நேற்று நடந்த இயல்விருது 2024 நிகழ்வில் ஒரு முக்கியமான அறிவிப்பினை ஆரம்பத்தில் சட்டத்தரணி மனுவல் ஜேசுதாசன் விடுத்திருந்தார். அது இவ்வாண்டிலிருந்து தமிழ் இலக்கியத்தோட்டம் வழங்கும் இயல் விருது , அ.முத்துலிங்கம் இயல் விருது' என்றழைக்கப்படும்.

இன்னுமொரு விடயமும் முக்கியமானது. அதனைத் தமிழ் இலக்கியத் தோட்டத்தை உருவாக்கியவர்களில் பிரதானமானவரான எழுத்தாளர் அ.முத்துலிங்கம் ஆற்றிய உரையின் மூலம் அறிந்தேன். அவர் தான் இவ்வாண்டிலிருந்து தமிழ் இலக்கியத் தோட்டச் செயற்பாடுகளிலிருந்து ஓய்வு பெறுவதாகக் குறிப்பிட்டார். இயல்விருது மேல் தமிழக இலக்கிய ஆளுமையாளர்கள் பலருக்கும் ஆர்வம் இருப்பதற்குரிய காரணங்களில் முக்கியமானது அதன் பின்னால் இருக்கும் எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் ஈடுபாடும், பங்களிப்பும்.

போற்றுதல் , தூற்றுதல்களுக்கு மத்தியில் கடந்த 25 வருடங்களாகத் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் மூலம் இலக்கிய ஆளுமைகள் பலருக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழக, இலங்கை, கனடா உட்படப் புகலிட நாடுகள் பலவற்றிலுள்ள இலக்கிய ஆளுமைகள் பலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அது முக்கியமான பங்களிப்பு.

முதுமைப் பிராயத்திலும் தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கும் , கொண்டிருந்த எழுத்தாளர்கள் பலர். அவர்களில் என் கவனத்தை ஈர்த்தவர்கள்: அ.முத்துலிங்கம், அமரர் எஸ்.பொ, அமரர் நந்தினி சேவியர், என்.கே.மகாலிங்கம், அமரர் செ.கணேசலிங்கன், அமரர் குறமகள், அமரர் கே.எஸ்.சிவகுமாரன், பேராசிரியர் எம்.ஏ.நுஃமான், பேராசிரியர் நா.சுப்பிரமணியன், முனைவர் கெளசல்யா சுப்பிரமணியன், அமரர் வி.கந்தவனம், அமரர் டொமினிக் ஜீவா... இவர்கள் உடனடியாக நினைவுக்கு வருபவர்கள்.

இவர்களிடத்தில் என்னை மிகவும் கவர்ந்த விடயம் - இடைவிடாமல், சளைக்காமல், இயங்கும் தன்மை. இவ்வகையில் இவர்கள் முன்மாதிரிகள். தமிழ் இலக்கியத் தோட்டத்தின் செயற்பாடுகளிலிருந்து அ.முத்துலிங்கம் அவர்கள் ஓய்வு பெற்றாலும் , தொடர்ந்தும் ஆக்கபூர்வமான தனது ஆலோசனைகளை அவர் அமைப்புக்கு வழங்கிக்கொண்டிருப்பார் என எதிர்பார்க்கலாம்.