கலா சிறிரஞ்சனின் மரணச்செய்தி காதை வந்து எட்டியது. மனம் துணுக்குற்றது. ஒரு சிறிய காலப் பகுதியில் மட்டுமே பழகியிருந்தாலும் மனதில் ஏதோ ஒரு துயரம் அப்பிக் கொண்டது. 'வாழ்க்கை என்பதே மரணத்தை நோக்கிய ஒரு பயணமே! ' என்பது ஒரு நிரந்தரமான உண்மையாயினும் எல்லா மரணங்களையும் எம்மால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.

முதன் முறையாக அவரை மறுநிர்மாணம் அமைப்பினர் நடத்திய கௌரிகாந்தனின் 'அறமும் போராட்டமும்' நூல் வெளியீட்டு நிகழ்விலேயே பார்த்திருந்தேன். அன்று அந்நிகழ்வினை அவரே நெறிப்படுத்தியிருந்தார். தமிழிலும் ஆங்கிலத்திலும் சரளமாகப் பேசக்கூடியவர் என்பதினையும் கல்விப்புலமையில் தேர்ச்சி பெற்றவராக இருப்பார் என்பதினையும் புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. ஆனால் அன்று எனக்கு அவரிடம் எந்தவித அறிமுகமும் ஏற்பட்டிருக்கவில்லை.

பின்பொருநாள் விம்பம் அமைப்பினர் ஒரு கவிதை விமர்சன நிகழ்வொன்றினை நடாத்தியிருந்தனர். அதற்கு பா.அகிலனின் 'அம்மை ' நூல் குறித்து உரையாற்ற என்னை அழைத்திருந்த படியால் போயிருந்தேன். அங்கு அவரும் வருகை தந்திருந்தார். நெற்கொழுதசனின் 'வெளிச்சம் என் மரணகாலம்' நூல் குறித்து உரையாற்ற வந்திருந்தார். தானாக அறிமுகப்படுத்திக் கொண்டார். தனக்கு இந்தக் கவிதைத்தொகுப்பு மிக நெருடலாக இருந்ததாகவும் ஒரே புலம்பல் என்றும் முறைப்பாடு செய்தார். நெற்கொழுதாசன் படைப்புக்கள் மீது எனக்கு ஏற்கனவே நல்ல பரிச்சயம் இருந்ததினால் அது குறித்து அவருடன் சிலாகித்தேன். தொடர்ச்சியான உரையாடலில் இருந்து அவர் தற்கால நவீன இலக்கியங்களில் இருந்து கொஞ்சம் தூரமாகவே இருக்கின்றார் என்று புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. அதனை அவரும் என்னிடம் தெரிவித்தார். தான் தொண்ணூறுகளில் 'ஈழபூமி' பத்திரிகையில் தொடர்ந்து எழுதியதாகவும் பின்பு தனது பட்டப்படிப்பு, குடும்பம், வேலைப்பளு போன்ற காரணங்களினால் இலக்கிய உலகுடன் ஒரு இடைவெளி ஏற்பட்டிருந்ததாகவும் ஆனால் சில வருடங்களுக்கு முன்பு தமயந்தியின் 'ஏழு கடற்கன்ன்னிகள்' நூல் வெளியீட்டின் மூலம் மீண்டும் இணைந்து கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதனையே அவர் அன்றைய தனது உரையிலும் வெளிப்படையாகவே தெரிவித்துக் கொண்டார். பாரதியார், பாரதி தாசன் கவிதைகளில் இருந்து ஹைக்கூ கவிதைகள் வரையே தனக்கு பரிச்சயம் உள்ளதாகவும் இந்தக் கவிதைகள் தனக்கு கொஞ்சம் புதிராக இருப்பதாகவும் சொல்லிக் கொண்டார். அவர் தனது உரையில் 'தமிழனென்று சொல்லடா ! தலை நிமிர்ந்து நில்லடா!' என்ற பாடலை பாரதியாரின் பாடல்கள் என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கு நான் 'மன்னிக்கவும் அதனை பாரதி எழுதவில்லை. அது நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை எழுதிய பாடல் ' என்றதும் ஒரு முறை முறைத்தார். பின் சிரித்துக் கொண்டே "நீங்கள் எல்லாம் கொஞ்சம் வில்லங்கமான ஆட்கள்தான் " என்று சொல்லிப் போனார்.

அதற்கு பின்பு அவரை பல நிகழ்வுகளிலும் காணக் கூடியதாக இருந்தது. நான் சார்ந்திருந்த மக்கள் கலை பண்பாட்டுக் களத்தினரின் நிகழ்வுகளுக்கும் தயங்காமல் வருகை தந்திருந்தார். பின்பு Covid 19 பெருந்தொற்றுக் காலம் வந்தது. நாம் உள்ளே முடக்கப்பட்டிருந்தோம். அவர் முக நூலில் ஒரு 'ராட்சசி' போன்று மிகவும் தீவிரமாக இயங்கினார். எனது பதிவுகள் அனைத்திற்கும் உடனேயே விருப்பக்குறிகள் வந்து விழுந்தன. உரையாடல்களும் தொடர்ந்தன. இக்காலப்பகுதியில் பல சிறுகதைகளையும் விமர்சனக் கட்டுரைகளையும் தீவிரமாக எழுதிக் கொண்டிருந்தார். அவை பல்வேறு மின்னிதழ்களிலும் பிரசுரமாகிக் கொண்டிருந்தது.

அச்சமயம் எமது நேரிடையான நிகழ்வுகள் முடக்கப்பட்டு மெய்நிகர் நிகழ்வுகள் ஆக மாறிப் போயின. இந்தக் காலப்பகுதியில் அவர் இல்லாத நிகழ்வுகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு இலக்கிய உலகில் அவர் எங்கும் நிறைந்தவராக காணப்பட்டார். அக்காலகட்டங்களில் அதற்குப் பின்னரும் நெறியாள்கை என்றாலே 'கலா சிறிரஞ்சன் ' தான் என்பது போல் அநேகமான நிகழ்வுகளிற்கு அவரே தலைமை தாங்கினர். மிகுந்த கண்டிப்புடனும் கட்டுப்பாட்டுடனும் அவர் நிகழ்வினை நெறிப்படுத்தும் பாங்கே அலாதியானது. இதில் இவர் நவமகனின் 'போக்காளி' நாவலையும் ஜோர்ச் குருசேவ் இன் சிறுகதைத்தொகுப்புக்களையும் அறிமுகம் செய்யும் நிகழ்வுகளை நெறிப்படுத்தியது இன்னமும் நினைவில் நிற்கின்றது. மீண்டும் விம்பம் நடத்திய நிகழ்வொன்றில் நவமகனின் 'போக்காளி' நாவல் விமர்சன அரங்கில் அவர் நெறிப்படுத்தலின் கீழ் நான் உரையாற்றியது இன்னும் பசுமையான நினைவுகளாக எஞ்சி நிகின்றது. மிகக் குறுகிய காலத்தில் அவர் ஒரு மாபெரும் பாய்ச்சலை நிகழ்த்தியிருப்பது புரிந்தது. நேர்வேயில் நடைபெற்ற கவிஞர் இளவாலை விஜயேந்திரனின் பாராட்டு விழாவிற்கு விழா ஏற்பாட்டாளர்கள் விமானப் பயணச் சீட்டு முதற்கொண்டு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து இவரை அழைத்திருந்ததில் இருந்து இவர் அந்நேரம் ஒரு ஆளுமையின் உச்சமாகத் திகழ்ந்தார் என்பதினை புரிந்து கொள்ளலாம்.

பின்பு பேராசிரியர் மு.நித்தியானந்தனின் பவளவிழாவில் சந்தித்த போது அதிக நேரம் உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது. இறுதியாக அவரை விம்பம் - நாவல் விமர்சன அரங்கில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் அங்கு சர்மிளா செய்யித் இன் 'இருசி' நாவல் குறித்து உரையாற்றச் சென்றிருந்தேன். அவர் யதார்த்தனின் 'நகுலாத்தை' நாவலுடன் வந்திருந்தார். உண்மையில் அன்று அவர் மிகச் சிறந்த உரையொன்றினை ஆற்றியிருந்தார். இதுதான் எமது கடைசிச் சந்திப்பு என்று அப்போது எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

பின்பு வாழ்வில் ஏற்பட்ட மிகப் பெரிய நெருக்கடிகள் காரணமாக இந்நிகழ்வுகள எதிலும் பங்கு பற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. இடையில் அவரது சிறுகதைத் தொகுப்பு ஒன்று வெளியாகியிருந்ததை அறிந்தேன். எம்.பௌசரை அவரது புத்தகக் கடையில் சந்தித்த வேளையில் 'நிறமில்லா மனிதர்கள் ' என்ற அவரது சிறுகதைத் தொகுப்பினை வாங்கிக் கொண்டேன். ஒரே இரவில் அதனை வாசித்து முடித்தேன். பெரிதும் உளவியல் சார்ந்த கதைகளாக இருந்தன. இந்த மேற்குலகின் ஒரு பெருநகரில், ஒரு நவீன வாழ்க்கைக்குள் அவர் தன்னை தகவமைத்துக் கொண்டிருந்தாலும் அவரது மனம் அவர் பிறந்து வளர்ந்த தென்மராட்சிப் பிரதேசத்து குழைக்காட்டுத் தேவதைகளுடனேயே உரையாடிக் கொண்டிருந்தது என்பதினை அவரது ஒவ்வொரு எழுத்துக்களிலும் பதிவுகளிலும் இருந்து உணரக்கூடியதாக இருந்தது. கூடவே அவரது பத்து வயதில் மறைந்து போன அவரது தாயின் பிரிவும் ஏக்கமும் கடைசிவரை அவரை விட்டு விலகியிருக்கவில்லை என்பதினையும் அவரது எழுத்துக்களிலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது.

இந்நூலின் முன்னுரையில் அவர் பின்வருமாறு கூறியிருந்தார், "என் மனதில் பதிந்திருக்கும் பல நூறு சம்பவங்களும் அனுபவங்களும் கதைக் கருக்களும் பிரசவத்திற்காக காத்துக் கிடக்கின்றன. தொடர்ந்தும் என் எழுத்துக்கள் பிரசவிக்கப்பட வேண்டும் என்ற ஆவலும் நம்பிக்கையும் எனக்குள் உண்டு "

அவர் மறைந்து விட்டார். அவரது மரணத்துடன் தகனமாகிப் போயிருந்தது அவரது உடல் மட்டுமல்ல. கூடவே அவரது நினைவுகளும் எண்ணங்களும் நம்பிக்கைகளும் அவரிடம் சேகரமாகியிருந்த கதைக் கருக்களும் கூட தகனமாகி விட்டன என்பதுதான் மாபெரும் துயரம். ஆயினும் இந்த மாபெரும் இலக்கிய வானில் அவரது படைப்புக்களுடன் அவரும் ஒரு தாரகையாய் எங்கோ ஒரு மூலையில் தொடர்ந்தும் பிரகாசித்துக் கொண்டிருப்பார் என்பது எனது நம்பிக்கை.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.