1

“கள்ளா! ஏய்… கள்ளா!

இன்னும் என்னதா பன்னுற…

எவ்ளோ நேரந்தா காத்திருக்கிறதோ…

ஏய்… கள்ளா! கள்ளா!”

குனிக்கியின் ஓலம் அந்த அடர்காட்டின் காதுகளை அடைத்தது. சில்லிடும் பனிக்காற்று, பொழியும் நிலா, சீகூரிப் பூச்சிகளின் இரைச்சல், மென்மையாக அசையும் மரங்களின் இலைகள் அந்த உலகம் வருணனைக்கு அப்பாற்பட்டது.

ஆதியின் அத்தனைச் சுவடுகளும் அதற்குள் அடக்கம். அதன் அடக்கத்துள் குனிக்கியின் கணவன் கோடனும் ஒருவன்.

பெண்கள் அணுகவியலா அந்தத் ‘தொட்டசோலெ’ அடர்ந்த காப்புக்காடு. பூவுடல் கடந்த பல்லோர் உறையும் இடமென்பது நம்பிக்கை.

‘ஜக்கக்கம்பை’ ஊரில் தொடங்கி ‘சிரியூர்’ வரை நீளும் பேரூலகம் இது. உள்ளே நுழைந்ததும் ஆதியால் அணைத்துக் கொள்ளுமது. வெளியே வரும்வரை எவ்வளவு முயன்றாலும் அது விடாது. அந்த விடாத உலகம் குனிக்கியையும் விடாது பிடித்திருந்தது.

பாதைதெரியாது தடுமாறுவதைவிடவும், கற்பனைக்கெட்டாத பெருநிலமொன்றில் தொலைந்த ஒன்றினைத் தேடுவது அவ்வளவு கடினமானது. அது பெரும் காட்டு ஆடின் பெரும் ‘ஜள்ளெ’ ஆனாலும் சிறு கடுகினும் நுண்ணியது.

பல்லைக் கடித்துக்கொண்டே உறுமும் சப்தம். ஒருவகையில் சீழ்க்கைக் கலந்த மிரட்டும் சப்தமும்கூட. அது மனிதனா? அல்ல, அல்ல… மிருகமா?... அல்ல, அல்ல… இரண்டும் கலந்த கலவையா? ஆம்.. ஆம்.. அதேதான். மிருகமல்ல... ஒருவகை மனிதன்தான். ஆனால், மிருகம் மிகுந்த மனிதன். மனிதம் மிக மிக குறைந்த மிருகம்.

பல நூற்றாண்டுகளாக ஓங்கிவளர்ந்த ‘பைகெ’ மரத்தின் பொந்துதான் அதற்கான இடம். வழிதவறி அந்தக் காடோடிய எருமைகளைத் தன்பக்கம் இழுப்பதே, அதை கண்ணியாய் வைத்து நரபலிக் கொள்வதே அதன் சீழ்கை உறுமலின் நோக்கம்.

அதை அறிந்துகொண்ட முதி எருமைகள் அவ்வளவு எளிதில் அதனிடம் அகப்பாடா. அதுகுறித்த அனுபவம் சற்று பிசகினாலும் அவ்வளவுதான். நேராக பலிபீடம்தான்.

சொறி இலையை எருமையின் குதத்தில்தடவி அதை விடாது கனைக்கச்செய்யும் தந்திரதாரி அது. யார் தொட்டாலும் சொறியும் அந்தச் சொறியிலைக்கே சொறிதரும் அதன் இருள் கரங்கள் பல சாபங்களின் ரேகைகளைச் சுமந்தவை.

அந்தச் சொறியிலையைக் குதத்தில் முதலில் படுக்கத் தேய்த்து, அடுத்து நிமிர்த்தித் தேய்த்து, நிறைவாக மடக்கித் தேய்த்தால் சிக்கிக்கொண்ட எருமையின் அலறல் காடதிரும்.

பெரும்பாலும், அதனிடம் சிக்குவது குதம் முற்றாத இளம் எருமைகளே. அவை குதம் சிவந்து, துடிதுடிக்கும். சுற்றி நிற்கும் ஈரம் கசியும், பாசிப்படர்ந்த பாறைகளில் குதத்தைப் பறக்கத் தேய்த்து வலிதாளாது பின்னங்காலில் எம்பிக் குதிக்கும்.

சருகடர்ந்த ஈரமண்ணில் பதியும் ‘குதக்…. குதக்…’ எனும் அந்த ஒலி கருணையின்மையின் இதயத்துடிப்பொலி. இதயத்தைத் துடிக்கச்செய்யும் ஒலி. மஞ்சு சூழ்ந்த, தீமையின் நிலத்தின் கொடும் இடியொலி.

அடர் இருட்டில், நிலவின் பிசிரொளியும் நுழையவியலாத, தீமையால் மேலும் இருளை அப்பிக்கொள்ளும் அந்த இருள்சூழ்க் களத்தில் அகப்பட்ட எருமையைக் கணிக்கும் இறையொலி. மீட்சிக்கு வருவோனையும் மீட்கவீடாமல் செய்துவிடும் இரையொலி. அகப்பட்ட தீமையை அடி அகத்திற்கு உணர்த்தும் சிறைவைப்பின் உள்ளொலி.

“குனிக்கி.. குனிக்கி.. அதேதான்… அவளே தான்..

இனியும் பொறுக்க முடியாது…

வாராத வம்பு வர்றதுக்குள்ளே போயாகனும்..

இதோ வந்துடறேன்… கதவ சாத்திக்கோ…”

உறங்காமல் தவிக்கும் ‘முதி’ எருமையை ஓட்டிக்கொண்டு கோடன் அங்குதான் விரைந்தான்.

மீட்பரின் தீப் பந்தத்தின் ஒளி தூரத்தில், கண்ணில் பட்டதும் ஐவர் இணைந்தாலும் பற்றமுடியாத அந்தப் ‘பைகெ’ மரத்தின் உச்சிமேல் சடசடவென சத்தமின்றி ஏறி, இரவாட, இறையாட தயாராகும் அதனைக் கணிப்பது பெருங்கடினம்.

தீப்பந்தத்தை மேல்நோக்கி பிடித்து வந்தால் அதன் முதலறை முகத்தில்தான். கீழ்நோக்கிப் பிடித்து நெருங்கினாலோ முதலடி அடிவயிற்றுக்கு. சுருண்ட கரிய மயிர்மண்டிய தன் கைப்புடைக்க அது காத்திருக்கும்.

அதன் குணமறிந்தோர் இடக்கரத்தில் பந்தத்தைப் பிடித்து, அதை இடப்புறமாக நீட்டிச் செல்வர். அதனைத் தகர்க்க அதுதான் முதல் தந்திரம். அப்படி வரும் கோடனைக் கண்டதும் அதற்குக் கோபம் தாளவில்லை.

‘என்னை அறிந்த ஒருவனா? இல்லை.. இல்லை… ஏற்கவியலாது… அவனை….’

அது கீழே இறங்கி சொறிச்செடியுடன் இருளில் மறைந்திருக்கும். மரத்தின் வேர்மண்டிய பள்ளத்தில் சிலந்தி வலைபோல் காத்திருக்கும். அருகி வந்ததும் அவ்விலையைக் கொண்டு நொடிநேரத்தில் கண்ணைத் தாக்கும்.

நிலைதடுமாறி, நிலைகுலைய அவ்வடர் காட்டின் ஆழம்தெரியாத ‘தோடே’ பள்ளத்தில் தள்ளி உயிர்க்காவு வாங்குவதே அதன் அடுத்த திட்டம்.

அதையும் அறிந்துபோய் அவசரமாய் நெருங்காது, சில நொடிகளுக்குமுன் மீண்டும் குதத்தில் தேய்த்த சொறியிலையின் தாக்கத்தில் அரற்றும், அருகே வந்துவிட்ட மீட்பனின் வாசத்தால் சற்று தெம்படைந்து, ‘பைகெ’ மரத்தின் இளம்வாதால் கட்டப்பட்ட பின்னங்காலை நகர்;த்தமுடியாது முன்னங்காலை எக்கி முந்த, முடியாது தரைபிளற அடிக்கும் அப்பிணையெருமையின் உணர்வுநிலையோடு உடனே ஒன்றாது, சற்று தூரத்தில் நின்று, பொறுமைகாத்து, பந்தத்தை வட்டமாகச் சுழற்றி, தலைப்பாகையின் கட்டவிழ்த்து அடிவயிற்றில் நன்குச்சுற்றி, துளியும் அச்சம் காட்டாது, பந்தம் நிகர்க்க விழிப்பது மீட்டலுக்கான இரண்டாம் தந்திரம். இரண்டாம் நிலையிலும் கச்சிதமாய் கோடன் நின்றான்.

அந்த இரண்டாம் சீண்டலைப் பொறாது, குழியில் பதுங்கியிருந்த அது அசைக்கவியலாத மரத்தை அசைத்து, கிடைத்த பெருங்கற்களையெல்லாம் பள்ளத்தில் வெகுண்டெறிந்து, தன் உறுமலை வெகுவாய் கூட்டி, கையில் சொறியிலையோடுச் சுற்றி சுற்றித் தாவி, அச்சமூட்ட முயற்சித்து, நிறைவாய் மீண்டும் அவ்விளங்கன்றின் குதம் தீண்ட நிற்பதுதான் அதன் அடங்காத சினத்தின் அடுத்தநிலை.

அதற்கும் துளியும் அஞ்சாது, அதனினும் காட்டமாய் மறு உறுமல் எழுப்பிக்கொண்டே, அழைத்துச் சென்ற ‘முதி’ எருமையின் வாலினைப் பிடி;துக்கொண்டே மீட்க முன்னகரும் காப்பு யுக்தியில் கோடனின் அடுத்த நிலை.

பிணை எருமையின் கனைப்பொலியோடு ‘முதியெருமையின்’ கனைப்பும் சேர, மீட்கும் முனைப்பில் பந்தத்தைச் சுழற்றிக்கொண்டே முன்னேறினான் கோடன்.

மனிதர்களின் கண்ணிற்குப் படும்முன்னமே ‘முதி’ எருமையின் காட்சிக்குப் பட்டுவிடும் அதன் உருவமும், மீட்சிக்காய் வாலைப்பிடித்த பொருள்பிடியும், மீளத்துடிக்கும் பிணை எருமையின் உணர்வும் ஒருங்கேகூட, ‘முதி’ எருமை தன் வளைந்த கொம்பால் நொடியில் அதனை முட்டித்தள்ள, சற்றும் தாமதிக்காமல் அது விழுந்த திசைநோக்கி பந்தத்தை நீட்டி, எரியும் அதன் அக்கினி நாவுகளுக்கு மந்திரித்து கொண்டுவந்த தூபத்தையிட்டு அதனைத் துரத்தி ஒழித்திருப்பான் கோடன்.

‘முதி’ எருமை முன்னும், மீட்டது நடுவிலும், பந்தேமேந்திய கோடன் பின்னுமாக திரும்பிப் பார்க்காமல் நடந்துவர, அவர்களை வரவேற்க இன்றும் காத்திருந்தாள் குனிக்கி.

அவளின் முகமெலாம் பெருமிதம் சூடியிருந்தது. அது தன் கணவன் மீதான எல்லையில்லாத பெருமிதம். தன் மந்தையில் இறுதியாய் எஞ்சிநின்ற ‘சாஜ’ கால்வழியில் எஞ்சிய ஒற்றை எருமையை மீட்ட பெருமிதம். அதிலும், பெண் எருமையை மீட்ட பெருமிதம். இது பெற்ற மகளை மீட்பதைவிடவும் மேலானது. எவராலும் நுழையமுடியாத, நுழைந்தாலும் தப்பிக்கவியலாத ஒன்றை தன் கணவன் பராக்கிரமம் செய்த பெருமிதம். ஆதியின் நுட்பங்களை அளவையாக்கி அளந்து வென்ற பெருமிதம்.

“ஏய் கள்ளா… ஏய் கள்ளா…

ஏன் இவ்வளவு நேரம்…

நீ எங்கேதா இருக்கெயோ…”

மீண்டும் அவளின் ஓலம் கலந்த அழைப்பு அலையும் நிலவாய் அலைத்தொழிந்தது.

மேய்ச்சலுக்குச் செல்லும்போதெல்லாம் முத்தமிட்டு அனுப்பும் அந்த ‘சாஜ‘ இளவெருமையினை மீண்டும் உச்சிமுகர அவள் காத்திருந்தாள். இதுகாறும் தன் எருமை மந்தையை வழிநடத்தும் அந்த முதி எருமையை ஆரத்தழுவ துடித்திருந்தாள்.

காப்புக் காட்டினைக் கடந்ததும் வயிற்றில் சுற்றிய தலைப்பாகையை அவிழ்த்து தன் தலையில் சுற்ற விழையும் தன் கணவனின் பந்தத்தினைக் கையில் ஏந்த எதிர்பார்;த்திருந்தாள். ஆனால், இறுதிவரை அந்த அடர்காட்டின் இமைகள் திறக்கபடவேயில்லை. நிசப்தங்களின் உள்ளங்கைகள் அழுத்திப் பொத்திய அக்காட்டின் காதுகளில் துளியும் விலகலில்லை. அவள் அணங்காய் தொடர்ந்தாள்.

“‘எதகே…’ ‘எதகே…’ ஏன் இவ்வளவு நேரம்..”

என்ற அவளி;ன் பதற்றம் ஓய்வின்றி தொடர்ந்தது.

காப்புக் காட்டின் எல்லையைத் தகர்த்து முன்னேற அவளின் கால்கள் பறந்தன. கொடும் பித்து அவளைப் பிசைந்து கொண்டிருந்தது.

2

உறக்கம் கலைந்ததும் நொடிநேரம்கூட தாமதிக்காமல் அங்கு விரைந்தான் காளன்.

“எவ்வே… குனிக்கிக்கா… ஏய்… குனிக்கிக்கா…”

பந்தத்தை அவளின் முகத்தருகே நீட்டி விளித்தான். அவள் முன்னே சென்று நின்றான்.

“அப்பாடா… காளா… நீயு வந்துட்டேயா….

உனக்குத் தெரியுமானு தெரியிலே….

அந்தச் ‘சாஜ’ எருமையின் எளசு மேஞ்சிட்டுத் திரும்பலே…

இந்தா, இந்தத் ‘தொட்ட சோலையிலே’ தான்…

இதுக்கு இதே பொளப்பா போச்சு…

போனவாட்டி கூட்டிவர நீயும் போயிருந்தில்லே… ஆ…

‘கெட்டியையும்’ கூட்டிட்டு போயிருக்காரு…

‘மாசி’ புண்ணியத்துலே காப்பாத்திட்டாருப்பா…

வந்துட்டிருக்காரு… இப்போ வந்துடுவாரு…”

குனிக்கியின் கண்கள் விரிந்துகொண்டே சென்றன. அவளின் கருவிழிகளில் அந்த அடர்காடு அகோரமாய் நகைத்துக் கொண்டிருந்தது.

என்றையும்போல அவள் பேசிமுடிக்கும்வரை பொறுமை காத்தான் அவன். அவளின் உணர்வுப் பிழம்புகள் சற்று ஓயும்வரை காத்திருந்தான்.

அவனேந்திய பந்தத்தின் நெருப்பு காற்றில் அலைந்தது. அவளின் கண்களைக் கூர்ந்தான்.

“குனிக்கிக்கா… அடிக்குற குளுருலே நீ வேறே…

கோடண்ணா வீட்டுக்குப்போயி ரொம்ப நேரமாச்சு..”

“ஏ… நா ரெம்பநேரமா இங்கேதா நிக்குறே”

“அடே.. ஆமாக்கா… நா வரும்போதுதா அந்த எருமையோட பயம்போக்க ‘துரசெ

முள்ளாலே’ அடிச்சிட்டிருந்தாரு…

அதோட குண்டிக்கு எண்ணெ வைக்க உங்கள கூப்டுட்டே இருந்தாரு…

நீ என்னடான்னா இங்கிருக்கே…

அக்கா… சீக்கிரம் போங்க…

அவரு உங்கள தேடுறதுக்குள்ளே போங்க…”

என்று வழக்கம்போல அவளுடனான அதே உரையாடல்.

“அவ்வே” என்றவாறு தன் தலையைக் கையால் அடித்தாள். அவசர அவசரமாகத் திரும்பினாள்.

“ஏய் காளா…. நீ வரலேயா…”

“இல்லே… இல்லே… என்னுடைய எருமையையும் நேத்திலிருந்து காணலே…

இந்தக் காட்டுலேதா இருக்குனு நெனெக்குறே…

செவணண்னா வந்துட்டிருக்காரு…

நாங்கபோயி பாத்துட்டு வந்துடரோ…”

“அய்யோ…

இங்கேபாரு… நீங்க மட்டும் தனியா போயிடாதீங்க…

அதபத்தி உங்களுக்குத் தெரியாது..

அதபத்தி அண்ணா நெறெய சொல்லிருக்காரு. அவசரப்படாதீங்க…

நா போனதும் அண்ணன அனுப்புறே…

அவராலேதா முடியும்பா….

ஏய்… அவசரப்படாதிங்க… நா போனதும் அனுப்புறே…”

என்றவாறு அவள் வீடுநோக்கி விரைந்தாள். அது அவன் எதிர்பார்த்ததுதான்.

பனியில் நைந்துபோகாது, பாறையிடுக்கில் பத்திரப்படுத்தப்பட்ட சுள்ளியை எடுத்து அங்கு நெருப்பு மூட்டினான் காளன். எழுந்த ஒவ்வொரு சில்லுகளும் நிலவைப் பழித்தன. நெருப்பி;ல் சிக்கிய ‘பூசுண்டெக்’ கோலொன்று பயங்கரமாக புகைந்தது. தன் முகம்நோக்கி வந்த அப்புகையை விலக்க முகத்தைத் திருப்பினான்.

தூக்கம் கலையாத கண்களுக்குள் கார்மஞ்சென புகுந்த அதன் புகையைத் தன் கண்களை அழுத்தித் துடைத்து அகற்றினான்.

தீ நன்கு பற்றியெரிந்தது. வீசும் காற்றில் அவனை நோக்கி தீயின் கரங்கள் நீண்டுக் கொண்டிருந்தன. வெப்பம் தாளாமல் தொடைமேல் உள்ளங்கையை விரித்துக் காத்தான். அவன் எதிர்பார்த்ததற்கு முன்பாகவே மீண்டும் அங்கு வந்திருந்தாள் குனிக்கி.

3

நெருப்பின் நாவுகள் இரவைச் சுவைத்துக் கொண்டிருந்தன. இடுப்பில் கைவைத்து பெருமூச்செறிந்தாள் குனிக்கி. அவளின் செங்காந்தள் கண்களின் ஓரவிளிம்பில் சில பனித்துளிகள் பூத்திருந்தன. கூதிர்காற்றிலும் அவளுக்கு வியர்த்தொழுகியது. பலநூறு வார்த்தைகளை அடங்கி பெருத்த அவளின் வாய் கேள்விக்குத் துடித்தது.

அவள் கேள்வியைத் தொடுப்பதற்கு முன்னமே காளன் முந்திக்கொண்டான். கடந்தமுறையின் அனுபவம் அவனுக்குக் கைகொடுத்தது.

ஏமாற்றத்தின் உச்சியில் குனிக்கியின் பொறாத கண்ணீர் ஆறாக ஓடுவதைக் காணச் சகியாமல், அதைத் தவிர்க்க அவனே முந்தினான்.

“ஏங்கக்கா… மறுபடியும் இங்கே…

என்னாச்சு… இப்படி மூச்சுமுட்ட வந்திருக்கீங்க..”

குனிக்கிக்குப் பெருமூச்செறிந்தது.

மூச்செறிந்தவாறே,

“இல்லே.. இல்லே… அவரு..

ம்மா… அவர வீட்லே காணும்..”

என்று அவள் முடிப்பதற்கு முன்னமே,

“அய்யோ அக்கா… இப்போதானே உள்ளே போனாரு…

நீங்க பாக்கலேயோ… அடடே…

ஆனா, அவரு உங்கள பாத்ததா சொன்னாரே…

இப்போதா போனாரு… அவரு போட்ட சுள்ளிகூட எரிஞ்சு முடியலே பாருங்க…

செவண அண்ணாவோடு என் எருமைய தேடிப் போயிருக்காரு…

அக்கா, ஒருவேளை அவரு வர்றதுக்கு நேரமாச்சுன்னா, காலையிலே எருமைகளை

‘மேசுக்கு’ தொறந்துவிட சொன்னாரு…

நா உங்களுக்கு இத சொல்லக் கிளம்புனே… ஆனா, நீங்களே வந்துட்டீங்க போங்க…

அவரும் சீக்கிரமா வந்துடுவாரு அக்கா… நீங்க வீட்டுக்குப் போங்க..

அவள் அவனை வெறித்து நின்றாள்.

“ஆமாக்கா நெசமாதா…

எருமெயின் சப்தம் காதுக்கு எட்டுது… அது கிட்டேதான் இருக்கும்… சீக்கிரமா வந்துடுவாரு நீங்க போங்க..”

மீண்டும் அவளுக்குப் பித்தேறியிருந்தது. கசிந்த மனம் கல்லாகிக் கொண்டிருந்தது. விரக்தியின் ஒலி அவளின் அடிமனதிலிருந்து ஓயாமல் எம்பி எம்பி குதித்தது.

கோடன் இட்டதாகக் கூறிய சுள்ளியை வெறித்துப் பார்த்தாள். அது எரிந்து முடிந்தது. அந்த அடர்காட்டை தன் எரியும் பார்வையால் மீண்டும் அறைந்தாள்.

முழுநிலவு அக்காட்டின் மையத்தில் தவழ்ந்து கொண்டிருந்தது. அவளின் இதயத்துடிப்பு புறமெங்கும் தொனித்துக் கொண்டிருந்தது. அது உணர்வின் ஓலங்களை அக்காட்டிற்கு விடாது விடுத்துக் கொண்டிருந்தது.

“ஏய்… காளா… கவலே படாதே..

அவரு உன் எருமைய கூட்டிட்டு வந்துடுவாறு..”

என்றவள் திரும்பிப் பார்க்காமல் வீட்டினை நோக்கி நகர்ந்தாள்.

அவளின் காட்சி மறைய வெள்ளி முளைத்தது. எழுந்து நின்று நெட்டிமுரித்தான் அவன். உடல் முழதும் ஏறிய வெப்பத்தில் உறக்கத்தின் முரட்டுத்தனம் கூடியிருந்தது. கண்கள் கட்டிக்கொண்டு வந்தன.

சன்னமாய் ஒரு சீழ்கையொலி அவனை நெருங்கி வந்துகொண்டிருந்தது. மீண்டும் சில விறகுகளை நெருப்பில் இட்டவன் முக்காடுப்போட்டு அமர்ந்துகொண்டான். சீழ்க்கையொலி பெருகி அருகியது. செவணன் வந்து நின்றான்.

“காளு… இது என்னடா பொளப்பு…

இன்னு எத்தனெ நாளுக்குத்தா இப்படி..

உம் பொண்டாட்டி வீட்டுக்கு வெளியே, எலும்ப உருக்குற இந்தக் குளுருலே உனக்காக

ரொம்பநேரமா காத்திருக்கா…”

என்றாவாறு மண்ணால் செய்த புகைப்பிடிக்கும் குழாயான ‘பத்தியை’ நெருப்பில் லோசக வாட்டினான். அடர் சிவப்போடு மெல்லிய கருப்பும் படிந்திருந்த அந்த ‘பத்தி’ நெருப்பின் பொன்னொளிப் பட்டதும் பளபளத்தது. தொடர்ந்து புகையிலையையும் லோசாக வாட்டி, உள்ளங்கையில் இட்டு நன்கு தேய்த்தான். அதை ‘பத்தியின்’ அகன்ற மேல்முனையில் இட்டு நிரப்பினான்.

“இதுக்கொரு முடிவு பன்னியாகனுமே”

நன்கு எரிந்துகொண்டிருந்த கொள்ளியை எடுத்து பத்தியைப் பற்றவைத்தான்.

“நாளைக்கே ஊருலே பேசிடுறே…

அவள அடச்சு வைக்குறத தவிர வேறே வழியில்லே…

நீ எத்தனே நாளுதா இப்படி பின்னாடியே வந்துட்டிருப்பே…. ஆ… சொல்லு…

அவள புலி கிலி அடிச்சதூனா என்ன செய்யுறது…

அதவிட பெரிய வம்பு… கோடண்ணா தீத்துக்கட்டுன அதுக்கு வாரிசு இருக்கானுவேறே

தெரியலே…

அதனுடைய இரத்தஞ் சிந்தின எடத்துக்கு அதோட வம்சம் இனிவராதுதான்… ஆனாலும்,

‘பட்டகொரெ’ ஊருலே நடந்தது உனக்கு தெரியாதா பின்னே…

பாவம் குனிக்கி… பழி பாவத்திற்கு ஆளாகிட கூடாதில்லே..”

என்றவாறு இழுத்து இழுத்துப் புகையை ஊதினான் செவணன்.

‘பத்தியை’ அவன் இழுக்க இழுக்க அதன் முகப்பில் உள்ளோடிய நெருப்பையே வெறித்திருந்தான் காளன்.

இழுக்க, இழுக்க எரிந்து புகையும் அதைபோலவே கோடனின் நினைவை அவன் மனம் இழுத்து இழுத்துப் புகைத்துக் கொண்டிருந்தது.

‘தோடே’ சரிவின் பாறையெங்கும் அன்று கொட்டிக்கிடந்த இரத்தத்தின் நினைவோ எரியும் நெருப்பினும் மேலாய் அவன் நினைவில் தகித்துக் கொண்டிருந்தது.

“ஏய் செவணண்னா… குனிக்கியக்காவெ என்ன பைத்தியம்னு நெனச்சீங்களா?

அவள அடச்சு வச்சுட்டு நம்ம நிம்மதியா தூங்கிட முடியுமா?..

அதெல்லாம் இருக்கட்டும்… அவள அடச்சு வச்சிடதா முடியுமா…?

இன்னு எத்தன நாளானாளும் இப்படி வந்துதா ஆகனும்…

ஏன்.. நானே இல்லாட்டியு நீங்க வரமாட்டிங்களா?”

“இல்லேடா… அவளுக்கு எடுத்துச் சொல்லலானுதா…”

“எடுத்துச் சொன்னா மட்டும்…

அவங்களுக்குப் புரியாது அண்ணா…

அது நமக்குப் புரிஞ்சப்பறமும் இப்படி புரியாம பேசலாமா?... ஆ..

மொறப்படி பாத்தா, இந்த ஊர்லே வீட்டுக்கொருத்த அந்த வீட்டுக்குக் காவலிருக்கனும்…

அந்த நாள மறந்துட்டீங்களா?

கோடண்ணாவைத் தவிர வேறே எவனாலே அப்படிச் செஞ்சிருக்க முடியும் சொல்லுங்க…

வெவரம் தெரிஞ்ச நாள்ளிருந்து அது எத்தன பேரே, எத்தன எருமெய கொன்னிருக்கும்…

ஏன்…. உங்க தாத்தாவே அதனாலே கொலையுயிரா கெடந்தத மறந்துடீங்களா?...”

“ம்… ம்… சரிதான்….”

“அதனுடைய தலைய எடுக்கறது என்ன சாதாரணமானதா..

அதுகிட்டே சிக்கிய எருமையையு கவனிச்சுகிட்டு, கொடும் மாயத்துலே சொழலுற

அதையும் சமாளிக்க அவரு எப்படி நின்னுறப்பாரு…

அப்பாடா… யோசிச்சாலே தலெ சுத்துது….”

தன் பக்கமாக எழுந்தெரிந்து கொண்டிருந்த நெருப்பின்சூடு அவனுக்கு உறைக்கவில்லை. சில நெருப்புச் சில்லுகள் அவனது தலைப்பாகையில் படிந்திருந்தன. அது மசிந்து சாம்பல் சிந்திய கரும்புள்ளிகளில் அந்தக் கருப்பு நாளின் பக்கங்கள் அவ்விருவருக்காய் புரண்டுக் கொண்டிருந்தன.

“இல்லேடா காளு… நாம அன்னிக்கு தப்புப் பண்ணிட்டோ…

அங்கங்கே செதறி ‘ஜள்ளெயா’ கெடந்த கோடண்ணாவின் ஒடம்பு பாகத்தெயெல்லா

கொண்டாந்து சாவு செஞ்சிருக்கனும்…”

“செஞ்சிருந்தா?...”

“இல்லே… குனிக்கிக்குப் புரிஞ்சிருக்குமில்லே…”

“அண்ணா, என்ன சொல்லுரீங்க…

அந்த ஆறடி மனுஷன ‘ஜள்ளெயா’இ அங்குல அங்குலமா கொண்டாந்து சாவு செஞ்சிருந்தா குனிக்கி உசரோடவா இருந்திருப்பா?

பாட்ட பூட்டனாலேயே செய்யமுடியாதத செஞ்சவர இப்படி சாவுசெஞ்சா ஒலகோ நம்மள மெச்சுமா?... சொல்லுங்க…”

‘பத்தியில்’ ஏறிய புகையிலையின் இறுதிச் சுற்று எரிந்து புகைந்தது. அந்தக் கடைசி இழுப்பின் புகையும் செவணனின் முகத்தில் அன்றைய நினைவின் இருளைப் படர்த்திச் சென்றது.

கீழ்வானம் விழித்தது. ‘தொட்டசோலை’ உறங்கிக் கொண்டிருந்தது. அப்புலமெங்கும் மந்தை எருமைகள் படரத் தொடங்கின.

மசிந்து எரிந்து கொண்டிருந்த நெருப்பினை ‘நேரி’ மரத்தின் கோல்கொண்டு கிளறி அணைத்தான் காளன். அது காப்புக் காட்டிற்குமுன் இட்ட நெருப்பு. அதை அப்படித்தான் அணைக்க வேண்டும்.

எழுந்த கரும்புகை காளனின் கிளர்ச்சிக்குத் தூபமிட்டது. கோடனால் துண்டாடப்பட்டு துண்டு துண்டாக, பெரிய பெரிய ‘ஜள்ளெயாக’ கிடந்த அதன் அங்கங்களை எரித்தபோது நாறி எழுந்த அதே கரும்புகை.

அதை நினைத்ததும் இறுகிய பச்சை மாமிசத்தைச் சுட எழுந்த கருகும் நாற்றம் காளனின் வாய்க்கும் நாசிக்கும் இடையில் மீண்டும் நமத்தது. கடைநாவை மேலண்ண நாசித்துளையில் அழுத்தி, செருமித் தேய்த்து அந்த நாற்றத்தை விழுங்கித் தீர்க்க முயன்றான். அந்த முயற்சி தொடர்ந்தது. அது மானுட உடல் சலத்தின் ஆதிக்கூறு. நீக்குவது அவ்வளவு எளிதல்ல. கைகளில் படிந்திருந்த அதன் இரத்தமும் அப்படித்தான். கழுவ கழுவ நிண நாற்றம்.

கோடன் மீட்ட ‘சாஜ’ கால்வழி எருமையின் இளங்கன்றும், அந்த முதி எருமையும் அங்கு வந்திருந்தன.

பொழுதுசாய்ந்து காளன் ஓட்டிவரும்வரை அவை அந்தக் காப்புக்காட்டில், அதே ‘பைகெ’ மரத்திற்கடியில்தான் கோடனுக்குக் காத்திருந்தன. காளன் எவ்வளவு முயன்றும் அதனிடம் உண்டான இந்தப் பழக்கத்தைப் போக்க இயலவில்லை. குனிக்கியின் பித்துப்பார்வை அவைகளையும் பீடித்திருந்தன.

இப்போதெல்லாம் மந்தைகளுக்கு அவ்வடர்காட்டின் பசுந்தழைகளே பிரதான உணவு. இந்தச் சுதந்திரம் கோடனின் இரத்தத்தில் விளைந்தது.

4

சூரியன் மலைமுகட்டில் அமர்ந்திருந்தான். ‘கெட்டிக் கம்பைக்கு’ விரைந்தான் காளன். ஒரு மாதத்திற்குத் தேவையான மளிகைப் பொருட்களை வாங்கினான். ‘ஆமெசேமெ’ கூடையில் இட்டு தலையில் சுமந்துகொண்டு வேகமாகத் திரும்பினாள். அவன் கணித்ததைப் போலவே குனிக்கி மீண்டும் ‘தொட்ட சோலையை’ நோக்கி சென்றுகொண்டிருந்தாள்.

“ ஓ.. குனிக்கிக்கோய்…

ஓ… குனிக்கிக்கோய்..

எங்கே போறீங்க….

ஒரு முக்கியமான ஜோலி.. சீக்கிரம் வாங்க…”

என்றவாறு அவளின் வீட்டை நோக்கி விரைந்தான். முற்றத்து திண்ணையில் கூடையை இறக்கினான். தன் வலதுகாலைத் திண்ணையின்மேல் வைத்து அழுத்தினான். நெடுநடையால் பிடித்திருந்த கால் கண்டத்தை அழுத்திப் பிசைந்து கொடுத்தான்.

“ஏய்… களா… என்னதிது…”

“அக்கா, கோடண்ணா கொடுக்கச் சொன்னாரு”

அவள் புரியாமல் விழித்தாள்.

“ஓ… சரி… சரி… உன் எருமைய அவரு பத்திரமா கொண்டாந்து சேத்தாரா…”

“ஓ… அதெல்லாம் நல்லப்படியா…

அக்கா, அண்ணே ‘போசண்ணாவோடு’ ‘சீரியூர்’ ‘எம்மட்டிக்குப்’ போயிருக்காரு…

அங்கே கொஞ்ச எருமைங்களுக்கு ஒடம்பு சரியில்லெயாமா…

மருந்து செய்ய அண்ணன கூப்டுட்டுப் போயிருக்காரு…

உங்ககிட்டே சொல்லிட்டு போகலானுதா நெனச்சாரு… அதில நெறெ மாச ‘ஈத்து’ எருமெக

வேறே ரொம்ப முடியாம இருக்குதா….

வேறே வழியில்லக்கா…

அடுத்த பௌர்ணமிக்கு வந்துருவேனு சொல்ல சொன்னாரு…

உங்கள கோச்சிக்கவேணானு சொன்னாரு…”

என்று காளன் சொல்லிமுடிக்க அதுவரை அவனை வெறித்துப் பார்த்திருந்த, தூக்கமின்றி தேய்த்துச் சிவந்த தன் விழிகளைத் தரைகுத்தி நிறுத்தினாள். திரண்டிருந்த கண்ணீரை மறைக்க அங்குமிங்கும் திரும்பி சமாளித்தாள். கீழுதடை பல்லால் விட்டு விட்டுக் கடித்தாள்.

‘என்ன மனுஷ.... என்ன ஒருவாட்டி பாத்துட்டு போயிருக்கலாமில்லே…

அதுக்குகூட கஷ்டமா…’

பொங்கிவந்த வார்த்தையை அடக்கினாள்.

போலிப் புன்னகையைச் சுமந்துகொண்டு அக்கூடையை வீட்டிற்குள் கொண்டுச் சென்றாள். கையில் காளனுக்கு மோரோடு வந்தாள்.

கோடனைப்பற்றி அவளுக்கு நன்கு தெரியும். அவன் அப்படித்தான். அவனுக்குப் பிள்ளைகளைவிட எருமைகள்தான் பெரிது. அவனுக்கான உரையாடல் அவளுக்குள் மானசீகமாகத் தொடர்ந்தது.

காளன் மோரைக் குடித்து முடிப்பதற்குள் கையில் கோடனின் மாற்றுத் துணிகளைக் கொண்டுவந்தாள். அதில் அவனது தலைப்பாகைத் துணியை மடிப்புக் கலையாமல் மேலே வைத்திருந்தாள்.

அன்று கோடனின் குருதியில் நனைந்த இந்தத் தலைப்பாகைத் துணியை, அவனின் நினைவாக குனிக்கிக்கு அளித்தபோதுதான் அவளை இந்தப் பித்துப் பிடித்தது.

துணிகளையும், கையில் இறுக்கமாகப் பிடித்திருந்த தலைப்பாகைத் துணியையும் அவனை நோக்கி நீட்டினாள்.

தனக்குச் சொல்லிவிட்டு போகவில்லையே எனும் ஆற்றாமை அவளின் நெஞ்சு புடைக்கப் பொங்கியது.

“காளா… இந்த மாத்துத் துணிய அவருக்குச் சேத்திரு…

கொஞ்சநாளாவே இந்தத் தலைப்பாகேத் துணி இங்கேதா கெடக்கு…

குளிருக்கு அவரு என்ன பன்னுறாருனு தெரியலே… இதெயு அவருகிட்டே சேத்திரு…”

குனிக்கியின் கண்ணீர் காளனைத் தொற்றியிருந்தது. தலையசைத்து அதை வாங்கியவன் திரும்பிப் பார்க்காமல் நகர்ந்தான்.

திண்ணையில் அமர்ந்தாள் அவள். மீண்டும் அவளுக்கு அவ்வடர் காட்டிலிருந்து எருமைகளை மீட்டதுகுறித்து கோடன் கூறிய காட்சி விரிந்தது. அடர் இருட்டில் கோடன் பந்தத்தைச் சுழற்றும்காட்சி அவளின் கண்களில் திரண்டுக் கொண்டிருந்தது.

“காளா… நம்ம பாட்ட பூட்டங்க காப்புக் காட்டுக்காக வச்சதூனு விட்டாக்கா அது

எல்லெமீறி போகுது…

ஒவ்வொருவாட்டியு நா அவ்வளவு செல்றே… கொஞ்சங்கூட புண்ணியமில்லே…

அது அதனோட குணமா இருந்தாலு எல்லாத்துக்கு ஒரு எல்லெ இருக்கு….

இது சரிப்பட்டு வராது…

கடமைய மறந்து நரப்பசியிலே அலையுது….

இருக்குறதுள்ளேயே அதுக்கு பெரிய நர ‘ஜள்ளெக்கு’ அலையுது.

ஏய்.. காளா ‘ஜள்ளென’ தெரியுமில்லே? இருக்குறதுலேயே பெருசான மாமிசத் துண்டூனு

அதுக்கு அர்த்தம்…

இது பூட்டன் காலத்துப் பாஷே...

அடுத்தவாட்டி அது எல்லெமீறுனா அதுதா அதுக்கு கடைசி…

அதனுடைய பரட்ட தலைய கொத்தா புடிச்சி தலைய ஒரே வெட்டா…”

என்ற கோடனின் இறுதி உரையாடல் அப்புலமெங்கும் எதிரொளித்துக் கொண்டிருந்தது.

அவன் சென்னதைப் போலவே ‘தோடே’ பள்ளத்தின் விளிம்பில் கோடனின் கையில் வெட்டுண்டுக்கிடந்த அதனின் தலை தோன்றி தோன்றி மறைந்தது.

சாய்வின் விளிம்பில் பொழுது நின்றொலிர்ந்தது. ‘சாஜ‘ எருமையின் நினைவெழுந்தது. இருட்டிவிட்டால் அது தடுமாறும். ‘தொட்ட சோலைக்கு’ விரைந்தான்.

அது ‘பைகெ’ மரத்தின்கீழே அதே இடத்தில் அமர்ந்திருந்தது. அருகி அணைந்தவன் அதை ஓட்டிச்செல்ல தூண்டினான். அது சற்றும் அசரவில்லை. ‘தோடே’ பள்ளத்தின் மேல் விளிம்பினையே வெறித்திருந்தது. அருகில் சென்று எட்டிப்பார்த்தான். கீழே தெரியும் செங்குத்துப் பாறைமேல் அன்று சிதறி ‘ஜள்யெயாய்’ கிடந்த கோடனின் இதயம் துடித்துக் கொண்டிருந்தது.


இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.