1.

அதிகாலை கொஞ்சம் புகாரும் குளிரும் இருந்தது. சூரியகுமார் அவசர அவசரமாக ஆடைகளை அணிந்துகொண்டான். பிக்கறிங்ஸ் வீதியை நோக்கி விரைந்த அவன், இடது புறம் திரும்பிக் கொண்டான். தூரத்தே சாப்பாட்டுக் கடைக்கு முன்னால் நாலைந்துபேர்கள் நிற்பது தெரிகின்றது. ஏழைகளுக்கான பெட்டிக்கடை தான். பெட்டிக்கடைக்குள் ஒரு நீட்டு மேசையும், தோதாக அதன் இருபுறங்களிலும் வாங்குகளும் இருக்கின்றன. ஒரு ஓரமாக அமர்ந்து கொண்டான். வழமையான தேங்காய்ப்பூ போட்ட வட்ட வடிவ ரொட்டி. விரலளவு தடிப்பத்தில் உள்ளங்கையால் மூடக்கூடிய அளவு. தொட்டுக்க ஆவி பறக்கும் கடலைக்கறி.

கடைக்குள்ளிருந்து வந்த ஒருவன், சூரியகுமாரின் காதிற்குக் கிட்டக் குனிந்து “பாபத் கறி” வேண்டுமா என்று சிங்களத்தில் கேட்டான். சூரியகுமார் தலையை இடமும் வலதுமாக வெறுப்பாக ஆட்டிவிட்டு, “ஒரு பிளேன் ரீ போதும்,” என்றான். குடல் கறி என்றவுடன் அவனது வயிறு குமட்டிக்கொண்டு வந்தது. இது காலை உணவு.

மீண்டும் பத்து நிமிட நடையில், துறைமுகம் வந்து விடும். கப்பல் கட்டுமானப் பணியிடத்தில் பொறியியலாளராக வேலை. வெண்ணிற ஆடைக்குள் புகுந்து கொள்வான். உப்புக் கரிக்கும் காற்றின் சுவையை நுகர்ந்தவாறே வேலைக்குள் மூழ்கிவிடுவான். சிறிய திருத்து வேலைகளுக்காகவும், வர்ணம் அடிப்பதற்காகவும் `டெக்’கிற்குள் பெரிதும் சிறிதுமாக சில கப்பல்கள் நிக்கின்றன. புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட கப்பலொன்று வெள்ளோட்டத்திற்காகக் காத்து நிற்கின்றது. அதன் இறுதிக்கட்ட சோதனை முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மதியம் வேலையிடத்தில் இலவச உணவு. தினமும் ஒரே வகைச் சாப்பாடு. இரண்டு சைவக் கறிகளுடன் மீன் அல்லது முட்டையுடன் சோறு. எப்போதாவது இறைச்சித்துண்டும் இருக்கும்.

கொழும்பில் வீடு அல்லது அறை வாடகைக்குக் கிடைப்பது முயற்கொம்பு. அதுவும் தமிழ் இளைஞர்களுக்கு என்றால் சொல்லத் தேவையில்லை. சூரியகுமார், நண்பனின் புண்ணியத்தில் கிடைத்த வீட்டில் இருக்கின்றான். அந்தப் புறாக்கூட்டு வீட்டில் சூரியகுமாருடன் படித்த மூன்று நண்பர்களும் கூடவே இருக்கின்றார்கள்.

வேலை தேடி தலைநகருக்கு வந்துவிட்டால் எதையும் பார்க்க முடியாது. பசி பட்டினியைப்பற்றி யோசிக்கக்கூடாது. அரைவயிறு கால்வயிறு நிரம்ப உண்ணுவதுதான் உடம்புக்கு ஆரோக்கியம் தரும். தங்குமிட வாடகை, உடுப்புகள், சாப்பாட்டுச் செலவு போக வீட்டுக்கும் காசு அனுப்புவான்.

அன்று வேலை முடித்து, வீடு வந்தபோது தபால்பெட்டிக்குள்ளிருந்து ஒரு கடிதம் தன் தலையை வெளியே நீண்டுகொண்டிருப்பதைக் கண்டான். முத்திரை ஒட்டாமல், அவனது பெயருக்கு அந்தக் கடிதம் வந்திருந்ததைக் கண்டு வியப்புற்றான்.

`நாளை சனிக்கிழமை மத்தியானம் வீட்டுக்கு வரவும். சாப்பிட்டுவிட்டும் போகலாம். சத்தியகுமார்’ `சுருக்கெழுத்து’க் கணக்காக அண்ணாவின் கடிதம் இருந்தது. இதென்ன ஒரே அதிசயமாக இருக்கின்றதே! பதட்டத்தில், கை நடுக்கத்தில் கடிதத்தைக் கீழே போட்டுவிட்டான். மகிழ்ச்சி ஒருபுறம், கோபமும் கூடத்தான்.

சூரியகுமார் இருக்கும் கொட்டாஞ்சேனையில்தான் அவன் அண்ணா சத்தியகுமாரும் கடந்த எட்டு மாதங்களாக இருக்கின்றார். நடையில் ஒரு பதினைந்து நிமிடங்கள் போதும். அண்ணா அங்கே நிரந்தரமாக தங்குவதில்லை. அவ்வப்போது சனி ஞாயிற்றுக்கிழமைகளில் வந்து போவார். அண்ணி பாவனாவும் குழந்தைகளும் மாமா மாமியும் இருக்கின்றார்கள். அருகில் இருந்தும் ஒருமுறைதானும் சூரியகுமாரை அவர்கள் வந்து பார்க்கவில்லை. ஒரு தடவை சூரியகுமார் அவர்களின் வீட்டிற்குச் சென்றபோது, “அண்ணா இந்தக் கிழமை வீட்டுக்கு வரேல்லை” என்று சொல்லி வாசலில் வைத்து திருப்பி அனுப்பிவிட்டார்கள்.

கடிதத்தைப் பார்த்ததும் அவன் பரவசமடைந்ததுக்குக் காரணம் மாமியின் சமையல் பக்குவம். நல்ல உணவு சாப்பிட்டு எவ்வளவு நாட்களாகிவிட்டன. மாமியார் `கறார்’ பேர்வழி என்றாலும் சாப்பாட்டில் குறை வைப்பதில்லை. அவர் பூமியில் இருக்கும் எவருடனும் வார்த்தைகளை எண்ணி நறுக்காகத்தான் கதைப்பார். தனது கணவர், பிள்ளைகள் என்று அதிலிருந்து விலக்கு வைப்பதில்லை.

`கல்யாண சமையல் சாதம், காய் கறிகளும் பிரமாதம், அந்த கௌரவப் பிரசாதம்,

இதுவே எனக்குப் போதும்.’  - நாளைய `தேவாமிர்தத்தை’ நினைத்து சூரியகுமாருக்கு குளிக்கும்போது பாட்டு வந்தது. குளிப்பு முடிந்ததும் சிறிது நேரம் இளைப்பாறினான். ரீவி பார்த்தான். இன்னமும் நண்பர்கள் வீடு வந்து சேரவில்லை. இரவு ஏழு மணிக்குள் நண்பர்கள் வீடு வந்து சேர்ந்தால், அவர்களுடன் இரவுப்பாட்டைப் பார்க்கப் புறப்பட்டுவிடுவான். இன்று நண்பர்களுடன் சேர்ந்து உணவு உண்ணும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. திரும்பவும் உடையை மாற்றிக்கொண்டு வெளிக்கிழம்பினான். இம்முறை பிக்கறிங்ஸ் வீதியில் வலது புறமாகத் திரும்பிக் கொண்டான். மாரியம்மன் கோவிலுக்கு எதிர்ப்புறமாகவுள்ள ஸ்ரீ வைஷ்ணவி விகாரில், பிட்டு சொதியும் சம்பலுடனும் சாப்பிட்டான். தக்காளி போட்ட பால் சொதி வெகு ஜோராக இருந்தது. பிழிஞ்ச தேங்காய்ப்பூ என்றாலும் இஞ்சி போட்ட சம்பலுக்கும் குறைவில்லை. என்னதான் இருந்தாலும் அம்மாவின் சமையல் பக்குவத்துக்கு எதுவுமே ஈடாகாது. அம்மாவின் சாப்பாட்டில் ஊறி வளர்ந்தவனுக்கு, கடைச்சாப்பாடு அல்ல… எந்தச் சாப்பாடுமே ஒத்துவர மறுத்தது. அம்மா, மாவை வறுத்து இடியப்பம் பிட்டு செய்து தருவார். வாசம் நாலு தெருவுக்கும் மணக்கும். பிழிச்ச தேங்காய்ப்பூவில் சம்பல் செய்யமாட்டார். ஊரில் குளிர் காலங்களில் அடுப்பெரிக்க விறகு தேடுவதும், விறகு இருந்தாலும் ஒரு நீர்த்தன்மை கோர்த்திருந்து எரியமாட்டேன் என அடம்பிடிப்பதும், அம்மா ஊதுகுழலால் பூ… பூ… என ஊதுவதும் தினமும் அவன் மனக்கண் முன் நிழலாடும்.

சாப்பிட்டு முடிய நேரே வீட்டிற்குத் திரும்பிவிட்டான். வாரநாட்களில் மரத்திலே கட்டிய ஆட்டைப் போல எல்லை தாண்டுவதில்லை. சனி ஞாயிற்றுக்கிழமைகளில் - நண்பர்களை தரிசிக்கவும், நல்ல சாப்பாட்டை நாடியும், சினிமாவுக்கும் என எல்லை கொஞ்சம் விசாலிக்கும்.

மூன்று மாதங்களுக்கு முன்னர் தான் சூரியகுமார் ஊருக்குப் போய் வந்தான்.

அம்மா… அவனுக்கொரு பெண் பார்க்கப் பட்ட பாடு!

கடந்த இரண்டு வருடங்களாக கொழும்பு வாசியாகி துறைமுகத்தில் பணியாற்றத் தொடங்கியபின் சூரியகுமார் ஊருக்குப் போகவில்லை. தமிழ்ப்பணியாளர்கள் ஊருக்குப் போய் வருவதை துறைமுக நிர்வாகம் அவ்வளவாக விரும்புவதில்லை. ஏதோ தொழில் இரகசியங்களை பரிமாறிவிடுவார்கள் என்ற பயம்.

வேலை நிரந்தரம் என அறிந்ததும், அம்மா அவனுக்கு திருமணம் பேசத் தொடங்கிவிட்டார். பெண்களின் புகைப்படங்கள் தபாலில் வரும். அம்மாவுக்கு மொபைல்போனிற்கு படங்கள் அனுப்பும் தொழில்நுட்பம் கைவரவில்லை. அவனுக்கு வரும் புகைப்படங்களை அவன் பார்ப்பதைக் காட்டிலும் நண்பர்கள் அதில் கூட நேரம் மினைக்கெடுவதைக் கண்டதும், அம்மாவை இனிமேல் புகைப்படங்கள் அனுப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டான்.

கடிதப் போக்குவரத்தால் எதுவுமே ஆகாது எனத் தெரிந்துகொண்ட தாயார், எல்லாரையும் போலவே, `அப்பாவுக்குச் சுகமில்லை. கதைக்க முடியாத நிலையில் இருக்கின்றார். உடனே வா’ என்று சொல்லிவிட்டார். வீட்டுக்குப் போனதும், `சாதகப்பொருத்தம் எல்லாம் பார்த்துவிட்டோம். இந்த மூண்டு பெட்டையளிலை ஒண்டைப் பாத்துச் சொல்லு’ என அப்பா சொல்ல, அம்மா நாண்டுகொண்டு நின்றார். ஒரு கிழமை லீவில் போன சூரியகுமார், `சொல்லுறேன்… சொல்லுறேன்’ என்று நாளைக் கடத்திக் கொண்டிருக்கையில், திடீரென ஒருநாள் ஒரு பெண் சைக்கிளில் விண் கூவும் சத்தத்தில் அவனைக் கடந்து விரைந்து போனதைக் கண்டான். எட்டிப் பார்ப்பதற்கு முன்னால், அண்ணி பாவனாவின் வீட்டுக்குப் பக்கத்தால் போகும் ஒழுங்கைக்குள் சைக்கிளை உன்னியவாறே வேகமாக மறைந்து போனாள். கணப்பொழுதுதான். துரத்திக் கொண்டே சென்றதில், மின்னல் அடித்ததைப் போல அவள் போன பாதையில் `வருஷம் 16’ குஷ்பு தெரிந்தாள். குஷ்பு இறுக்கமான முக்கால் ஜீன்ஸ்சும், வழவழப்பான துணியில் பூப்போட்ட சட்டையும் அணிந்திருந்தாள். சின்ன வயதில் அவளைக் கண்டிருக்கின்றான். அகிலா இப்படி மொழுப்பாக வளர்ந்திருப்பாள் என்று நினைக்கவில்லை.

ஊருக்குள் சைக்கிள் வெட்டுக் காட்டிக்கொண்டு நண்பிகளுடன் ஓடித்திரிந்த அவளின் சாதகத்தைத் தேடிப் பிடித்தார்கள். அகிலாவின் சாதகம் சூரியகுமாரின் சாதகத்துடன் அச்சாவாகப் பொருந்திக் கொண்டது.

அகிலா அண்ணிக்காரிக்குக் நெருங்கிய இரத்த உறவுச் சொந்தம். அண்ணிக்காரியின் அப்பு (தாத்தா) அகிலாவின் வீட்டில் தான் அடுகிடை படுகிடையாக இருப்பார். காலையில் அகிலாவின் வீட்டுக்குப் பேப்பர் படிக்கப் போய்விடுவார். அகிலாவின் தாயாரின் தேநீர் சுவையில் சொக்கிப் போவார். பெரும்பாலான இரவுப் பொழுதுகளில் அப்புவின் பொழுதுகள் அங்கேதான் கரையும். ஊராவீட்டுப் புதினங்கள் பேசி, இரவுணவும் முடித்துக் கொண்டுதான் தாத்தா அங்கிருந்து கிழம்புவார். அண்ணி கொழும்பு வாசியானதும், ஊரில் வீடு வளவுகளைப் பார்ப்பது அப்பு. அப்புக்கு ஏதாவதொண்டென்றால் அவரைப் பார்ப்பது அகிலா குடும்பம்.

கட்டிலில் புரண்டபடியே, ஒரு தேவதைக்கான காத்திருப்புடன் அகிலாவின் சமையல் பக்குவம் எப்படி இருக்கும் எனக் கனவு கண்டான் சூரியகுமார்.

இப்போதைக்கு நல்லதாகவே இருக்கட்டும் என அவன் மனம் எண்ணிக் கொண்டது.

இன்னும் பதினாறு மணித்தியாலங்கள் அண்ணா குடும்பத்தினரைச் சந்திக்கக் காத்திருக்க வேண்டும்.

2

மேசையில் காகிதக் கைக்குட்டைகள் அழகழகாக மடித்து வைக்கப்பட்டிருந்தன. நீர் நிரப்பப்பட்ட குவளைகள் வரிசையாகப் பளிங்கு காட்டின. அண்ணிக்கு நன்றாகச் சமைக்கத் தெரியாவிட்டாலும், இப்படியான வேலைகள் செய்வதில் கெட்டிக்காரி.

இரண்டு குழந்தைகள், ஆணும் பெண்ணுமாக அம்மாவை ஒட்டியபடி நின்றார்கள். டைனிங் ரேபிளுக்கு சற்றுப் பதிவான உயரத்தில், அழகான ஆடைகள் அணிந்தபடி தாயைப்போல மூக்கும் முழியுமாக நின்றார்கள். சூரியகுமார் `வாருங்கள்’ என கை நீட்டிக் கூப்பிட்டபோது, அவர்கள் மேலும் தாயின் சட்டைக்குள் போய் ஒளிந்து கொண்டார்கள். குழந்தைகளுக்கு ஏதாவது பரிசுப்பொருட்கள் வாங்கிச் செல்லவில்லையே என்ற கவலை அவனுக்கு வந்தது. சூரியகுமாரும் சத்தியகுமாரும் எதிர் எதிர்க்கதிரைகளில் இருந்து கொண்டார்கள்.

“பாவனா… நீயும் இரன்,” என்றார் மாமி.

“இல்லை அம்மா… குழந்தையள் கரைச்சல் பண்ணும்.”

“அப்பாவிட்டைக் கொண்டுபோய் விடு. கொஞ்ச நேரம் பாத்துக் கொள்ளட்டும்.”

பாவனாவின் தந்தை ஒருபோதும் வெளியே வரமாட்டார். அவர் ஒரு `ஜென்ரில்மன்’. வெளியே வந்து நாலு மனிதருடன் கதைப்பது அவருக்குக் கெளரவக் குறைச்சலைக் கொடுத்துவிடும். அவர் என்ன தொழில் புரிகின்றார் என்று ஊரில் ஒருவருக்கும் தெரியவில்லை. கேட்டால், வாயில் நுழையாதபடி ஒரு ஆங்கில வார்த்தையைச் சொல்லுவார். கேட்டவரும், `அப்பிடியா’ என்று வாய் பிழப்பார். அப்படியானதொரு வேலை உண்மையில் உண்டா என்பது சொன்னவருக்கும் தெரியாது கேட்டவருக்கும் புரியாது. பாவனா குழந்தைகளைத் தள்ளிக்கொண்டு உள்ளே போனாள். வரும்போது அவித்த முட்டைகள் கொண்ட தட்டு ஒன்றைக் கொண்டுவந்து, அதில் ஒன்றைச் சூரியகுமாரின் சோற்றுக்குள் புதைத்துவிட்டு, தட்டை மேசையின் நடுவில் வைத்தாள். பின்னர் எதிரே போய் கணவனுடன் ஒட்டி இருந்து கொண்டாள். சத்தியகுமார் நிமிர்ந்து பாவனாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு உதட்டளவில் சிரித்துக் கொண்டார்.

“அப்ப… சொல்லும் தம்பி…” என்றபடியே உணவைப் பரிமாறத் தொடங்கினார் மாமியார்.

“ஊருக்குப் போய் வந்தனீராமே! என்ன விசேசம்?”

“அம்மா… சாப்பிட விடுங்கோ முதலிலை….” என்றார் பாவனா. மாமியார் நிமிர்ந்து அண்ணியைப் பார்க்க, அண்ணி தன் முட்டைக்கண்ணால் ஒரு சிமிட்டுச் சிமிட்டினார்.

சிறிது நேரம் மூன்றுபேரையும் சாப்பிடுவதற்கு அனுமதித்தார் மாமி. மாறி மாறிக் கறிகளைப் பரிமாறினார். உள்ளி, மிளகு குத்திப்போட்ட பூசணிக்காய்க்கறி, உருக்கிவிட்ட நெய்யின் வாசனை கமிழ்க்கும் பருப்புக்கறி, `லெமன் கிறாஸ்’ அரைச்சுப்போட்ட கோழிக்குழம்பு, கத்தரிக்காய் வெள்ளைக்கறி, பயத்தங்காய் கூட்டுக்கறி, புடலங்காய் வறுவல், மீன் பொரியல், அப்பளம், கம்மென்று ஆளையே தூக்குத் தூக்கும் இரசம்… - `இந்த கௌரவப் பிரசாதம், இதுவே எனக்குப் போதும்’ என சுவையுள் அமிழ்ந்து ஆனந்தமாக உணவை உண்ணத் தொடங்கினான் சூரியகுமார்.

“தம்பி… நீங்களாப் போய்க் கேட்டனியளோ அல்லது அவையா வந்தவையோ?” அதுவரை ஆழம் பார்த்துக்கொண்டிருந்த மாமியார் கணீரென்று கேட்டார்.

சூரியகுமாருக்கு எல்லாமே புரிந்துவிட்டது. விருந்து வைத்து விஷயமறியப் பார்க்கின்றார்கள். எட்டு மாதமாக எட்டியே பார்க்காமல் இருந்தவர்கள். திடீரென விருந்திற்குக் கூப்பிட்டதன் மர்மம் மெல்ல மெல்லத் துலங்கியது.

“நாங்கள் தான் போய்க் கேட்டம்.”

“அப்பென்ன லவ்வோ?”

சூரியகுமார் தலையை இடமும் வலமும் ஆட்டினான். ஒருவித சங்கடமான புன்னகையை வெளிப்படுத்தினான்,

“தம்பி விரும்பிட்டார் போல…”

சத்தியகுமார் மெதுவாக மேசையில் இருந்து எழும்பிக் கொண்டார். கை கழுவப் போகும் சாட்டில் வீட்டுக்குள் போய் ஒழித்துக் கொண்டார்.

பாவனா ஒரு வாத்தியைத் திருமணம் செய்வதில், அவரின் பெற்றோருக்கு எப்போதுமே விருப்பம் இருந்ததில்லை. ஒரு டொக்ரரையோ இஞ்சினியரையோ கட்டி வைப்பதில் தான் பெற்றோரின் நாட்டம் இருந்தது. பாழாய்ப்போன காதல், படிப்புச் சொல்லிக்குடுக்க வந்த வாத்தி மேலேயே விழுந்துவிட்டது. கடைசியில் மகளின் பிடிவாதமான காதல் ஜெயித்துவிட்டது.

“அதுதானே பாத்தன். மூண்டு இடத்திலை சயன்ஸ் படிக்கப் போயும் சயன்ஸ் பாடம் பெயில். அவைக்கு இஞ்சினியர் மாப்பிள்ளை தேவைப்படுதோ? ஓமெண்டு சொன்ன வாயைப் பிடிச்சுக் கிழிச்சுப் போடமாட்டன். படிச்ச, புத்திசாலிப் பெண்ணை மரி பண்ணினா மூளையுள்ள குழந்தைகள் பிறக்கும். தம்பி உமக்கு மொக்குக் குழந்தையள் பிறக்கிறது பிடிக்குமோ அல்லது…”

எதிரே இருந்து உணவருந்திக் கொண்டிருந்த ஒரு `மொக்கு’ தலையை நிமிர்த்தி சூரியகுமாரைப் பார்த்துவிட்டுக் குனிந்து கொண்டது. பாவனா பத்தாம்வகுப்புப் பரீட்சையில் சித்தியெய்தியவள். அதற்கு மேலே அவருக்குப் படிப்பு நகரவில்லை. ஆனால் அகிலா உயர்தரம் `கொமேர்ஸ்’ படித்தவள்.

இதையெல்லாம் கதைத்து வாக்குவாதத்தை வளர்க்க சூரியகுமார் விரும்பவில்லை. ஒருவேளை உணவைக் குடுத்து வாழ்க்கையை விலை பேசுபவர்கள் முன்னால் எதைப் பேசுவது என்ற நிலையில் இருந்தான் அவன். இப்பொழுது சாப்பாட்டைச் சுவைத்துச் சாப்பிட மனம் ஏவவில்லை. கவளம் கவளமாக உருட்டி வலிந்து விழுங்கத் தொடங்கினான்.

“உம்முடைய அண்ணாவுக்கு இந்தக் கலியாணம் சுத்தமாப் பிடிககேல்லை!”

“….”

“இதையெல்லாம் போய் அவையளிட்டைச் சொல்லுறதில்லைத் தம்பி. யோசிச்சு முடிவு எடும்.”

இன்று சூரியகுமாருக்கு சபிக்கப்பட்ட தினம். அதிர்ச்சியில் பேச்சிழந்து போனான் சூரியகுமார்.

“என்ன சத்தத்தைக் காணேல்லை…”

“சாப்பாடு ருசி… ரொம்பப் பிரம்மாதம்…” சூரியகுமார் சொல்ல மாமியார் சிரித்தார்.

அவன் உம்மாணாமூஞ்சியாக பிடிகொடாமல் இருந்தது அண்ணிக்காரிக்கு எரிச்சலைக் கொடுத்திருக்க வேண்டும். சூரியகுமாரை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.

“அப்ப நான் வரப்போறன்,” சூரியகுமார் சொல்ல, “ஐஸ்கிரீம் சாப்பிட்டிட்டுப் போகலாம்” என்றார் பாவனா.

“எனக்கு ஐஸ்கிரீம் ஒத்து வராது.”

“அப்ப அண்ணாவிட்ட சொல்லிப் போட்டுப் போறது. இருங்கோ… நான் அண்ணாவைக் கூட்டிக்கொண்டு வாறன்…”

உள்ளே போன பாவனா, இரண்டு பிள்ளைகளுடனும் துருப்புச்சீட்டாக ஒரு புகைப்படத்துடனும் திரும்பி வந்தார்.

“அண்ணா ரொயிலற்றுக்கை இருக்கிறார். இந்த போட்டோவிலை புளூ கலர் ஹாவ் சாரியோடை நிக்கிற பிள்ளையைப் பாக்கட்டாம். இடது பக்கக் கடைசியிலை நிக்கிற பிள்ளை. உமக்குத் தெரியும். பள்ளிக்கூடத்திலை உமக்கு இரண்டு வகுப்புக் கீழை படிச்சவா. விருப்பம் எண்டாச் சொல்லுங்கோ… நாங்கள் எல்லாத்தையும் பேசி முற்றாக்கிறம். கொழும்பிலை வீடு தருவினம்…” அண்ணி பாவனா படத்தைக் குடுத்துவிட்டு திரும்பவும் உள்ளே போனார்.
புகைப்படத்தில் மோகனா நின்றாள். பள்ளிக்கூடத்திலே அவள் தான் கொள்ளை அழகு. நல்லா நடனமும் ஆடுவாள். அதுக்காக…

மாமியார் ஹோல் வாசலில் நின்று சிறிது நேரம் வரை சூரியகுமாரை உற்றுப் பார்த்துவிட்டு, அவரும் மகளைத் தொடர்ந்து உள்ளே போனார்.

இதுதான் தருணமென்று மெதுவாக இருக்கையை விட்டு எழுந்தான் சூரியகுமார். முன் கதவு திறந்து கிடந்தது. ஓசைப்படாமல் வெளியேறிவிட்டான்.

வீட்டில் இருந்து வெளியேறும் வரைக்கும், சிறுநீரை அடக்கி வைத்திருப்பது போல அடக்கி வைத்திருந்த சத்தி, குமட்டிக்கொண்டு வர தெருவெல்லாம் நாறல் கோலம் போட்டது.

மூன்றுமணியளவில் சூரியகுமாருக்கு அம்மா ரெலிபோன் செய்தார்.

“எப்பிடி சாப்பாடு இருந்தது மகனே!”

“தேவர்களும் அசுரர்களும் கடைந்தெடுத்த தேவாமிர்தம் போல இருந்தது அம்மா!”

“அவள் வாசுகி… சமைக்கிறதிலை பயங்கரக் கெட்டிக்காரியடா…”

அந்தப் பாம்பு விஷம் கக்கியதையும், தேவகன்னிகை மோகினியை அங்கே நடனமாடவிட்டதையும் சூரியகுமார் தனது அம்மாவுக்குச் சொல்லவில்லை.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.