சசியின் கையிலிருந்த சிறு அட்டைத்துண்டைக்கூர்ந்து பார்த்தாள் அன்னபூரணி. அவள் முகம் இருளடைந்து தொங்கிப்போயிற்று. அவளின் கண்களிலிருந்து கரகரவென்று கண்ணீர் த்தும்பியது

“ என்னடி இது “ தப்பு நடந்து போச்சக்கா “

“ அடி பாவி மகளே இப்பிடி வந்து நிக்கறியாடி .. யாரு காரணம் . இந்தவீட்லே இருக்க விட்டதுதானா தப்பு “

“ அவசரப்படாதேக்கா.. உனக்கு அதிர்ச்சிதா உடனே என்னோட நல்லா சிரிச்சுப் பேசறது பாவா நெனப்புலே வர்றாரா. அதெல்லா இல்லெ ..இது க்கு என் பாய் பிரண்ட்தா காரணம் “

“ அய்யோ இதெ நான் உங்க பாவாகிட்ட மொத்ல்லே எப்பிடி மறைக்கிறது"

குளியலறைக்குள் சட்டென நுழைந்த அன்னபூரணி சசி கண்ணாடியைப்பார்த்தபடி நின்று கொண்டு 'பிரக்னன்சி கிட்'டைப்பார்த்துக்கொண்டிருந்ததைப்பார்த்து அதிர்ந்து போனாள். அது இரட்டைக்கோடுகளைக்காட்டியது.

சசி முன்னதாக் சிறுநீர் சொட்டுக்களை அதில் விட அது இரண்டு கோடுகளைக்காட்டியது. ஒற்றைக்கோடாய் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என நினைத்தாள். ஆனால் அது அவளுக்கு அதிர்ச்சியைத்தான் தந்தது. காலையில் நானே பால் வாங்கப்போறன் என்று சசி கடைக்குக் கிளம்பிய பாவாவிடம் சொல்லி விட்டு சென்றாள். மருந்துக்கடையில் பிரக்னன்சி கிட்டை வாங்கினாள். அவசரகதியில் குளியறைக்குள் நுழைந்து சோதிக்க ஆரம்பித்து விட்டாள்.

சசியின் உடம்பில் வியர்வை வழிந்தோடியது. வலது மூலையில் கிடந்த பாவாவின் அழுக்குத்துணிகள் அருவருப்பூட்டின.சுவரில் தெரிந்த திட்டுத்திட்டான அழுக்கு அக்கா எவ்வளவு வேலையைத்தான் செய்வாள் என்ற யோசனையைத் தந்தது . அவளின் தனியார் நிறுவன வேலைக்குச் சென்றால் நாள் முழுவதும் போய் விடுகிறது எப்பவாவது ஞாயிறில் அருணோடு கொஞ்ச நேரம் இருக்க முடிகிறது. மற்றபடி அருணைச்சந்திப்பது அவளின் மதிய உணவு இடைவேளையில்தான் .

இன்றைக்கு அலுவலகம் புறப்படுகிற கதியில் தான் ஏனோ இதைப்பரிசோதனை செய்து விட வேண்டும் என்று நினைக்க வைத்தது அவளின் உடல் சோர்வு.. அருணுடன் இருந்த ஒரு இரவின் அரை மணி நேரம் அவளை உறுத்திக்கொண்டே இருந்தது. எந்த மருத்துவ மனைக்கும் இந்த நேரத்தில் இதற்கெல்லாம் சென்று விட முடியாது. முதலில் கொரானா பரிசோதனை . பிறகுதான் மற்ற பரிசோசதனைக்குப் போவார்கள். பலருக்குத் தெரிந்து விடும் மருத்துவ மனைக்குப் போவதை விட பிரகன்ன்சி கிட்டை வாங்கிச்சோதிப்பது எவ்வளவோ மேல் என நினைத்தாள். அதுவும் முப்பது ரூபாய்க்குக் கிடைத்தது.

உடம்பில் பூரான் ஊறுவதைபோல் அருணுடன் இருந்த அந்த இரவின் கொஞ்ச நேரம் ஞாபகம் வந்து கொண்டே இருந்தது. பூரான் அழுத்தமாகவே உடம்பைப்பதம் பார்த்து விட்டது. அப்பா அம்மா இறந்த பின்னால் அக்காவோடு சேர்ந்து கொண்டாள். பாவாவும் அவளை மகளைப்போலத்தான் நடத்தினார்.

” எப்பிடி ஆச்சு சசி “”

“ என்னமோ ஆயிருச்சுக்கா. சந்தேகப்பட்டேன். கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்து வெளியே தெரியாமெப் பண்ணீக்கலாம் அக்கா “

“ முடியுமா ‘’

“முடியும் அக்கா. மொதல்லே பாவாவுக்கு சந்தேகம் வராமெப்பாத்துக்கணும் “ “ ” அய்யோ நல்ல மனுசன் அவரு. இதெப்பாத்ததும் சட்டுன்னு அவர் ஞாபகம்தா வந்துச்ச்சு. எவ்வளவு கேவலமா நெனச்சம்ன்னு இருந்துச்சு .பொம்பளெ மனசு பின்னே எப்பிடி நெனைக்கும். எப்படி நடந்து. ஜாக்கிரதையா இருக்க வேண்டாமா. சிட்டிப்பொண்னு. சிட்டி இதியெல்லாம் சொல்லிக்குடுக்கலியா

"எப்பிடியோ அயிருச்சுக்கா. என்னை விட நீதா நிதானமா இருக்கணும் . ஏன்னா நீ பாவாவுக்கும் மத்ஹ்டவங்களுக்கும் பதில் சொல்ற எடத்திலெ இருக்கே ”

அந்த ஞாயிறில் மாலையில் திருவேற்காடு அம்மன் கோயிலில் பார்க்கலாம் என்று அருண் சொல்லியிருந்தான். கொஞ்சம் அரட்டை.. ஓட்டலில் சாப்பாடு என்று பொழுது போனது. கொஞ்சம் மழைத் தூற ஆரம்பித்திருந்தது, மெல்லக்கிளம்பி விட நினைத்து வண்டியை ஓட்டினான் அருண். சட்டென வழுக்கிக்கொண்டு வந்து ஒரு காரில் மோதி விழுந்து விட்டான் . கார் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்த ஒருவன் வண்டிகீழே விழுந்து கிடக்க மெல்ல எழுந்து நிற்க முயற்சித்த அருணைப்பார்த்தான். அவன் எழுந்து நிமிர்ந்து நின்றதும் ஓங்கி அறை வைத்தான், சசி கார்தான் மோதி விட்டது சண்டையாகப்போகிறது என்று நினைத்தாள். ஆனால் கார்க்காரன் முந்தி விட்டதைப்போல் கையை ஓங்கி விட்டான். அருண் கார்க்காரன் மேல் வசவைப்பொழிவான் என்று நினைத்திருந்த போது இப்படியாகி விட்டது . அடித்த கையோட கார்க்காரன் முன்புறத்தில் ஏதாவது கீறல் ஆகியிருக்கிறதா என்று நோட்டமிட்டபடி காரின் உள்ளே சென்று விட்டான் .

அருணின் கண்களில் கதகதவென்று நீர் தளும்பியது. பைக்கிலிருந்து விழுந்த வேகத்தில் ஏதாவது காயம் ஆகியிருக்கிறத என்று தேட ஆரம்பித்தாள்.

மீண்டும் வண்டியில் உட்கார்ந்து ஓட்டுவதில் அவனுக்குச் சிரமம் இருந்தது.கொஞ்சம் நின்று போகலாம் என்றாள். ” பிளாட்டுக்குப் போயிடு அருண் . நான் ஆட்டோ புடீசிட்டு போயிடறன் “என்றாள் சசி. அருணும் அவனின் அறைக்குள் சென்றபோது அவனின் முகம் உடம்பு வலியை வெளிப்படுத்தியது போல் சுருங்கியது. படுக்கையில் கிடக்கக் கூட சிரமப்பட்டான். கொஞ்ச நேரம் அவனுடன் இருந்த அப்போதுதான் நெருக்கமாக இருக்க வேண்டியாகிவிட்டது அவளுக்கு.

“ அருண் படற அவஸ்தெயெப்பாத்து இரக்கப்பட்டுட்டேன் அக்கா அதுலெ வந்த வினைதா “

“ ஆம்பளைகளெப்பாத்து இரக்கப்படக் கூடாது ..இரக்கப்படக்கூடாது சசி “

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.