நீங்கள் என்றவது உங்கள் மாணவப்பருவத்தில் வகுப்பிற்கு முன் முழுங்காலில் நின்றிருக்கிறீர்களா? அதுதான் முட்டுக்கால் போடுவது என்பார்களே.

இல்லை என்பீர்கள். நீங்கள்தான் என்றும் வகுப்பில் முதலாவதாக வந்தவராயிற்றே!

அது சரி, கேட்பவர் எல்லாம் 'நான் வகுப்பில் முதலாவது', 'நான் இரண்டாவது' என்கிறீர்களே தவிர 'நான் இருபத்திமூன்று,' என்று சொல்லதில்லையே. கடைசி வாங்கு மாணாக்கர்களுக்கு என்னதான் நடந்திருக்கும் என நான் எண்ணுவதுண்டு. எங்குதான் சென்று தொலைந்தனரோ? ஒரு வேளை வேற்று கிரகத்து மனிதர்கள் வந்து இவர்களை மூளைச் சலவை செய்ய தொலைதூர கிரகங்களுக்கு கடத்திச் சென்றுவிட்டனரோ?

அதனால் என்ன, இதை வாசிக்க நீங்கள் இருக்கிறீர்களே, அது போதும்.

சரி, விட்ட இடத்தில் இருந்து தொடங்குவோம். வகுப்பிற்கு முன் முட்டுக்கால் போட்டு இருக்கிறேன். முழு மூன்றாம் வகுப்புமே என் மேல் குத்திட்ட கண்களை ஆசிரியர் பக்கம் திருப்பி இப்போது பாடம் கேட்டுக்கொண்டிருக்கின்றது. எமது கணித ஆசிரியர் குருமாணிக்கம் சேர் கையில் பிரம்புடன் கணித வாய்ப்பாடுகள் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருக்கிறார். வகுப்பு பன்னிரெண்டாம் வாய்ப்பாட்டை உச்சத்தொனியில் ஒரு கோரஸாக பாடிக்கொண்டிருக்கின்றன.

"பன்னிரெண்டு அஞ்சி அறுபது.....பன்னிரெண்டு ஆறு எழுபத்தி இரண்டு....பன்னிரெண்டு ஏழு......,." என்று கோரஸ் தொடர்கிறது.

நான் ஏன் முட்டுக்கால் போட்டேன் என்றா கேட்கிறீர்கள்? இந்த ஒன்பதாம் வாய்ப்பாடு இருக்கிறதே.....இதுதான் கணித சாஸ்திரத்திலேயே மிக கடினமானதொன்றாம். கணித மேதை ராமானுஜத்திற்கே இதில் கால் தடுக்கிவிடுமாம். அட, பார்த்தீர்களா.....என்னமாய் ஒரு கணித மேதையையும் என் சோகக்கதையில இணைத்துவிட்டேன்!

எப்படியாவது ஒன்பதாம் வாய்ப்பாட்டை 'ஒன்பது X ஆறு... ஐம்பத்திநாலு' வரை நகர்த்தி ஒப்பித்துவிடுவேன். இந்த 'ஒன்பது X எழு' இருக்கிறதே..... இங்குதான் டேஞ்சர்! குருமாணிக்கம் சார்க்கும் நம்ம 'வீக் பொயின்ட்' தெரியும்.

"கைய நீட்டு " என்பார். 'சுளீர்' சுளீர்' என இருமுறை அவர் கைப்பிரம்பு என்ன பிஞ்சு விரல்களை பதம் பார்க்கும், என் கண்களில் கண்ணீர் முட்டும். இசைஞானி இளையராஜா அங்கு இருந்திருந்தால் தன் கிளரினட்டில் ஒரு சோக டியுன் போட்டு உங்கள் நெஞ்சை உருக்கியிருப்பார்!

குருமாணிக்கம் சேருக்கு இரத்தக் கொதிப்பு. அதனால என்ன அடிச்ச அடுத்த நிமிஷமே தலைய கையால தாங்கி குனிஞ்சிகிணு நிற்கிறார்.

அடுத்து என்ன?...... வகுப்பு முன் மூலையில் முட்டுக்கால் போட்டு பத்து நிமிடம் நிற்க வேண்டியதுதான்.

பத்து நிமிஷம்முடிஞ்சிரிச்சா...மெதுவா எழும்பி வந்து என்னோட பெஞ்சில உட்காருகிறேன். கடைசி வாங்கு அல்லவா? எல்லோரையும் கடந்துதான் வர வேண்டும். பிஃரண்ஸ் எல்லாம் ஏதோ அவனுங்க பி.எச்டி செஞ்சவங்கவாட்டம் என்னை பார்க்கிறதாய் தோணறது. வந்து உட்கார்ந்த அப்புறமும் சில மேதைங்க என்ன பார்த்து சிரிக்கிறானுங்க.

இன்றும் இந்த 'ஒன்பது X எழு' மீது எனக்கு கோபம் கோபமாக வரும். ஆனால் இப்போது அதுபற்றி நான் அதிகம் அலட்டிக்கொள்வதில்லை.

என்னை 'தொழிலதிபர்' என்று வேறு இப்போது பத்திரிகைக்காரனுங்க எழுதத் தொடங்கிவிட்டார்கள்.

ஏ.சி ரூம், பெல் அடித்தால் செகரட்டரி, அறுபது பேர் வேலை செய்யும் கன்ஸ்ட்ரக்‌ஷன் கம்பெனியின் உரிமையாளன் என்றால் சும்மாவா?

என் மேசையின் பின்னால் உள்ள ஷோ கேசில் அடுக்கியிருக்கும் 'மெனேஜ்மன்ட்' புத்தகங்களை பார்த்திருப்பீர்களே? ஒன்றையும் நான் படித்ததில்லை. ஒரு சோடனைதான்! ஒரு நூல் வெளியீட்டு விழாவில எடுத்த போட்டோதான் அந்த மூலையில கோல்ட் பிஃரேமோட இருக்கிறது. பிரதம அதிதி என்று பொன்னாடை வேறு போர்த்தி எடுத்த படமாக்கும்!

"ரிங்..... ரிங்" இன்டர்கொம்ல என் செகரட்டரி அழைக்கிறா.

"யெஸ்"

"சார், பார்த்திபன்ணு ஒருத்தர் வந்திருக்காரு. அவரோட மகனும் கூட வந்திருக்கார். ஏதோ உங்க 'கிளாஸ் மேட்' எங்கிறாரு.....மே ஐ சென்ட் ஹிம் இன்?"

"எஸ்....எஸ்.....செண்ட் ஹிம் இன்"

பார்த்திபனை எப்படி மறக்க முடியும்? என்னோட கூட ஒண்ணாங் கிளாசில இருந்து படிச்சவனாயிற்றே. வகுப்பில முதலாம் ஆள் என்றால் பார்த்திபன்தான். வருடாந்த ஸ்கூல் பரிசளிப்பு விழாவில மேடை ஏறினா எல்லா பாடங்களுக்குமான சர்ட்டிபிகேட்டுகளையும் ஒரு கட்டு புத்தகங்களையும் வாங்கிணுதான் மேடைய விட்டே இறங்குவாணா பார்த்துக்கங்களேன்.

என் ஆபீஸ் கதவு திறந்து வழிவிட நடுத்தர வயது நிரம்பிய பார்த்திபனும் அவர் மகன் என்று மதிக்கத்தக்க வாலிபனும் உள்ளே நுழைகின்றனர்.

"அட, வாப்பா பார்த்தி.....என்ன இந்தப் பக்கம்?"

"உங்களப் பார்க்கத்தான் வந்தன் செல்வராஜன்.....இது என்னோட மகன்."

"என்னப்பா "உங்கள, எங்களணு'....பெரிய மரியாத..... சும்மா ராஜன்ணு சொல்லிட்டா நா என்ன கோவிச்சிக்கவா போறன்?....இரு...இரு....ஆமா....என்னப்பா .....எதாச்சும் ஹெல்ப் பண்ணனும்னா சொல்லு பார்த்தி."

"ஆமா ராஜன், இவன்தான் என்னோட மூத்தமகன் செந்தில். இஞ்சினியரிங் படிச்சு முடிச்ச கையோட எத்தனையே வேலைகளுக்கு அப்ளை பண்ணியாச்சு. ஒண்ணும் சரிவர்ர மாதிரி தெரியல......அதான் உன்னோட கம்பெனியில ஏதாச்சும் ....,.."

"அட, நம்ம பையனுக்கு உதவாட்டி நான் என்ன மனுஷன்? ஏன் தம்பி....ஒரு சுப்பவைசரா சேர்ந்து வேல செய்ய சம்மதமா...புது புரெஜெக்ட்.....ஊரோட வேல?"

"ஆமா சார்......சம்மதம் சார்"

"சரி தம்பி செந்தில்.....வேல எண்ணு வந்தாச்சு....ஒரு சின்ன டெஸ்ட் வைக்கணுமோ இல்லியோ......ஒரே கேள்வி...நல்ல யோசிச்சி பதில் சொல்லணும்....சரியா?"

"சொல்லுங் சார்"

"இதுதான் கேள்வி: ஒன்பத ஏளால பெருக்குனா என்ன வரும்..... நயின் டைம்ஸ் செவன்......எவ்வளவு?"

"ம்...ம்.... நயின் டைம்ஸ் செவன்....ம்.....எழுபத்தி ஆறு சார்"

"பார்த்தி......பையன வர்ர மாசம் முதலாம் திகதில இருந்து வேலைக்கு வரச் சொல்லு!"

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.