முன்னுரை

கல்வி என்பது உடல் மற்றும் மன வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கின்ற ஒரு சமூக  அமைப்பாகும்.  சமுதாயத்தில் நன்னடத்தையுடன் கூடிய திறன் சார்ந்த மானுடத்தை உருவாக்குவதில் கல்வி முக்கியப் பங்கு வகிக்கிறது. இக்கல்வியை முறையாகப் பயில பாடத்திட்டக் கட்டமைப்பு முறையானது முதன்மையானதாகத் திகழ்கிறது. கால மாற்றத்திற்கு ஏற்பப் பாடத்திட்ட வடிவமைப்பு என்பது தன்னகத்தே பற்பல மாற்றங்களைப் பெற்று வந்துள்ளது.

கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் துறைச் சார்ந்த முதன்மைச் செயல்பாடாகப் பாடத்திட்ட வடிவமைப்பு திகழ்கிறது. இப்பாடத்திட்ட வடிவமைப்பானது, தமிழ்ப் பட்டப் படிப்பிற்குக் கட்டமைக்கப்படும் திறன் குறித்து ஆராய்வதை நோக்கமாகக் கொண்டு ‘தமிழ்ப் பட்டப்படிப்பிற்கான பாடதிட்டக் கட்டமைப்பு முறைகள் – சில முன் வரைவுகள்’ எனும் தலைப்பில் இவ்வாய்வுக் கட்டுரை அமைகிறது.

இலக்கிய இலக்கணத் தொடர்புடையது

தமிழின் தொன்மையான இலக்கணங்களைத் பாடத்திட்டத்தில் இடம்பெறச் செய்வதால் மொழியின் தனித்தன்மைகளையும் சிறப்புகளையும் மாணவர்கள் அறிய ஏதுவானதாக அமைகிறது. மேலும், இலக்கியங்களின் வாயிலாகத் தமிழ் மொழியின் தொன்மை, சமூக அறநெறிகள், வாழ்வியல் முறைகள், பண்பாட்டு நெறிகள் குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ள முடிகிறது. தொன்மையான இலக்கிய இலக்கணங்களை கற்கும் மாணவர்களால் சமுதாயத்தில் நன்மதிப்புகளை உருவாக்கும் இயலும் என்பது திண்ணம்.

சான்று:

இலக்கணம் : நன்னூல், தொல்காப்பியம், தண்டியலங்காரம், புறப்பொருள் வெண்பா மாலை, நம்பியகப்பொருள்

இலக்கியம் : சங்க இலக்கியம், அறநெறி இலக்கியம், சிற்றிலக்கியங்கள்

வரலாறு தொடர்புடையது

வரலாறு என்பது கடந்த காலத்தைப் பற்றிக் கற்பதாகும். இவ்வாரலாற்றுத் தொடர்புடைய பாடங்களை மாணவர்களுக்குப் பாத்திட்டமாக வைப்பதால் இனம், மொழி, கலை, பண்பாடு, அறிவியல், சமூகம், மரபியல், வாழ்வியல், இலக்கியம் மற்றும் இன்ன பிற வரலாறுகளை மாணவர்கள் அறிந்து கொள்வர். மாணவர்கள் தொன்மை கால வரலாற்றின் தனிச் சிறப்புகளையும் மகத்துவத்தையும் அறிந்து கொள்ள ஏதுவாக அமைகிறது.

நவீன இலக்கியம் தொடர்புடையது

நவீன இலக்கிய வகைகளான புதுக்கவிதை, சிறுகதை, நாவல், நாடகம் உரைநடை, ஆகியவற்றினைப் பாடத்திட்டக் கட்டமைப்பில் வைப்பதன் மூலம் மாணவர்கள் நவீன இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி நிலைகளையும் அறிந்து கொள்வதோடு நவீன இலக்கிய போக்குகள் குறித்தும் நவீன இலக்கியப் படைப்புகளின் படைப்பாக உத்தி முறைகள், பொருண்மைகள் ஆகியவை குறித்தும் அறிந்து கொள்ள ஏதுவாக அமைகிறது.

சான்று : கவிதையியல், நாடகவியல், இக்கால இலக்கியங்கள், சிறுகதையியல்

கள ஆய்வுத் தொடர்புடையது

தமிழ்ப் பட்டப் படிப்பிற்கான பாடத்திட்டமானது வகுப்பறைக் கற்றலுக்கு மட்டும் பெரும்பாலும் முக்கியத்துவம் அளிப்பதாக திகழ்கிறது. இந்நிலையானது மாணவர்களின் கற்றல் திறனை முழுமையாக மேம்பாடுடைய செய்யாது. வகுப்பறைக் கற்றலுக்கான பாத்திட்டங்களோடு கண்டுணர்தல், அனுபவத்தைப் பெறுதல், பரிசோதனை செய்தல், மக்களோடு மக்களாக இருந்து அறிந்து கொள்ளுதல் போன்ற அடிப்படை நிலைகளை உடைய கள ஆய்வு சார்ந்த  பாடத்திட்டங்களையும் பாடத்திட்டக் கட்டமைப்பில் கட்டமைத்தல் இன்றியமையாததாகும்.

சான்று : அகழ்வாராய்ச்சியியல், கோயிற் கலை, தொல்லியல், கல்வெட்டியல், நாட்டுப்புறவியல்

துறையிடைக்  கல்வி தொடர்புடையது

தமிழில் பட்டப்படிப்பு மேற்கொள்ளும் மாணவர்களின் பாடத்திட்டத்தில் தமிழ் இலக்கியத்திற்கு நெருங்கிய தொடர்புடைய பிற துறைப் பொருண்மைகளைத் தேர்வு செய்தது வைத்தல் வேண்டும். தமிழ்த்துறையும் தொடர்புடைய பிற துறைகளும் இணைந்து தமிழ்த் துறை மாணவர்களுக்கு உரிய பாடத்தினை உருவாக்கலாம். இதுபோன்ற பிற துறை சார் பாடத் திட்டங்களால் மாணவர்களின் பல்துறை சார் அறிவு பெருகும்.

சான்று : மொழிபெயர்ப்பியல், கணினிப் பயன்பாட்டியல், நிகழ்கலையியல், மொழியியல்.

பல்லூடகம் தொடர்புடையது

பல்லூடகம் என்பது உரை, நிழற்படம், அசைவுப் படம் ஒலி, ஒளி காட்சிகள் அடங்கிய கணிப்பொறி தழுவிய ஒரு வழங்கு முறையாகும். இம்முறை குறித்த பாடங்களைப் பாடத்திட்டத்தில் கட்டமைப்பதால் மாணவர்கள் பல் ஊடக அறிவினைப் பெறுவதுடன் கணினி உலகில் எளிய முறையில் பணி வாய்ப்பினைப் பெறுவும் வாய்ப்பாக அமையும்.

சான்று : இணையத்தமிழ், வலையொளி உருவாக்கம், பல்லூடகவியல்

படைப்பிலக்கியம் தொடர்புடையது

கற்றல் திறனுடன் படைப்பாற்றல் திறனையும் மேம்படுத்தும் வகையில் பாடத்திட்டங்களைக் கட்டமைப்பது, கவிதை, சிறுகதை போன்ற படைப்பாற்றல் சார்ந்த அறிவுடனும் படைப்பாற்றல் திறனுடனும் மாணவர்கள் வளர நல் வாய்ப்பாக அமையும். இப்படைப்பிலக்கியப் பாடத்திட்டங்கள் திரையிசைப் பாடல்கள், திரைக்கதை, வசனம் ஆகிய தொலைக்காட்சிப் படைப்பாக்கங்களை மாணவர்கள் படைக்க ஏதுவாக அமையும்.

சான்று : படைப்பியல், படைப்பிலக்கியங்கள், அரங்கவியல்

ஒப்பிலக்கியம் தொடர்புடையது

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட படைப்புகளையும் படைப்பாளிகளையும் படைப்பின் போக்குகளையும் ஒப்பிட்டு ஆராய்வது ஒப்பிலக்கியம் ஆகும். ஒப்பிலக்கியத்தின் வாயிலாக நாட்டில் அல்லது உலகின் வெவ்வேறு பகுதிகளைச் சார்ந்த படைப்பாளர்களையும் படைப்புகளையும் ஒப்பிட்டு அறிய இயலும். ஒப்பிலக்கியப் பாடத்திட்டங்களைப் பாடத்திட்டத்தில் கட்டமைப்பதன் மூலம் பிற நாட்டு இலக்கிய இலக்கணங்களையும், இலக்கிய ஆக்கங்களையும் மாணவர்கள் அறிந்து கொள்வர். பிற மொழி அறிவினை வளர்த்துக் கொள்ளவும் முயலுவர். ஒப்பிலக்கியம் சார்ந்த பாடத்தினை பாடத்திட்டத்தில் இடம்பெறச் செய்தால் மாணவர்களின் அறிவானது பரந்துபட்ட நிலையினை அடையும்.

சான்று : ஒப்பிலக்கியக்கலை, ஒப்பியல், ஒப்பாய்வுக்களங்கள், இலக்கிய ஒப்பீட்டியல்

திறனாய்வுத் தொடர்புடையது

இலக்கியத்தின் திறனை ஆராய்வது திறனாய்வு ஆகும். இலக்கியத்தின் பல்வேறு பண்புகளையும் மதிப்பிட்டு வெளிக்கொணர்கிறது. திறனாய்வு சார்ந்த பாடங்களைப் பாடத்தில் இடம்பெறச் செய்வதால் இலக்கியத்தைப் பற்றிய சரியான புரிதல் நிலையினையும் இலக்கியப் படைப்பாளர் உத்தி முறையினையும் மாணவர்கள் அறிந்து கொள்ள இயலும். இலக்கியப் படைப்புகளைத் திறனாய்வு செய்யும் அறிவைப் பெறுவதோடு தற்கால திரைப் படைப்பாக்கங்களையும், சமூக நிகழ்வுகளையும் திறனாய்வு செய்யும் ஆற்றலைப் பெறுவர்.

சான்று : திறனாய்வுக்கலை, திறனாய்வியல், விமர்சனக்கலை, மதிப்பீட்டியல்

பல்துறைத் தொடர்புடையது

கல்வியில் பல்துறை அணுகுமுறை என்பது ஒரு புதிய பாடமுறையாகும். இதனால் மாணவர்கள் பல்வேறு துறை சார்ந்த வேறுபட்ட பாடங்களை அறிய இயலும். இத்தகைய பாடங்களைப் பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்துவதால் வானவியல், ஜோதிடவியல் கல்வெட்டியல், சுவடியியல், தொல்லியல், சுற்றுலாவியல், மானிடவியல், மண்ணியல், மருந்தியல், பல்லூடகவியல், சிற்பவியல் ஆகிய பல்துறைசார் அறிவினை மாணவர்கள் அடைவர்.

புத்திலக்கிய வகைகள் தொடர்புடையது

கால மாற்றத்துக்கு ஏற்ப, புத்திலக்கியங்களைப் பாடத்திட்டத்தில் சேர்ப்பதால் மாணவர்களுக்குப் புத்திலக்கியங்கள் குறித்த அறிமுகமும் புரிதலும் ஏற்படுவதுடன் புத்திலக்கியங்களின் தோற்றம், வளர்ச்சி நிலைகள் இலக்கியங்களின் படைப்பாக்க உதிமுறைகள் குறித்த அறிவினையும் மாணவர்கள் பெறுவர்.

சான்று : கசல், சென்ரியு, லிமரைக்கூ, ஹைபூன்

செயல்முறைத் தொடர்புடையது

படைப்பிலக்கியம், நாட்டுப்புற மருத்துவம், யோகா, சிறுவர் விளையாட்டுகள் போன்ற இன்ன பிற செயல்முறை சார்ந்த பாடத்திட்டங்களைக் கட்டமைப்பதால் மாணவர்கள் ஆரோக்கியமான மனநிலையுடனும் உடல் உறுதியுடனும் இருந்து சமுதாயத்தில் சிறந்த கல்வியைப் பெற்றுத் தலைமைப்பண்பு, ஆளுமைத்திறன், சமூக அக்கறை, தன்னம்பிக்கை, படைப்பாக்கத்திறன் ஆகிய திறன்களை உடையவர்களாக உருவாகுவர்.

சான்று : பயிற்சிப்பட்டறை, நாடகவியல், அரங்க வடிவமைப்பு, திரைக்கதையியல்

தொழில் முனைவுத் தொடர்புடையது

பாடதிட்டத்தில் மாணவர்களின் தொழில் முனைவுத்திறன்களை வெளிப்படுத்தும் வகையில் தொழிற்சார் தமிழ், தொழில் முனைவுத்தமிழ் போன்ற பாடதிட்டஙகளை கட்டமைப்பதால் மாணவர்களுக்கு கற்றல் திறனுடன் தொழில் முனைவுத்திறனும் மேம்படும். பணி வாய்ப்புகளை எதிர்காலத்தில் மாணவர்கள் பெறும் வகையில் பணிவாய்ப்பிற்கான பாடதிட்டங்கள் கட்டமைக்கப்படுதல் வேண்டும்.

முடிவுரை

தமிழில் பட்டப்படிப்பு மேற்கொள்ளும் மாணவர்களின் பாடத்திட்டக் கட்டமைப்பில் இலக்கியம், இலக்கணம், வரலாறு, கள ஆய்வு, துறையிடை  கல்வி, பல்லூடகம், படைப்பிலக்கியம், ஒப்பிலக்கியம், பல்துறை, புத்திலக்கியம், செயல்முறை சார்ந்த  பாடத்திட்டங்களைப் பாடத்திட்டக் கட்டமைப்பில் கட்டமைத்தல் இன்றியமையாததாகும். இப்பாடத் திட்டங்களைக் கட்டமைப்பதால் மாணவர்களின் எதிர்காலத்திற்கு உகந்த அறிவாற்றல், படைப்பாக்கத்திறன், பல்துறை அறிவு, தலைமைத்துவம், சிந்தனைத்திறன், பணிவாய்ப்புத் திறன் மற்றும் தொழில் முனைவுத் திறன் முதலான திறன்களைப் பெற்றுச் சமுதாயத்தில் தம்மை நிலைநிறுத்திக் கொள்வர்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.