கொஞ்ச நாளாய் தான் அந்த இயற்கை எழில் சூழ்ந்த ,அதாவது பச்சை மரங்கள் செடிகள் கொண்ட நடைபயிலுகிற பூங்கா என்று சொல்ல முடியாத, காடு என்றும் சொல்ல முடியாத  பச்சை வளையப்பகுதியிலே நடக்கிறான். எல்லாம் கொரானாவின் கதவடைப்பால் வந்த உபயம். இதற்கு முந்தியும் பறவைகள் கீச்சிடும் அந்த பகுதி இருந்தது தான்.இறங்கி இருக்கவில்லை.வீட்டிலேயே கனநாள் கிடைக்கையில் ஏற்பட்ட உடல் மூட்டுகளில் வலியோடு ஏற்பட்ட கீரீச் கிரீச் என்ற சத்தங்களிற்குப் பிறகு,நடப்போம் என இறங்கி இருக்கிறான்.இந்த நாட்டில் எல்லாப் பகுதியிலும் பாம்பு போல போற இந்த பச்சை வழிப்பாதைகள் கிடக்கின்றன. எவ்வளவு பேர்களுக்குத் தெரியுமோ?, நாம் குளிக்கிற , பாத்திரம் கழுவுற தண்ணீர் , சலவை செய்கிற நீர், மழை, பனி நீர் எல்லாம் வீதிகளில் வலையமைப்பில்  ஓடுற குழாய்க்கால்களில் ஓடி ,அடைப்புகள் ஏற்பட்டால்  கிடக்கிற மனிதர் இறங்கி வேலை செய்கிற துளைகள் போன்ற கட்டமைப்புகளுடன் சேர்கின்றன.பிறகு இவை ஓடி வந்து பெரிய ஏரிகளை அடைகின்றன. இந்தக் கட்டமைப்பில் தொழிற்சாலைப் பகுதியிலிருந்து வெளியேறுகிற நீரை வடிகட்டி இரசாயன கலப்பில்லாது விட வேண்டும் என்ற விதிகளை சிலர் மீறி விடுகிறார்கள். பிறகென்ன நாம் குடிக்கிற நீரில் நஞ்சு கலந்து விடுகிறது. ஏரி நீரைத் தான் நாம் எல்லோருமே குடிக்கிறோம். சில பகுதிகள் பாதிக்கப் பட்டுக் கிடக்கின்றன. அவை பெரும்பாலும் முதல்குடி மக்களின் பகுதிகளாக கிடப்பது தான் பரிதாபம். தொழிற்சாலைகளுக்கும் வடிகட்டும் விசேச நிலையங்கள் இருக்க வேண்டும். அவற்றை அரசாங்கள் செய்யாது அவர்களே செய்ய வேண்டும் என தட்டிக் கழித்து விட்டதாலேயே தவறுகளும் கணிசமாகி விட்டிருக்கின்றன. மனிதக்கழிவு நீர்களுக்கு வடிகட்டும் விசேச நிலையங்கள் இருக்கின்றன. அதில் வடிகட்டி உர உப்புகள் கூடத் தயாரிக்கப்படுகின்றன. வடிகட்டிய நீரும் இதே வாய்க்காலிலே விடப்படுகின்றன. இலங்கை. இந்தியா போன்ற நாடுகளில் குடிமனைகளில் பரவி சேதம் ஏற்படுத்துபவை இங்கே ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன . இந்த வாய்க்கால்கள் சில நதிகள் என்றும் கூட அழைக்கப்படுகின்றன. நீளம் கூடியதால் அழைக்கிறார்களோ? மழைக்காலத்தில் பெருமளவு நீர் பெருக்கெடுத்து ஓடுறதும் ஏற்படுகின்றது.

பக்கத்தில் கதைக்காமல் சிறிது தூரம் வந்த அவர்"ஹாய்,நீர் இலங்கையரா?"என்று கேட்டார். அவனும் ஏதாவது கதைப்போமா?என்று நினைத்துக் கொண்டே வந்தான்.அது தான் மூஞ்சியிலே எழுதி ஒட்டி இருக்கிறதே!

  முந்திய சம்பவம் ஒன்றும் கணப்பொழுதில் ஞாபகம் வந்தது.நீர்கொழும்பில் தங்கி இருந்த காலத்தில்,ஒருநாள்,அவனும் நண்பன் கோபாலும் கொத்துரொட்டிக் கடையில் ஓடரைக் கொடுத்து விட்டு கதைத்துக் கொண்டிருந்தார்கள். அந்த நேரம் நுழைந்த ஒருத்தன் இவர்கள் மேசையை குறி பார்த்து துப்பாக்கிக் குண்டு போல‌ வந்தான். இவர்கள் கதைக்கத் தொடங்கினால் சூழலை மறந்து விடுவார்கள் தான். தவிர கலவரச் செய்திகளை ... அறிந்தவர்கள் தவிர ,அடக்கி வாசிக்க நேரிலே பார்த்தவர்கள் இல்லை. யாழ்ப்பாணத்தமிழில் விளாசிக் கொண்டிருந்தார்கள். நீர்கொழும்புக்கு  தமிழை ஒரு தனித்த விதமாக சங்கீதம் கேட்பது  போல, அழகாக பேசுற வழக்கம் இருக்கிறது. அதைக் கேட்பதற்காகவே குடாப்பாட்டுக்கரையிலே வாறவர்களிடம்,அல்லது அருகிலே ஒரு வாசிகசாலையும் இருக்கிறது, அங்கேயும் பேசிக் கேட்கிறவர்கள்.இருவருக்குமே அவர்களைப் போல‌ ஒரு சொல்லுக்கு அழுத்தம் கொடுத்து பேச வரவே இல்லை. தோற்றுப்போனவர்கள் .மட்டக்களப்புக்கும் ஒரு ஸ்டையில் இருக்கிறது என்பார்கள்; கேட்டதில்லை. இந்தத் தமிழை 'பதிவு' பண்ணி வைத்து சினிமாப் பாட்டு கேட்கிறது போல கேட்க வேண்டும் ....என நினைத்துக் கொள்வார்கள். கொழும்புக்குப் போறவர்கள் நீர்கொழும்புக்குப் போய் கேட்டுத் தான் பாருங்களே.ஒரு கிழமை அங்கேயே தங்கி விடுவீர்கள்.அத்தனை அழகு.

  இவர்களின் பேச்சு துல்லியமாக யாழ் பாஸை என்பதைச் சொல்லவும் வேண்டுமா? முஸ்லிம்களின் தமிழில் இன்னொரு வித அழகு  நடனம் இடும். அங்கே தமிழ் இழுவையை எல்லாம் குறைத்து விட்டுப் பேசுவார்கள். நாம் "சொல்லி" என்பதை அவர்கள் "செல்லி "..என தட்டு தடங்கல் இல்லாமல் பேசிக் கொண்டு போவார்கள்.

  கோபாலுக்கு அல்ல அவன் கன்னத்தைப் பொத்தி (கையைப் பொத்தி)ஒரு அறை விட்டான்.இப்படி அடித்தால் உடனேயே எதுவுமே காதில் கேட்காது.சூழச்சத்தம் கூட நின்று போய் ஒரு மயான அமைதியை தரிசிப்பீர்கள். நோவைக் கூட நரம்பிழைகள் மூளைக்கு கடத்தாது. கொஞ்ச நேரத்துக்குப் பிறகு தான் வலி உணரப்படுவது சிறிது சிறிதாகத் தொடங்கும். அரசகுமார்கள் சண்டையில் ஈடுபடும் போது, இந்த கணத்திலேயே வாளை மறுபடி சுழற்றி எதிரியை வதம் செய்து விடுவார்கள். அந்த வேகத்தைப் பயிற்சியாலே பெற வேண்டும். அசோகன், அலெக்சாண்டர் எல்லாம் இதிலே பெரு வீரர்களாகத் திகழ்ந்தார்கள். உணரப்படுற வலியை இவர்களது இன்னொரு வேக அசைவு சமப்படுத்தி ஒரு தினவை பிரதியீடு செய்து விட்டிருக்கும். சாண்டியல்னின் கதை மாந்தர்கள் கை வெட்டுப்பட்டுத் தொங்கும் போதும் 'கடகடவென சிரிப்பதும் திரும்ப உடம்பு தினவெடுத்து சிலிர்த்து நிற்பதும்... அந்தக் கணப்பொழுதில் எடுக்கிற பயிற்சிகளால் தான். இவனுக்கு அடி விழுந்தது தெரிந்ததே தவிர, கழுகின் கொடூரங்கள் நினைப்பில் வர ,வெறுப்புடன் உள்ளுக்க காய்ந்த சிரிப்பை உதிர்த்தில் பிறகும் தெரிய... வரவில்லை.

இவர்கள் அந்தக்கடைக்கு வாரதுக்கு கல்லாப்பெட்டியில் வெள்ளைத்தாடி ,தலை மயிருடன் இருக்கிற பெரியவரின் அருள் பொழியும் பார்வையில் ஒரு ஈர்ப்பே காரணம். நுழையிற போது அவருடன் ஏதாவது  கதைத்து விட்டே வருவார்கள். அவரும் "வாங்க தம்பி ..."அன்புடன் பதிலளிப்பார். தவிர கொழும்புக்குப் போற போதெல்லாம் பெட்டாவில் இறங்கினால் ஊர்வலம் தெரியாது. எங்கேயும் கண்ணை ஓட விடுவார்கள்.முஸ்லிம் மக்கள் தமிழில் ... கதைத்துக் கொண்டிருப்பார்கள். பேரூந்தில் கூட சீனர்களைப் போல தயக்கமின்றி தமிழில் கதைக்கிறவர்கள் அவர்கள் தான். கேட்டால் பொறுமையாக சொல்லி வழி காட்டுவார்கள். திரும்ப வரும் போது ,பக்கத்தில் எங்கையோ தான் பெட்டா பேருந்து நிலையம் இருக்கும்.இவர்கள் கண்ணுக்குப் புலப்படவே புலப்படாது. அப்பையும் வழிகாட்டிகள் இவர்கள் தான். சாதாரணச் சிங்களவருக்கு ஆங்கிலம் தெரியாது. தவிர படித்தவர்களும் பெசெஞ்சுக்காரர் போல சிங்களத்திலேயே கதைக்கிற போக்கும் இருந்ததாகப்படுகிறது.இவர்களுக்கும் உருப்படியாக ஆங்கிலமும் பேசத் தெரியாது தான்.முதல் ஒரு மாசம் வரையில் கொழும்பைச் சொல்லிக் குடுத்தவர்கள் முஸ்லிம் இளைஞர்களும் மக்களும் தான்.அடி வாங்கியதால் எல்லாம் அவர்கள் மேல் வெறுப்பு உடனே வந்து விடாது."ஆனால் ஏன் அடித்தான்?.."அந்தக் கேள்வி தொக்கி நிற்கவேச் செய்தது.

பெரியவர் உடனே விரைவாக அவர்களிடம் வந்தார்."இவன் இப்படி நடப்பான்..எனத் தெரியாது.குடு பாவித்திருக்கிறான் போல இருக்கிறது. மன்னிக்கவும்"என்றார். மற்றவர்கள் , அவனை பிடித்துக் கொண்டு பின்னால் கொண்டுச் சென்றார்கள்.அவர்களுக்கு அங்கே இருந்து சாப்பிடப் பிடிக்கவில்லை .கொண்டு வந்த கொத்துரொட்டியை பாசலாக வாங்கிக் கொண்டார்கள்.சிப்பந்திகள் ஆனத்தையும் சிறிய கப்பில் கட்டிக் கொடுக்கத் தவறவில்லை." நாளைக்கு வார போது கப்பை திருப்பித் தாருங்கள் " என்றார்கள். இவர்கள் அடிக்கடி வந்ததால் எல்லாருக்குமே பழக்கமாகியே இருந்தார்கள்.அடித்தவன் அப்ப தான் வேறொரு ஊரிலிருந்து வந்தவனாக இருக்க வேண்டும்.

அடுத்த நாள் போகிற போது கடைக்குப் போகாது வீதியில் போக கிழவர் ஓடி வந்தார்."தம்பியவயள்,அவன் ஊரிலே இருந்து வந்தவன். அங்கே அவனுடைய மாமாவை கழுகினர் பிடித்துக் கொண்டு போய் விட்டார்கள். தகவல் இல்லை. குடுவும் பாவிக்கிறவன். உங்களைப் பார்த்தவுடன் ஜூவாலையில் அடித்துப் போட்டான். அந்த கழுகாலே கொழும்பிற்கு நிறைய தமிழ்ப் பெடியள்கள் வந்திருப்பது அவனுக்குத் தெரியாது. கண்டித்து வைத்திருக்கிறோம். இனிமேல் இப்படி அசம்பாவிதம் நடக்காது. தம்பி,வாங்கள்.கொத்துரொட்டி சாப்புடுங்கள். இன்றைக்கு காசு கொடுக்க வேண்டியதில்லை .வழமை போல வாருங்கள்"என்றழைத்தார். கிழக்கில் ,இவனுடைய நண்பன் ஒருவனின் இரண்டு அண்ணைமார் நீர்ப்பாசன திணைக்களத்தில் வேலை பார்த்தவர்கள். இந்த பனிப்போரால் ஊர்க்காவல்காரர்களால் பிடித்துக் கொண்டு போனவர்கள் போனவர்கள் தான். இலங்கைப்படையின் கீழ் இயங்குற முஸ்லிம் இளைஞர்களைக் கொண்ட வன்முறைக்குழு அது. ஒருத்தருக்கு ஒருத்தர் ஆறுதல் கூடச் சொல்ல முடியாத நிலை .கையில் குறைவான பணத்துடன் அலையிறவர்கள். முஸ்லிம் மக்கள் தானே வழிகாட்டிகளாகவும் இருக்கிறவர்கள்; இருக்கவும் போற‌வர்கள். பெரியவரை மதித்துச் சென்றார்கள்."கப்பை கொண்டு வர மறந்து விட்டோம். நாளைக்கு தருகிறோம்" என்றார்கள்."அவசரமில்லை"என கூட்டிச் சென்றார். அவர்களுக்கு தெரிந்தவர்களுக்கு அந்நிகழ்வு பரவி இருந்தது.அடி வாங்கியவர்கள் யார்?..  என சரிவரத் தெரியாது. அவர்களிடமே கேட்டார்கள்."அப்படியா..?"எனக் கேட்டு அவர்களும் மறைத்து விட்டார்கள். அதே கடைக்குத் திரும்பவும் ....சென்றார்கள்.செல்கிறபடியால் அவர்களாய் இருக்க முடியாதல்லவா.

பதிலுக்கு இவனும் கேட்க வேண்டாமா? இந்தியர்,அல்லது சோமாலியராக இருக்க முடியும் என நினைத்து ,விசமத்திற்கு "நீங்களும் இலங்கையரா?"எனக் கேட்டான். "ஓம்"என்று சுத்தத் தமிழிலே சொன்னார். வியப்பில் வீழ்ந்து விட்டான். "நான் சாந்தா"என்றார். கை குலுக்கள் ஒன்றும் இல்லையே. கொரொனா எட்டத்தில் வைத்திருக்கிறதே."நான் தில்லை"என்றவன் ,"சாந்தா பேர் தமிழில்  அவ்வளவாக இல்லையே"என்றான். சிரித்தார்."நான் கண்டிச் சிங்களவர்.எங்கட ஆட்கள் அனைவரும் நல்லாய் தமிழ் பேசுவார்கள். மலையகத் தமிழர் எம் யாலுவாக்கள்"என்றவர்,"அங்கே இனக்கலவரம் செய்தவர்கள் நாங்களில்லை.கொழும்பிலே இருந்து படையினர் கூட்டி வந்த குழுவினர் தாம்"என்றார். அவர் குரலில் உண்மையிலே வருத்தம் இருந்தது.

அவன் விச வாய் சும்மா இருக்கவில்லை. "உங்களுக்குத் தானே அங்கே பிரச்சனைகள் இல்லையே,வெளிய வர வேண்டிய அவசியம் இல்லையே?"கேட்டான். அப்பவும் சிரித்துப் போட்டு முகத்தில் சோகம் பரவ "உனக்கு வெள்ளைவான் கடத்தல் தெரிந்திருக்கும். என் அண்ணரைக் கொண்டு போனவர்கள், இன்று வரையில் ஒரு சேதியும் இல்லை"என்றார். தொடர்ந்து "அண்ணர் ஒரு ஊடகவியளாளர். அவர் வழியில் நானும் இருந்தேன்"என்றார். தமிழரின் உரிமைகளை எழுதியும் பேசி வந்தவர்கள். சே !,நான் ,முதலில் மனிதனாக இருக்க  கற்றுக் கொள்ள வேண்டும்.என் நக்கல்கள் எல்லாம் கழன்று விட,"எப்படி நீங்கள் ,வந்து கனகாலமோ?"என்று கேட்டான். அதற்கு அவர் "உங்கட பிரதம மந்திரி ஒரு கடவுளின் குழந்தை " என்று சிலாகித்தார். இவரும் இவர் தந்தை வழியில் நடப்பவர் தான். விளங்காத மாதிரிக் கேட்டான்."ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?"."சிரியன் அகதிகளை பெருமளவில் ஏற்றுக் கொண்டாரே, நாங்கள் பெருமளவில் மலையக மக்களின் உரிமைகளைப் பறித்தவர்கள்"என்றார். தொடர்ந்து "என்னுடைய மனைவியின் சகோதரர்கள் ,என் நிலையைச் சொல்லி ஸ்பொன்ஸர் பண்ணினார்கள். ஏற்றுக் கொண்டு விசாவும் தந்து விட்டார்கள். குடும்பத்தோட வந்து மூன்று வருசமாகின்றது"என்றார்.‌

செப்பேர்ட் வீதிக்கு வந்து விட "என்னுடைய மச்சான் இதற்குக் கிட்டவிருக்கிற பேருந்து நிலையத்திற்கு வருகிறேன்...என்றவர்,ரிம் கொட்டனில் ஒரு கோப்பியை வாங்கிக் கொண்டு வந்து நிற்க சரியாக இருக்கும்" என்று விடை பெற்றார். "உங்களைச் சந்தித்ததில் சந்தோசம். பாய் !"என்றவன் திரும்பி நடக்கத் தொடங்கினான்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.