1

மாதிக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை. பளபளவென ஒளிரும் வெண்ணிற ஹெவெல்ஸ் வெர்ஷ்டன் டைப் கழிப்பானைக் கண்டு கண்டுச் சிரித்தாள்.

“ஹெத்தெ கவனம்...
மேலே இருக்குற மூடிமேலேதா உக்காரனும் தெரியுமா..
ஹெத்தெ கவனம்… கீழே விழுந்திரபோறே..
கதவைத் தாப்பா போட்டுடாதே… நா யாரையும் உள்ளெவரமா பாத்துக்குற…
ஜாக்கிரதை”

என்ற பெயர்த்தி தேவியின் வார்த்தை அவளுக்கு மேலும் சிரிப்பினைக் கூட்டியது.

“ஏய் போவியா…
பொல்லாத கக்கூஸ்…
எனக்குத் தெரியாதா?
நீ போய் குழந்தையைக் கவனி…
நா பாத்துக்குறே….
ஏய் மிட்டிக்கி கரண்ட் அடுப்பில் வச்சிருக்கும் நீரை மறந்துடாதே…..
அது கொதிக்குது பாரு…”

என்று இயல்பிலேயே உரக்கப்பபேசும் அவள் தன் குரலை உயர்த்தியவாறே அந்தக் கழிப்பானை தன் இரு கைளாலும் அழுத்திச் சரிபார்த்தாள். முண்டைத் தூக்கிக்கொண்டு இதில் அமரமுடியுமா? என்று மனதில் ஒத்திகைப் பார்த்தாள். போனால் போகட்டும் தரையில் அமர்ந்துவிடலாமா என்று யோசித்தாள்.

தரையில் ஒட்டப்பட்டிருந்த முப்பரிமாண டைல்ஸ் கல்லில் தவழும் வண்ண மீன்களின் படம் அவளின் எண்ணத்தை மாற்றியது. அதிலும், தரையையொட்டிய சுவற்றின் விளிம்பில் ஒட்டப்பட்ட முதல் கல்வரிசையில் விளங்கும் தங்கம்போல் ஜொலிக்கும் சிறு சிறு வண்ண மீன்கள் அவளின் பார்வையை ஈர்த்திருந்தன.

    பிரதிவாரம் சனியன்று தன் கணவன் பில்லன் தவறாமல் வாங்கிவந்து, வறுத்துத்தரச் சொல்லி உண்ணும் மீன்தான் அது. நள்ளிரவில், ஆழ்ந்த உறக்கத்தில் பில்லனுக்குத் திடிரென்று தோன்றும் கெண்டைக்கால் பிரண்டலுக்கு மருத்துவச்சி ஜெவனகுப்பி சொன்ன தீர்வு இது. அடிக்கடி கால் வீங்கிக்கொள்ளும் பில்லனுக்கு நேரடியாக உப்பை அளித்தால் ஒவ்வாது என்று உப்புக் குறைப்பாட்டிற்கு மாற்றாக அளிக்கப்பட்ட மருந்து இதுவாகும்.
    நள்ளிரவில் கால் பிரண்டுபோக, வலிதாளாது “ஏய் சுவ்வே எண்ணெ” என்று விளித்து அரற்றும் தன் கணவனின் செயலால் அம்மீனிற்கு அவள் ‘சுவ்வே மீனு’ என்றே பெயரிட்டிருந்தாள். கருவாடாக வாங்கிவரும் இம்மீனின் சுவையும் சொல்லி மளாதது. நாவில் பட்டவுடன் முதலில் உவர்ந்து கசந்தாலும் அதை மென்று விழுங்கும் நிறைவு அலாதியானது. ஆனால், இம்மீனின் சுவையோடு ஒரு பெரும் சுகமின்மையும் ஒட்டியிருந்தது. இதை உண்ட நாட்களில் அதிகாலையில் மலத்தை வெளியேற்றுவது பெரும்பாடினும் பெரும்பாடு.

    மேலட்டி சீகைமரத் தோட்டத்திற்குள் மணிக்கணக்கில் அமர்ந்து, வயிறுவலிக்க முக்கியும் ஒருதுளிகூட மலம் வெளியேறாது திரும்பிய நாட்களுமுண்டு. தோட்டத்திற்குச் செல்கின்ற நாளானால்  சிறு திருப்தியே. இடையில் எப்போது மலவுணர்வு தூண்டினாலும் ஓரளவு சமாளித்துக் கொள்ளலாம். ஆனால், ஏதேனும் நிகழ்விற்குச் செல்வதாக இருந்தால் கன்று ஈன மாசுதெரிந்த எருமையின் நிலைதான். பெருமலோடு வயிறு லேசாக உப்பிக்கிடக்கும் அந்நிலையே ஒவ்வாதது. அவளின் மிடுக்குத்தனத்தை குலைக்கக்கூடியது. இதெல்லாம் தெரிந்தும்கூட அம்மீனின் சுவை தவிர்க்கவியலாதது. ‘பில்லனுக்கும் இப்படித்தான் நிகழுமோ’ என்று அவளுக்கு அறிய வேண்டும்தான். அவள் கவனித்தவரையில் அப்படியொன்றுமில்லை. இதைப்பற்றி அவனிடம் விசாரித்தாலோ நீளும் கதைகளைக் கேட்க அவளுக்கு நேரம் இருந்ததில்லை.

    பத்துக் குழந்தைகளுக்குச் சமைப்பதும், அதிலும், ஆறு ஆண்களுக்குச்  சமைத்துப் பணிவிடை செய்வதிலுமுள்ள சிரத்தை முடிவிலியானது. அடுப்படியில் அமர்ந்துகொண்டு சமைக்கும்நேரம்தான் அவளுக்கான சிறு ஓய்வு.

2

    வீட்டில் சில ஆண்டுகளாக இந்தியக் கழிவறை இருந்தும் அதை அவள் விரும்புவதில்லை. ஆத்திர அவசரத்திற்குக்கூட அவள் அதை பயன்படுத்துவதில்லை. அவளுக்கு நினைவுதெரிந்த நாள்தொட்டு இதற்கு அந்தச் சீகைச்சோலையே உகந்ததென்பது அவளின் மனப்பான்மை. மலம் கழிப்பதை ஓர் அறைக்குள் நிகழ்த்துவதை அவளின்மனம் என்றும் ஒப்பியதில்லை. அதிகாலை நீர்ப்பனி பிட்டத்தை நனைக்க, சீகை மரத்தினின்று சொட்டும் பனித்துளி உடலை நனைக்க, பனிக்குளிரில் நடுங்கிக்கொண்டே மலம்கழிக்கும் அந்த இடம் மனதின் அழுத்தத்தையும் கழிக்கும்.

    உதிர்ந்த சீகைமரத்தின் இலைகளோடு நிலச்செடிகள் பரவியிருக்கும் அச்சோலையில் ஆசுவாசமாய் அமர்ந்தால் முழுப்பிட்டத்தையும் நனைக்கும் நீர்ப்பனியிலிருந்து தற்காக்கச் சற்று எக்கி அமர்வதை அனிச்சையாகவே அங்குப் பழகியவரின் உடல் பெற்றிருந்தது. சில நாட்களில் குறிப்பாக சுவ்வே மீனை உண்டநாட்களில் நேரம்நீள, முட்டிவலிக்கக் கட்டுப்படுத்தவியலாமல் பிட்டம் சமநிலைக்குச்சென்று தரைப்படும். மேலே எழுந்து சிலநொடிகள் காலைநீட்டி அமர்ந்தாலொழிய இந்தநிலை இயல்புக்குத் திரும்பாது. ஆனால், பொழுதுபுலர ஆரம்பித்திலிருந்தாலோ, அருகில் மலம் கழிக்க வந்தவர்கள் அமர்ந்திருந்தாலோ அதற்கும் வழியின்றிபோகும். வலியுடனேயே காலை மாற்றி மாற்றி சாய்த்து சாய்ந்து அமர்ந்து ஆசுவாசப்படுத்திக் கொள்ளவதைத்தவிர வேறு வழியில்லை. கொக்கென்று அமரும் இந்த இரட்டைக்கால் தவத்தின் நிறைவில் முட்டி ஜவ்விலும், மேல் முட்டிக் குழும்பிலும் பெருமிநிற்கும் வலியும், அவ்வலியுடன் தத்தி நடக்கும் நடையும் இனம்புரியாத சுகம். அது பனியில் அலைந்த கால்களுக்கு வெண்ணீர் ஊற்றியதுபோல.

எவ்விதமான பிரச்சினையும் இல்லாத அந்தச் சீகைமரச் சோலையில் ஒரு பெரும் பிரச்சினை இருந்தது. வாரத்தில் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமையன்று வீட்டின் புனித இடமான, பால்பொருட்களை வைக்கின்ற ‘ஆகோட்டின்’ பணிகளை முடிப்பதற்குத் தயாராக, அதிகாலை அடர் இருட்டில் அந்தச் சோலைக்குள் மலம்கழிக்க செல்லநேரும். முதல்நாள் மாலையே இருட்டியப்பிறகு மலம் கழித்திருந்தாலும் அதிகாலையில் எழுந்ததும் அவ்வுணர்வு சில வேளைகளில்  தூண்டும். அதிலும், மாதிக்கு எழுந்ததும் சென்றாக வேண்டும். கழிக்காமல் சாணமிட்டு வீட்டை மெழுகுவதும், முற்றத்தை மெழுகுவதும் அவளுக்கு ஒவ்வாத உணர்வைத்தரும். சளியில் அடைத்துக்கொண்ட மூக்கின்வழி மூச்சுவிடுவதைப்போல மல உணர்வும், மன உணர்வும் ஓயாமல் துரத்தும்.

மகன் எவ்வளவு சொன்னலும் அதை சிறிதும் சட்டைசெய்யாது அவள் அங்குதான் செல்வாள். “இருட்டில் காட்டெருமை குறுக்கில் நின்றால்தான் உனக்குத் தெரியும்.” எனும் மகனின் சபிப்பு பிரதிவாரம் தொடர்வதுதான். யார்யாரோ அறிவுரைக் கூறியும் அந்த ஆதி வழக்கினை அவ்வூரின் ஆதிக்கிழவிகள் விடுவதாய் இல்லை. ‘காட்டெருமை  வராது. அது வந்தாலும் நம்மை ஒன்றும் செய்யாது…’ எனும் அவர்களின் நம்பிக்கை இன்றுவரை பொய்த்ததில்லை. ஒருவேளை அது ஆதியின் ஆதிக்கிழவிகள் காட்டெருமைகளோடு ஆதியில் கொண்ட உடன்படிக்கையாகக்கூட இருக்கலாம்.

    அவசர நாட்களில் அவசர அவசரமாக மலம் கழித்துக் குதத்தைத் துடைக்க இருட்டில் சிக்கும் தரையிலை சில நேரங்களில் ‘துரசு’ இலையாக இருப்பதுமுண்டு. மூக்கின் அருகில் கூர்ந்து முகர்ந்தாலொழிய வாசம் அறியவியலாத அவ்விலை அரிக்கும் இயல்பு வாய்ந்தது. அதைக்கொண்டு தெரியாமல் குதத்தைத் துடைக்கநேரின் அது பெரும்தொல்லை. பிறகு, எவ்வளவு கழுவினாலும், ஏன் பனியில் குளிர்ந்த ‘தாட்டமொக்கெ’ ஆற்று நீரில் கழுவினாலும் அதன் அரிப்பு நீங்காது. குளிரில் கட்டிய ஆமணக்கு எண்ணையைப் பூசினால்கூட அதன் பலன் சில நிமிடங்களுக்குத்தான். பிறகு உடனே அதன் தீவிரம் பற்றிக்கொள்ளும். அடுத்தநாள்வரையிலும் குதத்திலிருந்து கையை எடுக்கமுடியாதபடி அரித்துத்தள்ளும். அதன் வேதனை கொடியது. சில வேளைகளில் பொறுக்கவியலாதது. பொது இடமென்றும்பாராது குதத்தை ஆழமாகத் தீண்டுமளவிற்கு அது மானத்தைக் கெடுத்துவிடும்.

    குதத்தைத் தீண்டி தீண்டி உட்புறம் படியும் அழுக்கு சில வேளைகளில் ஓர விளிம்பில் கசிந்துபோன இரத்தத்துடன் பின்புறம் படிந்து நிற்கும். ஆளற்ற பக்கமாய்த் திரும்பி குதத்தைத் தீண்டி நொடிநேர ஆறுதல் அடையும் இந்த அத்தியாயம் மாதத்தில் குறைந்தது ஒருமுறையாவது அரங்கேறிவிடும்.

    தரைச்செடியைத் தவிர வேறு எச்செடியையும் பறிக்கக்கூடாது என்பது அவர்களின் மரபு. வெளிச்சநாட்களில் முன்கூட்டியே, உகந்த தரைச்செடிகள் உள்ள இடத்தைத் தெரிவுசெய்தாலும், எவ்வளவோ கவனங்கொண்டாலும்,  அது எப்படியும் தவறிவிடுவதுண்டு. துடைத்து சில நொடிகள் கழித்து லோசக ஆரம்பிக்கும் அரிப்பால் ஒருவேளை தான் துடைத்தது ‘துரசெச்’ செடியா? என்பதை சோதிக்க, துடைத்த இலையை அந்த அதிகாலை இருட்டில் எவ்வளவு கூர்ந்து பார்த்தும் கணிக்கவியலாது, வாசத்தைக்கொண்டு அறிய எண்ணி முகர்ந்துபார்க்கும்போது, ஒருவேளை அது ‘துரசெச்’ செடியாக இருந்தால் மலத்துடன் கலந்த அதன் வாசம் நாசியேறி பலமணிநேரம் நாசியில் கறுவி நிற்கும். தொண்டையைக் கரகரக்கச் செய்யும். தொண்டைநீரை செருமி செருமி விழுங்கி நிவர்த்தியை நாடும்.

    குதத்தை அரிந்து அரிந்து தீண்டி தீண்டி, குதத்தின் ஒரம் பிளந்து அகட்டி நடப்பதைக்கண்டு “ஏய் மாதி! ‘அவிரியில்’ நன்கு நீரைக்காய்ச்சி, அதில் இரண்டுபடி மிளகுப்பொடியைக் கலந்து, சூடு ஆறும்முன் அதில் சிறிது நேரம் அமார்ந்துகொள்… இது உடனே சரியாகிவிடும்.” என்று தன் ஏந்துபல்லை இளித்துக்கொண்டே கேலிசெய்யும் மேல்கேரி மல்லய்யாவின் கிண்டலைக் கேட்காதவர்கள் அவ்வூரில் எவரும் இல்லை எனலாம். இந்த இலையால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து வெளியேறுவதைக் காட்டிலும் மல்லனின் கண்ணில் படாமல் எப்படி தப்பிப்பது என்றே இதனால் பாதிப்படைந்த பலரின் எண்ணங்கள் சூழும். விடாமல் சூழும் இந்த நினைவு மீன்களும் அக்கழிவறையெங்கும் சூழ்ந்திருந்த மீன்களோடுச் சேர்ந்தலைந்தன.

3

    மலத்தைக் கழிக்கும் அகச்சூழலும் புறச்சூழலும் மாதிக்கு முற்றிலும் இல்லை. சமவெளியின் வெக்கை அவளின் முகமெங்கும் கார்ப்பை விளைத்திருந்தது. இதில் இக்கழிவறைவேறு அவளுக்கு முதல்முறை. தொடர்ந்து முயன்றுப் பார்த்தாள். முடியவில்லை. முடிவுமில்லை. மீண்டும் அவளின் பார்வை சுவ்வே மீனின்பக்கம் சென்றது. ‘அம்மீனை உண்டால் மட்டுமல்ல, கண்ணால் அதன் படத்தைப் பார்த்தால்கூட மலம்கழியாதோ’ என்ற எண்ணம் எழ அவளின் இதழை மீண்டும் சிரிப்புக் கொண்டிருந்தது.

    “ஏய் முதுக்கி… என்னவாச்சு….
    இவ்வளவுநேரமா என்ன பன்னுறா…
    ஒன்னும் பிரச்சினையில்லையே…”

என்ற பெயர்த்தியின் கேள்விகளுக்கு “இல்லை… இல்லை..” என்றவாறு, இறுதியாக அவள் சொல்லித்தந்தவாறு ஃபிளாசை அழுத்தினாள். மேலெழுந்து குலுங்கி உள்ளே சுழன்ற நீரின் ஒலியும், சுழலும் அவளுக்குத் ‘தாட்டமொக்கெ’ ஆற்றில் பாறையிலிருந்து கீழே வழிந்தோடும் நீரின் நினைவை எழுப்பியது. வயிற்றைத் தடவிப் பார்த்தாள். பெருத்திருந்தது. இத்தகு வேளையில் என்றும் நினைத்துக் கொள்வதைப்போல ‘எல்லாம் மலம் கழித்தால் சரியாகிவிடும்’ என்று எண்ணத்தின்வழி தனக்குத்தானே சமாதானம் கூறிக்கொண்டாள். இது சரிப்பட்டுவராது. அடுத்தமுறை நிச்சயம் தரையில் அமர்ந்துவிட வேண்டியதுதான் எனும் முடிவுக்கு வந்தாள்.

“ஹெத்தெ…. ஹெத்தெ… இன்னிக்கு என்னக்குழம்பு தெரியுமா? கண்டுப்பிடி பார்க்காலாம்….”

    “தெரியலெயே ‘முதுக்கி’…”

    “தெரியலெயா…. கண்டுப்பிடி… நல்லா மோந்துப்பார்…”

    “சளியிலே மூக்கு அடைச்சிருக்கு…. வாசம் தெரியலே… நீயே சொல்லேன்…”

    “சரி… காத கொடு…. மீனு… மினுக்குழம்பு…. நல்லா சாப்புடு…”

என்ற பெயர்த்தியின் வார்த்தை மாதிக்கு மீண்டும் சுவ்வே மீனின் நினைவைக் கிளறியது. உடனே அவள் குழம்புச்சட்டியைத் திறந்து பார்த்தாள். அப்பாடா… இது அல்ல… வேறுமீன்… கொத்தமல்லி தூவிய அதன் மணமும் நிறமும் அவளின் நாவைத் துருத்தின. வாழ்வின் முதல்முறையாக இத்தகு மீனை உண்பதற்கு முன்னமே பெருமிநிற்கும் தன் வயிற்றின்நிலை அவளைச் சற்று யோசிக்கவைத்தது. ஏன், சற்று கவலைக்கொள்ள வைத்தது.  

    “ஹெத்தெ சீக்கிரம் உக்காருங்க…. சாப்புடலாம்…” என்று எக்கி நின்று தன் தோள்களை அழுத்தி டைனிங் டேபிளில் அமரவைத்த பெயர்த்தியின் கன்னங்களைத் தொட்டு முத்தமிட்டாள்.
“ஹேய் ‘முதுக்கி’ கொஞ்சம் போகட்டும்…. ஒடம்பு சூடாயிருச்சு…. கொஞ்சம் வயிறு பசிக்கட்டுமே… அதோ அந்தக் கீரையை எடு…” என்றவள் அவளே சென்று எடுத்து அதை ஆயத் தொடங்கினாள்.

    ஊரில் வீட்டின் முற்றத்தில் விளைந்திருந்த அந்த மெத்தைக் கீரையில் உரமாகத் தூவப்பட்ட அடுப்புச் சாம்பல் படிந்திருந்தது. கீரையின் ஓரத் தழைகளை அகற்றி ஆய்ந்தாள். கழுவ எழுந்தாள்.

“ஹெத்தெ அரிந்தப்பின்பு வெட்டலாமே…”

“இல்லை கழுவியப்பின்தானே வெட்டனும்..”

“சரி… தாங்க. நான் கழுவித்தாரேன்…”

“இல்லை… இல்லை.. எனக்கென்ன வேலை… நான் கழுவிக்கிறேன்…”

“சரி… சரி.. உன்னைத் திருத்த முடியாது… எல்லா வேலையையு நீதான் செய்வேனு அடம்புடிப்பே… அது உன் பொறப்பு… நம்மள நக்குற எருமைய நாம நக்கமுடியுமா என்ன?”

என்று உரையாடல் வலுத்துக் கொண்டிருந்தது. “அம்மா… அம்மா…” என்று யாரோ அழைக்கும் சப்தம். இடையிடையே மணியொலி வேறு. “அம்மா.. அம்மா… குப்பை அக்கா…” என்றவாறு தனக்கென வைத்திருக்கும் சிறு குப்பைத் தொட்டியை எடுத்துக்கொண்டு விரைந்தாள் தேவியின் மகள்.

“ஏய்….. பாத்து.. பாத்து.. கால் வழுக்கிடும்…” என்றவாறு தொற்றிய சிறு பதற்றத்துடன் உணவு மேசையின்மீது ஆய்ந்திருந்த கீரைப்பகுதிகளை முறத்தில் எடுத்து குப்பைத் தொட்டியில் கொட்டப்போனாள் தேவி.
“ஏய்… மிடுக்கி இதையேன் குப்பைத் தொட்டியிலே போடுறே….. பக்கத்துல மாடுங்க இல்லையா…. ஐயோ.. பாவமா இல்லே” என்றாள் மாதி.
“மாடா… இங்கு அதெல்லா இல்லே… இன்னு ரெண்டுநாளுக்கு அப்புறம்தா குப்பைக்காரி வருவா” என்றவள் நேற்று மீந்துபோன உணவையெல்லாம் நெகிழிப்பைக்குள் அவசர அவசரமாகத்  கொட்டிக் கொண்டிருந்தாள்.
“ஏய் இதையாவது காக்கைக்கோ, நாய்க்கோ போடலாம்தானே…” என்ற மாதியை மேலுமொருமுறை முறைத்துப்பார்த்தாள் அவள். அவளின் கண்களுக்குள் இரண்டு சுவ்வே மீன்கள் தவழ்ந்து கொண்டிருந்தன.

4

“அம்மா…. அம்மா… சீக்கிரம்….
அடுத்த தெருவுலே எல்லோரு வேலைக்குக் கிளம்பிடுவாங்க….
குப்பையவேற தெருவிலேயே வச்சிட்டு போயிடுவாங்க….
அத பிச்சிப் போடறதுக்குன்னே சில நாய்க அலையுதுங்க…
தெருமுழுக்க குப்பைய பெறுக்குற நெலமெ வந்துடும்…
கொஞ்ச சீக்கீரமா….”

நேற்று கடைக்காரர் அண்ணாட்சி செல்லாது என்று கொடுத்த, கிழிந்தொட்டிய இருபது ரூபாய் நோட்டினை இடது கையில் மடக்கி எடுத்துக்கொண்டாள் தேவி. மக்கும், மக்காத குப்பைகளைப் பிரிக்காத நாட்களில் இதுதான் வரையறுக்கப்பட்ட சிறந்தவழி என்பது அங்குள்ள அனைவருக்கும் பழகிப் புளித்துப்போன ஒன்று. இந்த ரூபாய்த்தாள் மக்கும் குப்பையா? மக்காத குப்பையா? எனும் குழப்பம் குப்பைக்காரிக்கு பல வேளைகளில் வருவதுண்டு. அதெல்லாம் இல்லை. இது எக்குப்பையானலும் மக்கவைக்கும் குப்பை என்பதே அங்கிருந்தவர்களின்  மனமொப்பிய துணிவு.

குப்பைத்தொட்டியில் இட்டிருந்த கருப்புநிற குப்பைப் பை முழுதும் நிறைந்துபோக, மற்றொரு புதியப் பையை எடுத்து அதில் பகுதியளவு குப்பையை நிரப்பினாள் தேவி. பெரும்பாலும் உண்ணாது மீந்தவைகளே அவ்வீட்டின் பெருங்குப்பையாய் நிரம்பும். இதிலெல்லாம் சிக்கனங்கொள்ளாத தேவியின் கணவன் இந்தக் குப்பைக் காகிதத்தில்மட்டும் தன் சிக்கனக் கொள்கையை நிரப்பி வழிப்பான். “குப்பை வண்டி வர்ரதே மாசத்துலே பதினஞ்சு நாளு. அதிலு எப்படி முப்பது பேப்பர் இருக்குற குப்பைக்காகித பேக்கெட் தீந்துபோகும்?” என்று அவன் கேட்காத மாதமில்லை எனலாம். அதிலும் ஏதேனும் அலுவலக, பொருளாதார அழுத்தங்களில் உழன்றிருப்பின் அவனின் விகாரம் குப்பைப்பையில்கூட அடங்காது. அதிலிருந்து இரண்டு மூன்று நாட்களுக்கு வீட்டின் குப்பைகள் கொசுகளுக்குத் தீனியாகும். கூட்டப்படாமல் ஆங்காங்கே கிடக்கும். இந்தக் குப்பைக் கோபங்களுக்கான ஒத்திகையைக் கூடுதலாகக் குப்பைக் காகிதத்தை எடுக்கும் ஒவ்வொருமுறையும் தேவி பார்க்கத் தவறுவதில்லை. மனதில் ஒத்திகையோடே  நிரப்பிய குப்பையைச் சுமந்து சென்றாள் தேவி.

“ஏய் பொன்னி… எவ்வளவுநேரந்தா கால்கடுக்க வெளியே காத்திருக்கிறது…”

சில கனத்தக் குரல்கள் அடுத்தத் தெருவில் ஓங்கின.

“ஐய்யய்யோ, தேவி அம்மா… கவுன்சிலர் பொண்டாட்டி கூப்புடுறாங்க…
என் வேலைக்கே ஒலெ வச்சிடுவீங்க போலியே…”

“ஒரு நிமிஷம் அக்கா…. இப்ப வந்துடறே…”

இரு கைகளிலும் அழுத்தி நிரப்பிய குப்பைக் காகிதத்தை ஏந்திக்கொண்டு அவசர அவசரமாக சென்றாள் தேவி. வலது கையில் ஏந்திய குப்பைப் பை கனத்தில் கிழிய ஆரம்பித்தது. மேலே திணிக்கப்பட்டிருந்த ஆய்ந்தக் கீரைப்பகுதிகள் கீழே சிந்தின. “ஒளவெ” என்றவாறு அக்குப்பைப் பை முழுதும் கிழிவதற்குள்ளாக வேகமாக கொண்டுச்சென்று போட்டுவிடவேண்டுமென்ற அவசரத்தில் நழுவி விரல் விளிம்பிற்கு வந்துவிட்ட குப்பைப் பையை உதட்டைக் கடித்துக்கொண்டு நுனிவிரல்களால் இறுக்கிப் பிடித்தாள். குப்பைப் பையில் இட்ட அழுகிய பூசணி அதன் கனத்தைக்கூட்ட, தனது முனங்காலை முட்டுக்கொடுத்தப்படியே ஒருவேளையாகக் குப்பை வண்டியை அடைந்தாள்.

“அய்யோ, அம்மா… எனக்கு ரெட்டேவேலை வைக்கிறீங்களே…
போங்கம்மா… நீங்க எப்பவுமே இதே மாதிரித்தா..
நாளையிலிருந்து மொதலெ அங்கே போயிட்டு அப்புறமா இங்கே வந்துறபோறே..
அவங்க பேச்ச கேட்கமுடியலே..
வேலையு செஞ்சு திட்டு வாங்குனும்னு தலைவிதி…”

என்றையும்போல புலம்பிக்கொண்டே வீட்டின் வாசலிலிருந்து சிதறிவிழுந்திருந்த குப்பைகளைக் கையில் அள்ளி எடுத்தாள். குழந்தைக்குப் போட்டிருந்த டயப்பர் ஒன்று கீழே விழுந்திருந்தது.

“அம்மா… நா எத்தன மொறெதா சொல்லுறது….
இதையெல்லா தனியா கொடுக்கனும்னு தெரியாதா?….
இருக்குற வேலே பத்தாதூனு இது வேறேயா?...
இத நான்தா தனிய பிரிச்சி எரிக்கனும்.. நெருப்பு சுத்தமா அணையறவரைக்கு குப்பைக்குழியிலே காத்திருக்கனும்..
ஒருவேளை அந்தச் சூப்பர்வைசர் கண்ணுலபட்டா அவ்வளவுதான்… இதவிட ரெண்டுமடங்கு வாங்கிகட்டனும்..
போங்கம்மா… அடுத்தவாட்டி இப்படி கொடுத்த நா சத்தியமா வாங்கமாட்டே பாத்துகோங்க…”

என்று பொன்னி வெகுண்டு பேசி முடிப்பதற்குள்ளாகவே அவள் கையில் திணிக்கப்பட்ட இருபது ரூபாய் அவளின் கோபத்தை, ஆதங்கத்தைக் குறைக்கவில்லை. அவளின் நிலைக்குத்திய பார்வையே அதன் போதாமையை அறைகூவியது.

“ஐம்பது ரூவா இல்லாம நா பிரிக்காத குப்பைய தொடமாட்டே” என்ற இரண்டாவது வார்ட்டில் குப்பை வாங்கும் தன் மனிதி கூறிய வார்த்தை அவளின் நாவரை எழுந்தது. உச்சிவெயிலில் நெற்றியில் கழிந்திருந்த வியர்வை முகமோடி தரையில் சொட்டியது. பொன்னியின் நோக்கம் புரிந்திருந்தும் சூழல் விலக்கி மறுபக்கம் தன் பார்வையை மாற்றினாள் தேவி. ‘குப்பை வாங்குபவர்கள் பணம்கேட்டால் புகார் அளிக்கவேண்டிய எண் - 04222-04222’ என்று எழுதப்பட்ட பலகை தேவியின் வீட்டிற்கு எதிரிலுள்ள வேப்பமரத்தில் அறையப்பட்டிருந்தது. அதனோடு பொன்னியின் எதிர்பார்ப்பும்தான்.

“அக்கா அடுத்தமுறை இன்னும் பாத்துக்கலாம்… ஊரிலிருந்து பாட்டி வந்திருக்காங்க… அந்த அவசரத்துல எதுவுமே ஓடலே…. கோச்சிக்காதிங்க…”

என்றாள் தேவி. இந்த வார்த்தைகளுக்குப்பின் லேசாக மிகுந்திருக்கும் திமிரை பொன்னி என்றும் சோதித்ததில்லை. அதுசார்ந்த அனுபவம் அவளுக்கு அதிகம். குப்பையை இடும்வரைதான் பொன்னி அக்கா. இட்டப்பின் வெறும் குப்பைக்காரிதான். குப்பைக்காரிக்குக் கிடைக்கும் மரியாதை அவளுக்கு நன்குத்தெரியும். உதிர்க்கும் கோப வார்த்கைளுக்குகூட அவ்வீட்டில் குப்பை நிறையும்வரை காத்திருக்க வேண்டும். இந்த மதிப்புப் போராட்டத்தின் நாற்றமோ குப்பை நாற்றத்தையே மிஞ்சியது.

வீட்டிற்குள்ளே விழுந்து சிதறிய கீரைப்பகுதிகளை அள்ளிக்கொண்டு வெளியேவந்தாள் மாதி. அவளின் முகத்தில் எழுந்த புன்னகைக்கு மறு புன்னகை எழுப்பக்கூட வழியின்றி கவுன்சிலர் மனைவியின் கூக்குரல் ஓங்கியது. மரியாதைக்காக இறுகியமுகத்துடன் தலையசைத்துவிட்டு கடந்தாள் அவள். “ஏய்.. அக்கா.. ஒரு நிமிஷம்.. இந்தாங்க…” என்று மாதி கையில் கொண்டுவந்திருந்த கீரைக்கழிவினை வாங்கி ஓடிச்சென்று வண்டியில் போட்டாள் தேவி. என்றும் குப்பை மீந்துபோவது அவளுக்குப் பிடிக்காதவொன்று. தன் மகளுக்கு ஒழுக்கம் கற்பிக்க இப்படியொரு பிம்பம் அவளுக்குத் தேவைப்பட்டது. வெளியில் தெரியும் குப்பைகளுக்கு மட்டுமே இந்த உடையாத பிம்பம். நிரம்பிவழிந்த குப்பை வண்டியில் அவளிட்ட அக்கழிவு கீழே சரிந்து விழுந்தது. பொன்னி சலித்துக்கொண்டே நகர்ந்தாள். இம்முறையும் கேட்கப்படாமல் நகர்ந்த அந்த ஐம்பது  ரூபாய், ‘சுத்தமா பொழைக்கத் தெரியதவா…’ எனும் தன் மதினியின் வார்த்தை அவளின் எண்ணத்தைக் குடைந்து கொண்டிருந்தன.

5

இரண்டாம் எண் தெருவிலிருந்து தனது வாடிக்கையான இந்த நேரத்தில் அந்தச் செவலைமாடு வெளியே வந்துகொண்டிருந்தது. குப்பை வண்டியின் மணியொலியைக் கேட்டதும் அதைநோக்கிவரும் இந்த மாடால் என்றுமே பொன்னிக்குப் பெரும் பிரச்சினை. குவித்து வைத்திருந்த குப்பையையெல்லாம் தரையில் இழுத்துப்போட்டு பொன்னியின் வேலையை மடங்காக்கும். இதை விரட்டுவதற்காகவே அவள் குப்பை வண்டியில் கனமான பிரம்பொன்றினை வைத்திருந்தாள். அது பக்கவாதத்தால் இடப்பக்கம் விழுந்துபோன கண்ணாடித் தாத்தாவின் கைத்தடி. அத்தெருவே அவரைக் கண்ணாடித் தாத்தா என்றுதான் அழைக்கும். பக்கவாதத்தால் வருமானம் விழுந்தபிறகு பெறுமானமின்றி மக்களால் கைவிடப்பட்ட அவரை, அவரைவிட பத்து வயது மூத்த அவரின் சகோதரி உடன்பிறந்தவனென்ற தொட்டக்குறைக்காக கவனித்துக் கொண்டாள். காலை மலஜல சேவைக்குப்பிறகு வீட்டுத் திண்ணையில் அமரவைத்துவிட்டு, காலையில் மீந்துபோன உணவை மதியத்திற்கென அருகில் கிண்ணத்தில் எடுத்துவைத்துவிட்டு அவள் வேலைக்குக் கிளம்பிவிடுவாள். சுருங்கிய கண்களை மேலும் மேலும் இடுக்கி அணிந்திருக்கும் பெரிய சோடப்புட்டி கண்ணாடியின்வழி தன் புறக்கணிப்பை அசைபோடுவதே அவரின் வாடிக்கை.

முதல் மற்றும் இரண்டாம் எண் தெருக்கள் இணையும் முடுக்கில் அமைந்த தன் வீட்டிலிருந்து ஓயாமல் தெருவைக் கவனிக்கும் அவர் குப்பை வண்டியை நெருங்கும் அந்தச் செவலைமாட்டினை விரட்ட வெள்ளியங்கிரி மலையேறி கொண்டுவந்த கனத்த தன் கைத்தடியால் தரையை முடிந்தவரை வேகமாக அடித்து பொன்னியின் போராட்டத்தில் பங்கேற்க தவறமாட்டார்.

அவர் இறந்தபிறகு அவரின் கழிந்த பாயோடும், எச்சிலொழுகி பூசம்படிந்த தலையணையோடும் குப்பையில் போடப்பட்டிருந்த இத்தடியை அவள் பத்திரப்படுத்தியிருந்தாள். பொன்னிக்கு உதவியாய் கண்ணாடித்தாத்தா தரையில் அடித்து பிய்த்துப்போன அக்குச்சியின் அடிவிளிம்பில் புறக்கணிப்பின் வரலாறு எஞ்சியிருந்தது.

எவ்வளவு அடித்தாலும் சிறிதும் சொரணையின்றி நின்ற இடத்திலிருந்து துளியும் நகராத அம்மாடு பொன்னிக்குப் பெரும் தலைவலி. அது தன்னை நெருங்குவதற்கு முன்னமே தெருவைக் கடந்துவிட வேண்டுமென்ற அவளின் முனைப்பு ஒருநாளும் கைகூடியதில்லை. அத்தெருவின் பத்து வீட்டுக் குப்பைகளும் ஆடி அசைந்து வருவதற்குள்ளாகவே கழுத்தோடு முன்காலை இணைத்து கட்டப்பட்ட அந்த மாடு தத்தி தத்தி குப்பை வண்டியை நெருங்கிவிடும். நெடுநாளாய் மாற்றப்படாத அதன் அழுக்குக் கயிறும், அக்கயிறு அரித்து சதைப்பிய்த்துத் தொங்கும் எலும்புத் தெரியும் கால்களும் மனதின் அழுக்கு மண்டிய மனிதர்களின் புனையா ஓவியமாகி வலுக்க, அதை மொய்த்திருந்த ஈக்கள் மென்மேலும் அவ்வழுக்கிற்கு அழுக்குப் பூசிக்கொண்டிருந்தன.

அந்தமாடு நெருங்கிவர கையில் அணிந்திருந்த அழுக்குக் கையுறையில், பலமுறை அவ்வழுக்குக் கையுறைப்பட்டு அழுக்கான அந்தக் கோலைப்பற்றி துரத்த ஆரம்பித்தாள். அதுவோ திமிரி முன்னேறி குப்பை வண்டியின் மேல்புறமிருந்த கீரைக்கழிவுகளை நுனிமேய்ந்தது. துரத்தி அலுத்துப் பயமற்றுப்போக அதன் கொம்புகளைப் பிடித்து முடுக்கினாள். சினந்து முதுகில் இரண்டு அடி அடித்தாள். அதையெல்லாம் சிறிதும் சட்டைச்செய்யாது அதுதன் வேலையைச் செய்துக்கொண்டிருந்தது. அவளோடு அவ்ளளவு அன்யோன்யமாய் அணுகும் ஒரேஜீவன் அதுவாகதான் இருக்கும். குப்பை வண்டியின் மேல் இருந்த கட்டப்படாத பெரிய சாக்குப்பையிற்குள் தன் விழிவறை முகம் நுழைத்திருந்த அதன் வாயில் அடுத்தடுத்து டயாபர்களே சிக்கியது. தன் பாலைக் குடித்துவழித்த மனித அழுக்கின் நாற்றம் அதன் நாசியைக் குடைந்தெடுத்தது. லேசில் நகராது அது தன் மூக்கைப் புடைத்துக்கொண்டு கடந்து சென்றது. இது ஒருவகையில் அக்குப்பைக்காரியின் தந்திரமும்கூட. அலுப்பின்றி அதை விரட்டும் இந்தச் சூட்சுமத்தைக் சில நாட்களுக்கு முன்புதான் அவள் கண்டறிந்திருந்தாள்.

அச்செவலை மாட்டின் இன்றையக் காலச்சக்கரம் சுழன்றுக்கொண்டிருந்தது. என்றைக்கும் நிற்காமல் நகர்ந்துசெல்லும் தேவியின் வீட்டின்முன்னே சிதறியிருந்த கீரைக்கழிவுகளை அது வெள்ளைப் படிந்த தன் நாவால் நக்கி உண்டது. என்றோ உண்ட, அதிசயமாய்க் கிடைக்கும் கிரமத்துச் சுவை. அதன் மூச்சுக்காற்றுப்பட்டு அங்கிங்கும் சிதறிய கீரைக்கழிவுகளை விடாமல் அலைந்துண்டது. கண்ணிடுக்கில் கழிந்திருந்த பீளையும், அதற்குச் சற்றுக்கீழே படிந்துநின்ற அழுகிய தக்காளிச்சாரும், அதன் கொம்பில் ஏறியிருந்த டயாபர் துண்டும் அதற்கு நகரத்தின் தோல் போர்த்தியிருந்தது.

தன் வாழ்நாளில் மாட்டின் கழுத்தில் கயிற்றையே காணாத, ஏன், இத்தகு எண்ணத்தைக்கூட அறியாத, பெரும் எருமை மந்தைகளைக் கட்டிக்காத்த மாதியோ கழுத்தோடு கால்கள் கட்டப்பட்டு, வாயில் எச்சில் ஒழுகத் தத்தி தத்தி நடந்துவரும் மாட்டினை முதல்முறையாகக் கண்டதும் கண் கலங்கினாள். கயிறு அரிந்து கிழிந்து தொங்கிய அதன் கால் சதையில் பளிங்குக் கழிவறையின் சுவ்வே மீனு ஓடிக்கொண்டிருந்தது. ‘அடடே அந்தக் கீரைக்கழிவினை இதற்காவது போட்டிருக்கலமே’ என்று எண்ணி வருந்தி உச்சுக்கொட்டிய மாதியைத் தூக்க இயலாத தன்கழுத்தை முயன்று தூக்கி, அழுந்திய கயிறு மேலேற வலுத்த வலியைச் சகித்துக்கொண்டு நோக்கியது. மாதியின் கனிவு வழியும் கண்களைக் கூர்ந்து நோக்கியவாறே “அம்மா… அம்மா… அம்மா…” என்று மும்முறைக் கத்தியது. அதன் இந்தப் புதுநடத்தை அங்குள்ள பலபேருக்கு விசித்திரமாய்ப்பட்டது. கல்லெறிந்தாலாவது இம்மாடு கத்துமா? என்று முயன்றுப் பார்த்தவர்களும் அத்தெருவில் உண்டு. பலமுறை கல்லெறிந்து முயன்றும் சலித்துப்போய் அது ஊமையென்று முடிவுக்கு வந்தவர்களுமுண்டு. அதில் தேவியின் வீட்டின் மேல்மாடியில் வசிக்கும் அவ்வீட்டின் சொந்தக்காரரும் ஒருவர். அனைவரும் வியப்பு தளாது அதைப் பார்த்தனர். அது மென்மேலும் மாதியை நோக்கி கத்திக்கொண்டே நகர்ந்தது. அதன் வயிறும் மாதியைப்போலவே உப்பியிருந்தது.

“ஹெத்தெ… சாப்பிடவாங்க.. நேரமாச்சு..” என்று சோற்றுத் தட்டினை நீட்டினாள் தேவி. அதில் வெள்ளைச் சோற்றினை ஒருபக்கமாக ஒதுக்கி, மறுபுறத்தில் இடப்பட்டிருந்த இரண்டு மீன்துண்டுகள் மணந்தன. வீட்டின் முன்னே வெயில்காயப் போட்டிருந்த நாற்காலியில் அமர்ந்துகொண்டே சோற்றைப் பிசைந்தாள் மாதி. அவளின் கையெல்லாம் வெதுவெதுப்பான சூடோடு கயிறறுத்துத் தொங்கிய அச்செவலை மாட்டின் கால் சதையும் அந்தச் சுவ்வே மீனும்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.