காலைச் சூரியன் பொட்டெனச்சுடுகிற இலையிடுக்கில் மாமரத்து நிழலில் பெண்கள் பண்பாயோடு குந்திவிட்டனர். மௌலானாவின் மன்சிலுக்கு வருகிற பெண்களுக்கு தாயத்தும் ஓதிய தண்ணீர் பிடிக்க கலனும் விற்கவென மன்சிலை ஒட்டிய செய்யதுவின் கடைச் சாம்புராணி, மன்சிலின் பெரிய கிணற்றடிக்கு பின்னால் செத்துக்கிடந்த பூனை நெடியிடம் தோற்றுப் போயிருந்தது. லெவ்வை கிணற்றுக்கு கிழக்கால் பாத்தி பிடித்து மரவள்ளிக்கிழங்கை செவ்வென நட்டியிருந்த வரிசை இடையில் பூனையை புதைக்க குழி வெட்டிக்கொண்டிருந்தார். லெவ்வை தான் மன்சிலின் பேஷ் இமாம். தொழுவிப்பது, ஓதுவிப்பது, மையத்து வீடு, கத்தம்பாத்திஹா கோழி அறுக்க தக்பீர் சொல்லுவதென மாதம் ஐயாயிரம் தேத்திக் கொண்டிருந்தார். மௌலானா வரும் மாதங்களில் சதகா மட்டும் பத்து பதினையாயிரம் தேறும். பார்க்க தடித்த தேகம். பெனியன் இறக்கிய பச்சைவாரில் மண்ணடி நண்டு மார்க் சாரன் பிடிபட்டிருக்கும். தங்க முலாம் கைக்கடிகாரமும் அதை மூடும் கைரோமங்களுமென திடும் என்று இருப்பார். நெற்றியில் தொழுகை வடுவும் முகத்தில் தோய்ந்த கறார் பாவமுமாக மஜ்லிஸை துவக்கினாலே எல்லோரும் கமுக்கமாக பாத்திஹா ஓதத் தொடங்கிவிடுவர்.

காலையில் எட்டு மணிக்கெல்லாம் மௌலானா மருந்து கொடுக்க வருவார். பாய் விரித்த மன்சிலின் வெளிப்பள்ளியில் வெள்ளை விரித்த தலையணைப் பஞ்சில் முஸல்லாவைக் கிடத்தி பானா வடிவில் விரிப்பு போடப்பட்டிருக்கும். ஒரே மாதிரியான பச்சை முசல்லாவுக்கு நடுவில் கொஞ்சம் உயரமான தலையணைக்கு மேல் சிவப்பு காஷ்மீர் முசல்லாவிலேதான் மௌலானா உட்காருவார். தீர்க்க முடியாத நோய்களை, மனநிலை பிறழ்ந்த பெண்களை, விசம் கொட்டுண்டு வீங்கிய பிள்ளைகளை, சைத்தான் பிடித்த குமருகளை தவிர அவசரத்திற்கு வேறு யாரும் மௌலானா வை தரிசிக்க முடியாது. வரிசையில் நான்கு நான்காக பெண்களும் இரண்டு இரண்டாக ஆண்களும் இருக்கவேண்டும். ஊரின் பெரிய பள்ளிகளின் மரைக்காயர்களோ பட்டினசபை மெம்பர்களோ யாராகினும் வரிசையிலே நிற்கவேண்டும்.

காலையிலிருந்து ழுஹர் அதான் வரைக்கும் மௌலானா மருந்து கொடுப்பார். ஒரு சிறு போத்தலில் சீரகப்பாணியும் இசிமும் கொடுப்பார். பகல் உணவுக்கு பின்னர் மௌலானா ஓத ஆரம்பிப்பதாக மன்சிலின் இமாம் காளைக்கு போய்விடுவார். இமாம் காளை தொடர்ச்சியான நான்கு அறைகளும் ஒரு பின்வாசலோடு வெளித்திறக்கும் குசினியையும் கொண்டிருக்கும். இமாம் அறைக்கு வெளிச்சுவரிலிருந்து இரும்பு கேத் வழியாக பின்னால் சென்றால் தான் இமாம் அறைக்கு செல்ல முடியும். லெவ்வையும் மௌலானாக்கு கித்மத் (சேவகம்)  செய்யும் முகைதீனும் அன்சாரும் மட்டும் தான் இமாம் காளைக்கு செல்ல முடியும். காளை வாசலில் மயிலும் வான்கோழிகளும் மேய்கின்ற குவாக் கியூழ் சத்தங்கள் மாமரத்து தண்ணீர் குழாய் வரை கேட்கும்.

அன்சாரும் முகைதீனும் மௌலானா வுக்கு விசுவாசிகள். மௌலானா சொன்னால் மன்சிலின் பெரிய கிணத்துள் தலைப்பாட்டில் பாய்வார்கள். மௌலானா விடம் வரும் நோயாளிகள், பரிசாரிகளிடம் மௌலானா வை தொடவோ கிட்ட சென்று முஸாபாஹ் செய்யவோ இவர்கள் அனுமதிப்பதில்லை. மௌலானா க்கு தினமும் ஜமாஅத்தார் வீட்டிலிருந்து கெரியலில் வரும் பகலுணவை மௌலானாவுடன் உச்சிக்கொட்டி சாப்பிடுவது வழக்கம்.

முகைதீன் பள்ளி கொடியேற்றத்திற்கு மௌலானாவை அழைக்கிற முஸ்தீபுகளும் தோல்வி.

” எங்கட கடமைய நான் செய்யனும்”

மௌலானா மறுத்துவிட்டார்.

மௌலானா வெண்ணிற நெய் போல மினுமினுக்கி இருப்பார். மோவாயின் கீழே மச்சமிருக்கும். சதுரநாடியை சுற்றி ரெண்டு அங்குல தாடி மழித்த மீசைக்கு வந்து சேரும் வாயின் இருபக்கமும் நேர்த்தியாயிருக்கும். மௌலானா தூங்கப்போகும் போது அத்தர் பூசுவார். கன்னூஜ் அத்தர் மௌலானாக்கு பிடித்ததால்  ஊராரும் மௌலானா அத்தரென்றே பின்னர் சொல்லும் வழக்குண்டு.

நான் சிறுவயதில் மௌலானா வைப் பார்த்திருக்கிறேன். மன்சிலில் ஓதப்போகும் போது அதிகாலையில் நான் இகாமத் (தொழுகையழைப்பு) சொல்ல மௌலானா தொழுவித்திருக்கிறார். எனக்கு பாம்பு கடித்த அன்றும் விசக்கல்லை ஒற்ற மன்சிலுக்குள் அவர் தான் தூக்கிப் போனார். மௌலானா வின் அத்தர் பாதி நம்மை குணப்படுத்தி விடும். காயத்தில் மௌலானா வின் பறக்கத்தை (உமிழ் நீர்) தடவி விடுவார்.

காலையிலே வந்த பெண்களின் பேச்சு மன்சிலைப் பரவியிருந்தது. முழுப்பேச்சும் மௌலானா வின் வயது பற்றித்தான். சிலர் முப்பதென்றும் இருபத்தாறென்றும் பேசிக் கொண்டனர். முஹ்சினா அடித்து சொன்னாள்.

“முப்பது தான் வயது. மதீனா க்கு ஓதப்போகக்கொல்ல எட்டு வயசாம். பன்னெண்டு வருசமோதி வந்தாமெண்டு வாப்பா செல்லி எம்பெட்டு காலம் பெய்த்து. அதுக்குள்ள ரெண்டு கந்தூரியும் வந்திட்டு”

மௌலானாவைப்பார்ப்பதற்கென்றே இங்கே ஒரு கூட்டம் வரும். அவர்களை மரவள்ளிப்பாத்திக்கு ஆளுக்கு ரெண்டு வாளி தண்ணீர் ஊற்றச் சொல்வார் லெவ்வை. முஹ்சினாவின் கைபட்டு தண்ணீர் வாளி நைந்து போனதாக முகைதீன் சிரிப்பான். அசட்டுத்தனமாக மௌலானா வையே பார்த்துக்கொண்டிருப்பாள். வீட்டிலும் மன்சிலுக்கு போகிறேன் என்று காலையிலேயே வந்து விடுவாள்.

பேச்சு கலைந்து போகும் அறிகுறி. இமாம் காளை கேத்தை திறந்து மௌலானா மன்சிலுக்கு வருகிறார். முகம்மது பின் துக்ளக் காலத்தில் மதுரையில் நிலவிய சுல்தான் ஆட்சியில் மௌலானாவின் வம்சத்தினர் தோன்றினர். அந்த மிடுக்கோடு தலைப்பாகை நீண்ட ஜுப்பா, கழுத்தில் ஈரான் கல்லுமாலை, லெதர் பாதணி என மௌலானா முஹ்சினாவுக்கு ஜொலித்தார். சிறிது நேரத்தில் முஹ்சினா பதறிப் போனாள். மன்சிலுக்கு வரும் மௌலானாவுக்கு கால் கழுவி விட முகைதீனும் அன்சாரும் இல்லை. மௌலானா குனிந்து வாளியை எடுப்பதற்குள் முஹ்சினா முந்திக் கொண்டாள். வாளியிலிருந்து மெதுவாக தண்ணீரை ஊற்ற மௌலானா கழுவினார். மௌலானாவின் கால்கள் வெளிர்ந்து சிவந்து போயிருந்தன. “ராவெல்லாம் நின்று கால் கடுக்க தொழுதார் மௌலானா”. முஹ்சினா நினைத்துக் கொண்டாள். நகங்கள் வெட்டி துப்பரவாயிருந்தன. விரல்களில் கரும் உரோமங்கள் சீராக விரவியிருந்தன. மௌலானா உள்ளே போய்விட்டார். குனிந்த போது விழுந்த மௌலானா வின் மிஸ்வாக் குச்சியை பொறுக்கிக் கொண்டாள். அவளுக்கு உடம்பு குளிர்ந்திருந்தது. மௌலானாவின் கால்களை தள்ளியிருந்து ஒற்றிக் கொண்டாள். கை வியர்த்தது. கையை மரவள்ளி தண்டின் நெட்டியில் வழித்து விட்டாள். ஹஜ் க்கு பிறை தெரிந்தால் மௌலானா ஊருக்கு போய்விடுவார். மௌலானா முஹ்சினாவின் எல்லாக் கனவுகளையும் ஆக்கிரமித்தார். அவள் திரும்ப மௌலானா முன்னே நின்றார். கிணற்றடியில் வாளிக்குள் மௌலானா மிதந்தார். செய்யது கடையில் அத்தர்லாக்கை கண்ணாடியில் மௌலானா தெரிந்தார். முஹ்சினாவுக்கு மௌலானாவின் கால்கள் உதைக்க தொடங்கின.

ழுஹர் தொழுது முடிந்ததும் மௌலானா இமாம் காளைக்கு திரும்பிக் கொண்டிருந்தார். கேத்தில் சாய்ந்தபடி முஹ்சினா சாப்பாட்டு கெரியலோடு நின்றிருந்தாள். முகைதீனும் அன்சாரும் கொடியேற்றத்திற்கு போய் விட்டார்கள். சதகத்து மாமியின் முறை இன்றைக்கு. புளியாண வாசம் மௌலானா வை சுண்டி இழுத்தது. சைகை காட்டினார் மௌலானா.

இமாம் காளைக்குள் ஒரு பெண் நுழைகிறாள். வான்கோழிகள் வீறிட்டு கத்தின. வாழைக்குலை பழுத்து மரம் விழப்பார்த்தது. இமாம் காளை வாசல் கூட்டாமல் குப்பை மொண்டிக் கிடந்தது. விறாந்தையில் சாய்மனை. பக்கத்தில் வெள்ளிப்படிக்கம். வெள்ளித் தாம்புலத்தில் பாக்குச் சீவல்கள். சுண்ணாம்பு டப்பா மேல் வெற்றிலைக் கட்டு. புகையிலை கந்தொன்று பேப்பர் சுருட்டி பாதி திறந்திருந்தது.

லாந்தர் சிமிழ் கழுவாமல் கருகியிருந்த மேஜையில் சில புத்தகங்கள். சுண்ணாம்பு சுவரில் மௌலானாவின் ஆடைகள் கொழுவுமிடத்தில் தஸ்பைக்கோர்வை. முதிரை லாக்கையினுள் துருக்கிப் பாத்திரங்கள், புழுதி மண்டிக்கிடந்த பழைய வெடித்துப்பாக்கி. முஹ்சினா கெரியலை பிரித்து மௌலானாவுக்கு பரிமாறினாள்.

வாசலைக் கூட்டி குப்பைக்கு நெருப்பு வைத்தாள். வாழைக்குலை வெட்டி உரப்பையிலிட்டு பழுக்கப் புகை காட்டினாள். லாந்தர் சிமிழைக் கழுவி திரிக்கு பழந்துணி மாற்றினாள். லாக்கையை அடுக்கி புழுதி துடைத்தாள். அடுப்பங்கரைப் பழங்கொள்ளித்துண்டுகளை அப்புறப்படுத்தினாள். ஒதுங்குமிடம் கழுவி கலனில் தண்ணீர் விட்டாள்.

லெவ்வையிடம் சொல்லி வியாழன் தோறும் இமாம் காளைக்கு சேவகம் புரிந்தாள்.

இமாம் காளைக்கு ராத்தீபு முடிந்து வந்தார் மௌலானா. அன்றும் வேலை முடித்து வெற்றிலை மடித்துக் கொடுத்தாள்.

“முஹ்சினே, இந்த வானத்தோட ஹக் என்ன சொல்லு.?”.

“எனக்கென்ன தெரியும். நீங்கானே மௌலானா”. சொல்லியபடி சுண்ணாம்பு தடவினாள் முஹ்சினா.

” வானத்துல கோடான கோடி நட்சத்திரம் சூரியன் சந்திரன் அது அதுட வேலைகள தவறாம பாக்குறது தான் வானத்தோட ஹக்”.

“அப்போ பூமியோட ஹக் மௌலானா?”.

மழை கெட்டியாக பெய்ந்தது. வான்கோழிகள் கூட்டுக்குள் கொக்கரித்தன. மயில் விறாந்தையில் படுத்திருந்தது.

” பூமியில இருக்கிற காடு மலை மரம் செடி கொடி பிராணிக மனிசன் எண்டு எல்லாத்துக்கும் சாப்பாடும் இருக்க ஊடும் அந்த அந்த இடத்திற்கேத்தமாதிரி எல்லாம் அமைச்சிருக்கெலவா. அது தான் பூமிட ஹக்”.

பேசிக்கொண்டிருந்த மௌலானா பாக்குத் தாம்புலத்தை உதைத்து விட்டார். அது அவள் வாழ்க்கையை உதைக்குமென்று அவள் நினைக்கவில்லை. மௌலானா வின் கண்ணும் வாயும் கோணியது. கால்கள் துடிப்பெடுத்து உடல் சுரங்காய்ந்தது. குமரக்கண்ட வலிப்பு. மௌலானாவுக்கு அடிக்கடி வரும். மௌலானா வை இழுத்து மெத்தையில் போட்டாள் முஹ்சினா. கொய்யா இலை கொய்ந்து சாறு பருக்கினாள். திரிகடுகு, கடுக்காய் தோல், வசம்பு, பெருங்காயம் அதிவிடயம் கருமண் உப்பு சேர்த்து பிசைந்து ஊட்டினாள். சுரந்தணிந்தாலும் துடிப்படங்கவில்லை. கால்மடக்க கை துடித்தது. கை பொத்த கால் விசிறி காயம் வந்தது. முஹ்சினா ஏறி கால்களை அமத்தினாள். கைகளை உள்ளங்கை பற்றி சூடு காட்டினாள்.

மழை கெட்டியாக பெய்ந்தது. மறுநாளும் மௌலானா மன்சிலுக்கு வரவில்லை. கொஞ்சம் தேறியிருந்தார். முகைதீனும் அன்சாரும் பணிவிடை செய்தனர். மறுநாளும் முஹ்சினா வரவில்லை. தாமதமாகி மௌலானா மன்சிலுக்கு வந்தார். நடை தளர்ந்திருந்தது. மரவள்ளிப் பாத்திகளைப் பிடுங்கி கிழங்கவித்து லெவ்வை மிளகாய் வெங்காயத்தோடு தின்னக் கொடுத்தார். முஹ்சினா அங்கில்லை. பரிசாரம் பார்க்க பெண்கள் வந்திருந்தனர்.

மௌலானா விசாரித்தார். முஹ்சினாவின் வாப்பா படுத்த படுக்கையாம். முகைதீன் காதுவெச்சபடி சொன்னான். மௌலானா வீடு போய் பார்த்தார். தாயத்துக் கட்டினார். இசிம் கொடுத்தார். முஹ்சினா முகத்தில் தெளிவில்லை. எதிலும் கண்ட மௌலானாவின் பிரமை அவளை உருவழிய வைத்தது. மரவள்ளி பாத்திகளைப் போல அவள் பிடுங்கி எறிந்த கிழங்கு அவியுமா.? அச்சத்தில் கூனியிருந்தாள். அவளுக்கு தலை சுற்றலாகி இருந்தது.

மௌலானா போகும் நாளும் வந்தது. முஹ்சினா வரவில்லை. இது தான் தான் கடைசியாக வரும் வருஷமென மௌலானா சொல்லியிருந்தார். ஊர்திரண்டு வந்தது. பைத் பாடி சிறுமிகள் மலர் தூவினர். ஊர் தலைவர்கள் பரிசும் பொதிகளும் கொடுத்தனர்.

“எங்கள உட்டுப்போட்டு போறேளா” பெண்கள் கதறியழுதனர். மௌலானா முஹ்சினாவைத் தேடினார். வண்டிலில் துருக்கி சிவப்பு முசல்லாவில் மௌலானா அமர மாடுகள் நகர்ந்தன.

மழை கெட்டியாக பெய்ந்தது. பாராயணம் விண்ணைப் பிளந்தது. இம்முறை வெண்ணிறக் கால்கள் முஹ்சினாவின் வயிற்றில் உதைத்தன.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.