2

“ சொல்லுங்க சுமணாவதி……. சுகமா இருக்கியளா……” கம்பீரமாக்க் கேட்டேன்.

அவள் குரலிலே சிறிது கண்டிப்புத் தெரிந்தது.

“சுகமெல்லாம் இருக்கட்டும்….. நீங்க அண்ணனும், தங்கச்சியும் மெதுவா பேசினாலும், ரிசீவரில தெளிவா கேட்டிச்சு….. அவ அப்பிடி என்ன தப்பா பேசிட்டா…. என்னய உங்க ஆளுண்ணு சொன்னதில என்ன தப்பை கண்டுட்டிய….”

குளிர்நீரோடக் காற்று உள்ளத்தை ஊடறுத்தது.

“உணர்ச்சி வசப்படாத……..” புத்தி தடுத்தது.

“கலைக்குத்தான் லூசுண்ணா, உங்களுக்குமா……”

“போதும்….. முதல்ல இந்த, நீங்க…. வாங்க…. போங்க….. எல்லாத்தையும் உங்கவீட்டு உடப்பில போடுங்க….. சுமணாவதி என்ன சுமணாவதி….. ஏன் சுமணான்னு கூப்பிட்டா அய்யாவுக்கு வாய் கோணிக்குமோ…..”

உடலிலுள்ள எடை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துகொண்டிருப்பதை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. தொண்டை அடைத்தது. முகம் முற்றாக வியர்த்தது.

இருப்பினும், பதில் சொல்லமுடியாமல் என் தடுமாற்றத்தைக் காட்ட “ஈகோ” சம்மதிக்கவில்லை. ஏதாவது பேசி ஆகணுமே…..!

பயனில்லை. முந்திக்கொண்டாள் அவள்.

“நீங்கெல்லாம் என்னய்யா இலக்கியம் படிக்கிறிய….. புறநானூறில கணியன் பூங்குன்றன் சொல்லியிருக்காரில்லியா….. யாதும் ஊரே…. யாவரும் கேளிர்ண்ணு…. ஐ. நா. சபையிலையே இந்த வாசகம் இருக்கிண்ணு கேள்விப்பட்டிருக்கேன்.... அப்பிடிப் பாக்கிறப்போ, நீங்க என்ன பண்ணணும்…. என்னையையும் உங்க சொந்தக்காரியா ஏத்துக்கணுமா இல்லியா….. அப்பிடி ஏத்துக்கிட்டா நானு உங்க ஆளுதானே…..”

கில்லாடிதான். எப்படிப் பேசி, எப்படிச் சமாளிக்கின்றாள்…..!

அவளின் அன்பு உள்ளம் புரிந்தது. ஏற்கனவே எனக்குள் புதைந்து கிடந்தவள், இப்போது பரவத் தொடங்கிவிட்டாள். என்ன ஆகிவிட்டது எனக்கு…..? ஆலமர உறுதிகொண்ட தோள்வலிமைகூட , அன்பு என்னும் செண்டிமெண்ட் காற்றுக்கு ஆடிப் போகிறதே.

“காதல்” வலிமையானதாக இருக்கலாம். காலமும், சூழலும் சரிவர வேண்டுமல்லவா !

இலக்கியத்துக் காதல் , எழுத்தோடு முடிந்துவிடும். ஆனால், இயல்பான காதலுக்கு எத்தனை குறுக்கீடுகள் ! ஜாதிகள், மதங்கள், என்னும் சாதாரண விதிகளையும் கடந்து, இந்தக் காதலோ நாடுகள், இனங்கள் என்னும் சட்டச் சிக்கல்களையும் சந்தித்தே ஆகவேண்டும் என்னும் கட்டாயத்துக்கு உள்ளானது அல்லவா!

இந்த வேளையில்தான், இலங்கைக்கு சென்றுவரவேண்டிய ஒரு சந்தர்ப்பம் தானாகத் தேடிவந்தது.

என்னோடு பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப் படித்த மாணவி, தற்போது வேறொரு பள்ளியில் வரலாற்று ஆசிரியையாக இருக்கும் முகிலா, டாக்டரேட் க்கான பி.எச்.டி பரீட்சையில் தோற்றுவதற்காக சில முக்கிய வரலாற்றுத் தடயங்கள், அவைபற்றிய குறிப்புக்கள் சேகரிப்பதற்காக, அவளது கணவர் கதிரவனுடன் அநுராதபுரம் சென்றுவர ஏற்பாடுகள் செய்துகொண்டிருந்தாள். இது சம்பந்தமாக வரலாற்றுப் பாட ஆசிரியர் இன்னுமொருவரின் துணை இருந்தால் நலமென மனதில் படவே, முகிலா என் உதவியை நாடினாள்.

சகல செலவுகளும் தந்து கூட்டிச்செல்வதாகவும், மறுக்காது வரும்படியும் கேட்டுக்கொண்ட்தற்கிணங்க, அவர்களோடு அநுராதபுரம் சென்றுவர நானும் உடன்பட்டேன்.

தபால் மூலமாக வகுப்புக்களைச் சந்தித்துப் படிப்போருக்கு , இடையிலே நேரிலே கலந்துகொண்டு படிக்கும் செமினார் வகுப்புக்கள், ஒரு நிலையான தெளிவைத் தருமல்லவா…..!

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, சுமணாவயும் சந்தித்தால், என் வாழ்க்கைப் பிரச்சினையில் ஒரு தெளிவான முடிவு எடுக்கலாம் அல்லவா….!

அத்தோடு, முகிலாவின் ஆய்வுகளுக்கான மேலுமொரு உதவியும் கிடைக்கும் என்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சியை அடைந்தேன்.

சுமணாபற்றி நான், முகிலா – கதிரவன் தம்பதிகளிடம் பேசும்போது, அவள் எனது பேனா – நண்பி என்பதையும், அவளும் வரலாற்றுப் பாட ஆசிரியை என்பதையும் மட்டுமே குறிப்பிட்டேன்.

முகிலாவுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

தகவலைத் தெரிவித்துப் பேசியபோது, வானளாவிய மகிழ்ச்சியில் அமுங்கிப்போனாள் சுமணா.

இலங்கை அரசினால் மூன்று மாத கால வீசா தரப்பட்டிருப்பினும், தமக்குப் பத்து நாட்கள் கால அவகாசமே போதுமென்று முகிலா குடும்பத்தாரும், நானும் முடிவெடுத்திருந்தோம்.

ஆனால், சுமணாவின் அன்புக் கட்டளை எங்களை இன்னும் பத்து நாட்கள் மேலும் இலங்கைத் தங்கலுக்கு முடிவெடுக்கச் செய்தன.

நாங்கள் வரப்போகும் காலவிபரங்களைக் கேட்டுவிட்டு, குறிப்பிட்ட நேரத்தில் அநுராதபுரம் , ஸ்ரீ மஹா போதி - வெள்ளரசு மர வழிபாட்டுப் பீடத்தில் சந்திப்போம் எனத் தெரிவித்தாள்.

இந்த வெள்ளரசு மரமானது , புத்தபிரான் ஞானோதயம் பெற்ற, “புத்த கயா” போதிமரத்திலிருந்து ஒடித்துக் கொண்டுவந்து வைக்கப்பட்ட கிளையாகும். இப் புனிதப் பணியைச் செய்தவர் , சாம்ராட் அசோகனது மகள் சங்கமித்ரை என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீ மஹா போதி வழிபாட்டுப் பீடத்தில் சுமணாவைப் பார்த்தபோது , கால்கள் தரையிலே படாதது போன்ற உணர்வு எனக்குள் தெரிந்தது.

நம் மூவருக்கும் சேர்த்து, அறிமுக வணக்கம் செய்யும் விதத்திலேயே சுமணாவை முகிலாவுக்குப் பிடித்துவிட்டது.

சிங்களவர்களின் வணக்கமுறையிலுள்ள சிறப்பு என்னவென்றால்,

நிமிர்ந்து நின்று, கைகளை நன்கு நெஞ்சோடு அணைத்துக் கூப்பியபடி, முதுகை வளைத்து, முகமோ தரையைப் பார்க்கும் விதத்தில், செய்கின்ற விதமே.

அதுமட்டுமன்றி, சிங்கள வழக்கப்படி வலது தோள் மீது சேலை முந்தானை போட்டிருக்கும் அழகையும், இடுப்பிலே விசிறிபோல சேலை மடிப்பை சொருகியிருப்பதையும் முகிலா ரசித்தே நோக்கினாள்.

சில நிமிடங்களுக்குள், நன்கு பழகியவர்கள்போல முகிலாவும், சுமணாவும் நட்பானார்கள்.

சுமணாவுடன் தனியே பேசும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து, எதிர்பார்த்து ஏமாந்தே போனேன்.

என் அவஸ்தை நிலையை தனக்குள் ரசித்தபடி, என்னை பரிதாபமாகப் பார்த்துச் சிரித்துக்கொள்வாள் சுமணா.

முகிலாவுக்குத் தேவையான குறிப்புக்கள், இரண்டே நாளில் சுமணாவின் பெருமுயற்சியால் எடுக்கப்பட்டுவிட்டன. அனுராதபுரம் மட்டுமல்ல, மிகிந்தலை, தம்புள்ளை, பொலநறுவை ஆகியபகுதிகளுக்கு கூட்டிச் சென்று, எடுத்த வரலாற்றுக் குறிப்புகளும் முகிலாவுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தந்தன.

தவிர, கதிரவன் சார் கொண்டுவந்திருந்த 1-20கேமரா, ஆங்காங்கேயுள்ள சரித்திர ஆதாரங்களை நிழற்பதிவு செய்தது.

ஒவ்வொரு படச்சுருளும் முடிந்த உடனேயே அருகேயிருக்கும் ஸ்டூடியோவில் கொடுத்துக் கழுவிப் பிரிண்ட் எடுத்துப் பார்க்கும்போது உண்டாகும் மகிழ்ச்சியிருக்கிறதே….. அது ஒரு தனியான சுவை.

தங்குவதற்கு நல்ல டூரிஸ்ட் ஹோட்டலில், இரண்டு கட்டில்கள் கொண்டு 4பேர் தங்குவதற்கான ஒரே ரூமை எடுத்திருந்தோம். ஒரு கட்டிலில், கதிரவன் சாரும் நானும் தூங்க, மற்றய கட்டிலில் முகிலாவுடன், சுமணா உறங்கினாள்.

இரண்டாவது நாள், பகல் பன்னிரண்டு மணியளவில் முகிலாவுக்குத் தேவையான வேலைகள் நடந்து முடிந்தன. ரூமுக்கு வந்துவிட்டோம்.

கதிரவன் சார் சொன்னார்.

“ரண்டு நாள் வெயில்ல அலைச்சல்…டென்சன்.... முகிலாவுக்கும், எனக்கும் கொஞ்சம் தூங்கினா சரியாகிடும்….. அதனால லஞ்சை முடிச்ச கையோட நீங்க வெளியில போய் ஷாப்பிங் பண்ணிறதாயிருந்தா பண்ணிட்டு, இங்க ரூமுக்கு வந்திடுங்க……”

மதிய உணவை முடித்துக்கொண்டு, வெளியே இறங்கினோம்.

முதலில் என்னை ஒரு புத்தகோவிலுக்குக் கூட்டிச்சென்றாள் சுமணா.

“புத்த பகவான் உங்க நாட்டில பிறந்திருந்தாலும், அவரை எங்க நாட்டிலதான் அதிகமாய் கும்பிடுறோம்…..”

அவள் பெருமையாகப் பேசினாள். என் மனதுக்குள் சில நெருடல்கள்.

“என்னமோ பேச நினைக்கிறீங்க….. சொல்லுங்க….. பிளீஸ்……”

வழியின்றி வாய்திறந்தேன்.

“சுமணா….. நீ சொல்றத கேக்கிறப்போ பெருமையாத்தான் இருக்கு….. உங்க சனங்க புத்தரை விழுந்து,விழுந்து கும்பிடுறாங்களே தவிர, புத்தர் சொன்ன அன்பு,கருணை,தியாகம்ங்கிற போதனை எதையுமே மனசில வைச்சிருக்கிறமாதிரி தெரியலியே…. தமிழ், சிங்கள கலவரம்னு எங்கயாச்சும் ஒரு இடத்தில நடந்தா ஊர்முழுக்க வாழுற தமிழனையெல்லாம் வெட்டி வெட்டிக் கொல்றாங்களே…. பால்குடி மாறாத பச்சை குழந்தையைத் தூக்கி கொதிக்கிற தாருக்குள்ள முக்கி எடுக்கிறாங்களே…… அந்தக் குழந்தை என்ன பாவம் பண்ணிச்சு…..எத்தினைபேரு தமிழ்நாட்டுக்கு அகதியா வர்ராங்க தெரியுமா…….

சுமணா…..தப்பா நெனைச்சுக்காத…… நான் உன்னய சொல்லல்ல….

நீ சொன்னதுக்கு பதில் சொன்னேன்……அரசியல்வாதிக அவங்க பொழைப்புக்காக ஜனங்களைப் பிரிச்சு கலவரத்தயும் தூண்டிவிடுறாங்க…. அப்பிடியே ஜனத்த சுரண்டி அவங்க அவங்க குடும்பத்துக்கு சேர்க்கவேண்டிய சொத்துகளையெல்லாம் சேர்த்து வெளிநாட்டு பேங்குகளில டெபாசிட் பண்ணிட்டு, அவங்களும் எஸ்கேப் ஆகியிடுராங்க…. அப்புறம் சாப்பாட்டுப் பொருளுகளுக்கே தட்டுப்பாடு, எரிபொருளுக்கு தட்டுப்படு, ஒண்ணுக்குப் பத்துமடங்கு விலையேத்தம்….இப்பிடியெல்லாம் ஆனதுக்கு அப்புறமாத்தான் ஜனங்களுக்கே மண்டை தொறக்கும்…. என்ன பண்ரது…. காலம் கடந்துபோயிருக்கும்….இதுமாதிரி முட்டாள்தனமான வேலைகளை அடிக்கடி பண்ணுறதாலதான் முட்டாள் சிங்களவன்னு சொல்லக்கூடிய வார்த்தையை இங்கயுள்ள தமிழங்க , “மோட்டுச் சிங்களவன்” னு சொல்ராங்க…..”

என் முகத்தை நேருக்கு நேர் பார்த்தாள். கண்கள் பனித்திருந்தன.

”திருக்குறள்ல ஒண்ணு, பண்புடையார் பட்டுண்டு உலகம் – அது இன்றேல் மண்புக்கு மாய்வது மன்….. அப்பிடீன்னு இருக்கில்லியா……

உங்க தமிழங்க இந்த உலகம் பூராவும் பரந்து வாழுறாங்க…. ஆனா, சிங்களவங்க சிலோன்லதான் வாழுறாங்க….. இந்த இனம் இன்னும் அழிஞ்சுபோகாம இருக்கிண்ணா….. அதுக்குக் காரணம், சிங்களவங்களிலயும் நல்ல பண்புள்ளவங்க இன்னும் இருந்துகிட்டிருக்கிறதாலதான்…….. அதேநேரம் இன்னுமொண்ணையும் தெரிஞ்சுக்குங்க…. காலங்கடந்து புரிஞ்சுக்கிறதிலையும், நம்பி ஏமாந்து போறதிலயும் தமிழனும் கொறைஞ்சவனில்லை…. அதிகப்படியான தமிழங்க “லூசுத் தமிழன்”ஆக இருக்கிறதாலதான் இப்ப இந்த நெலமை ங்கிறதும் உலகத்துக்கே தெரியும்……”

சுமார் இரண்டு மூன்று நிமிடங்கள் அமைதியாக நடந்துகொண்டிருந்தோம்.

சற்று அப்பால் ஒரு அரசமர நிழலில் , புல்தரையில் உட்கார்ந்தோம். அருகே என் தோளில் இலேசாகச் சாய்ந்தபடி அவள்.

“சுமணா…. உன்னய நான் புரிஞ்சுகிட்டேன்….. ஆனா, அது நடைமுறைக்கு எவ்வளவு சாத்தியப்படும்னு தெரியல்ல…..”

சட்டென்று எனக்கு முன்புறமாக நகர்ந்து, முகத்துக்கு முகமாய் அமர்ந்தாள்.

“ஏன்…. சிங்களத்திங்கிறதால எப்பிடி கட்டிக்கிறதிண்ணு யோசிக்கிறீங்களா…..”

குரல் கம்மியது. கண்கள் குளமாயின.

“நீ என்னய தப்பா புரிஞ்சுகிட்டே சுமணா….. என்மேல நீ வெச்சிருக்கிற அன்பில எனக்கு எந்த சந்தேகமும் இல்ல….. உன்மேல வெறுப்பும் இல்ல…. இருந்தும் எதுக்கு யோசனை பண்றேன்னா….. அதர் கன்றி, அதர் லாங்குவேஜ்….. சொசைட்டி நம்மை எப்பிடி அக்செப்ட் பண்ணும்னுதான்……….”

முடிக்கவில்லை. குறுக்கிட்டாள் அவள்.

“என்ன பேச்சு பேசிறீங்க….. உங்களுக்குப்போய் ஹிஸ்டரி டீச்சர் வேலைய எந்த லூசுத் தமிழன் குடுத்தான்….. சிலோனுக்கும், இந்தியாவுக்கும் இடையில உள்ள தொடர்பு இண்ணைக்கு, நேத்தைக்கு உள்ளதா….. பாண்டிய ராஜகுடும்பங்கள், இலங்கையில பொண்ணு எடுத்து, பொண்ணு குடுத்த சம்பவங்கள் நிறைய இருக்கு….. இலங்கைச் சிங்களத்தியை பாண்டிய ராஜகுடும்பத்து தமிழன் கட்டிக்கிட்டான்….. பாண்டியத் தமிழச்சியை இலங்கை ராஜகுடும்பத்துச் சிங்களவன் கட்டிக்கிட்டான்…..

அந்தக் காலத்துக்கு எதுக்கு போகணும்……இந்தக்காலத்துக்கு வரலாமே…. இந்திய பிரதமர் இந்திராகாந்தி அம்மையாரோட பெரியமகன் ராஜீவ்காந்தி கட்டிக்கிட்ட சோனியா யாரு…. இத்தாலி நாட்டுக்காரி……

அவங்க பிரதமர் குடும்பம்னா தப்பில்லை…… நாங்க வாத்தியாருமாருன்னா தப்பாயிருமா…… சட்டச் சிக்கல் நிச்சயமா இருக்கு….. பேஸ் பண்ணுவோம்….

என்னால இம்புட்டுதான் சொல்ல முடியும்….. உங்க மனசில தைரியம் இல்லேன்னா விட்டிடுங்க….. யாரும் உங்களைக் கம்பல் பண்ண மாட்டாங்க….. கிளம்புங்க ரூமுக்கு போகலாம்…..”

பேசிக்கொண்டே எழுந்தாள்.

கையிலே எட்டிப்பிடித்து இழுத்து என்னருகே உட்கார வைத்தேன். உட்கார்ந்தவள் அப்படியே என் மடியில் சாய்ந்தாள். என் முதுகை வளைத்துப் பிடித்தபடி , என் நெஞ்சில் தன்முகத்தைப் புதைத்து குலுங்கிக் குலுங்கி அழுதாள்.

ஆதரவாக அவள் தலையைக் கோதிவிட்டேன். இலேசாகத் திரும்பி என் முகத்தை நோக்கினாள். அவள்மீது எனது நெஞ்சுக்குள்ளே தேக்கிவைத்த அன்பானது, வார்த்தையாக வெளியே வரமுடியாமல் என் வாய்வரை திணறியபோது, அவை அனைத்தையும் என் உதட்டின்மூலம் அவளின் நெற்றியில் பதித்தேன்..

கண்களை மூடியபடி அதனை ஏற்றுக்கொண்டாள்.

வாடிய மல்லிகை மீண்டும் மலர்வது போன்ற காட்சியை அங்கே கண்டேன் நான்.

என்னைப் பார்த்து இலேசாகப் புன்னகைத்தாள்.

“ஆணவத்துக்கும், அதிகாரத்துக்கும் எதிராக எத்தினையோ போராட்டங்களை நடத்தியிருக்கேன்…. ஜெயிச்சிருக்கேன்….. ஆனா, அன்புக்கு முன்னால போராடுறப்போ தோத்துப்போய்ட்டேன்.... அதுதான் என்னால தாங்க முடியல்ல…..”

“யாரு சொன்னா, நீ தோத்துப் போனதா…… தோல்வியும் இல்ல….. வெற்றியும் இல்ல….. நம்ம லவ்வு ட்ரோவில இருக்கு…..”

தலையைப் பிய்த்துக்கொள்ளாத குறையாய், குழப்பத்தோடு எழுந்து உட்கார்ந்தவள் தன் வலக்கரத்தால் என் இடக்காதைப் பிடித்துத் திருகினாள்.

“அட லூசுத் தமிழா…. ஒண்ணு – வெற்றி ன்னு சொல்லு….. இல்ல - தோல்வீன்னு சொல்லு….. அத விட்டிட்டு ட்ரோ….. என்னடா ட்ரோ…. நாம என்ன புட்பால் மேச்சு, கிரிக்கட் மேச்சு நடத்திகிட்டிருக்கோமா……”

அவளின் கன்னத்தைக் கிள்ளியபடியே நான் பேசினேன்.

“அடியே மோட்டுச் சிங்களத்தி….. நான் உன்னய கட்டிக்கமாட்டேன்னு சொல்லல்ல….. சொசைட்டிக்கும் பயப்பிடல்லடி….. இப்பகூட உன்னய கட்டிக்க ரெடி…. எனக்கு அப்புறமா பொறந்த ஒருத்தி கலையரசின்னு இருக்காளே….. அவளுக்கு கலியாணம் எப்பிடி நடக்கும்.....

ஒரு நல்ல உத்தியோகத்திலயுள்ள மாப்பிள்ளைக்கு கலையைக் கேட்டு வந்தாங்க….. நாங்களும் சந்தோசமா சம்மதிச்சோம்….. நிச்சயார்த்தம் நடக்கிற டைமில மாப்பிள்ளை ஒரு குண்டைத் தூக்கிப் போட்டாரு…… அவருக்கு ஒரு அக்கா இருக்காளாம்….. அவளுக்கு ஒரு சம்மந்தமும் சரியா அமையலையாம்….. அதனால அவளை நான் கட்டிக்கிட்டா அவரு கலையக் கட்டிக்குவாராம்…… அந்த டைமில யாருமே எதிர்பாராத விதமா கலை சொன்னா ஒரே வார்த்தை….. பிளீஸ் யூ கெட் அவுட்….. அவ்வளவுதான்….. ஏண்டி இப்பிடிப் பண்ணினேண்ணு எல்லாரும் கேட்டபோ யாருக்குமே அவள் வாயைத் திறக்கல….. நான் கேட்டப்போ மட்டுந்தான் பதில் சொன்னாள்…..”

இப்போது சுமணா சீரியஸ் ஆகிவிட்டாள்.

“என்ன சொன்னா கலை….. யாரையாச்சும் அவள் லவ் பண்ணிறாளா…..”

“என்ன பேசிறே சுமணா….. அப்பிடியாச்சும் ஒண்ணு இருந்தா சந்தோசமா கட்டிவெச்சிருப்போமே….. அவ சொல்லுறா, அண்ணா நீ முதல்ல கலியாணம் பண்ணிக்க….. அண்ணி வந்ததுக்கு அப்புறந்தான் எனக்கு கலியாணம்….வர்ர அண்ணிதான் என் கலியாணத்துக்கு தோழியாய் வரணும்ங்கிறா…..இவ சொல்லுற பொண்ணு அண்ணியா வந்தா, அப்புறம் கலைக்கு கலியாணமே நடக்காது…..”

“அப்பிடியா….. யாரு அந்தப் பொண்ணு…… அந்தப் பொண்ணை நீங்க கட்டிக்கிறதால கலை கலியாணம் ஏன் நடக்காம போகணும்……”

“எப்பிடி நடக்கும்….. கலை, தனக்கு அண்ணின்னு உன்னையதான் சொன்னா….. இப்ப நானு எதைபத்தியுமே கவலைப்படாம உன்னய கட்டிகிட்டு கூட்டிப் போனேன்னு வெச்சுக்க…..`சிங்களத்தியபோய் அண்ணன்காரன் கட்டீட்டான்…. அந்தக் குடும்பத்துப் பொண்ணுக்கு நாம மாப்பிள்ளை குடுத்து, நாளைக்கு சிங்களப் பயல்கூட கொண்டாட்டம் வைக்கணுமாண்ணு எவனும் வரமாட்டான்…..

அவங்க கிட்டப் போயி, சிங்கள மன்னன் - பாண்டிய மன்னன்…., ராஜீவ் காந்தி – சோனியா காந்தி….. திருக்குறளு – திருவள்ளுவரு ண்ணு சொல்லிக்கிட்டிருந்தா…….

பேசாம திருவள்ளுவரையே உன் தங்கச்சிக்கு கட்டி வையு…….அப்பிடீன்னு சொல்லீட்டு போய்கிட்டே இருப்பாங்க……..”

சொல்லி முடிக்கும்போது, சுமணாவே சிரித்துவிட்டாள் !

“பாத்தியா சுமணா….. என் நெலமைய பாக்கிறப்போ உனக்கே சிரிப்பு வருதிண்ணா….. நாளைக்கு கலைக்கு மாப்பிள்ளை அமையாம….. ஊரே என்னய பாத்துச் சிரிப்பாய்ச் சிரிச்சா….. நீ என்ன பண்ணுவே….. நேரா அங்க வந்து, அவன் வீட்டு வாசல்ல உக்காந்து உரிமைப் போராட்டம் நடத்துவியா….. அப்பிடிப் பண்ணினா, பிடிச்சு கீழ்ப்பாக்கம் ஆஸ்பிட்டல சேத்துப்புடுவாங்க…..”

“கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியிலயா….. எதுக்கு…..”

கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரி மனநலம் அற்றோருக்கானது என்பதுபற்றி சுமணாவுக்குத் தெரியவில்லை என்பது எனக்குப் புரிந்தது.

“எதுக்கா…. இங்க சிலோன்ல அங்கொடைங்கிற ஊரிலயுள்ள ஆஸ்பிட்டல்ல சேப்பாங்களே…… அதே ஆஸ்பிட்டல்தான்……”

இப்போது சுமணா முகத்தில் இலேசான சிரிப்பின் ரேகைகள் தெரிந்தாலும்…. மறுநொடிப் பொழுதில், சீரியஸ் ஆகினாள்.

அருகேயிருந்த என் மடியில் இதுவரை நேரமும் படுத்துக் கிடந்தவள், சற்று விலகி, புல்தரையில் மல்லாக்கப் படுத்தாள்.

“என்னாச்சு சுமணா….. இம்புட்டு நேரமும் ஒழுங்காத்தானே மடியில படுத்துக் கிடந்தே…. இப்ப என்னாச்சு……”

புரியாமல் கேட்டேன் நான்.

“உங்க மடி நிரந்தரமானதில்லை ன்னு தெரிஞ்சு போச்சு….. அதே டயிம் இந்த தரைதான் எப்பவுமே நிரந்தரம்……”

புரியவைத்தாள் அவள்.

“சுமணா…. நீ பேசிறத பாத்தா என்மேல உனக்கு கோவம் இருக்குபோல…….”

கேட்டேன் நான்.

வானத்தை வெறித்து நோக்கியபடி அமைதியாக இருந்தாள். கண்கள் கலங்கி, விளியின் விளிம்பில் வழிந்தன. அவளையறியாமலே பெரு மூச்சுக்கள் வெளிப்பட்டன.

“ஏதாச்சும் பேசு சுமணா……..”

“ஓ….. பேசலாமே……மேல வானத்த பாருங்க….ஒவ்வொரு முகிலும், ஒவ்வொரு உருவத்தில தோணுது….. அட அழகாயிருக்கே ன்னு ரசிக்கத் தொடங்கிறப்போ, எங்கயோயிருந்து காத்துவந்து, முகிலைக் கரைச்சிடுது…..”

“இப்ப இதெல்லாம் எதுக்குப் பேசிறே சுமணா…..”

“பேசிறதில என்னதப்பு இருக்கு சொல்லுங்க….. முகில்கூட்டம் அழகுகாட்டி ரசிக்க வைக்கிறப்போ, காத்துவந்து கலைச்சிரிச்சேன்னு காத்துமேல கோவப்படவா…..இல்ல முகில்மேல இரக்கப்படவா….. இலக்கியத்தில வர்ர காதலைப் படிச்சிட்டு, நடைமுறை வாழ்க்கையில அதுபோலவே கனவு காணுறது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்ணு அனுபவப்பட்டதுக்கு அப்புறந்தானே தெரியிது….. நடைமுறை நிஜத்தையும் , சூழ்நிலை வாய்ப்பையும் சரியா கல்குலேட் பண்ணி வெச்சுக்கிட்டு அதுக்கேத்த மாதிரி, காதலைப் பண்ணணும்னா, அப்பிடியொரு புண்ணாக்குக் காதல், நமக்கு வேண்டாம் சாமி…. கண்ணால பாக்காமல்கூட வர்ரத காதலை லிஸ்டில சேர்க்கலாம்…… ஆனா, கணக்குப்பண்ணிப் பாத்தபிறகு வர்ரது காதல் இல்லை….. அதுக்குப் பேரு வேறை….”

இதுவரை காலமும், கலையை நான் நேரில பாத்ததில்லை….. போனில நிறையப் பேசியிருக்கேன்…. அவள் என்மேல வச்சிருக்கிற அன்புக்கும் பாசத்துக்கும் என் உசிரைக் குடுத்தாலும், ஈடுகட்ட முடியாது….. நான் என்ன பேசினாலும், மறுத்தே பேசினதில்லை…..அவள் வாழ்க்கைக்கு என்னால எந்தப் பாதிப்பும் வரக்கூடாது….. முதல்ல வந்த மாத்துச் சம்மந்தம் போல வந்தாலும், லேட்பண்ணாம மேரேஜைப் பண்ணிடுங்க…..”

அமைதியானாள் அவள். இப்போது நான் வாய் திறந்தேன்.

“பேசி முடிச்சிட்டியா….. இம்புட்டு நேரமும் பேசினே…. நான் பொறுமையா கேட்டுக்கிட்டிருந்தேன்….. இப்ப நான் பேசணும்…. நீ கேட்டுத்தான் ஆகணும்…..”

“பேசுங்க பேசுங்க…. இப்ப உங்க பேச்சைக் கேக்காம இனி எப்போ கேக்கப்போறேன்….”

“அதை இப்ப முடிவுபண்ண வேண்டாம்…. நான் பேசி முடிச்சதுக்கு அப்புறமா சொல்லு…..”

“ஓ கே….. ஓ கே………”

“சுமணா…..இம்புட்டு நேரமும் நான், கலைக்கு நடந்த நிச்சயார்த்தம் பற்றியும், அவள் மனோநிலை பற்றியும், அவள் சொல்லுறபடி நடந்தா பின்விளைவு என்னாகும் னும் தான் சொல்லியிருக்கேன்….. நீயும் கலை என்ன சொன்னா, என்ன முடிவில இருக்கான்னு விசாரிச்சியே தவிர, அதுபத்தி உங்க முடிவென்ன.... நம்மையும் பாதிக்காம, அவளுக்கும் பாதிப்பு வராம இப்பிடிப் பண்ணலாம் , அப்பிடிப் பண்ணலாம்னு ஒரு உருப்படியான ஐடியா குடுக்க உனக்குத் தோணலியே….. கலை இப்பவே உன்னய அண்ணி ன்னு நெனெக்க ஆரம்பிச்சிட்டா….. ஆனா நீ அவளை, என்னோட தங்கச்சியாதான் பாக்கிறியே தவிர, உன்னோட நாத்தனாரா பாக்க நெனைக்கலியே…. அப்பிடீன்னா என்னயும் நீ உனக்குச் சொந்தமானவனா நெனைக்க ஆரம்பிக்கல ன்னுதானே அர்த்தம்….”

இதுவரை நேரமும், வெறித்த கண்களுடன் விண்ணை நோக்கியவள், இப்போது விரிந்த கண்களுடன் என்னை நோக்கினாள். ஏதோ பேசுவதற்கு அவளின் வாய் துடித்தது. ஆனால், பேச விடாமல் நானே கேட்டேன்.

“இப்ப சொல்லு….. உனக்கு டீச்சர் வேலையை எந்த மோட்டுச் சிங்களவன் குடுத்தான்….பேசுடி என் பொண்டாட்டி…..”

அவள் தோளில் கை வைத்து என் நெஞ்சோடு அணத்தேன்.

இரண்டு நிமிட அமைதிக்குப்பின், சுமணா பேசினாள்.

“இப்ப என்மனசில முக்கியமா மூணு அப்பிளிகேசன் ஓடீட்டிருக்கு….முதல்ல – நம்ம முகிலா மேடம் பண்ணப்போற டாக்டரேட் சக்சஸ்புல் ஆகணும்…. கூடிய சீக்கிரம் முகிலா மேடம் கன்சிவ் ஆகி…. அவங்களுக்கு நார்மல் டெலிவெரி ஆகணும்…..அடுத்து நம்ம கலைக்கு சீக்கிரமா மேரேஜ் ஆகணும்….. இந்த அப்பிளிகேசன்களைத்தான் லோட் புத்தாகிட்ட வெச்சிருக்கேன்…..

நாம கலைக்கு ஒரு மாப்பிள்ளையை பாப்போம்…. பாத்து கலைக்கும் ஓகேயான்னு கேட்டுக்கொள்ளுவோம்….. உனக்கு கலியாணம் முடியட்டும் அண்ணான்னு பழைய பல்லவியை ஆரம்பிச்சான்னா எனக்குப் போன்போட்டு அவ கையில ரிசீவரைக் குடுங்க….. நான் பேசி, அவளைச் சரிப்பண்ணுறேன்…..”

“அப்புறம்…….”

“என்ன அப்புறமும்….. சப்புறமும்…….. நான் என்ன சினிமாக் கதையா சொல்றேன்…… முதல்ல நான் சொன்னதை முடிங்க…..”

“முடிஞ்சிரிச்சு……….”

பின்னாலிருந்து ஒரு ஆண்குரல்.

திரும்பினோம்……!

ஆலமரத்தின் பின்புறமிருந்து கதிரவன் சாரும், முகிலா டீச்சரும் வந்துகொண்டிருந்தனர். அப்படியானால் இருவரும், நாங்கள் பேசிய அனைத்தையும் நிச்சயம் கேட்டிருப்பார்கள்.

அவர்கள் பக்கத்திலேயே வந்துவிட்டார்கள்.

கதிரவன் சார் என்னருகே வந்தார்.

“என்ன சார்…. உங்க சிஸ்ரரோட மேரேஜ் பத்தி பேசினிய இல்லியா…..உங்க சிஸ்டரை எனக்கு தெரியும்…. ரொம்ப நல்ல பொண்ணு…. எனக்கு ஒரேயொரு தம்பி இருக்கான்….. கனடால ஒரு சாப்ட்வேர் கம்பெனியில வேலை பாக்கிறான்…. வரப்போற செப்டெம்பரில இந்தியாக்கு மூணுமாச விசால வர்ரான்…. அந்த மூணு மாசத்துக்குள்ள அவனுக்கும், உங்க தங்கச்சிக்கும் மேரேஜை முடிச்சு பேமிலியா கனடாக்கே அனுப்பி வெச்சுடலாம்னு யோசனை வருது…. நீங்க பேசினது காதில விழுந்ததால உங்ககிட்ட சம்மதம் கேக்கலாம்னு நெனைக்கோம்…… எங்க நெனைப்பு தவறுண்ணா வெரி சாரி……”

நான் பதறியே போய்விட்டேன்.

“என்ன சார்…. உங்க பேமிலிகூட சம்மந்தம் வெக்க நாங்க குடுத்து வைக்கணும்….. எங்களுக்கு அப்பா இல்லை …. வீட்டில பெரியவங்கண்ணு சொன்னா, அம்மா இருக்காங்க…. அவங்ககிட்டயும் ஒரு வார்த்தை கேக்கணும் …..”

“கட்டாயம்…. கட்டாயம்…. நீங்க வீட்டில பேசி முடிவு பண்ணீட்டு, எனக்கு போன் பண்ணுங்க….. இல்ல…. முகிலாகிட்ட சொல்லுங்க…. ஒரு நல்லநாள் பாத்து, முறைப்படி பொண்ணு கேக்க வர்ரோம்….”

அடுத்து , முகிலாவின் பார்வை என்மீது விழுந்தது.

புதிதாகப் பார்ப்பதுபோல பார்த்துப் புன்னகைத்தபடி சுமணாவின் பக்கம் பார்வையைத் திருப்பினாள்.

“மிஸ் . சுமணாவதி மேடம்….. உங்களுக்கு ஒரு சர்ப்பிறைஸ்ட் மெசேஜ்….. உங்க லைனும் கிளியர் ஆகியிரிச்சு…… நீங்க குடுத்த நம்பருக்கு காண்டாக்ட் பண்ணி, உங்க அண்ணன்கிட்டயும் பேசீட்டோம்…..

இந்தியாலயிருந்து ரிசேர்ச் ஒண்ணுக்காக சிலோனுக்குப் போய் கிஸ்ட்ரி டீச்சர் ஒருத்தர் ஹெல்ப்புக்காக சந்திச்சதாகவும், அவங்ககிட்ட பேசிறப்போ தன் அண்ணன் கனடாலதான் இருக்காங்கண்ணு சொல்ல, எங்க கொழுந்தனும் கனடாலதான் இருக்காங்கண்ணு பேசி, கம்பெனி பேரை விசாரிச்சப்பதான் தெரிஞ்சிச்சு……. ரெண்டுபேரும் வேலை பாக்கிறது ஒரே கம்பெனின்னு……

இதில இன்னுமொரு வேடிக்கை. உங்க அண்ணனும், எங்க கொழுந்தனும் ஆளுக்கு மூணு,மூணு மாச லீவில ஒரே பீரியட்டிலதான் கிளம்புறாங்க…..

எனக்குள் ஒரு குழப்பம் : சுமணாவின் அண்ணனது போன் நம்பரை சுமணா எப்போது முகிலாவிடம் கொடுத்தாள். ….?

அதெல்லாம் சரி….. சுமணா….. உங்க சமாச்சாரம் உங்கண்ணனுக்கு தெரியுமில்லியா….”

“தெரியும் மேடம்…எண்பத்தி மூணு கலவரத்து நேரத்தில தமிழ்க்குடும்பம் ஒண்ணுக்கு அடைக்கலம் குடுத்திட்டாங்கண்ணு சொல்லி, எங்கம்மாவை எங்க ரெண்டுபேரு கண்ணுமுன்னாலயே வெட்டிக் கொண்ணு போட்டுட்டாங்க…..

அந்த நேரம் எங்கப்பா ஊர்ல இல்ல.

கொண்ணவங்க வெளி ஆளும் இல்ல…..எல்லாம் சொந்தக்கார சிங்களப் பயலுவதான்……

அப்பத்தான் எங்கண்ணன் பப்ளிக்காஒரு சபதம் போட்டான்.

நான் கலியாணம் பண்ணிரப்ப ஒரு தமிழச்சியைத்தான் கட்டிக்குவேன்……முடியாம போயிட்டா என் தங்கச்சிக்கு ஒரு தமிழனைத்தான் கட்டிவைப்பேன் நிச்சயமா எங்க வீட்டில சமத்துவம் இருக்கும்னு…..

ஆனா….. சந்தர்ப்ப சூழ்நிலை…… அம்மா, அப்பாவை ஒரு ஆக்சிடெண்ட்டில குடுத்திட்டு, அனாதரவா வந்து அண்ணி நிண்ணப்போ….. எங்கப்பாவால வேற எந்த முடிவும் எடுக்க முடியல்ல…… அவங்க எங்க அப்பாவுக்கு சொந்த சகோதரி மகள் .... வேற வழியில்லாம அண்ணனுக்கு கட்டிவெச்சோம்….

அதனால என்விசயத்தில , அப்பாவும்,அண்ணனும் ஒரே முடிவிலதான் இருக்காங்க……..

சுமணாவின் வாழ்க்கைகுள் இத்தனை சோகம் உண்டா…….!

கதிரவன் சார் என்னைப் பார்த்து பேசினார்.

“ உங்க சிஸ்டர் கலியாண விசயத்தில, மாப்பிள்ளை கனடால…. பொண்ணு இந்தியால……. மேரேஜ் கன்போம் சிலோன்ல…. சூப்பர்….

சுமணா….. என்னோட தம்பி வாற டைமும், உங்கண்ணன் வாற டைமும் ஒண்ணா இருக்கிறதால ரெண்டு கலியாணத்தையும், ஒரே டைமில , ஒரே இடத்தில

பண்றோம்…… ஆனா அது சிலோன்லயா….. இந்தியாலயாங்கிறதை சுமணாட அண்ணன் நிசங்க கிட்ட பேசி முடிவுபண்ணிக்கலாம்….”

குறுக்கிட்டுப் பேசினாள் முகிலா……

“முடிவுபண்ண என்ன இருக்கு….. துன்பம் இல்லாமல் எல்லாம் நடக்கனும்னா….. அது ஒரு அமைதிப் பூங்காலதான் , அதாவது தமிழ்நாட்டிலதான் நடக்கனும்…..”

சுமணாவும் நானும் , முகிலா தம்பதியை நோக்கி கையெடுத்து வணங்கினோம். அவர்களோ ஏகோபித்த வேளையில், எங்கள் கைகளை தட்டிவிட்டனர்.

முகிலா சுமணாவின் கரங்களைப் பற்றிக்கொண்டாள்.

“என்ன பண்ணிறிய ரெண்டு பேரும்….. ஓ…. நன்றி சொல்றியளா…..எங்க முன்னேற்றத்துக்கும், வாழ்க்கைக்குமாக வேண்டிக்கொள்ள எங்க இனம் சனத்துக்கே அக்கறை இல்லை…. நீங்கள் எங்களுக்காகவும், என்னோட பிரசவத்துக்காகவும் வேண்டிக்கிறதாயிருந்தா…. ஒண்ணு நீ எனக்குத் தாயாய் இருக்கணும்.... இல்ல….சகோதரியா இருக்கணும்…. இதில் நீ எதுவாயிருந்தாலும்…. அன்பு, கருணை, பாசத்தால நிறைஞ்சவ….புத்தனின் புத்திரி…. அந்த புத்த பகவான் பின்னால சுத்திக்கிட்டிருக்கிற ஞானச் சக்கரம், கயாவில இதே மகா போதி மரத்தைச் செண்டரா வெச்சுக்கிட்டு, ஆசியாக் கண்டத்திலேயே ஒரு ஜோதியா பிரகாசிச்சு தர்மச்சக்கரமாயும், இந்திய தேசியக் கொடியில அசோகச் சக்கரமாயும் சுத்திக்கிட்டிருக்கு…. உலக அமைதி, அன்பு, கருணை, தியாகம்ணு எல்லாத்தையும் போட்டு, உலகம் பூராவும் பரவும் வேகத்தில சுத்துது…. அப்பிடியிருக்கிறப்போ பக்கத்திலயிருக்கிற இலங்கைக்கு மட்டும் அந்த வாடை வீசாமல் இருக்குமா…..ஆனாலும் ,புத்தபகவான்மேல உண்மயான விசுவாசிகளா இருக்கிறவங்களால மட்டுந்தான் அந்த வாடையை சுவாசிக்க முடியும்.... அவங்க லிஸ்டில சேந்தவதான் நீ சுமணா….”

முகிலா பேசப் பேசப் புல்லரித்து நின்றாள் சுமணா.இனம்புரியாத பெருமிதத்தால் உடம்பு சிலிர்க்க , அவளையறியாமலே கண்கள் பனித்து எல்லை மீறின.

அவளைத் தனது நெஞ்சோடு அணைத்து, கண்களைத் துடைத்துவிட்டாள் முகிலா.

நாம் தங்கியிருந்த ஹோட்டலிலிருந்து ரூம்பாய் ஒருவன், ஹோட்டல் யூனிபாரத்தில் அவ்வழியே வந்துகொண்டிருந்தான். கதிரவன் சாரை பார்த்ததும் சல்யூட் பண்ணினான்.

அவனின் பார்வை சுமணாவிமீது விழுந்தது. ஒருகணம் கண்களை மூடி யோசித்தான்.

கண்களைத் திறந்தபோது, முகத்திலே ஒரு மலர்ச்சி. அது பேச்சிலும் வெளிப்பட்டது. சிங்களத்தில் பேசினான். அவளும் சிங்களத்திலேயே பதி கூறினாள்.

(ஓஅக்கா…. நீங்க சுமணாவதி மேடம்தானே…. கண்டில நடந்த ஸ்கூல் போராட்டங்களில உங்க போட்டோ, நியூஸ் பேப்பரில வந்ததை பாத்திருக்கேன்….’’

“ அப்பிடியா…. ரொம்ப சந்தோசம்….”

“ நான் ஜெய ஸ்ரீ டீச்சரோட சித்தி மகன்…. பேரு பியசேனா…. எங்க அக்காவுக்கு ஸ்கூல்ல வெச்சு ஒரு பிரச்சினை வந்தபோது, அவுங்களுக்காக ப் பேசி நீதிய வாங்கிக் குடுத்து ட்ரான்சர் ஆனவங்கன்னு அக்கா சொல்லியிருக்காங்க…. ”

“ ஓ….. ஜெயஸ்ரீட தம்பியா…. உங்க அக்கா எப்பிடியிருக்காங்க….”

“வவுனியால டீச்சரா இருக்காங்க…. அந்தா பாருங்க…. அதுதான் எங்க வீடு…. வந்தீங்கண்ணா மனசுக்கு ரொம்ப சந்தோசமாயிருக்கும்….”

அருகே ஒரு வீட்டைக் காட்டினான்.

“சந்தோசம் தம்பி பியசேனா…. தப்பா நெனைக்காத….. எங்களுக்கு நிறைய வேலை இருக்கு…. கூடிய சீக்கிரம் திரும்ப அனுராதபுரம் வரவேண்டியிருக்கு….. அப்போ நிச்சயமா உங்க வீட்டுக்கு வருவேன்…. நீ கிளம்பு…. ஹோட்டல்ல சந்திக்கலாம்….”)

அவன் போய்விட்டான்.

சுமணாவின் முகத்திலே புதுத் தெம்பு. அப்படியே திரும்பி எங்கள் மூவரையும் பார்த்தாள்.

“ஓகே…. நீங்க அனுராதபுரம் வந்த சமாச்சாரம் ஓகே ஆகியிரிச்சு இல்லியா…. உங்க பிளைட்டுக்கு இன்னும் கால அவகாசம் இருக்கு….. அதனால இண்ணிக்கு நைட்டே எல்லாரும் கண்டிக்கு கிளம்புறோம்….

அனைவரும் மகிழ்ச்சியில் மிதந்தபடி நடந்தோம். என்ன பேசுவதென்று தெரியாமல் வாயடைத்த நிலையில் நான்.

தொடர்ந்து சுமணாவே பேசினாள்.

“கண்டியிலையும் உங்களுக்கு தேவையான நோட்ஸ் எடுக்கவும், சுத்திப் பாக்கவும் நிறைய மேட்டர்கள் இருக்கு…. முகிலா மேடம்….”

“தெரியும் சுமணா…. புத்தரோட பல்லைப் பாதுகாக்கிற 'தலதா மாளிகை' ….. அப்புறம் ஏசியன் கன்றிக்குள்ளையே பெரிய பார்க் பேராதனைப் பார்க் , எல்லாத்தையுமே பாக்கலாமில்லியா…..”

“அதுமட்டுமில்லை முகிலா மேடம்….. உங்க பேமிலியையும், எங்க பேமிலி பாத்தமாதிரி இருக்குமில்லியா….”

சுமணா துடிப்பாக பேசினாள். அப்போது இடையே குறுக்கிட்ட கதிரவன் சார், கிண்டலாகக் கேட்டார்.

“ஏன் சுமணா…. உங்க பேமிலியில உள்ளவங்க, முக்கியமா எங்க பேமிலியை அதாவது, என்னையும், முகிலாவையும் மட்டுந்தான் பாக்கிறது முக்கியம் இல்லியா…. அதுதான் முகத்தில இம்புட்டுப் பூரிப்பு தெரியிது….”

சுமணாவின் பார்வை வெட்கத்தால் தரையை நோக்கியது. அப்படியே ஓரக்கண்ணால் என்னை நோக்கினாள்.

மேலே வானம் கரு கட்டிக்கொண்டிருந்தது. காற்றும் வேகமாக வீசிக்கொண்டிருந்ததால் , மேலிலே விழவந்த மழைத்துளிகள்கூட, தூரவே பறந்து விழுந்தன.

தெருவிலே ஜனங்கள் மத்தியிலே ஒரு பரபரப்பு. முக்கியமாகத் தமிழர்களின் கடைகள் துரிதமாக அடைக்கப்பட்டுக்கொண்டிருந்தன.

எதிரே பியசேனா வேகமாக ஓடிவந்தான். இப்போது தனக்குத் தெரிந்த தமிழிலே பேசினான்.

“யாரும் ஹோட்டல் பக்கம் போக வேணா..... இன்னிக்கி பகல் பன்ரெண்டு மணிக்குபோல மட்டக்களப்பில சிங்கள-தமிழ் சண்ட ஸ்ராட் பன்னி, அது அப்பிடியே வந்துவந்து, நம்ம ஹோட்டல்பக்கம் இருக்கிற தமிழ்க் கடையயெல்லாம் ரவுடீங்க நெருப்பு வச்சு எரிச்சது.... நம்ம ஹோட்டல் வாசல்ல தமிழ் ஆளு ரண்டுபேத்தை வெட்டிப்போட்டது....

அதிங் மட்டுமில்லை..... எங்க ஹோட்டலுக்குள்ள வந்து, தமிழ் பேமிலி ஒன்னு இருக்கான்னு சத்தம் போட்டது..... அவங்க வெக்கேட்பண்ணி போயாச்சுன்னு மேனேஜர் சொன்னது....வந்தவங்க திரும்பிப் போனது.... மேனேஜர் போலீசுக்கும் போன்ணியிருக்கு..... நீயை எல்லாம் தேடிக் கண்டுபிடிச்சு மெசேஜ் சொல்ல சொன்னது.... நான் பின்னால பாத்ரூம் பக்கம் செவத்தில ஏறிக் குதிச்சு வாரது..... நீயாரும் எங்கயுமே போக வேணாம்.... எங்க வீடு வாரது.... எங்க வீட்டில போன் இருக்கு..... நானு போலீசில போன் பண்ணுறது....”

சொல்லிக்கொண்டே நடந்தான் அவன். பின்னால் தொடர்ந்தோம் நாம். எங்களை வீட்டுக்குளே விட்டு வெளிக் கதவையும், அடுத்து உள்க் கதவையும் தாழ்ப்பாள் போட்டான் பியசேனா.

“சுமணா அக்கா….. வீட்டு லைட் எல்லாத்தையும் ஆப் பண்ணீடலாமா…..” கேட்டான் பியசேனா.

“வேண்டாம் வேண்டாம்….எல்லா வீட்டிலையும் லைட் எரியிறப்போ, இங்க மட்டும் ஆப் பண்ணி டவுட்டை கிளப்ப வேணா….”

தூரத்திலே ரவுடிகளின் சத்தம் கேட்டது. கணத்துக்குக் கணம் அது அண்மித்தது.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தபோது என்னால் பொறுக்க முடியவில்லை. வீட்டுக்குள் மூலை முடுக்குக்குள் ஏதாவது ஆயுதம் இருக்குமா என்று தேடினேன்.

“என்ன…. திருநெல்வேலிக்காரரே…. ஏது…. வீச்சரிவா தேடுறேளா….. பேசாம கம்முன்னு இருலே…. யாரு வந்தாலும் நான் பேசிக்கிறேன்…. எது நடந்தாலும் நீங்க யாரும் வெளிய வரக்கூடாது…..”

அந்தளவு கலவர நேரத்திலும் , என்னைப் பார்த்து கிண்டலடித்தாள் சுமணா.

இதற்கும்மேல் பொறுக்க முடியாமல் வாய்திறந்தாள் முகிலா.

“சுமணா…. நீ என்ன பேசிறே.... உன்னைய பலிகுடுத்திட்டு நாங்க வாழவா…..”

“டென்சன் ஆகாதீங்க முகிலா மேடம்…. நான் செத்தாலும் , ஒங்க வயித்திலதான் பிள்ளையாப் பொறப்பேன்…. இனி எப்பவுமே உங்க செரவுண்டுக்குளைதான் இருப்பேன்….”

“லூசுத்தனமா பேசாத …. என்னோட வயித்தில பிறக்கப்போறது இன்னொரு சுமணா…. தவறினா சுமணன்…. இதில எதுவானாலும், பேரு வைக்கிறப்போ கையில தூக்கி காதில மூணு தடவை சொல்லப்போறது நீதான்…..”

வெளிக் கதவு வேகமாக தட்டப்படும் சத்தம்.

“ஏய்…. பியசேனா….. நீ வேலைபாக்கிற ஹோட்டல்லயிருந்து தமிழங்க கொஞ்சப்பேரை கூட்டிவந்து உன்னோட வீட்டுக்குள்ள வெச்சிருக்கிறது எங்களுக்குத் தெரியும்…. மரியாதையா கதவைத் திற…..”

சுமணா முகத்தில் மீண்டும் கடுகடுப்பு.

“திருந்தாத ஜென்மங்கள்...... வெட்டப்போறாங்களா..... அதையும் பாக்கிறேன்.... என் உடம்பில உசிர் இருக்கிரவரையிலும் யாருக்கும் ஒண்ணுமே நடக்க விடமாட்டேன்.... பியசேனா..... போலீசுக்கு போன்போட்டு ரிசீவரை என் கையில குடு.... எஸ்.ஐ கிட்ட நான் கேக்கிற கேள்வியில அவங்க பறந்து வரணும்....”

சுமணாவின் முகத்திலே எள்ளும் கொள்ளும் வெடித்தன.போலீசுடன் பேசியபோது அவளது சிங்களம் தூள் பரத்தியது.

“எஸ்.ஐ.சார்…. ஸ்ரீபோதி ஏரியாலயிருந்து சுமணாவதிங்கிற சிங்களத்தி பேசிறேன்….ஆமா….. உங்களைப்போல ஒரு சிங்களவன் , கண்டீல பில்டிங் கன்ராக்டராக இருக்கிற அமரதுங்கா ங்கிற பேரிலயுள்ள சிங்களவனுக்கும்,

மெனிக்காங்கிற சிங்களத்திக்கும் பொறந்த பியூர் சிங்களத்தி பேசிறேன்…..”

“அமரதுங்க சார் பொண்ணா…. உங்கப்பாவ எனக்கு நல்லாத் தெரியும்மா….கண்டீல எங்க அக்கா வீட்டை உங்கப்பாதான் கட்டிக் குடுத்தாங்க….. எதுக்கம்மா இப்பிடி பேசிறே…. என்ன பிரச்சினை….”

“என்ன பிரச்சினையா…. என்னசார் பேசிறிய…. நம்ம சிங்கள ரவுடி சகோதரங்களுக்கு சாப்பிட தமிழன் உசிரு வேணுமாம்…. இங்க எங்களை நம்பி, எங்க நாட்டை நம்பி மூணு தமிழ் ஜீவன்கள் டூரிஸ்ட்டாக வந்திருக்காங்க…. அவங்களை வெட்டி, நம்ம சிங்களத்து வெறியை உலகத்துக்கு காட்டணுமாம்….. அந்த ரவுடிகளுக்கு பாதுகாப்பு குடுத்து , நம்ம சிங்கள ஜாதியோடை பெருமையை உலகத்துக்கு காட்ட வேணாமா…. அதுக்குத்தான் வரச்சொன்னேன்….”

“உன்னோட கோபம் புரியிது….. எப்பிடியாவது சமாளிச்சு அந்த டூரிஸ்டுகளைப் பாதுகாத்து வைச்சுக்க…. இன்னும் அஞ்சு நிமிசத்தில எங்க போலீஸ் பட்டாளம் அங்கை இருக்கும்…. மொத்தத்தில அந்த ரவுடிகளை தூக்கிறேன்….வீட்டு லொக்கேசனை கரெக்டா சொல்லு….”

“வீட்டுக்கார பையன்கிட்ட போனைக் குடுக்கிறேன்…. பிளீஸ்…. குயிக்கா வாங்க….. நீங்க லேட்பண்ணுற ஒவ்வொரு செக்கண்டும் அவங்க மனசார செத்துக்கிட்டிருக்காங்க... இந்தா பியசேனா….. வீட்டு லொக்கேசனை சொல்லு…..”

”ஏய் பியசேனா…. கதவை திறக்கிறியா இல்ல உடைக்கவா….”

கதவை வேகமாக அடித்தார்கள். அது உடைந்து நொருங்கும் சத்தம் கேட்டது.

சுமணாவதி மிகவிம் கடுப்பானாள்.

“பியசேனா…. உங்க வீட்டுக்குள்ள பாதுகாப்பான ரூம் ஏதும் இருக்கா…..”

“மாடியில ஸ்டோர் ரூம் காலியா இருக்கு….. ரண்டு நாளைக்கு முன்னாடிதான் கிளியர்பண்ணி வெச்சோம்…..”

“எங்களை கூட்டிகிட்டுப் போ….எதுவும் பேசாம என்கூட வாங்க….”

பியசேனா பின்னால் சுமணாவும் , அவள் பின்னே நாங்கள் மூவரும் சென்றோம்.

எங்கள் மூவரையும் கட்டாயப்படுத்தி உள்ளே தள்ளினாள் சுமணா. திக்கித் திணறிப்போன நிலையில் மந்திரித்துவிட்ட கோழியைப்போல நாங்கள்.

எங்கள் மூவரையும் புதிதாகப் பார்ப்பதுபோல பார்த்தாள்.

“என்மேல நீங்க கோபப்பட்டாலும் பரவாயில்லை…. நீங்க சகல பாதுகாப்போடையும் தமிழ்நாட்டுக்குப் போய்ச் சேரணும்…. இன்னும் கொஞ்ச நேரத்தில போலீஸ் வந்திடுவாங்க…. அதுவரைக்கும் எப்பிடியாச்சும் இவங்க கவனத்தை திருப்பி, உள்ளை வராமை பாக்கணும்…. பிளீஸ் கொஞ்சம் ஒத்துழைப்பா இருங்க….”

சொல்லிவிட்டுத் திரும்பியவள் ஏதோ நினைத்தவளாக, என்னிடம் வந்தாள். அருகிலே மற்றவர்கள் நிற்கின்றார்களே என்பதுபற்றிக் கவலைப்படாமல், என்னை அணைத்து இரண்டு கன்னங்களிலும் முத்தமிட்டாள்.

கற்சிலைபோல உணர்ச்சியற்று நின்றேன் நான். முகிலா வாய்விட்டுக் கதறியே விட்டாள். அவ்ளது வாயினைப் பொற்றினாள் சுமணா.

“முகிலா மேடம்….. கதறிச் சத்தம்போட்டு காரியத்தைக் கெடுத்திடாதீங்க….. கொஞ்ச நேரம் எனக்காக இருட்டில இருங்க….. பியசேன …. இந்த ரூம் லைட்டை ஆப் பண்ணு….கதவைச் சாத்து….. கீழவந்து நீ எங்கயாச்சும் மறைஞ்சு நிண்ணு கவனி…. போலீஸ் வர்ரவரைக்கும் நீ வெளியில வராத….”

வீட்டின் பின்புற குச்சு ஒழுங்கைவழியாக வந்த கார் ஒன்று, வீட்டின் வாசல் பக்கமாக திரும்பி, மெயின் ரோட்டில் ஏறி, சென்றது.

அதற்குள் ஓடிவந்த சுமணா, சடாரென்று கதவைத் திறந்தாள். வெளியே ரவுடிகள் மூன்றுபேர்.

“விலகு….”

வாசலுக்கு நேராக நின்றவனை தள்ளிவிட்டு, அந்தக் காரினைப் பார்த்துக் கையசைத்தாள். கார் சென்றுவிட்டது.

ரவுடிகள் ஒருகணம் திகைத்து நிற்க, சுமணாவே சிங்களத்தில் பேசினாள்.

“ என்ன…. ரவுடித் தம்பிகளா….. தமிழன் கறி சாப்பிட வந்தீங்களா…. நீங்க தேடின தமிழ் சொந்தங்கள் எல்லாத்தையும் பியசேனா ஹெல்ப்போட காரில ஏத்தி வவுனியாவுக்கு அனுப்பியாச்சு…. வீட்டுக்குள்ள போய் கிச்சன்ல கஞ்சி இருக்கு….. குடிங்க…. இல்லை.... தமிழ்க்கறி வேணும்னா போற காரை விரட்டிப் பிடிங்க…. அதுவும் வேண்டாம்னா…. உங்க சிங்களக்கறி நான் இருக்கேன்…. சாப்பிடுங்க…. வெறியோட அலையிறத்துக்கு நம்மளை மிஞ்ச யார் இருக்கா….”

ஒருவன் மிகவும் ஆவேசமாகப் பேசினான்.

“நாங்க கஷ்டப்பட்டு தேடிவந்தவங்களை தந்திரமா பின்வழியால கார் ஏத்தி வவுனியாவுக்கு அனுப்பிட்டே….. சிங்களத்தியா இருந்துகிட்டு இப்பிடி துரோகம் பண்ணியிருக்கே…. மதவாச்சியைக் கடக்கிறத்துக்குள்ளை அவங்களை மடக்கி கொண்டுவந்து இதேயிடத்தில் வெட்டல….அப்புறம் பாரு….”

சொல்லிக்கொண்டு கீழே இறங்க, மற்றவனோ…

“இவளுக்காக எதுக்கு அவங்க எல்லாத்தையும் இங்க கொண்டுவரணும்….. பிடிக்கிற இடத்தில சாய்ச்சிட வேண்டியதுதான்…. இவள நம்ம சிங்களத்தின்னு விட்டிட வேணாம்…. போட்டிடு….”

சொல்லிக்கொண்டே அரிவாளை வீசினான். படியிலே நின்றுகொண்டிருந்த சுமணா, பின்னால் நகன்று மேல்படியில் ஏறவே, அவளின் கழுத்தைக் குறிபார்த்த கத்தி, நெஞ்சிலே கிழித்துச் சென்றது.

“மகே அம்மே……”

நெஞ்சை அழுத்திகொண்டு கீழே விழுந்தாள் சுமணா.

அப்போது அங்கே போலீசும் வரவே, காடையர்கள் தப்பி ஓடினார்கள்.விரட்டிச் சென்ற போலீசார், சிரமப்பட்டு பிடித்துக் கொண்டுவந்தார்கள்.

பெண் போலீசார், சுமணாவைத் தூக்கியெடுத்து, நெஞ்சிலே துணிக்கட்டு போட்டு, காயசேதத்தைக் கட்டுப்படுத்தினர் எனினும், அரைமயக்க நிலையிலே இருந்தாள் அவள்.

பியசேனா ஓடிச்சென்று மாடியி லைட்டைப் போட்டான்.

“கதிரவன் சார்…. எல்லாம் கீழ வாரது……”

சத்தமிட்டான்.

பதறியடித்துக்கொண்டு கீழே வந்தோம். அதற்குள் ஆம்பூலன்சுக்கு அறிவிக்கப்பட்டு, ஸ்ரெச்சரில் வைத்து அவளை ஏற்றிக்கொண்டிருந்தார்கள்.

அந்தப் பகுதியே அதிரும்படி அலறினேன்.

“சுமணா….. சுமணா……”

என் அதிர்வலைகளைக் கேட்டு கண்ணைத் திறந்த சுமணா, வெகு சிரமத்துடன் தனது வலது கரத்தை மடித்து, ஆள்காட்டி விரலை உதட்டில் வைத்து, சத்தமிட வேண்டாம் என செய்கை செய்தாள்.

ஆம்பூலன்சிலிருந்த நர்ஸ் என்னை யார் என்று சுமணாவிடம் கேட்டபோது….

“ மகே மாத்தயா…. மை ஹஸ்பண்ட்……” என்றாளே பார்க்கலாம்.

துன்பமான அந்த வேளையிலும் இன்பத்தைக் கண்டேன் நான்.

என்னோடு சேர்ந்து உட்கார கதிரவன் சாருக்கும், முகிலாவுக்கும் அந்த ஆம்பூலன்சுக்குள்ளேயே இடம் ஒதுக்கித் தந்தார்கள் அந்த நர்ஸ்.

ஆம்பூலன்ஸ், அனுராதபுரம் பெரிய ஆஸ்பத்திரி நோக்கி விரைந்தது.


நெஞ்சிலே இலேசான அழுத்தம் தெரிந்தது. கண்களை விழித்தேன்.

என்னை அணைத்தபடி, என் நெஞ்சணையைத், தன் தலையணையாக்கி படுத்திருந்தாள் சுமணா.

“ ஏய் சுமணா….. நீயா……?”

படுத்திருந்தவள் துள்ளி எழுந்து உட்கார்ந்தபடி, என் காதைத் திருகினாள்.

“என்னடா சொன்னே…. லூசுத் தமிழா….. நீயாவா…. என்னயதவிர உன் நெஞ்சில படுக்க எந்தச் செருக்கி வருவா….”

“அடி மோட்டுச் சிங்களத்தி…. நீ எப்ப வந்தேன்னு கேக்கிறதுக்காகத்தான் இப்பிடிக் கேட்டுட்டேன்….”

“எப்ப வந்தேனா….. சரியாப் போச்சு…. நான் எப்பய்யா போனேன் உன்னய விட்டு….”

பேசியபடி என்னை இழுத்து தனது மடியிலே படுக்கவைத்தாள்.

“ஆமா…. வானத்தில பறக்கிற பறவைகளையும், நட்சத்திரங்களையும் எண்ணிக்கிட்டிருந்தமாதிரி தெரிஞ்சிச்சு…. எத்தினை பறவை, எத்தினை நட்சத்திரம்….”

எதிர்பாராத கேள்வி. எனக்குள் தடுமாறினேன்.

என் நிலைமையப் புரிந்துகொண்ட அவளே சமாளித்தாள்.

“ சரி சரி….. அதை விடுங்க….. இப்ப நிமிர்ந்து வானத்தைப் பாருங்க….”

பார்த்தேன்.

சுத்தமான வெள்ளைநிற ஜோடிப் புறாக்கள் இரண்டு, அழகாகப் பறந்து சென்றன. அவளே கேட்டாள்.

“இந்த ஜோடிப் புறாக்களுக்கு ஒரே பேரு வைங்க பாக்கலாம்….”

“லவ் பேட்ஸ்…… எப்பிடி நான் வச்ச பேரு…..”

“இது பேரு இல்லை….. போரு…..”

“அப்பிடீன்னா நீ பேரு வையு….. பாக்கலாம்….”

“சமாதானப் புறாக்கள்……”

எழுந்து உட்கார்ந்து அவள் முகத்தை நோக்கினேன்.

அதிலே தெரியும் சமாதான ஜோதியிலே, அவள் ஐக்கியமாகிக்கொண்டிருந்தாள்.

முற்றும்

பகுதி ஒன்று

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.