எழுத்தாளர் பூங்கோதையை   முகநூல் வாயிலாகவே அறிவேன். ஆசிரியர்.  ஐக்கிய இராச்சியத்தில் வசித்து வந்தவர். என் நட்பு வட்டத்திலுள்ளவர். 'அபத்தம்' இணைய இதழில் தொடர்ச்சியாக எழுதியவர். கட்டுரைகள், சிறுகதைகள் என எழுதிக்கொண்டிருந்தவர் குழந்தைகள் இலக்கியத்திலும் தீவிரமாக இயங்கியவர்.  ஷோபா பீரிஸ் (Shobha Peries) சிங்கள மொழியில் எழுதிய குழந்தைக்கதை ஒன்றை 'ஒரு குட்டிக் குரங்கின் கதை' என்று தமிழுக்குக் கொண்டுவந்தவர்.

பதிவுகள் இணைய  இதழிலும் பூங்கோதை என்னும் பெயரில் 'நீர்கொழும்பு மான்மியம்- ஒரு சந்திப்பும் சில நினைவுகளும்!' என்னுமொரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் அவர் தன் குடும்பத்தினரின் நீர்கொழும்பு அனுபவங்களுடன் , எழுத்தாளர் முருகபூபதி அவர்கள் பற்றியும் நினைவு கூர்ந்திருந்தார்.

'இடுக்கண் வருங்கால் நகுக'  என்றார் வள்ளுவர். 'துன்பம் நேர்கையில் யாழ் மீட்டி இன்பம் சேர்  ' என்றார் பாரதிதாசன். இவ்விதமே வாழ்ந்தவர் எழுத்தாளர் பூங்கோதை (இயற்பெயர் - கலா ஶ்ரீரஞ்சன்)

கடந்த சில வருடங்களாகத்  தன்னைப் பாதித்திருந்த நோயுடன் சிரித்த முகத்துடன் போராடி வந்தவர். அவரது ஆரோக்கியமான , நேர்மறை ஆளுமை அவரை மீட்குமென்று முகநூல் நண்பர்கள் பலரும் எண்ணியிருந்தோம். எம் நம்பிக்கை  பொய்த்துப்போனது. ஆனால் இறுதி வரை அவர் கலங்கி நின்றதில்லை. நம்பிக்கையுடன் எதிர்நீச்சலிட்டு வந்தார். அந்த நம்பிக்கையின் , எதிர்நீச்சலின் குறியீடாக அவர் விளங்குவார். 

முகநூலில் பிரசன்னமாகும் தருணங்களில் எல்லாம் முகநூலைக் கலகலப்பாக்கியவர். தன்னைக் 'குழைக்காட்டு இளவரசி' என்று உருவகித்து மென்மையான புன்னகையுடன் வளைய வந்தவர் எம்மையும் சிறிது புன்னகைக்க வைத்தார்.

அண்மைக்காலமாக இவரது முகநூற் பதிவுகள் எவையும் என் கண்களில் அகப்படவில்லை. அதனால் இவரது இறுதிப்பதிவையும் தவற விட்டு விட்டேன்.  இவரது மறைவுச் செய்தியின அறிந்ததும் இவரது பக்கத்தைப் பார்த்தபோதுதான் அதனைப் பார்க்க முடிந்தது. அதனை அவர் நினைவாக இங்கு பகிர்ந்து கொள்கின்றேன். அப்பதிவின் தலைப்பு 'காதோடுதான் நான் பாடுவேன்'. அப்பதிவை இப்பொழுது வாசிக்கையில் தன் முடிவை அவர் உணர்ந்து எழுதிய பிரியாவிடைப் பதிவாகவே தென்படுகின்றது. 

காதோடுதான் நான் பாடுவேன்'

"அன்பர்கள் ஆதரவாதர்களுக்கு! No அனுதாபப் பின்னுட்டங்கள் please! No hello, hello! எனது ஓய்வு தற்போது மிக முக்கியம் அன்பர்களே.

கடந்த நான்கு, ஐந்து வாரங்களாக tonsillitis எனப்படும் உணவுக்குழாய், குரல்வளைக்கு மேலிருக்கும் அடி நாக்குப் பகுதியில் வீங்கி இருப்பதால், மிக மெதுவாக  இரகசியம் மட்டும் தான் பேச முடிகிறது. வைத்தியர்களின் அறிவுரையின் படி அமைதி காத்தல் தான் பயன் தருகிறது. 

ஆனால் மூன்று முறைக்கு மேல் வைத்தியசாலைக்குப் போய் வந்தும், எந்தப் பலனும் இல்லாது போனாலும், இப்போது என்னுடைய கான்சர் வைத்தியசாலையின்  வைத்தியரின் அறிவுறையின் பெயரில் என்னை ஒரு வைத்தியசாலையில் வைத்திருந்து, தொடர்ச்சியான பரிசோதனைகள், மருந்துகள் அனைத்தையும் ஊசிகள் மூலமாக ஏற்றிக் கொண்டிருப்பதால், விடயம் தெரியாமல் “ அலோ, அலோ” சொல்லத் தொலைபேசி எடுப்பது எனக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச வீரியத்தையும் வீணாக்கி விடும் என்பதை இத்தால் மிகத்தாழ்மையாக அறியத் தருகிறேன்.  

அதே போல  'என்ன, சுகம் வந்திட்டதா?'  போன்ற silly கேள்விகளையும் கேட்காதீர்கள். ஏனென்றால் அந்தக் கேள்விக்கு இன்னும் வைத்தியர்களுக்கே பதில் தெரியாது.  'பாத்தீங்களே, உங்களுக்கு இந்த உதவி எல்லாம் செய்கிறார்கள்'  என்பதும் முற்றும் சரியான கூற்றாகாது. நான் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆசிரியராக உழைத்து, அரசிற்குச் செலுத்திய வரிப்பணம், Health insurance என்றெல்லாம் கட்டியதைத் தான் எனக்குத் தருவதோடு, ஏதோ பிரபஞ்ச விதியால் வழமையை விடக் கூடுதலான வசதிகள் வந்து குவிகின்றன என்பது ஏதோ உண்மை தான்.

அதை ஒரு புறம் விட்டு விட்டு வழமை போல் கதைகளைச் சொல்லியும்- எழுதியும், சிந்தித்தும் மகிழ்வோம்."


பதிவுகள இணைய இத்ழில் வெளியான எழுத்தாளர் பூங்கோதையின்  கட்டுரை:

நீர்கொழும்பு மாண்மியம்- ஒரு சந்திப்பும் சில நினைவுகளும்! - பூங்கோதை -

[06 செப்டம்பர் 2023 ] அவுஸ்திரேலியா - மெல்பேர்னிலிருந்து எமது மூத்த ஊடகவியலாளர், எழுத்தாளர், நீர்கொழும்பை பூர்வீகமாகக் கொண்ட, திரு முருகபூபதி  இங்கிலாந்து வருகையின் போது ,  ஏறத்தாழ நாற்பது வருடங்களின் பின் ஒரு குடும்ப உறவினராக என்னைச் சந்தித்துக் கொண்டது மனதை நெகிழ வைத்தது.  பேசுவதற்கும் பழகுவதற்கும் மிக இனிமையான மனிதர். பல இலக்கிய விருதுகளை வென்றதற்கான  கர்வம் எதுவும் இல்லாதவர். நான் உரிமையுடன் சிறு வயதில் பார்த்துப் பழகியவர்.

என் வாழ்வில் மிக இனிமையான வசந்த காலம் என்றால் அது நான் என் பெற்றோரோடு நீர்கொழும்பில் வாழ்ந்த காலப்பகுதி தான். இன, மத, மொழி வேறுபாடுகள் இன்றி அனைத்து மக்களும் ஒருவருக்கொருவர் அன்போடும் விட்டுக் கொடுத்தலோடும் அழகான ஒரு சமூகக் கட்டுமானத்தை அங்கு அமைத்திருந்தார்கள்.  

நீர்கொழும்பில் எம்மோடு வாழ்ந்த அநேகமான பல தமிழ்,  சிங்கள, முஸ்லிம் மற்றும் ஏனைய கலப்பு  இனக் குடும்பங்களை இன்று வரையும் நான்  நினைவில் வைத்திருந்தாலும், பல விடயங்கள் மறந்தும் போயிருந்தன.

வந்தாரை வாழ வைக்கும் சிங்கார நீர்கொழும்பில் தான் எனது தாயும் தந்தையும் தமது திருமண வாழ்வை 1966ம் ஆண்டில் ஆரம்பித்திருந்தனர். ஆனால் அதற்கு முன்பே என் தந்தை அங்கு தனது மூத்த சகோதரர் திரு செல்லத்துரையுடன் காலணிகள் விற்கும் தொழிலை ஸ்தாபித்திருந்தார்.

ஆசிரியையான அம்மாவுடன் சூரியா வீதியில் வாடகைக்கு வாழ்ந்த போது, அவர்களுக்கு வசதியாக காளி கோவிலோடு அமைந்திருந்த சிறு ஒழுங்கையில், அதனை ஏழு வீட்டுப்  பேலி என்பார்கள், இறுதியாக அமைந்திருந்த ஏழாவது வீடு விற்பனைக்கு வந்திருந்ததில், அதனை வாங்கி அங்கே குடி புகுந்தார்கள். நானும் எனது இரு சகோதரர்களும் சிறு வயதில் வாழ்ந்த வீடும் அதுவாகியது. அம்மாவும் அங்கு விஜயரட்ணம் மகா வித்தியாலயத்தில் ஒரு தமிழ் ஆசிரியையாக பணி புரிந்ததில்,  ஆசிரிய சமூகமும் எம்மோடு ஒன்றிணைந்திருந்தது.

இப்படியாக வாழ்ந்த காலப்பகுதியில்  எம்மோடு, இலக்கிய வாழ்வு கடந்து, ஒரு சமூக செயற்பாட்டாளராக, சமூக ஆர்வலராக சமூகத்தில் இணைந்து வாழ்ந்த ஒருவர் தான் திரு இலட்சுமணன் முருகபூபதி அவர்கள். அவரைப் பற்றிய இலக்கியம் சார்ந்த விடயங்கள், அவருடைய தொடர்ச்சியான சேவைகள் என்பன   பற்றி நான் எழுதித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை ஆகையால் இங்கு, ஏறத்தாழ நாற்பது வருடத்தின் பின்,  அவரோடான எனது சந்திப்பைப் பற்றி மட்டுமே எழுதுவது எனத் தீர்மானித்தேன். சிறுவயது வாழ்வை, சில சம்பவங்களை இரை மீட்பது உள ஆற்றுபடுத்துகைக்கு ஈடானதாகவும் அமைந்திருந்ததும் இதற்கு இன்னொரு காரணம்.

என் ஆழ் மனதில் புதைந்து கிடந்த அனுபவங்களை திரு முருகபூபதியோடு பகிர்ந்து கொண்டது, நீர்கொழும்பில் எம்மோடு இணைந்திருந்த  பல இடங்களும், பல சிறந்த மனிதர்களும் மீண்டும் நினைவில் வரக் காரணமானது.

1954 இல் நீர்கொழும்பு விஜயரட்ணம் மகா வித்தியாலயம் (விவேகானந்தா வித்தியாலயமாக நிறுவப்பட்டது) ஆரம்பிக்கப்பட்ட போது  முதன் முதல் கல்வி கற்கச் சென்ற 32 மாணவர்களில் திரு முருகபூபதியும் ஒருவர். இதே பாடசாலையில் எனது தாயாரும் 1970 களில் கற்பித்திருக்கிறார்.  ஒரு சிங்கள, கத்தோலிக்க ஆரம்ப பாடசாலைக் கல்வியை முடித்த பின் நானும் சில வருடங்கள் இங்கு என் கல்வியைத் தொடர்ந்திருந்தேன்.

தன்னுடைய பத்தாவது வயதில் புலமைப் பரீட்சையில் சித்தியடைந்து, யாழ்ப்பாணம் நோக்கி புகையிரதத்தில் பயணம் போகும் போது தான், முதன் முதலாக தனக்குப் பனைமரங்களை பார்க்கக் கிடைத்தது என்பதையும் ஒரு குழந்தையின் பூரிப்போடு சொல்லி மகிழ்ந்தார் இந்த இலக்கிய ஆளுமை.   

[டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banada) உதவி : VNG]