ஈழத்து யாழ். மண் ஈன்றெடுத்த எண்ணிலடங்காத புலமையாளர்கள் பலர். அவர்களுள் எழுத்துத் துறையில் பிரவேசமாகி தமிழ் இலக்கியத்தை வளப்படுத்திய பெருமை மிகு சான்றோர்கள் வரிசையில் புலம் பெயர் எழுத்தாளர்களுக்கும் கணிசமான பங்களிப்பு இருக்கின்றது. எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களும் இதற்கு விதிவிலக்கானவர் அல்லர். ஈழத்தில் யாழ். மண்ணில் அவதாரம் எடுத்த அவர் இன்று புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்தாலும் தமிழ் மணமும் தமிழ் உணர்வும் இலக்கிய படைப்பின் மீது கொண்ட தீராத அவாவினாலும் தன்னை ஓர் எழுத்தாளராக அடையாளப்படுத்திக்கொண்டு சிறுகதை, நாவல், மேடை நாடகங்கள், திரைக்கதை, சிறுவர் நாடகங்கள் எனப் பல்வேறு தளங்களில் நின்று பயணிக்கின்றார். இவருடைய எழுத்துக்கள் தமிழ்ச் சமூகத்தையும், அதன் பண்பாடு, பழக்கவழக்கங்களையும் வெளிப்படுத்தும் அதேவேளை புலம்பெயர் நாடுகளில் அந்தப் பண்பாடு சார் பழக்கவழக்கங்கள் எவ்வாறான தாக்கத்திற்கு உட்பட்டிருக்கின்றது என்பதை மிகத் தெளிவாக சித்திரித்துள்ளன.

குரு அரவிந்தனின் படைப்புகளான இதுதான் பாசம் என்பதா?, என் காதலி ஒரு கண்ணகி, நின்னையே நிழல் என்று ஆகிய சிறுகதைகளிலும் உறங்குமோ காதல் நெஞ்சம்?, உன்னருகே நான் இருந்தால், எங்கே அந்த வெண்ணிலா?, நீர்மூழ்கி நீரில் மூழ்கி… ஆகிய நாவல்களிலும் இவரது சமூக நோக்கு நன்கு வெளிப்படுவதைக் காணலாம். இக்கட்டுரையில் குரு அரவிந்தன் அவர்களால் படைப்பாக்கம் செய்யப்பட்ட “இழப்பு” ,“மூன்றாவது பெண்”, “பனிச்சருக்கல்” , “என் காதலி ஒரு கண்ணகி” ஆகிய சிறுகதைகளில் வெளிப்படும் சமூகப்பார்வை பற்றியே ஆராயப்படுகின்றது.

ஒரு படைப்பிற்கும் தான் வாழும் சமூகத்திற்கும் நெருக்கமான தொடர்பு இருக்கின்றது. இதனாலேயே இலக்கியத்தைச் சமூக உற்பத்தி என்கின்றனர் சமூகவியல் ஆய்வாளர்கள். சமூகத்தைப் பிரதிபளிக்கும் இலக்கியமும் அந்தச் சமூகத்தில் இரண்டறக் கலந்து வாழும் படைப்பாளி ஒருவனாலேயே உருவாக்கப்படுகி;ன்றது. அவ்வாறு அவன் படைக்கும் இலக்கியம், புனைகதைகள் அவனோடு பழகிய மனிதர்களை, அவர்களது சிந்தனையை, பழக்கவழக்கங்களை, அங்கு நடைபெற்ற சம்பவங்களை அவனுக்கு இலக்கியம் படைப்பதற்கான கருவாக வழங்குகின்றன. குரு அரவிந்தனின் சிறுகதைகளில் பெண்கள், சிறுவர்கள், ஆண் - பெண் உறவு, போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் ஆகியோரைப் பற்றிய அனுபவங்களைப் பெற்றுக்கொள்ளமுடிகின்றது.

இவரது “இழப்பு” என்னும் சிறுகதை யுத்த காலப்பகுதியையும் அந்த யுத்தத்தால் மருத்துவர் ஒருவருக்கு நேர்ந்த இழப்பையும் பதிவு செய்கின்றது. உயிர்களை யுத்தம் என்ற பெயரில் கொன்று குவிப்பதும் விரும்பிய இடங்களில் வெடிகுண்டுகளை வைத்து தமிழ் மக்களின் அழிவை இரசித்து மகிழும் இராணுவ சிப்பாய்கள் சிலரால் வைத்தியர் ஒருவர் தன் மகனை இழக்கின்றார். இராணுவத்தினரின் கட்டாய நெருக்கடியால் விருப்பமின்றி பாதிக்கப்பட்ட இன்னுமொரு இராணுவ வீரனுக்கு சிகிச்சை அளித்த நேரத்தில் இவர்களது குண்டு வீச்சால் மருத்துவக் கல்லூரியில் படித்த அவருடைய மகன் பாதிக்கப்பட்டு இந்த வைத்தியருடைய வைத்தியசாலைக்கு அழைத்து வரும்போது இராணுவ வீரர்கள் அதனை தடுத்ததால் அந்த வைத்தியரின் மகன் இறக்க அவனது மரணத்திற்குக் காரணமான இராணுவ சிப்பாய் இந்த வைத்தியரால் உயிர் பிழைக்கின்றான். உயிர்களைக் காப்பாற்றுவது மட்டுமே தமது பணி என நினைத்து சிகிச்சை அளித்த வைத்தியருக்குத் தன் மகனை காப்பாற்ற முடியாமல் போன இயலாமையை மட்டும் இச்சிறுகதை சொல்ல முற்படவில்லை. ஒருகாலகட்டத்தில் தமிழ்ச் சமூகத்தில் அப்பாவி மக்கள் தினம் தினம் இவ்வாறான இராணுவத்தினரால் பழிவாங்கப்பட்டமையையும் இச்சிறுகதை ஆசிரியர் பதிவு செய்துள்ளார். சுதந்திரமாகக் கல்வி கற்கவும், மருத்துவ வசதிகளைப் பெற்றுக்கொள்ளவும், வைத்தியசாலைகளில் பணிபுரியும் ஊழியர்கள் அநீதியான இராணுவ அதிகாரங்களுக்குக் கட்டுப்பட்டு துன்பமடைவதையும் யதார்த்தப்பூர்வமாக இச்சிறுகதை ஆவணப்படுத்தியுள்ளது. ஆனால் இச்சிறுகதை களம் பற்றி தெளிவாக ஆசிரியர் குறிப்பிடவில்லை. சூழல்சார்ந்த பதிவுகளையும் மக்களின் உயிரோட்டமான பேச்சுவழக்குகளையும் அதன் பண்பாட்டுடன் கலந்து குறிப்பிட்டிருந்தால் கதை இன்னும் உயிரோட்டமாக இருந்திருக்கும்.

குரு அரவிந்தனின் மூன்றாவது பெண் என்னும் சிறுகதை சற்று வித்தியாசமான படைப்பு நோக்கோடு சிறுகதை வடிவம் பெற்றுள்ளது. பெண் பிள்ளைகளுக்குக் தந்தை மீது உள்ள பாசமும் தந்தைக்குப் பெண் பிள்ளை மீதான பாசப் பிணைப்பும் எவ்வாறு புலம்பெயர் நாடுகளில் சட்டச் சிக்கல்களை ஏற்படுத்தி குடும்பம் என்னும் அமைப்பை சீர்குழைக்கின்றது என்பதைப் பற்றி இச்சிறுகதை கூறுகின்றது. புலம்பெயர் நாடுகளில் தந்தை – மகள் முத்தம் காமமாகவும் தமிழ்நாட்டில் அந்த அரவணைப்பு அன்பின் வெளிப்பாடகவும் இருப்பதை இருநாட்டு கலாசாரங்களின் தாக்கம் தமிழர் மத்தியில் குறிப்பாக புலம்பெயர் வாழ் தமிழ் குடும்பங்களில் உறவுக்குப் பிரச்சினையானதை இந்தச் சிறுகதையை வாசிப்போர் நன்கு உணரமுடியும். “…மேலைத் தேசத்து சட்ட திட்டங்கள் காரணமாக, தந்தையின் பாசம் புறம் தள்ளப்பட்டதால் அந்தக் குடும்பம் செய்வதறியாது உடைந்து போய்விட்டது…” என இச்சிறுகதை ஆசிரியர் கூறும் பகுதி ஒரு தமிழ்க் குடும்பத்திற்கு புலம்பெயர் நாட்டில் ஏற்பட்ட துன்ப விளைவுகளைச் சொல்கின்றது. அதுமட்டுமல்லாமல் தமிழ் மண்ணில் குடும்பம் என்னும் அலகு சீரழிந்துவிடாமல் கணவன் - மனைவி தங்களுக்குள் ஏற்படும் முரண்பாடுகளைச் சகித்து வாழ்வது கலாசாரத்தின் ஓர் அடையாளம். கால மாற்றத்திற்கு ஏற்ப இந்தப் பண்பாடு மாறி தங்களுக்குள் ஒத்துவரவில்லை என்றால் பிரிந்து செல்வதும் உண்டு. ஆனால் கணவனும் மனைவியும் பிரிந்து சென்று இருவேறு திருமணங்களைச் செய்து அவரவருக்குப் பிறக்கும் குழந்தைகளை விரும்பிய இடங்களுக்கு அழைத்துச் சென்று ஊர் சுற்றுவதையும் புலம்பெயர் நாடுகளில் தங்களுக்கு ஏற்றாற் போல வாழ்க்கையின் கட்டுப்பாடுகளைத் தகர்த்து வாழ்வதையும் வெளிப்படுத்தும் நோக்கில் படைக்கப்பட்டதாக இந்த மூன்றாவது பெண் என்னும் சிறுகதை இருக்கலாம் என்று எண்ண வைக்கின்றது. சமூக யதார்த்தத்தை ஒழிவு மறைவின்றி புனைகதைகளில் வெளிப்படுத்தும்போதே அது ஒரு சமூகத்தில் காலத்திற்கும் நின்று நிலைக்கும். குரு அரவிந்தன் தான் கண்ட சமூகத்தை அதன் கலாசார மாற்றத்தை, சிந்தனையின் திசைமாறுதல்களை உள்ளது உள்ளபடி இந்த மூன்றாவது பெண் என்னும் சிறுகதையிலும் படைத்தளித்துள்ளார். இச்சிறுகதையில் வரும் அந்த இரு தம்பதிகளும் இரண்டாவது திருமணத்தில் இணைந்தவர்கள் என்றாலும் இருவரதும் முதல் திருமணத்தின் மூலம் பிறந்த பிள்ளைகளைக் கவனிக்கும் பாங்கும் சுதந்திரமாக புலம்பெயர் நாடுகளில் சுற்றித்திரிவதும் இயல்பான ஒரு விடயம் என்பதை மிக எளிமையாகக் கூறியுள்ளார். இதுவே ஈழத்தின் மண்வாசனைக்கு ஏற்ப இந்தப் படைப்பு உருவம் பெற்றிருந்தால் இச்சிறுகதையில் இன்னும் பாத்திரங்கள் பலர் வந்திருக்கலாம். இப்படியான வாழ்க்கை முறை எமது பண்பாட்டிற்கு ஒவ்வாத கொடிய நோய் போன்று அருவருப்புடன் நோக்கப்பட்டிருக்கலாம். பல் கலாசாரம் கொண்ட புலம்பெயர் தேசங்களில் இவை சர்வச சாதாரணம் என்னும் மனப்பாங்கை வாசகர்களுக்கு ஊட்டுவதில் குரு அரவிந்தன் அவர்கள் வெற்றிக்கண்டுள்ளார்.

இவரது பனிச்சருக்கல் என்னும் சிறுகதைகூட கலாசார மாற்றத்தினால் மரபான பெண் பற்றிய கட்டுமானத்தைக் கட்டவிழ்த்துக்காட்டும் இன்னும் ஒரு படைப்பு என்று கூறலாம். சொந்த மண்ணிலிருந்து வெளிநாட்டு மோகத்தினால் உந்தப்பட்ட சுற்றத்தாரின் பண ஆசையால் பண்பற்ற ஒருவனுக்கு மனைவியாகி பல்வேறு இன்னல்களைச் சந்திக்கும் விஜி என்னும் பெண்ணைப் பற்றி சிந்திக்க வைக்கின்றது. குடிகார கணவனின் பொறுப்பற்ற செயல்களை பொருத்துக்கொண்டு வாழும் இப்பெண் கடைசியில் சுயநினைவற்ற நிலையில் வேறொரு ஆடவனால் கற்பழிக்கப்படுவதும் அவன் யார் என்று தெரியாததால் குழம்பி பின் குடும்ப மருத்துவரிடம் செல்ல ஆயத்தமாவதும் இதனை குடிகார கணவனிடமிருந்து மறைப்பதும் புலம்பெயர் தேசம் அவளுக்கு தந்த கலாசார மாற்றத்தின் விளைவா? அல்லது வாழ்வின் விரக்தியான மனநிலையின் வெளிப்பாடா என்பதில் சற்று குழப்பமாகவே இருக்கின்றது. “எதுவும் நடக்காதது போல, யாரோ செய்த தவறுக்கு நான் ஏன் அலட்டிக்கொள்ள வேண்டும் என்ற மனநிலையோடு, அவள் டாக்டரிடம் செல்வதற்கான நேரத்தைக் குறித்து வைத்துவிட்டு, சின்னத்திரை நாடகத்தை ரசித்துப்பார்த்தாள்.” என இறுதியாக இச்சிறுகதை ஆசிரியர் கதையை முடித்திருப்பது ஆயிரம் சிந்தனைகளையும் விமர்சனங்களையும் இச்சிறுதை மீது வைக்கின்றது. குரு அரவிந்தன் பெண்ணியச் சிந்தனையை வரவேற்பவரா? அல்லது ஆணாதிக்கத்தின் வழியை எதிர்ப்பவரா? என்னும் வினாவிற்கு இச்சிறுகதையை வைத்து உடனே முடிவு சொல்ல முடியவில்லை. ஆனால் சமூகத்தில் நடப்பவற்றை உள்ளது உள்ளபடி அதன் யதார்த்தம் சிறிதும் சிதையாமல் தன்னுடைய அனுபவங்களைப் பதிவு செய்பவர் என்பது இச்சிறுகதை மூலமாகவும் மெய்ப்படுகின்றது. கீழைத்தேச கலாசாரத்தில் பெண் பற்றிய மரபார்ந்த மதிப்பீடுகள் காலமாற்றத்தால் மாறியது அவர்களது கல்வி, தொழில், உடை, அலங்காரங்களில் மட்டுமே. ஆனால் கற்பு, ஒழுக்கம் சார்ந்த மரபியல் சிந்தனைகள் உடைத்தெறியப்படவும் இல்லை, பெண்களை உடைக்கவிட்டதும் இல்லை. இச்சிறுகதையில் வரும் விஜி என்னும் பெண் சுய கட்டுப்பாடு, ஒழுக்கம் சிறிதும் சிதையாமல் குடிகார கணவனுடன் வாழ்வைக் கொண்டு நடத்தும்போது அவனை பிரிந்து செல்ல நினைக்காத நிலையில் சுயநினைவற்ற நிலையில் தான் கற்பிழந்ததை மிகவும் துணிச்சலோடு எதிர்கொள்வது வியக்கவைக்கின்றது. புலம்பெயர் தேச வாழ்வின் பழக்கவழக்கங்களை அவள் மனம் ஏற்பதோடு தான் குற்றமற்றவள் என்னும் தெளிவையும் உணர வைப்பதை வெகு நுட்பமாக குரு அரவிந்தன் இச்சிறுகதையில் சொல்லிச் சென்றுள்ளார். இச்சிறுகதையில் விஜியின் கணவன் பெண்களோடு பழகுவதோடு அவர்களை வீட்டிற்கு அழைத்து வந்து குடிப்பதையும் அனைவருடனும் பழகுவதையும் சாதாரணமாகவே கதையாசிரியர் பதிவு செய்துள்ளது புலம்பெயர் தேச தமிழர்களின் சமூக மாற்றத்தை வெளிப்படுத்துவதாகவும் அமைகின்றது. விஜி என்னும் கதாப்பாத்திரத்தை வாசிக்கும் போது யாழ்ப்பாணத்தில் வழக்கில் இருந்து வந்த இரண்டு பழமொழிகள் நினைவிற்கு வருகின்றது. “தூரத்துத் தண்ணி ஆபத்துக்கு உதவாது”இ “உழுகிற மாடு என்றால் உள்ளுரிலேயே உழும் தானே” ஆகிய இந்த இரண்டு பழமொழிகளும் வெளிநாட்டு மாப்பிள்ளை மோகத்தை வெளிப்படுத்தி அதன் பொருத்தமற்ற தன்மையைச் சொல்கின்றது. ஆனால் இன்று யாழ்ப்பாணத்தமிழர்கள் பெரும்பாலும் வெளிநாட்டு மாப்பிள்ளைகளை விரும்புவது அவர்களது தனியொரு பண்பாடாகிப் போனதும் தமிழ்ப் பெண்கள் பலர் வாழ்வு இழந்ததும் மறுக்கமுடியாத உண்மையாகும்.

குரு அரவிந்தனின் மற்றும் ஒரு சிறுகதை படைப்பு “என் காதலி ஒரு கண்ணகி.” இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் என்னும் காப்பியத்தில் படைத்த கற்புக்கரசி கண்ணகி தமிழ்த் திரைப்படங்களில் மட்டுமல்ல புனைகதை இலக்கியங்களிலும் ஏன் அன்றாட வாழ்க்கையிலும்கூட பெண்களின் கற்பின் மேன்மைக்கு அடையாளச் சின்னமாகிப் போனதை எவரும் மறுக்கமுடியாது.

தமிழ்த் திரைப்படங்களில் வரும் காட்சிகள் போல தலைவன் - தலைவி சந்திப்பும் அவர்களிடையே மோதலும் பின் அது காதலாக மலர்தல் என மிக வேகமாக ஓடும் இச்சிறுகதையின் கதையோட்டத்தில் ஆண் - பெண் கற்பு, சுய ஒழுக்கம் பற்றிய கருத்துகள் விமர்சனங்களாகப் பரிமாற்றப்படுவதையும் இறுதியில் எல்லாம் ஒரு விளையாட்டு போலவும் நடந்து முடிகின்றது. ஆண்களும் பெண்களும் ஒருவர் மாறி ஒருவர் கட்டி அணைத்து வாழ்த்துச் சொல்வதும் முத்தம் கொடுப்பதும் சாதாரண ஒரு விடயமாக மேலைநாடுகளில் பார்க்கப்படுகின்றது. அதனை வளர்ந்து வரும் இளைய தலைமுறையினர் கலாசார மாற்றங்களுக்கு உட்பட்டு அவற்றை எப்படி பார்க்கின்றனர் என்பதை என் காதலி ஒரு கண்ணகி என்னும் சிறுகதை சுட்டுகின்றது. ஆணும் பெண்ணும் இயல்பாகவே முத்தத்தையும் அதன் அணைப்பையும் நாகரிகம் என்று ஏற்றுக்கொள்வதை குரு அரவிந்தன் இச்சிறுகதையில் படைத்தளித்துள்ளார். ஜெயகாந்தனின் “அக்கினிப்பிரவேசம்” போலவோ புதுமைப்பித்தனின் “பொன்னகரம்” போலவோ ஜானகி ராமனின் “அம்மா வந்தள்”இ “மோகமுள்” ஆகிய புனைகதை படைப்புகள் போலவோ குரு அரவிந்தனின் “என் காதலி ஒரு கண்ணகி” என்னும் சிறுகதை படைப்பு பெண்ணின் கற்பை முதன்மைப்படுத்தி தமிழ்ச் சமூகத்தை சுட்டெரிக்கவில்லை. ஆழமான விமர்சனத்திற்கும் இடமளிக்கவில்லை. மேலைநாட்டில் தன்னுடைய பிறந்த தினத்திற்காக தன் காதலி இன்னும் ஓர் ஆடவனின் முத்தத்தை ஏற்றதை காதலன் சகஜமாக ஏற்றுக்கொள்ளும் முற்போக்குச் சிந்தனையின் வெளிப்பாடாகவே இச்சிறுகதை வாசகர் முன் அடையாளப்படுத்தப்படுகின்றது. இச்சிறுகதையில் பாத்திரங்களாக வார்க்கப்பட்டுள்ள காதலனும் காதலியும் சூழ்நிலைகளை நன்கு புரிந்து கொண்ட கல்வி அறிவு கொண்ட ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை கொண்ட காதலின் அடையாளச் சின்னங்களாக குரு அரவிந்தனால் சித்திரிக்கப்பட்டுள்ளனர். ஒருவேளை இச்சிறுகதை தமிழ்நாட்டின் சூழலுக்கு ஏற்ப மரபார்ந்த சிந்தனைகளைக் காவல் காத்துக்கொண்டிருக்கும் ஆணையும் பெண்ணையும் சித்திரித்திருந்தால் நிச்சயமாக அக்கினிப்பிரவேசத்தின் கதாநாயகி கங்காவின் எதிர்காலத்தை அழித்தது போல இச்சிறுகதையின் பெண் பாத்திரத்தை அழித்திருக்கும். ஆனால் குரு அரவிந்தன் எந்தச் சூழலில் பண்பாட்டில், கலாசாரத்தில் நின்று தான் புனைகதைகளைப் படைக்கின்றோம் என்பதில் மிகத் தெளிவாக இருந்துள்ளார். அதனால் தான் இச்சிறுகதை காதலன் - காதலிக்கு இடையில் எந்தப் பிரச்சினைகளையும் ஏற்படுத்தாமல் அமைதியான முறையில் முடிவடைந்துவிட்டது. மரபார்ந்த கலாசாரத்தினைப் போற்றும் சிலருக்கு இந்தச் சிறுகதையின் முடிவு பிடிக்காமல் இருக்கலாம். படைப்பும் அது தரும் அனுபவமும் விமர்சனமும் வாசகனுக்கு வாசகன் வேறுபடும் அல்லவா? அதைப் பற்றி நாம் பெரிதாக அலட்டிக்கொள்ளத் தேவை இல்லை. புரிந்துணர்வு, ஒருவர் மீது ஒருவருக்கு இருக்கும் நம்பிக்கை ஆகியன மட்டுமே காதலுக்கு உயிர்ப்பு. அதனை மிகத் தெளிவாக குரு அரவிந்தன் அவர்கள் பதிவு செய்துள்ளார்.

தொகுத்து நோக்கும் போது குரு அரவிந்தனின் பல்வேறு சிறுகதைகள் தமிழ் மக்கள் புலம்பெயர் தேசங்களின் கலாசார சூழலுக்கு ஏற்ப தம்மை மாற்றிக் கொண்டு வாழ்வதையும் தான் பிறந்து வளர்ந்த தாய் நாட்டின் மரபார்ந்த நம்பிக்கை, பழக்கவழக்கங்களை குடிபுகுந்த நாடுகளில் இறுக்கமாக பின்பற்ற முடியாத இயலாமையையும் வெளிப்படுத்தியிருப்பதைக் காணமுடிகின்றது. இச்சிறுகதை ஆசிரியர் தன்னுடைய தனிப்பட்ட கருத்துக்களைச் சிறுகதையில் புகுத்தாமல் சமூகத்தில் தான் கண்டவற்றை அப்படியே தன்னுடைய சிறுகதைகளில் படைத்திருப்பது பாராட்டத்தக்கது. சிறந்த எழுத்தாளனுக்கு அணிகலனும் அதுவே. இலக்கியம் சமூக உற்பத்தி என்பதை குரு அரவிந்தன் தான் எழுதிய சிறுகதைகளில் ஆவணப்படுத்தியுள்ளார். புலம்பெயர் வாழ் தமிழ் மக்களின் வாழ்க்கை முறையை அறிய விரும்புபவர்களுக்கு எழுத்தாளர் குரு அரவிந்தனின் சிறுகதைகள் சிறந்த ஆதாரங்களாகும்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.