- எழுத்தாளர் முருகபூபதியின் முதலாவது சிறுகதை.  1972 ஜூலை மாதம் '[மல்லிகை'யில்  வெளியானது.


நீர்கொழும்பு கடற்கரையோரம்.

பேரிரைச்சலுடன், அலைகள் எகிறி விசிறிக்கொண்டு ஆவேசமுடன் – தாயை நோக்கி ஓடிவரும் சிறு குழந்தையைப்போல, அம் மோட்டார் எஞ்சின் பொருத்திய தெப்பங்கள் கரையை நோக்கி நெருங்குகையில்…. அப்பெருத்த ஒலி ஊளைச்சத்தம் போல் எழுந்து ஓய்கிறது.

கரையில் மோதும் அலைகளால் அங்குமிங்கும் அலைக்கழிக்கப்படும் தெப்பங்களும் போட்டுகளும் – அந்த தினமும் சுறாமீனும் பொடி மீனும் சாப்பிட்டதாலும் அச்சாப்பாட்டுக்காகவே உழைத்ததாலுமே மெருகேறியிருந்த கருங்காலி நிறத்து மீனவர்களது கரங்களால் கட்டுப்படுத்தி நிறுத்தப்படுகிறது.

 “ செவஸ்தியான்  புறகால புடிடா… ம்… ஏலோ….ம்…. ஏலோ…ம்ம்… மத்த அலை வரட்டும், ஆ… வந்திட்டுது… பிடி… ஏலோ…. “ தெப்பத்தின் ஒரு முனையை பிடித்தபடி மணலுக்கு இழுத்து நிறுத்த முயற்சிக்கும் பணியில் பெரும் பலத்தோடு இப்படி கத்துகிறான் அந்தோனி.

கடல்தாயின் அச்செல்வக்குழந்தைகள் மடியைவிட்டு கரையில் இறங்கின. அந்த மீனவர்களது கரங்களும் தோள்களும் என்னமாய் இயங்குகின்றன.! தினவெடுத்த தோள்களின் பலத்தை பார்க்கையில் , கணத்தில் பத்துவயதுச்சிறுவன் இருபது வயதுக்காளையாகி  வேலை செய்யும் பக்குவம் அது.

நடு இரவில் தொழிலுக்குப்போகும் மீனவர்கள் மறுநாள் முற்பகலில் கரைக்குத் திரும்புவார்கள். தெப்பங்களையும் எஞ்சின் பொருத்தியுள்ள போட்டுக்களையும் கரைக்கு இழுத்து மணல் மேட்டுக்கு கொண்டு வருவதில் அம்மீனவர்கள் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பர்.

ஏனெனில் அவர்கள் ஒரே வர்க்கத்தினர் அல்லவா…!

வலையில் சிக்கியிருக்கும் பொடி மீன்களை சற்றுப்பெரிய மீன்களை தரம்பிரித்துப்போடும் வேகமான செயல்பாட்டு அழகு அப்பரம்பரைக்கே உரித்தான பாணிபோலும்.

அதிகாலையில் வெறுமையாக – அமைதியாக இருந்த அக்கரையோரம் – இப்போது தெப்பங்களாலும் போட்டுக்களாலும் நிரம்பியதும் போதாமல் மீனவர்களது ஆரவாரக் கூச்சல்களினாலும் மேலே வட்டமிட்டுக்கரையும் காகங்களின் இரைச்சல்களினாலும் அமைதி இழந்து காணப்பட்டது.

கரையில் தனது தெப்பத்தை தரிப்படுத்திவிட்ட மகிழ்ச்சியில்   “ அடியேய்… சுருப்பணத்தில வாவே… பயஸ்கோப்பில வார சிறுக்கி மாதிரிஇ ஆட்டி… ஆட்டி … வார  “ இடுப்பில் மீன்கூடையுடன் நடைபயின்று வரும் தன் மனைவி மேரியைப்பார்த்து அந்தோனி கத்துகிறான்.

 “ இன்டைக்கும் மட்டச்சாலையா பட்டிரிச்சி.. சூசை அப்புட வலையிலயும் மட்டச்சாலைதான் “  என்றவாறு கூடையை நிலத்தில் வைத்துவிட்டுஇ மீன்களைப்பொறுக்கி கூடையில் நிரப்புகிறாள் மேரி. அவள் கொண்டு வந்திருக்கும் சூடாறிப்போயிருந்த தேநீரை சிறிது குடித்துவிட்டுஇ  “ இந்தா செவஸ்தியான்… நீயும் குடி…. இந்தச்சிறுக்கன்களுக்கும் குடு… ம்… இந்தா…  “ என்றவாறு காதிலே செருகியிருந்த பீடியை எடுத்து பற்றவைத்துக்கொண்டுஇ மற்ற தெப்பக்காரன்களின் வலையில்  ‘ பட்ட ‘ மீன்களை நோட்டம் விடுகிறான் அந்தோனி.

அந்தோனியின் தெப்பத்தை நோக்கி வந்துகொண்டிருந்த பேதுருவின் வாயில் ஒரு சினிமாப்பாட்டு அகப்பட்டு அந்தரப்பட்டது. இரண்டு தம் இழுத்துவிட்டு பீடியை பேதுருவிடம் கொடுத்தான் அந்தோனி.

பீடியை வாங்கி புகைவிட்ட பேதுரு கேட்டான்:  “ ஏன்டா… அந்தோனி… நீயும் ஒரு ஜோன்சன் எஞ்சின் வாங்கினா என்ன..?  எஞ்சினை வாங்கிட்டா இ இப்படி துடுப்பு போட்டு வலிச்சு மாயவேணா எலா…?“

ஜூலை 1972 மல்லிகை சஞ்சிகையில் முருகபூபதியின் 'கனவுகள்'.

 “ என்னடா… செல்லிய… நீ… ? எஞ்சின் வாங்கியதென்டாப்பில லோசாயிரிச்சா… ? நம்மட்ட அம்மட்டு காசா இரிச்சுது…?  “ இவ்வாறு அந்தோனி கூறக்கேட்ட மேரிஇ மீன் பொறுக்குவதை விடுத்து தலை நிமிர்ந்துஇ  “ பேதுரு ஐயா… யாரோ சென்ன எலா… கோபிரேசன் எஞ்சின் குடுக்கியது என்டு  “ சொன்னதும் அந்தோனிக்கு எரிச்சல் பற்றியது.

 “ அடியேய்… எஞ்சினை சும்மா குடுப்பாங்களா…?  “

 “ நாம்ப… மீனை சும்மா குடுப்பமா…? மொதல்ல காசு கொஞ்சம் கட்டினாப்பில அவுங்க எஞ்சினை குடுப்பாங்களாம். அம்புட்டுக்குப் பொறகால மாசா மாசம் நம்பட வசதியப்போல மிச்சக்காசை கட்டி முடிச்ச ஏலுமாம். சிசிலியக்காதான் சென்னா. அதப்போல… நாம்பளும்…… “ இழுத்து நிறுத்தினாள் மேரி.

தெப்பம் இழுத்ததும் வலையில்  மீனைப்பொறுக்கிய செவஸ்தியானும் மற்றச்சிறுவர்களும் அடுத்த தெப்பத்திற்கு செல்லவேண்டிய அவசரத்தில் தங்கள் கூலிக்காக கையை நீட்டினர்.

எஞ்சின் வாங்குவது பற்றிய தனது அபிப்பிராயத்திற்கு புருஷன் ஏதாவது சொல்வான் என்ற ஆர்வத்துடன் இருந்த மேரிஇ வேறாகப் பிரித்து வைத்திருந்த பொடிமீன்களில் கொஞ்சம் எடுத்துக்கொடுத்து அவர்களை அனுப்பினாள்.

 “ நான் மீன் கடைக்குப் போறன்…. “ மீன்கூடையை தூக்கமுயன்றவளுக்கு பேதுருவும் கைகொடுத்து  அவள் தலையில் அச்சுமையை ஏற்றினான். ஆயாசத்துடன் நிமிர்ந்த மற்றப்பெண்களும் தத்தம் கூடைகள் சகிதம் மீன்கடையை நோக்கிப் புறப்பட்டனர். மேரியும் அவர்களுடன் சேர்ந்துகொண்டாள்.

அவர்கள் கடற்கரையைக் கடந்து தெருவில் ஏறிஇ வேகமாக நடக்கிறார்கள்.

 “ சோமல மாதாவே இன்டைக்கு கெதியா யாவாரம் முடியவேணும். என்ட மகள் பெரியாஸ்பத்திரியில் புள்ளை பெத்திருக்கியாள். பண்ணன்டு மணிக்குத்தான்  பாக்கியத்துக்கு  விடுவாங்க.  குளுக்கோசும் தெம்பிலியும் கொண்டு போகோணும்.  “ என்று சொல்லிக்கொண்டு மற்றவர்களிடமிருந்து முன்னேறி வேகமாகச் செல்லும் றோசலீனை… அவளது துரிதமான நடையினால் – அந்த அதிர்வில் தலையில் ஆடும் கூடையும் – மேலும் கீழும் நடையினால் ஏறி இறங்கும் பிருஷ்டத்தையும் பார்க்கும்  பின்னால் வந்துகொண்டிருந்த மீன்காரிகள்  ரசித்துச் சிரித்தனர்.

“  றோசலீன்ட மகளுக்கு என்ன புள்ளை பிறந்தீச்சுது..?  “ மேரி ஆவலோடு கேட்டாள்.

 “ அவளுக்கு இந்தச்சரயும் பொடிச்சிதான். இது ஆறாவது சிறுக்கி. ம்… வேணா… வேணா என்டியவளுக்கு ஆண்டவர் குடுக்கியார். வேணும் என்டு செல்லி காணிக்கை கட்டி கோயிலுக்கு எண்ணை ஊத்துறவுங்களுக்கு புள்ளை கிடைச்சுது இல்ல…! இதுவும் ஆண்டவர்ட பார்வைதான்.  “

அருகில் வந்த சிசிலியக்கா இப்படிக்கூறியதைக்கேட்ட மேரிக்கு சூடமீன் முள் தொண்டையில் குத்தி அடைப்பதைப்போன்ற உணர்வைத் தோற்றுவித்தது.  

‘ நம்பளத்தான் இவ செல்லிக்காட்டியாள் ….. ‘ கண்ணில் மட்டுமா சுரந்தது…? மூக்கில் சுரந்ததை சீறி சளியை உதறிவிட்டு இடுப்பில் சுற்றியிருந்த கம்பாயச் சேலையில் விரல்களை துடைத்துக்கொண்டாள் மேரி.

வீட்டுக்கு வந்துவிட்ட அந்தோனியின் மேற்சட்டை கடல் நீரில் மட்டுமா நனைந்திருந்தது..? வியர்வையிலும் பிசுபிசுத்தது. எல்லாம் உப்புத்தான். முற்றத்தில் கட்டியிருந்த கொடிக்கயிற்றில் மேற்சட்டையை காயப்போட்டுவிட்டுஇ கோவணத்தை வரிந்து கட்டிக்கொண்டு சாரத்தையும் உதறிப்போட்டுவிட்டு வந்தான் அந்தோனி.

கொண்டு வந்த கள்ளில் சிறிது குடித்துவிட்டு ஓலைச்சுவரில் செருகியிருக்கும் அந்தக்கலண்டர் மட்டையை உற்றுப்பார்த்து பெருமூச்சு விட்டான். இது வழக்கம். அந்தக்கலண்டரில் என்னதான் அப்படி இருக்கிறது…? அவன் மேரியை மணமுடித்து எட்டு வருடமாகியும் இன்னும் குழந்தை இல்லை. கலண்டரில் சிரித்தபடி இருக்கும் அக்குழந்தை தினமும் அவனைப்பார்த்து சிரித்து நினைப்பூட்டுகிறதோ…?

 “ ஈந்து… ஈந்து… போட்டு இந்த மலடிச்சிய கட்டிக்கிட்டனே…?!  “ அந்தக்கலண்டர் படத்தைப்பார்த்ததும் அப்படிச்சொல்லவேண்டுமென்ற உணர்வு. அவ்வுணர்வைத் தொடர்ந்து ஏக்கம்… அந்த ஏக்கம் பிரசவித்த வேதனை.

 “ எனக்குப்புறகால கலியாணம் கட்டினவங்களெல்லாம் நாலைஞ்சு புள்ளைகளை பெத்துட்டானுகள். எட்டு வருஷமா…. நானும்…. ம்…. இந்த மலட்டு வேசை…..ஆ… என்ன சென்னன்… நானா… இப்படிச்சென்னன்….”  நாக்கைக்  கடித்துக்கொண்டான்.

 "  அவள் பாவம். அவளால என்ன செய்ய ஏலும்..? அவள் முன்னுக்கு இப்படிச்செல்லியீந்தா… உசிரை விட்டிருப்பாள். ஒரு புள்ளையை எடுத்து வளப்பம் என்டு சென்னாலும் அவள்… வீறிடுறியாள்.  ‘ எவளோ பெத்திட்டுப்போக அத… ஆஸ்பத்திரியில ஈந்து அனாதையா நாம எடுத்து வளக்கவா….? ஒங்களுக்கென்ன பயித்தியமா….? வேணாம். எடுத்து வளத்த புள்ளைஇ வளந்த புறகாலஇ அதுக்கு விஷயம் தெரிஞ்சு போனா… என்ன செய்ய…? இல்லடா… நீ வளத்த  புள்ளை இல்லடா… நான் பெத்த புள்ளைதான்டா… என்டு நம்ப வச்சியத்துக்கு நான் வாயிலயும் வவுத்திலயும் அடிச்சுக்கிட்டு வீறிடியதை பார்க்க ஒங்களுக்கு  ஆசையீந்தா… அப்படி விருப்பமிரிச்சுமென்டால்இ போங்கோ… போய் எவளோஇ எவனுக்கும் பெத்துப்போட்டதை தூக்கிட்டு வாங்க….. “ என்டு செல்லியாள் இவள். என்னைப் பயித்தியம் என்டியாள்.  இவள்தான் பெரிய பயித்தியம்.  “ அந்தோனியின் மனம் குமைகிறது. கொஞ்சம் கள் குடிக்கிறான். ஒரு ஏப்பம் வேறு !

குறையை நீக்க கணவன் மேற்கொள்ளப்போகும் குறுக்குவழி… அம்முடிவில் ஏற்படப்போகும் அர்த்தமற்ற ஏமாற்றம் அதில் வேதனை கலந்து கலப்படமாகிஇ அழுகையாகவோ – விசும்பலாகவோ மேரியின் வாயிலிருந்து அம்மாதிரிப்பேச்சுகள் உதிரும்.
மேரியின் இவ்விசித்திரப்போக்கை கண்டு அந்தோனி அப்பேச்சையே எடுப்பதில்லை. எத்தனை நாளைக்குத்தான் அப்படி…?

திடீரென என்றாவது ஒருநாள் கேட்டுவிட்டால்  “ ஏன்… நீங்களும் எனக்கொரு புள்ளையைப்போலத்தானே…? தலுப்பொத்தை அந்தோனியாருக்கு ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் எண்ணய் ஊத்திக்கிட்டு வாரந்தானே…? அந்த ஆண்டவர் கண்ணைத்துறந்திட்டா என்ட புள்ளையும கண்ணைத்திறந்து பால் கேட்டு அழும். “  

“  அப்ப… இந்த அந்தோனிக்கு சரியான கோவம் வரும். எனக்குப்போட்டியா ஒருத்தன் வந்திட்டானே என்டுதான்….”  இப்படிச் சொல்லிவிட்டு  மேரியை அணைத்து அட்டகாசமாகச் சிரிப்பான் அந்தோனி. அவளும் பெரிதாகச் சிரிப்பாள். அதுவே நிரந்தரமான சுகமாக அப்போதைக்குத்  தென்படும் அவர்களுக்கு.

மோட்டார் எஞ்சின் வாங்குவது சம்பந்தமாக மற்ற மீன்காரிகளுடன் அடிக்கடி பேசினாள் மேரி. அவர்களது புருஷன்மார் எப்படி எஞ்சின் வாங்கினார்கள் என்பதை அறிந்து அவளும் தனக்குள் ஒரு கணக்கைப்போட்டு அதற்குரிய விடைக்காக மூளையைக் குழப்பி விடை கிடைத்த மகிழ்ச்சியில் அவளும் ஒரு திட்டம்போட்டாள்.

தினசரி மீன் வியாபாரத்தில் கிடைக்கும் பணத்தில் ஒரு பங்கை புருஷனுக்குத் தெரியாமல் அடுப்படியில் புதைத்திருந்த மண்முட்டியில் சேமித்தாள்.  பணம் சேரத்தொடங்கியது.

அவ்வாறு புருஷனுக்குத் தெரியாமல் பணம் சேமிப்பது அவளுக்கு என்னவோ போலிருந்தாலும் தனக்குள் சொல்லிக்கொள்வாள்.

 “ ஏன்… சேர்த்தா… என்ன…? நல்லதுக்குத்தானே…? முண்ணூறு ரூபா சேர்ந்திட்டா அந்தக்கோப்பிரேஷன்ல கட்டி மோட்டார் எஞ்சின் வாங்க ஏலும். மிச்சத்துக்கு ஒரு பெற்றோல் டேங்கி வாங்கோனும். இப்ப… நான் சல்லி சேக்கியது அவருக்குத் தெரிஞ்சிட்டா… ஐயோ… வேணா…இரிச்சிய சல்லிய எடுத்து திண்டு குடிச்சி உடுத்து ஜோலி பண்ணுவாரு. சல்லி முண்ணூறு ரூபா மட்டில சேருமட்டும் தெரியாமலே இரிக்கட்டும். புறகால மீதிய பணத்தை கோப்பிரேஷனுக்கு சிறுக சிறுக கட்டி முடிச்ச ஏலும். “

 “இன்டைக்கு இவள் வந்தாப்பில செல்லவேணும். இப்படியே விட்டா சரியில்லை.  ‘ அந்தோனியாருக்கு எண்ணை  ஊத்திறன்… சுருப்பணத்தில புள்ளை கிடைக்கும்  ‘ என்டு செல்லிச்செல்லியே என்னை ஏமாத்துறாள். அவளுக்கென்ன எனக்குப்புறகால அவள வெச்சுப்பார்க்கியது யாரு…? ஒரு சிறுக்கன் ஈந்தான் என்டால்  தெப்பத்தையும் வலையையும் வைச்சு அவள காப்பாத்துவான். நான் இரிச்சிமட்டும் அவளுக்கு நல்லம்.

அதுக்குப்புறகால…?! அண்டைக்கு பேதுருக்கிட்ட பேசியச்சில்ல அவன் சென்னான்  “ தேவமாதா கோயிலுக்கு புறத்தால இரிச்சிய மனுவேல் ஐயாட பொஞ்சாதியும் பதினைஞ்சு வருஷம் புறகாலதானாம் ஒரு புள்ளையை பெத்தாளாம். அம்மாதரிஇ மேரி அக்காவும் பெத்திடுவா…”  இவன் பேதுரு செல்லியதிலும் உண்மை ஒன்டு இரிச்சுது  “

அந்தோனியின் நண்பன் பேதுரு முன்பொரு சமயம் தெரிவித்த ஆறுதலான பேச்சு அந்தோனிக்கு நிம்மதி தந்தாலும் அது தற்காலிகமானதுதான்.

‘’  இப்பவே எட்டு வருஷம். அம்மாதரி மனுவேல் ஐயாட பொஞ்சாதி மாதரி பெத்தாலும் இன்னும் ஏழு வருஷம்  இரிச்சே…? ம்… அதுவரைக்கும் நான் இரிச்சமாட்டன். நம்பட காலத்துக்கு… எனக்கு இப்பச்சே ஒரு ஜாதி வலிப்பு வியாதியும் இரிச்சுது. நாளைக்கு தொழிலாள வந்தபுறகு இவள் மேரியையும் இழுத்துக்கிட்டுப்போய்இ நீர்கொழும்பு ஆஸ்பத்திரியில ஒரு புள்ளைய எடுத்துக்கிட்டு வரோனும். நம்பட பேதுருவும் வரோனும். அவன்ட மூலியமாத்தான் அங்க அறிஞ்ச தெரிஞ்ச  ஆக்களைப்புடிச்சி செய்ய ஏலும் இவள் வரட்டும். நாளைக்கு  தொழிலாள வந்தவுடன  போகோணும்.

இரவு  படுக்கப்போகும் மட்டும் மீண்டும் மீண்டும் அது பற்றியே பேசிக்கொண்டிருந்தான் அந்தோனி.

 “ ஒங்களுக்கு செல்லியத்துக்கு வேற ஒண்டும் இல்லியா..? சென்னத்தையே செல்லிக்கொண்டு. சரி… சரி… படுங்கோ… தொழிலுக்கு ரெண்டு மணிக்கு எழும்பி போக இரிச்சுது எலா… பேசிக்கொண்டே ஈந்தா….”  

“  என்னடி செல்லிய… நாளைக்கு கடலால வந்த புறகால பேதுருவையும்  கூட்டிக்கொண்டுஇ ஆஸ்பத்திரிக்கு போகப்போறன். நீயும் வாரதென்டா வா… நல்ல வடிவான ஆம்பிளப்புள்ளைய எழுதி எடுத்துக்கொண்டு வருவோம்.“

 “ நானும் மீன்கடையால வந்த நேரம் ஈந்தே பார்க்கியன். ஒங்களுக்கென்ன பயித்தியமா…? புள்ளை… புள்ளை… எனக்கு மட்டும் புள்ளை வேணுமென்ட ஆசையில்லையா…? அது மட்டுமா..இ நீங்க இதுமாதரி எந்தநாளும் துடுப்பு போட்டு வலிச்ச ஏலுமா…? எம்மாதரியும் ஒரு எஞ்சின்  வாங்கிய புறகாலதான் மத்ததெல்லாம் என்டு சென்னா கேக்கியதில்ல…. எப்படியோ உங்கட விருப்பத்துக்கு செய்யுங்கோ… இங்க பாருங்க… ஒங்கட உடம்ப… அறக்குளா மீன் முள்ளுப்போல நெஞ்செலும்பெல்லாம் தெரியுது. இந்தத் துடுப்பை எத்தனை நாளைக்குத்தான் வலிச்சப்போறீங்களோ… ? ஆண்டவரே…!! “

பேசிக்கொண்டே இருந்தவர்கள் தத்தமக்குள் ஒரு முடிவை எடுத்தபடி உறங்கிவிட்டனர்.

முதல் நாளிரவு தனக்கும் புருஷனுக்குமிடையில் நடந்த சம்பாஷணையை மனதில் அசைபோட்டவாறே இடுப்பில் கூடையுடன்  கடற்கரையை  நோக்கி விரைந்துகொண்டிருந்தாள் மேரி.

 ‘ இந்த மனுஷனுக்கு சென்னா… விளங்கியதில்ல.  இன்டைக்குப் போகோணுமாம் புள்ளை வாங்கியதுக்கு… அடுப்படி முட்டியிலே எப்படா முண்ணூறு ரூவா சேரும் என்டு நான் இரிச்சியன். வீட்டுக்கு எப்படா புள்ளைய கொண்டாந்து சேர்ப்பம் என்டு அவர் ஈச்சியார்.   ‘  தனக்குள் பேசியவாறே அவள் நடந்தாள்.

கடற்கரையும் நெருங்கிவிட்டது. வழக்கம்போல் ஆரவாரம். ஓரிடத்தில் பெரிய கும்பலாக ஜனம் நிரம்பியிருப்பது இவளுக்கும் தெரிகிறது.

 ‘ என்ன.. அங்க… ? என்ன நடந்தீச்சும்…? யாருக்கென்டாலும் பெரிய சுறா மீன் பட்டிருச்சும்.  ‘ – அவள் எண்ணிக்கொண்டாள்.

ஒரு பெண் ஓடிவருகிறாள்.

 “ சோமல மாதவே… இந்தச்சரயும்…. கடல்  மாதாவே நீ பலியெடுத்துப்போட்டியா…? ஐயோ… என்ட மேரி… நம்மட ஐயா… அந்தோனி ஐயா… ஆண்டவரே…. “ ஓடிவந்த பெண்ணின் அவலக்குரல். மேரியின் நெஞ்சில் முட்டி மோதி… அதிர்வினால் ஒரு கலக்கம் இதயத்தில்.

 “ ஐயோ… மேரி.. வந்திட்டியா… இங்க வந்து பாரடீ… ஆண்டவரே… மோசம் செஞ்சிட்டியே…  “ அருகில் ஓடிவந்த மேரியை கட்டி அணைத்தபடி கும்பலினுள்  நுழைகிறாள் சிசிலியக்கா.

“  என்ட அம்மண்டோ… என்ட ராசாவே… என்னை விட்டுட்டு போனீங்களா…? என்னை விட்டுட்டு போக ஒங்களுக்கு மனசு வந்திச்சா…? சோமல மாதவே… ஐயோ….”  கூடையை வீசி எறிந்துவிட்டு தலையிலும் மார்பிலும் அறைந்துகொண்டு கதறுகிறாள் மேரி.

ஜனக்கும்பலின் நடுவே அந்தோனியின் உடல் ஊதிப்பருத்துக் கிடக்கிறது.

 “ இவனுக்கு ஒரு வலிப்பு வியாதியும் இரிச்சுது. ராவு காத்தும் சரியில்ல…  “ விசாரணைக்கு வந்த பொலிஸாரிடம் ஒரு மீனவன் சொல்கிறான்.

வெறித்த  பார்வையோடு கடலுக்குள் ஆவேசமுடன் ஓட முயற்சிக்கும் மேரியை மற்றவர்கள் தடுத்துப்பிடிக்கின்றனர்.

செபமாலை மாதாவும் தேவமாதாவும் ஆண்டவரும் அவளுக்கு இப்போது மிகவும் தேவைப்பட்டனர்.

கோயில் சுவாமியார் வந்தார். அந்தோனியின் தூரத்து உறவினர்கள் வந்தனர். மேரியின்  அடுப்படி சல்லி முட்டியிலிருந்து கொஞ்சம் பணம்  வந்தது. அந்தோனியின் சடலம் மையப்பிட்டணிக்குச்சென்றது.

வீட்டு வாசலில் வெறித்துப்பார்த்தவண்ணம் மேரி உட்கார்ந்திருக்கிறாள். தெருவில் ஒரு மீனவன் ஜோன்ஸன் எஞ்சினை தோளில் வைத்து சுமந்துகொண்டு கடற்கரைக்கு போகிறான். அவனது சிறிய மகன் எதையோ தந்தையிடம் கேட்டு அழுத கண்ணும் சிந்திய மூக்குமாக பின்னால் செல்கிறான்.

மேரி வெறித்துப்பார்த்துக்கொண்டிருக்கிறாள்.