. யாம்ப்பாணத்தின் முதல் தினசரிப்பத்திரிகையான ஈழநாடு பத்திரிகை அலுவலகம் கொளுத்தப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் வீடு சாம்பல் தரையானது. திருளள்ளுவர் சிலை, அவ்வையார் சிலை, சோமசுந்தரப்புலவர் சிலை முதலானவை உடைக்கபடட்டு துவம்சம் செய்யப்பட்டன. அடங்கா நாசாகார கொடூரங்கள் இரவிரவாக கொழுந்துவிட்டெரிந்த அந்த நள்ளிரவில் யாழ் நூலகத்தின் மேற்கு மூலையில் முதல் தீ வைக்கப்பட்டது. ஜூன் முதலாம் திகதி யாழ் நூலகம் முற்றாக தீக்கு இரையானது. 97, 000க்கும் மேற்பட்ட நூல்கள், அரிய ஆவணங்கள், பௌத்த நூல்கள், பாதுகாக்கப்பட்டுவந்த ஓலைச்சுவடிகள், ‘யாழ்பாண வைபவமாலை’யின் ஓரேயொரு மூலப்பிரதி முதலான அனைத்துமே தீயாகி - தீயே ஆகி தீரா இனவெறி பேயின் தாகத்தை தீர்த்துக்கொண்டிருந்தன. இந்த கொடுமையை பார்த்த யாழ் பல்கலைக்கழக பேராசியர் கா.சிவத்தம்பி, “தமது புலமைச் சொத்தின் ஒட்டுமொத்த அழிப்பின் அடையாளம்” என்றார். யாழ் பல்கலைக்கழகத்தில் கற்ற சிங்கள புலமையாளர் பேராசிரியர் சுனில் ஆரியரத்ன இந்த அவலத்தை இப்படி பதிவு செய்கிறார்: “ஆயிரக்கணக்கான வரலாற்று இதிகாசங்களைக் கொண்டவர்கள் தமிழ் மக்கள். மிகவும் கிடைத்ததற்கரிய நூல்களையும் கொண்டிருந்தது யாழ் நூலகம். நாங்கள் எங்களுக்குத் தேவையான நூல்களை பல்கலைக்கழக நூலகத்திலிருந்து பெற்றுக்கொண்ட போதும் அதைவிட மேலதிகமான தேவைகளுக்கு யாழ் பொது நூலகத்தையே நாடினோம். உலகில் எங்கும் கிடைத்திராத பல நூல்கள் ஆவணங்களும் பாதுகாப்பாக அங்கு இருந்தன. இனி அந்த நூல்கள் எந்த விலை கொடுத்தாலும் நமக்கு கிடைக்கப்போவதில்லை. புராண வரலாற்று தொல்லியல் சான்றுகளை எரித்து அழித்ததற்கு நிகர் இது.”

இக்கொடூரம் நிகழ்கையில் எம்.ஏ.நுஃமான் யாழ் பல்கலைக்கழக விரிவுரையார். “அந்த நூலகத்தை அடிக்கடி பயன்படுத்தியவர்களுள் நானும் ஒருவன். அடுத்த நாள் அந்த அழிவைப் பார்க்கச் சென்றேன். அது சகிக்க முடியாத பேரழிவு. அந்த அழிவுக்கு எனது உடனடியான எதிர்வினைத்தான் ‘புத்தரின் படுகொலை’ என்ற எனது கவிதை. நூலகத்தில் புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்த படிமம்தான் உடனடியாக என் மனதில் தோன்றியது” இது நுஃமான் அவர்களது பதிகை. புத்தர் பெருமானை படுகொலை செய்ததற்கு நிகரானது இந்த எரியூட்டல் நிகழ்வு என்பதை தான் கவிதையின் தலைப்பு உணர்த்துகின்றது. தலைப்பே அந்த பயங்கர அட்டகாசத்தின் அதிர்வை வெளிப்படுத்தி நிற்கிறது. இக்கவிதையில் கவிஞரின் புனைவியல் மனோபாவம் உணர்ச்சி ததும்பிய நாடக உரையாடலாக உயிர்ப்படைந்துள்ளது. தீவிர அர்த்தங்கள், இறுக்கம், பன்முகப்பொருள் நிரம்பிய கவிதையாக இது படைப்பாக்கம் பெற்றுள்ளது.

‘அணித்தா’ என்ற சிங்கள வார இதழில் காமினி வியங்கொட (தமிழில்: அஜாஸ் முஹம்மத்) எழுதிய கருத்தொன்று இங்கு கவனிக்கத்தக்கது. “இலங்கையின் அரச பாதுகாப்புப் பிரிவினால் யாழ் பொதுநூலகம் தீவைத்துக் கொளுத்தப்பட்ட பேரதிர்ச்சியை இலங்கையின் புகழ்பெற்ற ஒரு கவிஞரான பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் ஒரு கவிதையாக வடித்திருந்தார். அக் கவிதையின் தலைப்பு ‘புத்தரின் படுகொலை’. ஒருவர் கண்ட கனவாக அக்கவிதை புனையப்பட்டிருந்தது. அக்கவிதையில், பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட புத்தரின் உடல், எரிந்து சாம்பலாகிக் கிடந்த யாழ் பொதுநூலகத்தின் படிவரிசைகளில் அனாதையாகக் கிடக்கிறது. அதைக் கண்ணுற்ற அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் ‘நமது கொலைப்பட்டியலில் இவரது பெயர் இல்லையே... ஏன் இவரைக் கொன்றீர்கள்?’ எனக் கோபத்துடன் கேட்கிறார். அப்போது புத்தரைக் கொன்றொழித்த அதிகாரிகளில் ஒருவர் தன் செயலுக்கான நியாயமாக ‘இவரைக் கொல்லாமல் நாம் ஓர் ஈயெறும்பைக் கூடக் கொல்ல முடியாது என்பதாலேயே இவரைக் கொல்ல நேர்ந்தது’ என்கிறார்.

புத்தரின் தர்மத்தில் தடுக்கப்பட்டுள்ள முதலாவது கடுமையான விடயம் கொலை செய்தலாகும். இல்லறத்தில் இருப்போருக்காக புத்தர் அருளியுள்ள பஞ்சசீலத்தில் முதலாவதாகக் கொலைசெய்வது தடுக்கப்பட்டிருப்பதற்குப் பிரதானமான ஒரு காரணம் இருக்கிறது. கள்ளுண்ணாமையை முதலாவதாகவும் கொல்லாமையை ஐந்தாவதாகவும் வரிசைப்படுத்தி புத்தர்போதிக்காதது ஏன்? அவரது மொத்த தர்மத்தினதும் மூல சாரமே அகிம்சை என்பதால்தான் அவ்வாறு உயிர்கொலையை முதலாவது பாரிய குற்றமாக புத்தர் கருதியிருந்தார். ஒருவர் இன்னொருவர் மீது மனதாலும் வார்த்தையாலும் இம்சிக்கத் தொடங்கினால் அதன் முடிவு உயிர்க்கொலையில்தான் முடிவுறுகிறது. அதனால்தான் அன்புசெலுத்துதல் மற்றும் அகிம்சையை அடிப்படையாகக் கொண்ட புத்த தர்மத்தில் முதன்மை தர்மமாக் கொல்லாமை இடம் பிடித்துள்ளது. புத்தர் பரிநிர்வாணமடைந்த தினத்தன்றே பிக்கு ஒருவர் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தார். ஏனைய பிக்குகள் புத்தரின் இறப்பினால் கவலையில் மூழ்கியிருந்தபோது அவர்களை ஆசுவாசப்படுத்த நினைத்தார் மகிழ்ச்சியாக இருந்த அந்த பிக்கு. ‘இனி நமக்கு சட்ட திட்டங்கள் போட எவருமில்லை. நாம் இனி சுதந்திரமாக இருக்கலாம்’ என்று அவர்களுக்குச் சொன்னார். எம்.ஏ.நுஃமான் அவர்களின் கவிதையில் சொல்லப்படுவதும் இதுபோன்ற ஒரு செய்திதான். அந்த யாழ் பொதுநூலகத்தைத் தீவைத்துக் கொளுத்தியவர்கள், கொலைகளை செய்வதெனும் கடமையைத் தொடர்ந்து செய்துகொண்டு போவதற்கு முதலாவதாக அவர்கள் புத்தரைத்தான் கொல்ல வேண்டியிருந்தது! மகாநாம தேரர் புத்தரின் போதனைகைளை முற்றுமுழுதாக தலை கீழாக மாற்றி, முற்றிலும் மாறுபட்ட வித்தியாசமான புத்த சமயத்தை நிர்மாணித்ததோடு, அது 15 நூற்றாண்டுகளாக இலங்கையின் அரசியல் வழிநடாத்துவதற்கும் காலாக அமைந்துள்ளது.

“நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிருந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.   
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்த்து…!”  

யாழ்ப்பாண நூலகம் தீப்பற்ற வைக்கப்பட்டது பற்றி பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் எழுதிய சிறந்த கவிதை அவ்வாறுதான் ஆரம்பிக்கின்றது. புத்தரை அவ்வாறு ஏன் கொன்றனர்? என அமைச்சர்கள் கேட்கும்போது பொலிஸார்,

“இவரைச் சுடாமல்
ஓர் ஈயினைக் கூடச்
சுட முடியாது போயிற்று” என்கின்றனர்.

உண்மைதான். ஆயினும் உண்மையில் 6 ஆம் நூற்றாண்டில்தான் புத்தர் கொலை செய்யப்பட்டார். மகாநாம தேரர் புத்த சமயத்தை புதிதாக எழுதியது மட்டுமன்றி, அது யுத்தம் சார்ந்த புத்த சமயத்திற்கு பொருந்தக்கூடிய புதிய யுத்தம்சார் புத்தனையும் உருவாக்கியது. மகாவம்ச புத்தர் கௌதம (சித்தார்த்த) புத்தரில் முற்றிலும் மாறுபட்டவர்” (இணையம்).

பாசிஸ்டுகளின் அல்லது இனவெறி கொண்டலையும் அரசின் ஓர் கொடுமைமிகு அரச பயங்கரவாதம் தீமூட்டி கருக்கிய கோபத்தை ‘புத்தரின் படுகொலை’ கவிதை எவ்வித விட்டுக் கொடுப்புமின்றி உரத்துப் பேசியிருக்கின்றது. அரச காவலர்தான் நூலகத்திற்கு எரியூட்டினர் என்பது முகில் மூடாத உண்மை! ‘அரச காவலர் அவரைக் கொன்றனர்’ என்ற வரி இதனைதான் நிதர்ஷனப்படுத்துகின்றது. அடாவடித்தனங்கள் அமைச்சர்களின் தூண்டலினால் நடந்தேறின என்பது வெள்ளிடைமலை! இது கவிதையில் நுண்மையாகவும் வீரியமாகவும் வெடித்துள்ளது.

இரவில் இருளில்
அமைச்சர்கள் வந்தனர்.

'எங்கள் பட்டியலில் இவர்பெயர் இல்லை
பின் ஏன் கொன்றீர்?'
என்று சினந்தனர்.

'இல்லை ஐயா,
தவறுகள் எதுவும் நிகழவே இல்லை
இவரைச் சுடாமல்
ஓர் ஈயினைக் கூடச்
சுடமுடியாது போயிற்று எம்மால்
ஆகையினால்......’
என்றனர் அவர்கள்.

'சரி சரி
உடனே மறையுங்கள் பிணத்தை'
என்று கூறி அமைச்சர்கள் மறைந்தனர்.

கவிதையின் இறுதிவரிகள் அந்த கொடுமையின் கொடூரத்தை உயிர்பித்து, அதை நிகழ்தியவர்களுக்கு ‘நெருப்படி’ கொடுத்திருக்கிறது.

சிவில் உடையாளர்

பிணத்தை உள்ளே இழுத்துச் சென்றனர்.
தொண்ணூறாயிரம் புத்தகங்களினால்
புத்தரின் மேனியை மூடி மறைத்தனர்
சிகாலோகவாத சூத்திரத்தினைக்
கொழுத்தி எரித்தனர்.
புத்தரின் சடலம் அஸ்தியானது
தம்ம பதமும்தான் சாம்பரானது.

யாழ் நூலகம் எரியூட்டப்பட்டமை ‘சிகாலோகவாத சூத்திரத்தை கொழுத்தி எரித்தமை போன்றது’. அங்கு ‘அஸ்தியானதோ புத்தரின் சடலம்’! ‘சாம்பரானது தம்ம பதமும்தான்!’’ பௌதத்தின் பெயரால் நிகழ்த்தப்பட்ட இந்த அரசியல் கொடூரத்திற்கு எதிரான கோபமே இவ்வாறு கொதித்தெழுந்துள்ளது. அர்த்தச் செழுமைகொண்ட அவல நாடகமாக வியாபித்திருக்கிறது. அரச அடாவடித்தனங்களை நிகழ்த்துவோர் முதலில் புத்தரின் மெய்யியலை அல்லது அறத்தைதான் கொன்றுவிடுகின்றனர். இதுவே இக்கவிதையில் உணர்வின் நெருக்குதலாக கொட்டப்பட்டுள்ளது.. நூலக எரிப்பு நுஃமான் கவிதையில் புத்தரின் படுகொலையாகி காலத்தால் அழியாத அமரத்துவ கவிதையாயிற்று.

ஞானக்கூத்தன் எழுதிய ‘கீழ்வெண்மணி’ என்ற கவிதையுடன் இக்கவிதையை ஒப்புநோக்கிப் பார்க்கலாம். தமிழகத்தின் கீழ்த்தஞ்சை பகுதிகளில் ஒன்றான கீழ்வெண்மணி கிராமத்தில் 1968.12.25 அன்று நிலப்பிரபுக்களுக்கு எதிராக பல வருடங்களாக நடந்த பேராட்டத்தில், ஏற்றிய செங்கொடியை இறக்க மறுத்த காரணத்திற்காக அக்கிராமத்தில் உள்ள குழந்தைகளும் பெண்களுமாகச் சேர்த்து 44 பேர் ஒரு குடிசைக்குள் வைத்து உயிரோடு கொளுத்தப்பட்டனர். இந்த கொடூர படுகொலையை முன்நிறுத்தி ஞானக்கூத்தன் ‘எழுதிய கவிதை இது.

மல்லாந்த மண்ணின் கர்ப்ப
வயிறெனத் தெரிந்த கீற்றுக்
குடிசைகள் சாம்பற் காடாய்ப்
போயின

புகையோடு விடிந்த போதில்
ஊர்க்காரர் திரண்டு வந்தார்

குருவிகள் இவைகள் என்றார்
குழந்தைகள் இவைகள் என்றார்
பெண்களோ இவைகள்? காலி
கன்றுகள் இவைகள் என்றார்

இரவிலே பொசுக்கப்பட்ட
அனைத்துக்கும் அஸ்தி கண்டார்
நாகரிகம் ஒன்று நீங்க

உக்கிரமான சோகத்தையும் தவிப்பையுமே இக்கவிதை வெளிப்படுத்துகின்றது. நிலத்தை பேருயிராகக் கொண்ட தொடக்க வரிகளில் ஆற்றாமையும் ஒருவித கையறுநிலையும் வேதனையும் துக்கமும் கலந்து தொனிக்கின்றன. ‘புத்தரின் படுகொலை’ கவிதையின் தொடக்க வரிகளில் அந்த எரியூட்டலுக்கான இறைச்சிப்பொருள் படிமத்தையும் (புத்தரின் படுகொலை) அதன் சூத்திரதாரி யார் என்பதையும் (அரசு – அமைச்சர்கள் – பொலிசார்) உரத்துச் சொல்கின்றது. யாழ் நூலக எரிப்பு - புத்தர் பெருமான் சுடப்பட்டு இறந்தார் என அதிர்ச்சிதரும் படிமமாகின்றது. "ஒரு படிமம் என்பது கருத்தாக்கம் அல்ல. அது ஒரு சுடரும் கண்ணிக்கணு அல்லது கொத்து. அது ஒரு சுழல். அதிலிருந்து கருத்தாக்கங்கள் தொடர்ந்து பீறிட்ட வண்ணமிருக்கின்றன'' (The image is not an idea. It is a radiant node or cluster, it is a VORTEX from which ideas are constantly rushing) என்ற எஸ்ரா பவுண்டின் கூற்றுக்கு ஒப்ப, புத்தரின் படுகொலை – என்கிற படிமச் சுழலிலிருந்து கருத்தாக்கங்கள் தொடர்ந்து பீறிட்ட வண்ணமிருக்கின்றன. இப்படிமம் வெறும் உருவகத்தை மாத்திரம் சுட்டவில்லை. அதனுடன் இயைந்த விவரணைகளும் சேர்ந்தே படிமமாகிறது. யதார்த்தத்தின் உறவினையும் உட்கருத்தாய்க் கொண்டிருக்கின்றது. இப்படிமத்தை ஒரு சித்திரம் அல்லது சிற்பம் என்று சொல்வோமானால் அதுவே ஓர் உருவகத்தின் உருவகமாய் மாறி பரந்த பொருளாய் விகசிப்புகொண்டுள்ளது. இக்கவிதையில் தொனிப்பது ஆற்றாமை, கையறுநிலை, வேதனை கலந்த வெறுமையான தோற்றப்பாடு அல்ல. சிவில் உடை அணிந்த அரச காவலர் புத்தர் பெருமானைக் கொன்றனர் என்று சுட்டுவிரல் காட்டி பேசுகிறது. யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே புத்தரின் சடலம் குருதியில் கிடந்தது என்கிறது கவிதை. ‘குடிசைகள் சாம்பற் காடாய்ப் போயின’ என்று ஞானக்கூத்தனின் கவிதை சொல்லும் கையறுநிலையில் அல்லாமல் கைநீட்டி உசுப்பி உயிர்ப்போடு உரையாடுகின்றது நுஃமானின் கவிதை.

குருவிகள், குழந்தைகள், பெண்கள் என எல்லாவற்றின் எஞ்சிய சாம்பலைக்கொண்டு அடையாளப்படுத்திக் கொண்டார்கள் என்ற குரூரம் ‘கீழ்வெண்மணி’யின் காட்சியாக விரிகிறது. நுஃமானின் காட்சி யாழ்நூலக எரிப்பின் குரூரத்தை யதார்த்தப்பிரக்ஞையுடன் படம்பிடித்துள்ளது. இரவின் இருளில் அமைச்சர்கள் வந்து, எங்கள் பட்டியலில் இவர் பெயர் இல்லை; இவரை ஏன் கொன்றீர் என சினத்துடன் கேட்கின்றனர். தவறுதலாய் புத்தரை கொல்லவில்லை. இவரைச்சுடாமல் ஒரு ஓர் ஈயினைக் கூடச்சுட முடியவில்லை... பிணத்தை உடனே மறைக்கச் சொல்லி அமைச்சர்கள் மறைந்தனர். ஞானக்கூத்தன் கவிதையில் பதற்றம், கசப்பு, வெறுமை எல்லாம் சேர்ந்த உணர்வு உண்டாகின்றது. ஆனால் நுஃமான் கவிதையில் அந்த கோரத்தை நிகழ்த்தியவர்களின் செயற்பாடுகள் அப்பட்டமாய் கலைபடிமத்துடன் வெளிக்கொணரப்பட்டுள்ளது. ஈழத்து யதார்த்த கவிதைகளின் உச்சம் இக்கவிதை எனலாம்.

‘கீழ்வெண்மணி’ கவிதையின் ஈற்றடிகளில் ஆழ்ந்த வலியும் பெருமூச்சும் சுடுகாட்டை விட்டு நீங்கும்போது உருவாகும் தனிமையுணர்வும் பெருகிச்செல்வதை உணர முடிகிறது. நுஃமான் கவிதையின் ஈற்றடிகள் அந்த பயங்கரத்தை அதிர்ச்சியூட்டும் ஒரு கொடூர குறும்படமாய் காட்டியுள்ளது. சிவில் உடையாளர் பிணத்தை இழுத்துச் சென்றனர்; தொண்ணுராயிரம் புத்தகங்களினால் புத்தரின் மேனியை மூடி மறைத்தனர்; சிகாலோக சூத்திரத்தினைக் கொழுத்தி எரித்தனர்; புத்தரின் சடலம் அஸ்தியானது; தம்மபதமும்தான் சாம்பரானது – யாழ் நூலக எரிப்பின் ஆழ்ந்த வலியை வெறும் பெருமூச்சாய் வெளிப்படுத்தாமல் அந்த கொடுமையை வரலாற்று ஆவணமாய் கலைப்படிமமாக்கியுள்ளார் எம்.ஏ.நுஃமான். இரு கவிதைகளினதும் பாடுபுலமும் உணர்வுநிலையும் ஒன்றுதான். இரண்டிலும் கவித்துவம் நிரம்பப்பெற்றுள்ளன. ஆனால் ஞானக்கூத்தன் கவிதையில் மினுக்கமுறாத கருத்துச்செறிவு, நுஃமான் கவிதையில் பன்முக பரிமாணங்களில் பரிணமித்திருக்கிறது. கவிஞர் நுஃமான் அவர்களின் இத்தகைய கவித்துவ தனித்துவங்களை அறிந்திருந்ததால்தான் மஹாகவி 1968லேயே இப்படி பாடியிருக்கிறார்:

“அரிதே பிறக்கும் தமிழ்ப்பாட்டை
சும்மா இரண்டு சொல்லெடுத்துச்
சொல்லிக்காட்டும் சீராளா, சுடரும்
கவிதையை பிரளயம்போல்
சூழ எழுப்பும் பேராளா,
எம்.ஏ.நுஃமான், தமிழ்செய்யும்
இனிய நண்பா எழுகவே!”

‘புத்தரின் படுகொலை’ கவிதை முதலில் யாழ். பல்கலைக்கழக மாணவர் அறிப்புப் பலகையில் காட்சிபடுத்தப்பட்டது. பிறகு ‘அலை’ இதழ் 18இல் (ஆடி – புரட்டாதி 1981: 476) களம் கண்டது. சூட்டோடு சூட்டாக இக்கவிதை சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. சிங்கள முற்போக்கு சஞ்சிகையான ‘விவரண’ இக்கவிதையின் சிங்கள மொழிபெயர்ப்பை பிரசுரித்தது. அதன் ஒரு பிரதி கொழும்புப் பல்கலைக்கழக மாணவர் அறிவிப்புப் பலகையில் ஒட்டப்பட்டது. இதன் பின்னரான நிகழ்வுகளை பேராசிரியர் நுஃமான், “Ethnic Contlict and Literary Perception Tamil Poetry in Post-cololomed” என்ற ஆங்கில மொழிமூலமான ஆய்வில் விரிவாக விபரித்துள்ளார். “இக்கவிதைக்கான சிங்கள தேசியவாதிகளின் எதிர்வினை முக்கியமானது. இக்கவிதையினால் சினமுற்ற சிங்கள மாணவர் குழு ஒன்று அறிவிப்புப் பலகையை உடைத்து இக்கவிதையை அகற்ற முயன்றதாகவும் அது பின்னர் அகற்றப்பட்டதாகவும் நான் கேள்விப் பட்டேன். அதற்குச் சில மாதங்களுக்குப் பின்னர் பாராளுமன்றத்தில் நேரடி மொழி பெயர்பாளராக இருந்த எனது நண்பர் ஒருவர் சில தீவிரவாத பௌத்தர்கள் பாராளுமன்றத்தில் இக்கவிதைமீது தெய்வநிந்தனைக் குற்றப் பிரேரணை கொண்டுவர முயற்சிப்பதாகவும் என்னைச் சற்றுக் கவனமாக இருக்கும்படியும் எச்சரித்தார். ஆனால், ஏதோ ஒரு காரணத்தால் அவர்கள் அதில் வெற்றிபெற வில்லை. களனிப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய எனக்கு நன்கு அறிமுகமான ஒரு சிங்களப் பேராசிரியர் – அவர் ஒரு பௌத்த தீவிரவாதி அல்லர் – ஒருமுறை அவரை அப்பல்கலைக் கழகத்தில் சந்தித்தபோது அக்கவிதை பற்றிய தன் அதிருப்தியை என்னிடம் தெரிவித்தார். அவர் அக்கவிதையை வாசித்திருக்க வில்லை. அது பற்றி அவர் கேள்விப்பட்டது மட்டுமே. புத்தரின் படிமத்தை ஒரு பலியாளாகப் பயன்படுத்தியதே அவரது எதிர்ப்புக்குக் காரணமாகும்.

பென்குயின் வெளியிட்ட ‘இலங்கையில் புதிய எழுத்து’ என்ற நூலில் இக்கவிதையையும் சேர்த்துக் கொண்ட சிங்களவரான டி.சி.ஆர்.ஏ.குணதிலக்க இக்கவிதை பற்றிக் குறிப்பிடுகையில் ‘புத்தரின் படுகொலை என்ற இக்கவிதையில் நுஃமான் இத்தகைய இன வன்செயல்களின்போது மதம் எவ்வாறு பாதிக்கப்படுகின்றது என்பதை வெளிப்படுத்துகிறார்’ என்று குறிப்பிட்டார். யாழ்ப்பாணப் பொது நூலகத்தின் எரிப்பு ஒரு குறிப்பிட்ட இனக் குழுமத்தை மட்டும் பாதிக்கும் ஒரு குற்றம் என நான் ஒரு போதும் நினைக்கவில்லை. சுயபிரகடனம் செய்துகொண்ட ஒரு பெளத்த அரசின் காவல்படையினரால் மனித விழுமியங்களுக்கும் நாகரீகத்துக்கும் எதிராக இழைக்கப்பட்ட குற்றமாகவே நான் அதைக் கருதினேன். அவர்கள் பௌத்தத்தின் மூலதர்மத்துக்கு எதிராக இழைத்த குற்றம் அது. இந்தக் கவிதை அதைப் பற்றியதுதான். என்னைப் பொறுத்தவரை இன, மத அடையாளங்களுக்கு அப்பால் எல்லா மனிதர்களும் அக்கறை கொள்ள வேண்டிய விடயம் அது. ஆனால், இனத்துவ அடிப்படையில் பிளவுண்ட ஒரு சமூகத்தில் அது வேறுவிதமாக நோக்கப்பட்டது” (பார்க்க, மணற்கேணி; நவ.-டிச. 2014; பக்.54-58).

‘மகா காதனய...’ என்று பேராசிரியர் கார்லோ ஃபொன்சேகா (Prof. Carlo Fonseka) ஆங்கிலத்திலிருந்து சிங்களத்தில் மொழிபெயர்த்த இக்கவிதையை நான் வெளியிட்ட ‘மிஷ்காத்’ (2011) இதழில் பிரசுரித்திருந்தேன் (மிஷ்காத் இதழில் இக்கவிதை மும்மொழிகளிலும் (தமிழ், சிங்களம், ஆங்கிலம்) பிரசுரமானது). லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான கார்லோ ஃபொன்சேகா சிங்களவர்கள் மத்தியில் இக்கவிதையை பிரபலப்பத்தியவர். 1990களின் இறுதியில் ஃபொன்சேகா நுஃமான் அவர்களுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் கடந்த பத்தாண்டுகளில் தான் அத்தகைய ஒரு சக்திவாய்ந்த கவிதையை வாசிக்கவில்லை’ என்று குறிப்பிட்டிருந்தார். சிங்களவர் மத்தியில் இக்குற்றத்துக்கு எதிரான பிரக்ஞையைக் கிளறிவிடுவதற்கு அவர் இக்கவிதையை பயன்படுத்தினார். 1990களில் நடைபெற்ற பொதுத் தேர்தலின் போதும், ஜனாதிபதி தேர்தலின் போதும் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான எல்லா அரசியல் பிரச்சார மேடைகளிலும் அவர் இக்கவிதையை பயன்படுத்தினார். ஆனால் முன்னாள் பொலிஸ் மா அதிபர் எட்வர்ட் குணவர்தன எழுதிய “யாழ்ப்பாண நூலக எரிப்பு உட்பட மறக்க முடியாத குறிப்புகள்” (Memorable Tidbits Incloding the Jaffina Library Fire; 2013; P. 390) என்ற நூலை வாசித்தன் எதிரொலியாக ஃபொன்சேகா தன் கருத்தினை மாற்றிக்கொண்டார். எட்வர்ட் குணவர்தன எழுதிய நூலின் வெளியீட்டு நிகழ்வு 2013.01.19 அன்று கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நிகழ்ந்தது. அங்கு சிறப்புப் பேச்சாளராக கலந்துக்கொண்ட ஃபொன்சேகா ஆற்றிய உரை, அவரது மனமாற்ற கருத்தியலை துல்லியமாக காட்டிற்று.

“எட்வர்ட் குணவர்தன யாழ் நூலகத்தை எரித்தது புலிகளே என்கிறார். சிங்களவர்கள் காட்டுமிராண்டிகள் என்று உலகத்திற்கு புனைவதற்காக செய்யப்பட்டது. முழு உலகமும் புலிகளின் பிரசாரத்தை நம்பியது. யாழ் நூலக எரிப்பின் பின்னால் இருந்த அந்த வில்லன் காமினி திசாநாயக்க என்றே நானும் உறுதியாக நம்பியிருந்தேன். எட்வர்ட் குணவர்தனவின் இந்த நூலை வாசித்தறியும் வரை யாழ் நூலகத்தை எரித்தது காமினி திசாநாயக்க என்றே நம்பியிருந்தேன். 1993ஆம் ஆண்டு யாழ் நூலகத்தைப் பற்றிய “morder“ என்கிற கவிதையை வாசித்தேன். அது Ceylon Medical Journalஇல் வெளியாகியிருந்தது. அது பேராதனைப் பல்கலைக்கழக மூத்த விரிவுரையாளர் எம்.ஏ.நுஃமான் எழுதிய ஆங்கில மொழிபெயர்ப்பு. அந்த கவிதை என்னை மிகவும் பாதித்தது. (என்று கூறிவிட்டு அதன் ஆங்கில வடிவத்தை வாசிக்கிறார்)

அக்கவிதையை நான் என் தாய் மொழியான சிங்கள மொழிக்கு மொழிபெயர்த்தேன். 1994ஆம் ஆண்டு தேர்தலில் பிரதான போட்டியாளர்களான சந்திராகாவுக்கும் காமினி திசாநாயக்காவுக்கும் இடையிலான போட்டியில் நான் சந்திரிகாவை ஆதரித்து பிரச்சாரம் செய்தேன். ஏறத்தாழ முப்பதுக்கும் மேற்பட்ட கூட்டங்களில் எனது உரையின் இறுதியில் இந்தக் கவிதையை சிங்களத்தில் வாசித்து முடித்தேன். (சிங்களத்தில் அதே கவிதையை வாசிக்கிறார்). 23.10.1994 அன்று பேருவளையில் இருந்து எங்கள் பிரச்சாரங்கள் ஆரம்பமாகி பயாகல, வாதுவை, பாணந்துறை, மொரட்டுவை, கிருலப்பனை என தொடர்ந்தது. அங்கெல்லாம் அந்தக் கவிதையை வாசித்தேன். எட்வர்ட் குணவர்தனவின் நூலை வாசித்ததன் பின்னர் எப்பேர்ப்பட்ட குற்றத்தை நான் விளைத்திருக்கிறேன் என்று உணர்ந்துகொண்டேன். இப்போது நான் அதற்கு பிராயச்சித்தமாக திருமதி ஶ்ரீமா திசாநாயக்க, நவீன் திசாநாயக்க ஆகியோரிடம் நான் செய்த தவறுக்காக மன்னிப்பைக் கேட்டுக் கொள்கிறேன்”.

ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரியான டான்ஸி செனவிரத்தின, “யாழ்நூலக எரிப்பில் தொடர்புள்ளதாக குற்றச்சாட்டப்பட்டிருந்த ஒரு பொலிஸ் அதிகாரியொருவரே அந்த சம்பவம் பற்றி அறிக்கை எழுதுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடிகிறது” என்று சண்டே டைம்ஸ் பத்திரிகையில் எழுதினார். நூலக எரிப்பினை நேரில் கண்ட சாட்சியான அன்றைய பொலிஸ் அதிகாரி கே.கிருஷ்ணதாசன், எட்வர்ட் குணவர்த்தனவுக்கு எழுதிய பகிரங்க கடிதத்தில் (கடிதம் ஊடகங்களில் பிரசுரமாகியுள்ளது) நடந்த சம்பங்களை பிரக்ஞைபூர்வமாக விளக்கியுள்ளார். எட்வர்ட் குணவர்த்தனவின் கருத்துக்களை முழுமையாக நிராகரித்துள்ளார். சந்தரேசி சுதுசிங்க எழுதிய “எரித்த இறக்கைகள்” (burnt wings) என்ற நூலில் குற்றவாளிகளாக அரசாங்கத்தையும் அரசியல் வாதிகளையும் சாடியுள்ளார் (விரிவான விபரங்களுக்காக பார்க்க, என்.சரவணன்; ‘யாழ் நூலகம்: பிரபாகரனின் ஆணையில் புலிகளால் எரிக்கப்பட்டதா?’; காக்கைச் சிறகினிலே; ஜூலை 20215; பக். 05-15).

‘சியத டிவி’ (Siyatha TV) என்ற சிங்கள தொலைக்காட்சி செய்தியில் ஒலி – ஒளிபரப்பாகும் ‘டெலிவகிய’ (Telewakiya) என்ற நிகழ்ச்சி அரச செயற்பாடுகளை மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றது. லால் மாவலகே (Lal Mawalage) என்ற ஊடகவியலாளர் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றார். ‘இருக்கின்ற எல்லா வற்றையும் கடுமையாக விமர்சித்தல்” என்ற கார்ல் மார்க்ஸின் மெய்யியல் பாணியில், உடநிகழ்கால அரசியல் போக்குகளை மாவலகே விமர்சனப் பிரக்ஞையுடன் படம்பிடித்துக்காட்டுகிறார். இவர் முன்பொருமுறை அரச அடாவடிக்காரர்களால் கடுமையாக தாக்கப்பட்டிருக்கிருக்கிறார். தற்போதும் அரசபயங்கரவாதம் அவருக்கெதிராக விசாரணைகளை முடக்கிவிட்டுள்ளது. நேர்மையாகவும் நேர்த்தியாகவும் - வரலாற்று ரீதியான கருத்தியல்களோடும் உலகலாவிய விவரணங்கயோடும் ஆய்வு நுட்பங்களோடும் இந்த விமர்சனத்தினை மாவலகே மேற்கொள்கிறார். அண்மைய (28.11.2023; மாலை 6 மணிக்கு) ‘டெலிவகிய’ நிகழ்ச்சியில் யாழ் நூலக எரிப்புக்கு ஜேஆர் அரசே பொறுப்பு என்பதை மிக ஆணித்தரமாக எடுத்துரைத்தமை இங்கு பதியத்தக்கது.

புத்தரின் படுகொலை’ கவிதையை தமிழ் வாசகர்களும், விமர்சகர்களும் நன்கு வரவேற்றனர். ‘மரணத்துள் வாழ்வோம்’ என்ற எதிர்ப்புக் கவிதை தொகுதியில் (1985: 18) சேர்க்கப்பட்டது. பல சஞ்சிகைகளிலும் இணைய இதழ்களிலும் மீள்பிரசுரம் கண்டது. தமிழ் புலமையாளர் சுரேஷ் கனகராஜா இக்கவிதையை வித்தியாசமான இனத்துவ கோணத்தில் விமர்சித்திருந்தார். டி.சி.ஆர்.ஏ.குணதிலக்கவின் ‘இலங்கையில் புதிய எழுத்து’ தொகுதி பற்றிய விமர்சனத்தில் கனகராஜா பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்: “இத்தொகுப்பில் தமிழ்த தேசியவாதமும் அதன் விளைவான சுய நிர்ணயத்துக்கான ஆயுதப் போராட்டமும் பற்றிய படைப்புகள் இடம்பெறவில்லை. இத்தொனிப்பொருளுக்கு அருகில் வரக்கூடியது 1980ல் சிங்கள பாதுகாப்புப் படையினரால் யாழ்ப்பாண பொது நூலகம் எரிக்கப்பட்டதற்கு எதிர்வினையாக ஒரு முஸ்லிம் எழுத்தாளரான நுஃமானின் ‘புத்தரின் படுகொலை’. ஆனால் இந்தக் கவிதை அரச ஆதரவு பெற்ற இத்தகைய தொடர்ச்சியான வன்முறை சைவத் தமிழர் மத்தியில் பிறப்பித்திருந்த உணர்வுகளை நம்பகத் தன்மையுடன் வெளிப்படுத்தவில்லை (அவ்வாறு வெளிப்படுத்தும் என்றும் எதிர்பார்க்க முடியாது):.

இந்த விசனிக்கத்தக்க விமர்சனதுக்கான நுஃமானின் எதிர்வினை வருமாறு, “கிறிஸ்தவத் தமிழர்களைக் கூட வெளி ஒதுக்கும் கனகராஜாவின் சைவத் தமிழ்த் தேசியவாத நோக்கு சுவாரஸ்சியமானது. இந்த நோக்கு கவிதையின் உள்ளடக்கத்தை அன்றி கவிஞரின் இனத்துவ அடையாளத்தை அடிப்படையாகக் கொண்டது. ஒரு சைவத் தமிழரைப் போல ஒரு முஸ்லிம் எழுத்தாளரும் ஒரேவகையான பலியாளாக இருக்க முடியும் என்பதை அவரால் சிந்தித்துப் பார்க்க முடியவில்லை. அவரைப் பொறுத்தவரை உணர்வின் நம்பகத் தன்மை கவிஞரின் இனத்துவத்தில் தங்கியுள்ளது”.

சோபா சக்தி நேர்காணலொன்றில் (2011) தெரிவித்த கருத்தொன்று இங்கு எடுத்துரைக்கத்தக்கது: “1986 காலப்பகுதிகளில் விடுதலை அரசியலில் தலைகீழ் மாற்றம் ஏற்படுகின்றது. போராட்டத்துக்குள் சனநாயகம் குறித்த கேள்விகள் எழுகின்றன. விடுதலைப் போராட்டம் அதிகார மையமாகச் சிதைவுற்றபோது அதுவரை ஈழப் போராட்டத்தோடு தம்மை இணைத்திருந்த பல கவிஞர்கள் போராட்டத்திலிருந்து விலகிச் செல்கிறார்கள். அவர்களது பார்வைகளும் மாறுகின்றன. யுத்தத்திற்கு எதிராகவும் அதிகாரத்திற்கு எதிராகவும் அவர்களது குரல்கள் எழுகின்றன. இதுதான் முதன்மையான அரசியலாகவும் இதன்வழியே அரசியல் தத்துவார்த்தக் கேள்விகள் நோக்கியும் அவர்கள் கவிதைகளை எழுதியவாறே நகர்ந்தார்கள். அழுத்தங்கள் அதிகரித்தபோது சிவரமணி தனது பிரதிகளை எரித்துவிட்டு தற்கொலை செய்தார். செல்வி எழுதியதற்காக வதைக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். யாழ் நூலகம் எரியூட்டப்பட்டதை ‘புத்தரின் படுகொலை’ என எழுதிய நுஃமான் இஸ்லாமியர் என்ற காரணத்தால் யாழ்ப்பாணத்திலிருந்தே விரட்டப்பட்டார்..... இத்தகைய மறுத்தோடிகளின் கவிதைகளையே ஈழத்து யுத்தக்காலக் கவிதைகளின் ஆன்மா என நான் சொல்வேன்”.

“பேரினவாத ஒடுக்கு முறையின் பெருந் தீ யாழ்ப்பாணத்தைத் தீண்டி அழித்த போது அந்தத்தீயின் வெக்கையை வாங்கி உமிழ்ந்த ஒரு குரலாக நுஃமான் இருந்தவர். அவர் எழுதிய 'புத்தரின் படுகொலை'யின் காத்திரம் என்றும் நூலகம் திருத்தியமைக்கப்பட்ட பின்னும் - கலாசாரப் படுகொலையின் ஆவணத் தன்மையும் கலைப் படிமமும் இணைந்த ஒன்றாக நிலைத்திருக்கும் தன்மையுடையது. அப்படியான கவிதைகளைத்தந்த நுஃமான் தனது சமூகத்துக்கு இழைக்கப்பட்ட கொடுமை பற்றிப் பேசியிருந்தால் அது ஒன்றும் குறுகிய தேசியவாதத்துக்கு உரிய குரலாக அடையாளம் கண்டு கொள்ளப்பட்டிருந்திருக்க நியாயமில்லை. ஆயினும் வடபுலத்து முஸ்லிம் மக்களின் துன்பியலை ஏனோ தனது கவிதைகளின் பாடு பொருளாக்காமல் விட்டு விட்டார். யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம் மக்கள் துடைத்து வழித்து வெளியேற்றப்பட்ட போது நொந்து போன எம் போன்ற படைப்பாளிகளின் நோக்காட்டின் அடையாளமாக முகம் பதித்திருந்தவர் நுஃமானே” என்று முல்லை முஸ்ரிபாவின் ‘இருத்தலுக்கான அழைப்பு’ (2003) கவிதைத் தொகுப்பின் முன்னுரையில் கவிஞர் சு.வில்வரத்தினம் தன்னுடைய ஆதங்கத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

காலி வீதியில், நேற்றைய மாலையும் இன்றைய காலையும், துப்பாக்கி அரக்கரும் மனிதனின் விதியும், புத்தரின் படுகொலை முதலான கவிதைகளை உடனடி அதிர்வின் எதிரொலியாக எழுதியது போல, “ஒரு பலஸ்தீனக் குரல்” என்ற கவிதையை அண்மையில் (01. 11. 2023) எழுதியிருக்கிறார். இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் சொல்கிறார்: ‘We are fighting with human animals’. இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு நாட்டுமக்களுக்கு ஆற்றிய உரையில் சொல்கிறார்: ‘Israel is fighting with the enemies of civilization … this war is between forces of civilization and the forces of barbarism’. இக்கவிதை அதற்கு ஒரு எதிர்வினை என்கிறார் கவிஞர் எம்.ஏ. நுஃமான். நெடிய அந்த கவிதையின் ஒரு பகுதியுடன் இந்த நுண்ணய ஆய்வை நிறைவு செய்கின்றேன்.

நீ சொல்கிறாய்
நாங்கள் விலங்குகளுடன் போரிடுகிறோம்என்று
அவர்களை அப்படித்தான் நடத்தவேண்டும் என்றுசொல்கிறாய்
நீ அப்படித்தான் சொல்வாய்
உன் மூளை மரத்துவிட்டது
உன் இதயம் காய்ந்துவிட்டது

விலங்குகளை அவமதியாதே
விலங்குகள் மனிதரின் தோழர்கள்
விலங்குகள் இல்லாத உலகில்
நீயும் நானும் வாழமுடியாது
விலங்குகளை அவமதியாதே

விலங்குகள் ஆக்கிரமிப்பதில்லை
விலங்குகள் குண்டுவீசி மனிதரைக்கொல்வதில்லை
விலங்குகள் ஒரு தேசத்தை அபகரிப்பதில்லை
விலங்குகள் மனிதரைத்
தங்கள் வீடுகளைவிட்டுத் துரத்துவதில்லை
கிராமங்களை நிர்மூலமாக்குவதில்லை
விலங்குகள் மனிதரை அகதிகளாக்குவதில்லை
விலங்குகளை அவமதியாதே

நீ யார் என்று யோசித்துப்பார்
நீ எங்கிருந்து வந்தாய்
எப்படி இங்கு வந்தாய்
என்பதை எண்ணிப்பார்

எப்படி எங்கள் மண்ணில் காலூன்றினாய்
எப்படி எங்களைத் துரத்தினாய்
எப்படி எங்கள் கிராமங்களை அழித்தாய்
எப்படி எங்களைக் கொன்றுகுவித்தாய்
எப்படி எங்களை அகதிகளாக்கினாய்
எப்படி எங்களைச் சிறையில் அடைத்தாய்
என்பதை எண்ணிப்பார்

உன் மனச்சாட்சி மடிந்துவிட்டது
உன் இதயம் காய்ந்துவிட்டது
உன் மூளை மரத்துவிட்டது
நீ எங்களைப் பயங்கரவாதி என்கிறாய்
மனித விலங்குகள் என்கிறாய்
விலங்குகளை அவமதியாதே

எங்கள் அமைதியைக் குலைத்தவன்
நீ இல்லையா
எங்கள் தேன்கூட்டைக் கலைத்தவன்
நீ இல்லையா
எங்கள் ஒலிவமரங்களை அழித்தவன்
நீ இல்லையா

எங்களைத் துப்பாக்கி தூக்கவைத்தவன்
நீ இல்லையா

எங்கள் குழந்தைகளைக் கல் பொறுக்கவைத்தவன்
நீ இல்லையா

இப்போது நீ எங்களைப் பயங்கரவாதிஎன்கிறாய்
மனித விலங்குகள் என்கிறாய்
விலங்குகளை அவமதியாதே

நீ சொல்கிறாய்
நாங்கள் நாகரீகத்தின்எ திரிகளுடன்
போரிடுகிறோம் என்று
இது நாகரீகசக்திகளுக்கும்
காட்டு மிராண்டிகளுக்கும்
இடையிலான போர் என்று சொல்கிறாய்
இந்த நூற்றாண்டின் பெரியநகைச்சுவை
இல்லையா இது

நான் சொல்லவேண்டியதை நீ சொல்கிறாயா
சாத்தான் வேதம் ஓதுகிறதா
ஹிட்லருக்குப் பிறகு
அவன் பாதையில் செல்லும்
மனிதநாகரீகத்தின் மோசமானஎதிரி
நீ இல்லையா

உலகின் பெரியபயங்கரவாதிகள்
உன்னை ஆதரிக்கிறார்கள்
ஆனால் உன்கண்களைத் திறந்துபார்
நீதி உணர்ச்சிகொண்ட மக்கள்
உலகெங்கும் உனக்கெதிராகக்
கிளர்தெழுகிறார்கள்
நீதி உணர்ச்சிமிக்க உன்சொந்த மக்களே
உனக்கெதிராகக் கிளர்ந்தெழுகிறார்கள்
உங்கள் முடிவு நெருங்கிவிட்டது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.