[இலங்கையின் பிரபல முற்போக்கு எழுத்தாளார் எஸ்.அகஸ்தியர்  அவர்களின் பிறந்த  தினம் ஆகஸ்ட் 29 . அதனையொட்டி அவரது இக்கட்டுரை வெளியாகின்றது. இதனைப் 'பதிவுக'ளுக்கு அனுப்பி வைத்தவர் அவரது மகள் எழுத்தாள்ர் நவஜோதி யோகரட்னம். .  ‘இலக்கியத்தில் ஒழுக்க வாதம் அல்லது நடுநிலைமை வாதம்’ என்னும் தலைப்பில் கண்டியில் 29.6.1969 இல் இடம்பெற்ற இலக்கிய அரங்கில் அகஸ்தியர் ஆற்றிய  உரையின் சுருக்கம்.  இந்த இலக்கிய அரங்கில் அரு.சிவானந்தன், இல.இராசு, இரா.அ.இராமன், சி.பன்னீர்ச்செல்வம், அபதுல் ரவுஹீம், அ.கணேஷ், பெரியசாமி, உமாபதி, சி.கந்தையா, பெரி. சுவாமிநாதன், செல்வி.சி;. இந்திராணி, செல்வி சித்தி.ஹமீதா, வெ. இராசம்மா ஆகியோரும், இன்னும்பல இலக்கிய முற்போக்கு இளங்கலை எழுத்தாளர்களும் பங்கு பற்றினர். ]


 ஒழுக்கம் என்பது கட்டுப்பாடு. அது மனித வர்க்கத்திற்கு மட்டுமல்ல இலக்கியங்களுக்கும் மிக அவசியமானதாகும். இந்த ஒழுக்கம் என்ற கோட்பாட்டை எப்படி நிர்ணயிக்க முடிகின்றது என்று நாம் ஆராய்ந்து பார்க்ககும்போது, இலக்கியத்தில் ஒழுக்கவாதம் அவசியம்தானா என்ற கேள்வி நம்முன்னே எழுகின்றது. அதுவுமல்லாமல், இலக்கியத்தில் ஒழுக்கவாதம் அல்லது நடுநிலைமை வாதம் பேசுபவர்கள் யார், அவர்கள் யாருக்காக இலக்கியம் படைக்கிகிறார்கள், அவர்கள் இலக்கியத்தில் ஒழுக்கவாதம்; பேசுவதன் மூலம், எந்த சமூக அமைப்பைக் கட்டிக் காக்க விரும்புகிறார்கள் என்ற இன்னோரன்ன கேள்விகளுக்கும் நாம் விடை காணவேண்டியவர்களாக இருக்கின்றோம்.

    சரி, இலக்கியத்தில் ஒழுக்கவாதம் அவசியம்தானா? இந்தக் கேள்விக்கு ஒரு விடை காண்பதற்கு முன், நாம் இந்தச் சமூக அமைப்பில் ஒரு ஆழமான கண்ணோட்டத்தைச் செலுத்தவேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. ஏனெனில், இன்றைய இந்தச் சமூக அமைப்பு இரண்டு முரண்பட்ட வர்க்கங்களாக அமைந்திருக்கின்றன. இது உழைப்பாளிக்குப் பாதகமாகவும், உடமைவாதிக்குச் சாதகமாகவும் அமைக்கப் பட்டிருக்கின்றது. இத்தகையச் சமூக அமைப்பில் வர்க்க பேதங்கள் இருப்பதால்தான் பொருளாதாரப் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இந்தப் பொருளாதார ஏற்றுத் தாழ்வுகளே கொலை, களவு, கற்பழிப்பு, கீழ்த்தர குருர உணர்ச்சி, வறுமை ஆகியவைகள் சமுதாயத்தில் ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணங்களாக அமைந்திருக்கின்றன.  

      பொருளாதாரப் பிரச்சினையில்தான் வாழ்க்கைப் பிரச்சனைகள் அடங்கி இருக்கின்றன. பொருளாதாரத்தில் ஏற்றத் தாழ்வுகள் ஏற்பட மக்கள் ஒழுக்கம் கெட்டு சீர்கேடடைகிறார்கள். இது வர்க்கப் பேத சமுதாயத்தில் தவிர்க்கமுடியாத நிகழ்ச்சியாகும். ஏனெனில் மக்கள் வாழ்க்கைப் பிரச்சினைகளைச் சமாளிக்கவும், தங்கள் வயிற்றுப் பாட்டைக் கவனிக்கவும் வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் இருப்பதனால், ஒழுக்கத்தையோ கௌரவத்தையோ காப்பாற்ற முடியாது போகின்றது. இந்த உண்மைகளைத் தெரியாமல் இருப்பவர்கள்தான் ஒழுக்கத்தைப் பற்றி மக்களுக்குப் போதனைகள் செய்கின்றார்கள். இவர்கள் இப்படி மக்கள் மத்தியில் போதனைகள் செய்வதின் மூலம், மேலும் மேலும் வறுமையை சிருஷ்டிக்கின்றார்கள்.

      ஒரு உண்மைக் கலைஞன், மனித வாழ்க்கை முன்னேற்றத்திற்காக எழுதுகின்றவன். பொருளாதார ரீதியில் வாழ்க்கைப் பிரச்சினைகளை அலசி ஆராயுந் திறனும், தன்மையும் பெற்றிருக்க வேண்டும். அப்படிப்பட்டவனால்தான் இன்றைய ஒழுக்கம் சுரண்டலின் மேல் கட்டப்பட்ட கோபுரம் என்பதை உணர்ந்து வறுமையை உற்பத்தி பண்ணுகின்ற முதலாளித்துவத்தின் கொடுமைகளை அம்பலப் படுத்தி, மக்களுக்கு ஒழுக்கத்தைக் காட்ட முடியும். ஆனால் இன்று இலக்கியத்தில் ஒழக்கவாதம் பேசுகின்றவர்களோ, வறுமையின் சிருஷ்டிகர்த்தாக்கள் யாரென்பதைத்  தெரியாமலும், ஒழுக்கக் கேட்டுக்குக் காரணத்தைப் புரிந்து கொள்ளாமலும் , ஒழக்கத்தைப் பற்றி; போதனைகளைப் பண்ணுகின்றார்கள். இவர்களெல்லாம் ‘ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும், ஒவ்வொரு காரணமுண்டு’ என்பதைத் தெரிந்து கொள்ளாத கண்மூடிக் கலைஞர்கள்.

        இந்தக் கண்மூடிக் கலைஞர்களுக்கு மனிதர்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு வழிதெரியாது அல்லது தெரிந்திருந்தும் முதலாளித்துவத்தின் கைக்கூலியாக இருந்து ‘பணம்’ பண்ணுவதற்கே’ நசிவு இலக்கியங்கள் படைக்கின்றார்கள். இப்படிப்பட்ட பூர்ஷ்வா நசிவு இலக்கிய கனவான்கள்தான் நடுநிலைமை வாதம், நற்போக்குவாதம், ஒழுக்க வாதம் என்று வெறும் கூச்சல் போடுகின்றார்கள்.

       இந்த நற்போக்கு வாதிகள் தொழிலாள வர்க்கத்தின் உத்வேகத்தை மழுங்கடிக்கவும், வீறுற்ற போராட்ட உணர்வுகளை சிதறடிக்கவுமே இலக்கியங்கள் படைக்கின்றார்கள். இவர்கள்தான் தொழிலாள வர்க்கத்தின் மானிட வர்க்கத்தின் பச்சைத் துரோகிகள்! விரோதிகளை மன்னித்தாலும், இப்படிப்பட்ட துரோகக் கலைஞர்களை மன்னிக்கவே கூடாது..

                  (2)  

எப்பவோ செத்துப்போன வாதமாம் ‘கலை கலைக்காக, மக்களுக்காகவல்ல’

என்பதை இன்னும் கூச்சல் போட்டுச் சொல்லிக் கொண்டிருப்பவர்கள், தனக்கும் விளங்காமல், வாசகர்களுக்கும் விளங்காமல் இலக்கியங்கள் படைக்கின்றார்கள். இவர்களேதான் ‘வாழ்க்கையின் அடித்தளத்தில் காணப்படுகின்ற சமுதாயப் பிரச்சினைகளை அலசி ஆராய்ந்து இலக்கியம் படைத்தால் - கலையின் ‘புனிதத் தன்மை’ இலக்கியத்தின் ‘ஒழுக்கம்’ கெட்டுவிடும் என்று சொல்லிக் கொண்டு ஒரு சில மேல்தட்டு வர்க்கத்தாரின் கீழ்த்தரமான உணர்ச்சிகளையும், காமக் களியாட்டங்களையும் எழுத்தில் வடித்து, கலையின் ‘கற்பை’ ஏந்தி எடுக்கிறார்கள். இப்படிப் பட்டவர்கள்தான், பெண்களை மட்டுமல்ல, மனித வர்க்கத்தையே நிர்வாணமாகப் பார்க்கும் ஒழுக்கங் கெட்ட கழிசடைகள்! ஆனால், இவர்கள்தான் இலக்கியத்தில் ஒழுக்கவாதம் பேசி, புனித சிலுவை சுமப்பவர்கள். ஏன்னே ஆச்சரியம்!

      ஒழுக்கவாதம் பேசிக்கொண்டு, மக்களுடன் பழகாதவாகள், அவர்களை நேசிக்hதவர்கள், உழைக்கும் மக்களின் கரங்களைப் பூஜி;க்காதவர்கள், உழைப்பாள மனித வர்க்கத்தின் வியர்வையின், கண்ணீரின் ரத்தத்தின் மதிப்பைத் தெரியாதவர்கள். படைக்கின்ற இலக்கியங்கள் உயிரோட்டமுள்ள இலக்கியங்களாகமாட்டா. அவை வெறும் சவலைக் குழந்தைகள்தாம். அந்தக் குழந்தைகளைக் கூட, அவர்கள் பெற்றெடுப்பதில்லை, பிதுக்கித் தள்ளுகிறார்கள். இப்படிப் பட்டவர்கள் மக்கள் இலக்கியச் சிருஷ்டி கர்த்;தாக்களின் விமர்சனங்களுக்கு முகம் கொடுக்கும் திராணியற்றவர்கள். ஆனால், இவர்கள்தான் - இவர்களைப் போன்ற பூர்ஷ்வாப்பர்தந்தாங்கிகள் தான் ‘நக்கீர தைரியத்துடனும், சத்திய வேட்கையுடனும் எழுதுகின்றோம்’ என்று தம்மைப் பறைசாற்றி பம்மாத்துப் பண்ணுகிறார்கள்.

     ஆகவே, பூர்ஷ்வா நசிவு இலக்கிய எத்தர்கள் எந்த வித சாதனையும் அற்றவர்கள். இந்த ஒழுக்கவாதம் பேசுகின்றவர்களின் நசிவு இலக்கியங்களை மக்கள் இலக்கியச் சிருஷ்டிப்பாளர்கள் தூக்கியெறிதல் வேண்டும். இப்படித் தூக்கியெறிந்து, இந்த இலக்கியப் பூச்சாண்டிகளின் குஷ்டரோகங்களை அம்பலப் படுத்தாத வரை, இலக்கியத்தில் எமது சாதனைகள் பின்தங்கக் கூடும்.
 
            (3)

     இன்று தூய்மைவாதம் பேசுகின்ற அளவுக்கு சமுதாயத்தை முதலாளித்தும் அமைத்து வைத்திருக்கின்றது. இந்த முதலாளித்துவத்தின் கைக்கூலியாக இருக்க்pன்ற மாயாவாத எழுத்தாளர்கள் அதன் அமைப்பைக் கட்டிக்காக்க ஒழுக்க வாதம் பேசிக்கொண்டும், மேல்தட்டு வர்க்கத்தில் வாழுகின்ற சுகஜீவிகளின் கீழ்த்தர உணர்ச்சிகளை எழுதிக் கொண்டும். தம்மை ‘கலாச்சாரத்தைக் கட்டிக்காப்பவர்கள்’ என்று நினைத்தும் தமக்குள்ளே பூரிப்படைந்தும் கொள்கின்றார்கள். அதே நேரத்தில் தேசமக்களின் உணர்வுகளை, அவர்களின் தேவைகளைப் பிரதிபலிக்கும் தேசிய இலக்கியங்களைப் படைப்பவர்களைப் பார்த்து, ‘இவர்கள் இலக்கியத்தின் புனிதத் தன்மையைக் கெடுக்கும் எழுத்தாளர்களென்றும், கலாச்சாரத்தை சீர்குலைப்பவர்கள் என்றும் வெற்றுக் கூச்சல் போடுகின்றார்கள்.

     தனிநபர் வாதத்தை இலக்கியத்தில் சிருஷ்டிக்கின்ற இந்தத் தூய்;மை வாதிகள் தம்மை ‘கலாச்சாரத்தைக் கட்டிக் காப்பவர்கள்’ என்று சொல்வதிலிருந்து நாம் அவர்களின் பூச்சாண்டித் தனத்தைத் தெரிந்து கொள்ளலாம். கலாச்சாரம் என்பது பொது மக்களுடைய சொத்து, அது தனிமனிதனுடையதல்ல! தனிநபர் வாதம் பேசுவதினால் கலாச்சாரத்தை சீர்குலைக்கலாமே யொழிய, கட்டிக் காக்க முடியாது. ‘கட்டிக்காக்கிறோம்’ என்பது வெறும் பூச்சாண்டித்தனமே!

    இப்படிப் பட்ட பூச்சாண்டிகளின் முகமூடிகளைக் களைந்து, அவர்களை அம்பலப்படுத்தம், வறுமையின் சிருஷ்டி கர்த்தாக்களை அழித்து வறுமையையும், சமுதாயச் சீர்கேட்டையும் ஒழிப்பதற்காகப் பேனையை எடுப்பவர்கள்தான் உண்மைக் கலைஞர்கள். அவர்களின் சிருஷ்டி இலக்கியங்கள்தான் காலத்தில் எதிர்நீச்சல் போட்டு நிலைத்து வாழும் தகைமையுடையன.
    மக்களை நேசித்து, மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளைத் தீர்க்க, அவர்களின் அபிலாசைகளுக்கு, உணர்ச்சிகளுக்கு மதிப்பளித்த, அவர்களின் விடுதலைக் கோஷங்களை தம்முடைய குரலாக்கி இலக்கியம் படைத்ததனால்தான் பாரதி, புதுமைப்பித்தன், வாரா, போன்றவர்களும் இன்னும் பலரும் மக்கள் மத்தியில் மதிப்புடன் நிலைத்து வாழ்கின்றனர். அவர்களின் இலக்கியங்கள் இன்னும் அழியாப் புகழுடன் திகழுகின்றன என்பதை யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.

    இன்றைய காலகட்டத்தில் மக்கள் இலக்கியம் படைக்கத் துணிந்து பேனை பிடித்த கலைஞர்களின் முதல் வேலை வறுமையை அழிப்பதுதான். வறுமையை அழிக்கவேண்டிய உண்மைக் கலைஞர்கள் முதலில் மனிதர்களின் குணாம்சங்கள் செயல்படும் விதங்களைத் தெரிந்து வைத்திருத்தல் வேண்டும். ஏனெனில் மனிதர்களின் ஒவ்வொரு செய்கைகளுக்கும் ஒவ்வொரு காரணங்கள் உண்டு. மனிதர்களின் செய்கையை வைத்துக் கொண்டு மட்டும், அவர்களை எடை போடுவது தப்பிலித்தனமாகும். இந்த வகையில் பார்க்கப் போனால் நற்போக்கென்னும் நசிவு இலக்கியப் பூச்சாண்டிகள் தப்பிலிகள்தான்! இவர்கள் மனிதர்களின் செயல்களை மட்டுந்தான் பார்க்கின்றார்கள். அதற்குரிய காரணங்களை இவர்கள் ஆராய்வதில்லை. அப்படி ஆராய்ந்து பார்ப்பதால் அவர்களின் ‘தூய்மை’  ‘ஒழுக்கம்’  ;புனிதம்’ கெட்டுவிடும் போலும். இப்படிப்பட்ட தூய்மைவாதம் பேசுவோர்கள் முதலாளித்துவத்தின் பாதந்தாங்கிகள். இந்தக் கழிசடைகளின் சுயரூபத்தை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டும்!
    சமூகத்தில் சீர்கேட்டையும்;, ஒழுக்கக் கேட்டையும் சிருஷ்டிப்பது வறுமை, அந்த வறுமையைச் சிருஷ்டிப்பது முதலாளித்துவம். இதை மக்கள் இலக்கிய சிருஷ்டிகர்த்தா தெரிந்து கொண்டு செயற்படவேண்டும். வறுமையை ஒழிக்கக்கூடிய போர்த்தந்திரங்களையும் அவன் பெற்றிருத்தல் வேண்டும்.   :

     முதலாளித்துவத்தின் பாதந்தாங்கிகளான நற்போக்கு இலக்கியப் பம்மாத்துக் காரர்களைச் சாடி, ஒழித்தல் வேண்டும். ஏனெனில் இவர்களின் கழிசடை இலக்கியங்கள் தொழிலாள வர்க்கத்தின் - மனிதவர்க்கத்தின் போராட்ட வீறை மழுங்கடிக்கக் கூடியவைகளே.

     தொழிலாள வர்க்கம் வீறுகொள்ள வர்க்க இலக்கியங்கள் படைக்க வேண்டும். முதலாளித்துவத்திற்கு கல்லறை கட்ட வேண்டியவர்களான தொழிலாள வர்க்கம் வீறுகொண்டால்தான் அவர்களை அழிக்க முடியும். முதலாளித்துவம் தானாக அழிந்து போக மாட்டாது. அதனை அழிக்க வேண்டும்!

     முதலாளித்துவத்தின் அழிவில்தான் வறுமை அழியும். வறுமையின் அழிவில்தான் கொலை, களவு, கற்பழிப்பு போன்ற குரூர தீச் செயல்கள் அழிந்து புதிய சமுதாயம் - பொதுமை சமுதாயம் மலரும். அந்தச் சமுதாயத்தில்தான் அன்பு, சமாதானம், ஒழுக்கம் ஆகிய இவைகள் தூய்மை பெற்று வாழும். அதற்காக மக்கள் இலக்கியச் சிருஷ்டிப்பாளர்கள் இலக்கியத்தில் சமூகப் பார்வையைக் கையாளவேண்டும்.

அனுப்பியவர்: நவஜோதி யோகரட்னம்  இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.