"அண்ணா! இஞ்சை வந்து பார் அம்மாவை...” வரதலிங்கத்தின் காதிற்குள் கிசுகிசுத்தான் சதாநேசன். இருவரும் பூனை போல கால்களைத் தூக்கித் தூக்கி வைத்து நடந்து, அம்மாவின் அறையை நோக்கிச் சென்றார்கள்., மறைவாக நின்று அம்மாவை எட்டிப் பார்த்தார்கள்.

அம்மா படுக்கையில் அமர்ந்தவாறு, வரதலிங்கம் சுவிஷில் இருந்து கொண்டுவந்த ஆடைகளைப் பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரின் பஞ்சு போன்ற பாதங்கள் கட்டிலிலிருந்து நீண்டு அந்தரத்தில் தொங்கி ஆடிக்கொண்டிருந்தன. மனம் எங்கோ லயித்திருக்க, உதடுகள் மெல்லச் சிரிப்பதும் மூடுவதுமாக இருந்தன.

அம்மாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக இன்று காலைதான் வரதலிங்கமும் மனைவியும் சுவிஷிலிருந்து வந்திருந்தார்கள். வரதலிங்கம் ஒரு பக்திப்பழம். தனது கற்பித்தல் தவிர்ந்த நேரங்களில் - சுவிஷ் கோவில் ஒன்றில், அங்கீகரிக்கபடாத மந்திரங்கள் தெரியாத, மடைப்பள்ளி ஐயராக இருக்கின்றான். அவன் அம்மாவிற்காக சுவிஷில் இருந்து விலையுயர்ந்த ஆடைகளை வாங்கியிருந்தான். அம்மா வெள்ளை ஆடைகளை அணிவதில்லை. அதே நேரத்தில் மயிர்க்கூச்செறியும் ஆடைகளையும் தெரிவு செய்வதில்லை. மெல்லிய வர்ணங்கள்தான் அவர் விருப்பம். இதை ஏற்கனவே அறிந்திருந்த வரதலிங்கத்தின் மனைவி, அவருக்குப் பொருத்தமான ஆடைகளை வாங்கி வந்து அசத்தியிருந்தாள். வரதலிங்கத்திற்கும் சதாநேசனுக்கும் பின்னாலே நின்று தலையை நீட்டி மடக்கி அம்மாவை எட்டிப் பார்த்ததில் அவளுக்கு மூச்சிரைத்தது. உயரம் கட்டை என்பதால் துள்ளித்துள்ளி ஓசை எழுப்பியபடி அந்த அதிசயக் காட்சியைப் பார்த்தாள். அவளின் தொங்கலைப் பார்த்த இருவருக்கும் சிரிப்பு வர, அடக்க முடியாமல் போய்விட்டது. அதுவே அம்மாவின் செய்கைக்கு முற்றுபுள்ளி வைத்தது. நிமிர்ந்து அவர்களைப் பார்த்தார் அம்மா.

“அம்மா! நாளைக்கு நீங்கள் ஒரு ஸ்பீச் குடுக்க வேணும்” என்றான் சதாநேசன்.

“எடப் போடா நீ…” என்றார் அம்மா.

“எண்பதாவது பிறந்த நாள் அம்மா… சும்மாவே! எவ்வளவு காசு செலவழிச்சு, ஹோல் எடுத்து, தடல்புடலாச் செய்யுறம். அம்மாவின் பிறந்தநாளுக்காக பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் எல்லாம் வெளிநாட்டிலிருந்து வருகினம். நீங்கள் உங்கட வித்துவத்தைக் காட்டவேணும் அம்மா“ என்று சதாநேசன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே,

“அம்மா! இங்கிலீசிலை ஸ்பீச் குடுக்கப் போறியளோ அல்லது தமிழிலை குடுக்கப் போறியளோ? பள்ளிக்கூடத்திலை முந்தி அம்மா இங்கிலிஸ் ரீச்சரல்லே!” என வரதலிங்கம் நக்கலடித்தான்.

“அது அப்ப… சின்ன வகுப்புகளுக்குப் படிப்பிச்சனான் தான். இப்பெல்லாம் மறந்து போச்சு” என்றார் அம்மா சிரித்துக் கொண்டே.

வரதலிங்கமும் மனைவியும் அம்மாவின் அருகில் போய் இருந்தார்கள். படுக்கையின் ஓரத்தில் `ஒளவையார்’ என்று தலைப்பிட்ட புத்தகம் ஒன்று குப்புறமாக மடித்து வைக்கப்பட்டிருந்தது. அம்மாவின் உருவமும் ஒருவகையில் ஒளவையார் போலத்தான்.

அம்மா எக்கத்துடன் அவர்கள் இருவரையும் பார்த்தார். அந்த ஏக்கத்தின் பொருள் - அவர்களுக்குப் பிள்ளைகள் இல்லை என்பதுதான். அவர்களும் அதைப் புரிந்து கொண்டார்கள். இன்று நேற்றா இந்த நாடகம் நடக்கின்றது?

“எட வரதலிங்கம்… சாருமதி எத்தினை மணிக்கு நாளைக்கு வருவாள்?” ஏக்கத்தை முறித்துக் கொண்டே கேட்டார் அம்மா. சாருமதி - வரதலிங்கத்திற்கும் சதாநேசனுக்கும் இடைப்பட்டவள். சாருமதி குடும்பத்தினர் இந்தப் பிறந்தநாள் விழாவிற்காக கனடாவில் இருந்து வருகின்றார்கள்.

“விடியக் காலைமை எட்டு மணிக்கு ஃபிளையிற் வரும். நானும் அண்ணாவும் போய்க் கூட்டி வருவம் அம்மா…. நீங்கள் ஒண்டுக்கும் யோசிக்காதையுங்கோ. இண்டைக்காவது கொஞ்சம் வெள்ளணவாப் படுங்கோ” என்றான் சதாநேசன்.

அம்மா, தன் கடைசி மகன் சதாநேசனுடன் அவுஸ்திரேலியாவில் இருக்கின்றார். சதாநேசன் தனது வேலை நேரம் போக, மிகுதி நேரத்தில் தமிழ்ப்பள்ளி ஒன்றில் ஈடுபடுகின்றான். அமைதியும் அடக்கமும் கொண்டவன் என்று அங்கே நன்மதிப்புப் பெற்றவன். அம்மாவின் உலகம் இப்பொழுது சதாநேசன் குடும்பத்தினருடன் கழிகின்றது. மூன்று பேரப்பிள்ளைகள். மூத்தவன் பல்கலைக்கழகம் போகின்றான். இரண்டாவது மகள் பாடசாலைக்குப் போகின்றாள். கடைசிப் பெண்குழந்தை வீட்டில். கொழுகொழுவென வளர்ந்து, கொள்ளை அழகுடன் அப்பம்மாவின் மடியில் எந்த நேரமும் துள்ளி விளையாடுகின்றாள்.

அம்மா சிலவேளைகளில் தனக்குரிய ஆடைகளையும் தானே தைத்துக் கொள்வார். நடுவிரல் நுனியில் `தீதாள்’ அணிந்து ஆடைகள் தைக்கும் அழகை சதாநேசனின் மூன்று பிள்ளைகளும் இமைக்காது பார்த்துக் கொண்டு நிற்பார்கள். சிலவேளைகளில் தைத்தபடியே கடைக்குட்டிக்கு தேவாரமும் சொல்லிக் குடுப்பார்.

அம்மாவுக்கு தனி அறை, பாத் றூம், ரொயிலற் என எல்லா வசதிகளும் செய்து குடுத்திருந்தான் சதாநேசன். குசினிக்குள் கூட தனி அடுப்பு, பாத்திரம் பண்டங்கள். தானே சமைத்தும் சாப்பிடுவார் அவர். மகனுக்கு இடையூறு இல்லாமல் தன்னைத் தானே பார்த்துக் கொள்வார். புத்தகங்கள் வாசிப்பார், தொலைக்காட்சி பார்ப்பார். கண்கள் இன்னமும் மங்கவில்லை.

அன்னம் போல மெது நடை. அப்படி நடக்கும்போது எழும் மெல்லிய ஓசையை வீட்டில் இருப்பவர்களைத்தவிர மற்றவர்களால் கேட்க முடியாது. கதைக்கும்போது கூட மெதுவாக கொஞ்சம் இடைவெளி விட்டே கதைப்பார். எதைக் கதைக்கின்றோம் என்பதைத் தீர்மானிக்க அந்தக் கால இடைவெளி உதவும் என்பார்.

வீடு இரவு பதினொருமணி வரையும் கலகலத்தபடி இருந்தது. ஆக்கள் வருவதும் போவதுமாக இருந்தார்கள். சதாநேசன் தன் மூத்தமகனுடன் முறுகும் சத்தம் கேட்டு கதவை நீக்கி வெளியே எட்டிப பார்த்தார் அம்மா.

”வினோதன் யூனிவசிட்டி தமிழ்ச்சங்க கலைவிழாவுக்கு பறை அடிச்சுப் பழகப் போறான் எண்டு நாண்டுகொண்டு நிக்கிறான்.”

”அவனாவது தமிழ்ப்பிள்ளையளோடை பழகிறான் எண்டு நினைச்சு சந்தோஷப்படு.”

”என்னம்மா சொல்லுறியள்? உவன் பறை அடிச்சா எங்களைப்பற்றி என்ன சொல்லுவினம்?”

“சதா… பறை எண்டு சொல்லுறது தமிழன்ரை இசைக்கருவியளிலை ஒண்டு. அவனை விடு. பழகட்டும்.”

சதாநேசன் அம்மாவை உற்று நோக்கிப் பார்த்துவிட்டு, “சரி அம்மா” என்றான்.

நெடுநேரமாக அம்மாவின் அறை விளக்கு ஒளிர்ந்து கொண்டிருப்பதை அவதானித்த சதாநேசன் அம்மாவின் அறையை எட்டிப் பார்த்தான். அம்மா படுக்கையில் தன் கால்களை நீட்டி அமர்ந்தபடி, தன் மடியில் தலையணையை இருத்தி ஏதோ கரிசனையாக எழுதிக் கொண்டிருந்தார். மகனைக் கண்டுவிட்ட அதிர்வில் எழுதிய பேப்பரை படுக்கை விரிப்பினுள் ஒழித்தார்.

“இஞ்சை பாரடா அம்மாவை…. இரவிரவா நித்திரையும் கொள்ளாமல் நாளைக்குப் பேசப்போறதை எழுதிக் கொண்டிருக்கிறா…”

”நீ என்னண்டா நாளைக்கு என்னைப் பேசச் சொல்லிப்போட்டாய்… திடீரெண்டு இப்பிடிச் சொன்னா?” அம்மா சிரித்துக் கொண்டே தான் எழுதியதை எடுத்து சதாநேசனிடம் நீட்டினார். சதாநேசன் அதை வாங்கிப் படித்துவிட்டு, “நல்லா இருக்கு அம்மா… இவ்வளவும் போதும்” என திருப்திப்பட்டுக் கொண்டான்.

மறுநாள் காலை. இரண்டு மருமகள்மாரும் அம்மாவை `ஃபியூட்டிப் பாலருக்கு’க் கூட்டிச் சென்றார்கள். அம்மா ஒருபோதும் மேக்கப் செய்ததில்லை. அதை அவர் விரும்புவதும் இல்லை. இந்தக் கூத்துகளை அவர் தவிர்க்கவே விரும்பினார். என்ன செய்வது! இன்று எண்பதாவது பிறந்தநாள் கொண்டாட்டமாயிற்றே!

அம்மா மேக்கப் போட்டுக்கொண்டு வீட்டிற்கு வரும்போது, வீடு களைகட்டி இருந்தது.

சாருமதி, கணவன் மற்றும் அவர்களின் மூன்று பிள்ளைகளின் குடும்பத்தினரும் வீட்டைக் கலகலப்பாக்கிக் கொண்டிருந்தார்கள். சாருமதியின் மகள் ஒரு பிலிப்பினோவைத் திருமணம் செய்திருந்தாள். இரண்டு ஆண்பிள்ளைகளும் `லிவிங் ருகெதர்’. மூத்தவன் ஒரு வியட்நாம் பெண்ணையும், இரண்டாமவன் ஒரு சீனப்பெண்ணையும் ’லிவிங் ருகெதராக’ வைத்திருக்கின்றார்கள். ஒருத்தராவது வெள்ளைக்காரரைத் திருமணம் செய்யவில்லையே என்பது சாருமதியின் கவலை. அதைவிட மூன்றுபேருக்கும் பூச்சி புழுக்கள் இல்லையென்பது அம்மாவின் பெருங்குறை. அம்மாவிற்கு எல்லாருடைய பெயரும் அத்துப்படி. ஞாபகமறதி கிடையாது.

“எல்லாரும் இஞ்சை ஓடி வாருங்கோ… ஆரோ ஒரு புது லேடி எங்கடை வீட்டிற்கு வந்திருக்கின்றா” என்று அம்மாவைப் பார்த்துக் கிண்டலடித்தாள் சாருமதி.

எல்லோரும் ஆங்கிலத்தில்தான் கதைத்தார்கள். ஆனால் ஒவ்வொருவருடைய ஸ்ரைலும் வித்தியாசமாக இருந்தது. அவர்களின் சாப்பாட்டு முறைமைகளும் வித்தியாசமாக இருந்தன. ஒருவர் பிஷா என்றும், இன்னொருவர் கேஎவ்சி என்றும், மற்றவர் நூடில்ஸ் என்றும் சொல்வார்கள். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமான நிறங்கள். வித்தியாசமான உருவங்கள். ஒருவருக்குக் கண் மேலே இழுத்திருக்கும். மற்றவருக்குக் கீழே இழுத்திருக்கும். வித்தியாசமான ஆடைகள், வித்தியாசமான பழக்கவழக்கங்கள்.

”அவுஸ்திரேலியாவும் கனடாவும் மல்ரி கல்சரர் நாடுகள். எங்கடை மல்ரி கல்சரர் வீடு” என்பாள் சாருமதி.

சாருமதியின் மூத்த மருமகள் அழகுநிலையத்தில் வேலை செய்வதாகச் சொன்னாள். தனது பாட்டனார் வியட்நாமில் பாபர்சலூன் வைத்திருந்ததாகப் பெருமை கொண்டாள். இரண்டாமவள் `பிஸ் அண்ட் சிப்ஸ்’ கடை வைத்திருக்கின்றாள். மருமகன் தான் ஒரு `ஃபிஸ் மாக்கெற்’ கனடாவிலும், இன்னொரு `மீன் சந்தை’ பிலிப்பீன்ஸ் நாட்டிலும் வைத்திருப்பதாகச் சொன்னான். கை, தோள்ப்பட்டையெல்லாம் பச்சை குத்தியபடி – தலைமயிரை `போனி ரெயிலாக’க் கட்டியிருந்தான் அவன்.

அம்மாவுக்கு தலை விறைத்துப் போய்விட்டது.

“சாரு… இஞ்சை வா! இதிலை கொஞ்சம் இரு” என்று எதிரே உள்ள கதிரையைக் காட்டினார் அம்மா.

“இஞ்சை பார்… உன்னை நான் அக்கவுண்டன்ற் ஆக்கியிருக்கிறன். வரதலிங்கத்தைப் பட்டதாரி ரீச்சர் ஆக்கியிருக்கிறன். சதாநேசனை இஞ்சினியர் ஆக்கியிருக்கிறன். நீ உன்ரை பிள்ளையளை என்னவாக ஆக்கியிருக்கிறாய்?”

சாருமதி கோபப்படவில்லை. அமைதியாகப் பதில் தந்தாள்.

“ஏன் அம்மா…? அவையளுக்கென்ன குறை. மகள் ஏஜ்கெயரில் வேலை செய்கின்றாள். மகன்மார் இரண்டுபேரும் ரியல் எஸ்ரேற்றில் வேலை செய்யினம். அவங்களுக்கு அதுதான் விருப்பம். அம்மா… நாங்கள் இப்ப பல்லினக்கலாச்சார நாடுகளிலை இருக்கிறம். இனிமேல் இப்படித்தான் எல்லாம் இஞ்சை நடக்கும். அதுகள் தாங்கள் தாங்கள் விரும்பினதைத்தான் படிக்குங்கள், விரும்பினதுகளைத்தான் கலியாணம் கட்டுங்கள். எங்களாலை இனி ஒண்டும் செய்ய முடியாது.”

“ஒண்டு எப்பவும் வாயுக்குள்ளை சுவிங்கத்தைச் சப்புது…. இன்னொண்டு எப்பவும் கண்ணாடியிலை முகத்தைப் பாத்து கிள்ளுது…. ஒண்டு என்னண்டா மொபைல்போனை நோண்டிக்கொண்டு இருக்குது…” தனக்குள் முணுமுணுத்துக் கொண்டார் அம்மா. அவருக்கு சாருமதியின் பதிலில் பெரிதாகத் திருப்தி இல்லை. இங்கிலிஷ் ரீச்சருக்கு அவை ஒன்றுமே புரியவில்லை. பழையனவற்றை நினைத்துப் பெருமூச்செறிந்தார் அவர்.

“சதாநேசன் தன்ரை மூண்டு பிள்ளையளையும் எப்பிடி வளத்து வைச்சிருக்கிறான் எண்டு பாத்தனிதானே!”

“நீங்கள் பக்கத்திலை இருக்கிறியள் அம்மா. எல்லாத்தையும் பாத்துக் கொள்ளுறியள். எப்ப கனடா வந்து என்னுடன் இருக்கப் போறியள்?” சாருமதியின் கேள்விக்கு அம்மா சிரித்தார்.

“நேரம் வரும்போது வருவேன்” என்றார்.

சாருமதி அவுஸ்திரேலியாவிற்கு முன்பும் இரண்டு தடவைகள் வந்திருக்கின்றாள். ஒவ்வொருதடவை வரும்போதும், “உனக்கு பிள்ளையளை வளக்கத் தெரியாது” என அம்மாவிடம் பேச்சு வாங்குவார்.

வீடு திருவிழாக்கோலம் பூண்டிருந்தது. ஒவ்வொருத்தரும் ஆடைகளை அணிந்துகொண்டு சரக்குச்சரக்கென்று நடந்தார்கள். ஒருவர் மாறி ஒருவரென அழகு காட்டினார்கள். சாருமதியின் இரண்டு மருமக்கப்பெண்களும் ஒப்பனை குலைந்துபோய் விடும் என்ற பயத்தில் ஒரு இடத்தில் பொம்மையாக அசராமல் இருந்தார்கள். யார் கதை கேட்டாலும் திரும்பிப் பாராமல் அப்படியே இருந்தபடி பதில் தந்தார்கள்.

மாலை நாலுமணிக்கு எல்லோரும் ஹோலுக்குப் புறப்பட ஆயத்தமானார்கள். கார்கள் வருவதும் போவதுமாக இருந்தன.

மழை வரும்போல் வானம் இருண்டு கிடந்தது. வீட்டைச் சுற்றி வெளியே எங்கும் குளிர் அப்பிக் கிடந்தது.

ஹோல் நிரம்பவே சனம் வழிந்தது. அம்மா எல்லோருக்கும் கை குலுக்கியபடியே தனது ஆசனத்தில் போய் அமர்ந்தார். சதாநேசனும், பேரப்பிள்ளைகளில் ஒருவரும், மற்றும் வந்திருந்தவர்களில் ஒருவருமென மூன்று பேர்கள் பிறந்ததின விழாவிற்கான தமது பேச்சுக்களை நிகழ்த்தினார்கள். இது நடந்து கொண்டிருக்கும்போதே, ஒவ்வொரு மேசைக்கும் சாப்பாடு மணக்க மணக்க வந்து கொண்டிருந்தது.

அம்மா ‘கேக்’ வெட்டி பிறந்தநாள் விழாவை ஆரம்பித்தார்.

`இப்பொழுது பிறந்ததின விழாக் கொண்டாடும் நேசம் அம்மா அவர்கள் உரையாற்றுவார்கள்’

பெரும்பாலானவர்கள் இன்றுதான் அம்மாவின் பெயரை அறிந்தார்கள். `பிறந்தநாள் கேக்’கில் கூட `அம்மா’ என்றே போட்டிருந்தார்கள். அவர் எல்லோருக்கும் அம்மா தான். சதாநேசனின் பெண்பிள்ளைகள் இருவரும் அம்மாவை மேடைக்குக் கூட்டிச் சென்றார்கள். அம்மாவின் பிறந்ததின உரை ஆரம்பமாகியது.

”மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலைக்
கண்ணில் நல்லஃதுறுங் கழுமல வளநகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே!

என்னுடைய பிறந்தநாள் விழாவிற்காக உங்கள் நேரத்தை ஒதுக்கி இங்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி. நீங்கள் பல பரிசுப்பொருட்களைத் தந்து இந்த நேரத்தில் என்னை மகிழ்வித்திருக்கின்றீர்கள்.

என்னைப் பற்றித் தெரியாதவர்களுக்காக சில வார்த்தைகள். நான் இலங்கையின் வடபகுதியில் கொக்குவில் என்னும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். பொற்பதி பிள்ளையார் கோவிலுக்கு அண்மித்துத்தான் எனது சிறுவயது வாழ்க்கை கழிந்தது திருமணத்தின் பின்னரும் அங்கேதான் வசித்தேன். ஆச்சாரமான குடும்பத்தைச் சேர்ந்தவள். அங்கு இருக்கும் வரையும் வீட்டில் மரக்கறிச்சாப்பாடுதான் சமைப்பார்கள்.”

எல்லாரும் அவரது உரையை மிகவும் உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். குரலில் தளர்ச்சி இல்லை. கணீரென்று நாதமெழுப்பும் குரல். சதாநேசன் சிறிது நேரம் அம்மாவின் உரையைக் கேட்டுக்கொண்டிருந்துவிட்டு சமையல்களத்திற்குப் போய்விட்டான்.

”காலமும் இடமும் தான் மனிதர்களின் வாழ்க்கையத் தீர்மானிக்கின்றன. இதுக்கு என் மகள் சாருமதியே சாட்சி! அன்றிருந்த வாழ்க்கை முறைமைகளுக்கும் இன்றிருப்பவைக்கும் நிறையவே வேறுபாடுகளை நான் பார்க்கின்றேன். இத்தனை வருடங்களில் வாழ்க்கை முறை, திருமண பந்தம், கல்வி, ஆடைகள், தொழில் நுட்பம், சினிமா என எவ்வளவோ மாற்றங்கள் கண்டிருக்கின்றன.

எனது பிள்ளைகள் மிகவும் அன்பாக என்னை இங்கே பார்க்கின்றார்கள். தங்களின் பிஷியான வாழ்க்கையிலும் மனங்கோணாமல் வைத்தியரிடம் அழைத்துச் செல்கின்றார்கள்; எனக்குத் தேவையானவற்றை வாங்கித் தருகின்றார்கள்; கோயிலுக்குக் கூட்டிச் செல்கின்றார்கள்.

ஒவ்வொரு பிறந்தநாள் வரும்போதும் நாங்கள் எல்லோரும் ஒன்றுகூடி, மிகவும் எளிமையாக வீட்டில் கொண்டாடுவோம். இந்தத்தடவை பிள்ளைகள் ஹோல் எடுத்து மிகவும் சிறப்பாகச் செய்கின்றார்கள்.

உலகத்திலே பிறந்த மனிதர்களில் இரண்டுவிதமான சாதியினர் தான் உள்ளார்கள். ஒருவர் அடுத்தவருக்குக் கொடுத்து உதவும் நல்ல மனம் படைத்த மேலோர்; மற்றவர் தன்னிடம் உள்ளவற்றை அடுத்தவருக்குக் கொடுக்காத கீழோர். நீங்கள் எல்லோரும் மேலோராக வாழப் பழகிக் கொள்ளுங்கள். சந்தோசத்தையும் துக்கத்தையும் சமன் செய்து வாழுங்கள்.

என்னைப் போன்றவர்களுக்கு, ஒவ்வொருநாள் விடிவதும் ஒரு `போனஸ்’ நாள் தான். நாளைக் காலை உறக்கத்தில் இருந்து எழுவதுபற்றி நிட்சயம் இல்லை.”

அதுவரை மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டே வந்த அம்மா, திடீரெனக் கவலை கொண்டார். அவரின் குரலில் சிறிது பிசிறல் விழுந்தது. கண்ணாடியைக் கழற்றிவிட்டு கண்ணீரைத் துடைத்துக் கொண்டார். கையிலே குறிப்பெழுதி வைத்திருந்த தாளை நான்காக மடித்து வைத்துக் கொண்டார். அருகே நின்ற பிள்ளைகள் இருவரும் அப்பம்மாவை நிமிர்ந்து பார்த்துவிட்டு குனிந்து நின்றார்கள். அவர் தனது பேச்சினைத் தொடர்ந்தார்.

”என்னுடைய கணவர் நாப்பது வருடங்களுக்கு முன்னரே எம்மை விட்டுப் போய்விட்டார். நீங்கள் எல்லாரும் நான் நூறு வயது வரை வாழவேண்டும் என்று வாழ்த்தினீர்கள். உங்களுக்கு எனது நன்றி. ஆனால் என்னுடைய ஒவ்வொரு பிறந்தநாள் வரும்போதும் என் மனதில் ஒரு பாரம் கிடந்து அழுத்துவதை யார் அறிவார்கள். அதை நான் எப்படிச் சொல்லுவது? என்னை எவ்வளவு சீக்கிரமாக எடுத்துக்கொள்ள முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் எடுத்துக் கொள் என்றுதான் நான் தினம் தினம் ஆண்டவனை வேண்டுகின்றேன்.

எனது மூத்தமகன் புத்தி பேதலித்து, தினம்தினம் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கும்போது, எப்படி நான் மகிழ்ச்சியுடன் வாழ முடியும்?”

எல்லாரும் வரதலிங்கத்தைத் திரும்பிப் பார்த்தார்கள். அவன் ஒன்றுமே நடவாதது போலப் பின்வரிசையில் நின்று யாருடனோ சிரித்துக் கதைத்துக் கொண்டிருந்தான்.

”உங்களுக்கு நமது சாதிமுறைகளைப்பற்றித் தெரிஞ்சிருக்கும். எனது மூத்தமகன் தேவராஜன் - இங்கிருப்பவர்களில் அவன் தான் எல்லாரிற்கும் மூத்தவன் - பள்ளியில் படிக்குமோது ஒரு பெண்ணை விரும்பியிருந்தான். அவள் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவள். எனக்கும் சாருமதிக்கும் சதாநேசனுக்கும், அவன் அந்தப்பெண்ணை மணம் முடிப்பதில் துளிகூட விரும்பம் இருக்கவில்லை. என்னுடைய கணவருக்கு மூத்த மகன் என்றால் கொள்ளை ஆசை. அவர் அந்தத் திருமணத்திற்கு விருப்பம் தெரிவித்திருந்தார். பத்துவருடங்களாக இழுபட்டுக் கொண்டே போனது. கடைசியில் அந்தப்பெண்ணிற்கு, பலவந்தமாக வேறு ஒரு ஆணை அவளின் பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்தார்கள். திருமணம் நடந்த இரண்டாம்நாள் அவள் தூக்குப் போட்டுச் செத்துவிட்டாள். அதற்குப் பிறகு எனது மூத்தமகனுக்கு இந்த நிலை, விசராக்கிப் போட்டுது.

அன்று நான் எனது மூத்தமகனுக்கு அந்தக் கலியாணத்தைச் செய்து வைத்திருந்தால், என்னை என் உடன்பிறப்புகளும் சுற்றத்தாரும் கைகழுவி விட்டிருப்பார்கள். அதாலை நான் அன்று பிடிவாதக்காரியாக இருந்துவிட்டேன். அவனையே நினைத்து நினைத்து உருகிக்கொண்டிருந்த என் கணவரும் சீக்கிரமே எம்மிடமிருந்து விடைபெற்றுக் கொண்டார்.

ஊரில் இருக்கும் வரையும் நான் தான் அவனை வைத்துப் பராமரித்தேன். நாட்டு நிலமைகள் காரணமாக ஓடி ஓடி இடம்பெயர்ந்தபோதும் நான் தான் அவனைப் பார்த்தேன். பின்பு என்னையே நான் பார்க்க முடியாத நிலை வந்தபோது தான், இவர்கள் என்னை இங்கே கூட்டார்கள். பாவி நான், இங்கேயே வந்து தங்கிவிட்டேன். இப்போது அவனைப் பராமரிப்பது, இறந்துபோய்விட்ட அவனது காதலியின் தம்பி தான்.

எனக்கு இப்ப இருக்கின்ற கவலை என்னவெண்டா, நான் இல்லாத காலத்தில் அவனை யார் பார்ப்பார்கள்? நான் சரியாக உறங்கிப் பல வருடங்கள் ஆகிவிட்டன. ஆழ்மனதில் இருக்கும் மர்மங்கள் என் உறக்கத்தைக் கெடுத்து விடுகின்றன. இன்று எனது பாரத்தை உங்கள் முன் இறக்கி வைக்கின்றேன்.”

அம்மாவின் இருண்ட பக்கங்கள், ஹோலிற்குள் ஒளிவெள்ளத்தில் நிரம்பியிருந்த எல்லோர் மனதிலும் சலனத்தை ஏற்படுத்தியது. அம்மாவின் உரை இப்படித் திசைமாறிப் போகும் என அறியாத பிள்ளைகள் ஆளுக்காள் ஓடி முழித்தார்கள்.

“கிழவி எல்லாத்தையும் உளறுது. ஓடிப்போய் ஸ்பீச்சை நிப்பாட்டு அக்கா….” சதாநேசன் சாருமதியிடம் கெஞ்சினான். அதுவே நல்லதென வரதலிங்கத்திற்கும் பட்டது.

சாருமதி மேடையை நோக்கி விரைந்தாள். அதற்குள் அம்மா கைக்களைத் தூக்கி கும்பிட்டபடியே, மேடையில் இருந்தும் கீழ் இறங்கினார். பிள்ளைகள் அவரை சதாநேசன் நிற்குமிடத்திற்குக் கூட்டிச் சென்றார்கள். பின்னாலே சாருமதி விரைந்தாள்.

“இப்பிடித்தான் அம்மா கொஞ்ச நாட்களாக உளறிக்கொண்டு திரிகின்றார். அவவுக்கு இப்ப டெமென்சியா வந்திட்டுது. நேர்ஷிங்ஹோமிலை கொண்டுபோய் விடுறதுதான் நல்லதெண்டு படுகுது” சதாநேசன் தன் நண்பர்களுக்கு விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தான்.

அம்மாவிற்கு சதாநேசன் சொல்வது கேட்டிருக்க வேண்டும். அவர் தன் கைகளைப் பேரப்பிள்ளைகளிடமிருந்து, அவர்களுக்குத் தெரியாமலே விடுவித்துக் கொண்டு, சாருமதியின் கைகளைப் பிடித்தார். அந்தப் பிடிப்பில் ஒரு அழுத்தம் வேரோடுவதை சாருமதி உணர்ந்தாள்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.