Art Courtesy: Edvard_Munch

எனக்கு  பிடித்த மனிதர்கள் என்று என்னுடைய ஊரில் விரல் விட்டு எண்ணக் கூடியவர்கள் சிலர் தான் இருக்கிறார்கள். அவர்களில் சந்தியா அப்பு மிக முக்கியமானவர். வயது எண்பதை நெருங்கினாலும் சோர்வில்லாமல்  உழைத்த மனுஷன். வாளிப்பான தேகம், விறைப்பான முறுக்கு ஏறிய தோல் பட்டைகள். ஒரு  காலத்தில் பெயர் போன சிறகு வலைத் தொழிலாளியாக அறியப்பட்டவர். இப்போது விடு வலைத் தொழிலுக்கும், கூடு வைக்கிற தொழிலுக்கும் போய் வருகின்றார். எங்களுடைய ஊர்  கோயிலில் இருக்கும் சிறிய அறை ஒன்றிலே நானும் என் தந்தையின் தகப்பனாரான  செபஸ்தி என்று ஊரவர் அழைக்கும் செபஸ்தியார் அப்புவும் வசித்துவந்தோம். அப்பு வசிப்பதற்காகவே  கோயில் நிர்வாகத்தினர் அந்த அறையை கொடுத்திருந்தார்கள். நாங்கள் எல்லோரும் அப்பையாவை  அப்பு என்றுதான் அழைப்பது வழக்கம். அப்பு கோயிலில் சங்கிடத்தார் வேலை செய்கிறவர்.

நான்   பதினான்கு  வயது வரைக்கும் அங்கே இருந்து தான் பள்ளிக்குச் சென்று வந்தேன். ஒரு மார்கழி மாதக்குளிரோடு அப்புவின் உயிரும் அடங்கிப்போனது. அப்பு இறந்த பின்னர் நான் பள்ளிக்கூடத்துக்கு முழுக்குப் போட்டுவிட்டு கடல் தொழிலுக்குப் போகத் தொடங்கினேன். அப்புவோடு நான் இருந்த காலத்தில்,  ஒரு நாள் ஞாயிறு காலையில் அப்புவை தேடி ஒருவர் வந்தார். அவர்தான் சந்தியா.  தென்மோடிக்
 கூத்தில் போட்ட ஒப்பனை கலையாத முகத்துடன் அவர் அங்கு  வந்திருந்தார்.

“இவன்  என்ர பேரன் கொஞ்சம் முசுப்பாத்தியாக எப்பவும் கதைப்பான்”  என்று. சொல்லிக்கொண்டே  அவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார் அப்பு.  முதல்  நாள் இரவு நடந்த  கூத்தில் கோமாளி வேடமணிந்த சந்தியாவின்   நடிப்பை ஏற்கனவே  நான் எங்கட அப்புவுக்கு நடித்துக் காட்டியபோது அவர் விழுந்து விழுந்து சிரித்து விட்டு

"அவர்  நல்ல நடிகன், அதோட நல்ல மனுஷன். ஒருத்தரைப் பார்த்து வா போ என்றுகூடக் கதைக்க மாட்டார். மிகவும் மரியாதையாகப்  பழகுபவர். சிறு வயதில் இருந்தே நாங்கள் நல்ல  நண்பர்களாக இருக்கிறம். ஒருவகையில் அவரும்  நம்மட சொந்தக் காரர்...! " என்று அப்பு சொன்னார். அவரைப் பற்றி சொல்லும்  போது அப்புவின் கண்களில் ஏதோ ஒரு இனம் புரியாத கசிவும், இரக்கமும் கரைந்து இருந்ததை கூர்ந்து அவதானித்தேன். அப்பு தொடர்ந்து ஏதாவது அவரைப் பற்றி கதைப்பார் என்று எதிர் பார்த்தேன். ஆனால் அதற்குமேல்  எதுவும் சொல்லாமல் மௌனமாக இருந்தார். ஏதாவது சோகம் அவரது நெஞ்சை நிறைக்கும்போது,  எதுவும் பேசாமல் அமைதியாகவே இருப்பது அவரது  வழக்கம். என்னுடைய ஆச்சியின் மரணம் அவரை நடைப்பிணமாக்கிவிட்டது.

 “அவடா  சாவு நல்ல சாவுதாண்டா தம்பி. நித்திரையோடு உயிர் போச்சு மனிசிக்கு”.  மூக்கை சீறிக்கொண்டு சேலைத்தலைப்பால் துடைத்து சுத்தம் செய்த படியே அம்மா பலமுறை சொல்வதை கேட்டிருக்கிறேன். ஆமாம் ஆச்சிக்கு அப்புவில சரியான பாசம். சந்தியா அப்புவை என்னுடைய கோயிலில் இருக்கும் அறையில்  சந்திப்பதற்கு முதலே அவரை ஊரில்  பல இடங்களில் கண்டிருக்கிறேன். ஆனால் ஒரு நாள் கூட கதைத்தது கிடையாது.  மிகவும் நல்லவர் என்ற பெயர் அவருக்கு ஊரில் இருந்தது மட்டும் எனக்குத் தெரியும்.

அன்றுதான்  அவரை முதல் முதலில் நேரில் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அவருக்கும் கிட்டத்தட்ட அப்புவின் வயதே இருக்குமென்பதால், நான் அவரை சந்தியா அப்பு என்றே கூப்பிடத் தொடங்கினேன். அன்றிலிருந்து என்னுடைய அப்புவைப் போலவே அவரையும் நினைத்துப்பழகத் தொடங்கினேன்.

எங்கு  கண்டாலும் என்னோடு பகடி விட்டு சிரிச்சுக்கிட்டே கதைப்பார். பொதுவான பேச்சு என்றாலும் சரி, படிப்பு , வாழ்க்கை விடயமானாலும் சரி உண்மை, நேர்மை, நேர்த்தி அவரிடம் நிறைவாக  இருப்பதை  நாளடைவில் உணர்ந்தேன்.  திருச்சபையில் உறைந்து கிடக்கும் தத்துவங்கள் அவருடைய வார்த்தைகளில்  வழிந்து ஓடிக்கொண்டிருக்கும். ஒவ்வொரு முறையும் கதைக்கும் போது சொற்களை கூர்ந்து கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் போல் தோன்றும். குடிப்பழக்கம், சிகரட் போன்ற தீய பழக்க வழக்கங்கள் அவரிடம் இல்லை. சிறந்த உதை பந்தாட்ட வீரராகவும் ஊரில் திகழ்ந்தவர். சிறு வயதிலேயே தந்தையை
 இழந்து தவித்தபோது அவருடைய அம்மா மீன் விற்று இவரை படிக்க வைத்தார். அதனால் பெற்ற தாய் மீது அளவற்ற அன்பு கொண்டவர். அதனல்தானோ என்னவோ,  பெண்களை மதிக்கும் பண்பும்  அவரிடம் நிறையவே இருந்ததை அவதானித்தேன். தன் தாய், தன் மீது வைத்திருந்த  அன்பையும், அக்கறையையும் பற்றி  என்ணோடு கதைக்கும் போதெல்லாம்  அடிக்கடி சொல்லுவார்.

எட்டாம் வகுப்பு வரை எங்கட ஊரில் இருக்கிற றோமன் கத்தோலிக்க கலவன் பாடசாலையில் தான் கல்வி பயின்றார். அதன் பின் கொழும்புத்துறையில் இருக்கும் கத்தோலிக்க குரு மடத்தில் சேர்ந்து துறவியாக போவதற்காக படிக்கத் தொடங்கினார். ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை, சில ஆண்டுகள் மட்டுமே  அவரால் படிக்க முடிந்தது. பின்னர் அவர் ஊரோடு வந்து ஒட்டிக் கொண்டார். குரு மடத்தில் சேர்ந்து படித்ததால் ஆங்கிலம் சரளமாக பேசவும், எழுதவும், வாசிக்கவும் அவரால் முடிந்தது. அதனால் ஊரில் பலருக்கு இலவசமாக ஆங்கிலம் கற்றுக் கொடுத்தார். ஆங்கிலம் கற்றுக் கொடுத்ததால் அவரை ‘இங்கிலிஷ் மாஸ்டர்’ என்றும் சிலர் அழைப்பதுண்டு. அப்படி அவரிடம் படிக்க வந்தவர்களில் எலிசபெத் என்ற மாணவியும் இருந்தாள். பிற்காலத்தில் நான் ஆச்சி என்று அன்போடு கூப்பிட்ட   சந்தியா அப்புவின் மனைவிதான் எலிசபெத். எலிசபெத் ஆச்சி, அப்புவை ஒரு தலைப் பட்சமாக விரும்பினார்  என்பது எவருக்குமே அப்போது தெரிந்திருக்கவில்லை. பெற்றோர்களாகவே பேசி இருவரையும் சேர்த்து வைக்க முடிவெடுத்த பின்புகூட எலிசபெத் அப்புவிடம் தன் காதலை வெளிக்காட்டவில்லை.

முப்பது  ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் இது..! சந்தியா அப்புவிற்கும் எலிசபெத் ஆச்சிக்கும் திருமணம் செய்து வைப்பதற்கான முன் ஏற்பாடுகள் ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று பின்னேரம் பூசை முடிந்த பின் நடைபெற்றது. அன்றுதான் இவர்கள் தனிமையில் சந்தித்துக் கொண்டார்கள்.  அந்தச் சந்திப்பை  இப்போது நினைத்தாலும் சந்தியா அப்பு விழுந்து விழுந்து சிரிப்பார். அவர் சிரிக்கும் பொழுது உலகத்துக்கே கேட்கும் படி இருக்கும்.திருமண ஏற்பாட்டுக்கான சம்பிரதாயங்கள் முடிந்த பின்னர், அன்று மாலையில்  அவர்கள் இருவரும் தனிமையில் அருகருகே இருந்தபடி இப்படித்தான் கதைத்தார்கள்.

“என்னை உங்களுக்குப் பிடிக்குமா?” சந்தியா அப்பு கேட்டார்.

“என்னுங்கோ இப்படி கேக்குறீங்க…? உங்கள நான் ரொம்ப நாளாகவே விரும்பி இருந்தனான். உங்ககிட்ட டியூசனுக்கு வந்ததே உங்களைப் பாக்குறதுக்கு தானுங்க. அப்பவே நான் முடிவெடுத்திட்டேன், கல்யாணம் செய்தா  உங்களத்தான் செய்ய வேணும் எண்டு. ஆனா உங்க கிட்ட விருப்பத்தை சொல்லுறதுக்கு  பயமா இருந்திச்சு. அதனால் தான் மனசில இருந்த விருப்பத்தை மூடி மறைச்சிட்டேன். இப்ப கூட உங்களுக்கு பக்கத்தில இருந்து கதைக்கிறதுக்கு பயமாகத்தான் இருக்குது…”  என்று எலிசபெத் ஆச்சி சொன்னதும் அவர் விக்கிப் போனார். சிறிய அமைதியின் பின் சொன்னார்

“ஓ அப்படியா..? அப்பவே எனக்குத்  தெரியாம போச்சே..!” என்று சொல்லியபடி   சற்றே தலையை சரித்து ஆச்சியின் காதை ஒட்டி மூச்சுக் காற்று  விழுகிற அளவுக்கு நெருக்கமாக உட்கார்ந்து கொண்டார் அப்பு.  ஆச்சி அதை எதிர்பார்த்து இருந்த மாதிரி மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டார்.

“முன்பே தெரிஞ்சிருந்தா என்னங்க செய்திருப்பீங்க..?” ஆச்சி அவருடைய கண்ணைக் கூர்ந்து பார்த்தபடி, காதருகில் மெதுவாகக் கேட்டாள்.

“என்ன செய்திருப்பேன் என்டா கேக்குறிங்க….. இழுத்துட்டு ஓடிப் போயிருப்பேன்...! ஆனால் என்ன ஒன்று.... இங்கிலீஷ் சொல்லிக் கொடுக்கிறன் - சொல்லிக் கொடுக்கிறன் எண்டு  சொல்லிக் கொண்டே  பணக்காரப் பொட்டையை ‘அரைச் சுவாமி சந்தியா’ கூட்டிக் கொண்டு ஓடிட்டான் எண்டு சனங்கள்  சொல்லுவாங்க, அவ்வளவுதான்!”. என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.

“சனத்துக்கு ஏன் பயப்பட வேணும்...? நான் ஏற்கனவே என்ர அம்மாயிட்டேயும், அப்பாயிட்டேயும் சொல்லிப் போட்டன். அப்பா முதலில் கொஞ்சம் தயங்கினார், பிறகு யோசிக்கிறன் என்றார். ஆனால் முடிவில் ஓம் எண்டு சொல்லிட்டாங்க. அம்மாவிடமிருந்து உடனடியாகவே சம்மதம் கிடைச்சிட்டுது. ஆனால்,  உங்க  எண்ணம் தெரியாமலே இருந்தது. தெரிந்திருந்தால், நாம ஓடிப்போய்த்தான் கல்யாணம் செய்ய வேணூம் எண்ட எண்ணமே எழுந்திருக்காது..!” என்று சிரித்துக் கொண்டே எலிசபெத்  சொன்னார்.

“அப்படியா  சொல்றீங்க. நாம மட்டும் வாழ்ந்தால் போதும்னு நினைக்கக் கூடாது நம்மை சார்ந்தவங்களும் வாழத்தானே வேண்டும்.”

“என்னங்க  இப்படிச் சொல்றீங்க..நீங்க  உங்கட அம்மாவை மனசில வைச்சுக் கொண்டு தானே இப்படி சொல்லுறீங்க…? நான் உயிரோடு இருக்கும் வரை உங்களுடைய அம்மாவை எந்த கஷ்டமும் இல்லாமல் பாக்குறது என்னுடைய பொறுப்புங்க. நான் வணங்குற மரியாள் மீது சத்தியம் பண்ணுறேனுங்க.”

“ஐயோ  நான் அப்படி நினைக்கல. என்னை நீங்கள் தவறாக புரிந்து கொள்ள வேணாம். எங்க அம்மா பாவம். அவங்க சின்ன வயசிலேயே விதவையகிட்டாங்க. அவங்களுக்கு எல்லாமே நான் தான். அவங்களால தனியாக வாழ முடியாது. அதை மனசுல வச்சுத்தான் சொன்னனான். அப்படிச் சொன்னது தவறா இருந்தா மன்னிச்சுக்கோங்க”

"நான்  வணங்குற தெய்வத்துக்கு சமமான உங்கள நான் மன்னிக்கிறதா..? ஐயோ! இப்படியெல்லாம் சொல்லாதீங்க என்று சொல்லிக் கொண்டு கண்களில் நீர் கசிய அவருடைய  கையை இறுகப் பற்றிக்கொண்டார்.

 எங்களுடைய  பூர்வீகம் கரையூர் ஆகா இருந்தாலும் எங்கள் முப்பாட்டன் காலத்திலேயே அங்கிருந்து இங்கு வந்து குடியேறி; வாழ்ந்து வருகின்றோம். எங்கள் ஊரில் மிகச் சிலரே வசதி உள்ளவர்களாக இருக்கின்றார்கள். அவர்களில் எலிசபெத்தின் குடும்பமும் ஒன்று. நாலு அறை கொண்ட வீட்டில் இரண்டு அறையை  தவிர மற்ற அறைகள் பாவிக்க படாமலே இருந்தன. எலிசபெத்தின்  அறையில் இருக்கும் வானொலிப் பெட்டியில் எப்போதும் தமிழ் பாடல்கள் மெல்லிய சத்தமாக ஒலித்துக் கொண்டே இருக்கும். சில சமயம் பழைய பாடல்கள் ஒலிக்கும் போது தன்னை மறந்து அந்தப் பாடலுடன் எங்கள் ஊரில் இருக்கும் பீடிக்  கொம்பனியில் வேலை செய்யும் பெண்களைப் போல இணைந்து பாடுவார்.

வெளிப்பக்கமாக  இருந்த வீதி வழியாக வந்த மோட்டார் சைக்கிள் சட்டென்று ஆச்சியின் வீட்டு வாசலில் நின்றது. கையில் பெரிய உடுப்பு பையுடன் ஆச்சியின் அப்பா இறங்கி நடந்து வந்தார். அவர் மெல்லிய புன்னகையுடன் கையில் கொண்டு வந்த பேக்கை அப்படியே அப்புவிடம் கொடுத்து விட்டு அறைக்குள் நுழைந்தார்.  அவர் கொடுத்து விட்டு சென்ற பையை விரித்துப் பார்த்ததும்  அவர் மகிழ்ச்சி அடைந்தார். அந்த ஆடைகள் எல்லாம் வருகின்ற ஞாயிற்றுக் கிழமையில் இருந்து தொடங்கும் மூன்று கூறல் பூசைக்காக மருமகனுக்காக வாங்கிக் கொண்டு வந்தது.

கத்தோலிக்க  திருச்சபையின் முறைப்படி மூன்று கூறல் கூறுவார்கள். பதிவுத் திருமணம் முடிந்த பிறகு தொடர்ந்து வருகிற ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பூசை முடிந்ததும்; அவர்கள் திருமணம் செய்யப் போவதாக  பங்குத்தந்தை பலிப் பீடத்தில் இருந்து அறிவிப்பார். யாராவது எதிர்ப்பு தெரிவிக்கிறதாக  இருந்தால் தனிப்பட்ட முறையில் தன்னிடம் செல்லலாம் என்று சொல்லுவார். யாரும் முறைப்பாடு செய்யாத போது பின்னர் திருமணம் நடைபெறுவது வழக்கம். வீட்டின் வெளிப்பகுதியில் மின்னலுடன் காற்றும் பெரும் மழையும் பெய்யத் தொடங்கியது. ஜன்னல் வழியாக மின்னலைப் பார்த்துக் கொண்டிருந்த
 எலிசபெத்தை பார்த்து,

“என்ன கடுமையாக யோசித்துக் கொண்டிருக்கிறாய்..!”  என்று  கேட்டார் சந்தியா.     

“இன்றைக்கு இரவு நீங்க உங்கட வீட்டுக்கு போகேலாது போலத்தான் இருக்குது..!” என்றாள்  எலிசபெத்.

“அதுக்கென்ன....  இன்னைக்கு உங்க வீட்ல தூங்கினா போச்சு..!” சந்தியா சொல்ல, எலிசபெத்தின்  முகத்தில் மலர்ச்சி பொங்கி வழிந்தது. சிறிது நேரம் இருவரும்  பேசிக்கொண்டிருந்தார்கள். பின் சந்தியா துங்குவதற்கான வசதிகளை செய்து வைத்த எலிசபெத், அவர் ஏக்கத்தோடு பார்த்திருக்க நாணப் புன்னகையை  வீசியபடி தன்னுடைய அறையை நோக்கிச் சென்றாள். அவரும்  அவளைப் பின் தொடர்ந்து அவளுடைய அறையை நோக்கி பின் தொடர்ந்தார்.

வானம்  வன்முறையை கைவிட்டு அகிம்சையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. வெளியில் அள்ளி எறிந்த அடர்ந்த இருள் மட்டும் அப்படியே இனம் தெரியாத மனிதர்களால் வரையப்பட்ட தீர்ப்பால்; ஒரு மனிதன் சுட்டுக் கொல்லப்பட்ட உடல் போல் கிடந்தது. எலிசபெத் சமையல் அறைக்குள் சென்று சூடாக இரண்டு  கப்பில் பால் தேநீர் போட்டுக் கொண்டு வந்து தனக்கு ஒன்றையும் மற்றதை சந்தியாவிடமும் கொடுத்தார். கட்டிலுக்கு அருகில் இருந்த சிறிய மேசையை இழுத்து தேநீர் கோப்பையை அதில் வைத்தார். கட்டிலின் ஓரத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த சந்தியாவின் பக்கமாக அவரும் உட்கார்ந்து கொண்டார்.

“நான்   கூத்தில் நடிக்கும் போது பார்த்து இருக்கிறீர்களா எப்பயாவது?”  எனக்கு தென் மோடிக் கூத்து விளங்கவில்லை என்றாலும் உங்களுக்காகவே எங்கட குடும்பத்தோடு அண்ணாவியார் காப்பு பாடுவதற்கு முதலே கூத்து கொட்டைகைக்கு  முன்னாலே உட்கார்ந்து விடிய விடிய பார்த்து இருக்குன்னு .  புனித பேதுரு கூத்து, புனித செபஸ்தியார் கூத்து, புனித மேரி கூத்து, புனித வேத சகாயம் பிள்ளை கூத்து, புனித அந்தோனியார் கூத்து, சத்திய சீலன் கூத்து என்று ஒவ்வொன்றாக  எலிசபெத் சொல்ல சந்தியாவின் கண்கள் அகல விரிந்தன.

“நீங்க  ஒவ்வொரு கூத்திலும் கோமாளி வேடத்தில் தானே நடிக்கிறீங்க  அண்ணாவியார் கிட்ட சொல்லி ராசா கூத்தில நடிக்கிறதுக்கு கேட்க கூடாதாங்க..?” என்று எலிசபெத் தன் ஆவலை வெளிப்படுத்தியபோது,

“அந்த  ஆள், எனக்கு குரல் சரியில்லை என்று தரமாட்டேன் என்கிறார். என்னுடைய இலட்சியமே அண்ணாவியார் பெலிக்கன்  உயிரோடு இருக்கும் போதே அவற்ற கையாலே புனித செபஸ்தியார் கூத்தில நடிக்கிறதுக்கு கொப்பி வாங்கி  கூத்தில நடக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே அந்தப் பாடலில் ஒன்றை  பாடிக் கொண்டே  அயர்ந்து தூங்கத் தொடங்கினர். எலிசபெத் அவருடைய தூக்கத்தை கெடுக்காமல்  நெற்றியில் மெதுவாக முத்தமிட்டுவிட்டு  அவர் அருகிலேயே தூங்கி விட்டார்.

முப்பது  ஆண்டுகளுக்கு முன்னர் நடந்து முடிந்த திருமணம் பற்றி நினைக்கும் போதெல்லாம் சந்தியாவுக்கு மட்டுமல்ல எலிசபெத்துக்கும் எப்போதும் இனிதாகவே இருந்தது. சந்தியா அப்புவுக்கு இரண்டு அழகான பெண் பிள்ளைகள் . அவர்கள் எப்போதும்  நேர்த்தியாக தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப உடையணிந்து  இருப்பார்கள். அவர்கள் இருவருக்கும்  மிகச் சிறப்பாக திருமணம் பேசி முடித்துக் கொடுத்திருந்தார். மூத்தவள் கனிமொழி, இளையவள் இளவரசி. கனிமொழிக்கு மூன்றும் இளவரசிக்கு மூன்றும் ஆக பேரப்பிள்ளைகள் மொத்தம் 6 பேர். எல்லாரும் சந்தியா அப்பு மீது அன்பாகவும்,பாசமாகவும் இருப்பார்கள்.  ஆயினும் சந்தியா அப்பு தன் மனைவி மீதே அதிக அளவில் பிரியமானவராக இருந்தார். அல்லது எனது பார்வையில் அப்படித் தோன்றியதாகவும் இருக்கலாம். இரு பிள்ளைகளின் திருமணத்தின் போதும், அவர்  தன்னுடைய சொத்தை சரி சமமாகப் பிரித்து இருவருக்கும் கொடுத்து விட்டு;  கடற்கரை ஓரத்தில்   உள்ள புறம்போக்கு நிலத்தில் காணி பிடித்து, ஒரு சிறிய குடிசையை அமைத்து, மனைவியுடன் வந்து குடியேறினார்.

 நான்  அந்தக் குடிசைக்கு அடிக்கடி போய் அப்புவை சந்திப்பதை வழக்கமாக  வைத்திருந்தேன். காலையில் சில வேளையில் தொழில் முடிந்து கடற்கரைக்கு வரும் பொழுது அந்த குடிசைக்குப் போய் தேத்தண்ணி குடித்துவிட்டுத்தான் என்னுடைய வீட்டுக்கு வருவேன். எலிசபெத் ஆச்சியின் தேத்தண்ணியே ஒரு  தனி சுவையாக இருக்கும். நான் சில வருடங்களாக வெளிநாட்டுக்கு போகும் முயற்சியில் ஈடுபட்டு கொண்டு கொழும்பில் தங்கியிருந்ததால் இடையில் சில காலம் ஊருக்கு வருவதும், அப்புவை சந்திப்பதும் குறைந்தது. நான் கொழும்பில் மனைவியை பிரிந்து இருந்த காலத்தில் அந்த துக்க செய்தி  என்னை துரத்தியடித்தது. ஊரில் மலேரியா நோயின் தாக்கம் அதிகரிக்க  என்னுடைய மனைவியும் அதில் பலியாகிப்போனாள்.  மனைவி இறந்த பின்னர் நான் வெளிநாடு போகிற முயற்சியை கைவிட்டு, ஊருக்கு வந்து மீண்டும் மீன்பிடித் தொழிலுக்கு போகத் தொடங்கினேன்.

மலேரியா  நோயின் தாக்கத்தால் ஆச்சியும்  இறந்து விட்டார். அந்த இழப்பை அப்புவால் தாங்க முடியவில்லை. அதன்பின் அவருடைய போக்கும், வாழ்க்கையும் மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருந்தது . சரியான  தூக்கமில்லை , முறையான சாப்பாடில்லை. அப்படியே தொழிலுக்ககுப் போவதையும் நிறுத்தி விட்டார்.  பிள்ளைகளின் வீட்டிற்கு கூட போகாமல் அந்தக் குடிசையே கதி என்று கிடந்தார். எழுபது வயதை தாண்டிய போதும் திடகாத்திரமாக இருந்த மனிதன், ஆச்சியின் இழப்புக்கு பின் உடலாலும்,  மனதாலும் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தார். ஒரு நாள் றாத்தலடியில் இருந்து வீட்டுக்கு வரும் வழியில்  யாரோ ஒருவர் என் புறமுதுகில் மெல்ல தட்ட நான் திரும்பிப் பார்த்தேன். அது யாருமில்லை அப்புவின் இளைய மகள் இளவரசி தான். பழுப்பு நிறமும் சராசரி உயரமும் கொண்டவர்.கழுத்தில் தாலி அணிந்திருந்தார்.

என்னை  விட கிட்டத்தட்ட பத்து வயது மூத்தவர். சாதாரண ஒரு பார்வையிலேயே கிட்டத்தட்ட சந்தியா அப்புவை அப்படியே பிரதி எடுத்தது போல் இருந்தார். ஒரு மெல்லிய புன்சிரிப்பை உதிர்த்துக் கொண்டு பேசத் தொடங்கினார்.

"நம்முடைய  அப்புவின் நிலைமை வர வர மோசமா இருக்குது, கேள்விப் பட்டிருக்கிறீர்களா தம்பி"?

"ஓம்.  கேள்விபட்டிருக்கேன். நான் நேற்று போய் அவரை பார்த்தனான். முடிந்தளவு பக்குவமாக புத்திமதி சொன்னனான். ஆனால் அவர் ஒரு பிடிவாதக் குணத்துடன் இருக்கிறார். சதா  உங்க அம்மாவைப் பற்றியே புலம்பிக் கொண்டிருக்கிறார். எப்படித்தான் அவருக்கு விளங்கப் படுத்தினாலும் அவர் விளங்கிக்  கொள்ளாத போல் நடந்து கொள்கிறார். ஒரே  கவலைப்பட்டுக் கொண்டிருப்பதால் இறந்த உங்க அம்மா திரும்பி வரப்போவதில்லைத் தானே…. நான் நாளைக்கு தொழிலுக்கு போயிட்டு வரும் பொழுது இன்னொரு தடவ அவரை போய் பார்ப்பேன்" என்றேன்.

அவர்  அதற்கு தலையை அசைத்து கொண்டு மீண்டும் தொடங்கினர்.

“எங்கட  அம்மா மீன் குழம்பு சமைத்தால் அந்த கடற்கரையில் இருக்கிற குடிசை எல்லாம் மணக்கும். அப்படி அம்மாவின் சமையல் இருக்கும். ரொம்ப கண்டிப்புடன் எங்களை வளர்த்தவர். அப்பு இதுக்கு நேர் எதிரான குணம் கொண்டவர். நல்லவர், மிக நேர்மையானவர். ஆனால் எந்தக் கண்டிப்பும் இல்லாதவர்.  அடிக்கடி வாழ்வின்  நிலையாமை பற்றிய தன்மையை எங்களுக்கு சொல்லிக் கொண்டே இருப்பார். அம்மாவை முதல் முறையாக சந்தித்துப் பேசியது உட்பட பல்வேறு விடயங்கள் பற்றி அப்பு நாங்கள் இருவரும் சின்ன வயதில் இருந்த போதே எங்க அம்மாவுக்கு முன்னாலேயே சிரிச்சுகிட்டே அப்பு சொல்ல  அம்மாவும், நாங்க எல்லாரும் விழுந்து விழுந்து சிரிப்போம்” என்றார். நாளைக் காலையில் எழுந்ததும் களங்கட்டிவலை இழுக்க போய் விட்டு வரும் போது அப்புவையும் பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டு கூப்பன் கடையில் இருந்து வீட்டிற்கு திரும்பி வந்தேன்.

 நானும்  அண்ணனும் அதிகாலையில் எழுந்து தொழில் முடிந்ததும் கடற்கரையை நோக்கி தோணியில் வந்து கொண்டிருந்தோம். நான் கீழே குனிந்து வங்குக் கிடையில்  கிடந்த மீனையும் றாலையும் தனித்தனியாகப் பிரித்து அத்தாங்குக்குள் போட்டுக் கொண்டு சாதாளயை  கடலுக்குள் வீசிக் கொண்டிருந்தேன். என்னைப் பார்த்து அண்ணன் பதட்டமான குரலில் சொன்னார்.

 “அங்க  பாரடா தம்பி  கடற்கரையில் இருக்கும் குடிசை ஒன்று எரிஞ்சு  புகை வந்து கொண்டிருக்கு?”  நான் தலையை நிமிர்த்தி பார்த்தேன். எனக்கு திக்கென்று விட்டது.

 நான்  பொறுக்கிக் கொண்டிருந்த காலையும் வீதையும் விட்டுப் போட்டு கடையாளில் இருந்த மரக்கோலை எடுத்துக் கொண்டு அணியத்துக்கு ஓடிப் போய் வேகமாக வள்ளத்தை தாங்க தொடங்கினேன். அண்ணனும் என்னோடு இணைந்து கொண்டான். தோணி விரைவாக கடற்கரையை நோக்கி போய்க் கொண்டிருந்தது அப்பூட குடிசை  மாதிரி இருக்குது என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டிருக் கையிலேயே கடற்கரையை நோக்கி வந்த வேகத்தில் கிழித்துக் கொண்டு ஏறியது வள்ளம். இளவரசியும் கனிமொழியும்  கதறிக்கொண்டிருந்தார்கள். கொட்டிலைச் சுற்றி நின்ற மனிதர்களுக்கிடையில் நான் மெல்ல நகர்ந்து உள்ளே போனேன்.  என்னால் அவருடைய நிலையைப் பார்த்து பொறுக்க முடியாமல் வெளியேறிவிட்டேன் . நாங்கள் எல்லாம் இருக்கும் போது ஏன் அப்பு சாகனும் என்டு நினைச்சீங்க” என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டேன். எனக்கு அவர் சொன்னது மட்டும் என் நினைவுக்கு வந்தது

 “நீ  என்னுடைய 'இளவரசியை முடிச்சு இருந்த என்றால் நீ ஒரு இளவரசன் தம்பி' என்று சொன்னது மனசில்  விழுந்து நினைவுகளில் ஒட்டிக்கொண்டது.

 இரவின்  அடர்த்தியில் ஒரு அழகான அமைதி தோன்றுமல்லவா, அப்படி ஒரு அமைதி கடல், காற்றுவெளி, களங்கட்டி வலை, இறால்கூடு, சாதளை, கடல் காகம் எல்லாவற்றிலும் படர்ந்து ஒரு சோர்வு நிறைந்து இருந்தன. நான் கண்கலங்கியபடி கடலைப் பார்த்தேன். கடல் என்னைப் பார்த்துக் கொண்டு இருந்தது. பின்னர்  நிலத்தை, கடலோரப் பகுதியில் வாழும் மீனவர்கள் சட்டி, பானைகள் கழுவும் பகுதியில் தேங்கிப் போய்க் கிடந்த கழிவு நீரைப் பார்த்தேன். அவர்களின் குடிசைகளில் ஒளியின் பிரகாசத்தை கொண்டு வருவதற்கு எப்போது வேண்டுமானாலும் ஒரு இராஜ குமாரன் வருவார் என்று வாழ்நாள் முழுவதும்  காத்திருக்கும் மக்களை ஒரு கணம் நினைத்தேன்.நெடிய வலி என்னுள் மெல்ல இறங்கியது. பேச முடியாமல் உள்ளுக்குள் அழத் தொடங்கி விட்டேன். எங்கோ குடிசை ஒன்றிலிருந்த வானொலியில் இருந்து கிளம்பி வந்த பாடல் ஒன்று என் காதில் விழுந்தது.

“அன்னையின்  கையில் ஆடுவதின்பம்.
 கன்னியின்  கையில் சாய்வதுமின்பம்.
தன்னையறிந்தால்  உண்மையில் இன்பம்.
தன்னலம்  மறந்தால் பெரும் பேரின்பம்”

ஏதோ  சிமிழ் ஒன்றுக்குள் இறுக மூடி வைத்திருந்த வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பது பற்றிய தத்துவம் ஒன்று தடைகள் நீங்கி விலகிக் கொண்டிருப்பது போல் எனக்குள் உணர்ந்தேன்.

கடற்கரையில்  வரிசையாக கிடந்த பெரும் கற்களை நகர்த்த பெரும் சீற்றத்துடன் வந்த மாயக் கடல் அலைகள் தோற்றுப் போய் மீண்டும் மீண்டும் கடலுக்குள் திரும்பி கொண்டு இருந்தன. கடல் சாதாளைப் பக்கமாக ஓடிக்கொண்டிருந்து மீன் குஞ்சுகளை பிடிப்பதற்காக செங்குத்தாக நீருக்குள்  விழுந்தது. மூழ்கி  மூழ்கி அலைந்து திரிந்த போதும் மீன் குஞ்சுகளில் ஒன்றையேனும் தன் உணவுக்காக பிடிக்காமல் முடியாமல் தன் தலையை பாம்பை போல் நெளித்து அசைத்துக் கொண்டு மேல் எழுந்து கடலில் நீந்திக் கொண்டிருந்தது. ஏதோ அந்தக் கடல் காகத்துக்குத் தோன்ற மீண்டும் நீண்டிருக்கும் தன் தலையை  கடலுக்குள் உட் செலுத்தியது. தொடர்ந்து நான்கு அல்லது ஐந்து தடவைகள் முயற்சி செய்து விட்டு எதுவுமே அகப் படாததால் வான் நோக்கி பறக்கத் தொடங்கி மீண்டும் களங்கட்டி வலைக் கம்பில் வந்து நின்றது. சிந்தனை வயப்பட்ட வேளை அப்பு என் கண்முன் காட்சியாக விரிந்தார். அமைதியோடு  அப்புவின் முகத்தைப் பார்த்தேன். அவருடன் ஆரம்ப காலங்களில் நான் பழகிய முகத்தைப் கண்டேன். கண் எதிரே கலங்கி நிற்கும் அவருடைய பிள்ளைகளைப் பார்தேன். என் உடல் பரவசத்தில் நிலைத்து நின்றது.
      
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.