- தற்போது 'காளி' குறும்படத்தையொட்டி எழுந்துள்ள சர்ச்சையை ஒட்டிய சர்ச்சையொன்று இச்சிறுகதையில் வரும் ஓவியனொருவனின் 'காளி' ஓவியத்துக்கும் ஏற்பட்டுள்ளது. ஆனால் இக்கதை எழுதப்பட்டது 2015 ஆம் ஆண்டில் என்பது கவனத்தில் வைக்கத்தக்கது. -


வகுப்பில் கலைகளின் வெவ்வேறு மரபுகள் பற்றியும் அதன் சமூக வரலாற்று முக்கியத்துவங்களையும் பற்றியும் ஆசிரியர் சிக்கலான மொழிப்பிரயோகங்களை உபயோகித்து தன் அகராதி அறிவை வெளிப்படுத்திக்கொண்டிருந்தார். இருக்கையில் நெளிந்தவாறு ஜன்னலுக்கு கீழே வெளியே தெரிந்த திறந்த வெளி சிற்பக் கூடத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அங்கே சிற்பக்கலை பயிலும் மாணவர்கள் சிலர் சிற்பத்தை வடிவப்படுத்துவதில் மௌனமாக செயல்பட்டு வந்தார்கள். அவர்கள் கைவண்ணத்தில் அந்தக் கல் மெல்ல மெல்ல வடிவம் பெற்று புதிய உருவங்களின் சாயல் திகைந்துகொண்டிருந்தது. ஒரு சிற்பம் நிதானமாக உருவாகும் அதிசயத்தை அது எனக்குத் தந்துகொண்டிருந்தது.

வகுப்பு கலைந்தவுடன் நான் கீழே இறங்கி அந்த சிற்பக் கூடத்துக்குப் போனேன். அங்கே நான்கு மாணவர்கள் செதுக்கிக்கொண்டிருந்தார்கள். அந்த நான்குமாணவர்களில் ஸவீதாவும் ஒருவர். ஸவிதா இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த சிற்பக்கலை மாணவி. பார்ப்பதற்கு சற்றுக் கருப்பாக இருப்பாள். மத்யப்பிரதேசத்திலிருந்து வந்திருந்த பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்தவள் அருமையான மாணவி. அவள் சிற்பம் செதுக்கும்போது அவளை கவனிப்பது மிக உற்சாகமாக இருக்கும். அவள் உடல் மனம் கைகள் அத்தனையும் அந்தக் காரியத்திலேயே கரைந்து போய்விட்டது போல் இருக்கும். சூழலை மறந்து சிற்பத்தை சுற்றிச்சுற்றி வந்து பல்வேறு கோணங்களில் அதன் ஒத்திசைவை சரி பார்த்தவண்ணம் அவள் முனைப்புடன் செதுக்கிக்கொண்டிருந்தாள். சுற்றிலும் இருந்த உயரமான மரங்களின் அடர்த்தியைத் தாண்டி தகிக்கும் வெய்யிலால் வழிந்த வியர்வையையும் பொருட்படுத்தாமல் அவ்வப்போது நெற்றியைத் துடைத்துக் கொண்டவாறு அவள் செயலில் ஈடுபட்டிருந்தாள்.

நான் அருகில் போய் நின்றேன். சற்று நேரம் கழித்து கவனித்ததும் திரும்பி என்னைத் தோழமையுடன் “ஹாய்” என்று சொல்லிவிட்டுதன் காரியத்தைத் தொடர்ந்துகொண்டிருந்தாள். நான் சிலையை ரஸித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

“இந்த சிற்பம் நமது கற்கால சிற்ப வடிவங்களின் யதார்த்தத்தை மீட்டெடுத்தமாதிரி இருக் கிறதே!“ என்றேன்.

“ஆமாம்..அது சரி தான். இந்தப் பெண்ணை நான் அப்படித்தான் மனதுக்குள் வரித்துக் கொண்டிருக்கிறேன்“

“அதற்கு வேறு ஏதாவது விசேஷமான கூடார்த்தம் இருக்கிறதா?”

“இந்தப் பெண்ணுருவம் நமது சமீபத்திய மரபு வழக்கங்களின் அதீதமான கட்டுக்களிலிருந்து நெளிவுசுளிவுகளிலிருந்து விடுபட்டவளாக இருக்கவேண்டும். மலையைப்போல மரங்களைப்போல இயல்பான வலிமையை இது ஞாபகப்படுத்தவேண்டும். அதைத்தான் ஆதாரமாகக்கொண்டுவெளிப்படுத்த நினைக்கிறேன்,” என்றாள்.

“.ஸவிதா....You must be a thinking Artiste…” என்றேன்.

“அது எனக்குத் தெரியாது ஸார்” என்றாள் கண் சிமிட்டியவாறு.

“ஹாய்..சவீ...... ஏன்அந்தப் பொண்ணை அப்படி நீட்டி நிக்க வைச்சுட்டே! ராக்கட் மாதிரி எங்கயாவது பறந்து போய் வானத்தைக் கிழிச்சுடப் போறா?” என்று ஹிந்தியில்பேசிக்கொண்டே வந்த அம்ரீஷ் அவள் முதுகில் செல்லமாகத் தட்டினான்.

“டேய் நீ என்னப்போல இந்தப் பொண்னை சீண்டினே....உன்னை குத்திக்கிழிச்சுடுவா? என்னடா,அதுக்குள்ளே க்ளாஸ்முடிஞ்சுடுத்தா?"

ஸவிதா செல்லமாக அவன் தாடியைப் பற்றி இழுத்தாள்.

எனக்கு அவர்கள் இருவரும் இப்படி உரையாடுவதை ரஸிக்கப்பிடிக்கும். அம்ரீஷ்மூன்றாம் ஆண்டு ஓவியம் படித்துக் கொண்டிருந்தான்.அவனும் ஒரு அருமையான ஓவியன். துணிச்சலான கற்பனைத் திறன்கொண்டவன். ஸவிதாவைப்போலவே சுதந்திரமான கூர்மையான மனப்போக்குள்ள மாணவன்.

“என்ன இவ்வளவு ஸீரியஸா...வேலை செய்யறே? இந்த வருஷம் லலித் கலா பரிசைத் தட்டிக்கலாம்னு தீர்மானமா?“ அவளை மீண்டும் சீண்டினான் அம்ரீஷ்.

“என்னடா..அப்படிக் கேட்டுட்டே?இந்தமாதிரி வொர்க்கை செலெக்ட்பண்ணலேன்னா அவங்களுக்குத்தான் நஷ்டம்...கலைஉலகத்துக்கே பெரிய நஷ்டம்..தெரியுமா?”

பொய்கர்வமாக தலையை சாய்த்துக்கொண்டு கட்டை விரலை ஆட்டி அவனிடம் கோணங்கி காட்டினாள் ஸவீதா. அவள் கோணங்கியைப் பார்த்து நாங்கள் இருவருமே சிரித்துவிட்டோம்.

ஸவிதாவும் அம்ரீஷும் மிகநெருக்கமான தோழமையுள்ளவர்கள் கலைச்சூழலுக்கு வெளியே இருந் து பார்ப்பவர்களுக்கு அவர்கள் நெருக்கம் விபரீதமாக இருக்கலாம். ஆனால் அது வெறும் ஆண்பெண் கவர்ச்சிகளைத்தாண்டிய ஒரு நேசம் என்பது அந்தச் சூழலில் இருப்பவர்களுக்குத்தான் புரியும். அநேகமாக ஓவியக்கல்லூரியில் மாணவர்கள்எல்லோருமே அப்படித் தான் சகஜமாக இருப்பார்கள். .விடுதலையான உறவும்.. ..பேச்சும்..... ஒரு முறை அங்கே நான் சிற்றுண்டிசாப்பிடப்போனபோது இரண்டு மூன்றுமாணவர்கள் மேஜையை சுற்றி வட்டமாக உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் யாரையோ செல்லமாக கொஞ்சி “சாப்பிடு கண்ணா...சாப்பிடு செல்லம்...” என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். சற்று நெருங்கிப் போய்ப் பார்த்தபோது அவர்களுக்கு நடுவில் மேஜை மேல் ஒரு அழகான கருப்புப் பூனைக்குட்டி வாலை வளைத்துக்கொண்டு உட்கார்ந்து கொண்டிருந்தது. அதற்கு முன் ஒரு சிறிய தட்டில் பாலும் ரொட்டியும் இருந்தது. எல்லோரும்அந்தக்குட்டிப்பூனையை தங்களில் ஒருவரைப் போலவே பாவித்துக்கொண்டு அதனுடன் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களுடன் பூனை சகஜமாக சாப்பிட்டுக்கொண்டிருந்தது. அது சாப்பிட்டுமுடித்தவுடன் ஒருவன் அதன் வாயைத்துடைத்துவிட்டான் . முதுகைத் தடவிவிட்டான். எல்லோரும் கைதட்டிஅதைக் கீழே இறக்கி “டாடா..”காட்டினார்கள்.அதைப் பூனை என்பதை சற்று மறந்து போனால் ஏதோ நண்பனிடம் அவர்கள் பழகுவதுபோலவேஒரு பிரமை தோன்றக் கூடும்! சிற்றுண்டி பரிமாறுகிற சிப்பந்தியும் என்னைப் போலவே அந்த பாசக்காட்சியை பார்த்து சிரித்துக்கொண்டிருந்தான். அதுவும் ஏறக்குறைய அவர்களுடைய தோழனைப் போலவே நெளிந்து வாலாட்டி விட்டுப் போயிற்று.

அந்தப் பூனைக்குட்டியின் அம்மா மூன்று வாரத்துக்கு முன் குட்டிபோட்டபோது தங்கள் பழைய கேன்வாஸுகளை கொண்டு வெதுவெதுப்பான பாதுகாப்பான மறைப்பு ஏற்படுத்தி அம்ரீஷும் சவிதாவும்தான் அதன் பிரசவத்தில் மிகுந்த அக்கறை காட்டினார்கள். தாய்க்கு பால் கொடுத்தார்கள்; குட்டிகளை பத்திரமாக தினமும்கவனித்துக் கொண்டார்கள்.

இந்த ஓவியர்களின் உறவுகள் பாகுபாடற்று பாசாங்கற்று உணர்ச்சிபூர்வமாக விடுதலையாக இருந்தது. நடைமுறை வாழ்வின் தாரதம்யங்கள் அவர்களுக்கு ஒரு பொருட்டாகத்தெரிவதில்லை.

நேற்று மாலை நான் அங்கே போனபோது சவிதாவும் அம்ரீஷும்அருகருகில் அமர்ந்து கொண்டு ஸீரியஸாக எதைப்பற்றியோவிவாதித்துக்கொண்டிருந்தார்கள். நான் சற்று பின்னால் நின்றுகொண்டிருந்தேன்.

அவர்கள் கையில் sketch புத்தகம் இருந்தது. அவர்கள் “நிர்வாணமாடல் “வரையும் வகுப்பிலிருந்து அப்போதுதான் வந்திருந்தார்கள்.தாங்கள் வரைந்த நிர்வாணப்பெண்ணின் ஓவியத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

“ஸவீ.....See…நான் என்னுடைய Paintingகில் சிற்பத் தன்மையைக்கொண்டுவர ஆசைப்படுகிறேன். அதனால் தான் நான் இந்த மாடலின் இடுப்பையும் ஸ்தனத்தையும் அழுத்தமான கோணத்தில் கருப்புவெளிச்சத்தின்மூலம் சற்று இயல்புக்கு மீறிய பரிமாணத்தில் வரைந்திருக்கிறேன்....அநேகமாக கேன்வாஸில் செதுக்கியிருக்கிறேன் என்று சொல்லலாம். நீ....எப்படி நினைக்கிறே?..”

““அம்ரீஷ்....எனக்கு இன்னிக்கு அப்படி இல்லே.......இன்றைக்கு எனக்கு அந்தப் பெண்ணைப் பார்க்கும்போது மாடலாகபாக்கமுடியலே...அவ குடும்பம் கஷ்டப்படுவதாகச்சொன்னாள்.. கட்டாயத்தினால் வருமானத்துக்காக இங்க எல்லார் முன்னாலயும் வந்து அவள் இப்படி நின்று கொண்டிருக்கிறாள். அந்தப் பெண்ணின் பரிதாப நிலைமை ஏனோ எனக்கு ஞாபகம்வந்துவிட்டது…. .எனக்கு அந்த ருமாலியைஇன்று சோகமான பலஹீனமான ஜீவனாகத்தான் பார்க்கமுடிந்தது... ஆனாலும் என் ஓவியத்தில் பொதுவான மானிட துக்கத்தைத் தான்வெளிப்படுத்த நினைத்தேன். சரியாக வந்ததா..தெரியவில்லை....”

அம்ரீஷ் அவள் தலையைத் தன் தலையோடு இணைத்துக்கொண்டான். “ஸவீ...... ஓவியத்துலேதான் நாம்ப ஒரே பொருளிலிருந்துபல உண்மைகளைக் கண்டுபிடிக்க முடியும். Am I right?“

அவள் அவன் தாடியைப் பிடித்து இழுத்தாள்...அவன் அவள் விரல்களைப் பிடித்து கிள்ளினான்.

நான் ஓரளவு அவர்கள் அருகாமையில் இருந்தாலும் அவர்கள் தனிமையைக் கலைக்க விரும்பவில்லை. நகர்ந்து போனேன்.


அம்ரீஷ் நான் இருந்த குடியிருப்பில் தான் ஒரு அறையில் தங்கி இருந்தான். அந்தக் குடியிருப்பு ஓவியக்கல்லூரிக்கு நடந்து போகும் தூரத்தில்தான் இருந்தது.. அநேகமாக அங்கே சுற்று வட்டாரக் கல்லூரகளில் படித்த மாணவர்கள் அங்கே தங்கியிருப்பார்கள்..

அந்தக் குடியிருப்பு சிவப்புக்கற்களால் கட்டப்பட்ட பழங்காலக் கட்டிடம்... போன நூற்றாண்டில் பரோடாஸமஸ்தானத்துக்கு சொந்தமான சிப்பாய்களின் கூடாரமாகவோ அல்லது குதிரை லாயமாகவோ இருந்திருக்கவேண்டும். ஒரு சிறிய மைதானத்தை சுற்றி மேலும் கீழுமான அறைகளாக கட்டப்பட்ட அந்த சதுரமான குடியிருப்புக்கு மத்தியில் ஒரு சிறிய அம்மன் கோவில் இருந்தது... கோவிலை சுற்றிவட்டமான காரைத் திண்ணை இருந்தது. அங்கே உட்கார்ந்து காற்றுவாங்க, பொழுதுபோக்க சௌகரியமாக இருக்கும்...அருகில் அடர் ந்த நிழலுடன் கூடிய தூங்குமூஞ்சி மரமும் அதற்கு இதமாக இருந்தது. சமஸ்தானத்துக்கு சொந்தமான அந்தக்குடியிருப்பு சில கட்டுதிட்டங்களுடன் நிவாகிக்கப் பட்டுவந்தது. அங்கே அம்ரீஷுக்கு எப்படி தங்குவதற்கு அறை கிடைத்தது என்று நான் பலதடவை அதிசயப்பட்டதுண்டு.. ஏனென்றால் அந்தக் குடியிருப்பில் அறை கிடைப்பதற்கு நானே பல சங்கடமான கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியிருந்தது...

“நீங்கள் மதறாஸியா...?“

“ ஆமாம்.....”

“மதறாஸிகள் பொதுவாக சாதுவான குமாஸ்தாக்களாகஇருப்பார்கள்….. நல்லவர்கள்.........ஹி...ஹி..... இவர் எப்படி?...”நெற்றியில் சிகப்புப் பொட்டும் தாடியும் வைத்துக்கொண்டிருந்த ஒரு பெரியவர் என்னைப் பார்த்து கேட்டுவிட்டு மற்ற காரியஸ்தர்களைப் பார்த்தார். பிறகுமேலும் தொடர்ந்தார்..

“ஆனால் இப்படித்தான் போனமாசம் ஒருவன் மதறாஸிலிருந்து வருவதாக சொன்னான். பிறகு அறைக்குள் புகைப்பதும் குடிப்பதுமாகஆரம்பித்துவிட்டான். வாட்ச்மேன் வந்து சொன்ன பிறகுதான் நாங்கள் அவனைக் கூப்பிட்டு மறு நாளே அவனைக் காலி செய்யச் சொன்னோம். அநேக மாக வெளியேற்றிவிட்டோம்..என்று சொல்லலாம்“

இதைச்சொல்லிவிட்டு அவர்கள் என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். நான் அவர்கள் செய்த காரியத்தை நியாயப்படுத்தும் விதமாக நாலுவார்த்தை சொல்லுவேனென்று எதிர்பார்த்திருக்கலாம். எனக்கு அப்படி தோன்றவில்லை.

“ஸார்..எனக்கு ஆஸ்துமா தொந்தரவு உண்டு.அதனால் எனக்கு புகை குடியெல்லாம் ஆகாத விஷயம்.. தொந்தரவு. .மற்றபடி என்னால் வெட்டிப்பொழுது எதுவும் கழிக்க முடியாது. படிப்பு பரிட்சைஎன்று நிறைய வேலை இருக்கிறது.” என்றேன்.

“பொதுவாக இங்கே குடியிருப்பவர்கள் ஒழுக்கமுள்ளவர்களாக இருக்க வேண்டும்... கண்ட மாதிரி இருக்கக் கூடாது. அதற்காகத்தான் சொன்னோம்..” என்றார்கள்.

என் ஆஸ்துமா எனக்கு அங்கே சாதகமாக பயன்பட்டது. எனக்கு அறை கிடைத்துவிட் டது. அங்கே அறைவாடகை குறைவு. அங்கே இடம் கிடைப்பது ஒருவகையில்அதிர்ஷ்டம் தான். ஆனால் அம்ரீஷ் என்ன சொல்லி அவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகி இருப்பானென்று தெரியவில்லை. அவன் சிலசமயம் புகை பிடிப்தைப் பார்த்திருக்கிறேன். அவன் அப்பாவுக்குத் தெரிந்த ஒரு குஜராத்தி பிரமுகர் மூலமாக அவனுக்கு அங்கே இடம் கிடைத் திருக்கலாம். அம்ரீஷ் பூனாவிலிருந்து வந்திருந்தான்.

நாங்கள் கல்லூரிக்குப் போகும்போதும் வரும்போதும் கோவிலைச் சுற்றியிருந்த திண்ணையில் எப்போதும் யாராவது இளவட்டங்கள் உட்கார்ந்து வம்பளந்துகொண்டிருப்பார்கள்.அந்தத் திண்ணைஅதற்கு மிக வசதியாக இருந்தது.

கோவிலுக்குதினமும் பூஜை செய்யும் பூசாரி பஜன் லாலும் கோவிலைக் கழுவிப் பெருக்கும் ராம் நாயக்கும் வாட்ச் மேன் சகா ராமும் அநேகமாக அங்கேதான் நடுப்பகலில் உட்கார்ந் கொண்டு ஏதாவது வம்பளந்துகொண்டிருப்பார்கள்.எல்லோருமே இளவட்டங்கள் தான்... வம்புகள் பேசுவதுதான்அவர்களுக்கு ஸ்வாரஸ்யமான பொழுதுபோக்கு . பெண் களும் கூடஅவர்கள் கிண்டலுக்குத் தப்பமாட்டார்கள்.
..
அவர்களுக்குஅம்ரீஷைப் பார்த்தால் ஆரம்பம் முதலே ஏனோ ஒருவித ஏளனம்..

அவன் நீண்ட முடியை யும் தாடியையும் பார்த்து தங்களுக்குள் சிரித்துக்கொள்வார்கள். பட்டைபட்டையாக கோடுகள் போட்ட முரட்டுத் துணியால் ஆன வித்யாசமான நீண்ட அங்கிகளை அணிந்துகொண்டு தோளில் நீண்ட சாக்குக் கலர் பையைதொங்க விட்டுக்கொண்டு கைகளையும் கால்களையும்அகலமாக ஆட்டி அவன் நடக்கும்போது அவர்கள் விசிலடித்து தங்களுக்குள் சிரித்துக் கொள்வார்கள்.! அம்ரீஷுக்கு இதைப் பற்றிய கவனமே இருக்காது. அவன் எப்போதும் தன் மனஉலகத்தில் மூழ்கி இருப்பான். அவனுக்கு மிகவும்பிடித்தமான காட்சிகளைப் பார்த்தால் அங்கேயே நின்றுவிடுவான். உடனே ஸ்கெட்ச் புத்தகத்தை எடுத்து அதன் ஆதார ஓவியயமைப்பை வரைந்து பதிவு செய்துகொள்வான். நன்றாக அமைந்துவிட்டால் தனக்குத் தானே “சபாஷ்..”என்று சொல்லிக்கொள்வான். இரவுபகல் வித்யாசமில்லாமல் அவன் அறைக்கதவைத் திறந்து வைத்துக்கொண்டுகூட கென்வாஸில் ஓவியம் தீட்டிக்கொண்டிருப்பான். அவன் கற்பனை உலகத்தைத்தாண்டி அவன் எதிலும்அக்கறைகாட்டியதாகத் தெரியாது.

ஒவ்வொரு வருஷமும் கோவிலில் விசேஷமாகக் கொண்டாடக் கூடிய துர்க்கை அம்மன் திருவிழா நவராத்திரி சமயத்தில் நடக்கும். சுற்று வட்டாரத்திலிருந்து மக்கள் அந்த உற்சவத்துக்கு வந்து கூடுவார்கள்.கோவில் மண்டபத் தூணில் தொங்கிக் கொண்டிருக்கும் வட்டமான உலோகத் தாம்பாளத்தில் ஓயாமல் மணி அடிக்கும் சப்தம் சுற்றுப்புறம் முழுதும் கேட்டுக்கொண்டேஇருக்கும் அந்தப் பையன்கள் இப்போது காவித்துண்டு கட்டிக் கொண்டு அம்மனுக்கு பூஜை செய்வதும் வருபவர்களிடம் கற்பூரத்தட்டு நீட்டுவதுமாக சுறுசுறுப்பாக இயங்குவார்கள். நல்ல சில்லறை கிடைக்கும். கூட்டமாக பஜனை நிகழ்ச்சிகள் நடக்கும்.

விசேஷமான ஒரு இரவுப் பூஜைக்குப்பின் சோமபானம் மாதிரி தள்ளாட வைக்கும். “பங்க்’ஐ குடித்துவிட்டு ஒரு பெரிய குத்துவிளக்கை சுற்றி எல்லோரும் கூட்டமாக வட்டமாக ஆரத்திப்பாடல்களை பாடிக்கொண்டு சுற்றிச் சுற்றிவந்து கோஷம்போட்டு கும்மி அடிப்பார்கள். கூடுகிற இளவட்டங்களுக்கு இந்தக் கொண்டாட்டம் மிகவும் விருப்பமான வெறியூட்டும் நிகழ்ச்சியாக இருக்கும். இளம் பெண்களிடம் சற்று சலுகையுடன் பழகுவதற்கும் கூட இந்தக் கோலாட்டங்கள் வசதியாக இருக்கும்.

அம்ரீஷும் இந்த ஆட்டத்தில் கலந்துகொள்வான். ஆனால் இந்த ஆட்டத்தில் அவனுடைய ஈடுபாடு வேறுமாதிரி இருக்கும். தலைமுடிநாலா பக்கமும் பறக்க அவன் தன்னை மறந்த உணர்வுடன் தன்னிச்சையான ஆனந்த அனுபவத்துடன் சுற்றிச்சுற்றி வந்து ரஸித்து ஆடுவான். காளிமாதாவின் மேல் அவனுக்குள் உள்ளூர ஒளிந்து கொண்டிருக்கும் பக்தி உணர்வு இந்த மாதிரி சமயங்களில் அவனிடமிருந்துஉற்சாகத்துடன் வெளிப்படும்.
அதுவும் இந்த வருஷம் அவன் மிக ஆர்வமாகவே திருவிழாவில் கலந்துகொண்டான்.

நான்அவன் ஆட்டத்தை ரஸித்தபடிஓரமாக நின்று கொண்டிருந்தேன். தன்வசமற்று பரவசமாகஆடும் ஆனந்தக்கூத்தாடியைப்போல் அவன்ஆடிக் கொண்டிருந்தான். என்னைப் பார்த்தவுடன் மேலும்உற்சாகமாக வாயில் வெற்றிலை வழிய சிரித்து ஆடினான். பிறகு என்னிடம்வந்து “ஹலோ.. .ஸார்... .Enjoy பண்றீங்களா? வாயிலிருந்து வெற்றிலையைத் துப்பினான்..

நான் நட்புடன் சிரித்தேன்.

“இன்னிக்கு மனசு ரொம்பகுஷியா இருக்கு.ஸார்...பறக்கறமாதிரி இருக்கு...ஸார்.. ஸார்... நான் காளிமாதாவை வித்தியாசமாய் பெய்ண்டிங் . .பண்ணி இருக் கேன்....பார்க்கிறீங்களா?“

“எங்கே? “ என்றேன். “என்அறைக்கு வாருங்கள்..காட்டுகிறேன்..” வேகமாக அவன் என்னை அவன் அறைக்கு இழுத்துக்கொண்டு போனான்.

அவன் அறைச்சுவற்றில் சாய்த்து வைத்த சற்று பெரிதான கேன்வாஸைப்பார்த்தேன். வண்ணங்கள் இன்னும் சற்று ஈரமாக இருந்தது. காலண்டர் ஓவியங்களில் வழக்கமாக நாக்கைத் துருத்திக்கொண்டு தலைவிரித்துக்கொண்டு கையில் சூலாயுதத்துடன் ஒற்றைக் காலில் சிங்கத்தலையை மிதித்துக்கொண்டு நிற்கும் காளியை அதில் பார்க்கவில்லை. ஓவியத்தில் சக்கரங்கள், அரை வட்டங்கள், மின்னலைப் போல் பல கோணத்தில் பல கூர்மையான கோடுகள், கிழிந்தநிலையில் மிருக முகங்கள் நிலவின் சாயலில் தெரிந்த ஒரு தேவமங்கையின் குளிர்ந்து பரவலாக நோக்கும் சாந்தமான பூவிழிகள் அவள் அங்கத் திரட்சிகள் இப்படி என்னென்னமோ இருந்தன.. பளீரென்று சிகப்பும் நீலமும் வெண்மை யும் மஞ்சளுமாக எதிர் எதிரான பற்பலவண்ணங்கள் அந்த வடிவங்களுக்கு ஒத்திசை வானகட்டுக்கோப்பைக்கொடுத்து ஓவியம் வித்யாசமான வலிமையான கட்டமைப்பை ஏற்படுத்திக்கொண்டிருந்தது.

“இதெல்லாம் என்ன? காளியை பற்றிய உங்கள் கற்பனையா?” என்றேன்.

“ஸார்...கற்பனை என்று ஏன் சொல்லவேண்டும்.? கடையில் விற்கும் காளி படங்களை நிஜம் என்று நம்பி பூஜை செய்யும்போதுஇதையும் காளியின் நிஜம் என்றுநான் என்று நான் ஏன் சொல்லக்கூடாது.?”வாயிலிருக்கும் வெற்றிலையைத் துப்பிவிட்டு மீண்டும் பேசினான்..

“தவிர காளியின் ஆதாரசக்தியாக சொல்லப்படுகிற தாந்த்ரீக அடிப்படைகளை உபயோகித்திருக்கிறேன். இங்கே ஒன்றுக்கொன்று முரண்படக் கூடிய வண்ணங்களை ஒத்திசை வுடன் படியுமாறு உபயோகித்திருக்கிறேன். பார்த்தீர்களா? ஒருவகையில் நல்லது தீயது என்கிற முரண்பாடுகள் இரண்டுமே ஒன்றையொன்று சார்ந்துதான் வாழ்க்கையை ஸ்வாரஸ்யமாக்குகிறதுஇல்லையா?அதுபோல இது வடிவாகி இருக்கலாம்.இது தான் என் காளி”

அவன் சுயேச்சையான சிந்தனையும் அவனுடைய சுயநம்பிக்கையும் சித்தமும் எனக்குள் பூரிப்பையும் பெருமிதத்தையும் ஏற்படுத்தியது.

“சபாஷ்“ என்றேன்.

அவன் திடீரென்று பரபரப்பாகி”ஸார்...கொஞ்சம் இப்படி வறீங்களா? படத்தை ஒரு பக்கம் பிடியுங்கள்.நான் இந்த பக்கம் பிடிக்கிறேன். இதை வெளியே கொண்டுபோக வேண்டும் “ என்றான்.

“எதற்கு?...எங்கே?..”

“இப்போதுதான் எனக்கு ஐடியா வந்தது...அறைக்கு வெளியே மாடியின் கிராதியில் இதைக்கட்டித் தொங்கவிடப் போகிறேன்.இந்தக் காளி பூஜைக்கு இது தான் என்னுடைய பங்களிப்பு... இந்த திருவிழா வுலே எல்லாரும் இதைப் பாக்கட்டும்....பாக்கணும்....”

“வேண்டாம் அம்ரீஷ்....இப்போ இங்கே இது அவ்வளவு அவசரமா? யோசித்து முடிவு செய்...”

“இல்லை ஸார்.. இந்த உற்சவத்தின்போது இதுதான் நான் காளிக்குசெலுத்தும் ஆராதனை. அதற்கென்ன யோசனை..?. கொஞ்சம்இதைபிடியுங்கள் ஸார்...கொண்டுபோகலாம்..”

அம்ரீஷின் “காளி”ஓவியம் அவன் அறைக்கு மேல்மாடிக் கிராதியில் கட்டப்பட்டு பார்வைக்குப் பொருத்தமாக தொங்கிக்கொண்டிருந்தது. படத்தின் அடியில் “மஹா..காளி” என்று எழுதி ஒட்டினான் அம்ரீஷ்.

அப்போது இரவாகிவிட்டதால் நான் என்அறைக்குத் திரும்பினேன். மனதுக்குப் பிரியமான ஒரு காரியத்தை செய்ததான பூரிப்புடன் அம்ரீஷ் அறைக்குப் போய்விட்டான்.

ஓவியத்தை சேதப்படுத்தும்படியாக மழை வரக் கூடாதென்றுநினைத்துக் கொண்டேன்.

மறு நாள் ஞாயிறு காலை மணி எட்டு இருக்கும்.

நான் இன்னும் தூக்கத்திலிருந்துஎழவில்லை. வெளியே ஒரே கூச்சலும் அமளியுமாகக் கேட்டது. நான் அவசரமாக எழுந்துவெளியே போய்ப் பார்த்தேன்.

அங்கே அந்தப் படத்தைப் பார்த்தபடி பஜன் லாலும் சகாராமும் ராம்நாயக்கும் மேலும் ஐந்தாறு பேர்களும்சூழ்ந்து நின்றுகொண் டிருந்தார்கள். எல்லோரும் கைகளை ஆட்டி
உரத்த குரலில்மாறி மாறி கத்திக்கொண்டிருந்தார்கள்.

“வெளிலே..வாடா.....டேய்.....”

“இந்தப்படத்தை எவண்டா இங்கே மாட்டச்சொன்னான்”வெளிலே வாடா..”

“இப்ப இந்த படத்தை எடுக்கலேன்னா கொலையே விழும்.. டேய்... வெளியே வாடா...”

“காளி மாதாவா..? “

அப்போது அம்ரீஷ் அறையில் இல்லையென்று தெரிந்தது. நான் வேகமாக அங்கே ஓடினேன்.

“தம்பீ தம்பீ...என்ன விஷயம்?எதுக்கு இப்படி கூச்சல் போடறீங்க?” ஹிந்தியில் கேட்டேன்.

எல்லோரும் என்னை திரும்பிப் பார்த்தார்கள்.

“டேய்.....இவுரு அந்தப் பையனோட தோஸ்த்டா...”

“ ஆமாம் நண்பன் தான்... இப்போ என்ன கலாட்டா இங்கே?”

“யோவ்,மொதல்லெ ஒங்க தோஸ்தை இந்தப் படத்தை கயட்டிஉள்ளெ வைக்க சொல்லுங்க..இது கோவிலுக்கு சொந்தமான குடியிருப்பு. இந்தமாதிரிபடமெல்லாம் இங்கே மாட்டக்கூடாது!” என்றான் ராம்நாயக்.

“காளி படமா இது? ஆபீஸுலே சொன்னா அவனை அடிச்சு நிமித்திடுவாங்க..படத்தை எடுங்க...” என்றான் பஜன் லால்.

“சரி,அவனை இதை எடுக்க சொல்றேன்...இப்ப வெளியிலே போயிருக்கான்...... வந்தவுடனே சொல்றேன்..”

“டேய் என்னடா..பாத்துகிட்டு இருக்கீங்க.. மேலெ ஏறி அந்த படத் தைக் கழட்டுடா.....”

ஒருவன் மடமடவென்று மாடிப்படிகளில் ஏறிபடத்தைக்கட்டியிருந்த கயிற்றை அறுக்கப் போனான்.அதைத்தொடர்ந்து ஒரு சாணி முட்டை படத்தின்மேல் ‘பச்சென்று வந்து விழுந்தது.

“அய்யா...அய்யா...இருங்க...இருங்க..படத்தை சேதப்படுத்தாதீங்க.. படத்தைஎடுத்து நானே உள்ளே வைத்து விடுகிறேன், தயவுசெய்துபொறுமையா இருங்க..” நான் கத்தினேன்.

அதற்குள் மாடிப்படியேறிய ஒருவன் படத்தைக் கட்டியிருந்த கயிற்றை அறுத்தெறிந் தான்... படம் கீழே விழுந்து விடாமல் நான் ஓடிப் போய்தாங்கிப் பிடித்தேன். அந்தப் பையன்கள் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. ஏளனமாக தங்களுக்குள் சிரித்துக் கொண்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்கள்.

சற்று சேதமைடைந்த படத்தை மெதுவாக தூக்கிக்கொண்டு நான் என் அறைக்கு வந்தேன்.


*** *** *** ***

அம்ரீஷ் ஒரு இரண்டு மணி நேரம் கழித்துத்தான் அங்கே வந்தான். மாட்டிய இடத்தில் படத்தைக் காணாமல் பதட்டத்துடன் என் அறைக்கு ஓடி வந்தான். என் அறையில் சற்று சேதமடைந்த நிலையில்இருந்த அந்தப் படத்தைப் பார்த்தவுடன் அதிர் ந்து போய்விட்டான் அவனுக்கு கையும் காலும் பதறியது. வாயில் கெட்ட வார்த்தகைள் சரமாரியாக வந்தது.

”அம்ரீஷ்...கொஞ்சம் பொறுமையா கேளு.. நான் நடந்ததை சொல்றேன். கொஞ்சம் கோபப்படாம கேளு...

”இதெல்லாம் யார் செஞ்ச வேலை?இந்தப் படத்தைஅங்கே தொங்கவிட்டா இவங்களுக்கு என்ன கெட்டுப் போச்சு? இதெல்லாம் ஏன் செஞ்சாங்க?.. என்னைக் கேக்க வேண்டாமா?.. பொறுக்கிகள்.....

“அம்ரீஷ்...கொஞ்சம் ஒக்காரு..நான் பிரச்னையை சொல்றேன். ஒக்காரு..”

அம்ரீஷ் கோபம் அடங்காமல் கைகளை உதறி முறுக்கியவாறு நாற்காலிமுனையில் உட்கார்ந்தான் அவன் முகம் பதற..கண்கள் சிவந்துநீர் குப்பென்று பொங்கி வழிந்தது.....

“ஒரு கலைப்படைப்பை ரஸிக்கத் தெரியாத முண்டங்களா..... இந்தப் பசங்க....?.. அவங்க............. ”

“அம்ரீஷ்..பொது இடத்துலே இந்த படத்தை அவங்க அனுமதி இல்லாம மாட்டக் கூடாதுங்கறாங்க....ஆனா உண்மையான காரணம் வேறே! இருந்தாலும் நாம்ப இங்கே ஒண்ணும் செய்ய முடியாது….”

“அது என்ன பொல்லாத இடம்? இந்தப் படத்தைநாலு பேர் இங்கே பாத்தா செத்தா போயிடுவாங்க!?....என்ன நியாயம் இது?அதுக்காக என் காளி படத்தை அசிங்கப்படுத்தணுமா? ராஸ்கல்ஸ்...“

அம்ரீஷ் கைகளைஆட்டிக்கொண்டு முன்னும் பின்னும் நடந்தான்.

“அம்ரீஷ்..முதல்லே இதைக் காளின்னு அவங்க நெனைக்கலே.. அவங்க காளியை அசிங்கப்படுத்தினதா நெனைக்கறாங்க..”

இந்தவார்த்தைகளை நான் உரக்க சொல்லவில்லை. அம்ரீஷ் இதைக் கேட்டால் அவன் கோபம் பன்மடங்காகிவிடும்.வெறியனாகிவிடுவான்.

“நான் செஞ்சது குற்றமா?...ஸார்...வாங்க நாளைக்கு இதை ஆபி ஸுலே போய் விசாரிக்க லாம். வாங்க ........”என்றான் அம்ரீஷ்.

மறுநாள் நாங்கள் இருவரும் குடியிருப்புநிர்வாக ஆபீஸுக்குப் போனோம். அங்கே எங்களைப் பார்த்த முக்கியஸ்தர்கள் முகம் சற்றுக் கடுமையாக மாறியது. தலையை குனிந்து கொண்டார்கள். சற்று நேரம்எங்களை அலட்சியப்படுத்தியமாதிரி மௌன மாக இருந்தார்கள்.

“என்ன சேதி?”அங்கே இருந்த மூத்தஅதிகாரி ஒருவர் அம்ரீஷைப் பார்க்காமல் என்னிடம் கேட்டார்.

நான் நடந்த விஷயத்தை விவரமாக சொன்னேன்.

“இங்கே இதற்காக வரவேண்டிய அவசியமென்ன? கோவில் பொதுஇடத்தை உங்கள் சொந்தமான உபயோகத்துக்கு பயன்படுத்தக்கூடாது என்றுதெரியாதா? அது கோவிலுக்குச் சொந்தமான இடம்… ஏற்கனவே வாட்ச்மேன் சொல்லி இருப்பானே!..”

“அங்கே ஒரு படத்தைத்தானே மாட்டினேன் அது அவ்வளவு மோசமான குற்றமா? அதற் காக என்னுடைய படத்தின் மேலெ சாணியடிக்க வேண்டுமா?அது கலைப் படைப்பு ஸார்....”

அம்ரீஷ் அவரை கோபமாக கேட்டான்.

“குடியிருப்பு அறையில் இருப்பவர்கள் ஒழுங்கு விதிகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும்னு ஏற்கனவே சொல்லியிருக்கோம். உங்கள் சொந் தவிஷயங்களை உங்கள் அறைக்குள்ளேயே வைத்துக் கொள்ளவேண்டும். அதை மீறி நடந்தால் விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல....இனிமேல் இப்படி நேராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.“”

அம்ரீஷ் ஏதோ சொல்ல முயன்றான்.

“விதிகளை மீறாமல்இருந்தால்தான் அங்கே தங்கமுடியும், அவ்வளவு தான் சொல்ல முடியும்...நீங்கள் போகலாம்”என்றார் அவர்.

“நான் தவறாக எதுவும் செய்யவில்லை,ஸார்..காளி படத்தைத்தான் மாட்டினேன்”, .அம்ரீஷ் அடங்கிய கோபத்துடன் சொன்னான்.

“உங்கள் அறைக்குள் எதையும் செய்துகொள்ளுங்கள்...எங்களுக்கு ஆட்சேபணை இல்லை.. போகலாம்..”

ஏதோ சொல்லவாயெடுத்த அம்ரீஷின் கையைப் பிடித்தவாறு அவனை எழுப்பிக் கூட்டிக் கொண்டுவெளியே வந்தேன்.

*** *** *** ***

அம்ரீஷுக்கு சில வாரங்கள்வரை இந்த சம்பவத்தின் கொதிப்பு கனன்றுகொண்டேஇருந்தது. நடந்ததை நினைத்து நினைத்து அம்ரீஷ் அடிக்கடி மனதுக்குள் புழுங்கி க்கொண்டே இருந்தான். இப்போதெல்லாம் போகும்போதும், வரும்போதும் பஜன் லாலும் துக்காராமும் அவனைப் பார்த்து மேலும்இளக்காரமாக சிரித்துக்கொண்டிருந்தார்கள்.. வாட்ச்மேன் சகாராம்அவனை முறைத்துப் பார்த்தான்.

அம்ரீஷ் ஸவிதாவிடம் இந்த சம்பவத்தைப் பற்றி சொன்னான்.

“ Fools… விடுடா...Forget it!...”என்று அவன் தோளைத் தட்டிக்கொடுத்தாள்.

“இல்லை ஸவிதா...இது சரியில்லே...ஒரு கலைப்படைப்பை ரஸிக்கத் தெரிய லேன்னா. அது குற்றமில்லை. ஆனா இப்படி அதைசேதப்படுத்தி அவமதிச்சி அழிக்கற அளவு குரோதமா வன்மமா... நடந்துக்கறாங்கன்னா அவங்களைஎப்படி மனுஷனா மதிக்க முடியும்? அத்தனை பேரையும் நெருப்பிலே போட்டு கொளுத்தணும்னு ஆத்திரம் வருது”

ஸவிதா அம்ரீஷ் கைகளைப்பற்றிக்கொண்டாள். “அம்ரீஷ்..உணர்ச்சிவசப்படாதே! நீ சொல்றது நியாயம்தான்.பாம்புன்னா கடிக்கத்தான் செய்யும். அதற்காக அதைப் பழிவாங்க இயலாது. இந்த மனக்கொந்தளிப்பை உன் ஓவியங்களில் தீவிரமாகப் பாய்ச்சு .அது தான்ஆக்கபூர்வமானது.தயவுசெய்து இந்தசம்பவத்தை மறக்க முயற்சிசெய்…” என்றாள்.

ஆத்திரத்தை சமனப்படுத்த முடியாமல் கைகளை உதறிக்கொண்டு தலையை ஆட்டிக் கொண்டு மௌனமாக அந்த இடத்தை விட்டு விட்டு வெளியே நடந்தான். அம்ரீஷ் அவன் கைகள் இன்னும் பரபரத்துக்கொண்டிருந்தன.


டில்லியில் சில மாதங்களில் தொடங்கப் போகிற தேசிய கலைக்காட்சி சம்பந்தமாக கல்லூரி அறிவிப்புப் பலகையில் விவரங்களும் படைப்புகளைஅனுப்ப வேண்டிய தேதியும் வெளியாகியிருந்தது.

தேசியப்போட்டிக்கு மாணவர்களை ஊக்குவிக்கும் முயற்சிகள் விரமாக நடந்துகொண் டிருந்தன. ஆசிரியர்கள் பல்வேறுநவீனஓவியங்களின் கட்டமைப்பு கருத்தியல் ஆதாரங் கள் பற்றி மாணவர்களிடம் விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.

ஓவிய மாணவர்களும் சிற்பம் பயில்பவர்களும் பலவிதமானசோதனைமுயற்சிகளில் ஈடுபட்டு தங்கள் படைப்புகளில்மேலும்நவீனமான வெளிப்பாட்டைக் கொண்டுவருவதில் ஈடுபட்டிருந் தார்கள்.

ஸவீதா அந்த நிர்வாண சிலையை அநேகமாக முடித்துவிட்டாள்.அது மிக வித்யாசமாக போவோர் வருவோரெல்லாம் நின்றுகவனிக்கும் கவர்ச்சியுடன் கலைநேர்த்தியுடன் அந்த சிற்பக்கூட வெளியை அழகுபடுத்திக்கொண்டிருந்தது. அதை நிர்வாகத்தின்மூலம் டில்லிக்கு அனுப்புவதற்கு ஏற்பாடுகளும் செய்துவிட்டாள்.

ஸவிதா அம்ரீஷக் கேட்டாள் “என்னடா.....நீ என்ன Painting பண்ணப்போறே? ஏற்கனவே பண்ணிட்டியா..இல்லேஇனிமே தானா?..”

அம்ரீஷ் பதில் பேசாமல் இங்குமங்கும் நடந்துகொண்டிருந்தான்.

“என்ன அம்ரீஷ்?....மௌனமா உலாத்துறே?“

அம்ரீஷ் டக்கென்று நின்று ஸவிதாவையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தான்.

ஸவிதா...குழப்பத்துடன் “என்ன?”...என்றாள்.

“ஸவிதா......ஸவீதா......”

“என்னடா?...என்ன?...”

..நாளைக்கு நீ என் அறைக்கு வரப் போறே! நீ தான் என்னுடைய Model…தேசிய ஓவியபோட்டிக்கு நீதான் என்னுடைய மகத்தான ஓவியமா இருக்கப் போறே!..”

“What ?... என்னடா பேசறெ! நான் தான் உன் மாடலா? “

“ஆமாம் ....’’

“இது சரியா வருமா? ஏதோ தனிப்பட்ட நேச உணர்ச்சியினால இப்படிநீ நெனைச்சா அது ஒரு கலைப் படைப்பாக அமையாது. சரியா வராது.. யோசித்து முடிவு செய்“

“இல்லை ஸவிதா...என் ஒவியத்துக்கு உன் உருவம் அதற்குப் பின்னாலுள்ள உன் சிந்தனை இதுதான் தூண்டுதலாக இருக்கப்போகிறது..ஒரு முழுமையான சக்தி வடிவத்தை நான் வெளிப்படுத்தமுடியும்.நீ தான் என் சக்தி நீ தான் என் ஒவியத்துக்கு ஆதார மான உயிர். நான் தீர்மானித்துவிட்டேன்..“

“அம்ரீஷ்.நீ உணர்ச்சி வசப்படறே! ஆனாலும்….நீ சொல்றதை என்னாலெ மறுக்க முடி யும்னு தோணலே.... காரணம், உன் சாதனைக்கு நான் உறுதுணையா இருக்கத்தான் விரும்பறேன்..நீ வெற்றியடையணும்னு ரொம்ப ஆசைப்படறேன். இருந்தாலும் ஏதோ உள்ளூர ஏதோ சங்கடப்படுத்துகிறது....”

அம்ரீஷ் அதற்குமேல் அங்கே நிற்கவில்லை. “நான் திரும்பிவருவேன். அப்போ நீ தயாரா இருக்கணும்...”என்று சொல்லிவிட்டு அகன்றான்.

 


அம்ரீஷ் இந்த விஷயத்தை என்னிடமும் சொன்னான்.அவனுக்குள் உத்வேகமும் கனவும் பொங்கிக் கொண்டிருந்ததை என்னால் உணர முடிந்தது.

“உன் அறையில் இந்த பெய்ண்டிங் பண்ணப் போகிறாயா?” என்று கேட்க நினைத் தேன்.“Paintingஐ எப்போ செய்யப் போறே?”என்று கேட்டேன்.

“ இன்னும் ரெண்டு நாள்லெ...”

ஆனால்அவன் உற்சாகத்தைக் குறைக்க நான் விரும்பவில்லை. இது அவன் தீர்மானம் அவனுடைய தீவிரமான ஓவிய முயற்சி… சொந்த விஷயம்...

“அம்ரீஷ்...All the Best… நான் இப்போது ஊருக்குப் போகிறேன்.ஒரு வாரம் கழித்து வந்து பார்க்கிறேன். உன் ஓவியம் நிச்சயமாக சிறப்பாக வரும்” என்று கூறி விடை பெற்றுக்கொண்டேன்.

ஊரில் எனக்கு அமைதியைவிடஅதிர்ச்சிகள்தான் அதிகம் நேர்ந்தது.அங்கேபோனபோது ஏதோ இரண்டு தெருவுக்குள் சண்டை .. மனஸ்தாபம் கொலை... ஊரே ஏதோ மௌனப் பகையில் வெந்து கொண்டிருந்தது. மனிதர்கள்.ஏன் இப்படி மாறுகிறார்கள்? அல்லது ஏதோஒரு ஈனமான சக்தி இவர் களைஇப்படி ஆட்டுகிறதா?..உலகம் ஏன் இப்படிக் குறுகிக் கொண்டேவருகிறது?..

மன உளைச்சலுடன் நான் மீண்டும் பரோடா திரும்பினேன். அங்கே குடியிருப்பில் என் அறைக்குப் போனபோது மாலைநேரம். அநேகமாக இருட்டிவிட்டது.கோவில் வளாகத் தில் கூட யாருமில்லை.

ஊரிலிருந்து வரும்போதே எனக்கு அம்ரீஷ் நினைவுதான் வந்தது. அவன்இப்போது ஓவியத்தை முடித்திருக்கலாம்...அறையில்பெட்டியை வைத்தவுடன் முதலில் அம்ரீஷைப் பார்க்கவேண்டும்.அவன்ஆசையாக வரைந்திருக்கும் ஓவியத்தைப் பார்க்க வேண்டும்.. அவன் ஸவிதாவை எப்படி ஓவியத்தில் மாற்றியிருக்கிறான்என்று பார்க்க வேண்டும். என்றுஆர்வமாக இருந்தது.. .நிச்சயம் அது ஒரு சிறப்பான பரிசுபெறக் கூடிய ஓவியமாகத் தான் இருக்கும்.....

நான் மாடி ஏறி அம்ரீஷின் அறையை நெருங்கும்போது அநேகமாக மாலைவெளிச்சம் மங்கிவிட்டது.

அம்ரீஷ் அறையில்கூட விளக்கு எரியவில்லை.“வெளியில் போயிருக்கிறானோ?... கதவைத் தட்டமுயன்றேன்.ஆனால்அப்போதுஎன் கையில் தட்டுப்பட்டது கதவில் உடைந்துதொங்கிக்கொண்டிருந்த தாழ்ப்பாள்.

“இதென்ன?”

“அம்ரீஷ்..அம்ரீஷ்...” என்று கூப்பிட்டவாறே கதவைத் தள்ளினேன். கதவு தானாகத் திறந்துகொண்டது.. இருட்டில் எதுவும் சரியாகத் தெரியவில்லை. மெள்ள மெள்ள சற்று வெளிச்சம்உள்ளே பரவியபோது அங்கே எல்லாமே அலங்கோலமாக இருந்தது. கிழிந்த கேன்வாஸுகள் கிடந்தன.

ஒரு கேன்வாஸில் ஸவிதாவின் சாயலில் ஒரு பெண்ணின் அரை நிர்வாணப் படம் ஒன்று கிழிந்து கிடந்தது. சாயக்குப்பிகள் உடைந்து தரையில் சிகப்பும்பச்சையும் ஊதாவும் ரத் தக் களரியைப்போல் வழிந்து கொட்டிக் இருந்தன. நாற்காலி காலுடைந்து புரண்டு கிடந்தது.

என் கண்ணும் மனமும் இருண்டு அதிர்ந்துபோய் “அய்யோ” வென்று கத்தி னேன்..வெளியே வந்தேன். சுற்றுமுற்றும் இருட்டில் யாரும் தெரியவில்லை.

”அம்ரீஷ்..அம்ரீஷ்...”மாடிவராண்டாவில் நின்றுகொண்டு கத்தினேன்.யாருமேவெளியில் வரக் காணோம். எந்தக் கதவும் திறக்கப்படவில்லை.

குழப்பமும் அதிர்ச்சியும் நெஞ்சில் படபடக்க தள்ளாட்டமாக நான் கிராதியைப் பிடித்த வாறு மாடிப் படிகளில் இறங்க ஆரம்பித்த போது பக்கவாட்டு அறையின் கதவு சற்று திறந்துகொண்ட சப்தம் கேட்டது.

அங்கேயே நின்றேன். உள்ளே இருந்து ஒரு குரல் “ ஸார்..”என்று ரகஸியமாக அழைத்தது.

நான் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தபோது அந்த மாணவன் என்னைகையசைத்து அழைத்தான். நான் உள்ளே போனேன்.

அவன் உடனே கதவை சாத்திக்கொண்டான்.அடங்கிய குரலில் பேசினான்..

”ஸார்...அம்ரீஷ் உங்களுக்கு நெருங்கிய நண்பன்னு தெரியும். அம்ரீஷப்பத்தி பேசினாலே ஆபத்தோன்னு பயமா இருக்கு. ஸார்...அதனாலெ யாரும் வெளிலெ அதைப் பேசறதில்லே.. அதனாலெ நடந்ததைச் சொல்றேன் பதற்றமா இருக்கும். ஆனா பொறுமையா கேளுங்கோ! ஆனா நான் சொன்னதாக நீங்க தெரியப்படுத்தக் கூடாது...”

“என்ன.ஆச்சு? அம்ரீஷுக்கு என்ன ஆச்சு? சீக்கிரம் சொல்லுப்பா...”என் நடுங்கும் கைகளால் அவனைப் பற்றிக்கொண்டுகேட்டேன்.

“ஸார்…. நீங்க ஊர்லெ இல்லாதபோது இங்கே கலாட்டா ஆயிடுத்து.ரெண்டு நாளைக்கு முன்னாலெ அம்ரீஷ் யாரோ ஒரு பெண்ணைக்கூட்டிக்கொண்டு அறைக்குள் போவதை பஜன்லாலும் வாட்ச்மேன் சகாராமும் பார்த்திருக்கிறார்கள். உடனே அவர்கள் இவன் அறையையே கவனித்துக்கொண்டு நின்றார்கள். வெகு நேரம் ஆகியும் அறைக் கதவு திறக்காததனால் சகாராம் அந்த அறைக்கு வெளியே ஒரு ஸ்டூலைப் போட்டு ஏறி நிலைக் கதவுக்கு மேலெ உள்ள கண்ணாடி வழியாகப் பார்த்திருக்கிறான்..பார்த்தவன் வாயைப் பொத்திக் கொண்டு சிரித்தவாறு கண்சிமிட்டி பஜன்லாலைப் பார்க்க சொல்லியிருக்கிறான்.பார்த்த மறு நிமிஷம் “டேய்… . டேய்…. வெளியெ வாடா.. .. பொம்பளையை வச்சு என்னடா செய்யறே?படமா வரையறே..! டேய் வெளியே வாடா ராஸ்கோல்.”. என்று இருவரும் கத்தியிருக்கிறார்கள்........ புறச்சூழலை மறந்து மெய் மறந்து ஒரு சத்தமற்ற தவ நிலையில் உள்ளே தீவிர முனைப்புடன் வரைந்துகொண்டிருந்த அம்ரீஷுக்கு இந்த ஓலம் தலையில் திடீரென்று பாறாங்கல் விழுந்தமாதிரி பயங்கரஅதிர்ச்சி ஏற்படுத்தியிருக் கிறது. கண்கள் இருண்டு உடல் நடுங்கியிருக்கிறது…. எதிர்பாராத இந்த பெருங் கூச்சலால் ஸவிதாவுக்கும் அச்சமும் திகிலும் அதிர்ச்சியும் தாக்கி உடம்பு வெடவெடவென்று பதறி நடுங்க ஆரம்பித்துவிட்டது… இன்னதென்று தோன்றாமல் அவள் ஆடைகளை சேகரித்துக் கொண்டு கதவைத் திறப்பதற்குள் பஜன்லால் கதவுத்தாழ்ப்பாளை உடைத்துவிட்டான். அவர்கள் இருவரும் உள்ளே வந்துவிட்டார்கள்.

“ஸவிதாஅரைகுறை ஆடைகளுடன் தலைவிரிகோலமாக வெளியில்வந்து “அய்யோ அய்யோ” என்று கத்திக்கொண்டுஓடுவதை எல்லோரும் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.. சகாராம் அம்ரீஷின் தலை மயிரைப் பற்றி இழுத்து வெளியே தள்ளி அவன் பெட்டியை வெளியே எறிந்திருக்கிறான்.

“டேய்...டேய்....என் சொந்த அறையிலேதாண்டா... ஓவியம் வரைஞ்சேன் சொந்த விஷயம்....சொந்த அறையிலே.. தான் வரைஞ்சேன் ...”என்று குமுறிக் குமுறி தலையில் அடித்துக்கொண்டு கதறிக்கொண்டே அழுதிருக்கிறான்..

அவர்கள் அவனை அறைந்து, ”டேய், திரும்பிப் பாக்காம ஓடு….. இல்லேன்னா ஒனக்கு கையி காலு இருக்காது..”என்று படிகளில் தள்ளி விரட்டி துரத்தியிருக்கிறார்கள்… அறையில் இருந்த பொருள்களை சேதப்படுத்தியிருக்கிறார்கள்… அம்ரீஷ் புத்தி பேதலித்த வனாக தலையில் அடித்துக்கொண்டுஊளையிட்டுக்கொண்டேவெளியே போயிருக்கிறான்.

அவன் எங்கே போனான் என்று நிச்சயமாக தெரியவில்லை. ரயிலடிப் பக்கம் போனதாக வும் பேசிக்கொள்கிறார்கள். அதற்குப் பிறகு ஸவிதாவையும் கல்லூரியில் காண வில்லை. திரும்பி ஊருக்குப் போனாளோ தெரியவில்லை..........”

என்னால் அழக்கூட முடியவில்லை துக்கம் நெஞ்சு தொண்டையெல்லாம்அடைக்க என் மூச்சு பதறியது.“இதெல்லாம் யாருமே… தடுத்து நிறுத்த யாருமே வரலியா?......ஒருத்தர் கூட........? ”

அவன் அதற்கு பதில் பேசவில்லை.“ஸார்....இதை நான் சொன்னதாக யாரிடமும் சொல்லிடாதீங்க...எனக்கு இன்னும் ஆறுமாசம் படிப்பு இருக்கு..”என்று கதவை மூடிக் கொள்ள தொடங்கினான்.

இரவுமுழுவதும் என்னால் தூங்க முடியவில்லை.புரண்டுகொண்டே இருந்தேன். மறுநாள் குடியிருப்பு காரியாலயத்துக்குப் ஒடினேன்.

அங்கே அதே சிவப்புப் பொட்டு தாடிக்காரன் இருந்தார். என்னைப் பார்த்தவுடன் அவரே பேச ஆரம்பித்தார்...

“உங்களைத்தான் பாக்கணும்னு நெனைச்சேன்…ஒங்க Friendஆ அவன் ?...அவனுக்கு புத்தியே கிடையாதா?ஏற்கனவே எச்சரிக்கை பண்ணியிருக்கோமே!!அவனுக்கு சொரணை வெக்கம் மானம் ஒழுக்கம் ஒண்ணும் கிடையாதா?“

“ஸார் நீங்க தப்பா சொல்றீங்க...”

“என்னய்யா தப்பு?...அவன் ரூமுக்குள்ளே யாரோ பெண்ணைக்கூட்டிண்டு போயிருக் கானே! அதுவே தவறு.அதுக்குமேலேஅங்கேஉள்ளே ஆபாசமா எதோ செஞ்சிருக்கானே! கோவில் குடியிருப்புக்கே கெட்ட பேரை உண்டாக்கியிருக்கானே!. பெரிய குத்தமில்லையா? அப்படிப்பட்டவனுக்கு நீங்க friendஆ....”

“ஸார்.. நீங்க தெளிவாத் தெரியாம பேசறீங்க! அவன் சொந்த அறையிலே அவன் ஓவியம் வரைஞ்சிண்டிருந்தான்... அது அவனுக்கு படிப்பு தொழில்...”

அவன் உள்ளெ என்ன செஞ்சாங்கிறதுக்கு எங்களுக்கு சாட்சி இருக்கு. உங்களுக்கு அவன் செய்கை நியாயமானதாக இருந்தா நீங்களும் உடனே அறையைக் காலி பண்ணவேண்டியிருக்கும்..இங்கே அதெல்லாம் நடக்காது. நீங்க கெளம்புங்க. இதுக்குமேலெ பேசாதிங்க..”.

நான் அதற்குமேல் அங்கே நிற்க விரும்பவில்லை. அது ஒரு குருட்டுச் சுவர். மோத முடியாது.


அந்த வருடம் டில்லி தேசியகலைக் கண்காட்சியில் ஸவிதாவின் “நிர்வாணப் பெண் சிலைக்கு தங்கப் பதக்கம் கிடைத்தது.

அந்த சிலை வடித்த சிற்பக் கலைஞரை பேட்டி காண ஊடகக்காரர்கள் வலை போட்டுத் தேடிக்கொண்டிருந்தார்கள். அதுவும் அந்த நிர்வாணச் சிலை வடித்தது ஒரு பெண் சிற்பி என்று தெரிந்ததும் அவர்களுக்கு உற்சாகம் பரபரப்பாகி பன்மடங்காகியது......

”Ah! What a bold creativity! What a Form! What a spatial concept!” என்று உதட்டுமுனையில் புகையும் புன்னகையும் வழிய கலைவிமர்சகர்கள் செழிப்பான கலா போஷகர்களின் காதுகளுக்கு எட்டுமாறு ஓவியக் கலைக்கூடத்தில் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

 

* அம்ருதா நவம்பர் 2015இல் வெளியான சிறுகதையை பதிவுகளுக்கு ஆசிரியர் அனுமதியுடன் அனுப்பியவர் : லதா ராமகிருஷ்ணன் - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.