கல்லூரி இரண்டாமாண்டு படிக்கையில் நான் மலையாளத்தில் முட்டத்து வர்க்கியில் தொடங்கி வைக்கம் முகமது பஷீரின் தீவிர வாசகன் ஆகியிருந்தேன். மலையாள இலக்கியமேதைகள் பலரை வாசித்துவிட்டிருந்தேன். (முதல் மலையாள நாவல் முட்டத்து வர்க்கியின் ஈந்தத் தணல்)

ஆங்கிலத்தில் ஜேம்ஸ் ஹேட்லி சேஸ் நாவல்களை பள்ளி இறுதி நாட்களில் வாசிக்க தொடங்கி (முதல் ஆங்கில நாவல் Knock Knock! Who is there?) அலக்ஸாண்டர் டூமா வழியாக தாக்கரேயை வந்தடைந்தேன். டபிள்யூ டபிள்யூ ஜேக்கப்ஸ், ஜார்ஜ் எலியட் உட்பட எனக்குப் பிரியமான படைப்பாளிகளை கண்டடைந்துவிட்டிருந்தேன். தல்ஸ்தோயின் புத்துயிர்ப்பு நான் அவருடைய படைப்புகளில் வாசித்த முதல் நாவல். கான்ஸ்டன்ஸ் கார்னெட்டின் ஆங்கில மொழியாக்க வடிவம். அதற்கு முன் வாசித்தது டி.எச்.லாரன்ஸின் Sons And Lovers.

ஆனால் தமிழில் அதிகபட்சமாக நான் அறிந்திருந்த இலக்கிய எழுத்தாளர்கள் ஜெயகாந்தன், தி.ஜானகிராமன் இருவருமே. சுந்தர ராமசாமி, க.நா.சு உட்பட எவருமே அறிமுகமில்லை. அப்போது குங்குமம் இதழில் பாவை சந்திரன் புதுமைப்பித்தனின் ஒரு கதை (மனித இயந்திரம்) மறுபிரசுரம் செய்து கூடவே புதுமைப்பித்தன் யார் என்னும் குறிப்பையும் அளித்திருந்தார். அவ்வாறுதான் புதுமைப்பித்தன் எனக்கு அறிமுகமானார்.

தமிழ் நவீன இலக்கியத்தின் தலைமகனை, நாம் உலகுநோக்கி தயங்காமல் வைக்கத்தக்க மேதையை ஓர் இலக்கியவாசகன் பெயர்கூட தெரிந்துகொள்ள முடியாத சூழலே அன்று நிலவியது.

இன்று நாம் காணும் இலக்கியம் சார்ந்த பொதுச்சித்திரம் என்பது மூன்று முன்னகர்வுகளால் உருவானது.

ஒன்று, ஐராவதம் மகாதேவன் (தினமணி தமிழ் மணி) மாலன் (தமிழ் இந்தியா டுடே) வாஸந்தி (தமிழ் இந்தியா டுடே) கோமல் சுவாமிநாதன் (சுபமங்களா) ஆகிய ஆசிரியர்கள் உருவாக்கிய இடைநிலை இதழ்களும் அவற்றில் நிகழ்ந்த இலக்கிய அறிமுகமும்.

இரண்டு, 1999 முதல் தொடர்ச்சியாக இணைய ஊடகம் உருவாகி வந்ததும், அதன் வழியாக மலிவாக இலக்கியவாசகர்கள் தங்களை கண்டடைந்ததும், ஒருவரோடொருவர் உரையாடியதும். திண்ணை, பதிவுகள் போன்ற இணைய இதழ்களுக்கும், தமிழ்மணம் போன்ற வலைப்பதிவுத் திரட்டிகளுக்கும் அதில் பெரும்பங்களிப்பு உண்டு.

மூன்று, புதிய இதழ் மற்றும் ஊடக வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு விவாதங்கள், கட்டுரைகள் வழியாக இலக்கிய அறிமுகம் நிகழ்த்திய என்னை போன்ற இலக்கியவாதிகள். இன்று திரும்பிப் பார்க்கையில் நான், எஸ்.ராமகிருஷ்ணன், பாவண்ணன் ஆகிய மூவருமே அதில் பெரும் பங்களிப்பாற்றியிருக்கிறோம் என்று படுகிறது. முப்பதாண்டுக்காலம் சலிக்காமல் அதில் உழைத்துள்ளோம்.

இந்த இலக்கியப் பிரச்சாரத்தில் என் பங்கு முதன்மையானது என்று சொல்லத்துணிவேன். பல்லாயிரம் பக்கங்கள் எழுதியுள்ளேன். தமிழின் அத்தனை இலக்கிய ஆசிரியர்களைப் பற்றியும் விமர்சனக் கட்டுரைகள் எழுதி நூல்களாக்கியுள்ளேன். இலக்கிய அடிப்படைகள் பற்றி நூல்கள் எழுதியிருக்கிறேன். இலக்கிய அறிமுக நூல்கள் எழுதியிருக்கிறேன். இலக்கிய வரலாறு எழுதியிருக்கிறேன். இவை நவீன ஊடகங்கள் வழியாக புதிய தலைமுறை ஒன்று இலக்கியத்திற்குள் நுழைய வாய்ப்பிருந்த காலகட்டத்தில் அவர்களின் தேவைக்கேற்ப உருவான எழுத்துக்கள். இவை இல்லையேல் இந்த புதிய அலை உருவாகியிருக்காது.

க.நா.சு ஓர் இலக்கிய இயக்கத்தை உருவாக்கும் கனவைக் கண்டார். சுந்தர ராமசாமி, பிரமிள் உட்பட அக்கனவை பலர் முன்னெடுத்தனர். ஆனால் க.நா.சு அல்லது பிறர் இலக்கிய அறிமுகம் அல்லது விமர்சனமாக எழுதிய மொத்தப் பக்கங்களைவிட அதிகமாக நான் இலக்கிய இயக்கத்தை உருவாக்கும் பொருட்டு எழுதியிருக்கிறேன். தொகுக்கப்படாத கடிதங்களையும் இணையதளங்களில் எழுதிய விவாதக்குறிப்புகளையும் எல்லாம் சேர்த்துக்கொண்டால் என் எழுத்தின் அளவு தமிழில் பேசப்பட்ட இலக்கியம் சார்ந்த விவாதங்களில்  ஒட்டுமொத்தத்தில் பாதிக்குமேல் இருக்கும்.

ஏனென்றால் நான் இதை ஒரு ‘மிஷன்’ ஆக எடுத்துக்கொண்டேன். பழையகால கிறிஸ்தவ மதபோதகர்கள் போல வாழ்நாள் பணியாக தலைக்கொண்டேன். இதன் பொருட்டு தனிவாழ்க்கையின் வெற்றிகள் பலவற்றை தவிர்த்தேன். இது என் பணி என்று அன்றுமின்றும் எண்ணிச்செயல்படுகிறேன். இன்று ஒரு மெல்லிய சாதனையுணர்வை அடைகிறேன்.

ஆனால் எனக்கு நவீன தமிழிலக்கிய அறிமுகத்தை அளித்தவர் கமல்ஹாசன் என ஒரு உரையில் நான் சொன்னபோது கொதிப்படைந்த பலர் உண்டு. அவர்களுக்கு இலக்கிய அறிமுகமே இரண்டாயிரத்திற்கு பிறகு அமைந்திருக்கலாம் – பெரும்பாலும் என் வழியாக. அவர்கள் ஒத்துக்கொள்ளாமலிருக்க ஆணவமோ அரசியலோ தடைநின்றாலும்கூட. அன்றைய சூழல் அவர்களுக்குத் தெரியாது.

அன்றைய வாசிப்புச் சூழலில் மூன்று போக்குகள் இருந்தன. ஒன்று, வணிகக் கேளிக்கை எழுத்தின் உலகம். அது அன்று மிகப்பிரம்மாண்டமானது. இன்று அதை பலரும் கற்பனை செய்யவே முடியாது. அன்றைய வணிக எழுத்து நட்சத்திரங்கள் திரைநடிகர்களைப் போல புகழ்மிக்கவர்கள். சுஜாதா அதில் ’சூப்பர் ஸ்டார்’. இணையாக பாலகுமாரன். புஷ்பா தங்கத்துரை, ராஜேந்திர குமார், ஸ்டெல்லா புரூஸ் ஆகியோர் அடுத்த கட்டத்தில் இருந்தனர். சாண்டில்யன், பி.வி.ஆர், ஜெகசிற்பியன் ஆகியோர் மவுசு இழக்காமலிருந்தனர். ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா மேலெழுந்து வந்துகொண்டிருந்தார்கள்.

பெண் எழுத்தாளர்கள் அன்று பெரும்புகழுடனிருந்தனர். ஏனென்றால் அன்றைய பெண்களில் பலருக்கும் வாசிப்பே பொழுதுபோக்கு. சிவசங்கரி, வாஸந்தி, இந்துமதி ஆகியோர் முதன்மையாக வாசிக்கப்பட்டார்கள். லக்ஷ்மி புகழ் குன்றாமல் நீடித்தார். ரமணி சந்திரன், விமலா ரமணி, அனுராதா ரமணன் போன்றவர்கள் அப்போதுதான் எழுந்து வந்துகொண்டிருந்தார்கள்.

அன்றைய வணிக எழுத்தையே பல பகுதிகளாக பிரிக்கலாம். ராணி, தேவி வகை இதழ்களும் அவற்றிலெழுதும் அமுதா கணேசன், குரும்பூர் குப்புசாமி வகை எழுத்தாளர்களும் ஓர் உலகம்  கல்கி, கலைமகள் இதழ்களும் அவற்றில் எழுதும் சரஸ்வதி ராம்நாத், கமலா சடகோபன், கண்ணன் மகேஷ் வகை எழுத்தாளர்களும் இன்னொரு வகை. குமுதம், சாவி போன்ற இதழ்களும் அவற்றில் எழுதிய சுஜாதா, பாலகுமாரன் வகையும் மூன்றாம் களம்.

குமுதம் ஓரு மையஅலையாக அன்று இருந்தது. 1960களிலேயே குமுதம் தன் முதன்மையை அடைந்துவிட்டாலும் எண்பதுகளே அதன் பொற்காலம். கலைமகள், கல்கி வகை செல்வாக்கிழந்து கொண்டிருந்தது. ஏனென்றால் அவற்றின் பிராமணிய நெடி முந்தைய தலைமுறைக்குரியது. கல்கி தன்னை பழைய விகடனாக மாற்றிக்கொண்டிருந்தது. ராணி, தேவி வகையும் செல்வாக்கிழந்து கொண்டிருந்தன என்றாலும் அது கண்ணுக்குத் தெரியவில்லை. ஏனென்றால் அவை குறைந்தபட்ச எழுத்தறிவுகொண்ட பெண் வாசகர்களுக்குரியவை. ஆனால் பள்ளிக்கல்வி முடித்த அடுத்த தலைமுறைப் பெண் அன்று உருவாக ஆரம்பித்திருந்தாள்.

குமுதம் இரண்டு  கலவைகளால் ஆனது. பாலியல் சார்ந்த பேச்சுக்களின் எல்லையை கொஞ்சம் கொஞ்சமாக மீறிக்கொண்டே இருந்தது. ஒவ்வொரு ஆறுமாதமும் ஓர் அதிர்ச்சி அலை கிளம்பும். மூன்று அலைகளை நினைவுகூர்கிறேன். உஷாநந்தினியின் மார்பை ஜெய்சங்கர் கவ்வும் ஒரு படத்தை போட்டு ’கடிநாயகன் கடிநாயகி’ என ஒரு தலைப்பு அளிக்கப்பட்டபோது ஒரு கொந்தளிப்பு உருவானது. அதன்பின் கிசுகிசு என்னும் தலைப்பில் ஒரு பத்தி (ரா.கி.ரங்கராஜன் எழுதியது) வெளிவந்து அதில் நடிகர் நடிகைகளின் அந்தரங்கச் செய்திகள் வெளியிடப்பட்டபோது ஓர் அதிர்வலை உருவானது. ஏனென்றால் அதுவரை அதை மஞ்சள் பத்திரிகைகள் மட்டுமே செய்து வந்தன. அதன்பின் ஜெயராஜ் வரைந்த ஓர் ஓவியத்தில் இளம்பெண்ணின் அக்குள் மயிர் வரையப்பட்டிருந்தது அதேபோல அலையொன்றை கிளப்பியது.

இரண்டாவது அம்சம், குமுதத்தின் நகைச்சுவை. அதுவரையிலான வணிக இதழ்களில் இருந்த ‘ஜோக்கு’களுக்கு மாறானது அது. உண்மையிலேயே ஒரு படைப்பூக்கம் அதில் இருந்தது. ஒருவகையில் சுஜாதாவுக்கு அதில் எஸ்.ஏ.பி,  ரா.கி.ரங்கராஜன் ஆகியோர்தான் முன்னோடிகள். உதாரணம் திருக்குறள் முனுசாமியின் மொழிநடையில் தீர்க்கசுமங்கலி சினிமாவுக்கு எழுதப்பட்ட விமர்சனம். நையாண்டி கலந்த இதழியல் உத்திகள் குமுதத்தில் இருந்தன.

குமுதத்தை பிரதியெடுத்த இதழ்கள் வந்து அவற்றுக்கிடையே கடும்போட்டி நிகழ்ந்தது. விகடன் குமுதமாக ஆகிக்கொண்டிருந்தது. தினமணி கதிரை சாவி குமுதம் போல ஆக்கினார். பின்னர் சாவி, இதயம்பேசுகிறது ஆகிய இதழ்கள் அதே பாதையில் வெளிவந்து முட்டி மோதின. தனிப்பாதையில் முடிசூட்டி ஆண்ட ராணிக்கு எதிராக தேவி வெளிவந்து கடும்போட்டியை அளித்தது.

இரண்டு வகை இலக்கிய அறிமுகங்களே எழுபதுகளின் இறுதியிலும் எண்பதுகளிலும் இருந்தன. ஒன்று, குமுதத்தில் சிறு துணுக்குகளாக அல்லது அவ்வப்போது முத்திரைக்கதைகளாக இலக்கியப்படைப்புகள் வெளிவந்தன. அசோகமித்திரன் குமுதத்தில் எழுதினார். ஜே.ஜே.சிலகுறிப்புகள் பற்றி ஒரு கேள்விக்கு அரசு பதில் சொல்லியிருந்தார்.  இரண்டு, ராணி முத்து தொடங்கப்பட்டபோது அதில் இலக்கியப்படைப்புகளின் சுருக்கப்பட்ட வடிவங்கள் வெளியாயின.

ஆனால் அந்த அலை மிக விரைவிலேயே அழிந்தது. குமுதத்தின் மாலைமதி மாதநாவல் வெறும் வணிக நாவல்களாக வெளியிட்டு ஓர் அலையை உருவாக்க ராணி முத்து இலக்கியத்தை முழுமையாகக் கைவிட்டு மாலைமதியின் பாதையை தொடர்ந்தது. எல்லா நிறுவனங்களும் ஓரு மாதநாவல் வரிசையை வெளியிட்டன. தொடர்ந்து மாதநாவல் இயக்கம் உருவாகி ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா ஆகிய மூன்று நட்சத்திரங்கள அதில் நிலைகொண்டனர்.

அன்றைய சிற்றிதழ்ச் சூழல் மிகமிகக் குறுகியது. இன்று ’அன்றே நாங்கள் எல்லாவற்றையும் படித்தோம்’ என பாவனை செய்யும் கும்பல் பெரியது – உண்மையில் பலருக்கு சிற்றிதழ் இயக்கம் இருப்பதே தெரிந்திருக்காது. சிற்றிதழ்ச் சூழலிலேயே பழந்தமிழிலக்கியம் சார்ந்து பல இதழ்கள் வெளிவந்தன. தெசிணி, மணிமொழி, முகம் போன்று. அவை ஒரு தனியுலகம்.

நவீன இலக்கியம் சார்ந்த சிற்றிதழ்ச்சூழலில் மூன்று போக்குகள் இருந்தன. ஒன்று, க.நா.சு முன்வைத்த சிற்றிதழியக்கம். மணிக்கொடி, கலாமோகினி போன்ற இலக்கிய இதழ்களின் சரிவுக்குப் பின் குறைவான பிரதிகள் மட்டுமே அச்சிட்டு தபால்கள் வழியாகவே அனுப்பப்படும் சிற்றிதழ்கள் என்னும் கருத்து உருவானது. சி.சு.செல்லப்பாவின் எழுத்து அதன் முதன்மை இதழ். கசடதபற, கொல்லிப்பாவை, யாத்ரா, லயம் என  அவ்வாறு பல இதழ்கள். எல்லாமே அதிகபட்சம் 300 பிரதிகள் அச்சிடப்பட்டவை. ஐநூறுபேர்கொண்ட ஒரு வட்டத்திற்குள்ளேயே அனைத்து இதழ்களும் விற்பனை ஆயின.

அவ்வப்போது இந்த இதழ்களின் உலகிலேயே சற்றுப் பெரிய முயற்சிகள் நிகழும். ஜெயகாந்தன் முன்னெடுப்பில் ஞானரதம், எஸ்.வி.ராஜதுரை முன்னெடுப்பில் இனி, சுந்தர ராமசாமி முன்னெடுப்பில் காலச்சுவடு (முதல்கட்டம்) போல. அவை உடனே நின்றுவிட்டன.

இரண்டாவது வகை சிற்றிதழ்கள் கட்சிகளால் நடத்தப்படுபவை. இடதுசாரி இலக்கிய இதழ்களான சாந்தி, சரஸ்வதி ஆகியவை நின்றுவிட கட்சிகளின் இதழ்களான தாமரை (இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கலையிலக்கியப் பெருமன்றம்) செம்மலர் (இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி -மார்க்ஸிஸ்ட்டின் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்) போன்றவை. தீவிர இடதுசாரி அமைப்புகள் வெளியிட்ட இதழ்களில்  மனஓசை இலக்கியப் பங்களிப்புள்ள இதழ்  இவை ஆயிரம் பிரதிகள் வரை வெளியாயின.

மூன்றாவதாக, வானம்பாடி, புதிய தலைமுறை, நிகழ்  போன்று அவ்வப்போது தோன்றி மறையும் கட்சிசாரா இடதுசாரி சிற்றிதழ்களைச் சொல்லலாம். இவை ஐநூறு பிரதிகளை கடக்காத இதழ்கள். ஒரு சிறு வட்டத்திற்குள் மட்டுமே வாசிக்கப்பட்டவை.

இந்த இலக்கிய இயக்கத்தில் எந்த வகையிலும் அன்றைய திராவிட இயக்கம் ஈடுபடவில்லை. அதன் முகமாக எந்த எழுத்தாளர்களும் அன்றிருக்கவுமில்லை. இந்த மூன்று சிற்றிதழ் மரபுகள் வழியாக உருவாகி, அடையாளம் பெற்றபின் பின்னர் அரசியல் காரணங்களுக்காகத் தங்களை திராவிட இயக்க எழுத்தாளர்களாக சொல்லிக்கொள்பவர்களே இருந்தனர். இன்றும் அதுவே மரபு.

இச்சூழலில் தமிழில் நடிகர்களுக்கான இதழ்கள் வெளிவந்தன. தமிழில் எப்போதுமே திரையிதழ்களுக்கான பெரிய சந்தை இல்லை  பொம்மை, சித்ராலயா, பிலிமாலயா, சினிமா எக்ஸ்பிரஸ் போன்ற சினிமா இதழ்கள் வெளிவந்தாலும் எவையும் வெற்றிபெற்ற இதழ்களாக அமையவில்லை. ஏனென்றால் தமிழின் அத்தனை வணிக இதழ்களும் நடைமுறையில் சினிமா இதழ்கள்தான். ஏற்கனவே எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோருக்கு மட்டுமான ரசிகர்மன்ற இதழ்கள் வெளிவந்தன. ரஜினிகாந்த் மையநாயகனாக ஆனபோது அவருக்கான இதழ்கள் வெளிவந்தன.

இருவர் அவற்றில் ஆர்வம்கொண்டு தாங்களே இதழ்களை நடத்தினர். கே.பாக்யராஜின் பாக்யா இதழ் நீண்டகாலம் வெளிவந்தது. அவரே அதில் நிறைய எழுதினார். அதற்குப் போட்டியாக டி.ராஜேந்தர் உஷா என்ற இதழை நடத்தினார். இரண்டுமே குமுதத்திற்கு கீழே, ராணி தேவி தரம் கொண்ட இதழ்கள்.

இச்சூழலில்தான் அன்று எழுந்து வந்துகொண்டிருந்த நட்சத்திரமான கமல்ஹாஸன் 1987ல் மய்யம் என்னும் இதழை தொடங்கி சில ஆண்டுகள் நடத்தினார். ஏற்கனவே கமல்ஹாசனுக்கு நவீனத் தமிழிலக்கிய அறிமுகம் இருந்தது. அசோகமித்திரன், ஜெயகாந்தன் உள்ளிட்ட மூத்த இலக்கியவாதிகளுடன் பழக்கம் இருந்தது. அன்று இலக்கியமறிந்த வணிக எழுத்தாளர்களாக இருந்த சுஜாதா, பாலகுமாரன், சுப்ரமணிய ராஜூ ஆகியோருடன் அணுக்கமும் இருந்தது.

கமல்ஹாசன் அவருடைய பேட்டிகளில் இலக்கியவாதிகளின் பெயர்களைச் சொல்லி சில வரிகளை குறிப்பிடும் வழக்கம் அன்றிருந்தது. அவருடைய பேட்டி என்பதனால் அவ்வரிகள் அவ்விதழ்களின் ஆசிரியர்களின் கத்திரிக்கோல்களை மீறி வெளியாகிவிடும். நான் குமுதத்தில் அசோகமித்திரனின் பல கதைகளை முன்னரே படித்திருந்தாலும் (குறிப்பாக ஒற்றன் தொகுப்பின் இலாரியா நினைவில் நின்றிருக்கும் கதை) அசோகமித்திரன் ஓர் முதன்மைப்படைப்பாளி என கமல்ஹாசன் சொல்லியே அறிந்தேன்.

தி.ஜானகிராமன், கு.அழகிரிசாமி, நீல பத்மநாபன், சுந்தர ராமசாமி, ஞானக்கூத்தன், சா.கந்தசாமி, கு.ப.ராஜகோபாலன், ஆதவன், இந்திரா பார்த்தசாரதி போன்ற பலரைப் பற்றி கமல்ஹாசன் தன் பேட்டிகளில் சொல்லியிருந்தார். எனக்கு அப்பெயர்கள் அவ்வாறுதான் அறிமுகம். அப்பெயர்களைக் கொண்டு நானே நூலகத்தில் தேடி எடுத்துத்தான் இந்திரா பார்த்தசாரதியின் தந்திரபூமி, சுதந்திரபூமி உள்ளிட்ட நாவல்களை அன்று வாசித்தேன்.

அன்றைய மோஸ்தரே ஆண்பெண் உறவுச்சிக்கலை பேசுவதுதான். ஏனென்றால் ஆண்பெண் உறவு பழைய கூட்டுக்குடும்பக் கெடுபிடிகளை மீறி இரு தனிநபர் சார்ந்ததாக அப்போது மாறிக்கொண்டிருந்தது. பெண்கள் வேலைக்குச் செல்ல ஆரம்பித்திருந்தனர். காதல் திருமணங்கள் பரவலாக நிகழ ஆரம்பித்திருந்தன. ஆகவே கமல்ஹாசனும் அதிகமாக ஆண்பெண் உறவுச்சிக்கலைப் பேசிய ஆசிரியர்களையே முன்னிறுத்தினார். விதிவிலக்கு அசோகமித்திரன்.

கமல்ஹாசன் மய்யம் இதழை தொடங்கிய சூழல் இது. அன்று அதற்கு முன்னுதாரணங்கள் இல்லை. சில இடைநிலை இதழ்களுக்கான முயற்சிகள் செய்யப்பட்டு வெற்றிபெறாமல் போயின. தமிழில் இடைநிலை இதழ்கள் பெரும்பாலும் தோல்விதான் அடைந்தன. பகீரதனின் ஞானகங்கை, நா.பார்த்தசாரதியின் தீபம் முதல் விகடன் குழுமத்தின் தடம் வரை. ஏன் என்பது ஆராயப்படவேண்டிய ஒரு தலைப்பு.  மையம் ஓர் இடைநிலை இதழ்.

மய்யம் மூன்று புள்ளிகள் நடுவே ஒரு கழைக்கூத்தை ஆடியது. அதன் விற்பனை கமல்ஹாசனின் ரசிகர்களால் ஆனது. அவர் அதில் வெளியிட்ட கேள்விபதில்கள், அவருடைய படங்களுக்காகவே அவ்விதழ் வாங்கப்பட்டது. கமல் ரசிகர்மன்றம் வழியாகவே விநியோகமும் செய்யப்பட்டது. இரண்டு, அன்றைய குமுதம் வகை வணிக இதழ்களின் சாயலை அது பின்பற்றியது. ஜெயராஜ் ஓவியம், சுஜாதா முதலியோரின் கதைகள். மூன்றாவதாக கூடவே இலக்கியத்தையும் கொஞ்சம் சேர்த்து வெளியிட்டது.

மய்யம் இதழ் ராசி அழகப்பனை ஆசிரியராகவும் புவியரசு, ஞானக்கூத்தன் ஆகியோரை ஆலோசகர்களாகவும் கொண்டது. அதில் வெளியான இலக்கியப் படைப்புகளை விட, அவ்வாறு ஓர் இலக்கிய இயக்கம் தமிழில் உள்ளது என்பதை அவ்விதழ் தொடர்ச்சியாகச் சுட்டிக்கொண்டே இருந்ததுதான் இன்று முக்கியமான நிகழ்வாகத் தோன்றுகிறது. பொதுவாசகர்களுக்கு இலக்கியம் சினிமா ஆகியவற்றை அறிமுகம் செய்யும் ஓர் இதழாக கமல் அதை உருவகித்துள்ளார்.

மய்யம் மூன்றாண்டுகள் நடைபெற்றது. கமல் பெரிய இழப்புகளை அடைந்தமையால் நிறுத்தப்பட்டதாகச் சொன்னார். இன்று யோசிக்கையில் அதன் பிரச்சினை வணிகர்களாலான வினியோக அமைப்பை நாடாமல் ரசிகர்மன்றங்களை நம்பியதுதான் என தோன்றுகிறது. சீராக வினியோகம் ஆகவில்லை, பணம் திரும்பவுமில்லை. துக்ளக் அன்று ஆனந்தவிகடனால் வினியோகம் செய்யப்பட்டதுபோல, கல்கண்டு குமுதத்தால் வினியோகம் செய்யப்பட்டதுபோல ஓர் ஒத்திசைவை கமல் திட்டமிட்டிருக்கலாம். வணிகரீதியாக வெல்லாத எந்த இயக்கமும் நீணாள் நிகழாது. நீணாள் நிகழாத இயக்கம் அடிப்படையில் தோல்வியுற்றதுதான்.

செல்வேந்திரன் தொகுத்த மய்யம் இதழ்படைப்புகளுக்கான ஒரு தொகைநூலை கமல் அளிக்க நான் பெற்றுக்கொண்டேன். அசோகமித்திரன் அதில் எழுதிய ஒரு கிராமத்து அத்தியாயம் சிறந்த கதை. ஆச்சரியமான கதையும்கூட. இன்று அதை அப்படியே ஒரு சினிமாவாக எடுக்கலாம் – யோகி பாபுவை வைத்து. சுஜாதா கதையும் நன்று. தி.ஜானகிராமன் பாலகுமாரன் உட்பட பலர் எழுதியுள்ளனர். கமல்ஹாசனின் கேள்விபதில், அனந்து எழுதிய உலகத்திரைப்படம் பற்றிய குறிப்புகள் என ஒரு கலவையான வாசிப்பை அளிக்கிறது. பழைய படங்களுடன் ஒரு காலப்பயணம் செய்த அனுபவத்தை பெற்றேன்.

மய்யம் இதழ் தொகுப்பை கமல் கையில் இருந்து வாங்கிக்கொண்டபோது ஒரு வட்டம் சுற்றிவந்த உணர்வை அடைந்தேன். கமல்ஹாசன் 1979ல் ஒரு பேட்டியில் கு.ப.ராஜகோபாலன் என்ற பெயரைச் சொன்னபோது தேடி அலைந்து கனகாம்பரம் என்ற தொகுப்பை நூலகத்தில் கண்டடைந்து  வாசித்தேன். மையம் இதழ்களை நண்பர்களிடமிருந்து வாங்கியும் நாகர்கோயில் மணிமேடையின் ஒரே ஒரு கடையில் சொல்லிவைத்தும் வாசித்திருக்கிறேன். இன்று கமல் என்னிடம் ‘உங்க கைவரை கொண்டு வந்து சேத்துட்டோம்…’ என்றார். ஒரு காலச்சுழல்.

நன்றி - https://www.jeyamohan.in/196333/