சந்திரன் பஸ்சால் இறங்கி சுற்றுமுற்றும் பார்த்தான் வீதியின் பெயரைக் காணவில்லை. சந்தியிலிருந்து பெரியவீதியால் நடந்து திரும்பி உள்ளே போகும் சிறு வீதியாயிருக்கலாம் அதுதான் பெயர் கண்ணிற் படவில்லை போலும். கைத்தொலைபேசியை எடுத்து மகன் சொன்னதின்படி கூகுளினுள் நுழைந்து மப்பைப் போட்டு அந்த மூதாட்டி கொடுத்த முகவரியை பதிந்து தேடினான். இடதுபக்கம் திரும்பு நட... முதலாவதுவலது திரும்பு,, நட... கூகிளுக்குள்ளிருந்து பேசும் பெண் குட்டியின் குரல் கரம்பற்றி வழி நடத்த நடந்தான். குட்டிநாய் புதிய இடத்திற்கு வந்திருந்ததால் அது குதூகலத்தோடு துள்ளிக்குதித்து அங்குமிங்குமாய் இடம் வலமாய் இழுத்து அலைக்கழித்துக் கொண்டிருந்தது. டேய் மணி... இஞ்சாலவா...  டேய்.சக்... குரலுயர்த்தி கழுத்துச்சங்கிலியை இழுத்துக்குறுக்கி காலடிக்குள் கொணர்ந்தான்.

ஒரு சந்தியிலிருந்து பிரியும் ஒழுங்கையில் நாட்டியிருந்த பெயர்ப்பலகையை உற்றுப்பார்த்தான் "நாய் பயிற்சியகம்" என எழுதப்பட்டிருந்த வாசகம் நம்பிக்களித்தது. ஓகே கண்டுபிடிச்சாச்சு நிமிர்ந்து நடையை விரைவுபடுத்தினான்.

இப்பிடித்தான் முப்பது மூன்று வருடங்களுக்கு முன்பு யேர்மனியிலிருந்த காலத்தில் ஒருகிராமப்புறத்தில் அவன் தோட்டவேலை தேடிச்சென்ற பாதையில் "நாய்ப்பண்ணை" என்ற பெயர்ப்பலகைப் பார்த்து அடகடவுளே நாய்களிற்கும் பண்ணையிருக்கா இந்தநாட்டில, பிரமித்து வியந்திருந்தான் அப்போது.  இப்போ நாய்ப்பள்ளிக்கூடத்தைக்கண்டு அதிர்ச்சியடைந்திருக்கின்றான்.

விதம்விதமான நாய்களின் படங்களைப்போட்டு விளங்கப்படுத்தி நாய் பயிற்சியகம் என எழுதப்பட்டிருந்த அறிவித்தல்ப் பலகையைக்குக்கீழேயிருந்த கதவை தள்ளித்திறப்பதா இழுத்துத்திறப்பதா. தள்ளியும் இழுத்தும் பார்த்தான். திறபட்டது. தள்ளும்போது திறபட்டா இழுக்கும்போது திறபட்டதா தெரியாது திறபட்டதே போதுமானதாகவிருந்தது. மனம் பதட்டபட்டுக்கொண்டிருந்தது. எப்படிக்கதைப்பது எதிலிருந்து தொடங்குவது பக்கத்து வீட்டுப்பெண்மணி கூறியதையும் மகன் சொல்லிக்கொடுத்ததையும் கூட்டிச்சேர்க்கையில் தெரிந்தவார்த்தைகளாகவே இருந்தன.எப்பிடியிருந்தாலும் நாய்க்குட்டிக்கு தன்னிலும்பார்க்க பிரெஞ்சு விளங்கும் என்ற திடம் அவனுக்குள் உற்சாகமளித்தது.

மகன் வேலைக்கு போகத்தொடங்கி சிலமாதங்கள்தான் ஏதாவது பிராணிவளர்க்கவேண்டுமென்ற ஆசை. வீடுகளில் நாய் பூனை முயல் சிறுகுருவிகள் போன்றனவற்றை வளர்ப்பதற்கு வசிப்பவர் யாவற்குமுரிமையுண்டு.சந்திரன் வசிப்பது வாடகைவீடாகிலும் சிறியரக நாய் பூனைகள் மட்டும் வளர்ப்பதற்கு இந்நகரத்தில் அனுமதியுண்டு. மகன்ஆசைப்பட்டானென்று சுத்தம் சுகாதாரம் அது இதுவென சொல்லி மறுத்து தயங்கி மயங்கி ஒருவாறு குட்டிநாய் வளர்க்க அம்மா அப்பா உடன்பட்டனர். ஒருநாள் கூகிளுக்குள் நாய்வாங்கும் பகுதிக்குள் தேடுதல் நடத்தி இடத்தைக்கண்டுபிடித்து குட்டிநாயொன்றை வாங்கிவந்தான். நாய்க்குட்டியை விற்றவர் இவர்கள் வந்தேறுகுடிகள் என்பதால் நாய்வளர்ப்புபற்றிய ஆலோசனைகளையும் நாயின் குணாம்சங்களையும் எடுத்தியம்பி நாயின் பிறப்பத்தாட்சி, சுகாதார அட்டை, வளர்ப்பிற்கான அனுமதியட்டை போன்ற ஆவணங்களுடன் பராமரிப்புமுறைகளடங்கிய கையேடொன்றையும் வழங்கி உணவுகொடுப்பது, தடுப்பூசி, மருந்துமாத்திரை அது இதுவென சகலவிதிமுறைகளையும் சொல்லி அனுப்பிவைத்திருந்தனர்.

வீட்டிற்கு கொண்டுவந்தநாளிலிருந்து நாய் அதிகம் பேசத்தொடங்கியது.சந்திரன் குடும்பத்தினரைப்பார்த்து உரத்து சிரித்தது.கடிக்காததுதான் குறை.  மற்றும்படி நாய் தாறுமாறாக கோபப்பட்டு ஏசியது. இவர்களைப்பிடிக்கவில்லையா அல்லது இடம் பிடிக்கவில்லையாவெனத் தெரியாது. உரத்துக்குரைத்து அயலவற்கு இடைஞ்சலாகவிருந்தது. காலநேரமின்றி உரையாடும் பாணியில் குரைத்துக்கொண்டிருந்தது. நாய்க்குட்டி இவர்களையும் இவர்கள் நாய்க்குட்டியையும் புரிய நாளாகுமெனவும் பழகப்பழக எல்லாம் சரியாகிவிடுமென்றிருந்தனர்.

இவர்கள் நாயின் குணமறிந்து, மனமறிந்து செயற்படும் வேகத்தைக்காட்டிலும் விரைவாக, எளிதாக நாய் இவர்களைப்புரிந்துகொண்டது. வீட்டாரின் பண்பையும் மனதையும் குணநலன்களையும ஸ்க்கான் செய்து அது தனக்குள் பதிவேற்றிவிட்டிருந்தது. சந்தர்ப்பங்களையும், பாவங்களையும், தேவைகளையும் வைத்து வீட்டாருடன் புரிந்துணர்வோடு பழகலானது. சகமனிதனை வாழ்நாள்முழுக்க புரிந்துகொள்ளவியலாத இவர்களால் நாய்க்குட்டியை புரிந்துகொள்வது ஓரளவு இலகுவாயிருந்தது. நாய்க்கு மொழிதேவைப்படவில்லை. சமிக்கைகளே மொழியாகியிருந்தன.

நாய் ஒண்டுக்குரெண்டுக்கு வெளியேபோகும் நேரகாலத்தை அதுவாகவே தீர்மானித்து இவர்களை அழைத்துச் செல்லும்.நாயை மனிதர்கள்நடமாட்டமற்ற வீதியோரங்களிற்கோ அன்றி சற்று தொலைவான இடங்களிற்கு கூட்டிச்செல்லவேண்டும் இல்லையாயின் நாய் மலத்திற்கு தண்டம் கட்டநேரிடும். தினமும் காலைமாலை வேளைகளில் சந்திரனுக்கு நல்ல நடைப்பயிற்சியாகவுமிருந்தது.  ஓய்வூதியத்திலிருந்து சாப்பிட்டுச்சாப்பிட்டு ரீ வி நாடகங்களைப்பார்த்து நோயாளியாகாமல் நாளாந்தம் சீரான அட்டவணையில் இயங்க நாய் சந்திரனுக்கு பயிற்சியாளனாகியது.  நாய் வளர்ப்புபற்றி எதிபார்த்துப் பயந்ததுபோலன்றி கையாள்வதில் சிரமமிருக்கவில்லை, ஆனாலும் அதற்கிடையில் பக்கத்துவீட்டு மூதாட்டி அவசரப்பட்டு விட்டாள்.

"உன்ரநாய் ஏன் எந்தநேரமும் குரைத்துக்கொண்டிருக்கு. நாய்க்கு சாப்பாடுகுடு உனக்கு நாய் வளர்க்கத்தெரியாதா உன்ரநாய் எனக்கு இடைஞ்சலாயிருக்கு. நீ ஏன் நாய்வளர்க்கிற."

"நாய் கத்துந்தான,அது இசை மீட்காது"  சந்திரன் தனக்குத்தெரிந்த பிரெஞ்சுமொழியில் பதிலிறுத்தான்.

கிழவி கோப்ப்பட்டாவளாய்  "உனக்கு விசர்"

"நீயொரு நாய்" கடிந்தாள்.கடித்தாள்.

கிழவி வெள்ளை நிறந்தான் ஆனால் அவள் பிரெஞ்சுக்காரியில்லை.  அவளும் வந்தேறு குடியாகத்தானிருப்பாளென அவளது பிரெஞ்சு உச்சரிப்பிலிருந்து புரிந்துந்துகொணடாலும் கூடக்கதைச்சால் அவளும் கதைப்பாள்.  பிறகு பொலிசுக்கு போன்பண்ணினாளெண்டால் பொலிஸ்வந்து அவளின்ர பக்கம்தான் கதைப்பான். அவள் என்ன நாய் எண்டுறாள். மனதிற்குள் கடிந்துகொண்டு நானும் கதைப்பன் ஏன் வம்பு. சும்மா பேசாமலிருப்பம். மகன் வரட்டும் வந்து கதைப்பான்தானே அப்ப அவ வாங்குவா.

பக்கத்து அறை மூதாட்டிக்கு கணவன்இல்லை.  பிள்ளைகளும் பிரிந்து அவரவர் பாதையில் போய்விட்டனர் .தனியாகத்தான் வாழ்ந்துவருகிறாள். ஐரோப்பாவில் தனித்துவாழ்பவர்கள் தம் தனிமையின் கொடுமையைப்போக்க அன்புவைக்க நேசிக்க ஆதரவாகப்பேசி கொஞ்சிக்குலாவ உயிர்த்துணையொன்று தேவைப்பயாகவிருந்தது. நாய் , பூனை.  முயல் , குருவி போன்ற ஏதாவது உயிரினங்கள் வளர்ப்பது தனிமை வாழ்விற்கு அவசியமானதாகவிருக்கின்றது. இதுஐரோப்பியர்களுக்கு மட்டுமல்ல இன்று அகதிமனிதனாகவந்து வளர்ச்சியடைந்திருக்கும் எம்தமிழ்சமூகங்களினது வாழ்வும் பிறழ்வடைந்து பிளவுபட்டுப்போய் உறவுகளுடன் வாழ்தல் என்பது தயாரிப்புப்பொருளாகிவிட்டது.  அன்பு வைத்து ஆதரிக்க ஆரவணைக்க ஆள் தேடும் காலமே நம்கண்முன்விரிந்துகிடக்கின்றது,

மகன் வந்ததும், சந்திரன் மூதாட்டியுடனான உரையாடல்களை விபரித்தான். சந்திரன் தான் கிழவியை கோபப்படுத்தியதால் கிழவியோடு  சண்டபிடிக்காதது மெதுவாப்  பண்பாகக்கதை சொல்லியனுப்பினான்.

மகனின் நியாயமான பேச்சையும் தர்க்கத்தையும் ஏற்று கிழவி போபந்தணிந்து நாய்க்குட்டியை நல்ல பழக்கவழக்கங்களை கற்றுக்கொடுக்கும் நாய்ப்பள்ளிக்கூடத்திற்கு கொண்டுபோய் காட்டும்படி முகவரியைக் கொடுத்தனுப்பியிருந்தாள்.  மறுநாள் மகன் வேலைக்குச்செல்லவிருப்பதால் தந்தையிடம் முகவரியைக்கொடுத்து அங்கு என்னென்ன கேள்விகள் கேட்பார்கள் எப்படிப்பதில்சொல்வது என எல்லாவற்றையும் விளங்கப்படுத்தியிருந்தான்,

நாய்ப்பயிற்சியகத்தினுள் நுழைந்ததும் ஒருவெள்ளைநபர் விரைந்துவந்து வரவேற்றான்.  வெள்ளையர்கள் மட்டும் வந்துபோகுமிடத்தில் ஒருகறுப்பு மனிதன் வந்திருக்கின்றான்.  இவனும் நாய்வளர்க்கிறானா அல்லது இடம்மாறி வந்திருக்கின்றானா என வியப்புடன் "ஏன் வந்தாய் நாய்க்குப் பிரச்சினையா"  என்று சந்திரனுக்கு விளங்கும் இலகுமொழியில்க்கேட்டான் . ஆம் என்றதும் உள்ளே அழைத்துச்சென்றான்.
ஆவணங்கள் யாவற்றையும் வாங்கி கணினியில்ப்பதிவேற்றிவிட்டு கேள்விகளைக்கேட்கலானான்.

"நாய் எந்த நேரம் அதிகம் குரைக்கிறது"

"பகலிலா, இரவிலா குரைக்கிறது, வேறு ஆட்களைக்கண்டு குரைக்கிறதா"

"பயந்து குரைக்கிறதா"

"பசியில் குரைக்கிறதா"

''மகிழ்ச்சியில் குரைக்கிறதா"

"என்னசாப்பாடு குடுக்கிறநீங்கள் எப்ப குடுக்கிறநீங்கள்"

"உங்கட சாப்பாடு குடுக்கிறநீங்களா உறைப்பு குடுக்கிறநீங்களா"

ஏவுகணைகளாக வந்துவிழும் கேள்விகள் தாக்க திக்குமுக்காடியே பதிலிறுத்தான் மனதிற்குள் சிரிப்பை அடக்கிக்கொண்டு.

இறுதியாக "நாய்க்குட்டிக்கு குரைக்கிறது ஒரு வருத்தமில்லை, பராமரிப்பு சரியாகத்தான் செய்திருக்கிறீங்க நீங்கள் நாயை இங்கே விட்டுவிட்டு செல்லுங்கள் இரண்டுவாரம் கழித்து வந்து எடுத்துச்செல்லலாம்" முகவரி அட்டையைக் கொடுத்து "இந்த இலக்கத்திற்கு போன்செய்து உங்கள் மகனைக்கதைக்கச்சொல்லவும் நன்றி நல்லநாளாகட்டும் போய்வாருங்கள் அடுத்தமுறை சந்திப்போம்"

சந்திரன் மனநிறைவோடு வெற்றிப்பெருமித்துடன் வெளியேறினான்>  தனக்குள் சிரித்துக்கொண்டேதொலைபேசியை எடுத்து மனைவிக்கு அழைப்பெடுத்து "கலோ சசி,,, மணி யை பள்ளிக்குடத்தில சேத்தாச்சு" மனைவியும் மகிழ்வோடு "என்னப்பா பேரப்பிள்ளைய சேர்த்துவிட்டமாதிரி பெருமிதத்தோட கதைக்கிறீங்க,,, என்ன பகிடி விடுகிறீங்களா" " பெரிய பகிடியப்பா வீட்டவந்து சொல்லுறன்"

பலவருடங்களுக்கு முன் அவன்மனைவி ஒருபிரெஞ்சுப்பெண்மணி வீட்டில் வேலைகாரியாக பணிசெய்தபோது. வீடுகூட்டி,  மப் பண்ணி, துடைத்து, உடுப்புகளை வோசிங்மெசினில்ப்போட்டு கழுவி ,உலர்த்தி அயன்செய்து, மடித்துவைத்து மளிகைக்கடைக்குப்போய், சாமான்கள் வாங்கிவைத்து வளர்ப்பு  நாயை ஒண்டுக்கு ரெண்டுக்கு வெளியே கூட்டிக்கொண்டு போன அனுபவங்களை மனைவியூடாக தெரிந்து வைத்திருந்தும் மனதினுள் ஒருவித முரண்தயக்கம் சங்கடப்படுத்திக்கொண்டிருந்தது.

பிள்ளைகளை பள்ளிக்குடத்திற்கு கூட்டிக்கொண்டு போனகாலம்போய் பேரப்பிள்ளைகளை பாடசாலைக்கு கொண்டுபோய்விட்டு திருப்பிக்கூட்டிக்கொண்டுவாற வயதில இப்ப பிள்ளைகளின் செல்லப்பிராணி நாய்க்குட்டியை பள்ளிக்குடத்திற்கு கூட்டிக்கொண்டு வந்ததை அவனால் கிரகிக்கமுடியாமலிருந்தது. சம்பளத்திற்கு நாய் மேய்த்த நாட்கள் கடந்து இப்போ பொழுதினைக் கழிக்க நாய் நம்மை மேய்க்கும் காலம் வந்திருப்பதை நினைத்து மனதிற்குள் சிரித்துக்கொண்டான். இதை வளர்ச்சி முன்னேற்றமென்று பெருமைகொள்வதா இல்லை இகழ்ச்சியென இகழ்வதா. அவன் தனக்குள்ளே கேள்விகளைக் கேட்டுக்கொண்டான்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.