
- எழுத்தாளர் அழகு சுப்பிரமணியம் -
1
ஈழத்திலிருந்து ஆங்கிலத்தில் எழுதி உலகப்புகழ் பெற்ற இலங்கைத் தமிழர். இவர் இலங்கைக் காரைநகரில் 1915 பிப்ரவரி 15 பிறந்தவர். இவரது தந்தையார் இலங்கையில் நீதிபதியாகப் பணியாற்றியவர். இவரும் அவரது தந்தையாரும் இலக்கிய ஆர்வமிக்கவர்கள். அதனால் அவரது மகன் அழகு சுப்பிரமணியத்தை வெளிநாட்டில் சட்டத் துறையில் பயில வைத்தார். சட்டத்துறையில் பரிஸ்டர் பட்டம் பெற்ற இவர் இலங்கை உயர் நீதிமன்ற வழக்கறிஞராகப் பணியாற்றினார். அவரது குடும்பத்தினரின் இலக்கியத்துறை ஆர்வத்தின் காரணமாக அழகு சுப்பிரமணியமும் ஆங்கில இலக்கியத்துறையில் ஈடுபட்டு உலகப் புகழ் பெற வழிவகுத்தது.
இலண்டனில் பயின்றுகொண்டிருந்த காலத்திலே அங்கு உலக கலை இலக்கிய ஆளுமைகளுடன் தொடர்புக் கொண்டிருந்தார். தாகூர், இந்தியாவின் முற்போக்கு எழுத்தாளர் முல்ராஜ் ஆனந்த் போன்ற உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர்களுடனும் அறிஞர்களுடனும் தொடர்பினைப் பேணியவர். அதன் காரணமாக இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் இணைச் செயலாளராக அழகு இயங்கினார். இத்தகையவர்களின் தொடர்பின் காரணமாக முற்போக்கு இயக்கம், இடதுசாரி இயக்கம், காலனிய எதிர்ப்பு இயக்கம் போன்றவைகளில் ஈடுபட்டவர். “Indian Writing” என்ற காலாண்டுச் சஞ்சிகையின் இணையாசிரியராகவும் இயங்கினார்.
அழகுவின் கதைகள் உலக, இலண்டன் மற்றும் இந்தியப் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் இடம்பிடித்துள்ளன. உதாரணமாக இந்தியச் சஞ்சிகைகளில் ஒன்றான The Illustrated Weekly of India போன்றச் சஞ்சிகைகளில் கதைகள் எழுதி இலக்கிய விமர்சகர்களிடையும் வாசகர்களிடையும் பெரும் வரவேற்பைப் பெற்றார்.
“Lovely Day” என்ற சிறுகதை ‘மிகச் சிறந்த இந்தியச் சிறுகதைகள்’ என்ற ஆங்கிலச் சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. “The Mathematician” என்ற சிறுகதை “உலக இலக்கியத்தின் உன்னதச் சிறுகதைகள்” என்ற தலைப்பில் ஹைடல்பேர்க் நகரில் வெளியிடப்பட்ட தொகுப்பில் இடம்பெற்றது. இவ்வாறாக உலகச் சிறந்த சிறுகதைகளின் தொகுப்புகளில் அழகுவின் சிறுகதைகள் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் பல்வேறுக் காலகட்டங்களில் பல்வேறு இணையத்தளங்களில் அழகுவின் சிறுகதைகள் பற்றிய ஆய்வுகளும் சிறுகதைகளும் இடம்பெற்றன.
“பெரிய பெண்” (The Big Girl) என்ற கதை ரஷ்ய மற்றும் போலிஷ் மொழிகளுக்கு மொழிபெயர்க்கப்பட்டது.
“கணிதவியலாளர்” (The Mathematician) என்ற கதை ஜெர்மன் மொழிபெயர்ப்பில் சிறப்புப் பெற்றது.
இவர் லண்டனிலும் இலங்கையிலும் வாழ்ந்து வந்தார். “ப்ளூம்ஸ்பரி பின்னணி” என்பது இங்கிலாந்தின் ப்ளூம்ஸ்பரி (Bloomsbury) பகுதியில் நிலவும் இலக்கிய, கலை மற்றும் அறிவுசார் மரபுகளைப் பேசும் குழுமத்தில் சேர்ந்து இயங்கியவரைக் குறிக்கிறது.
ப்ளூம்ஸ்பரி என்பது லண்டனின் ஒரு பிரபலமான பகுதி. அங்கு 20ஆம் நூற்றாண்டின் ப்ளூம்ஸ்பரி குழு (Bloomsbury Group) என்ற புகழ்பெற்ற எழுத்தாளர்கள், கலைஞர்கள் மற்றும் அறிவுஜீவிகள் ஒன்றுகூடி விவாதங்கள் நடத்தி வந்தனர். இதில் விர்ஜினியா வூல்ஃப் (Virginia Woolf), எம்.ஆர்.ஏ. லாங்டன் (Lytton Strachey), ஜான் மேனார்ட் கெய்ன்ஸ் (John Maynard Keynes) போன்றோர் முக்கிய உறுப்பினர்களாக இருந்தனர்.
அதனால் “ப்ளூம்ஸ்பரி பின்னணி” என்றால், ஓர் இலக்கிய அல்லது அறிவுசார் சூழலில் அமைந்த கதை அல்லது வாழ்க்கையைக் குறிப்பிடலாம். அழகு சுப்பிரமணியம் எழுதிய நிறைவேறாத நாவலான “Mr. Moon” நாவல் இத்தகைய ஓர் அறிவுசார் மற்றும் இலக்கிய உலகத்தை மையமாகக் கொண்ட குறுநாவலாகும்.Top of Form
2
அழகுவின் ஆங்கிலக் கதைகள் நூல் உருவம் பெறுவதற்கும், அவரைப் பற்றி தமிழிலும் ஆங்கிலத்திலும் கட்டுரைகள் வெளிவருவதற்கும் பல வருடங்களுக்கு முன்பே, தமிழ்மொழிபெயர்ப்பில் அழகுவின் சிறுகதை 1949ஆம் ஆண்டு வெளிவந்துவிட்டது. 1949ஆம் ஆண்டு ஈழகேசரியில் அழகுவின் “சேதுப்பாட்டி” (The Flood) கதை இராஜ அரியரத்தினத்தின் மொழிபெயர்ப்பில் வந்தது.
பிற்காலத்தில் 2008ஆம் ஆண்டு செங்கை ஆழியானின் தொகுப்பில், 30–58 காலகட்ட ஈழகேசரியில் வெளியான சிறுகதைகளின் தொகுப்பான ஈழகேசரி சிறுகதைகள் என்ற வடக்கு–கிழக்கு வெளியீட்டுத் தொகுப்பிலும் இடம்பெற்றது. நாம் அறிந்த மட்டில், இதுவே அழகுவின் கதைகளில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட முதலாவது சிறுகதையாகும்.
3
1964ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அழகுவின் முதலாவது தொகுப்பான The Big Girl, இலங்கை கல்கிசை இரத்மாலானையில் அமைந்திருந்த Universal Printers எனும் அச்சகத்தில் அச்சிடப்பட்டு Author Publication ஆக வெளிவந்தது. அத்தோடு, இந்த நூலை அழகு தனது சகோதரன் D.K. அவர்களுக்குச் சமர்ப்பணம் செய்திருப்பதோடு, அந்த நூலை வெளியிட உதவிய Earle Wickramasinghe என்பவருக்கும் அழகு நன்றிச் சொல்லியுள்ளார்.
1964ஆம் ஆண்டு வெளியான The Big Girl என்ற அவரது தொகுப்பில் 17 கதைகள் இடம்பெற்றிருந்தன. The Mathematician, The Cat, The Thorn, The Convert, The Market Square, The Flood, The Fan, Professional Mourners, Cousin Thampoo, The Big Girl, Danger, The Malayan Pensioner, The Interpreter, Tennis The Scholar, Solomon's Justice, Lovely Day முதலான 17 சிறுகதைகள் அத்தொகுப்பில் இடம்பெற்றிருந்தன.
இந்த நூலில் உள்ள அனைத்துக் கதைகளும் உலகின் பல பகுதிகளில் வெளியான தொகுப்புகள், இதழ்கள், மாத இதழ்கள் மற்றும் செய்தித்தாள்களில் முன்பே வெளியிடப்பட்டவையாகும். அவற்றில் பல கதைகள் ஒன்றுக்கு மேற்பட்ட முறை வெளியாகியுள்ளன. சில கதைகள் பி.பி.சி.யின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஒலிபரப்புச் சேவைகளிலும் ஒலிபரப்பப்பட்டுள்ளன.
அப்படி வெளியான கதைகளைப் பற்றியும், அழகுவைப் பற்றியும் முன்வைக்கப்பட்ட உலகளவிலான கருத்துகளும் அழகுவின் முதலாவது தொகுதியான The Big Girlயில் இடம்பெற்றுள்ளன.
மேலைத்தேயவர்கள் ஆங்கிலத்தில் அழகைப் பற்றிச் சொன்ன கருத்துக்கள்
அழகு காலனிய காலத்தில் எழுதத் தொடங்கிய காலத்திலேயே புகழ்பெற்ற ஆங்கில நாவலாசிரியரும் விமர்சகருமான பால்டர் அலன்:
“எமது கருத்துப்படி அழகு சுப்பிரமணியம் ஓர் அற்புதமான எழுத்தாளராவார். இவரைப் போன்ற மிகச் சிறந்த எழுத்தாளர்களின் மூலமே மேற்குலகில் வாழும் நாங்கள் கீழைத்தேசங்களைத் தரிசிக்கின்றோம். இவருடைய படைப்புகள் பெரும்பாலும் இலங்கைப் பின்னணியிலேயே உருவாக்கப்பட்டுள்ளன. இதேபோன்று ஆங்கிலப் பகைப்புலத்தில் ஆங்கிலேயர்களுக்கே சவால் விடக்கூடிய முறையிலும் இவர் சில கதைகளை எழுதியுள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பால்டர் அலனைத் தொடர்ந்து, 1964ஆம் ஆண்டு இலங்கையில் வெளிவந்த அழகுவின் முதலாவது தொகுப்பான The Big Girl இடம்பெற்ற சிறுகதைகள் வெளிவந்த உலகளவிலான பிரசுரங்களில் வெளியான அழகுவின் கதைகளைப் பற்றிய கருத்துகளும் இடம்பெற்றிருந்தன.
“சுப்பிரமணியம் எழுதிய ‘The Mathematician’ என்ற கதையில் செகோவின் நகைச்சுவைக் கலந்த இலகுவான கிண்டலின் நறுமணம் உள்ளது.”
— ஷான் ஓ’ஃபோலேன், The Listener (லண்டன்)
“அழகு சுப்பிரமணியம் திறமையான எழுத்தாளர் ஆவார்.”
— ஹ்யூபர்ட் நிக்கல்சன், Half My Days and Nights
“திரு. சுப்பிரமணியத்தின் கதைகள் லண்டனில் அவர் நீண்டகாலம் தங்கியிருந்த காலத்தில் இலக்கிய விமர்சகர்களிடமிருந்து பெரிதும் பாராட்டைப் பெற்றன.”
— சி. ஆர். மாண்டி, The Illustrated Weekly of India
“அதிகார மனப்பான்மையின் மூடத்தனத்தையும் உருக்கமாகச் சொல்கிறது.” (Professional Mourners)
— ஜே. மக்லாரன்-ராஸ், The Tribune (லண்டன்)
“அழகு சுப்ரமணியம் எழுதிய ‘The Thorn’ ஒரு சிறந்த கதை. மனிதனின் இயல்பான குரல் இங்கு குழந்தைப் பருவத்தின் நிர்ப்பப்பத்தையும் அதிகாரமயமான மூடத்தனத்தையும் உருக்கமாக எடுத்துரைக்கிறது.”
— ஜே. மாக்லாரன் ராஸ், The Tribune (லண்டன்)
“சுப்ரமணியம் சுவாரஸ்யமான படைப்புகளை வழங்குகிறார்.”
— வால்டர் அலன், Time and Tide (லண்டன்)
“சுவாரஸ்யமான கதைகள்.”
— ஏ. எஸ். ராமன், ஆசிரியர், Illustrated Weekly of India
உலக அளவில் அறியப்பட்ட அழகைப் பற்றிய முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் இவை. இக்கருத்துக்களில், அழகுவின் கதைகளில் காணப்படும் கீழைத்தேயத் தன்மைகளோடு உலக அளவிலான ஆங்கில இலக்கியப் படைப்பாளிகளுடன் ஒப்பிட்டு, அவர்களின் தரத்தில் அழகுவை வைத்துப் பார்த்திருக்கிறார்கள் இக்கருத்துகளின் மூலம் தெளிவாகிறது.
4
இலங்கை எழுத்தாளர் அழகு சுப்ரமணியம் மற்றும் 1964 இல் வெளியான அவரது சிறுகதைத் தொகுப்பு குறித்து, 1965 ஆம் ஆண்டு The Daily Mirror இதழில் 'Arujana' எழுதிய விமர்சனக் கட்டுரையின் சுருக்கம்:
நூலின் சிறப்புகள்
இத்தொகுப்பில் உள்ள 17 கதைகளும் வசீகரமானவை, எதார்த்தமானவை மற்றும் உண்மையான நடை கொண்டவை.
இக்கதைகள் அனைத்தும் ஏற்கனவே உலகின் பல்வேறு புகழ்பெற்ற இதழ்கள், செய்தித்தாள்களில் வெளியாகியும், பி.பி.சி (BBC) வானொலியில் ஒலிபரப்பப்பட்டும் சர்வதேச அங்கீகாரம் பெற்றவை.
அழகு சுப்ரமணியத்தின் ஆளுமை
லண்டன் மற்றும் ஐரோப்பாவில் நீண்டகாலம் படித்து வழக்கறிஞராகத் திரும்பிய அவர், கவித்துவமான தோற்றமும் தனித்துவமான பண்பும் கொண்டவர்.
இங்கிலாந்தின் 'ப்ளூம்ஸ்பரி' (Bloomsbury) குழுவின் தாக்கம் அவரிடம் இருந்தபோதிலும், போலித்தனம் இன்றி விரல் நுனிவரை ஒரு சுதேசியாகவே வாழ்ந்தார்.
யாழ்ப்பாணச் சூழலில் இருந்து அவர் விலகியிருக்கவில்லை; மாறாக, பாரம்பரியத்தோடு அமைதியாகத் தன்னை ஆழமாகப் பிணைத்துக் கொண்டிருந்தார்.
எழுத்து நடை மற்றும் தனித்துவம்
அவரது கதைகளில் போலித்தனம் இல்லை; அவை எதார்த்தமான மனித வாழ்க்கையைச் சித்தரிக்கும் எளிய வீட்டுத் தயாரிப்பு சாண்ட்விச்சுகளைப் போன்றது.
வாசகர்களின் சுவைக்காக ஆங்காங்கே சுவாரஸ்யத்தைக் கூட்டியிருந்தாலும், அது இலக்கியத் தரத்தைக் குறைக்கவில்லை.
எங்கே நிறுத்த வேண்டும் என்ற தெளிவோடு, தேவையற்ற விவரங்களை அடுக்காமல் எழுதுவதே இவரது மிகப்பெரிய பலம்.
சர்வதேச அங்கீகாரம்
லண்டனின் மாபெரும் அறிஞர்களுடன் பழகியவர் என்ற போதிலும், அவரிடம் பாசாங்கு இல்லை.
சீன் ஓ'ஃபாலோயின், ஜே. மெக்லாரன் ரோஸ், வால்டர் ஆலன், ஒலிவியா மேனிங் போன்ற லண்டனின் முன்னணி இலக்கிய விமர்சகர்கள் மற்றும் இதழ்களால் இவரது கதைகள் பெரிதும் பாராட்டப்பட்டுள்ளன.
5
ஆங்கிலத்தில் எழுதி உலகப்புகழ் பெற்ற அழகு சுப்பிரமணியத்தை தமிழ் இலக்கிய உலகுக்கு பரவலாக அறிமுகப்படுத்துவதில் இலங்கைத் தமிழ் இலக்கிய உலகைச் சார்ந்தவர்களின் பங்குக் கணிசமானது. குறிப்பாக மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா, ஏ. ஜே. கனகரட்னா ஆகியோர் முதன்மையானவர்கள்.
60களில் அழகு சுப்பிரமணியத்தைப் பற்றி 1967ஆம் ஆண்டு மல்லிகை மே–ஜூன் இதழில் இ. ஆர். திருச்செல்வம் என்பவர் “முதல்முதல் சந்தித்தேன்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். நாம் அறிந்த மட்டில், இலங்கையில் அழகுவைப் பற்றி தமிழில் எழுதப்பட்ட முதல் கட்டுரை இதுவென்று படுகிறது.
அக்கட்டுரையில் திருச்செல்வம்:
“அழகு சுப்பிரமணியத்தின் கதைகள் ஒன்றிரண்டு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவர் கதைகளை நானும் தமிழாக்கியுள்ளேன். மொழிபெயர்ப்பை வரிக்கு வரி மூலத்துடன் ஒப்புநோக்காமல் பிரசுரிக்க அனுமதி தருவது கிடையாது. சில சமயங்களில் வேண்டிய திருத்தங்களையும் மாற்றங்களையும் செய்யும்படி பணிப்பார். ஆனால் தானாக அடித்துத் திருத்தும் கிறுக்குத்தனம் அவரிடம் கிடையாது. தன் பக்கம் பிழைக் கண்டால் விட்டுக் கொடுக்கும் பெருந்தன்மையும் அவரிடம் உண்டு. ஆனால் அவர் பாரிஸ்டர் கையால் பிழை வராமல் தர்க்க ரீதியாகப் பேசி காரியத்தை முடித்துக் கொள்வார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அழகுவின் கதைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டிருந்தாலும், அந்த மொழிபெயர்ப்புப் பிரதிகள் எதில் வெளிவந்தன என்ற கேள்வி எழுகிறது. அத்தோடு “நானும் தமிழாக்கியுள்ளேன்” என்றால் மற்றவர்கள் யார் என்ற கேள்வியும் எழுகிறது. இக்கட்டுரை அழகுக்கும் திருச்செல்வத்திற்கும் இருந்த நெருக்கத்தையும் எடுத்துக்காட்டியது.
1971ஆம் ஆண்டு ஜனவரி மல்லிகை இதழில் வே. சு. மணியம் என்பவர் அழகைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அக்கட்டுரை 1964ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளிவந்த The Big Girl என்ற அழகுவின் முதலாவது தொகுதியில் உள்ள கதைகளைப் பற்றிய விமர்சனமாக அமைந்தது.
அத்தோடு, இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை Daily News பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையில் அழகுக்கு இலேசான மனவியாதி ஏற்பட்டிருந்ததாக எழுதப்பட்டிருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் Daily Newsயில் அந்தக் கட்டுரையை எழுதியவர் யார் என்ற தகவலை மணியம் தனது கட்டுரையில் குறிப்பிடவில்லை. அத்தோடு Daily News கட்டுரையில் அழகுவைப் பற்றிச் சொல்லப்பட்ட செய்தியை மனம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் குறிப்பிடுகிறார்.
அவரும் அழகுவின் கதைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டதாகச் சொல்கிறார். ஆனால் அக்காலகட்டத்தில் அழகுவின் கதைகள் தமிழில் வெளிவந்ததாகத் தெரியவில்லை என்றும், அழகுவின் சிங்களத் தொகுப்பும் வெளிவந்ததாகத் தெரியவில்லை என்றும் கூறுகிறார்.
1949ஆம் ஆண்டு ஈழகேசரியில் வெளிவந்த அழகுவின் “சேதுப்பாட்டி” தமிழ் மொழிபெயர்ப்பைப் பற்றி திருச்செல்வம் மற்றும் மணியம் ஆகிய இருவருக்கும் தகவல் இல்லை எனத் தெரிகிறது.
மேலும், அழகுவின் இரண்டாவது தொகுப்பான Closing Time and Other Stories மற்றும் அவரது நிறைவேறாத நாவலான Mr. Moon ஆகியனவும் ஆங்கிலத்தில் வெளிவந்ததாகத் தெரியவில்லை என்றும் மணியம் குறிப்பிடுகிறார்.
1967ஆம் ஆண்டு மே–ஜூன் மல்லிகை இதழில் அழகுவைப் பற்றி எழுதிய இ. ஆர். திருச்செல்வம் அளவுக்கு வே. சு. மணியம் அழகுவுடன் நெருக்கமாக இருந்தவர் அல்ல. ஆனாலும், அழகுவைப் பற்றிய தகவல்களைத் தேடியக் கட்டுரையாக அது அமைந்ததோடு, அழகுவின் முதலாவதுத் தொகுதியான The Big Girl கதைகளைப் பற்றிய ஈழத் தமிழ் சூழலிலான முதல் பிரஸ்தாபிப்பாகவும் அமைந்தது.
மேலைத்தேய விமர்சகர்கள் அழகுவின் கதைகளைப் பற்றி முன்வைத்த கருத்துகளையும், The Big Girl தொகுதியில் இடம்பெற்ற கதைகளைப் பற்றிய சிறந்த அறிமுகக் குறிப்புரையையும் அவர் முன்வைத்திருந்தார்.
ஜீவா 1971ஆம் ஆண்டு மார்ச் மாத மல்லிகை இதழில் அழகுவின் அட்டைப்படத்தை வெளியிட்டார். அவ்விதழில் அழகுவைப் பற்றிய அட்டைப்படக் கட்டுரையையும் ஜீவாவே எழுதியிருந்தார். அக்கட்டுரையில் அழகுவைப் பற்றி சில முக்கிய விடயங்களை ஜீவா பதிவு செய்கிறார்.
“சென்ற வாரம் நானும் நண்பர் ஏ. ஜே. கனகரட்னாவும் திரு. அழகு சுப்பிரமணியத்தை உடுப்பிட்டிக்குப் போய்ப் பார்த்து வந்தோம். உடல்நலக் குறைவினால் வருந்திக் கொண்டிருந்தவருக்கு எங்களைப் பார்த்ததும் தனி மகிழ்ச்சி ஏற்பட்டுவிட்டது. படிக்க முடியாது; கண்பார்வை மங்கல். அடிக்கடி யாழ்ப்பாணம் வர முடியாது. பிரயாணம் செய்ய உடல்நிலை இடம் தருவதில்லை. பேசிப் பொழுதுபோக்கலாம் என்றால் என்னைத் தேடி வந்து இலக்கியம் பேசுவதற்கு ஒருவரும் முன்வருகிறார்களில்லை!” என்று குறைப்பட்டுக் கொண்டார்.
அவர் தனது இங்கிலாந்து வாழ்க்கையைப் பற்றியும், அங்கு பீட்டர் கெனமனைச் சந்தித்ததையும், பிரபல இந்திய எழுத்தாளர் முல்க்ராஜ் ஆனந்துடன் பேசி மகிழ்ந்ததையும் இடையிடையே சொன்னார். திரும்பத் திரும்ப இலக்கியப் பற்றிய சம்பாஷணைதான்.”
என்று ஜீவா எழுதி செல்கிறார்.
இக்கட்டுரையில் மேலும் ஜீவா:
“தனது கதைகளை தமிழில் மொழிபெயர்த்து உதவிய இலக்கிய நண்பர்களின் சுகசேமங்களையும் விசாரித்தார்” என்று குறிப்பிடுகிறார். ஆனால் அந்த மொழிபெயர்ப்பாளர்கள் யார் என்றும், அந்தத் தமிழ்ப் பிரதிகள் எதில் வெளிவந்தன என்றும் தகவல் இல்லை.
இக்காலகட்டத்தில் தானும் ஏ. ஜே.யும் அழகுவின் கதைகளை தமிழில் மொழிபெயர்த்ததாக பேராசிரியர் சபா ஜெயராஜா என்னிடம் குறிப்பிட்டார். ஆனால் அப்பிரதிகள் நம்மால் பார்க்கக் கிடைக்கவில்லை."
ஜீவா மேலும் எழுதுகிறார்:
“எனக்குக் குழந்தைகள் இல்லை. ஆனால் எனது முதலாவது சிறுகதைத் தொகுதிதான் எனது முதற் குழந்தை. இரண்டாவது குழந்தையும் எனக்குச் சமீபத்தில் கிடைக்க இருக்கிறது” என்று ஆங்கிலத்தில் சொல்லிக்கொண்டே பொருள் பொதிந்த பார்வையால் நண்பர் ஏ. ஜே.யையும் என்னையும் பார்த்தார்.
ஏ. ஜே. என்னைப் பார்த்துச் சிரித்தார். எனக்கு விளங்கிவிட்டது. நானும் சிரித்தேன். அவரது இரண்டாவது அன்புக் குழந்தையின் பிரசவத்தைப் பற்றிப் போகும்போதே நானும் நண்பரும் எமக்குள் பேசி முடிவெடுத்துப் போனோம்.”
என்று ஜீவா எழுதிச் செல்கிறார்.
இக்குறிப்பின் மூலம் அழகுவின் இரண்டாவது தொகுப்பு 1971ஆம் ஆண்டிலேயே தயாராக இருந்தது என்றும், அது அவரது துணைவியார் திருமதி செல்லக்கண்டுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது என்றும், ஏ. ஜே., ஜீவா மற்றும் திருமதி அழகு ஆகியோரிடம் அழகு அதை ஒப்படைத்திருந்தார் என்றும் தெரிகிறது. ஆனால் 1971ஆம் ஆண்டு அந்தத் தொகுப்பு அச்சில் வெளிவரவில்லை.
இதனை நிரூபிக்கும் வகையில், 1973ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அழகு காலமானார். அதையடுத்து 1973ஆம் ஆண்டு மார்ச் மல்லிகை இதழில் “பிரமணியம்” என்ற தலைப்பில் ஜீவா அழகுக்கான அஞ்சலி தலையங்கம் எழுதியிருந்தார். அதில் அன்றைய காலத்தில் நூல்கள் வெளியிடுவதில் இருந்த சிக்கல்களை எடுத்துச் சொல்லியிருந்தார்.
தயார் நிலையில் இருந்தும் அச்சடிக்க முடியாமல் இருந்த அழகுவின் இரண்டாவது தொகுப்பான Closing Time and Other Stories தொகுப்பை மனதில் கொண்டே அவர் அப்படிக் குறிப்பிட்டிருந்தார். அதே தலையங்கத்தில்:
“அழகு சுப்பிரமணியம் தனது இரண்டாவது தொகுப்பைக் கண்ணால் பார்க்காமலே போய்ச் சேர்ந்துவிட்டார்” என்று ஜீவா குறிப்பிட்டிருந்தார்.
அழகு மறைந்த ஆண்டு 1971 என சில இடங்களில் குறிப்பிடப்பட்டாலும், அவர் மறைந்த ஆண்டு 1973 ஆகும்.
அத்தோடு அந்த இதழில் அழகுக்குச் அஞ்சலி செலுத்திய என். எஸ். எம். ராமையா, தெளிவத்தை ஜோசப், சபா ஜெயராஜா, ஏ. ஜே. ஆகியோர் தங்களது அஞ்சலிக் குறிப்புகளில் அழகுவின் இரண்டாவதுத் தொகுப்பை வெளியிடுவதில் எல்லோரும் கவனம் செலுத்த வேண்டும் என்ற வேண்டுகோளையும் விடுத்திருந்தனர்.
எப்படியோ, அழகு உயிருடன் இருந்தபோது தயாரித்துத் தந்த அவரது இரண்டாவது தொகுப்பு, அவர் உயிரோடு இருந்த காலத்தில் அச்சாகவில்லை. ஆனால் ஏதோவொரு விதத்தில், அவரால் கண்ணால் பார்க்க முடியாத அந்தத் தொகுப்பு, அதை வெளிவர விரும்பிய திருமதி அழகு நம்மோடு இருந்த காலத்திலேயே அச்சில் வெளிவந்தது என்பது ஆறுதலாகும்.
அழகின் இரண்டாவது தொகுப்பான Closing Time and Other Stories அவர் உயிரோடு இருந்த காலத்திலேயே (1971) அவராலேயே தயாரிக்கப்பட்டுவிட்டது. அதை தனது மனைவி செல்லக்கண்டுவுக்கு சமர்ப்பணம் செய்திருந்தார். அந்தத் தொகுப்பை இலங்கை யாழ்ப்பாணத்தில் அமைந்திருந்த Commercial Pressயில் அச்சிட தீர்மானித்திருந்தார்.
ஆனால் 1971ஆம் ஆண்டு முதல் அவர் மறையும் வரை அந்தத் தொகுப்பு வெளிவரவில்லை. பிற்காலத்தில் அந்தத் தொகுப்பு வெளிவர காரணமாக ஏ. ஜே., ஜீவா மற்றும் திருமதி அழகு ஆகியோர் அமைந்தனர்.
1973ஆம் ஆண்டில்தான் அந்தத் தொகுப்பு அச்சில் வெளிவந்தது.
அந்தத் தொகுப்பில் இடம்பெற்ற கதைகள்:
Single Room, Lovely Day, Son of a Judge, Lawyer, Closing Time, The Kid, Francophile, Liabilities, The Raid, The Cat, Danger, The Mathematician, A Box of Matches, Yuletide in London, The Food of Love, The Interpreter, The Panorama of Lords என இந்நூலில் 17 கதைகள் இடம்பெற்றிருந்தன. முதலாவது தொகுப்பான The Big Girlயில் இடம்பெற்ற சில கதைகள் Closing Time and Other Stories தொகுப்பிலும் இடம்பெற்றிருந்தன.
அந்த வகையில், அழகு மொத்தத்தில் 29 கதைகள் மட்டுமே எழுதியிருந்தார்.
[தொடரும்]
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.